காலைப்பொழுது வானத்து விண்மீன்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருக்க. பிறைச் சந்திரன் நீலக் கடலில் மிதக்கும் வெள்ளி ஓடத்தைப் போல கீழ்நோக்கி சென்று கொண்டிருக்க. கீழிருந்து எழ வேண்டி காத்திருக்கின்றான் கதிரவன்.
கடந்த இரு நாட்களாக தஞ்சை அரண்மனையை சுற்றி வலம் வந்து கொண்டிருந்த ஆதித்தனுக்கு. ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரனினுடன் நட்பு பரிபாலனை உண்டானது. அத்தை மகனாகவும். தமது எல்லைக்குட்பட்ட தேசத்தின் தளபதியாக அறியப்பட்ட ஆதித்தனை. அரவணைத்து நட்புறவாடினான் பட்டத்து இளவரசன் ராஜேந்திரன்.
அமுதமொழி பேசும் மழலை மொழியாக. இளவரசன் ராஜேந்திரன் பண்டைய கலைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராகவும். நகரத்து அரங்குகளில் நடைபெறும் அரிவையர்களின், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ஊக்குவித்து. யாழும் குழலும் இணைந்து இசை அரங்குகளில் இனிமை கூட்டிய பல நடன அரங்குகளை ஏற்படுத்தி நகரத்தார்களை தலைமைபதிகளாக நியமித்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் காண ஏற்படுத்தியிருந்தான்..
சதங்கை ஒலிகள், பதங்களுடன் சேர்ந்து, நாட்டிய நங்கையருக்கு நளினம் சேர்த்து. இசையும் நாட்டியமும் வசையில் கலைச் செல்வங்களாய்க் கவின் செய்தன தஞ்சை நகரெங்கும். காவியக் கதைகளில் தேர்ச்சி மிக்கவர் சொரியும் கவி அமுதம், செவிநுகர் கனிகள் ஆயின தமிழ் அறிஞர்கள் பலருக்கு.
வறியவர்க்கு இல்லை என்னாமல், வாரி வழங்கினர் தஞ்சையின் தனாதிபதிகள். விருந்தினர் வந்தால் விழைந்து வரவேற்று. உண்ண உணவு கொடுக்க அன்னச் சத்திரங்களும், ஆண்டிமடங்களையும் ஏற்படுத்தியிருந்தான் இளவரசன் ராஜேந்திரன்.
நகரத்திற்கு வரும் அசலூர் மக்களுக்கு இன்முகம் காட்டி. நல்லுரை பேசி. உணவும் உறையுளும் தந்து, சிறப்புச் செய்யும்படி தனாதிகாரிகளுக்கு கட்டளையும் பிரப்பித்திருந்தான் இளவரசன். மக்கள் சேவகனாக இவன் பொறுப்பேற்றதிலிருந்து. மாதர்தம்மை காக்கும் செயலால். மாட்சி மிக்க அறங்கள் தழைத்து ஓங்கின. சேற்று நிலத்தில் மாடுகள் பாலைச் சொரிந்தால். நாற்று நடும் வயல்கள் வளம் காட்டி நெற்பயிர்கள் செழிப்பது போல. செந்தாமரை முகத்தோன் செறிந்த இன்முக அறத்தால் மக்கள் வளம் செழித்தனர்.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கடினமானவையாக இருந்து ராஜராஜர் உருவாக்கிய நாட்டின் வளப்பாதையில், தனது வீரத்திற்கு வழியாக அடையாளம் கொடுத்து. பல வெற்றிகளோடு பிரதிபலித்தார் இளவரசர் ராஜேந்திரன். தமது தந்தையின் நாற்பது ஆண்டு கால கடினமான காரியங்களை. சில ஆண்டுகளிலேயே சாத்தியமாக்கிய பெருமைக்கு உடையவர் ஆனார் இளவரசர்.
தன்னைச் சுற்றியுள்ள அழகைப் போற்றுவதற்காககவும், நாவலந்தீவில் வளரும் மரத்தை போல. மேன் மேலும் வளர்ந்து வரும் தனது ராஜ்ஜியத்தை விரிவாக்க. ராஜராஜன் கூட சற்று காலம் எடுத்து கொண்டார்.
