அவள் அந்தக் கடையில் தொங்கிக்கொண்டிருந்த கருப்பு நிறச் சட்டையையே பார்த்துக்கொண்டிருந்தாள். தன் கையில் பையில் மறைத்து வைத்திருக்கும் பணத்தையும் அதைக் கொடுக்கும் போது அம்மா சொன்னதும் நினைவிற்கு வந்தது, “இதப் பாரு, உங்கப்பா கிட்ட அது வோணும் இது வோணும்னு அடம் புடிக்காத. வாங்கி குடுக்கறத வாங்கின்னு  வா. இந்தா இத வெச்சிக்கோ, காசு பத்தலன்னு உங்கப்பா முழிச்சாருன்னா இதக்குடு”

“செல்லக் குட்டி” என்றக் குரலைக் கேட்டு அவள் சுய நினைவுக்கு வந்தாள்.

“அப்பா” என்று முகம் மலர்ந்தாள். மலர்ந்த அந்த முகத்தில் அவளையும் மீறி கண்ணீர் துளிர்த்தது. அப்பாவை இருக்க அனைத்துக்கொண்டாள். “அப்பா குல்ஃபி சாப்புடலாமா”

“மொதல்ல துணி எடுத்துடுவோம்” என்று சொல்லிவிட்டு இருவரும் கடைக்குள் சென்றனர். அவள் திரும்பித் திரும்பி வாசலில் தொங்கிக்கொண்டிருந்த அந்த சட்டையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“செல்லக்குட்டி இது நல்லாருக்கா?”

“போப்பா. எனக்கு இன்னா கலர் புடிக்கும்னு உனுக்கு தெரில”

அவர் முகம் சட்டென வாடினாலும் அதை சாளித்துக்கொண்டே, “என் செல்லக்குட்டிக்கு இன்னா புடிக்கும்னு எனக்கு தெரியாதா. இது உனுக்கு நல்லாருக்மேன்னு சொன்னேன்.”

“அப்டியா? இது எனுக்கு நல்லாருக்குமா”

“பின்ன… செரி சைஸ் சரியா இருக்குதா”

“ம்”

அவர் அதை மட்டும் எடுத்துக்கொண்டு கவுண்டருக்கு சென்று பேரம் பேசத் தொடங்கினார். “ஒரே விலை பேரம் பேசாதீர்” என்று அங்கு இருந்த பலகையை அவர் படிக்கவே இல்லை. படித்தாலும் அவர் இப்படித்தான் செய்வார் என்று அவளுக்கு தெரியும். ஒருவழியாக அவர் அந்த துணியை வாங்கிவிட்டார்.

“போலாமா”

அவள் அங்கேயே தயங்கியவாறு நின்றுகொண்டிருந்தாள்.

“இன்னா”

அவள் கடை வேலையாளிடம் வெளியே தொங்கிகொண்டிருந்த சட்டையை காட்டி “அது எவ்ளோ” என்றாள். அவர் விலையை சொன்னதும் அவள் முகம் பிரகாசமானது. “அத எடுங்க” என்றாள். அவள் அப்பா குழப்பமாக “இன்னாத்துக்கு அது” என்றார்.

“எனக்கும் உனக்கும் ஒரே நாள்ல தான பொறந்த நாளு. உனுக்கு”

அதைக் கேட்டத்தும் அவர் சற்று நெளிந்தார். அதைப் புரிந்துகொண்ட அவள் “எங்கிட்ட காசு இருக்குது” என்றாள். அவர் எதுவும் சொல்லவில்லை. இருவரும் சட்டையை வாங்கிக்கொண்டு வெளியேறினர். அவர் அவளை  சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார். எதும் பேசவில்லை. அவள் முன்னங்கம்பியில் உட்கார்ந்துகொண்டு அந்த சட்டையை வைத்துக்கொண்டு பேசிகொண்டே வந்தாள்.

“இந்த சட்டையில் ஒரு பூ இருக்குதுல அதுதான் நானு. எனக்கும் மஞ்ச கலருதான் புடிக்கும்னு உனுக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும். இந்த மஞ்சக் கலரு பூ இருக்குதுல்ல, இதுதான் மேஜிக் பூ. இதோ இந்த பூலருந்து ஒன்னு வழியுதுல அதுதான் உன் அதிர்ஷ்டம். நீ எங்கன்னா போவும் போது இந்த சட்டைய போட்டுன்னு போ. இன்னா”

தெரு முனைக்கு வந்ததும் அவர் சைக்கிளை நிறுத்தினார். அவர் கண்கள் கலங்கியிருந்தது. அவளும் அழத் தொடங்கினாள்.

