எங்கள் ஊருக்கு வந்த ஒரு அரசியல்வாதி பற்றிய கதையொன்று உண்டு.
அதை எனக்கு சொன்னது ஒரு கிழட்டு வண்ணகிளி… அது எனக்கு சொன்னது போல சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு என்னால் உங்களுக்கு சொல்ல முடியுமென்றே நினைக்கிறேன்.

ஒரு அலை போல நம் ஊருக்கு புதிதாக வரப்போகிற தலைவர், மந்திர வித்தைகள் தெரிந்தவர். இந்த பூமியையே தட்டையாக மாற்றிவிடக்கூடிய சக்தி அவருக்கு உள்ளது. பாருங்கள் பூமியில் யாருக்கும் இல்லாதளவு அவரது விலா எலும்புகள் பக்கத்துக்கு 28 என்று மொத்தம் 56 எலும்புகளுடன் இருப்பது எதற்கு? பத்தாண்டுகளுக்கு பிறகு அவருக்கு மட்டுமல்ல நமக்கும் விமானம் தேவையில்லை.அவருக்கு இறக்கை முளைக்கப்போகிறது. பிறகு நமக்கும் முளைக்க வைப்பார்…… உலகில் எந்த பணமும் நம் நாட்டு பணத்துக்கு இணையாக இருக்காது… உலகத்தின் அத்தனை விமானங்களும் நம் நாட்டை நோக்கியே பறக்கும். உலகமே நம் பின்னால் அணி வகுக்கும். எல்லோருக்கும் முன்னே நாம் செல்வோம். இன்னும் பலவிதமான மயங்கும் வார்த்தைகளை தலைவரின் பேரால் நல்ல மினுமினுப்பும் சிகப்பழகும் கொண்ட ஆண்களும், பெண்களும் வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்… செக்கச் சிவந்தவர்கள்  சொல்வதெல்லாம் உண்மை என்கிற நோய் பரவிய ஊரில் அரசியல் உண்மைகளை புரிந்துக்கொள்ளும் அறிவுள்ள வண்ணக்கிளிகள் எச்சரிக்கை குரல்களெழுப்பி வாக்குறுதிகளால் மயங்கும் மக்களுக்கு மேலாக பறந்துக்கொண்டிருந்தன….சிவப்பா இருக்கிறவனும் பொய் சொல்லுவான், அவன் தான் அதிகமான உண்மையான லாபகரமான பொய்களை சொல்கிறான்னு இரண்டாயிரம் வருடமாக. அதற்கு அவன் எப்படியெல்லாம் பேசலாமென பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான் என்று வண்ணக்கிளிகள் கத்தித்  திரிந்து கொண்டிருந்ததால் நெடுங்காலமாக பச்சைகிளிகள் சொன்னதை நம்பிய மக்கள் வண்ணக்கிளிகளை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்…

மினுமினுப்பான செக்கச்சிவந்தவர்கள் தங்கள் குரல்களை ஒரே குரலாக்கி வைக்க அதை தன் குரலில் பேசும் கறுப்பு மனிதரை தயாரித்து மக்கள் மத்தியில் அனுப்பும் வேலைகளும் நடந்துக்கொண்டிருந்தது. செக்கச் சிவந்தவர்கள் மாய மந்திரங்களை உற்பத்தி பண்ணும் ஆலையில் அவர்கள் அரசியல் மனிதர்களையும் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். மகாத்மாக்களை தயாரிக்கும் பணிகளும் அங்கு நடக்கிறது. அ.அ மாடலில் அவர்கள் தயாரித்து மக்களிடம் அனுப்பிய மகாத்மா தோல்வியுற்று அவர்களிடமே திரும்பிவிட்டார்.

