ஆங்கிலத்தில்: – ரோஹன் பாரிக்

தமிழில் : எஸ்.செந்தில் குமார்

“அது ஒரு பூகம்பமாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஒரே ஒரு குலுக்கு, அவ்வளவுதான்… அதன் பிறகு பிணங்களை எண்ணிக்கொண்டிருப்பதுதான் வேலை… ஆனால் அழுகி நாறிப் போன இந்த கிருமி இருக்கிறதே… இல்லாதவர்களையும் நெஞ்சில் தாங்கிக்கொண்டு ஏங்கி, பயந்து அலைய வைக்கிறது…

எலிகள் சாகத் துவங்கிய போதுதான் எல்லாம் துவங்கியது. வீட்டிலும் வெளியிலும். வெளி உலகம் அறிந்திராத ஓரான் நகரத்தில் எலிகள் துடிதுடித்து, மூச்சு விட சிரமப்பட்டு இறக்கத் தொடங்கின. இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று எல்லோரும் தூக்கிப் போட்டுவிட்டு போகத் துவங்கினார்கள். ஆனால் எலிகள் சாவது நிற்கவே இல்லை. ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கில் செத்துக் குவிந்தன. நகரம் முழுக்க எலி சவங்கள். எல்லோரும் அரசாங்கத்திடம் புகார் கூறினார்கள். திடீரென எலி சாவுகள் குறையத் தொடங்கின. எல்லோரும் அதை மறந்தே போனார்கள். வழக்கமான வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.

செத்த கடைசி எலியை சுத்தம் செய்து முடித்த நாளிலிருந்து துவங்கியது மனிதர்களின் மரணங்கள். ஒரு நூற்றாண்டு உருவாக்கி வைத்தது ஒரு வாரம் பிடுங்கிக்கொள்ளும் என்பது நிஜமானது.

ஆல்பெர் காம்யூ எழுதிய தி பிளேக் எனும் நாவல்  அல்ஜீயர்ஸ் நகரில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிளேக் பற்றி அவர்கள் நினைத்துப் பார்த்ததே இல்லை. ஆனாலும் அவர்களை உலுக்கி எடுத்தது. கொலை செய்வதை தனி உரிமையாகக் கொண்ட ஒரு நோயைச் சுற்றி நடக்கும் மனிதர்களின் வாழ்க்கைதான் அந்தக் கதை. ஒரு நெருக்கடியான கட்டத்தில் மனிதன் எவ்வாறு நடந்துகொள்வான் என்பதை பிளேக் குறித்த பலவிதமான எதிர்வினைகளை வைத்து காட்டியிருப்பார் காம்யூ.

இன்று உலகமே கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும்போது காம்யூவின் எழுத்து ஒரு நோயை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் நமக்கு விலை மதிப்பில்லாத பாடங்களைக் கற்பிக்கிறது. கொல்வதை தனி உரிமையாகக் கொண்ட கிருமியைப் பற்றி பேசுவது அதைச் சிறப்பாகக் கையாள நமக்கு உதவும்.

எல்லாம் சரியாகிவிட்டது என்ற மாயை

கொள்ளை நோய்கள் எல்லாம் மிக சகஜமானவை. ஆனால் அவை நம்மை எட்டிப் பார்க்கும் போதுதான் நம்ப முடியாமல் தடுமாறுகிறோம். இந்த விவரணையுடன் துவங்குகிறது அந்தக் கதை.

நோய்கள் விஷயத்தில் “எனக்கெல்லாம் வராது” என்பது பொதுவான எதிர்வினை. வாழ்க்கையில் எப்போதாவது உயிரைக் கொல்லும் சுகமின்மை வரும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது நம்மைத் தாக்கும்போது, நாம் அதை ஏற்கத் தயாராக இருப்பதில்லை. இந்த மனநிலைக்கு ஓரான் நகரும் விதிவிலக்கல்ல. ஒரே விதமான அறிகுறிகளுடன், ஒரே விதமான காரணங்களால் மக்கள் செத்து மடிந்துகொண்டிருந்தார்கள். “பிளேக்” என்ற சொல் எல்லோரது நாக்கிலும் நடனமாடியது. ஆனாலும் வார்த்தை வெளியே வரவில்லை. அதைச் சொன்னாலே பிளேக் வந்துவிடும் என்று பயந்தார்களோ என்னவோ.