“அப்பா வூட்டுக்கு வாயேன்.”

“வேணாம். நீ பத்தரமா போ. ஒழுங்கா படி. அம்மாவ பாத்துக்கோ” என்று அவளை அனைத்து நெற்றியில் ஒரு முத்தம் வைத்துவிட்டு அனுப்பிவைத்தார். அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

            

சரியாக சொல்வதென்றால் உப்பளம் சாலையில் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்திற்கு சற்று தள்ளி எதிர் திசையில் இருந்தது அந்த அரசு தங்கும் விடுதி. விடுதியிலிருந்து சிறிது தூரத்தில் புதுச்சேரி ரயில் நிலையமும், நடக்கின்ற தூரத்தில் கடலும் இருந்தது. அங்கே கரை முழுக்க கற்களால் நிரம்பியிருந்ததால் அதை கடல் என்று மட்டும் தான் சொல்ல வேண்டும். கரையற்ற கடல். அந்த விடுதியின் இரண்டாவது மாடியில் சாலையைப் பார்த்த மாதிரியான ஒரு அறையின் வாசலில் கிட்டதட்ட உடையும் நிலையில் இருந்த ஒரு பிளாஸ்டிக் நாற்காலில் தவிப்புடன் உட்கார்ந்திருந்தான் கதிர். கிழக்குப் பார்த்த அறை என்பதால் காலை வெயிலில் ஒதுங்கவும் முடியாமல் உள்ள இருப்பவர்களின் பேச்சுக்களை சகித்துக்கொள்ளவும் முடியாமல் நிமிடத்திற்கொரு முறை விடுதியின் வாசலையே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். சரியாக ஆறடி உயரம். காபிதூள் நிறம். முகம் முழுக்க பருக்கள் குடியிருந்த அடையாளம். ஒட்ட வெட்டப்பட்ட தலை. நைந்துபோன வாறைக் கொண்ட, குபேர் பஜாரில் என்பது ரூபாய்க்கு வாங்கிய கை கடிகாரத்தை கட்டியிருந்தான். கனுக்கால் எட்டாத பேண்ட்டும், அவன் உடலுக்கு பொருந்தாத  சட்டையை அணிந்திருந்தான். மறக்காமல் சட்டையின்  கையை மடித்துவிட்டிருந்தான். இரண்டுமே நிச்சயம் அவனுடைய உடைகள் கிடையாது. ஒரு ஐந்து ரூபாய் பேனாவை மேல் பாக்கெட்டில் வைத்திருந்தான்.

“இந்த ஆளுக்கு இன்னிக்கி இன்னாத்தான் கேடு, ச்சைக்” என்று மனதற்குள் சொல்லிக்கொண்டான்.

கதிருக்கு வெறுப்பாக இருந்தது. தேவையில்லாமல் வந்து தலையை கொடுத்துவிட்டுமோ என்று இரண்டு மூன்று நாட்களாக தோன்றிக்கொண்டே இருந்தது. தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி சரியாக ஒன்பதரையாகி இருந்தது. அவன் மணிப் பார்த்ததை உள்ளே இருந்து கவனித்த ஒருவர், “இந்நேரம் கடைங்களாம் தொறந்திருப்பாங்கல்ல” என்றார்.

கதிர் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையசைத்தான்.

“பாய் வர லேட்டாவும்னு நேத்தே சொல்லிட்டு போனாரு. நீங்க கொஞ்சம் போயிட்டு வந்துடறீங்களா” என்றார் அவர்.

கதிர் பதிலேதும் பேசாமல் எழுந்து அவர் அருகில் சென்றான். உள்ளே அவரைத் தவிர இன்னும் நான்கு பேர் இருந்தனர். அதில் ஒருவர் தன் பாக்கட்டில் இருந்து இரண்டு ஐநூறு ரூபாய்களை எடுத்து கதிரிடம் பெருமையாக கொடுத்தார். அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான். யாருக்கு என்ன வேண்டும் என்று அவனுக்கு நன்றாக தெரியும். மனதிற்குள் பாயை திட்டினான். ‘அந்தாளு ஒழுங்கா வந்திருந்த’. வெளியே வந்து படியிறங்க ஆரம்பித்ததும் பின்னாலிருந்து ஒரு குரல் அவனை அழைத்தது.