அவர்கள் உள்ளூர் மக்களின் கறுப்பு நிறத்தில் தயாரித்து அனுப்பிய அரசில் மனிதர் மக்களை மயக்கும்படி பொய் பேசுவதில் செக்கச்சிவந்தவர்களையே மிஞ்சிவிடுவார் போல . அரசியல் தொழிற்சாலையின் தயாரிப்புகளில் மிக நவீனமான தயாரிப்பு இந்த கறுப்பு மனிதர். மக்களிடம் இப்படியாக பேச தொடங்கிவிட்டார். புதிய தலைவர் அதிகாரத்துக்கு வந்த சில மாதங்களில் நிலாவுக்கு போக்குவரத்து தொடங்கப்போகிறார், பிறகு கடவுள்களை வைத்து மாநாடு நடத்துவார்… அமெரிக்க அதிபரை சலாம் போட வைப்பார். உங்கள் ஒவ்வொருவருக்கும் 15 ஏக்கர் நிலம் தரப்போகிறார் என்று கறுப்பு மனிதன் கூச்சமில்லாமல் உரக்க சொல்லிக்கொண்டிருந்தான். இன் பருவத்தில் பெய்யும் மழைக்கு பதில் நெல்லும், கோதுமையும் மூட்டை மூட்டையாக் கொட்டும், பசுக்கள் வீடு தேடி வந்து பாலை அவரவர் வாயிலேயே பொழிந்துவிட்டு போகும் என்று சொல்ல நினைத்து ஏனோ தன் பேச்சை மாற்றி வெளியூர்களில் உள்ள நதிகளெல்லாம் நம் ஊரை நோக்கி நுரைத்துக்கொண்டு ஓடிவரும், இதெல்லாம் அறிவியல் முறையில் நிகழ்த்தபடும். இதெல்லாம் கண்கட்டி வித்தையல்ல. வேதகாலத்திலே நடத்தி காட்டப்பட்ட விஞ்ஞானம் என்பதாக ஆசை வார்த்தைகளை கட்டிவிட்டார்கள். மக்கள் இது மாதிரி கதைகளுக்கு பழக்கப்பட்டிருதாதால் கதை கேட்ட நிமிடத்திலேயே சிரித்து விட்டுப்போனார்கள்.

புதிய தலைவரின் பேரில் பல்லாயிரக்கணக்கான கொலை வழக்குகள் இருப்பதாக முணுமுணுப்புகள் இருக்க, அதை சாமர்த்தியமாக தனது வலுவான 56 விலா எலும்புள்ள மார்பால் மூடி மறைக்கும் சக்தி அவரிடம் இருந்தது உண்மைதான். ஒரே காரணம் ஞாபக மறதி நோயால் மக்கள் தீவிரமாக தாக்கப்பட்டிருந்ததால், அதைப் பற்றி நினைக்கவோ அவரை சந்தேகப்படவோயில்லை…. அவர்கள் தங்களின் புதிய தலைவருக்காக காத்திருந்தார்கள்.

மக்கள் அவர் வரவுக்காக காத்திருக்குமளவு நிலைமைகள் உருவாக்கப்பட்டிருந்த்து. நாட்டை சுற்றியுள்ள கடற்கரைகளில் அவரது அலை வீசிக்கொண்டிருக்கிறது என்று காட்டு கத்தலாய் கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றும் அரசியல் மனிதர்களை மட்டுமல்ல மகாத்மாக்கள், மற்றும் விளம்பர அலைகளையும் உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். உருவாக்கிய அலையில் அவரும் வந்து சேர்ந்தார். அவருக்காக எதிர் பார்த்து காத்திருந்த வேளையில் நாட்டில் வேலையில்லா வறுமையின் காரணமாக பல்லாயிரம் குழந்தைகள் பட்டினியோடு இரவில் தூங்குகின்றன, சில குழந்தைகள் சத்து குறைபாட்டால் செத்து விழுகின்றன என்கிற கணக்குகள் வந்துக்கொண்டிருந்தது. அதே நேரம் பெரும் பகுதி மக்கள் தங்கள் குறிகளை மறைத்துக்கொள்ளுமளவு மட்டுமே கந்தலை உடுத்தியிருக்கிறார்கள். அவர்களது பலரின் வயிறு ஒட்டியுலர்ந்து பசியோடு பலவிதமான எதிர்பார்ப்புகளுடனிருந்தது. ஆனால் பத்து லட்சம் ரூபாய் தாள்களையே ஆடையாக உடுத்தி தலைவர் வந்தது மக்களுக்கு பீதியை உண்டாக்கியிருந்தது.

