இரட்டைவேட படங்கள் தனக்கு உண்டான குறைந்தபட்ச உத்தரவாதத்தை கொண்டவை வணிகரீதியிலான அத்தகைய உறுதி எந்த படம் ஓடும் என தெரியாத இந்திய சினிமாவின் வரவு வருமானம் குறித்து அச்சத்தை பெரும்பாலும் நீக்கி விடுபவை டபுள் ஆக்சன் திரைப்படங்கள்.காலம் காலமாக இரு வேடப் படங்களுக்கான திரைக்கதை அமைத்தலுக்கென்று சிலபல தனித்த விதிமுறைகளும் உண்டு. படமாக்கும்போது இவற்றுக்கென கூடுதல் சமரசங்களை ரசிகர்கள் அனுமதிப்பதும் ஏற்படுத்தப்பட்ட புரிதல் ஒன்றின் அங்கமே. அந்தவகையில் இரண்டு மனிதர்கள் நடித்தாற்போலவே உருவாக்க நேர்த்தியை முதன்முதலில் ஏற்படுத்திக் காட்டிய படங்கள் சென்ற நூற்றாண்டின் இறுதியில் வரத் தொடங்கின. அப்படியான வரிசையில் முதல் என்றே வாலி படத்தைச் சொல்ல முடியும்

தேவாவும் சிவாவும் இரட்டையர்கள். சிவா தம்பி. அண்ணன் தேவாவுக்கு காது கேட்காது. வாய்பேச முடியாது. சிவாவும் ப்ரியாவும் காதலிக்கின்றனர். யாரைப் பார்த்தும் தன்னுள் காதலை உணராத தேவா தற்செயலாக யாரென்றே தெரியாத ப்ரியாவைத் தானும் பார்த்துத் தன்னுள் காதலாகிறான். அவளைத் தன் வருங்கால மனைவி என்று தன்னிடம் அறிமுகம் செய்து வைக்கிற தம்பி சிவாவைத் தன் காதல் குறுக்கீடாகத்தான் நினைக்கிறான். போதாக் குறைக்கு தேவாவின் திறமைகளைப் புகழ்ந்தபடியே உங்களிருவரில் நான் முதலில் உன்னைப் பார்த்திருந்தால் உன்னைத்தான் காதலித்திருப்பேன் என்று சொல்கிறாள் ப்ரியா. தன் செயல்களுக்கான நியாயங்களைத்தானே தயாரித்துக் கொள்கிறான் தேவா. அண்ணன் மீது தன் உயிரையே வைத்திருக்கும் தம்பி சிவாவுக்கு அவன் என்ன எண்ணுகிறான் எனத்தெரியாது. இந்த நிலையில் சிவா ப்ரியா கல்யாணம் நடக்கிறது. எப்படியாவது ப்ரியாவை அடைந்தாக வேண்டுமென்று தன்னால் ஆன எல்லா வில்லத்தனங்களையும் செய்கிறான் தேவா. முதலில் ப்ரியா சொல்வதை நம்பாத சிவா ஒரு கட்டத்தில் தேவாவின் மனப்பிறழ்வை உணர்கையில் காலம் கடந்துவிடுகிறது. கடைசியில் தேவா சிவாவைத் தாக்கி மயக்கமுறச் செய்துவிட்டு ப்ரியாவை நெருங்குகிறான். அவன் தேவா என அறியும் ப்ரியா அவனிடமிருந்து தப்பி ஓடுகிறாள், ப்ரியாவைத் தேடி வரும் சிவா தன் துப்பாக்கியால் தேவாவை சுட்டு வீழ்த்துகிறான். நீச்சல் குளத்தில் பிணமாகி மிதக்கும் தேவாவின் ஆன்மா தன்னால் வெளிக்காட்டவியலாத தன் காதலின் சொற்களை உச்சரிப்பதாக நிறைவடைகிறது படம்.

