நினைக்க எதுவுமில்லாத சுதந்திரம்   
நானொரு காலி பீர்பாட்டிலில்
மணி பிளாண்டாக இருக்கிறேன்
பூர்வீகங்கள் நினைவில் இல்லை
எனது வரலாறென கடந்த சில வருடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன
சிறுசிறு வேர்களுடன் மிதக்கிறேன்
வேர்விட்டு அதிகாரத்தையும் அடிமைத்தனத்தையும்
சார்ந்திருப்பதையும்
சமரசங்களையும் பாவிக்கிடந்து
பலவகை மரங்களில்
ஒட்டி ஒட்டி மேலேறி
உயிர்த்திருப்பதை விட
யாரோ தூக்கிவீசிய பாட்டிலில்
யாரோ நிரப்பிய நீரில்
யாரோ கத்தரித்து இட்ட
ஒரு பச்சையத் துண்டாக
வேர்விடும் அவசியங்களில்லாத இருப்பில்
சிறுசிறு வேர்களுடன்
அர்த்தமற்ற சுதந்திரத்தில் மிதக்கிறேன்
எப்போதும் இருந்த
வானம் நீலத்தையும்
சூரியன் ஔியையும் தந்ததுபோக
நினைக்க எதுவுமில்லாமல் மிதந்தேன்
தூக்கியெறிந்தாலும்
நினைக்க எதுவுமில்லாத
காலி பீர்பாட்டிலில்
மணி பிளாண்டாக இருக்கிறேன்