“இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது” (மத்தேயு 17: 21)

கஸான்றா சரியாக உறங்குவதில்லை என்று ஹோசே என்னிடம் சொன்னபோது பிரச்சனையின் தீவிரம் எனக்கு சரியாக புலப்படவில்லை. டைலினால் மாத்திரைகளை விழுங்கச் சொல் என்பதுடன் எனக்கான மற்ற வேலைகளில் முழ்கிவிட்டேன். இரண்டு நாள்களுக்குள் இரவு இரண்டு மணிக்கு மீண்டுமாக ஹோசே அழைத்தான். அவசரம் சீக்கிரம் வரவும் என்பதை தவிர்த்து அவன் வேறெதையும் சொல்லவில்லை. அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே கஸான்றாவின் குரல் ஓங்கியொலித்து அடங்கியது. உடலை துளைக்கும் குளிரில் அவனுடைய வீட்டிற்கு விரைந்து சென்றேன். தன்னுடைய சுருள் முடிகளை விரித்து தலையை தொங்கவிட்டவாறு கஸான்றா அமர்ந்திருந்தாள். ஹோசே ஒரு மூலையில் எனக்காக பதற்றத்துடன் காத்திருந்தான்.

“என்ன ஹோசே? கஸான்றா ஏன் இப்படி அமர்ந்திருக்கிறாள்?”

“ஃபாதர், கொஞ்ச நாளகவே இப்படித் தான் நடக்கிறது. பாதி தூக்கத்தில் பாம்புகள் தன்னை துரத்துவதாக சொல்லிக்கொண்டு எழுந்துகொள்கிறாள். பின் தூங்குவதற்கு விடியற்காலை ஆகிறது. வேலைக்கும் சரியாக செல்லமுடிவதில்லை.”

நாங்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருப்பதை கஸான்றா பார்த்துக்கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. ஹோசே பேச்சின் நடுவில் கொடுத்த ஒரு சிறு இடைவெளியில் அவளைப் பார்த்தேன். தீக்கங்குகளை போன்ற விழிகளால் எங்களிருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். கஸான்றாவை எனக்குத் தெரியும். இங்கிருப்பவள் கஸான்றா அல்ல எனபது அவள் பார்வையிலிருந்தே தெரிந்துவிட்டது. என்னை ஊடுருவ நோக்கிய அவள் பார்வையின் வெம்மையிலிருந்து தப்பிப்பதற்காக மீண்டும் ஹோசேவிடம் பேச தொடங்கினேன்.

“கவலைப்படாதே! தொடர்ந்து சொல். என்னால் உதவ முடிந்தால் கண்டிப்பாக உதவுகிறேன்.”

“நேற்றிலிருந்து நிலைமை கொஞ்சம் மோசமாகிவிட்டது. சப்தமெல்லாம் எழுப்பவில்லை ஆனால் தனியாக எழுந்து அமந்திருந்தாள். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. பின் அவளாக தூங்கிவிட்டாள். மாலையிலிருந்து யாரிடமும் பேசவில்லை. தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தவளை கொஞ்சம் அதட்டி சாப்பிடச் சொன்னேன். அதற்கு கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்தாள். மேலும் விகாரமாக கத்திக் கூச்சலிடத்துவங்கினாள். தூங்கிவிடுவாள் என்று எதிர்ப்பார்த்தேன் ஆனால் வாய்க்குள் எதையோ முனகியபடி இங்கேயே அமர்ந்திருக்கிறாள். உங்களிடம் பேசினாள் சரியாகும் என்று தோன்றியது. எதாவது செய்யுங்கள் ஃபாதர். என் கஸான்றா எனக்கு வேண்டும். அவளில்லாமல் நானில்லை…”

சிறுபிள்ளையைப் போல் அழ ஆரம்பித்த ஹோசேவை தோளைப் பிடித்து ஆறுதல் சொன்னேன்.

