அவர்கள் கூற்றின்படி நீ எப்போது உன் வாழ்வின் காதலை சந்திப்பாயோ அப்போது காலம் அப்படியே உறைந்துவிடும்.
அது உண்மையுங்கூட

Big Fish (திரைப்படத்திலிருந்து)

எல்லோரும் நல்லவரே என்பது ஸ்வீட் நத்திங் வகையறா சினிமா. காலம் காலமாக அப்படியான படங்களை யாராவது எடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஊரே ஒதுங்கும் திசையைவிட்டுத் தனக்கென்று தனித்திசை காண்பது அப்படியான ஜிகினாப் பொய் ஒன்றை நிசமென்று நிறுவ விழையும் சினிமா முயல்வு வகைமை. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தனது புது வசந்தம் படத்தின் மூலமாகத் திரைக்கணக்கைத் தொடங்கிய விக்ரமன் பிறகு எடுத்த அனேக படங்களின் மூலமாக விக்ரமன் படங்கள் என்றே தனித்த வகைமையாக உருக்கொண்டது நிகழ்ந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட அதிரி புதிரி வெற்றிகளின் மூலமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவராக மாறிய விக்ரமன் மனித மனங்களின் மென்மையான நசிவுகளை அவற்றின் ஊசலாட்டங்களை முடிவெடுக்க இயலாத மனத்திணறலைப் படமாக்கி வகையில் நினைவில் கொள்ளப்பட வேண்டியவராகிறார். அவருக்குக் காலமும் நடிகர்களும் நல்ல முறையில் ஒத்துழைக்கவே எளிதாக மக்களுக்குப் பிடித்தமான படங்களாக மாறின விக்ரமனின் படங்கள்.

ஆணையும் பெண்ணையும் பரஸ்பரம் ஏமாற்றுகிற கைவிடுகிற காதல் தோல்விக்குக் காரணமாகிற ஆண்களையும் பெண்களையும் அவர்கள் திரும்பி திருந்தி வருகிறதற்குள் வேறொரு நல்வாழ்க்கையை நல்ல இணையரைக் கண்டறிந்து விடுகிற எல்லோருக்கும் எப்போதும் பிடித்தமான படங்களை அதிகம் உருவாக்கினார் விக்ரமன். தொண்ணூறுகளில் காதல் முன்பிருந்த நிலையிலிருந்து மெல்ல நகர்ந்து புதிய திசைக்குச் செல்வதற்கு முந்தைய பயண முன் பொழுதுக் காத்திருப்புக் கணங்களின் திசைகளற்ற மாற்றங்களெனவே விக்ரமனின் ஒரு டஜன் காதல்படங்கள் கரைந்து கலைந்தன என்றாலும் அவற்றைக் கொண்டாடியவர்கள் அடுத்த காலத்தில் மத்யம வயதுகளிலிருந்து நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொள்ளக்கூடிய பழைய புனித ஞாபக வழிபாட்டு உப பொருளாகவே தங்கள் காதலைப் பத்திரப்படுத்த விழைந்தார்கள்.

விக்ரமன் எடுத்த படங்களிலிருந்து பூவே உனக்காக எப்படி வேறுபடுகிறது என்றால் அதுவரை என்ன மாதிரியான படங்களில் நடித்து எப்படி நிலைகொள்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த விஜய் என்கிற புதிய நடிகரது ஏழெட்டுப் படங்கள் வெளியாகி ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் மட்டும் கொண்டிருந்த நிலையில் அவரது முதல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக வெளியான புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது பூவே உனக்காக. ஒரே இரவில் சாக்லேட் பய்யன் நிலையிலிருந்து கன்னத்தைக் கிள்ளி அரவணைத்துக் கொண்டு நீ நம்ம பய்யண்டா கண்ணா எனக் கண் கலங்கக் கசிந்துருகும் நிலைக்கு அவரை நம்மில் ஒருவராக்கியது சாதனைதான். அதுவும் ஒரே படத்தில் மட்டுமே நிகழக்கூடிய அற்புதம் பூவே உனக்காக என்பது அந்த ஒரு படமானது.

எஸ்.ஏ.ராஜ்குமார், வாலி தலா ஒரு பாடல்களை எழுத பழனிபாரதி மற்ற எல்லாப் பாடல்களையும் எழுதினார். மல்லிகைப்பூ வாசம் என்னைக் கொல்லுகின்றது அடி பஞ்சுமெத்தை முள்ளைப்போலக் குத்துகின்றது போன்ற வரிகள் சாகாவரம் பெற்றன இதயங்கள் இணைந்தது இது என்ன மாயம் போன்ற சிறுபாடல்கள்கூட மனதைக் கவர்ந்தன. பாடிய குரல்கள் பாடல்களின் ஆன்மாவாகவே மாறின. இசையில் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு புதிய முகவரி மாற்றத்தை இப்படம் நிகழ்த்தியது. இதில் நடித்தவர்களுக்கு எல்லாமும் இப்படம் ஒரு புதிய திசையைத் திறந்தது.

சார்லி, மதன்பாப், மீசைமுருகேசன், சங்கீதா, எம்.என்.நம்பியார் இவர்களோடு விஜய் இணைந்து நிகழ்த்திய காமெடி காட்சிகள் பரவலான வரவேற்பைப் பெற்றன.

பூவே உனக்காக ஒருதலை காதலை காதல் கை கூடாத ஏமாற்றத்தை காதலுக்காகத் தன் உயிரையே வார்த்தெடுத்துத் தரும் உன்னதத்தை காதலின் ஒருசார்பு புனிதங்களை எல்லாம் அப்படியே அங்கீகரித்தபடியே இன்னொரு மறுபக்கத்தை மேலெழுதிய ஒன்றாயிற்று.

காதலியின் காதலை நிசமாக்கித் தரும் ஒருவனாக விஜய் எல்லோர் கண்வழி மனங்களை வென்றார். முதல் ஒரே காதல் பூ போன்றது அது அப்படியேதான் இருக்கும் அதனை மறக்கவே முடியாது. மீண்டும் மீண்டும் பூப்பதற்கில்லை அந்த முதல் மலர் என்று விஜய் கண்கலங்கச் செப்பியபோது ரசிகர்கள் கண்களிலிருந்து தாரைகள் வழிந்தன.

இந்தப் படம் வெளியாகி இருபத்தி மூன்று ஆண்டுகளாகின்றன. இன்று இதன் கதையை மறுபடி எடுத்தால் அதன் முந்தைய வரவேற்பை முற்றிலுமாக இழந்திருக்கும் என்பதே நகர்ந்திருக்கும் புதிய நிஜம் என்றாலும் காதல் எனும் நுட்பமான உணர்வின் சன்னிதியில் அவரவர் அறிதல்கள் அவரவர் ஞானம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்தவகையில் பூவே உனக்காக காதலின் க்ளாஸிக் கானம்.

முந்தைய தொடர்: https://bit.ly/2Xhl8IF