ஆனால் இளவரசன் இராஜேந்திரன் அதை சாத்தியமாக்கி மேளை. கீழை சாளுக்கியதேசம் முதல் கடாரம் வரை பயணிக்க கப்பல் படைகளையே உருவாக்கியிருந்தான்.
இந்த காலை வேளையில்.ஆதித்தனும் ராஜேந்திரனும் நிலா முற்ற மாடத்தில் நின்று கொண்டிருந்தனர்.
நாவலந்தீவுக்கு நகர்வலம் போய் பல நாட்களாகி விட்டது. ஒரு எட்டு போய்வரலாமா ஆதித்தா. என்றான் இளவரசன் ராஜேந்திரன்.
என்னது நாவலந்தீவா.
அதெங்கு உள்ளது இளவரசே என்றான் ஆதித்தன்.
ஹா..ஹா..ஹா..
முன்னொரு காலத்தில் நாவல் மரங்களால் சூழப்பட்ட இந்த சோழ தேசத்தின் தலைநகர் தஞ்சையை தான் அப்படி கூறினேன் ஆதித்தா.. என ராஜேந்திரன் கூற.
ஆஹா. அந்த நாவல் பழங்களைத் திண்ண.
ஆற்று முதலைகளும் நாட்டுக்குள் வந்திடும் என கேள்விப்பட்டுள்ளேன். அப்படிப்பட்ட இந்த தேசத்தின் தலைநகரை பார்க்க. உங்களுடன் சேர்ந்து வர நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் இளவரசே. ஆதித்தன்.
பாளைய தளபதி . சம்பிரதாய சாஷ்டாங்கமெல்லாம் அரண்மனை வாயிலோடு இருக்கட்டும்.
எனக்கு உதவியாகவும். உற்ற நண்பனாகவுமே என்னுடன் வாருங்கள்.. என்றான் இளவரசன்.
கடகடவென அருகில் இருந்த கவச உடையணிந்து. மாடத்தின கீழிறங்கி. முன்னே நின்றிருந்த குதிரையின் மேல் தாவி ஏறி அமர்ந்தான் ராஜேந்திரன். இவன் அமர்ந்த வேகத்தில் ஓட்டமும் நடையுமாக முன் சென்றது குதிரை. குதிரையின் கால்களுக்குக் கீழே நசுங்கிய பச்சை இலைகளைம் வானத்தின் பிரகாசத்தையும் பார்த்துக் கொண்டே அரண்மணையின் வாயிற் தளத்தை அடைந்தான்..
வாயிற் காப்போனிடம்.
காவலர்களே.!
இன்று. பாளைய தேச தளபதி ஆதித்தனுடன் நான் நகர்வலம் செல்ல இருக்கின்றேன்
அதற்காக ஆயத்தப்பணிகளை செய்யும்.. என கூற.
கணப்பொழுதில் மற்றுமொரு வெள்ளைக் குதிரை வரவழைக்கப்பட்டது கோட்டை வாயிலுக்கு அருகில்.
இளவரசன்
நிலா முற்ற மாடத்தில் நின்றிருந்த ஆதித்தன் கீழிறங்கி வாயிலை நோக்கி நடந்து வந்தான். அரண்மணையின் வாயிற் கதவுக்கு வந்த ஆதித்தன் சற்று நிமிர்ந்து மேலே பார்க்க.
கருநாவல் மரக்கிளை அழகையும்., அவற்றின் பிரகாசமான பச்சை இலைகள் மற்றும் கதிரவன் ஒளி பட்டு ஒளிரும் சிவப்பு கிளைகளுடன், காலை வெயில் பளபளத்தது. மரத்தின் இலைகள் தரையை நோக்கி பனியைப் போல பொழிந்து , கிழக்கு திசையில் படர்ந்த ஒளிகளுக்கு நடுவே கம்பீரமாக குதிரையின் மேல் அமர்ந்திருந்த இளவரசன் ராஜேந்திரனைக் கண்டபோது.
ஒரு போர் வீரனைப் போலவும். பௌத்த துறவியைப் போலும். கவச ஆடையோடும்.
