அடர்ந்த அந்த பெரிய மரத்தின் கீழே நின்றிருந்த அங்கம்மா. தனக்கு எதிரே இருந்தோர் மீது கூர்மையான தனது பார்வையை படர விட்டாள். விசித்திரமான அந்த ஆளைக் கண்டவுடன். ஆதித்தனுடன் பயணப்பட்ட உற்சாகமெல்லாம் மறைந்தே போயிருந்தது .
அவள் இரு கன்னங்களும் வெப்பச்சலனத்தில் சூடேற்றியது போல தகதகத்தது.
அருகில் நின்ற ஆதித்தன். தேவி. குதிரையில் இருந்து இறங்க இவ்வளவு நாழிகையா. தடங்கள் ஏதாவது கண்டீர்களோ… எனக் கேட்க.
பதில் இல்லை இவளிடம்.
இந்த நிலையில். வெளியிலிருந்து வந்துள்ள இனம் புரியாத பல முகங்கள் ஆங்காங்கே தட்டுப்பட்டு போனது. சாலையில் ஓரிரு மாட்டு வண்டிகள் கடந்து சென்றன. ஆல மரத்தின் கீழ் ஒரு பெண் தன் குழந்தைக்கு. ராஜா இலங்கை விஜயம் பற்றிய கதை ஒன்றை சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்.
கணிசமான கூட்டம் அங்கே கூடியிருந்தனர் என்பதைக் கணித்தால். இது பலர் புழங்கும் இடமாகவே தோன்றியது ஆதித்தனுக்கு.
சில நிமிடங்களில் காற்று பலமாக வீச தொடங்கியிருந்தது. சாம்பல் வண்ணத்தில் காய்ந்த ஆல மரத்தின் இலைகள் இவளது முகத்தின் விளிம்பில் வருடிக் கொண்டே பறந்து சென்றன.
மரத்தின் பின்னால் இருந்து கருத்த. தடித்த உருவம் ஒன்று வெளிப்பட.
அவனைப் பார்த்ததும். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மார்பு படபடத்தது ஆதித்தனுக்கு.
இவனின் இந்த அசாதாரண சூழலைக் கண்ட இளவரசி. கோபம் தணிந்து கொஞ்சம் புன்னகை சிந்த தொடங்கினாள். வருவது யாரென்று தெரிந்தது போல்.
தனக்கு பின்னால் வருபவனைக் கவனிக்காமல். இளவரசியின் காந்த விழிகளையே தனது கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் அந்த தடித்த உருவம் கையில் ஈச்சமரக் கொடியினால் திரிக்கப் பட்டிருந்த கயிறு ஒன்றோடு சற்று அருகில் வர.
அந்த புதிய ஆளை அருகில் பார்த்ததும் சற்று பெருமூச்சு விட்டபடி, குதிரையிலிருந்து கீழிறங்கினாள் அங்கம்மா.
இவளின் விசித்திரமான நடவடிக்கைகளை கண்டுபிடிக்க இயலாது. இந்த காந்த விழி தேவதையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்தன்.
ஐயா….. சற்று வழி விடுங்கள் என்றது ஒரு குரல்.
திரும்பிய ஆதித்தன் சட்டென ஆ…….என அலறியபடி இடையில் செருகியிருந்த வாளை எடுத்து வான் நோக்க..
ஆதித்தனையும் உயர்ந்த வாளையும் பார்த்து பார்த்து அந்த கருத்த உருவத்தானும். ஏதோ விபரீதம் போல என்று எண்ணி மரத்தின் பின்னால் ஓட. அவனைத் தொடர்ந்து ஆதித்தன் ஓட.
இதை சற்றும் எதிர்பாராத ஆதித்தனது குதிரை கனைத்துக்கொண்டே இருந்தது.
அப்போதுதான் குதிரையில் இருந்து இறங்கியிருந்த இளவரசி. தனது குதிரையின் கடிவாளத்தை கச்சிதமாக பிடித்துக் கொண்டாள்.
அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த வழிப்போக்கர்களும் இளவரசியும்..ஹா..ஹா..ஹா. வென கத்தி கரவொலி எழுப்பி சிரித்தனர் இவர்கள் ஓடியதைக் கண்டு.
அதற்க்குள் மரத்தின் பின்னால் ஓடி வந்திருந்தான் அந்த ஆள். அவன் பின்னாலேயே ஆதித்தனும் வந்து நிற்க.
அட தற்குறி மனுஷா.
இப்படி பயம் காட்டுவதுதான் தங்களின் போழுது போக்கா என கேட்டு மூச்சு வாங்கினான் ஆதித்தன்..
ஐயா. நான் குதிரையை தொழுவத்தில் கட்டவே அங்கு வந்தேன்.