மறுப்பின் அடிநாதமாக இருப்பது பயம். ஏனென்றால் வியாதி என்ற சொல் இயல்புநிலை என்ற சொல்லுக்கு எதிர்ப் பதம் போன்றது. இயல்புநிலை என்பது சுதந்திரம் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒரு பெரிய கொள்ளை நோய் பரவும் போதும் இந்த இயல்புநிலைதான் பாதிக்கப்படுகிறது.

ஏனென்றால் நோய் என்பது ஒரு கருத்தாக்கம். நோய்மை ஏற்படுத்தும் “அது” எந்த பாகுபாடும் இல்லாமல், எந்த நேரம் காலமும் இல்லாமல் எல்லோரையும் பாதிக்கிறது. நோய் என்ற கருத்தாக்கத்தை நாம் ஏற்க வேண்டுமென்றால் நமது வாழ்க்கையில் நம்மை இதுவரை ஆண்டு வந்த திட்டங்கள், முன்முடிவுகளை நாம் கைவிட வேண்டியிருக்கும். கடந்த காலமும் எதிர்காலமும் இனி நமக்கு இல்லை என்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நிகழ்காலம் மட்டுமே நமக்கு உரியது என உணர வைப்பதுதான் நமது கருத்தாக்கங்களை அழிக்கும் நோய்.

இங்குதான் நாம் நோயின் நன்மையைக் காண வேண்டியுள்ளது: அது நம்மை “நிகழ்காலத்தில் வாழக் கடவாயாக” என ஆசீர்வதிக்கிறது. கதகதப்பான கடந்த காலமும் எதிர்காலத்தின் பளபளப்பும் இல்லாமல் நாம் சுவாரசியமற்ற நிகழ்காலத்தின் தாளத்திற்குள் சிக்கிக்கொள்கிறோம். ஒவ்வொரு நாளாகக் கடந்து போகிறோம்… ஊக்கமிழந்து போகிறோம், ஆனாலும் எல்லாவற்றையும் விட்டுவிடவும் முடியாமலிருக்கிறோம். இதுபோன்ற சூழல்களில் நாம் மறுப்பிற்குள் ஒளிந்துகொள்ள விரும்புகிறோம். ஏனெனில், அடிப்படையற்றது என்றாலும்கூட அது நமக்கு அது ஒரு நம்பிக்கை ஒளியைக் காட்டுகிறது.

இது நமக்குச் சொல்லும் பாடம் என்ன? நோயைச் சரியாக எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதைச் சுற்றி இருக்கும் திரைகளை அகற்ற வேண்டும். பிரச்சனையின் தீவிரத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். நோயின் தீவிரத்தை உணர்ந்தும் உணராமல் இருந்தால் சாவு எண்ணிக்கை அதிகமாகிவிடும். அப்படி இல்லாதபோது வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற க்வாரன்டைன் அறிவுறுத்தல்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாது. அரசாங்கம் தனது கடமைகளைச் சரியாகச் செய்யாது. வெறுமனே எதிர்வினையாற்றுவதால் மாற்றம் வராது. வரும் முன்பே தடுப்பதுதான் கொள்ளை நோய்களைத் தடுப்பதற்கான வழி. இது அலட்சியத்திற்கோ, மறுப்பிற்கோ இடமில்லை.

ஒரு வியாதிக்கும் விபத்திற்கும் வித்தியாசம் உள்ளது. விபத்து எதிர்பாராமல் நடப்பது. நோய்களை சரியாகக் கையாண்டால் தானாக அடங்கிவிடும். எப்போது அலட்சியமாக இருக்கிறமோ அப்போது வியாதி துல்லியமாகத் தாக்கும். அந்த வாய்ப்பைக் கொடுக்காமலிருப்பதே புத்திசாலித்தனம். “நல்ல வேளை, பாதி நகருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதுபோல் இத்தகைய பிரச்சனைகளை கையாளக்கூடாது. அப்படி செய்யும்போது இல்லாத பாதியையும் சேர்த்தே அந்த வியாதி அழிக்கும்.” இது பிளேக் பற்றி உள்ளூர் மருத்துவரான டாக்டர் பெர்னார்ட் ரியூக்ஸ் கூறியது.