பயணிப்போல் பக்குவமாகவும். கம்பீர பார்வையோடும். அமைதியான குடிமக்களின் ஆபத்பாந்தவனாகவும் முறுக்கேறிய இள ரத்தம் பாய்ந்த தளபதியாக காட்சியளித்தான் என்று தான் பொருள் கொள்ளவேண்டும்.
ஒரு உண்மையான போர்வீரனைப் பார்த்த உணர்வை உணர்ந்தான் ஆதித்தன்.
கறுப்பு முடி, நிரந்தரமாக முகத்தில் பதியப்பட்ட வடு, அகலமான தாடை, நீளமாக வரையப்பட்டது போல கன்னத்து எலும்புகள் மற்றும் பெரிய கருப்பு கண்கள் அவற்றின் கீழ் கருப்பு வட்டங்களுடன் இளவரசன் ராஜேந்திரன் தோற்றமளித்தான்.
பல இரவுகள் அவன் தூங்கவில்லை என்பதை கருவளையங்களை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
அப்படித்தான் ஆதித்தனும் உணர்ந்தான். ஆனால் இப்போது அவர் எங்கே கூட்டிச் செல்கிறார் என்பதை எண்ணி பெருங்குழப்பமடைந்திருந்தான் பாளைய தளபதி.
ஆதித்தா. கோட்டையின் வடமேற்கு மூலையில் உள்ள வழியாக வந்துகொண்டிருக்கும் அந்த குதிரையின் மீது ஏறிக் கொள்,
போகிற வழியில் மற்றதை சொல்கின்றேன். வடவாறு போகிற வழியில் உள்ள திருமஞ்சன சாலைக்கு அருகே அமைந்துள்ள காலபுரம் ஆயிரத்தளி மண்டபத்திற்கு அருகே உள்ள சுந்தர் ஆதுரச் சாலைக்கு வந்துவிடு. அதற்கு முன்பாக ஒரு வேலையுள்ளது. முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் எனக்கூறி.
பதிலுக்கு எதிர்பாராமல் குதிரையின் வயிற்றில் காலால் நீவிவிட பனியைப் போல பறந்து சென்றது ராஜேந்திரனின் குதிரை.
கோட்டைக்கு அருகே உள்ள ஆற்றிலிருந்து வீசியது மிதமான காற்று, வந்த குதிரையின் மேல் அமர்ந்து ஆதித்தன். ராஜேந்திரன் போன மேற்குப் பகுதியை நோக்கி சவாரியை தொடங்கினான்,
கோட்டையை விட்டு தூரம் செல்ல செல்ல வெப்பமான காற்று ஆதித்தனின் உடலில் பட்டது போல் இருந்தது,
இந்த சூரிய ஒளியானது சோழ தேசத்தின் ஒவ்வொரு பசுமையான இலைகளையும் செழிக்க படர்கிறதோ. இது தஞ்சையின் பெரும்பகுதி வளங்களை. வெப்பக் காற்றிலிருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லாமல் இதமான தென்றல் வருடிச் சென்றது.
தொலைதூரத்தில் ஒரு சிறிய உருவம் இவனை நோக்கி வருவது போல புலப்பட்டது.
ஒரு வேளை ராஜேந்திரனாக இருக்குமோ! ஒரு வேளை வேறு யாராவது இருக்க கூடுமோ. ஒரு வேளை, ஒரு வேளைகளில் . எண்ணி முடிப்பதற்குள்.
எதிரே வந்த குதிரை இவனிடம் நெருங்கியிருந்தது. கழுத்தில் ஈரடுக்கு முத்துமாலை. மார்பில் நீண்ட ஸ்வர்ண வைகாஷம், கைகளில் தோள் வளைகள். கால்களில் மெல்லிய தாள்செறிகள். அவளின் இடைச்சிற்றாடையைத் தழுவியிருக்கும் மணிகள் பதித்த மூன்றடுக்கு அரைக்கச்சின் தொங்கல். இடத்தொடையில் நெகிழ்ந்துள்ள முத்துமணிகள். நிமிர்வும் குனிவுமின்றிப் பெண்மையை முதன்மைப்படுத்தும் நேர்காணும் முக அமைப்பு உடலின் பல பாகங்கள் வசீகரித்தது.