மெல்ல சென்று கஸான்றாவின் அருகிலமர்ந்து பேச ஆரம்பித்தேன். எதுவும் பேசாமல் என் கேள்விகளுக்கு வேகமாக மூச்சிரைத்துக் கொண்டிருந்தாள். நான் மந்திரித்தலுக்கு தயாராகி வரவில்லை. ஆனால் எனக்கு தேவையான பொருட்கள் என்னுடைய காரிலிருந்தன. நான் ஹோசேவை அழைத்து மந்திரித்த தீர்த்தத்தை எடுத்துவரச் சொன்னேன். நான் சொன்னவுடன் கஸான்றா எதிர்வினையாற்ற ஆரம்பித்தாள். இது ஏதோ தீய ஆவியின் வேலை என்று எனக்குப் புலப்படத் துவங்கியது. ஹோசே கதவை திறந்துகொண்டு வெளியே சென்றதும் கஸான்றா ஒரு பெரிய மலைப்பாம்பினால் நெரிக்கப்பட்டவளைப் போல கீழே விழுந்து புரண்டுகொண்டிருந்தாள். என்னுடைய மனதிற்குள்ளாக ஒரு பெரிய ஆன்மீகப் போருக்காக தயாரானேன். ஹோசே திரும்பி வரும் வரையில் என்னுடைய பயத்தை வெளியே மறைத்து உள்ளுக்குள்ளாக உருகிக் கொண்டிருந்தேன். என்னுடைய பயத்தை வெளியே காட்டிவிட்டால் தீயசக்திக்கு என் பலவீனங்கள் தெரிந்துவிடும். என் நடுக்கத்தை சிரமப்பட்டு மறைத்துக்கொண்டிருந்தேன்.

கதைவை திறந்துகொண்டு வந்த ஹோசே கஸான்றாவைப் பார்த்து வேகமாக ஓடி வந்தான். நான் அவனைத் தடுத்து தீர்த்தத்தை அவள் மேல் தெளித்து கொஞ்சம் சத்தமாக ஜெபங்களை சொல்ல ஆரம்பித்தேன்.

“வானக சேனையின் அதிபதியாம் புனித மைக்கேலே என்னுடைய மன்றாட்டைக் கேட்டு விரைவாக எனக்கு உதவிப் புரியும்…” தொடர்ந்து தீர்த்தத்தை அவள் மீது தெளித்துக்கொண்டிருந்தேன். கட்டவிழ்க்கப்பட்டவளைப் போல ஒரு கட்டத்தில் அவள் நிமிர்ந்து உட்கார்ந்து என்னிடம் தெளிவாக பேச ஆரம்பித்தாள். எனக்கு முகமன் கூறி தலையை ஒதுக்கிவிட்டுக்கொண்டாள். முகத்தை துடைத்துக்கொண்டு அமைதியாக எழுந்து இருக்கையில் அமர்ந்தாள்.

“ஹோசே எனக்கு தாகமாக இருக்கிறது.”

பெரியக் குடுவையில் தண்ணீர் கொண்டு வந்து கஸான்றாவிடம் நீட்டினான். வேகவேகமாக தண்ணீர் முழுவதையும் குடித்து தீர்த்த கஸான்றாவிடம் நான் மேற்கொண்டு பேசத் துவங்கினேன்.

“கஸான்றா, உனக்கு என்ன ஆயிற்று. என்னிடம் எதுவும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றால் நீ இப்போதே சொல். என்னால் இயன்ற உதவியை நான் செய்ய தயாராயிருக்கிறேன்.”

உதடுகளிலிருந்த தண்ணீரை தன் சட்டையின் கை பகுதியில் துடைத்து என்னிடம் பேச ஆரம்பித்தாள்.

“ஃபாதர் கொஞ்ச நாளுக்கு முன்னால் நான் ஒரு குடும்பப்பிரச்சனையின் காரணமாக ஆன்மீக பயிற்சியாளரிடம் சென்றிருந்தேன்…” திடீரென ஹோசேவைப் பார்த்து, “ஹோசே எனக்கு தாகமாக இருக்கிறது தண்ணீர் எடுத்துக்கொடு”

எங்களிருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்போதுதான் ஒரு கேலன் தண்ணீரை குடித்து முடித்தாள். மீண்டுமாக எப்படி தாகம் எடுக்கும்? ஹோசே என்னை மிரட்சியாகப் பார்த்தான். நான் தண்ணீர் எடுத்து வர தலையசைத்தேன். மீண்டுமாக பெரிய குடுவையில் தண்ணீர் நிரப்பி கொண்டு வந்து கொடுத்தான். முன்பு அருந்திய அதே தீவிரத்துடன் இம்முறையும் தண்ணீரை குடித்து முடித்தாள்.

