“வாழ்க்கையின் முரண் இதுதான்.முகமூடி அணிந்தவர்கள் பெரும்பாலும் திறந்த முகத்தினர்களை விடவும் அதிக உண்மைகளைப் பேசுவார்கள்.”

-மேரி லு, தி ரோஸ் சொசைட்டி

இம்மாதிரியான படங்கள் எல்லாம், யாருக்காக எடுக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். மலையாளப் படங்களைப் பற்றிய பெருமிதச் சொல்லாடல்களைக் கேட்கையிலெல்லாம் இப்படிப் படங்கள் தமிழில் ஏன் இல்லை என யோசித்திருக்கிறேன். அந்தவகையில் ஞானராஜசேகரன் இயக்கி நாசர் நடித்த முகம் திரைப்படம் வாழ்வின் மறக்க முடியாத ஒன்று மனிதனுக்கு முகமே வித்தியாசம் பிற உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் ஜெராக்ஸ் எடுத்த இயற்கை மனிதனுக்கு மாத்திரம் இத்தனை வித்தியாசங்கள் உண்டு பண்ணியது, முகம் என்பது மனிதனுக்குள் வித்தியாசமா அல்லது அந்த வித்தியாசம்தான் அவனுக்குள் ஒற்றுமையா என்பதை பலமுறை யோசித்து வியந்திருக்கிறேன். இந்த திரைப்படம் பார்ப்பதற்கு குரூரமான முகத்தை உடைய சாமானியன் ஒருவனுக்கு அழகிய ஒருமுகம் தற்செயலாக கிடைக்கிறது. இந்த மிகையதார்த்த புள்ளியிலிருந்து முகம் திரைப்படத்தின் நகர் திசை பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. சென்ற நூற்றாண்டின் தமிழ் திரைப்படங்களில் தனிமனித அல்லாட்டங்களையும் கூட்டம் என்ற பெயரில் அடையாளங்கள் அற்றுப்போகிற திரள் மனநிலையின் வெப்பத்தையும் அழகாக கையாண்டது முகம்.

ஒன்று இழந்து வேறொன்று அடைவது மனதின் ஆதார ஊசலாட்டங்களுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது வாழ்தலின் கதாநியதி. நாசர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் ஆகச்சிறந்த வரிசையில் முகம் இடம் பெறும். முகமூடி பிம்பம் கண்ணாடி ஒப்பனை அகமுகம் ஆழ்மனதின் குரல் சுய இரக்கம் திரும்புதலின் இச்சை என்று பலவற்றையும் காட்சிப்படுத்த விளைந்த முதல் விழைவு என்ற வகையில் முகம் முக்கியமான படம்.

முகம் என்பது ஒரு மாபெரும் இயக்கம். ஒரு முகத்தை யாராலும் வினாக்களோடு அணுகவே முடியாது, அல்லது விடை பெற முடியாது. அதையும் மீறி அப்படித்தான் அணுகுவேன் என்று கிளம்புகிறவர்கள் என் முகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வியை யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் பதில் கிடைத்திடாமல் குண்டூசியின் தலை போல் ஆரம்பிக்கும் அதே அந்த வினா தன்னுள் வெடித்துப் பெருகக்கூடிய எரிமலைக் குழம்பென ஆகி எதுவுமற்றுப் போகிறார்கள். ஒரே முகமல்ல மனிதனுக்கு வாழக் கிடைப்பது. ஆனால் அவன் அதனை ஒரே முகம் என்று எப்போதும் நம்ப விரும்புகிறான். முற்றிலுமாக உயிர் துறத்தல் மனிதனின் வாழ்வில் மரணம் என்பது ஒருபுறம். உண்மையில் ஒரு மனித வாழ்வென்பது பல முகமரணங்களைத் தனதே கொண்டது. முகம் முகமாய் அழிந்து கொண்டே வந்து மாபெரும் zip ஒன்றை முழுவதுமாகத் திறந்துவிட்ட பிற்பாடு நகர்வதற்கு இடமேதுமின்றித் திகைக்கிற runner போல் முதுமை அதன் முகம் வாழ்வின் வாசலில் தொக்கிக் கொண்டிருக்கிறது.

மனித வாழ்வின் மீது அவன் முகம் பார்க்கிற கண்ணாடியின் அதிகாரம் அபரிமிதமானது. முகம் என்பதே செல்வாக்கைத் தீர்மானித்துத் தருவதாகிறது. தன் சுயத்தைக் குழந்தைபோல் ஏந்திக் கொள்ளுகிற மனிதன் முகத்தை சுயமென்று நம்பத் தொடங்குகையில் அவன் வாழ்வு பிறழ்கிறது. மனம் என்பது தன்னை ஒரு முகமிலியாகக் காட்டிக் கொள்ள விரும்புகிறது. உண்மையில் அவரவை மன முக இடை வித்தியாசம் அவரவர் பிம்பமாக உருக் கொள்ளுகிறது.