அவர் தரப்போகும் பதினைந்து ஏக்கர் நிலம் பற்றி மக்கள் கனவு கண்டுக்கொண்டிருந்தார்கள். அதில் விளையும் கதிர்மணிகளைப் பற்றி மக்கள் கனவு காண தொடங்கியதால், கடந்தகாலங்களை மறந்துவிடுகிற மக்கள் புதிய விளம்பரங்களில் மயங்கிக் கொண்டிருந்தார்கள்.

மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த தலைவர், வந்த நாளிலே முதல் மந்திர குலிகையை மக்கள் மீது ஏவினார். மக்களிடம் உள்ள எல்லா காகித பணங்களும் காணாமல் போய் புதிய வண்ணத்திலாகட்டுமென்று பெருங்கத்தலுடன் அறிவிக்க ஒரேயிரவில் மக்களிடமிருந்த காகிதப்பணங்கள் மதிப்பிழந்து போயின, அரையாடையும், வற்றியுலர்ந்த வயிறும் கொண்ட மக்களின் மீதான தாக்குதல் என்பது ஆரம்பத்தில் மக்களுக்கு புரியவில்லை.

பாருங்கள் ..பாருங்கள்..பதுக்கல்காரர்களின் கறுப்பு பணத்தை ஒரே இரவில் ஒன்றுமில்லாமலாக்கிவிட்டார்…என்ற வறண்ட கூப்பாடுகள் செக்கச்சிவந்த எடுப்பான தோற்றம் கொண்டவர்களிடமிருந்து கூச்சலாக எழுந்தன.

அந்த இரவில் பெரும் பண முதலைகள் தங்கள் மதிப்பிழந்த கறுப்பு பணத்தை லாரியில் ஏற்றி போய் வங்கியின் புழக்கடையில் கள்ள தனமாக நிறுத்தி மிட்டாய் நிற அரை வெள்ளை பணமாக மாற்றி வந்ததை மக்கள் கண்ணெதிரே பார்த்தார்கள். ஒன்றிரண்டு காகித பணத்தை மாற்றிக்கொள்ள வரிசையில் நின்ற சாதரண மக்களில் சிலர் பசியிலும், களைப்பிலும் மண்ணில் விழுந்து செத்தார்கள். சந்துக்கு சந்து மரண ஓலமிட்டழும் ஒப்பாரிகள் கேட்டன..

அதை சரிகட்ட மக்களின் கவனத்தை திசை திருப்ப செக்கச்சிவந்த மூஞ்சிகள் கலர் நோட்டுகளை பற்றி கலர் கலரான கதைகளை தயாரித்து மக்கள் மீது வீசிக்கொண்டிருந்தார்கள். அந்த கதையில் சில……
ஒரு நோட்டை உருவி நீங்கள் தூர எரிந்துவிட்டுப் போனாலும் அது உங்கள் வீட்டை தேடி வந்துவிடும், ஒவ்வொரு நோட்டையும் வானத்தில் உள்ள நவீனக்கருவிகள் கண்காணிக்கின்றன. இந்த நோட்டை உலகத்தின் எந்த காமிராவாலும் படம்பிடிக்க முடியாது. அப்படியே எடுத்தாலும் அதில் உள்ள தொழில் நுட்பம் அலாரமடித்து தலைவரின் 56 விலா எலும்புகளுக்கும் செய்தி அனுப்பிவிடும்,. அந்த கலர் நோட்டுகளை பதுக்க முடியாது. பதுக்கிய அரை மணி நேரத்தில் நோட்டு கட்டுகள் அய்யோ அம்மா என்று கத்தி ஊரைக்கூட்டிவிடும். அதனுள் அதி நவீன சிப்புகள் இருக்கிறது… இன்னும் பல இப்படியான செய்திகள் வந்துக்கொண்டிருந்ததால் மக்கள் அந்த நோட்டை விளக்குகளுக்கடியில் வைத்து சிப்புகள் இருக்கிதாவென பலவிதமாக ஆராய்ச்சி செய்ததில்  ரூபாய்கள் எரிந்து சாம்பல் மட்டுமே மிஞ்சின. சில நோட்டுகள் சாயம் போவது கண்டு பதறிய நாளில்…….தலைநகரிலேயே மிட்டாய் கலர் போலி நோட்டுகள், கட்டு கட்டாக பிடி பட..  தலைவரின் கலர் நோட்டு சாயம் வெளுக்க தொடங்கியது.

