ஒரு கலையின் ஆரம்பக் காலம் அபரிமிதமான அமைதியுடனும் முன் தீர்மானங்களுடனும் அமையவல்லது. அதன் உச்சகாலம் வரைக்குமான இருத்தலும் வெற்றி தோல்விகள் எல்லாமும் அர்த்தமுள்ள பேரேட்டில் இடம்பெறத்தக்கது.எந்தக் கலையாக இருந்தாலும் அதன் அழிதல் காலம்தான் மிக முக்கியமானது. ஒரு கலை அழியும் விதமும் அதன் வழிகளும் க்ரூரமானவை. எப்படியாவது அதனைத் தப்புவிப்பதற்காக அந்தக் கலையைத் தொழுபவர்கள் தங்கள் உடல் பொருள் ஆவி இத்யாதிகளை இழந்து முயன்றபோதிலும் அந்தக் கலையானது அதற்கு ஈடு கொடுத்து உடனோடுவதிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக்கொள்ளும். இதனை வஞ்சகமென்று தனியே சொல்லத் தேவையில்லை. கலையின் அழிதல் அதனளவில் நீதியற்ற வஞ்சகத்தின் தீர்ப்புக்கூறல்தான்.

உலகத்தின் சரித்திரத்தில் பல்வேறு நியதிகள் உண்டு. மானுட வாழ்வின் அழிதல் அதன் பூர்த்தி. கலை ஒன்றின் அழிதல் எந்தப் பூர்த்தியுமற்றது. ஒரு கலை மெல்லச் செல்லரித்து வேறொரு மற்றொன்றாய் மறுமலர் காலம் காண்பதும் உண்டு. நம்புவதற்காகாத தனி மனித சாதனைகள் சந்ததிகளின் வழியே கசிந்து வரத் தலைப்படுகிற முன்காலக் கூட்டமொன்றின் கலாபலனாக இருந்துவிடவும் வாய்ப்புண்டன்றோ? உலகில் மொழியும் கலைகளும் அழிவது க்ரூரத்தின் விவசாயமன்றி வேறில்லை. மதம் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கலைகளைப் பலி தருவதும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு கலையின் வாழ்காலத்தில் அது மதத்தின் முன் சேவகனாக இருக்க நிர்ப்பந்திக்கப் படுகிறது. அமைப்பு அதிகாரம் இவற்றை எந்தக் கலைவடிவம் எதிர்க்கிறதோ அது மாற்றங்களுக்குப் பின்னால் அதன் முந்தைய எதிர்ப்பியல்புக்காகவே கட்டுப்படுத்தப்படுவதும் அழிவதும் கூட நிகழ்ந்திருக்கிறது.

தன்னைக் கலைஞன் என நம்பத் தொடங்குகிற எவனும் சராசரியின் எந்த இருப்பிடத்திலும் தன் மனதார அமர்வதே இல்லை. மெல்ல நசிவதற்கென்றே மனமும் உடலுமாய்த் தன்னைக் கொளுத்தியாவது தன் கனவைத் தப்பவைக்கிற கலாமுயல்வுகளில் ஏதேனுமொன்றிற்குத் தன் ஆவியைப் பலிதந்தவர்கள் எண்ணிக்கை பல லட்சமிருக்கும். உலகம் அப்படியானவர்கள் மீது பரிவும் கசிவுமாய்த் தானிருப்பதாகக் காட்டிக்கொள்வது ஒரு பாவனை. உண்மை அர்த்தமற்றது மாத்திரம் அல்ல. அது கருணையற்றதும் கூட.