முகத்தைக் குறித்த வழிபாட்டு முறையாகவே தன் பிம்ப மயக்கம் உருவெடுக்கிறது. தன் பிம்பத்துக்குத் தன்னை ஆனந்தப் பலியாகவே ஒப்புக்கொடுப்பதை மனிதன் மிகவும் விரும்புகிறான். தன் கழுத்திலிருந்து முகத்தைக் கழற்றி, தனது பிம்பத்துக்குக் கிரீடமாக்குவதை அடிமையின் சாகசத்தோடு செய்வது அவன் சுபாவமாகிறது. முகமற்றவர்களின் கால்பந்தாகிறது முகம். இரண்டாவது முகம் என்பது அவரவர் ரகசியம். தன் நிழலை வேட்டையாடத் துணிந்தவர்கள் நிஜத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறார்கள். சகமனம் என்பது வெறுப்பை உமிழும் சகமுகக் கலயமாகவோ, அன்பைப் பதுக்கிவைக்கும் சகமுகக் கொள்கலனாகவோ இரண்டில் ஒரு பாதையில் அல்லது இரு பாதைகளிலும் கிளைத்துச் செல்லுகிறது. ஒரு கட்டத்தில் முகமொன்றை வெறுப்பதற்காக எதாவது செய்ய விழைகிறது மனமெனும் கசங்கிய பிரதி. தன் முகத்துக்குப் பிரதிமுகம் ஒன்றோ அல்லது உபமுகம் சிலவோ இருப்பதை ஆட்சேபங்களுடன் அனுமதித்துக் கொள்ளுகிறான் மனிதன். முகமூடி தன் வேட்டையிலிருந்து தப்புதலுக்கு உதவும் என்பது அவனது பலவீனம். முகம் மீதான அத்தனை வன்மமும் கோலம் அழிதல் எனும் மனித வாழ்வின் அற்பத்தை எள்ளுகிற அவரவர் அசரீரத்தின் குரல் போலிக் கெக்கலிப்பு மாத்திரமே. அரூபியாகவோ அசரீரியாகவோ தொடர்ந்துவிட யாரும் சம்மதிப்பதில்லை. உயிர் திரவமாகவும் வாழ்வு அதன் வண்ணமாகவும் உடல் முகம் தேங்குகிற கலயமாகவும் ஆவது முரண்.

1999ஆம் ஆண்டு ஞான. ராஜசேகரன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவான ‘முகம்’ தமிழின் கதைத் திறனை, நடிக வளனை, ஒளிச் செறிவை, இசைத் தோய்வை, மற்றும் வாழ்வைப் பேசிய முக்கியமான படம். நகரவீதிகளில் மாலைப் பொழுதொன்றில் ததும்பும் முகங்களை விழுங்கி உதிர்த்த வண்ணம் முகங்கள் முகங்கள் மேலும் முகங்கள் என்று கேமிராவைக் கொண்டு நடனமே நிகழ்த்திக் காட்டினார் பி.சி.ஸ்ரீராம். டைட்டில்ஸ் முடியும்போது ஒரு குறும்படம் முடிந்தாற்போல் சிறு நிறைவு ஒன்றை உருவாக்கி, அதைப் படம் மீதான எதிர்பார்ப்பாக, தன்பெருக்கிக் கண்ணாடியால் வெப்பத்தைக் குறுக்கிக் காகிதத்தில் பாய்ச்சித் தீயை உழவுச் செய்தாற்போல் வித்தகம் புரிந்தார் ஞான ராஜசேகரன்.

படம் நிறையும்போது விடையில்லை எனத் தெரிந்தும் வினவியே ஆகவேண்டிய கேள்வியை ரசிகனின் மனத்தில் தைத்துவிடுகிறது முகம் திரைப்படம். நாசர், ஷோபனா, ரோஜா மணிவண்ணன் விவேக் தலைவாசல் விஜய் உட்படப் பலரும் உயிர் கொடுக்க, இந்தப் படத்துக்கு இளையராஜாவும் ஸ்ரீராமும் நிஜபலங்கள். இதன் title music தொடங்கி படம் முழுவதற்கும் தன் இசையால் படர்க்கை இயக்கமொன்றை நிகழ்த்தி இருப்பார் இசைஞானி. மிகச் செறிவான இசைக்கோர்வைகள் தனியே பீஜீஎம் மட்டுமே வனாந்திர அலைதலை மனதினுள் நிகழ்த்தித் தரும்.லெனின் விஜயன் எடிடிங்கும் ஞானராஜசேகரனின் இயக்கமும் முகம் படத்தை நேர்த்தித் தந்தன.

தமிழின் திரைத்தரத்தை உரசச் சரியான உரைகல் முகம்.