உருவாக்கப்பட்ட அலையில் அடித்துவரப்பட்ட தலைவர் தங்களை ஏமாற்றிவிட்டதாக மக்கள் புலம்பத் தொடங்க அவர்களை சரிகட்டும் விதமாக மிட்டாய் கலர் நோட்டுகளை விலங்கின் மூத்திரத்தில் முக்கியெடுத்தால் நோட்டுகள் உடனே கர்பமடைந்து குட்டிப்போடும் என்று மக்களிடம் சொல்லச்சொல்லி செக்ச்சிவந்த மூஞ்சிகளின் குழு அவரிடம் ஆலோசனை சொன்ன போது அவர் சிரித்துவிட்டார்….பதிலுக்கு அவர் இப்படி சொன்னார் “சனங்க இதை முழு மனசோட நம்புறளவு இன்னமும் அவங்கள நாம தயார்பண்ணல….. முதல்ல அவங்கள விலங்கின் மூத்திரத்தை குடிக்க சொல்லுவோம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். 365 வகையில் அதை பயன்படுத்தி லாபமடையலாம் என்று அவர்களை தயார் செய்யலாம் என்று சொல்லி மறுத்துவிட்டாராம். அதே நாளில் கலர்  நோட்டுகளால் ஆன பெரும் பணத்தை கடனாக வாங்கிக் கொண்டு குறிப்பிட தகுந்த இளம் அழகிகளுடன் குறுந்தாடிக்காரர் சாராய வியாபாரி கடல் தாண்டி ஓடிவிட்டார் என்று செய்திகள் வந்தபடியிருக்க இன்னும் கடன் வாங்கிய பலர் ஏமாற்றும் நோக்குடன் ஊரை விட்டு ஓடுபவர்கள் பற்றிய செய்திகள் வந்துக்கொண்டிருந்தது. தலைவரிடம் அதை பற்றி யாரும் கேட்க வாய்ப்பேயில்லை. அவர் சகல வசதிகளுடன் கூடிய புட்பக விமானத்திலேறி பூவுலகெங்கும் சுற்றிக்கொண்டிருக்க புறப்பட்டுவிட்டார். நேற்று கூட தலைவரின் அபிமானம் பெற்ற ஒரு கோட்டீஸ்வரப்  புன்னகை சாமியாரும் தன் பேரழகுப்  படை பரிவாரங்களுடன் உலகின் எதோ ஒரு தீவுக்கு தப்பி ஓடிவிட்டாராம் …..அவரோடு ஓடிப்  போன ஒருத்தியின் அப்பாவும் சகோதரியும் தொலைகாட்சிகளுக்கு முன் வந்து கதறி அழுதுக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதையெல்லாம் கண்டு அதிர்ச்சியடையவில்லை. தப்பியோடிய சாமியார் தனிநாடு ஒன்றை அமைத்திருப்பதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டார்….. தனி நாடு, தனி படை, தனி பணம், ஐ.நா.வில் உறுப்பினராக விண்ணப்பித்திருக்கிறாராம்…. மக்களும் அதை பற்றியெல்லாம் ஒன்றும் பெரிதாக  அலட்டிக்கொள்ளவில்லை. அதற்கு ஒரே காரணம் அது ஒரு பரபரப்பான செய்தி அவ்வளவுதான். அதோடு இந்த மண்ணின், பண்பாடு பாரம்பரியத்தின் முகச்சுளிப்புள்ள வாடைகள் அவர்களது ஆழ் மனதுக்கு தெரியுமென்பதால் இருக்கலாம்.

