ஒரு பொருள் கவிதைகள்-8
தொகுப்பு: செல்வராஜ் ஜெகதீசன்
சிறந்த வாசகன்
தனது கருத்துக்களையோ, அல்லது தனது வாழ்க்கைப் பார்வையையோ பெரிதும் ஏற்கும் படைப்பை மட்டுமே வாசிக்க வேண்டும் என்று ஒரு வாசகன் கருதுவான் என்றால் அவனை ஒரு சிறந்த வாசகன் என்று மதிப்பிட முடியாது.
சுந்தர ராமசாமி
o
மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப்
படித்துக் கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது.
தேவதச்சன்
o
மொழி
யூமா. வாசுகி
பார்த்தாயா?
இதைத்தான் இவன்
இவ்வளவு நாட்களாகப்
படித்துக்கொண்டிருக்கிறான்
என்று
மேசைப்புத்தகத்தின் பக்கங்களை
ஒவ்வொன்றாக விரித்துக் காட்டுகிறது…
மின்விசிறி ஜன்னலருகில்.
எழுத்தறிவற்ற அந்தியொளியோ
மஞ்சள் கைகளால் தடவித்தடவி
இல்லாத சித்திரங்களைத் தேடுகிறது.
o
உலகின் மிக மோசமான புத்தகம்
சுகிர்தராணி
நிசப்தம் பின்னப்பட்ட நள்ளிரவில்
காலக்கிரமமாய்
நிறுத்தப்பட்டிருக்கும் புத்தகங்கள்
அலமாரியிலிருந்து கீழிறங்கி
உறக்கத்திலிருக்கும் என்னைப்
புரட்டிப் புரட்டி வாசிக்கின்றன
முடிந்ததும்
மூலைக்கு ஒன்றாய்
என்னைச் சிதறடித்தபடி
குறிப்பேட்டில் எழுதி விட்டுச் செல்கின்றன
இவள்
உலகின் மிக மோசமான புத்தகம்
O
வாசிப்பு
சுகுமாரன்
காத்திருக்க வேறிடமின்றி
நூலகத்தை நீங்கள் தேர்ந்தது
இயல்பானது –
காலத்தைக் கடந்து
வெளியை மீறி
மொழியைத் துறந்து கேட்கும்
குரலுக்காகவோ
அல்லது
காகிதமணத்தின் போதைக்காகவோ
அல்லது
அலுத்துச் சுழலும் மின்விசிறியின்
சங்கீத மீட்டலுக்காகவோ
அல்லது
நூலகத்தில் கவிந்திருக்கும்
நிர்ப்பந்த அமைதிக்காகவோ
நீங்கள் நூலகத்தைத் தேர்ந்திருக்கலாம்.
காலியிருக்கைகள் பல கிடக்க
முந்திய விநாடியில்
ஆளெழுந்துபோன
நாற்காலையைத் தேர்ந்ததும்
இயல்பானது –
காற்றோட்டமான இடமென்பதாலோ
அல்லது
முன்னவர் மிச்சமாக்கிய
மனிதச் சூட்டை உணர்வதற்காகவோ
அல்லது
பின்னல் அவிழ்ந்த ஆசனத்தை
யோசனையுடன் முடைவதற்காகவோ
அல்லது
கற்பனைக்கு உகந்த தோற்றத்தில் உட்கார்ந்து
மனதுக்குள் ரசிப்பதற்காகவோ
நீங்கள் நாற்காலியைத் தேர்ந்திருக்கலாம்.
நூலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் மேஜைமேல்
முன்பு இருந்தவர்
பாதி வாசித்துக் குப்புறக் கிடத்திய
புத்தகத்தை எடுத்ததும்
அவர் விட்டுப்போன பக்கத்தில்
வாசிப்பைத் தொடங்கியதும்
இயல்பானது.
எனது சந்தேகம்
அவர் எங்கே நிறுத்தினார் என்பதை
நீங்கள் அறிவீர்களா?
இரண்டு பக்கங்களில்
இரண்டு பக்கங்களிலுமுள்ள பத்திகளில்
இரண்டு பக்கப் பத்திகளின் வாக்கியங்களில்
எங்கே அவரது நிறுத்தம்?
அங்கிருந்து நீங்கள் தொடங்குவீர்களா?
அல்லது
நீங்களும் மேஜைமேல்
குப்புறக்கிடத்திப் போனால்
அடுத்தவர் எங்கிருந்து தொடங்குவார்?
ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது.
O
அரைக்கணத்தின் புத்தகம்
சமயவேல்
ஏய், நில், நில்லு
சொல்லி முடிப்பதற்குள்
மாடிப்படிகளில் என் குட்டி மகள்
உருண்டுகொண்டிருக்கிறாள்.
பார்த்துக்கொண்டு
அந்த அரைக்கணத்தின் துணுக்கில்
அவள் உருள்வதை நான்
பார்த்துக்கொண்டு மட்டும்.
அவளது சொந்த கணம்
அவளை எறிந்துவிட
அவள் உருண்டுகொண்டிருக்கிறாள்.
என் சகலமும் உறிஞ்சப்பட்டு
ஒன்றுமற்ற உடலமாய் நான்
அந்த அரைக்கணத்தின் முன்
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு வீறலுடன் அக்கணம் உடைய
நெற்றியில் அடியுடன்
அழும் மகளை அள்ளுகிறேன்
– கணங்களின் மீட்சி
என் பிரபஞ்சத்தை சேராத
அந்த அரைக்கணத்தை ஒரு
நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தேன்
ஒரு சொடுக்கில், இழுப்பில், புரட்டலில்
முழுச் சித்திரமே மாறிவிடும்
விநோதப் புத்தகம் அது.
o