“அங்கிருந்த பெண் எனக்கு சில ஆன்மீக பயிற்சிகளை சொல்லிக்கொடுத்தாள். பதிலுக்கு ஐநூறு டாலர்கள் வாங்கிக்கொண்டாள்.” தன் நெஞ்சை தடவி கொடுத்துக்கொண்டே என்னிடம், “வாய் முழுவதும் உப்பு கரிப்பது போல இருக்கிறது ஃபாதர். தாகமாக இருக்கிறது.”

“கஸான்றா, விளையாடுகிறாயா? இப்போதுதான் இரண்டு கேலன் தண்ணீர் குடித்தாய்…”

“அப்படியா? பிறகு ஏன் இப்படி தாகமடிக்கிறது? ஹோசே எனக்கு கொஞ்சம் தண்ணீர் எடுத்து வருகிறாயா?”

ஹோசே தண்ணீர் எடுக்க உள்ளே சென்றதும், “ஐநூறு டாலருக்கு எனக்கு பயிற்சிகள் கொடுத்தார்களா ஃபாதர்…? நான் வீட்டுக்கு வந்தேன். ஆனால் உடல் முழுவதும் பயங்கர வலி.” தண்ணீர் வந்திருந்தது. மூன்றாவது கேலன் தண்ணீரும் காலியானது. மிகுந்த தாகத்திலிருந்தவளைப் போல குடித்து முடித்தாள்.

“அவர்கள் என்ன மாதிரியான பயிற்சிகள் கொடுத்தார்கள்?”

“ஒன்பது செவ்வாய்கிழமை புனித மார்த்தாவுக்கு மெழுகு திரிகள் ஏற்றி அவளுடைய சொரூபத்தின் முன் தியானம் செய்ய சொன்னார்கள்.” மெதுவாகத் திரும்பி ஹோசேவைப் பார்க்கிறாள், “ஹோசே எனக்கு தாகமாக இருக்கிறது…”

ஹோசே தண்ணீர் எடுக்க உள்ளே போகும் போது நான் தடுத்து இம்முறை நான் கொண்டு வருவதாகச் சொல்லி உள்ளேச் சென்றேன். அதற்கிடையில் ஹோசேவிடம் கெஞ்சலாக உடல் வலிக்கிறது என்றும் தூக்கம் வருகிறது என்றும் கொஞ்சிக்கொண்டிருந்தாள். உள்ளே சென்ற நான் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் பிடித்து ரகசியமாக சில ஜெபங்களைச் சொல்லி கஸான்றாவிடம் நீட்டினேன். வேகமாக டம்ளரை வாங்கிய கஸான்றா வாய்க்கு அருகில் கொண்டு சென்று நிறுத்து என்னைப் பார்க்கிறாள். ஹோசே வேகமாக எழுந்து என்னருகில் பதுங்கிக்கொண்டான். அவளிடமிருந்து ஒரு குரூரச் சிரிப்பு வளர்ந்து எங்கள் இதயங்களை ஆட்டி அடங்கியது.

“ம்… புத்திசாலிதான் நீ… தண்ணீரின் மீது ஜெபம் செய்திருக்கிறாயா?”

“நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?”

தலையை கவிழ்த்துக்கொண்டு கஸான்றா சீறத் துவங்குகிறாள். விரியன் பாம்புகளிடமிருந்து வரும் சீற்றத்தை போலிருந்தது அது. உடலை மெல்ல முறுக்கி ஹோசேவை கொடூரமாக பார்த்து கத்துகிறாள் கஸான்றா. பக்கத்திலிருப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமென்று எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. அவ்வளவு உக்கிரமான சூழலிலும் என் கண்களை கொஞ்சம் தூக்கம் கவ்வியது. கஸான்றாவை இருக்கையில் அமரவைத்து மீண்டுமாக சில ஜெபங்கள் சொல்லி தீர்த்தம் தெளித்து பேச ஆரம்பித்தேன். மீண்டும் கஸான்றா பழைய நிலைக்கு திரும்பி வந்தாள்.