இத்தனை கலர் கூத்துகளையும் பார்த்துக்கொண்டிருக்கும் அரசியல் புரிந்த வண்ணகிளிகள் மக்களுக்கு உண்மையை சொல்ல ஆதாரங்களுடன் புதிய தலைவரின் கையாலாகத தனத்தை அவர் யாருக்கான தலைவர் அவர்கள் அவரை தயாரித்ததன் நோக்கமென்னவென்று உரக்கச் சொல்லிக்கொண்டு பறந்தன…. மக்கள் அவற்றை உற்று கேட்க தொடங்கிய நொடியில் அவர்கள் கவனத்தையும் திசை திருப்பும் திட்டத்துடன் புதிய பரபரப்பான கதைகள் உருவாக்கப்பட்டன. அது இப்படி ஆரம்பித்த்து.

பக்கத்து ஊரிலிருந்து ஒரு லட்சம் பேர் கொடிய ஆயுதங்களோடு கொடிய எண்ணத்துடன் நம் ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். “நம்முடைய சில வீரர்களை அவர்கள் ஊருகத்துக்கே தெரியாத தொழில் நுட்பத்தில் அழித்து ஒழித்துவிட்டார்கள்”
என்று ஒரு நாள் முழுக்க உரக்க ஒலிபெருக்கியின் வழியே தலைவரும் தலைவரின் ஆட்களும் கத்திக்கொண்டிருந்தார்கள். தலைவரிடம் தங்கள் சந்தேகங்களை கேட்கலாம் என்றால் அவரது புட்பக விமானம் தரையிரங்குவதேயில்லை.