“தம்பி”

கதிர் நின்று திரும்பிப்பார்த்தான்.

“எல்லாத்தையும் வாங்கிட்டு கரெக்டா கணக்கு எடுத்தாந்து குடு, நீ உனுக்கு எதையும் வாங்கிக்காத”

கதிருக்கு ஆத்திரமாக வந்தது. பதிலேதும் சொல்லாமல் படியிறங்கிச் சென்றான். இருக்கின்ற வேலையைப் பார்த்துக்கொண்டு ஒழுங்காக இருந்திருக்கலாம் என்று தன்னை நினைத்து நொந்துக்கொண்டான்.

*

கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன் அவன் புதுச்சேரி பேருந்து நிலைத்திற்கு எதிரில் இருந்த ஒரு தெருவில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு தனியார் தொலைக்காட்சியில் தன் எதிர் வீட்டு பெருமாள் அண்ணனால் சேர்த்துவிடப்பட்டிருந்தான். அங்கு வேலை செய்த ஆறு மாதத்தில் ஒரே ஒரு முறை எண்ணூறு ரூபாய் சம்பளம் பெற்றான். ஆனால் வேலைகளை நன்றாக கற்றுக்கொண்டான். ஆறாவது மாதத்தில் சேனல் கைமாறியது. கதிருக்கு அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் மீண்டும் பெருமாள் அண்ணனிடம் சென்று நின்றான். இந்த முறை அவர் ஒரு அரசியல்வாதி நடத்திக்கொண்டிருந்த சேனலில் கதிரை வேலைக்கு சேர்த்துவிட்டார். புதுச்சேரியில் சேனல்களுக்கு பஞ்சமில்லை. வேலைகள் முன்பு இருந்ததை விட அதிகமாக இருந்தது. சரியாக வீட்டிக்கு போக முடியவில்லை. அடுத்த ஆள் அடிக்கடி வராமல் போனான். அவனுக்கும் சேர்த்து வேலை செய்ய வேண்டிய நிலையில் சோர்ந்து போனான். வேலையை விட்டு நின்றுவிடலாமா என்று அடிக்கடி தோன்றியது. அவன் வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் அப்படித்தான் ஒரு பையன் சொல்லாமல் நின்றுவிட்டான். இத்தனைக்கும் அவன் உள்ளூர் கூட இல்லை. விழுப்புரத்தைச் சேர்ந்தவன். ஆனால், அவனை தேடி கண்டுபிடித்து கூட்டிக்கொண்டு வந்து அடித்து அனுப்பினார்கள். என்ன செய்வதென்றே தெரியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில், கிழிக்கப்படாமல் இருக்கும் நாள்காட்டியை போல் வாழ்க்கை அங்கேயே நின்றுவிட்ட ஒரு நாளில் தான் அவன் கணபதியை சந்தித்தான். கணபதி அவன் வேலை செய்யும் இடத்திற்கு அவனுக்கு மேல் இருக்கும் ஒருவனைப் பார்க்க வந்திருந்தார். நாளைடைவில் அவன் கணபதியுடன் நெருக்கமானான். ஆனால், ஆரம்பத்தில் கணபதி தான் யாரென்று அவனிடம் சொல்லவேயில்லை. கதிருக்குள் இருக்கும் சினிமா ஆசையை அவர் அவன் பேச்சின் ஊடே தெரிந்துகொண்டிருந்தார். கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் அவர் சினிமாவில் உதவி ஒளிபதிவாளராக இருப்பதாகவும், சமீபத்தில் வெளியான ஒரு பெரிய நடிகரின் படத்தில் வேலை செய்திருப்பதாகவும் அடுத்ததும் ஒரு முக்கியமான படம் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார். கதிருக்கு பிரமிப்பு அடங்கவேயில்லை.  அவன் நெருங்கிப்பழகும் முதல் சினிமாக்காரராக கணபதி இருந்தார். அதேநேரம் கதிரின் கண்களில் இரு மின்னல் தோன்றி மறைந்ததை அவர் கவனிக்கத் தவரவில்லை.