“கஸான்றா, புனித மார்த்தாவின் சொரூபத்தை கொடுத்தார்கள் என்று சொன்னாயே எங்கிருக்கிறது அது?”

தலையை திருப்பாமல் அவளது வலப்புறமிருந்த ஒரு அறையைக்காட்டினாள். அதனுள் நான் ஹோசேவுடன் சென்றேன். அங்கே மூன்று மெழுகுதிரிகள் எரிந்துகொண்டிருந்தன. அதன் ஒளி கோரமான அந்த சொரூபத்தின் மேல் விழுந்து அதை இன்னும் உக்கிரமாக்கிக் கொண்டிருந்தன. ஹோசேவை சந்தேகத்துடன் பார்த்தேன். அவன் கஸான்றா சில நாள்களுக்கு முன் அந்த சொரூபத்தை வாங்கி வந்ததாகச் சொன்னான்.

அடர்நிற மேனியுடன் அடர்ந்த முடியுடன் ஒரு யுவதி ஒரு பாறையின் மீது அமர்ந்திருக்கிறாள். பாறையின் கீழே ஒரு அடர் நிறக் குழந்தை சிரித்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பெண் கழுத்தில் ஒரு போத்ரப் ஏற்றாக்ஸ் வகை பாம்பு நெளிந்துகொண்டிருக்கிறது. அதை லாவகமாக அவள் தன் கரங்களில் பிடித்து உடல் முழுவதும் பரவவிட்டிருந்தாள். அதே இனத்தைச் சார்ந்த இன்னொரு பாம்பு கீழிருந்து அவள் மீது ஏறிக்கொண்டிருந்தது. அது அவள் இடது புற மார்பில் தலை வைத்தபடியிருந்தது. அவள் பாம்புகளுடன் தான் இருப்பதை மறந்து தன்னை பார்ப்பவர்களை பரிகசிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த சிலையை செய்தது ஒரு திறமையற்ற ஆளாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் அதில் கொஞ்சமும் முழுமையில்லை. ஆனால் அதை மீறிய ஒரு மிரட்சியை பார்ப்பவர்களிடம் அது கொண்டு வந்தது. கஸான்றா பாம்பைப் போல் சீறிய போது ஏற்பட்ட மிரட்சி எனக்கு இப்போது அந்த சிலையைப் பார்க்கும் போது பற்றிக் கொண்டது. மீண்டும் என் கைகளும் காலும் தானாக நடுங்க ஆரம்பித்தது. நான் ஹோசேவைப் பார்த்தேன். செயவதறியாது ஹோசே என்னை சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். நான் அந்த சிறிய சிலையின் முன் ஏற்றப் பட்டிருந்த மெழுகுதிரிகளை அணைத்தேன். அறை முழுவதும் இருள் படர்ந்தது. அறையின் மின் விளக்கை போட ஹோசே வேகமாகச் சென்றான். திடீரென அறை ஒளி பெற்றதால் கண்கள் கொஞ்சம் கூசியது. இப்போது எனக்கு மிக அருகில் கஸான்றா உட்கார்ந்து சிலையை நோக்கியவாறு இருந்தால். அவள் கண்களில் ஒரு பெருமிதம் தெரிந்தது. சிலையிடம் ஏதோ முணுமுனுத்தவளாக என்னைப் பார்த்து கரகரத்தக் குரலில் “சாந்தா மார்த்தா தோமினாதோரா” என்றாள். எனக்கு எதுவும் புரியவில்லை. பிறகு எனக்கு புரிகிறது மாதிரி சிலையை நோக்கி தன் கையை நீட்டி சுட்டிக்காட்டி மீண்டும் “சாந்தா மார்த்தா தோமினாதோரா” என்றாள். ஹோசே எங்களை நெருங்க பயந்து சுவற்றுடன் சாய்ந்து மிரட்சியாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

நான் கஸான்றாவிடம் மெதுவாக மீண்டும் பேச ஆரம்பித்தேன்

“கஸான்றா, நான் இந்த சிலையை…” சொல்லி முடிப்பதற்குள் அவள் ஆத்திரத்துடன், “அவள் பெயர் மார்த்தா… மார்த்தா தோமினாதோரா!” என்றாள். நான் கவனமுடன் இப்போது பேச ஆரம்பித்தேன்

“சரி சரி. நான் மார்த்தாவை இங்கிருந்து அகற்றப் போகிறேன். உன் நன்மைக்காகவும் ஹோசேவின் நன்மைக்காகவும்…” நான் சிலையை எடுக்க கொஞ்சம் முன் நகர்ந்தேன்.