அவரது திட்டங்கள் ஒவ்வொன்றுமே மக்களை படாதபாடு படுத்திக்கொண்டிருந்தது. அவரது திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஊரிலேயே மிக குறைவான ஆட்கள் மட்டுமே. அவர்கள் பெரும்பாலும் கொழுத்து செக்கச்சிவந்து மிக எடுப்பாக இருப்பவர்களே… மற்ற மக்கள் அவதி பட்டுக்கொண்டிருந்த நேரம் ஊரை மேம்படுத்த மக்களை சமாதானப்படுத்த, வரவு செலவு திட்டங்களை அறிவிக்கும் நாள் வந்தது. எதேனும் திட்டங்களை அறிவிப்பார்கள் என்ற நப்பாசை மக்களுக்கு இருந்தது. அந்த நாள் வந்தது..இதில் எதாவது நடக்கும் என்று மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்…அந்த திட்டங்களை அறிவிக்கும் மிகவும் வசீகரமான தோற்றம் உள்ள கணக்கு மந்திரங்கள் தெரிந்த அந்த செக்கச்சிவந்த சீமாட்டி திருமதி காலையிலேயே தன் சகாக்களுக்காக இருட்டுக்கடை தரத்தில் அல்வா கிண்ட ஆரம்பித்துவிட்டார்…… அந்த அல்வாவை வாயில் போட்டால் யாரும் வாய்திறக்கமாட்டார்கள் என்பதால் கிண்டுகிறரோ என்னவோ…. என்கிற முணுமுணுப்புகள் வெளியே கேட்கிறது.
மக்கள் வெகுவாக எதிர்பார்த்த அந்த கணக்கு திட்டங்களின் அறிவிப்பு வந்தது.. அதற்கு முன்பாக ஒரு பெரிய திரை மூடிய பலகையை கொண்டு வந்து வைத்தார்கள். அல்வா வாடை வீசிக்கொண்டிருந்தது. பிறகு செக்கச்சிவந்த அந்த திருமதி  பலகை மீதிருந்த திரையை விலக்க அவரது கைப்பக்குவத்திலான அல்வாவை தின்ற சகாக்கள் கைதட்டி ஆரவாரித்தார்கள். பாவம் அவர்களால் வாயை திறக்க முடியவில்லை…. அந்த பலகையில்  எல்லாவற்றையும் விற்க ஆசைப்படு என்ற வாசகம் எழுதியிருந்தது. அதை தொடர்ந்து தனது திட்டப் பட்டியலை அவர் வாசித்தார். ஊரின் பொது நன்மைக்காக கடந்த காலங்களில் திறந்த பெரிய பெரிய கம்பெனிகளை பணக்கார முதலாளிகளுக்கு விற்றுவிடுவது… பிறகு அங்கு பணியில் உள்ள மக்களை பலவிதமாக ஆசை     வார்த்தைகளால் பணியை விட்டு விலக்கி வீட்டுக்கு அனுப்புவது…. என்று எல்லாமே பழயதை ஊத்தி மூடுவதாக இருந்தது. முன்பிருந்த பூனையைப் போன்ற தலைவர் பேரளவுக்காவது சிலதை செய்துவிட்டுப் போனார். இவர்களோ எல்லாவற்றையும் வழித்து தொப்பை பெருத்தவர்களிடம் திணித்துவிட்டுப் போகிறார்கள்…. .என்பதாக மறதிக்கு பெயர்போன ஏமாந்த மக்களே முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார்கள்…. முணுமுணுப்பு ஆமாம்,வெறும் முணுமுணுப்பு.

இப்படியாக கம்பெனியில் உருவாக்கப்பட்ட அலையில் மிதந்து வந்த அந்த தலைவர்  அம்பலபட்டு வரும் நாளில் அவர் ஊருக்கு தலைவராய் இருக்க லாயக்கற்றவர் என வெளிப்படையாக மக்கள் கத்தத்தொடங்கினர். புலம்பி கத்துகிற மக்களை அடக்க முடியாமல் 56 விலா எலும்புகள் உள்ள தலைவரின் எல்லா வித்தையும் பிசுபிசுத்துப் போனதால் தலைவரும் அவரது ஆலோசகர்களும் இப்போது புதிய அயிட்டம் ஒன்றை அரசியல் தொழிற்சாலையில் கண்டுபிடித்தார்கள். அதை அறிவித்தபோது மக்கள் முன் எப்போதையும் விட மிரண்டுவிட்டார்கள். மக்களை நிறம் பார்த்து தரம் பிரித்து குடியுரிமை வழங்குவது…. பச்சை நிற அன்னியர்களை ஊரைவிட்டு வெளியேற்றினால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும், என்கிற புதிய கண்டுபிடிப்பு அதற்கு இந்த ஊர்காரர்கள் என்று நிருபிப்பவர்கள் மட்டுமே இந்த ஊரில் வாழ முடியும்.சட்டத்தை இயற்றிவிட்டார்கள்

அடப்பாவி ஏற்கனவே ஊரில் கால் வயிறு கஞ்சிக்கு பாடாய் படவேண்டியிருக்கு, இதுல இந்த மண்ணுல வாழ்ந்தா என்ன? வாழலனா என்ன? என்று முணுமுணுத்தாலும் எளிய மக்களை சொந்த மண்ணிலிருந்து அயோக்கியர்கள் விரட்டி நசுக்கப்பார்க்கிறார்கள்.அதற்கெப்படி இடம் கொடுப்பது. அந்த அட்டை ,இந்த அட்டை என எல்லாவற்றையும் ஆதாரமாக நீட்டிய போதும் அவர்கள் எதோ நிறத்தை வைத்து பிரிப்பதாக புரியும் போது தான் அவர்களது பயங்கர தந்திரம் புரிகிறது.

