ஆவேச உரையயோடு ஆர்ப்பரித்த அம்பலவன் பழுவூர் நக்கன்.

சுந்தர சோழரின் தவப்புதல்வர் என்ற வரியில் தொடங்கி பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்ற இரண்டு வரியோடு அஸ்தமனமாகியது ஆதித்த கரிகாலரின் வரலாற்று பயணம்.

அந்த இறுதி அத்தியாயம் எழுதப்பட்டது கட்டமைக்கப்பட்ட ஒரு துரோக வரலாறு என்பது சோழ தேசம் மறக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

சோழ தேசத்தின் சக்கரவர்த்தி சீமானே.

ஆதித்த கரிகாலரின் வீரத்தை கண்ட பல்லவர்களும் பாண்டியர்களும் பயந்து நடுங்க. ஆளுமைமிக்க இளவரசர் இவர் என முழங்கியதை அகிலம் அறியும்.

மகேந்திர பல்லவன் காலம் துவங்கி, நிருபதுங்கன் காலம்வரை கங்கையின் வழித்தடம் முதல் காவிரியின் நீர் தடம்வரை, சோழ தேசத்தை புண்ணிய தேசமாக மாற்றிய பெருமை ஆதித்த கரிகாலரின் சாதனையாகும்..

அப்படிப்பட்ட சாதனையின் நாயகனை, அந்த நாயகனின் வரலாற்றினை! இரண்டு வரியில் எழுதும்படி விதி வலியச் செய்துள்ளது.

பாண்டிய தேசத்து துரோகிகள் ரவிதாசன் மற்றும் அவனது உடன்பிறப்புகளை நாடு கடத்தியது மட்டும் தீர்வாகாது.

அவர்கள் இப்போது காந்தளூர் பகுதியில் முகாமிட்டுள்ளதாக தொண்டைமான் பார்த்திபேந்திர பல்லவர் மூலமாக அறிய முடிகிறது.

இந்த செய்தியின் ஸ்திரத்தன்மை உண்மையாக இருக்கும் பட்சத்தில்,

மாமன்னா.!

தாங்கள் வழிநடத்தப்போகும் இந்தப் போருக்கு பழுவேட்டரைய வம்சாவழியினர் தொட்டு வரும் படையணிகளை யாம் தலைமை தாங்க தாங்கள் அனுமதிக்க வேண்டும்.

எங்களது முன்னோரான பகைவிடை ஈஸ்வர தேவனார். குமரன் கண்டன். குமரன் மறவன். கண்டன் அமுதன். தேவணார். கோதண்ட தப்பிலிதர்மர். மறவன் கண்டன். மேலும் எனது தந்தையார் கண்டன் சுந்தர சோழன் என்றழைக்கப்பட்ட கண்டன் மறவருக்குப் பிறகு இன்று அம்பலவன் பழுவூர் நக்கனான எனது காலம் வரை இருபது யுத்தங்களில் பங்கெடுத்து சோழ தேசத்திற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

அப்படிப்பட்ட சோழதேசம் முன்னெடுக்கப்போகும் அடுத்தக்கட்ட போருக்கு. தாங்கள் இசைவு அளிக்கும் வேலையில்.

நானே உடனிருந்து இந்தக் காந்தளூர் பயணத்தை வழி நடத்துகிறேன் என்பதை இங்கு கூடியிருக்கும் சபையோர் முன்னிலையில் எந்தத் தயக்கமும் இல்லாமல் கூறுகிறேன் என ஒரு பெரிய வீராவேச உரையை நிகழ்த்தி.

சபையோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஒரு காலத்தில் தஞ்சையை ஆண்ட பழுவேட்டரையர்களின் சிற்றசனான அம்பலவன் பழுவூர் நக்கன்.

பொன்னியின் செல்வனில் வலம் வந்த அந்த இளைய பழுவேட்டரையரின் புதல்வர் அம்பலவன் கர்ஜித்த அந்த வீரக் குரலானது. தஞ்சை அரண்மனையி்ன் நாலாப்புற சுவர்களிலும் எதிரொலித்து மீண்டும் அரண்மனையின் சபையிலே பிரதிபலித்தது போல இருந்தது.

இவ்வளவு நேரமும் இந்த ஆவேச உரையை கேட்டுக்கொண்டிருந்த மாமன்னருக்கு.

பழுவேட்டரையரின் வீர வரலாறு ஒரு கணம் கண் முன்னே நிழலாடியது.

இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவருக்கு தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் அறுபது விழுப்புண் பெற்றவர் என பெயரெடுத்த பழுவேட்டரையர்.

பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக்கொடியை எடுத்துச் சென்றவர்கள் இந்தப் பழுவேட்டரையர்கள்.

அதுமட்டுமின்றி அரிஞ்சய சோழருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்.

அப்படிப்பட்ட வீர வரலாற்றுப் பெருமை வாய்ந்த பழுவேட்டரையரின் வாரிசான அம்பலவனின் இந்த உரையை கேட்ட பின் பழுவேட்டரையர்களின் வீரம் ஒரு போதும் குறையவில்லை என்பதில் சந்தேகமே தேவையில்லை என்பதுபோல மாமன்னர் அருள்மொழிவர்மரின் எண்ணத்தில் பளிச்சிட்டது.

