நான் அவனில்லை மராத்திய மொழியில் புகழ்பெற்ற நாடகம். To Mee Navhech 1962இல் எழுதப்பட்டது. கல்யாண மோசடிப் பேர்வழியான மாதவ் காஜி என்பவனது குற்ற சரித்திரமே இந்த நாடகமாயிற்று, பல பெண்களைப் பலவிதப் பெயர்களும் பின்புலங்களும் கொண்ட வெவ்வேறு மனிதர்களாக உருமாறி திருமணம் செய்து கைவிட்டுச் சென்ற குற்ற மனிதனின் கதையை கே.பாலச்சந்தர் தமிழில் ‘நான் அவனில்லை’ என்ற பேரியல் உரிமம் பெற்றுப் படமாக்கினார். இதன் வில்ல நாயகனாகப் பரிணமித்தவர் காதல் மன்னன் என்றழைக்கப்பட்ட ஜெமினி கணேசன். தன் திரை வாழ்வில் அனேக மென் மனிதர்களின் பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நடித்தவரான ஜெமினி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றதே சுவாரசியமானது மட்டுமன்றி சவாலானதும்தான். ஆனால் இந்தப் படத்தைத் தயாரித்து நாயக வேடத்தைத் தரித்ததன்பின் காரணம் இந்தக் கதாபாத்திரம் மீதான நடிக ஈர்ப்புத்தான். இதில் நடித்ததற்காக ஜெமினிக்கு அந்த வருடத்தின் ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது.

மேதமையும் திறமையும் கெட்ட எண்ணம் கொண்டவனிடம் இருக்கும்போது அவையும் தீமையின் விளைநிலங்களாகின்றன, இந்தக் கதையின் நாயகனின் ஆளை அசத்தும் தோற்றமாகட்டும் பன்மொழிப் புலமையாகட்டும் யார்க்கும் தளராத மன உறுதியாகட்டும் மனித முகங்களின் வழியாக மனங்களை வாசிக்கிற திறனாகட்டும் யாரையும் வசீகரிப்பது இயல்பான ஒன்றுதான். தன் திறமைகளை எல்லாம் பயன்படுத்தி ஒன்று இரண்டல்ல பலரை ஏமாற்றுவதன் மூலமாக வேடங்களைப் பங்கேற்றுக் கலைத்துச் செல்லும் பரபரப்பான நடிகனின் நியாயமற்ற விரைதலைத் தன் வாழ்வில் எதிர்ப்படுகிற எல்லாரிடத்திலும் காண்பித்துச் செல்லும் இரக்கமற்றவனுக்கு வாழ்வின் விதி இரக்கத்தைப் பதிலீடு செய்யாதல்லவா அப்படியான முடிதலோடு நிறைவடைவது நான் அவனில்லை படத்தின் கதை.

படத்தில் ஒரு கட்டத்தில் லக்ஷ்மி பேசுகிற வசனம் “ho…What a sweet cheat..?” . அதுதான் கதையின் பலம். மெல்ல மெல்ல நடப்பதை எல்லாம் கண்ணுற்றவாறே நாமும் நம் முன் நிற்கக்கூடிய பலபொய் சித்திரம் ஒன்றைத் தாண்டி அந்தப் பொய் மனிதனை ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். இது உலகமெங்கும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் விடயம்தான். நல்லனவற்றைவிட ஈர்க்கத்தக்கவையாக தீயன சில ஆவது புலன் மயக்கும். மதி பிறழ்த்தும். பிறிதொரு நாள் தெரியவரும் இழத்தலின் கணிதம்.

‘ராதா காதல் வராதா…’ பாடல் காலம் கடந்த கல்லெழுத்தாக எஞ்சிற்று. கண்ணதாசனின் பாடல்களுக்கு இசைத்தவர் மெல்லிசை மன்னர். ஜெமினியோடு கமல்ஹாசன் பூர்ணம் விஸ்வநாதன், தேங்காய் சீனிவாசன், அசோகன் செந்தாமரை, லக்ஷ்மி, ஜெயபாரதி, ஜெயசுதா, காந்திமதி, ராஜசுலோசனா, லீலாவதி இன்னும் பலர் தோன்றினார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனின் பின்னணி இசை இந்தப் படத்தில் மிக உன்னதம். டைடில்ஸ் எனப்படுகிற படத்தின் ஆரம்பக் காட்சிக்குத் தனித்த இசைக்கோர்வையை அளித்தார் எம்.எஸ்.வி. முன்னர் கேட்டறியாத புத்திசையாக அது இருந்தது. இந்தப் படத்தின் நடன இயக்குனர்களில் ஒருவராக கமல்ஹாஸனும் துணை இயக்குனர்களில் ஒருவராக எழுத்தாளர் கோவி மணிசேகரனும் பங்கேற்றார்கள்.

ஏமாற்றுவதை ஒரு கலையாக அதன் மீதான ஈர்ப்பையே அதனைக் கைக்கொள்வதற்கான காரணமாகக் கொண்டவர்கள் அவ்வப்போது தோன்றுவர். உலகத்தில் குற்றத்தை அதன்மீதான ஈர்ப்பின் நிமித்தம் செய்பவர்களும் இருப்பது மன வினோதங்களில் ஒன்று மட்டுமல்ல அதுவொரு பிறழ்வும் ஆகும். அப்படியான கதையைத் தேர்ந்தெடுத்து இயக்கினார் கே.பாலச்சந்தர். இந்த உலகத்தின் வழமைகளும் நியதிகளும் பெருவாரி மனிதர்களின் நம்பிக்கை சார்ந்த விழுமியங்களே. அவற்றை ஊடாடிச் சிதைப்பது பெரிய வித்தகம் அல்ல. சூழலைப் பயன்படுத்திக்கொண்டு நம்பிக்கை துரோகம் செய்வதன் மீது எந்தவித நியாயமும் இருந்துவிடப் போவதே இல்லை. பிடிபடுகிற கணங்களில் தன்மீதான குற்றவாசித்தலைக் கேட்டுக் கொண்டே நான் அவனில்லை என்பதை மட்டும் தன் பதிலாகச் சொல்லும் மன ஈரமற்ற கொடுமனிதனாகத் தோன்றினார் ஜெமினி கணேசன்.

படம் வெளியாகி முப்பதாண்டுகளுக்கு அப்பால் ஜீவன் நடிப்பில் இதே கதை தமிழில் மீவுரு செய்யப்பட்டது. காலத்தைத் தவிர வேறெந்த இடைவெளியும் இல்லாமல் முன் பிரதியைப் போலவே இம்முறையும் விரும்பப்பெற்றது. தெளிவான திரைக்கதைக்காகவும் நீதிமன்ற வழக்காடல் காட்சிகளுக்காகவும் இனிய பாடல்களுக்காகவும் நினைவில் நிற்கும் படங்களில் ஒன்றானது.

முந்தைய தொடர்: https://bit.ly/2NksOoX