“வேணாம் கதிரு. ஏற்கனவே நீ கஷ்டபடற குடும்பம் வேற. ஒழுங்க ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்கற, அத வுட்டுடாத.”

“ண்ணா… ஒரு ரெண்டு வருஷம் டிரை பண்றேன். கிடைக்கலனா மறுபடியும் வேலைக்கு போயிடறன். பெருசா ஒண்ணும் ஆயிடாது.”

“இப்புடி தான் ஆரம்பிக்கும். எத்தினி பேர நான் பாத்துகிறேன்.”

“ண்ணா…”

“செரி ஆவட்டும், பாக்கறன்.”

பின் வந்த நாட்களில் கணபதி அவரது சில நண்பர்களை அறிமுகப்படுத்தினார். அவர்கள் அனைவரும் உதவி இயக்குனர்கள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். ஆனால், அவர்கள்  எந்த இயக்குனரிடமும் வேலைப் பார்த்தாகவோ மேலும் புதுச்சேரியை விட்டு வெளியேறியாதக அவனுக்கு நினைவிலேயே இல்லை.

கதிர் வேலையை விட்டுவிட்டு கணபதியுடன் சுற்ற ஆரம்பித்தான். அவர் படபிடிப்புக்கு போகும்போது அழைத்துப் போவார் என நம்பினான். நாட்கள் சென்றுகொண்டேயிருந்தது. ஆனால், அவர் எங்கும் போவது போல தெரியவில்லை. மேலும் பலர் கதிருக்கு அறிமுகமாகினர். அவர்கள் அனைவரும் தங்களை உதவி இயக்குனர் என்றும் உதவி ஒளிப்பதிவாளர் என்றும் பட இயக்க தயாரிப்பாளரை தேடுவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால், உள்ளூரிலேயே ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டிருந்தனர். பெரும்பாலும் நேருவீதியில் எதாவது  ஒரு துணிக்கடையில் சேல்ஸ் மேனாக இருந்தனர். இவர்களின் கணக்கு என்னவென்றே கதிருக்கு புரியாமல் இருந்தது.

அப்போது புதுச்சேரியில் அதிக அளவில் திரைப்பட படபிடிப்பும் விளம்பரப் பட படபிடிப்பும் நடக்கத் தொடங்கியிருந்தது. ஒருகட்டத்தில் ராசியில்லாத இடமாக கருதப்பட்ட புதுச்சேரி, திடீரென்று ஏதோ ஒரு படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு அது வெற்றியும் அடைந்ததால் சென்னையிலிருந்த சினிமாக்காரர்களின் கழுகுப்பார்வை வெறும் மூன்று மணி நேர தூரத்தில் இருக்கும் புதுச்சேரியை வட்டமடித்தன. அரசும் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட ஒயிட் டவுனும் கடற்கரையும் அதையொட்டிய பூங்காவிலும் அதைச் சுற்றிய  தெருக்களையும் ஆங்காங்கே இருக்கும் மஞ்சள் வண்ண சுவரையும் சுற்றி சுற்றி வந்தனர். இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்களின் கனவில் சினிமா வேர்விடத் தொடங்கியது.

திடீரென்று ஒருநாள் மாலை கணபதி கதிரை செல்போனில் அழைத்தார். உடனடியாக குபேர் பஜார் பின்னால் இருக்கும் மைதானத்திற்கு வரும்படி சொன்னார். கதிருக்கு தலைகால் புரியவில்லை. நிச்சயம் இது சினிமா சம்பத்தப்பட்ட ஏதோ ஒன்று என்று மட்டும் அவனுக்கு நிச்சயம் தெரிந்தது. சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றான். முதலியார்பேட்டையிலிருந்து பதினைந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான். கணபதியுடன் இன்னொருவர் நின்று பீடி பிடித்துக்கொண்டிருந்தார். அழுக்காகவும் போதையாகவும் இருந்தார். கதிர் தயங்கிக்கொண்டே அவர்கள் அருகில் சென்றான். அவர் கதிரை அலட்சியமாகப் பார்த்தார்.

“கதிரு, இவுரு தான் தமீம் பாய்.”

கதிர் தலையாட்டினான். அவர் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தார். கதிர் திரும்பி கணபதியே கேள்வியுடன் பார்த்தான்.