வீழ்பவர்களுக்கான வரலாறு எளியது. வெற்றிக்கதைகளின் எதிராடல் அவர்களுக்குரியது. ஆனாலும் களம் கண்ட வகையில் வெற்றியும் தோல்வியும் இரு திசைகள் மட்டுமே. இறுதிப் போட்டியில் தோற்கிற அணிக்கென்று பரிதாபத்தின் சுழற்கோப்பை தனியே தரப்படுவதுண்டு. அதனை உரமாகக்கொண்டு அடுத்தமுறை நீ முதலிடம் பெறுவாயாக என்று கண் கசியும் பார்வையாள ரசிக ஜனக் கூட்டம். சாமான்யர்களின் சரித்திரம் வேறு வகையில் அடங்குவது. கூட்டத்தில் நிறைந்து நின்று கரவொலி எழுப்புகிற மகா மனங்கள் அவர்கள். இவர்களுக்கென்று தனித்த தோல்வியின் ரத்த அழுகை இருப்பதில்லை. காலம் என்ற வசியவாதியின் கணிதம் புரிபடாமல் நாளும் தனக்கென்று தாயமொன்று விழுந்திடாதா என்று நித்தியத்தின் எல்லாக் குதிரைகளையும் இழந்துவிட்ட பிற்பாடு மானசீகத்தினுள்ளே அயர்ந்தபடி மரணத்தை எதிர்நோக்குகிற வேறொரு தரப்பு உண்டு. அவர்கள்தான் வாய்ப்புக் கிடைக்காத திறமைசாலிகள். நானெல்லாம் எங்கே எப்படி இருக்க வேண்டியவ்ன் தெரியுமா என்ற ஒற்றை இழையைக் கைப்பற்றியபடி நாளும் இரவும் கைநழுவிப் போவதையே வாழ்வெலாம் நோக்கியபடி தன் மனதின் கனம் தாளாமல் வெறுமையை உபாசிக்கிற அவர்களில் ஒருவன் கதை தான் அவதாரம். அவன் பெயர் குப்புசாமி.

அந்தவகையில் கலையின் கைவிடுதல் காலத்தின் கதைகள் கண்ணீர் ததும்பச் செய்பவை. அப்படியான ஒரு கைவிடுதல் காலத்தில்தான் அவதாரம் படத்தின் கதைவிரிதல் தொடங்குகிறது. கூத்து என்கிற கலைவடிவம் தன் பெருவாரி செல்வாக்கை இழந்து கொண்டிருக்கக் கூடிய கடின காலத்தில் பாண்டி வாத்தியாரின் கூத்துக்குழுவில் தனக்கொரு இடம் கிட்டாதா என்று ஏங்கியபடி அவர்களை நாளும் சுற்றிச்சுற்றி வருபவன் குப்புசாமி. வாத்தியாரின் மகள் கண் பார்வை அற்ற பொன்னம்மா. அவள் மாத்திரமே குப்புசாமியின் ஈடுபாட்டை நன்கு உணர்ந்தவள். அவனது திறமைகள் மீது நம்பிக்கை கொண்டவளும் கூட. மற்றவர்களைவிடவும் பாசி என்கிற முக்கிய நடிகன் மனம் வைத்தால்தான் தனக்கொரு வேடம் கிடைக்கும் என அவனுக்கு ஏவல் செய்து அவனது அன்பை எப்படியாவது பெற்றுவிட மாட்டோமா என்று ஏக்கத்தோடு தொடரும் உப பறவையாகவே பாசியைத் தொழுதபடி திரிகிறான் குப்புசாமி. பாசி ஒரு உல்லாசி. செல்வத்தின் செழிப்பும் திறமை தந்த கர்வமும் பல தொழில் பார்க்கும் செருக்கும் யாரும் கண்டிக்க ஆளில்லா சூழலும் அவனைக் குடி புகை மற்றும் விலைமாதரைத் தேடுவது என நாளும் தன் இஷ்டத்துக்கு அலைபவனாக்குகிறது. .