தாங்கள் என்னை கொல்வதற்காக வீசிய வாளைப் பார்த்ததும். உயிர் பயந்து ஓடி வந்தேன்.. என அந்த மனிதன் கூற.
தன் நிலையை எண்ணி சிரிப்பதா. கோபப்படுவதா என தெரியாது உதட்டுக்கும் தொண்டைக்கும் இடையே புன்னகைத்துக் கொண்டான் ஆதித்தன்.
அதற்குள்ளாக. வழிப்போக்கர் கூட்டத்தினர் ஒரு பகுதியினர் இவர்களை பின்தொடர்ந்தது ஓடி வந்திருந்தனர்.
அரண்மனையில் சோழ இளவரசன் ஏற்பட்ட நட்புறவால்.. அரண்மனையிலிருந்து அவனை பின் தொடர்ந்து செல்ல வேண்டிய ஆதித்தன். தான் செல்ல வேண்டிய வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த வேளையில். இடையே காந்த கண்ணழகி அங்கம்மா தேவியாரை சந்தித்தது முதல். அவளுடன் இணைந்து பயணம் செய்த ஒவ்வொரு கணமும், இயல்பான மற்றும் எதிர்பாராத பல திருப்பங்களை கொடுத்துக் கொண்டிருந்தது இவனுக்கு .
சுயாதீனம் வந்தவனாக, மரத்தின் பின்னே திரும்பிப் பார்க்கையில். பட்டத்து இளவரசி அங்கமா தேவியார் அருகிலே. சோழ நாட்டின் இளவரசர் ராஜேந்திரன் நின்றிருக்க.
அவர்கள் நின்றிருந்த இடத்தின் பின்னே பெரிய விசாலமான சுந்தரர் ஆதுரசாலை கம்பீரமாக வீற்றிருந்தது.
போர் செய்த சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவ சாலையை சுற்றிலும் பொதுமக்கள் வந்து போகும் வண்ணம் நிகழ்ந்துகொண்டிருந்தது.
அருள்மொழி தேவ வளநாடு என்று அழைக்கப்பட்ட. அல நாடு. ஆர்வலர் கூற்றும். மங்களநாடு. புலியூர் நாடு. வண்டாழை போன்ற வெள்ளான் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளுக்கு அருபெரும் உதவியாக நாடி வந்தனர் இந்த வைத்தியசாலையை.
ஆதுரசாலையானது. சுந்தர சோழரின் பெயரிலேயே நிறுவப்பட்டுள்ளதாலும். ஆதுரச் வைத்தியச்சாலையின் தலைமை வைத்தியருக்கு அருகிலிருந்த கணிமுற்றுட்டு என்ற இடத்தில் உள்ள கணக்கந்செய் நிலம் அரை மாவும். கொலண் குண்டு நிலம் அரைக்காணியும். அரைக்காணி முந்திரிகையும் கொடையளிக்கப்பட்டிருந்தது.
அப்படிப்பட்ட வைத்தியசாலையின் வாயிலில் தான் இளவரசர் ராஜேந்திரனும் இளவரசி அங்கம்மாதேவியும் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆதித்தனுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர கொடுத்தது அந்த வினாடிகள்.
நினைவுக்கு வந்தவனாய் ஆதித்தன் இவர்களை நோக்கி நடக்க. பேசிக்கொண்டிருந்த இருவரும் தங்களது பேச்சை நிறுத்தி.
வாருங்கள். ஆதித்தரே…. என வரவேற்றார் ராஜேந்திரன்.
இளவரசே. உங்களைப் பின் தொடரச் சொல்லிய. இமைப்பொழுதில் மாயமாகி விட்டீர்கள்.
இங்கே வந்து சேர படாத பாடுபட்டுவிட்டேன்.
இளவரசி மட்டும் வரவில்லை என்றால் எங்கோ காணா தேசம் சென்றிருப்பேன் என ஒரு பக்கம் இவளைப் பார்த்துக் கொண்டே ஆதித்தன் கூற.
அருகில் இருந்த அங்கம்மா.. நான் உள்ளே செல்கிறேன் அண்ணா என்று கூறிவிட்டு சட்டென்று நகர்ந்தாள்.
ஆதித்தா. முப்போகம் பயிர் செய்யும் பொன் விளையும் பூமி இது. பொன்னி நதியின் வழித்தடத்தில் உள்ள கரைகளையும். வயல் வரப்புகளைம் நிதானமாக நீர் ரசித்து கொண்டு வரவேண்டும் என்றே நான் உம்மை விட்டு விட்டு இங்கே அவசரமாக வந்துவிட்டேன்.
பிறகுதான் புரிந்தது. உமக்கு வழி தெரியாமல் போனால் என்ன செய்வது என எண்ணித்தான் அங்கம்மாதேவியை அனுப்பினேன்.