“சென்னையிலருந்து ஒரு குரூப் டிஷ்கஷனுக்கு வந்திருக்குது. அவங்களுக்கு நல்ல எழுதற மாதிரி ஒரு ஆளூ வோணூமாம். அதான் உன்னக் கூப்டன். அவுரு கூட போய் பாரு. செட்டானா ஒர்க் பண்ணு. இன்னான்னு பாத்து எனக்கு போன் பண்ணு. நான் காலையில காரக்குடிக்கு ஷூட்டிங்கு போறேன். எதுனானா நைட்டு பத்து மணிக்கு மேல பண்ணு. எடுக்கலன வுட்ரு. நானே திரும்ப அடிக்கறன்” என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு புழுதியில் புகுந்து மறைந்தார். கதிர் அப்படியே பிரமைபிடித்தது போல் நின்றிருந்தான். திரும்பி அவரைப் பார்த்தான். அதற்காகவே காத்திருந்தவர் போல், “தம்பி ஒரு தம்மு வாங்கு.” என்றார்.

“இன்னா சிகரெட்டு.”

“ஃப்ள்ட்ரு”

அவன் வரும் போது அவர் பீடி குடித்துக்கொண்டிருந்ததை நினைத்துக்கொண்டான். ஒரு சிகரெட் வாங்கிக்கொடுத்தான். அவர் அதைப் பற்ற வைத்து பொருமையாக இழுத்து முடித்து கீழே போட்டு மிதித்துவிட்டு அவனைப் பார்த்து ‘வா’ என்று அழைத்துவிட்டு நடக்கத் தொங்கினார்.

தூரத்தில் எதாவது கார் அல்லது பைக் இருக்கும் அதில் ஏறி எதாவது ஹோட்டல் அறைக்குப் போகப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டான்.

“உன் பேரு இன்னா”

“கதிரு”

அவர் நேராக பூட்டப்பட்டிருந்த ஒரு கடையின் வாசலுக்கு சென்றார். அங்கே கைலிக் கட்டிக்கொண்டு ஐந்து கிழவர்கள் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகே  செல்ல செல்ல பாய் சிறிது சிறுதாக தன் உடலில் பனிவின் அளவைக் கூட்டிக்கொண்டே சென்று அவர்களை நெருங்கியதும் அதன் இறுதி வடிவத்தை எட்டி, குரலில் ஒலி அளவுகளை சரி செய்துவிட்டு “சார்” என்றார்.

அந்த கூட்டத்தில் வாய் முழுக்க வெற்றிலையை குதப்பிக்கொண்டிருந்த ஒருவர், “என்ன பாய், போலாமா” என்றார்.

“சார். எழுத பையன் வேணும்னு கேட்டீங்களே” என்று கதிரைக் காட்டினார்.

கதிர் ஒன்றும் புரியாமல் விழித்தவாறு நின்றிருந்தான். அவர்கள் அனைவரும் கதிரை ஏற இறங்கப் பார்த்தனர். வெற்றிலை வாயர் மட்டும் கதிரிடம் தன் கேள்விகளை துப்பினார்.

“பேரு என்னப்பா?”

“கதிர்”

“என்னப் படிச்சிருக்க”

“கரஸ்ல பி.ஏ. படிக்கறன். தேர்ட் இயர்”

“கையெழுத்து நல்லா இருக்குமா?”

இந்த கேள்விக்கு கதிருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அமைதியாக இருந்தான். அவர் தனக்கு பின்னால் மூடப்பட்டிருந்த ஷட்டரில் ஒருப் பையை சாய்த்துவைத்திருந்ததை அவர் திரும்பி அதை எடுக்கும் போதுதான் கவனித்தான். அவர் அதிலிருந்து ஒரு ஃபைலை எடுத்து அதற்குள்ளிருந்து ஒரு பேப்பரை எடுத்து ஃபைல் மீது வைத்து எழுதிக்காட்டச் சொன்னார். கதிர் என்ன எழுதுவது என குழப்பமாக நிற்க, “உன் பையோ டேட்டாவ தமிழ்ல எழுது” என்றார். அவன் வேகமாகவும் அதே நேரம் சற்று அழகாகவும் எழுதிக் கொடுத்தான். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு அவர் அருகே உட்கார்ந்திருந்த இன்னொருவரிடம் கொடுக்க அவர் கையெழுத்தை மட்டும் பார்த்துவிட்டு சரியென்று தலையசைத்தார்.