தேவா என்று வில்ல பாத்திரத்துக்கு பெயர் வைத்தாலும் தேவாதான் இதன் நிஜ நாயகனும் ஆனார். சோனா ஏ சோனா இளைய மனங்களின் புதிய கீதமாய் ஓங்கி ஒலிக்கலாயிற்று. படத்தின் இசைப்பேழை வெளியாகி ஒரு வருடகாலத்துக்கும் மேலான காத்திருப்புக்கு அப்புறம்தான் படம் வெளியானது. அது படத்திற்கான நல்ல முன்விளம்பரமாக மாறியது. ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்தஜாமத்தில் என் ஜன்னலோரத்தில் நிலா நிலா பாடல் அதிரிபுதிரியானது. நிலவைக் கொண்டுவா கட்டிலில் கட்டிவை பாடலும் வானில் காயுதே வெண்ணிலா பாடலும் கூட சூப்பர்ஹிட்களே. எல்லாவற்றையும் வைரமுத்து எழுதினார். நடனங்களை ராஜூ சுந்தரம் அமைத்தார். இதன் கலை இயக்கம் தோட்டா தரணி ஒளிப்பதிவை ஜீவாவும் சில பகுதிகளை ரவிவர்மன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோரும் கையாண்டார்கள்.

ரெப்ரெசெண்டேடிவ் விக்கியாக அதகளம் செய்தார் விவேக். அவருக்கென்று தனியொளி மிகுந்திருந்த காலத்தில் வாலி அவரது உச்சபட்சங்களில் ஒன்றானது. அதெல்லாம் சிவா கிட்டே வாங்கிக்கப்பா என்று போகிற போக்கில் சிக்ஸ் அடிப்பார். சில இடங்கள்ல இப்பிடி சில இடங்கள்ல இப்பிடி என்று தன் திருட்டை நியாயம் செய்வார். எனக்கு இந்தப் பக்கம் வேலை இல்லை நான் அந்தப் பக்கம் போறேன் எனக் கண்கலங்கச் சிரிக்க வைத்தார் விவேக். அவரும் அஜீத்தும் சேர்ந்து சோனா என்றொரு பொய்யை உருவாக்கி சிம்ரனிடம் அளந்துவிடும் கதைப்பாம்பு விவேக்கைப் பதம் பார்க்கும். அதற்குப்பின் அவர் வந்து அஜீத்திடம் முறையிட்டபடி படத்திலிருந்தே விடைபெற்று ஓடும் காட்சி சொற்களால் விவரிக்க முடியாத அட்டகாசமானது.

அஜீத்குமாரும் சிம்ரனும் இந்தப் படத்தின் ஆதாரங்கள். அதிலும் வணிகப் படங்களில் எப்போதாவது பூக்க வாய்க்கும் அரிய நடிக மலர்களாகவே இந்தப் படத்தில் நடித்தனர். குறிப்பாக இரண்டு அஜீத்களுடன் டாக்டரைப் பார்க்கச் செல்வார் சிம்ரன். அந்த ஒரு காட்சியில் மாபெரும் பங்கேற்பை நிகழ்த்தினார் என்றால் தகும்.
எஸ்.ஜே சூர்யா வஸந்திடமிருந்து வந்தவர். இது சூர்யாவின் முதல்படம். தமிழ்த் திரை உலகத்தில் தனக்கென்று பெரிய ரசிகபட்டாளத்தை உண்டாக்கிக் கொண்டவரான சூர்யா பின்னாட்களில் நடிகராகவும் வென்றார். முதல் படம் மூலமாய்ப் பெரும் பெயர் பெற்றவர்களில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

அஜீத்குமாருக்கு விருதுகளை வாங்கித் தந்து ரசிக பலத்தை அதிகரித்த வகையில் வாலி அவருடைய திரை ஏற்றத்தில் மிக முக்கியமான படமாயிற்று.

முந்தைய தொடர்: https://bit.ly/2ZDb0GD