ஒரு மாறுபட்ட சித்திரம்

பெருங்கூட்டம் கூடியிருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் பானேலோக்ஸ் பேசுகிறார்: “சகோதரர்களே, ஒரு பேரிடர் நம்மைத் தாக்கியிருக்கிறது.” இது உரையின் துவக்கம்தான். அடுத்து சொல்கிறார்: “சகோதரர்களே, இது உங்களுக்குத் தேவைதான்.” நகரத்தில் நிரந்தரமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு பீதியடைந்து போன ஓரான் மக்கள் கடவுளிடம் கையேந்தி பெருங்கூட்டமாக திரண்டு வந்து நின்றார்கள்.

நோய்கள் கதை சொல்வதற்கான அற்புதமான கருப் பொருளாகிறது. ஒரு கருத்தாக்கம் உயிர்களைக் கொல்லும் போது, அந்த மரணங்களுக்கு ஒரு மதிப்பு உண்டாகிறது. மூடத்தனத்திற்குள் உள்ள புத்திசாலித்தனத்தைக் காணும் முயற்சி அது.

தங்களைத் தாக்கிய பேரிடரிடம் அர்த்தம் என தேட முனையும் ஏராளமானோரின் கதைகள் தி பிளேக் கதையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏன் தங்கள் நகரை பிளேக் தாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கேள்விகள் அவை.

ஆனால் இத்தகைய கேள்விகள் சார்ந்த சித்தரிப்பை காம்யூ விரும்பவில்லை. பிளேக் நோய்க்கு எதிரான போரில் முன்னணியில் நின்ற டாக்டர் ரியெக்ஸ், ஜோசஃப் கிராண்ட் போன்றவர்களை கடவுளர்களாக உயர்த்தும் சிலாகிப்பு இலக்கியத்தைப் படைக்க அவர் விரும்பவில்லை. அவர்கள் தங்கள் கடமையைச் செய்தார்கள், அவ்வளவுதான். அதைவிட முக்கியமாக இத்தகைய காலக்கட்டத்தில் ஒருவர் தனது கடமையைச் செய்ய மறுத்திருந்தால் அதுதான் ஈவிரக்கமற்ற காரியமாக இருந்திருக்கும்.

மனிதனின் நெஞ்சுரம் பற்றிய இறுக்கமான பதிவுகளை அல்லாமல் இந்த நாவல்  நம்பிக்கை வைப்பதன் அவசியத்தைக் காட்டுகிறது. மனித சமுதாயம் இப்படிப்பட்ட சவால்களை சந்திக்க நேரும் போது தளர்ச்சியடையாத முயற்சி மட்டுமே உதவும் என்பதை அவர் காட்ட முயல்கிறார். டாக்டர் ரியெக்ஸின் வார்த்தைகள் முத்தாய்ப்பாக உள்ளன: “இந்த பூமியில் கொள்ளை நோய்களும் உள்ளன… அதற்கான பலியாட்களும் இருக்கிறார்கள். இதில் கொள்ளை நோயின் பக்கம் நிற்காமலிப்பதுதான் நாம் செய்ய வேண்டியது. வரலாற்றை படைக்க விரும்புகிறவர்கள் படைத்துக்கொண்டு போகட்டும்.”

படிப்பினைகள் சொல்வதாக அல்லாமல், நெஞ்சுருக்கும் சோகங்களைத் தீட்டாமல் கொள்ளை நோய்கள் குறித்து, உள்ளது உள்ளபடி நேர்கொண்ட பார்வையைக் கோருகிறார் காம்யூ. ஒரு கொள்ளை நோய் எப்போது தாக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதற்கு எதிர்வினையாற்றுவது நம் கையில்தான் உள்ளது. இறந்தவர்களின் துணிச்சலை பாராட்டுவது, அவர்களை ஹீரோவாக்குவது, தங்கள் கடமையைச் செய்பவர்கள் குறித்து வாயால் மட்டும் புகழ்ந்து தள்ளுபடி எந்த பலனையும் கொடுக்காது. நம் ஒவ்வொருவரையும் பதில் சொல்லும் பொறுப்புள்ளவர்களாக்குவதுதான் நாம் செய்ய வேண்டும்… குறிப்பாக, அரசு அதிகாரத்தில் இருப்பவர்களை.

 

நன்றி:

https://scroll.in/article/957418/what-albert-camuss-the-plague-can-teach-us-about-the-coronavirus-pandemic-and-our-response