அங்கம்மா தேவியரின் உடற்கூறியலில். அத்தனை அழகுகளையும் கண்முன் நிறுத்தியது ஆதித்தனுக்கு.
இந்த எளியவனுக்கு கூட இத்தனை அழகுகளை வெளிப்படுத்தமுடியுமா என வியந்தே போனான் ஆதித்தன். நந்தவனத்தில் அம்பிகையைப் பார்த்த அவன் கண்களுக்கு இந்த பார்வை உன்னதமாக.
சாணக்கியக் கைகளின் செழுங்கொடையானது, சிதையாமல் இவன் சிந்தனையிலேயே வலம் வந்திருந்ததால். எதிர்பாராமல் இங்கு அங்கம்மாவைப் பார்த்த ஆதித்தனின் கண்கள் அவளை விட்டு பார்வையை நீக்க மறுத்திருந்தது.
எந்நிலையிலும் இந்த அழகரசிக்கு இணையான ஒரு படைப்பை வேறெங்கும் கண்டதில்லை என்று சொல்வதுவே பொருந்தும்.
இளவரசர் வருகிறார் என்று நினைத்தால் என்னவள் வந்திருக்கிறாளே. அதுவும் தைரியமாக இப்படி வெளியில் உலாவுகிறாளே. என்று முனுத்துக்கொண்டிருந்தவனுக்கு அருகில் வந்தது அங்கம்மாவின் குதிரை.
தளபதிக்கு இந்த சிறிய பெண்ணின் வணக்கங்கள்.
சுந்தரர் ஆதூரச் சாலைக்கு தங்களை அழைத்து வரும்படி இளவரசர் ராஜேந்திரனின் கட்டளை.
என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள் என்று கூற.
பேசும் ஓவியத்தை முதன் முறையாக நேரில் பார்த்தது போல பிரம்மையில் உறைந்தான் ஆதித்தன்.
வீட்டிலிருக்கும் போது பதுமைப் பேதையாக காட்சி தந்ததவள் இப்போது ஒரு படைத்தளபதி போல கம்பீரத்தோடு பேசியதை நினைத்து சிலிர்த்தது உடல்.
நிதானம் வந்தவனாய்.
தேவி. ஆதூயச்சாலைக்கு எப்படி வருவதென்று வழி தெரியாமல் தான் நானும் குதிரையின் மேல் பொறுமையா வந்துகொண்டு இருக்கின்றேன். வழியில் யாரிடமாவது வழிகேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றென்னிய எனக்கு ஆபத்துதவியாக வந்து அருள்பாளித்துள்ளீர் கள் எனக்கூற.
ஆபத்துக்கு மட்டும் தான் இந்த தேவியை அழைப்பீர்கள் போலும். என்று மின்மினி கண்களால் இவனைப் பார்த்து புன்னகை புரிய…
இதயமெல்லாம் வலது இடது புறத்தில் மாறி மாறி துடித்தது. நா வறண்டது. பேச்சு வரவில்லை இவனுக்கு.
ஆஹா. இவளிடம் எப்படி பேச்சுக்கொடுப்பது என்றெண்ணியிருந்தேன்.
அவளே வந்து சஞ்சாரம் செய்கிறாளே. ஆதித்தா….விட்டுவிடாதே. உன்னுடைய முறைப்பெண். உனது மாமன் மகள்.உனக்கில்லாத உரிமை வேறு எவருக்கு உள்ளூது. அவளை பின் தொடர்ந்து போ. அவள் மனதை கொணர்ந்து செல்லடா…
எண்ணங்கள் என்னென்னவோ யோசித்தது ஆதித்தனுக்கு. உதடுகள் தானாக பேசிக்கொண்டன.
தேவி….
திரும்பினாள் இளவரசி.
வாருங்கள் தளபதியே….
இல்லை…..உங்….
உங்களிடம்………
என்ன……
உம்மிடம்……
எச்சில் விழுங்கினான்.
சொல்லுங்கள் என் அத்தையின் அருமை புதல்வரே என்று சிரித்துக்கொண்டே அவள் கேட்க.