பாண்டி வாத்தியார் எத்தனையோ அறிவுரைகள் கூறியும் கூத்தின் மீது அடவு கட்டி ஆடுவதன் மீது தான் கொண்ட  மாறாப் பித்தின் துளியும் குறைத்துக் கொள்ளாத குப்புசாமியை ஒரு கட்டத்தில் மகள் பொன்னம்மாவின் அன்பு நிர்ப்பந்தம் காரணமாகக் குழுவில் இணைத்துக் கொள்கிறார்.குப்புசாமி தன் கனவின் முதல் கதவைத் திறந்த திருப்தியுடன் அவர்களில் ஒருவனாகிறான்.பெண்கள் குளிக்கிற படித்துறைக்கு அத்துமீறிச் செல்லும் பாசி அங்கே தனியே குளித்துக் கொண்டிருக்கிற பெண்ணை வமபிழுக்கிறான்.அவளோ தண்ணீரின் அடியிலிருந்து சேற்றை எடுத்தள்ளி பாசியின் முகத்தில் பூசி விட்டுத் தப்பிவிடுகிறாள்.அவளைத் துரத்துகிற பாசியை குளிக்க வருகிற பிற பெண்கள் எள்ளி நகைக்கின்றனர்.அங்கே வரும் குப்புசாமியை விட்டு அவர்களின் துணிகளை எடுத்து வரச் சொல்கிறான் பாசி.அதற்கு முயலும் குப்புசாமியை பெண்கள் சப்தமிட்டு ஊரார் பிடித்து அடிக்கின்றனர்.தன்னை அப்படிச் செய்யத் தூண்டியது பாசி தான் என்றும் தன்னால் அவனை எதிர்க்க முடியவில்லை என்றும் கூத்தில் நடிப்பதற்காக பாசியைத் தான் தொடர்ந்து அவனுடைய குணக்கேடுகளைப் பொறுத்துக் கொண்டதாகவும் பொன்னம்மாவிடம் அழுகிறான் குப்புசாமி.தன் தந்தையிடம் அவற்றை தைரியமாக சொல்கிறாள் பொன்னம்மா தானில்லாமல் கூத்து நடக்காது எனச் செருக்கோடு பேசும் பாசிக்கும் பாண்டி வாத்தியாருக்கும் முட்டிக் கொள்கிறது முரண்.தன் பெருமையைப் பேசியபடியே இன்னும் எத்தனை காலத்துக்கு கூத்துன்னு இருப்பீங்க எதுனாச்சும் வேலை பாருங்கய்யா என்று ஏளனம் பேசியபடி தனக்கும் அவர்களுக்கும் பொருந்தாது என்று கிளம்பிச் செல்கிறான் பாசி.தன்னால் தான் கூத்துக்குழுவினுள் விரிசல் வந்தது என்றெண்ணி பாசியைத் தனியே சந்தித்து மன்னிப்பு கோருகிறான் குப்புசாமி.அவனை புரட்டி அடித்துவிட்டுக் கிளம்பிப் போகிறான் பாசி.

வழக்கமாக பாண்டி குழுவிற்குக் கூத்து வாய்ப்புத் தரும் அசலூர்த் திருவிழாவிற்கு அழைப்பில்லாத போதும் கிளம்பிச் செல்கிறார்கள்.அந்த வருடம் தர்மகர்த்தா மாறி எட்டூரில் இருட்டில் சாராயம் விற்கும் புது செல்வந்தன் ஒருவன் தர்மகர்த்தாவானதால் கூத்தை நீக்கி விட்டு ஆடல்பாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லி உணவுக்கு அமர்ந்த பாண்டி குழுவினரை அங்கே வரும் பாசி அவமானப் படுத்துகிறான்.பாசிக்கு ஏற்றிக்கொண்டு புது தர்மகர்த்தாவும் பேசுகிறான்.அத்தனை அசிங்கத்தையும் சகித்துக் கொண்டு ஊர்த்திருவிழாவில் ஒரு ஓரமாகத் தங்கள் கூத்தை நிகழ்த்தி விட்டுச் செல்வதாக இறைஞ்சி அனுமதி வாங்குகிறார் பாண்டி.அப்படியே நரசிம்மாவதாரக் கதையை நிகழ்த்தும் போது அரிதாரம் பூசி அமர்ந்த நிலையிலேயே தன் உயிரை விட்டுவிடுகிறார் பாண்டி வாத்தியார்.ஊருக்குத் திரும்பியதும் கூத்துக் குழுவின் அனைவரும் ஒவ்வொரு காரணத்திற்காகக் கூத்தைக் கைவிட்டுக் கிளம்புகின்றனர்.கூத்துக்குழு கலைகிறது.
எஞ்சுவது பொன்னம்மாவோடு குப்புசாமி மட்டும் தான்.

மெட்ராஸூக்குச் சென்று சினிமாவில் நடிக்கும் முடிவோடு ஊரார் உற்றாரிடம் சொல்லி விட்டு பொன்னம்மாவை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் புறப்படுகிறான் குப்புசாமி.எடுத்த எடுப்பிலேயே நகரம் அவர்களை ஒரே விழுங்காக விழுங்குகிறாற் போல் அயர்த்துகிறது.
அன்றைய இரவு ஒதுங்க இடம் கிட்டாதாவென்று அலைபவர்களுக்கு ஒரு பெண் வழக்கறிஞர் தன் வீட்டில் இடம் அளிக்கிறார்.அந்த இரவை அங்கே கழித்து விட்டு ஊருக்குத் திரும்பலாம் எனப் பொன்னம்மா சொல்வதைக் கேட்காமல் நடிப்பு லட்சியத்திற்காக தனக்காக உட்ன வருமாறு சமரசப்படுத்தி அழைத்துச் செல்கிறான்.வழியில் நளினமான தோற்றத்திற்கு மாறி இருக்கிற பாசியை பார்க்கிறார்கள்.அவன் தன்னோடு அவர்களை அழைத்துச் சென்று உபசரிக்கிறான்.தனக்குத் தெரிந்த இயக்குனரிடம் சொல்லி வாய்ப்பு வாங்கித் தரச் சொல்வதாக வாக்குத் தருகிறான் பாசி.அவனை அப்படியே நம்புகிறான் குப்புசாமி.நடிப்பாசை அவன் கண்ணை மறைக்கிறது.பொன்னம்மா பல முறை ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று இறைஞ்சியும் அவளை அமர்த்திவிட்டு நடிப்பு வாய்ப்புத் தேடி பாசியோடு கிளம்பிச் செல்கிறான்.குப்புசாமியை ஷூட்டிங் நடக்கும் இடமொன்றில் இருத்தி விட்டுத் தான் மட்டும் ஆட்டோவில் கிளம்பி வீட்டுக்கு வருகிறான் பாசி.