“தன்னை தொட்டவர்களை மார்த்தா சும்மாவிட்டதில்லை. உனக்கு சவால்விடுகிறேன். முடிந்தால் அவளைத் தொட்டுப் பார்!”

கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும் முன் நகர்ந்து அந்த சிலையை தூக்கினேன். அப்போது கீழிருந்து மேல் நோக்கி வந்த பாம்பின் தலையில் என் வலக்கையின் கட்டைவிரல் அழுத்தியதில் சுரீரென வலித்தது. பாம்புக்கு உயிர் வந்து தீண்டியதாக இருந்தது. பின் தெளிவாக சிலையை நோக்குகையில் அதன் நாவாக வெளியில் நீட்டியிருந்த சிறுகம்பி இடறியிருப்பது தெரிந்தது. ஆனால் கட்டைவிரல் அந்தக் கம்பியில் அழுந்த இடறியதால் ரத்தம் வந்துகொண்டிருந்தது. நான் சரியாக கவனிக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் நான் சிலையை கையில் பிடித்திருந்ததால் ரத்தம் முழுவதும் அந்த சிலையில் வடிந்து சிலைக்கு ரத்தாபிஷேகம் செய்தது போலக் காணப்பட்டது. இதை எனக்குச் சொன்னது ஹோசேதான். அவன் அதைச் சுட்டிக்காட்டிய போது பயத்தில் குரலும் அவன் அங்கங்களும் நடுங்கிக்கொண்டிருந்தது. தான் முன்பே எச்சரித்ததாகச் சொல்லி கஸான்றா பெருங்குரலெடுத்துச் சிரிக்க ஆரம்பித்தாள். அவள் வெற்றிக்களிப்பு எனக்கு எரிச்சலைக் கொடுத்தது. நடுநிசியில் இப்படி தோற்கடிக்கப்பட்டதை எண்ணி மனம் வெம்பியது. அவள் சிரிக்கச் சிரிக்க அந்த வீட்டின் அசாதாரணச் சூழல் அதிகரித்துக்கொண்டே போனது. கையிலிருந்த சிலை ரத்தம் குடித்து ஏளனமாக என்னை பார்த்து பரிகசித்தது. எல்லாம் சேர்ந்து என்னை பைத்தியமாக்கிவிடுமோ என்று சற்று நினைத்தேன். மணியைப் பார்த்தேன். காலை மூன்று மணி நாற்பந்தைந்து நிமிடம். இவ்விரவின் தூக்கத்தை களவாடிக்கொண்ட கோர சிலையின் மீது ஆத்திரங்கள் பெருக்கெடுத்தது. அடுத்த நிமிடம் மனம் பேதலிக்கவிருந்த அந்த கண நேரத்தில் கஸான்றாவை வாயை மூடச் சொல்லி பெருங்குரலெடுத்து கத்தினேன். கையிலிருந்த சிலையை அவ்வீட்டின் சுவற்றில் வேகமாக அடித்து நொறுக்கினேன். கஸான்றா என் வார்த்தைக்கு கட்டுப்பட்டவளாக அமைதியாக நின்றாள். முன்பிருந்த அதே உக்கிரத்துடன் மேலும் கஸான்றாவைப் பார்த்து “அவளை விட்டு வெளியேப் போ!” என்று கத்தினேன். இப்போது கஸான்றா முன்பு போலவே சீறிக்கொண்டு என் முன் வந்தாள். அவள் கண்கள் மேல் நோக்கி சொருக உடலை நெளித்து என் முன் விழுந்தாள். ஓவென கத்திக்கொண்டு குடித்த அவ்வளவு நீரையும் வாந்தியாக எடுக்கத் துவங்கினாள். ஹோசே உதவிக்கு வந்ததை நான் தடுத்துவிட்டேன். வாந்தியெடுத்து களைத்து தரையிலே மயங்கிப் போனாள் கஸான்றா.

