ஒரு பொருள் கவிதைகள்–2:
எங்குதான் கவிதையில்லை.
என் கவிதையை நான்தான் எழுதவேண்டுமென்ற நிர்பந்தம் இல்லை.
படித்த புத்தகங்கள், என் போன்ற பிறர், கிடைத்த அனுபவங்கள், கண்ட கனவுகள், நினைவுகளின் பேயாட்டம் எல்லாவற்றிலும்
என் கவிதைகளை அல்லது நான் எழுதத் தவறிய கவிதைகளைக் காண்கிறேன்.
# நகுலன்.
o
தீராத விளையாட்டு
# எஸ். வைதீஸ்வரன்
அடிக்கடி
வெயிலுக்குள் நகர்ந்துவிடும்
எங்கள் வீட்டை
என்ன செய்வதென்று
தெரியவில்லை.
O
வீடு
# ராஜ சுந்தரராஜன்
வீடொன்று வேண்டும்
வெயிலையோ மழையையோ
பகைப்பதற்கு அல்ல.
காக்கையும் கூடு கட்டும்
அடைகாக்க.
O
சந்தை
# நகுலன்
செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்.”
o
வலியின் ஒலி
# மகுடேஸ்வரன்
வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக அழும்
பெண்களின் விசும்பலை.
O
# தேவதச்சன்
என் வீடு மிகச் சிறிய வீடு
ஆனாலும்,
வீடு திரும்ப விரும்புகிறேன்.
***
ஒவ்வொரு வீடும் நிரந்தரச் சூரியனை
ஜன்னல் வழியே அழைக்கிறது
அதை கைக்குழந்தையைப் போல்
படுக்கவைத்துக் கொள்கிறது
தினமும் படியில் ஏறியதும்
பயங்கள் மறையும்
என் சிறிய வீட்டின் பின்கதவைத் திறந்து
பார்க்கிறேன்
வீட்டிற்கு அப்பால்
வேறு எதுவும் இல்லை.
O
முந்தைய தொடர்கள்:
1.“பறவை” – கவிதைகள் – https://bit.ly/33tptIo