இரண்டு மனிதர்கள் ஐந்து வேடங்கள் என இந்தக் கட்டுரைக்குத் தலைப்பிடலாம்.

தன் வாழ்க்கை வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறான் பாண்டியன். அவனை ஒரு மாதம் கழித்து நீ தற்கொலை செய்துகொள் என்று தன்னோடு அழைத்து வருகிறான் கபாலி. ஒரு மாதம் கழித்து அவனைத் தன் சகா மருதுவை விட்டுக் கொன்று இன்ஷூரன்ஸ் தொகை 1 லட்சத்தை அடைய திட்டமிடுகிறான். தன் தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டு தனக்கொரு புதிய வாழ்க்கையைக் காட்டிய தெய்வமனிதனாகவே கபாலியைப் போற்றுகிறான் பாண்டியன். இதற்குள் வசந்தி எனும் பணக்காரப் பெண்ணைக் காப்பாற்றி அவளது தந்தையின் அன்புக்குப் பாத்திரமாகிறான். தன் மகனாகவே பாண்டியனைத் தத்தெடுத்துக் கொள்கிறார் செல்வந்தர். கபாலி பாண்டியனைக் கொன்றுவிட்டு மருதுவை அவன் இடத்துக்கு மாற்றிவிட்டால் லட்சங்களை அனுபவிக்கலாம் என்று புதிய திட்டத்தை வரைகிறான். பாண்டியனைக் கடலில் எறிகிறார்கள். பாண்டியனின் இடத்தில் அவனுடைய உடன்பிறந்த அண்ணன் ஷங்கர் மாறக் கபாலிக்கும் மருதுவுக்கும் திகைப்பு. மீனவர்களின் உதவியால் பாண்டியன் பிழைத்து வந்து சகோதரனுடன் சேர்ந்து எப்படி வெல்கிறான் என்பதே மிகுதிக் கதை. கபாலி தவறுதலாகத் தன் நண்பன் மருதுவைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்வதோடு படம் முடிகிறது.

சிவாஜி மூன்று வேடத்திலும் எம்.ஆர்.ராதா இரண்டு வேடத்திலும் நடித்ததனாலேயே தன்னைப் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டது இந்தப் படத்தின் மதிப்பு என்றால் அது மிகையல்ல. மாமா மாப்ளே என்று சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் பாடும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற பாடல் அதில் நடித்த இருவரைத் தாண்டிப் பாடிய டிஎம்.சவுந்தரராஜன், இசையமைத்த மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடலை எழுதித் தந்த கவியரசர் கண்ணதாசன் மற்றும் இப்படத்தை நம்ப முடியாத குறுகிய காலத்தில் உருவாக்கிய பீ.ஆர்.பந்துலு ஆகிய யாவர்க்கும் பொருந்தும். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் வகையறாக்கள்தான். பாலாஜி மற்றும் தேவிகா ஆகியோரும் இப்படத்தில் தங்கள் பங்கைச் சிறப்பித்திருந்தார்கள்.

உருவ ஒற்றுமை என்பதற்கான தீர்மான விளக்கம் எதையும் இந்தப் படம் கொண்டிருக்கவில்லை. இரண்டு சிவாஜிகளும் அண்ணன் தம்பி என்பதேகூட வழமைக்கு விரோதமான ஒரு உள்சுற்றுத்தான் என்பது ஈர்ப்புக்குரியது. அதுவரைக்குமான பொய்க்கயிறுகளை எல்லாம் அறுத்தெறிந்து விட்டுத் தன் சுதந்திர நகர்தலினால் இப்படம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. படத்தின் தொடக்கத்தில் சிவாஜி தற்கொலை செய்து கொள்வதாக அறிவிப்பதை எம்.ஆர்.ராதா அவருடைய மனதை மாற்றுவதிலிருந்து தொடங்கும். வாழ நினைத்தால் வாழலாம் என்ற பாடல் நடுவே வரும். படத்தின் இறுதியில் நல்ல உறவுகள் கண் நிறைந்த காதல் செழுமையான செல்வந்தம் என எல்லாம் கிடைத்து அவர் சந்தோஷமாக வாழ்வதாகப் படம் நிறையும். தற்கொலை எண்ணத்திலிருப்பவனைத் தன் பிடிக்குள் கொணர்ந்து அவனது மரணத்தினால் தனக்கொரு பெரிய ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவனைக் காப்பாற்றுவதுபோல நடிக்கும் வில்லன் கபாலி கடைசியில் கண நேரத்தில் தற்கொலை செய்து கொள்வதோடு கெடுவான் கேடு நினைப்பான் எனும் பழைய சொல்லாடலை மெய்ப்பித்தவாறு படம் முடிந்தேறும்.

1962 ஆம் ஆண்டு மே மாதம் பூஜை இடப்பட்டு படம் தொடங்கி பதினைந்து தினங்களுக்குள் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுற்று அதே மாதம் 26ஆம் தேதி இப்படம் வெளியாகிப் பெருவெற்றி பெற்றது. சிவாஜி எம்.ஆர்.ராதா எனும் மாயக்கலைஞர்களின் அடங்கா வேடப்பசி இதனைச் சாத்தியப்படுத்திற்று. மிக வெள்ளந்தியான கதாமாந்தர்களும் நம்பமுடியாத அன்பின் ஊற்றான கதை நகர்வுகளையும் தாண்டி நகைச்சுவை மிகுந்த இக்கதையின் காட்சி அமைப்பிற்காகவும் என்றென்றும் விரும்பத் தகுந்த இதன் வசனங்களுக்காகவும் பலே பாண்டியா படம் காலங்கடந்து வைரமென மின்னுகிறது.