“ஹோசே, நீ காலையில் நேரம் கிடைக்கும் போது வந்து என்னைப் பார்!” என்று கட்டளையிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினேன். நான் கொண்டு வந்த தீர்த்தம் அவர்கள் வீட்டிலேயே இருந்தது.

காரில் செல்லும் போது அருகிலே கஸான்றா அமர்ந்துகொண்டு “சாந்தா மார்த்தா தோமினாதோரா” என்று சொல்லிக்கொண்டு வருவது போன்றும் பின்னிருக்கையில் பாம்புகளுடன் மார்த்தா அமர்ந்திருப்பதாகவும் பிரம்மையாக இருந்தது. சரியாக தூங்க முடியவில்லை. மார்த்தாவின் உடலில் பரவியிருந்த பாம்புகள் என்னை நெருக்குவது போல இருந்தது.

பிற்பகலில் ஹோசே என்னை சந்திக்க வந்தான் அவன் கரங்களில் நான் விட்டுச்சென்ற தீர்த்தமிருந்தது.

“தீர்த்தத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.”

பெரும் நிம்மதியுடன் அந்த தீர்த்தப் புட்டியை மீண்டும் தன்னுடன் அணைத்துக்கொண்டான்.

“கஸான்றா எப்படியிருக்கிறாள்?”

“இரவு நடந்த எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை ஃபாதர். கொஞ்சம் சோர்வாக இருந்தாள். இப்போது நான் வருவதற்கு கொஞ்சம் முன்பு நன்றாக உறங்க ஆரம்பித்தாள். காலையில் நன்றாக சாப்பிட்டாள். நான் வீட்டை சுத்தம் செய்தேன்.”

“நல்லது. அவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்!”

“ஃபாதர், அவளுக்கு என்னவானது?”

“தீய ஆவிகளின் ஆக்கிரமிப்பு. நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் அந்த சிலையை உடைத்தெறிந்துவிட்டேன். இனிமேல் அது மீண்டும் வீட்டுக்குள் வராமல் பார்த்துக்கொள்.” என்றேன். காலையில் கையில் அந்த சிலை ஏற்படுத்திய கீறல் சுரீரென்றது. ஹோசே பார்க்காதவாறு அதை மெதுவாகத் தேய்த்துக்கொண்டேன்.

“ஆனால் கஸான்றா மார்த்தாவை கத்தோலிக்க கிறிஸ்துவ புனிதை என்றுதான் அறிமுகப்படுத்தினாள். அதனால் தான் அந்த கோர சிலையை வீட்டில் அனுமதித்தேன்.”

“கஸான்றா சொல்வது உண்மைதான். பைபிளில் லாசர் மற்றும் மரியாவின் சகோதரி மார்த்தா. இயேசுவுக்கு மிகவும் பிரியமானவள். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலுக்குப் பின் ஐரோப்பாவுக்கு சென்ற மார்த்தா அங்கிருந்த பல இடங்களில் நற்செய்தி அறிவித்தாள். அவளைப் பற்றிய குறிப்புகள் வரலாற்று ரீதியாக கிடைக்காவிட்டாலும் கதைகள் நிறைய இருக்கின்றன. பிரான்சில் உள்ள தரஸ்கோ(ன்) பகுதியில் நற்செய்தி அறிவித்துக்கொண்டிருந்த சமயம் அங்கிருந்த ஒரு ட்ராகனை அவள் கொன்றதாக கூறுவார்கள். அந்தப் பகுதியில் ‘தராஸ்க்’ என்ற கொள்ளைநோய் பரவி வந்தது. இறையருளால் அதை அவள் குணப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் பின்னாளில் அந்தக் கொள்ளைநோயை ட்ராகனுடன் ஒப்பிட்டு இவள் ட்ராகனை கொன்றவாளாகச் சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் அனுமானம். இந்தக் கதைகள் கண்டங்கள் கடந்து சென்றிருக்க வேண்டும். லுக்குமி மற்றும் ஹூடு நம்பிக்கையாளர்கள் இக்கதையை தங்களுக்கு தகுந்தார் போல மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். ட்ராகனுக்கு பதிலாக பாம்பை வசீகரிக்கும் யட்சியாக மார்த்தாவை மாற்றியிருக்க வேண்டும். வசீகரத்தின் தேவதையாக அவளை லுக்குமி மற்றும் ஹூடு நம்பிக்கையாளர்கள் வழிபட்டிருக்கிறார்கள். காதல் சமாச்சாரங்களுக்கு மார்த்தா உதவுவாள் என்று சொல்லி பில்லி சூனியம் முதலிய வேலைகளை இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கஸான்றா சொன்ன ஆன்மீக பயிற்சியாளர்கள் இவர்களாகத்தான் இருக்க வேண்டும்.”