பரவாயில்லை. சரியான சமயத்தில் வந்தடைந்தீர். வாரும் உள்ளே செல்லலாம் எனக்கூறி.!
ஆதூரச் சாலையின் பெரிய வாயிற் வழியே ராஜேந்திரன் உள்ளே செல்ல. ஆமோதிப்பது போல பின் தொடர்ந்தான் ஆதித்தன். உள்ளே செல்ல செல்ல ஏதோ ஒருவிதமான மருத்துவ மூலிகைகள் வாசனை மூக்கை துளைத்தது.
உள்ளே சென்று வலப்புறம் திரும்பி எதிரே உள்ள விசாலமான அறையில் அங்கம்மா தேவி நின்று கொண்டிருக்க..
அந்த அறையின் உள்ளிருந்து பழுவூர் நக்கன் வெளிப்பட்டான். நக்கனைப் பார்த்ததும் ஆதித்தன் சற்று கலக்கமடையவே செய்தான்.
சிற்றரசர் நக்கன் இங்கே எப்படி என தனக்குள்ளே கேள்வியெழுப்பிக் கொண்டே ராஜேந்திரனை பின் தொடர்ந்தான்.
இவர்களை நோக்கி வந்த பழுவூர் நக்கன் வருக இளவரசே . உள்ளே செல்லுங்கள். அங்குதான் இருக்கிறார் என்று கூறி திரும்பவும் வாயிற் தளத்தை நோக்கி நடக்கலானான்.
உள் அறைக்கு சென்றனர் பாளைய இளவரசனும் பட்டத்து இளவரசனும்.
அறையின் உள்ளே வைத்தியர் ஒருவர் வயதான ஒருவருக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தார்.
அந்த அறையின் உள்ளே சென்ற ராஜேந்திரனை கண்டதும். மகிழ்ந்தது போல முகபாவனையை மாற்றியும், இளவரசர் உள்ளே வந்து இருக்கிறார் என்பதை போல வைத்தியம் எடுத்து கொண்டவருக்கு தனது முக பாவனையால் சைகை காட்டினார்.
இளவரசன் ராஜேந்திரனை கண்டதும். திண்ணையில் படுத்திருந்த அந்த பெரியவர் ராஜேந்திரனை வரவேற்கும் விதமாக தனது வலது கையை நீட்ட.
அருகில் சென்ற ராஜேந்திரன். எனது தந்தையின் உயிரை காப்பாற்றிய மதிப்புமிக்க பௌத்த துறவி அவர்களே. உங்களை கண்ணும் கருத்துமாக அருகில் இருந்து கவனித்துக் கொள்ள எனது தந்தை இங்கே அனுப்பியுள்ளார் என்று கூறினான் ராஜேந்திரன்.
சற்று மங்கலான பார்வையுடைய அந்த துறவி.முற்றிலும் அங்கவஸ்திரம் போற்றப்பட்டு. கையில் ஒரு கடிக மாலையை வைத்து ஒவ்வொன்றாக உருட்டிக் கொண்டே.
ராஜேந்திரனுக்கு ஆசி வழங்கும் விதமாக தனது வலது கையை உயர்த்தி காட்ட. இடது கையினால் நீண்ட ஒரு கைத்தடியைப் பிடித்து எழுந்திருக்க முயல….
எழுந்திருக்க வேண்டாம். சற்று பொறுங்கள் என்று கூறி, அவர் அருகே சென்று அந்த துறவியின் காலில் விழுந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான்.
ராஜேந்திரன் தலையில் தனது உள்ளங்கையை வைத்து சற்று மேலுயர்த்தி ஆசீர்வதித்தார் அந்த சூடாமணி விகார துறவி. மிகவும் வயதாகி உடல் மெலிந்து கண்கள் பார்வை மழுங்கி.பேச்சு மறைந்து. முழுவதுமாக நலிந்த நிலையை அடைந்திருந்தார்.
அந்த துறவியை நோக்கி.
நான் போய் வருகிறேன் ஐயா. விடை கொடுங்கள். பிறகு வந்து கவனிக்கின்றேன் எனக் கூற.
வார்த்தைகள் ஏதும் கூறாமல் மறுபடியும் சம்மதம் தெரிவிப்பது போல கையை அசைக்க… விகார துறவி அருகில் இருந்த வைத்தியரிடம் துறவியின் சீடர் ஏதோ கிசுகிசுத்தார்..
அதைக் காதில் வாங்கிக் கொண்டு.
இளவரசுக்கு இந்த ஆதூரச் சாலை வைத்தியனின் வணக்கங்கள்..
தாங்கள் விஜயம் செய்ததால் இனி இந்த வைத்திய சாலை நாடு முழுவதும் புகழ்பாடும்.