முறையே தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த பார்த்திபேந்திர பல்லவர் எழுந்து.

மன்னர் மன்னா. வாழ்க வாழ்க நீடூழி தங்கள் பணி.

தங்களின் ஆட்சியில் மாதம் மும்மாரி பொழிந்து மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் இந்திரனின் ஆட்சியைப் போலவே தாங்கள் ஆட்சி புரிந்து வருவதாக அகில தேச மக்கள் அனைவரும் பாராட்டி செல்கின்றனர் .

அப்படிப்பட்ட சோழதேச மரபில். இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டு காலம் ஆனாலும் இத்தகைய அருஞ்சாதனையை யாரும் இது ஈடு செய்ய முடியாது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் என்பதை தளபதி வந்தியத்தேவனும் நக்கனும் இந்த சபையோருக்கு அழுத்தம் திருத்தமான ஒரு விளக்கத்தை அளித்த பின்னர்.

மேன்மேலும் அது பற்றி நான் பேசுவதில் நேரம் விரயம் ஆகும் என்பதால். அடுத்த கட்டத்தினை முன்னெடுக்கும் விதத்தில் பிரம்மராயர் மற்றும் மூத்த அரசவை தலைவர்களின் ஆலோசனை முக்கியமாக இந்த இடத்தில் தேவைப்படுகிறது.

சேர தேசத்தில் உள்ள காந்தளூர் எனுமிடத்தில் போர்ப்பயிற்சி குழு ஒன்று இருப்பதை ஒற்றர்கள் மூலம் தெரிந்துகொண்டேன். அதன்படி மேலும் சில ஒற்றர்களை அனுப்பி போராளிக் குழுக்கள் பற்றிய உண்மை நிலவரங்களை தெரிந்து வர அனுப்பி இருந்தேன்.

நம்பிக்கைக்குரிய அந்த ஒற்றர்கள் கூறிய விபரங்கள் ஆழ் மனதையும் கலங்கச் செய்யும் விதமாகவே வந்து சேர்ந்து இருக்கிறது நம்மிடம்

ஆம்.

பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்று பெயரெடுத்த ஆதித்த கரிகாலரின் உயிரைப் பலி வாங்கிய அதே பாண்டிய தேசத்து ஆபத்துதவிகள் மற்றும் சேர தேசத்து விரோதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து காந்தளூர் எனுமிடத்தில் போர் பயிற்சி மையத்தை நடத்தி வருவதாக உறுதி மிக்க தகவல்களை அறிந்த பின்னர் தான் அந்த விஷயத்தை மன்னரிடம் முறைப்படி அறிவித்துள்ளேன்.

மேற்படி நடக்க வேண்டிய விஷயங்களை ஆலோசித்து சரியான தருணத்தை எதிர்பார்த்து நமது படையை உடனடியாக காந்தளூரை நோக்கி பயணப்பட வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

நூற்றுக்கணக்கான போர்க்களத்தைப் பார்த்த மாமன்னர். அனைத்து போர்க்களங்களிலும் எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்து அருஞ்சாதனை செய்த நமக்கு. எதிர் வரப்போகும் இந்தப் போர் என்பது நாட்டையே ஆக்கிரமிக்க நடத்தப்போவது அல்ல.

தேசத்தின் ஜீவாதாரத்தை அழித்தொழித்த விரோதிகளை அடியோடு கருவறுக்க. பெரும் சாம்ராஜ்யத்தின் புகழை மீண்டும் நிலைநாட்டவும். இனியும் சோழ தேசத்து மக்கள் மீது யாரேனும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் அவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை என்பதை தாங்கள் நடத்தப்போகும் இந்த போரின் இறுதி முடிவில் அவர்களுக்கு கிட்டும் தண்டனையே சரியான பாடமாக இருக்க வேண்டும்.

அவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த வேளையில் அரசவைத் தலைவர் பிரம்மராயர் இப்போது தனது உரையைத் தொடங்கினார்.

சுந்தரரின் புதல்வா வாழ்க.

சோழத்தின் சுந்தரரே வாழ்க.

அவையில் இன்றைய தினம் ஏற்பட்டுள்ள சில சலசலப்புகளையும் காரசாரமான விவாதங்களையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

வான் முட்டும் புகழுக்கு சொந்தக்காரரான தங்களின் வீரத்தை அகிலம் அறியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கங்கைபாடி முதல் கடாரம், ஈழம்வரை தங்கள் புகழுக்கு நிகர் இல்லை என்பதை யாமறிவோம்.

சோழ தேசத்தின் முன்னேற்றப் பாதையில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அது மாமன்னரான உங்கள் மீது ஏற்றப்படும் இன்னலுக்கு சமமான ஒன்றாகும்.

