காட்சி மாற்றம்

மரத்தின் கிளைகளில்

மஞ்சள் நிற பூக்கள் பூத்திருந்தன

நான் காட்சியை மாற்றி

மரத்தில் காகங்கள் பூத்திருந்தன

என எழுதத் துவங்கினேன்

பல ஆண்டுகளாய் அந்த மரத்தின்

அருகில் உள்ள தெருவில் செல்லும்

சிறுவன் மரத்தை வியர்ந்து பார்த்தான்

அவனுக்கு பூக்களுடன் ஆழமான

காதல் எப்போதுமே இருந்ததுண்டு

சிறுவன் ஓடிச் சென்று  இரண்டு

பூக்களைப் பறித்தான்

விளையாட்டு மைதானமாய் மாறியது

அவனது வீடு

பூக்கள் இரண்டும் சிறுவனது உலகம் என பெற்றோர் முணுமுணுத்தனர்

அவனது உள்ளங்கையில் இருந்த பூக்கள்

ஒரு நாள் “கா..கா”என கரைந்து பறக்கத் துவங்கி

அதே மரத்தின் கிளைகளில் வந்தமர்ந்தன

சிறுவன் அழுதுகொண்டே இருந்தான்

எனவே,

கடைசி வரிகளை எழுதும்போது

நான் காட்சியை மாற்றி எழுதியிருக்கலாம்

என வாசகன் கற்பனை செய்தான்.