அதன் பிறகே வெற்றிலை வாயர் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார்.

அவர் அருகே அமர்ந்திருந்த வரைக் காட்டி “இவர் தான் ரைட்டர்” என்றார். அவர் எதிரில் நின்றுக்கொண்டிருந்த ஒரு பெரியவரைக் காட்டி “இவர் ஒரு டைரக்டரு, நம்ப படத்துக்கு சப்போர்ட் பண்ண வந்திருக்காரு” என்றார். அவர் அருகே நின்றிருந்த இன்னொருவரையும் காட்டி அதையே சொன்னார். அவர்கள் இருவருக்கும் பின்னால், தனக்கு இவர்களுக்கும் சம்பந்தமேயில்லை என்ற ரீதியில் ஆறடியில் முன்மண்டையில் சில முடிகளும் பின் மண்டையில் இன்னும் சில முடிகளும் ஆகிய மொத்த முடிகளும் நரைத்துப்போய் நல்ல தடிமனான சோடாபுட்டி கண்ணாடி போட்டுகொண்டு சட்டையில் ஒழுக ஒழுக பாணிபூரி சாப்பிட்டுக்கொண்டிருந்தவரைக் காட்டி “இவர் தான் பிரொட்யூசர்” என்றார். அவர் இவர்கள் பேசிக்கொண்டிருந்த எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், அடுத்த பாணிபூரியையாவது ஒழுகாமல் சாப்பிட வேண்டும் என்ற சிரத்தையில் இருந்தார். கடைசியாக வெற்றிலை வாயர் தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

“நான் தான் இந்தப் படத்துக்கு டைரக்டர்”

பல அதிர்ச்சியில் இதுவும் ஒன்று என்று கதிர் அமைதியாக தலையை ஆட்டினான்.

“சரிப்பா காலையில் ஒன்பது மணிக்கு வந்துடு, பாய் எங்க வரணும்னு சொல்லிடுங்க” என்றார் டைரக்டர்.

கதிர் ஒருவழியாக விடைபெறாலாம் என்று நகர்ந்தபோது பாணிபூரியை சாப்பிட்டுவிட்டு ப்ரொடியூசர் என்று சொல்லப்பட்டவர் அங்கே வந்தார்.

“என்ன போலாமா. யாரு புள்ளாண்டான்”

“ரைட்டருக்கு அசிஸ்டெண்ட், பாய் ஆளு”

இந்த வார்த்தையை கேட்டதும் பாய் பெருமையாக முகத்தை வைத்துக்கொண்டார்.

“என்னப்பா, பேரு என்ன”

“கதிரு”

“நான் யாரு தெரியுமோ

“ம்… சொன்னாங்க சார்”

“என்ன சொன்னாங்க”

“நீங்க தான் ப்ரொடியூசர்ன்னு”

“வேற ஒன்னும் சொல்லலயா, இப்படித்தான் எனக்கு பப்ளிசிட்டியே பண்ணமாட்டேங்கறீங்க” என்ற மற்றவர்களிடம் கோபித்துக்கொண்டார். பிறகு கதிரிடம் திரும்பி, “தம்பி… நான் தான் இந்த படத்தோட ஹீரோ”

கதிர் அதிர்ச்சியாக பாய்யைப் பார்த்தான். அவர் சிரிக்காமல் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தார்.

அவர்கள் சொன்ன இடத்திற்கு போகலாமா வேண்டாமா என்று இரவு முழுவதும் கதிர் தவித்துக்கொண்டிருந்தான். கணபதிக்கு போன் செய்து அனைத்தையும் சொன்னான். விழுந்து விழுந்து சிரித்தவர், “சும்மா இருக்கறதுக்கு போய்ப் பாரு, எதாவது எக்ஸ்பீரியன்ஸ் கெடைக்கும்” என்றார்.

மறுநாள் காலை எட்டரை மணிக்கே அவர்கள் தங்கியிருந்த அரசு விடுதிக்கு சென்றான்.