சற்று தைரியம் வந்தவனாய்.
அங்கம்மா…. தேவி….
அட. பாளையத்து தளபதிக்கு இளவரிசியின் பெயரைச் சொல்லி அழைக்கும் அளவிற்கு தைரியம் வந்து விட்டதோ…
ஹா.ஹா.ஹா…. என்று கலகலவென சிரித்தாள் அங்கம்மா.
கொஞ்சம் தைரியம் வந்தவனாய்.
அங்கம்மா தேவி. …
சொல்லுங்கள் தளபதியே…
உன் பெயரை உச்சரித்தபோதே. பிறப்பெடுத்த பயனடைந்து விட்டேன் என்று புன்னகையோடு கூற.
அங்கம்மா தேவியின் முகம் சட்டென மாறியது.
பயடைந்தது மாதிரி தெரியவில்லையே. பயணக்களைப்படைந்தது போலல்லவா உளறுகிறீர்.
அப்படி…. என்ன பயடைந்து விட்டீர்கள் என்பது புரியவில்லையே…..
டக் டக் டக் டக் டக் டக்.
டக் டக் டக் டக் டக் டக் டக் டக் டக் டக்.
சிறிது மௌனம். இரண்டு குதிரைகளின் குளம்படி சத்தம் மட்டுமே இருவரது காதுகளிலும் கேட்டது.
வழியில் நான்கு சாலைகள் சந்திப்புக்கு அருகே சிலர் குழுவாக தலையில் சும்மாடு கட்டிக்கொண்டு. பொருட்களை மூட்டைகளாக சுமந்து சென்று கொண்டிருந்தனர்.
வழியெங்கும் காடாகவும். சில இடங்களில் தென்னை புங்கை மரங்களும். அதன் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். காக்கை குருவிகளும். சாலையின் இருபக்கமும்
ரிங்ங்ங்ங்….. என்று வண்டுகளின் சத்தம் பேரிரைச்சலோடு பறந்து கொண்டிருந்தன.
சற்று நேரம் இவைகளை வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவன். தனக்கு முன்னால் வெள்ளைப் புரவியின் மேலே அழகான பெண்புலி ஒன்று பயணித்துச் செல்வதையும்.. ரசித்துக் கொண்டே சென்றான்.
இவனது குதிரை சற்று சுனக்கமாகத்தான் பயணித்தது.
காலைப்பொழுது கதிரவன் மெல்ல மெல்ல உச்சி வேளைக்கு வந்து விட..
சாலையில் பயணித்த ஆதித்தனுக்கு.தண்ணீர் தாகம் எடுக்க தொடங்கியது.
சற்று தூரத்தில் ஒரு பெரிய ஆலமரம் தென்பட்டது.
கிட்டத்தட்ட ஆலமரத்தை நெருங்கியது இரு குதிரைகளும்.
முன்னே சென்று கொண்டிருந்த இளவரசி. பின்னால் வந்து கொண்டிருந்த திரும்பி கூட பார்க்கவில்லை. அந்த உரையாடலுக்கு பிறகு.
அவள் மனம் வேறு ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கி இருந்தது.
ஒரு காத தூரத்தில் தெரிந்த அந்த பெரிய ஆலமரம். தன்னை சுற்றி ஒரு நிழல் குடையை அமைத்த போல் பரந்து விரிந்து. அந்த வழியாக பயணிக்கும்
வழிப்போக்கர்களுக்கு இளைப்பாறுதல் கொடுத்துக் கொண்டிருந்தது.
ஒரு வழியாக மரத்திற்கு கீழே வந்த ஆதித்தனும் குதிரையை விட்டு கீழே இறங்கினான்.
மரத்திற்கு பின்னால் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள். அங்கு யாரோ தங்களை உற்று நோக்குவதாக தெரிந்ததும். அங்கம்மா தேவியார் இன்னும் குதிரையின் மேலேயே அமர்ந்திருந்தார்.
தேவி. இறங்க மனமில்லையா. அல்லது இறக்கிவிட உதவி தேவையா என்று கேட்டான் ஆதித்தன்.