ஸ்பைக் லீ மூன்றாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டு இம்முறை ஆஸ்கரையும் வென்றிருக்கிறார்.அவரின் ““BlacKkKlansman”க்கு, மூலத்திலிருந்து தழுவியமைக்கப்பட்ட  திரைக்கதைக்காக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

லீ இவ்விருதை பெறுவதற்காக துள்ளலுடன் மேடைக்கு வந்தது வெறும் வெற்றிக்களிப்பு என்ற அனுமானத்தை உடைத்தெறிந்தது அவரின் பேச்சு. உணர்வெழுந்த நிலையில் பேசினாலும் அவரின் உரையின் சாரம் அவரின் அரசியிலிருந்து எள்ளளவும் மாறாமாலிருந்து.ஒரு படைப்பாளியின் அரசியல் சார்பே அவனது படைப்பின் கருவை நிர்ணயம் செய்வதோடில்லாமல் அதற்கான பரந்துபட்ட தேவையையும் நிர்மாணித்துக்கொள்கிறது.

இனி ஸ்பைக் லீயின் ஆஸ்கர் உரை,

………………..

 

உங்களின் மணிக்கடிகாரத்தை சற்றுநேரத்திற்கு நிறுத்திவைத்துக்கொள்ளுங்கள்.

இன்றைய நாளுக்கான பதம் “முரண்”.

நாள் 24.

மாதம் இவ்வாண்டிற்கான குறைந்தபட்ச நாட்களைக் கொண்ட பிப்ரவரி என்பதோடில்லாமல் “கறுப்பின வரலாற்று மாதமும்” ஆகும்.

ஆண்டு 2019.

ஆண்டு 1619.

வரலாறு.

அவளின் கதை.

1619.

2019.

400 ஆண்டுகள்.

நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு எமது மூதாதையர் எங்களின் அன்னை ஆப்பிரிக்க தேசத்திலிருந்து கடத்தப்பட்டு விர்ஜீனிய மாகாணத்திலிருக்கும் ஜேம்ஸ்டவுனுக்கு அடிமைகளாக கொணரப்பட்டனர். அவர்கள் சூரியன் உதயமாவதற்கு முன்பிலிருந்து காரிருள் வரக்க்கும் கடுமையான உடலுழைப்பிற்கு ஆளாக்கப்பட்டனர். நூறு வயது யுவதியான எனது தாய்வழி பாட்டி [சற்று குறைவான ஒலியில் ] அவளின் தாய் அடிமையாக இருந்த நிலையிலும் கூட ஸ்பெல்மென் கல்லூரியில் படித்து பட்டதாரியாகவும் ஆனாள். அவளின் ஐம்பது ஆண்டுகால அரசாங்க உதவித்தொகை சேமிப்பிலிருந்து, ” ஸ்பைக்கீ ப்ப்பூ” என்று செல்லமாக அழைக்கும் அவளின் முதல் பேரனாகிய என்னை மூர்ஹவுஸ் கல்லூரி மற்றும் NYUவில் திரைப்பட பட்டயமும் முடிக்கச் செய்தார்.

இவ்விரவில் இவ்வுலகின் முன்னால், இனப்படுகொலையால் கொன்றழிக்கப்பட்ட பூர்வகுடிகளுடன் இணைந்து இன்று இந்த நாடு இவ்வளவு புகழுடன் திகழ அடித்தளமைத்து கொடுத்து எனது மூதாதையர்களை புகழ்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.அன்பையும் ஞானத்தையும் மீட்டெடுத்த நாம் மனிதநேயத்தையும் மீட்டெடுப்போம்.அதுவொரு ஆகச்சிறந்த தருணமாகத் திகழும். எதிர்வரும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் நாம் அனைவரும் வரலாற்றின் சரியான பக்கத்தில் ஒன்றுதிரள்வோம் அது வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையேயான தார்மீக தேர்வாக இருக்கட்டும். வாருங்கள், சரியான முடிவிற்கான நமது தேர்வினை பறைசாற்ற ஏனென்றால் எனது இந்நிலைப்பாட்டினை அங்கு கொண்டுசெல்வதே எனது தற்போதைய ஆகமுக்கிய பணி ஆகும்.