அதன்பிறகு கதிர் பாயுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமானான். ஆரம்பித்தில் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொண்ட பாய் பிறகு கதிருடன் இயல்பாக பழக ஆரம்பித்தார். அந்த சினிமா குழுவுக்கு தேவையான அனைத்தும் பாய் தான் பார்த்துக்கொண்டார். அவ்வப்போது கதிரும் அவருடன் போவான். பாய் எப்போதும் தன் கமிஷன் போகவே மீதி பணத்தைக் கொடுப்பார். அது அவர்களுக்கும் தெரியும். பாய் இல்லாமல் உள்ளூரில் ஒன்றும் ஆகாது என்றும், அவர்களுக்கு பணம் செலவழிப்பவனுக்கு ஏற்கனவே பாயால் வேறு ஒரு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதால் அவரும் பாயை எதுவும் கேட்பதில்லை.

கதிர் அந்த குழுவுடன் இனைவதற்கு முன் ஒரு நாள் அவர் பாயிடம் கணக்குக் கேட்டுள்ளார். மறுநாள் பாய் வாங்க வேண்டியவற்றுக்கு பதிலாக மட்டமான சரக்கும் குறைந்த அளவுக்கு உணவும் வாங்கிவந்துக் கொடுத்துள்ளார். கேட்டதற்கு அதிகமாக செலவழிக்க வேண்டாமென்று அவர் தான் சொன்னதாக போட்டுக்கொடுத்துள்ளார். அன்றிலிருந்து அவர் பாயிடம் வைத்துக்கொள்வதில்லை.

இவர்களுக்கு செல்வழிக்க உள்ளூரில் எப்படி ஆட்கள் பிடிக்கிறார்கள் என்று கதிருக்கு யோசனையாகவே இருந்தது. ஒருநாள் பாயிடம் கேட்டான்.

“சினிமா ஆசை இருக்கறவன் அத மூஞ்சிலயே வெச்சிருப்பான். பாத்தாலே தெரிஞ்சிடும்”

அதன் பிறகு அந்தக் குழு முதல் கட்ட ஸ்கிரிப்ட் வேலைகலை முடித்துக்கொண்டு சென்னைக்கு திரும்பியது. ஆனால், கதிரும் பாயும் எப்போதும் ஒன்றாகவே சுற்றிக்கொண்டிருந்தனர். பாய் அவர் வேலை பார்க்கும் சினிமா படபிடிப்புகளுக்கு கதிரையும் கூட்டிக்கொண்டு சென்றார். சில நேரம் வேடிக்கைப் பார்ப்பான். சில நேரங்களில் எதாவது வேலை வாங்கிக் கொடுப்பார். அப்போதெல்லாம் தங்களை சினிமாக்காரர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் தவறாமல் படபிடிப்பைப் பார்க்க வந்துவிடுவார்கள். அப்போது தான் கதிர் ஒன்றை புரிந்துகொண்டான், இவர்களுக்கு சினிமா ஆசை இருக்கிறது. ஆனால், சென்னைக்கு சென்று கஷ்டப்பட விருப்பமோ தைரியமோ இல்லை. உள்ளூரில் இந்தமாதிரி வேலை செய்து எதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று. தானும் அவர்களில் ஒருவனாக மாறிவிடுவோமோ என்று அச்சம் கதிருக்கு மெல்ல கிளைவிடத் தொடங்கியது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த குழு புதுச்சேரி வந்து இறங்கியது. இந்தமுறை ஒரு மந்திரியின் தம்பியை எப்படியோ ஸ்பான்சராக மடக்கியிருந்தது. அவருக்கு ஏதோ முக்கியமான கதாபாத்திரம் தருவதாக சொல்லியிருந்தார்கள். மேலும் பேருந்து நிலையத்திற்கு எதிரில் லாட்ஜ் வைத்திருக்கும் ஒருவரையும் பிடித்திருந்தார்கள். அவர் இவர்களின் தினசரி செலவுகளைப் பார்த்துக்கொண்டார். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பெரும் விருப்பமும் அதே நேரம் தினமும் இவர்களுக்கு செல்வழிப்பதில் மனகசப்பும் இருந்தது. பாயையை ஒன்றும் செய்ய முடியாத கடுப்பில் தான் கதிரிடம் சரியாக கணக்கு காண்பிக்கும் படி கொஞ்சம் மிரட்டலாக சொல்லியனுப்பினார்.

கதிர் விடுதியை விட்டு வெளியே வரும்போதே எதிரில் பாய் வருவதைப் பார்த்துவிட்டான்.  அவனுக்கு இருந்த கோபத்தில் பாயின் முகத்தையும் அவர் கண்கள் கலங்கியிருப்பதையும் அவன் கவனிக்கவேயில்லை. நேராக பாயிடம் சென்று, “எங்கப் போயி தொலஞ்சீங்க பாய். இதான் கடைசி. இனிமே நான் வரமாட்டேன்” என்று கோவமாக கத்தினான்.