ஹோசேவின் முகத்தில் அச்சம் உறைந்திருந்தது.

“ஹோசே, நீ கஸான்றாவை காதலிக்கிறாயா?”

ஆம் என்று தலையாட்டினான்

“அப்படியென்றால் அவளை நீ சீக்கிரம் திருமணம் செய்துகொள். இப்படி நம்பிக்கையற்று செலுத்தப்படும் அன்பில் சில சமயம், அன்பின் பெயராலே சில வன்முறைகள் நிகழ்ந்துவிடுகின்றன. எல்லாவற்றையும் மறந்து வாழ்வை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துங்கள். எல்லாம் நன்றாக நடக்கும்.”

ஹோசே மனம் தெளிந்தவனாக வீட்டை நோக்கிச் சென்றான்.

சில வருடங்களுக்குப் பிறகு அன்று காயப்பட்ட கட்டைவிரல் வீக்கம் எடுத்தது. சீல்வைத்து நீலம் படர்ந்திருந்த விரலை மருத்துவரிடம் காட்டினேன். உடனடியாக விரலை அறுவைசிகிச்சை செய்து அகற்றவில்லையென்றால் கரம் முழுவதும் எடுக்க வேண்டிய ஆபத்திருப்பதாக மருத்துவர் கூறினார். வெகுவிரைவிலே கட்டைவிரல் அகற்றப்பட்டது. இன்னும் காயம் ஆறவில்லை. இருள்படர்ந்த மாலை வேளையில் ஹோசே குடும்பத்துடன் என்னைப் பார்க்க வந்தான். அழகிய ஆண் குழந்தை பிறந்திருந்தது அவனுக்கு. கஸான்றாவும் வயதிற்குரிய அழகுடனும் அடக்கத்துடனும் இருந்தாள். நலவிசாரிப்புகளுடன் ஆரம்பித்த உரையாடல் பலவாறு நகர்ந்துகொண்டிருந்தது. ஹோசேவுக்கு செல்போஃன் அழைப்பு வர அவன் வெளியில் சென்றான். கஸான்றா என் அருகில் அமர்ந்து, “அன்றே சொன்னேன். நீங்கள் தான் கேட்கவில்லை. பார்த்தீர்களா தொட்டதற்கே விரலை எடுக்கும் படியாகிவிட்டது” என்றாள். என் உடலுக்குள் யாரோ உயரழுத்த மின்சாரத்தை பாய்ச்சியது போல இருந்தது.

எங்கள் உரையாடலை கவனமாக கேட்ட கஸான்றாவின் குழந்தை சத்தமாக சிரித்தது. தவழ்ந்து வந்து கஸான்றாவின் காலருகில் அமர்ந்தது. மேலும் கஸான்றா கரகரத்தக் குரலில் தொடர்ந்தாள், “ஃபாதர், இது முடிவல்ல ஆரம்பம். மார்த்தா தோமினாதோராவை தொட்டதற்கான தண்டனைதான் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது. சிலையை உடைத்த தண்டனைக்காக காத்திருங்கள்” என்றாள். என் உடலெங்கும் பாம்புகள் நெளிவதை போல இருந்தது. கைகளும் கால்களும் நடுக்கமெடுத்தது.