நாகப்பட்டினத்து துறவியின் உடல் இப்போது சற்று சீராகத்தான் உள்ளது. ஆனால் அவரும் அவரது சீடர்களும் இப்போதே நாகப்பட்டினம் போக வேண்டும் என்றும் அதற்கு ஏற்பாடுகள் செய்ய சொல்லி வெகு நேரமாக கூறிக்கொண்டிருக்கின்றனர். நீங்கள் வரும் வரை காத்திருங்கள். இளவரசர் வந்ததும் அதற்கு ஏற்பாடு செய்வார் என கூறியிருந்தேன்.
ஆனால் தற்போது பிரயாணம் செய்யக் கூடிய நிலையில் இந்த புத்த பிக்குவின் உடல் நிலை சரியில்லை . நீங்கள் சொன்னால் உங்கள் பேச்சைக் கேட்பார் எனக் கூறி.
உத்தரவு… இளவரசே என்று இருகைகளையும் கட்டிக்கொண்டு இரண்டடி பின்னால் சென்றார்.
வைத்தியரே. தந்தை இன்று இங்கு வர உத்தேசம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அப்படி அவர் இங்கு வரும் பட்சத்தில் துறவியை நாகப்பட்டினத்திற்கு அனுப்புவது சரியாக இருக்காது.
மன்னர் வரும்வரை சற்று ஓய்வு எடுக்கும் வழி கூறுங்கள் என நோக்கி கட்டளையிட.
உத்தரவு இளவரசே…என வைத்தியர் கூற அருகில் இருந்த சீடனும் புரிந்த மாதிரி துறவியை நோக்கிப் போனான்.
அந்த அறையிலிருந்து வெளியேறிய ராஜேந்திரன். அறையின் முகப்பில் நின்றிருந்த இளவரசியை பார்க்க. ராஜேந்திரனோடு அவளும் சேர்ந்து வெளியேற தொடங்கினாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தன் சற்று யோசித்து…
இரு நாட்களுக்கு முன் தஞ்சை அரண்மனைக்கு விஜயம் செய்த நாகப்பட்டினம் சூடாமணி விகார துறவி தான் இவரென கண்டுகொண்டான்.
இளவரசே. இப்பெரியவர் நமது அரண்மனைக்கு வந்திருந்த போது சுகமாகத்தானே இருந்தார். இடையில் என்ன ஆனது. எப்போது இந்த வைத்திய சாலைக்கு அழைத்து வந்தீர்கள்.
நானும் உங்களுடன் தானே இருக்கிறேன். என ஆச்சரியமாக கேள்வி மேல் கேள்வி கேட்க……
நேற்றிரவு நடு சாமத்தில் இந்த துறவிக்கு சற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம் ஆதித்தா. சற்றும் தாமதிக்காமல் நமது அரண்மணை வைத்தியர் தான் இங்கு அழைத்து வந்துள்ளார். காலையில் தான் விடயம் தெரிந்தது. பிறகு தந்தையின் சொற்படியே இங்கு வந்தோம் எனக் கூற.
அப்படியெனில் பழுவூர் அரசர் மற்றும் இளவரசி இங்கெப்படி இளவரசே எனக் கேட்க.
கொஞ்சம் பொறு. அனைத்திற்கும் விளக்கம் கூற தயாராக இருக்கிறேன்.
வெளியே செல்லலாம்.. எனக்கூறி வந்த வழியே திரும்பி நடக்கலானான்.
அறையிலிருந்து வெளியே வந்த மூவரும் ஆதுரசாலையின் முகப்பு வாயிலில். பழுவூர் நக்கன். பாளையத்து அரசர் நல்லப்பர். தொண்டைமண்டல தளபதி அநபாயர் போன்றோர் நின்றிருக்க.
ஆதித்தன். அங்கம்மா தேவி. இளவரசன் ராஜேந்திரன் அவர்களை நோக்கி சென்றனர்.
அந்த பெரிய ஆலமரம் இன்னும் தனது தூரிகையான காய்ந்த இலைகளை அந்த இடமெல்லாம் படரவிட்டு. தென்றல் காற்றுக்கு ரீங்காரம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அந்த ஆலமரத்தடி நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்து இவ் வாதூரச் சாலைக்கு வந்திருந்தவர்களும். சாலையில் பிரயாணம் செய்தவர்களும்.
ராஜாங்க அதிகாரிகள் குழுமியிருந்த அந்த மரத்தின் கீழ் .. இவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
சற்று தூரத்தில் கரகோஷம் விண்ணில் பிளக்குமளவிற்க்கு கோஷங்கள் எழுப்பியது போல சத்தங்கள் கேட்டது.
ஆலமரத்தடியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவன். தனது குரலை உயர்த்தி.
காளாமுகர்கள் வருகிறார்கள். காளாமுகர்கள் வருகிறார்கள் என சத்தமாக கத்த.
ராஜாங்க அதிகாரிகளான இளவரசர்கள் இவர்களுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.