பாய் பதிலேதும் பேசவில்லை. அமைதியாக அவனுடன் நடந்துவந்தார். ஒருப் பெட்டிக்கடையைப் பார்த்ததும் அங்கே சென்று ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். கதிர் கொஞ்சம் அமைதியடைந்திருந்தான். அப்போது தான் பாய்யை கவனித்தான். அவர் கண்கள் கலங்கியிருந்தது.

“கதிரு… நானே உங்கிட்ட சொல்லனும்னு இருந்தேன். இந்த வேலையெல்லாம் உனுக்கு வேணாம் வேற எதுனா பொழப்பப் பாத்துகினு போ”

“இன்னா பாய், இன்னாச்சி”

“இனிமே இன்னா ஆவனும், ஆவ வேண்டியாதெல்லாம் ஆயிடுச்சி. சினிமா சினிமா குண்டு சட்டியிலயே குதுர ஓட்டிகினு எதுவும் பண்ணாம, வேலைக்கு போவாமா, குடும்பத்த பாக்காம எல்லாம் போச்சி”

பாய் அப்படி சொன்னதும் தான் கதிரும் நினைத்துப் பார்த்தான். இத்தனை நாட்களாக பாய் தன் குடும்பத்தைப் பற்றி எதுவுமே சொன்னதில்லையே என்று. அவருக்கு ஒரு குடும்பம் இருக்குமென்றே அவன் யோசித்துப் பார்த்ததில்லை.

“இன்னாச்சி பாய்”

“என் பொண்டாட்டி புள்ளய இட்டுகினு போயிட்ட”

“அட இதுக்கா ஃபீல் பண்றீங்க, போயி பேசி கூட்டிகினு வாங்க”

“அவ ரெண்டு வருஷருத்துக்கு முன்னாடியே போயிட்டா, அப்பப்ப போயி கூப்டு பாப்பேன். வரவேயில்ல. என் புள்ளய மட்டும் எப்பவாது பாப்பேன். ஜமாத்துல பேசி முடிச்சி வெச்சிட்டாங்க. காலையில் ஜாமாத்துக்கு போயிட்டு தான் வரேன். இனிமே எனக்கு அவங்களுக்கு எந்த ஒட்டும் இல்லன்னு சொல்லிட்டாங்க” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த சிகரெட்டின் கடைசி இழுப்பை ஆழமாக இழுத்துவிட்டு கீழே போட்டார். எங்கே அவர் அழுதுவிடுவாறோ என்று கதிர் நினைத்தான். அவர் கண்கள் கலங்கியிருந்தது. ஆனால், அவர் வாய்விட்டு அழவில்லை. நிறைய அழுதுவிட்டு இனி ஒன்றுமேயில்லை என்ற நிலைக்கு ஒருவேளை அவர் வந்திருக்கலாம்.

கதிர் கையிலிருந்த கைப்பேசி அடித்தது. எடுத்துப்பார்த்தான். லாட்ஜ்காரன் தான் கூப்பிட்டான். வேண்டாவெறுப்பாக எடுத்து “ஹலோ” என்றான்.

“எங்கப்பா சுத்தின்னு இருக்க”

“வந்துன்னு இருக்கேன் வைங்க” என்று கடுப்பாக சொல்லிவிட்டு போனை அனைத்தான்.

“அந்தாளு கத்தறன், போலாமா”

“ம்”

வேறு எதாவது பேச்சை மாற்றலாம் என்று கதிர் பாயிடம், “சட்டப் புதுசா இருக்குது”

“கடைசியா என் புள்ளைக்கு துணி எடுக்கும்போது, அங்க தொங்கின்னு இருந்த சட்டய காமிச்சி இது உனுக்கு நல்லா இருக்கும்னு சொல்லி அதுவே எடுத்து குடுத்துச்சி. இதோ இந்த பூவுல ஏதோ ஒன்னு வழியுதே, அதான் என் அதிர்ஷ்டம். இந்த சட்டய போட்டுன்னு போ நீ எல்லாம் நல்லாதா நடக்கும்னு சொல்லிச்சி”

அதன்பிறகு அவன் எதுவும் பேசவில்லை.