சுற்றுச்சூழலுக்கான இருமாத இதழாக வெளிவந்திருக்கிறது, பூவுலகின் நண்பர்கள் இளவேனிற்கால இதழ்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற பூவுலகின் நண்பர்கள் குழுவின் அதே கருவைக் கொண்டு வெளிவருகிறது இந்த இதழ். கிட்டத்தட்ட 36 பக்கங்களுடன் செய்தித்தாளைப் போன்ற நீளமான தாளில், கருப்பு வெள்ளை புகைப்படங்களுடனான இதழாக வருகின்றது. தொடக்கம் முதல் முடிவுவரை சூழல் குறித்தான செய்திகள், புகைப்படங்கள், பேட்டிகள், கட்டுரைகள் என்று இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் நாம் அலட்சியப்படுத்தும் உயிர் மூச்சை எடுத்துக்காட்டுவதால் என்னவோ, இந்த இதழின் ஒவ்வொரு தாளிலும் வசீகரம் புதைந்திருப்பதாய்த் தோன்றுகிறது.

உதாரணமாய், கிழக்குத் தொடர்ச்சி மலையின் புகைப்படங்களுடனான செய்தி! அந்த வசீகரத்தின் வழியே அந்தப் பக்கத்தைக் கடக்காமல் படிக்க ஆரம்பிக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாய் சேலம் பசுமை வழிச்சாலை என்பது எவ்வளவு அபாயம் என்ற அலாரம் மூளைக்குள் ஒலிக்கத் தொடங்குவதை உணர முடியும். அதுதான் இந்த இதழின் வெற்றி. எல்லாப் பக்கங்களிலும் சூழலுக்கான அடிப்படை அக்கறையை வாசிப்பவர்களுக்குக் கடத்துவது என்பதை இயல்பாக செய்து முடிக்கிறது இந்த இதழ்.

காடுகள், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் என்பது மட்டுமன்றி, சமகால முக்கியப் பிரச்சனைகளையும் நம் மூளைக்குள் அவசியமாய்த் திணிக்கிறது. உதாரணமாக, சென்னையில் வரப்போகின்ற தண்ணீர் பஞ்சத்தைக் குறித்து இந்த இதழில் வந்திருக்கிற கட்டுரை. தரவுகளோடு, கடந்த காலத்தின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்த விவரங்களோடு முழுமையான கட்டுரையாக வெளிவந்திருக்கிறது.

ஒளிப்பட கட்டுரைகள் என்பது தனக்கான தனி வலிமையை எப்போதுமே கொண்டிருக்கும், படங்களோடு வார்த்தைகள் கடத்தும் உணர்வுகள் சக்தி வாய்ந்ததாய் இருக்கும். இந்த இதழில் வெளிவரும் ஒளிப்படக் கட்டுரைகள் அதற்கேயான பெரும் தாக்கத்தை விதைக்கிறது. கஜா புயலின் கண் என்ற பெயரில் இந்த இதழில் முழு பக்கமும் கருப்பு வெள்ளை படங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. அரசின் அலட்சியத்தின் மீதான வெளிச்சமாய் இந்த படங்கள் இருக்கின்றன.

இதையும்தாண்டி மக்களின் அடிப்படை உரிமைகளின் மேல் வெளிச்சம் பாய்ச்சி, வசிக்கும் சூழல் காரணமாகவே உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் கதைகளையும் பேசுகிறது. சூழல், வாழ்விடம், தொழில் அடிப்படையில் அதிகாரத்தின் வீச்சுகள் எப்படி மாறுகின்றன, அடக்குமுறைகள் எவ்வளவு தூரம் சாதாரண மக்களின் வாழ்வைக் கவ்விப் பிடிக்கின்றன என்பதையும் கூர்மையாய் சொல்லிப் போகிறது இந்த இதழ்.

சூழல் மேலும், மனிதர்கள் தாண்டிய பிற இன உயிர்களின் மேலும் பிரியம் தாங்கி அவசர மணி ஒலிக்கும் விஷயத்திற்காகவே இந்த இதழைக் கொண்டாடலாம். இரு மாதங்களுக்கு ஒரு முறை, பூவுலகின் நண்பர்கள் இயக்கம் இந்த இதழை வெளியிடுகிறது. விலை நாற்பது ரூபாய்.

இதழ் கிடைக்கும் இடம்:

பூவுலகின் நண்பர்கள்
106/2 முதல் தளம்
கனக துர்கா வணிக வளாகம்
கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி
சென்னை – 600026
தொ: 044 24839293, 950018661,