வீட்டுக்குத் திரும்பி வரும் குப்புசாமி பொன்னம்மா இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்கிறான்.அவளைக் கொன்றது குப்புசாமி தான் என்று தனக்கு சாதகமான காவலதிகாரி துணையுடன் குப்புசாமி பைத்தியம் என்றும் நீதிமன்றத்தில் நிறுவுகிறான் பாசி.தன் வெள்ளந்தித் தனத்தால் அதிகாரம் அமைப்பு லஞ்சம் என எதையும் எதிர்க்க திராணியற்ற குப்புசாமி சிறை செல்கிறான். அங்கே இருந்து தப்பி வரும் குப்புசாமியை காப்பாற்ற வழக்கறிஞர் ஸ்ரீவித்யா முயல்கிறார். பாசியை தன் மறைவிடத்துக்கு வரவழைக்கும் குப்புசாமி அவனை நரசிம்ம வேடமாக மாறிக் கொன்றழிக்கிறான்.

அவதாரம் தமிழில் கொண்டாடப்படுகிற நவீனங்களில் ஒன்றாக உறைந்திருக்கும் சினிமா.இந்தப் படத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான வேடங்களில் நடித்து தமிழின் முக்கிய குணச்சித்திர நடிகராக விளங்கும் நாஸர் இயக்குனராகத் தன் இன்னொரு கனவை மெய்ப்பித்தார்.இளையராஜா இந்தப் படத்திற்கு உன்னதமான பின்னணி இசையை பாடல்கள் இசையை வழங்கியதோடு பாடலாசிரியராகவும் பல பாடல்களை எழுதி நாஸருக்குப் பாடல்குரலாகத் தானே பாடி அவதாரத்தின் கட்டமைப்பில் பெரும்பங்கு வகித்தார்.இதன் நடிகர்கள் வெண்ணிற ஆடைமூர்த்தி சச்சு டெல்லிகணேஷ் முரளிகுமார் தியாகு அனைவருமே தங்கள் பங்கை உணர்ந்து அளவீடு மிகாத மென் மழையென நிறைந்தார்கள்.

இந்தப் படத்தின் மூலமாக பாலாசிங் தன் கணக்கைத் தமிழில் தொடங்கினார்.பாசியாகவே மாறி நடிப்பின் உன்னத உயரங்களைத் தன்னாலான அளவு நிரடினார் என்றால் தகும்.ரேவதி கண் தெரியாத பொன்னம்மாவாக இந்தப் படத்தில் அத்தனை நெகிழ்வுக்குரிய நடிப்பை நல்கினார்.ஏற்கனவே கைகொடுக்கும் கை முதலிய படங்களில் கண் தெரியாதவராக நடித்திருந்தாலும் அவதாரம் அவரது நடிக வெளிப்பாட்டில் மாபெரும் பாத்திர பங்கேற்பை நிறைவேற்றிய படம்.

அவதாரம் வெளியாகி இருபத்தி ஐந்து ஆண்டுகளாகின்ற நிலையில் இன்றைக்கு இந்த இதே படம் இன்னொரு கனத்தோடு பார்வை முன் விரியக் கூடும்.காலம் முன் நகர்ந்து செல்லச் செல்ல அவதாரம் போன்ற அபூர்வங்கள் தங்களை மேலெழுதிக் கொள்ளக் கூடியவை.காலத்தின் சாட்சிக்குரலாகத் தனித்தொலிப்பவை.மறக்க முடியாத நவீனகதை