அப்படி விழியைக்காக்கும் இமைகள் போல நாட்டைக் காக்கும் சரித்திர சான்றோரான உங்களால் இந் நாட்டில் ஏற்பட்ட வேண்டிய சீர்திருத்தங்கள் ஏராளமாக இன்னும் இருக்கின்றன.

இந்த வேலையில் மறுபடியும் ஒரு போர் ஏற்படுகின்ற சூழ்நிலை உருவாகும் பட்சத்தில். உள்நாட்டில் தேவையில்லாத கலவரங்கள் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றது என்பதை மன்னர் மன்னருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று கூறி அமர்ந்தார் பிரம்மராயர்.

பிரம்மராயரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பழுவேட்டரையரின் இளவரசர் நக்கன்.

மகா புருஷர் பிரம்மராயருக்கு. இந்த அடியேனின் வணக்கங்கள்.

உள்நாட்டில் மக்களின் சண்டை சச்சரவுகள் என்பது ஆண்டாண்டு காலமானாலும் தீர்க்க முடியாத பிரச்சினைகள். சிறு கணத்தில் தோன்றி ஒரு கணத்தில் முடிந்து விடக்கூடிய ஒன்று.

ஆனால் இங்கே விவாதிக்கப்படும் கருப்பொருள் என்பது. இந்த தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், எதிர்காலத்தில் சோழ தேசத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களின் உயிரையும், உடமையும் மற்றும் மக்களுக்கு ஆபத்து ஏதும் வராத வண்ணம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய தீர்க்கமான முடிவோடு விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆதித்த கரிகாலரின் மரணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் இதுவரை தீர்ந்தபாடில்லை.

இந்த விவகாரத்தில் சோழ தேசத்தில் உள்ள சில குறுநில மன்னர்களின் ஆதரவு இருப்பதாக ஒருவித சந்தேகங்கள் பரவலாக மக்களிடையே பற்றி பேசி வருவதும் நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

அதுமட்டுமில்லாது இந்த கொலை சம்பவத்திற்கு நேரடியாக காரணமாக இருந்த ஒரு கூட்டம் இதற்கு முன் இருந்த மன்னரால் தண்டனை வழங்கப்படாமல் வெறும் நாடு கடத்தி அனுப்பப்பட்டதோடே முடிந்துவிட்டது என்பது சோழ தேசத்தில் இதுவரை என்றும் நடைபெறாத ஒரு மாற்று வழக்கை முறையாக இருந்துள்ளதை அனைவரும் விமர்சித்துள்ள அந்த வேலையில்.
அதற்கான சரியான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதையும் தலைவர் பிரம்மராயர் அவர்கள் நன்கு அறிவார்கள்.

அப்படி இந்த விஷயத்தை இலகுவாக விட்டுவிட்டால். எதிர்வரும் காலங்களில் வெளியிலிருந்து வரும் கயவர்கள். நயவஞ்சகர்கள். ஆபத்துதவிகள் அனைவரும் இங்கு உள்ள நம்பிக்கை துரோகிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டு. சோழ தேசத்தை சிக்கி சின்னாபின்னமாக ஆக்கும் அளவிற்கு தங்களது எதிர்வினையாற்றுவார்கள் என்ற காரணத்தினால்தான்.

ஆதித்த கரிகாலரின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்துகிறோம். இதில் நாங்கள் முன்னெடுக்க போகும் நடவடிக்கைகளுக்கு தகுந்த ஆலோசனைகளை தாங்கள் வழங்கும்படியும் முன்மொழிகிறேன் என்று தனது வாதத்தை நிறைவு செய்து இருக்கையில் அமர்ந்தார் .

விவாதம் ஒரு பெரும் காரசாரமாக போய்க் கொண்டிருந்த வேளையில்.

சோழத்தின் தலை மகனுக்கு அன்பார்ந்த வணக்கங்கள்.

அகிலம் போற்றும் ஆபத்பாந்தவன். சோழத்தின் சுடர்விளக்கு. பொன்னி நாட்டின் புகழை தலைவன். மாமன்னர் அருள்மொழிவர்மரின் இந்த ஆட்சியில் குறுநில மன்னராகவும். காலாட் படையினருக்கு தலைமை ஏற்று வழி நடத்தும் இந்த பாளைய தேசத்து சிற்றரசனின் கனிவான வணக்கங்கள் என உடையார் பாளைய அரசர் நல்லப்ப உடையார் தனது உரையை தொடங்கினார்…

வடவெள்ளாறு தென் வெள்ளாறும் தென்றல் காற்றில் கலப்பது போல தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடும் பொங்கு காவிரி போல. மாமன்னரின் புகழ் அகிலமெங்கும் பரவி. செல்வ செழிப்பான இந்த நாட்டில் புலிக்கொடி தேசம் முழுவதும் பறந்து சோழத்தின் வீரத்தையும் விவேகத்தையும் உலகறியச் செய்யும் மாமன்னரின் வீரத்துக்கு இணை. இந்த அகிலத்தில் எவருக்கும் இல்லை என கர்வத்தோடே கூறலாம். என விவாதம் நீண்டுகொண்டே செல்ல. பகல் பொழுது மறைய தொடங்கியது.