இம் மண்ணுக்குரியவள்தான் என்று ஆதாரம் தந்த மனைவி மூன்று குழந்தைகளுடன் ஒரு பக்கமும், ஆதாரங்கள் ஒத்துப் போகாத கணவன் வேறு பக்கமும் நிறுத்தப்பட்டான் அழுகையும் கம்பையும் ஊரெங்கும் கேட்கிறது…….
அப்பாவின் ஆதாரங்களை தந்தவர்களிடம்,  தாத்தாவின் ஆதாரத்தை கேட்க அவர்களிடம் இல்லாத போது அவர்களும் இந்த ஊரில் இருக்க தகுதியற்றவர்களென ஒதுங்கி நிற்க சொல்கிறார்கள். இப்போது ஊரில் முன் எப்போதும் இல்லாதளவு அவலமான துயர ஓலங்கள் கேட்கிறது. 80% ஆட்கள் ஆதாரமற்றவர்களாக்கப்படும் துயரத்தில் ஒட்டு மொத்த ஊரும் சிக்கும் தூரம் வெகுதூரத்தில் இல்லையென்றானபோது, மக்கள் உறக்கம் கலைந்து பெருங்கோபத்துடன் அலையில் வந்த தலைவரை விதவிதமான வார்த்தைகளால் வசை பாடுகிறார்கள். 100 வயது பாட்டியிலிருந்து பல் முளைக்க தொடங்கும் 3 வயது குழந்தை வரை வீதியிலிறங்கி ராகத்தோடு வசை பாடுகிறார்கள்… மக்கள் அதற்காக வசைபாடும் ஒரு ராகத்தையே கண்டுபிடிக்க, இரவும் பகலும் அந்த ராகம் ஊரையே உலுக்கிக்கொண்டிருக்கிறது.

எப்போதும் போல மக்களுக்கு மேலாக பறக்கும் மூன்று வண்ணங்கொண்ட கிளிகள் -யுத்தத்தின் பேரால் 5 கோடி மக்களை கொன்ற ஒரு பேய், நம்மூர் தலைவரின் மண்டைக்குள் பிடித்து ஆட்டுகிறது என்று திரும்ப திரும்ப கத்திக்கொண்டிருந்தன.

“அறிவு எல்லோருக்கும் தேவையில்லை. சிவப்பாய் மினுமினுக்குகிறவர்களுக்கு மட்டும் அறிவு இருந்தால் போதும். மற்றவர்கள் அடிமையாய் இருந்தால் நாடு செழிக்கும் என்பது செக்க சிவந்தவர்களின் கண்டுபிடிப்பு… அதை மேம்படுத்தவே அவர்கள் திட்டம் போடுகிறார்கள். எளிய தொழிலாளியின் மகள் கனவுகளுடன் படித்து உழைத்து 1176 மார்க் எடுத்து பெரிய பதவிகளுக்கு ஆசைபடுவதை அவர்கள் விரும்பவில்லை” அந்த மூன்று வண்ண அரசியல் கிளிகள் வெளிப்படையாக தொண்டை கிழிய ஓயாமல் கத்திக்கொண்டிருந்தன.

அப்படி கத்தும் கிளிகளை தேசத் துரோக கிளிகள் என்று பட்டம் சூட்டியிருந்தார்கள். இவ்வளவு நடக்கிறது,தலைவர் உள்ளூரிலேயே இருப்பதில்லை…வெளியூர் பயணங்களிலேயே இருக்கிறார். அதற்கு கமுக்கமான பல காரணங்கள் இருப்பதாக மக்கள் பேசிக்கொண்ட ஒருநாளில் தலைவர் தன் சொந்த அம்மாவை சந்திக்கப்போனார்.
அம்மா கேட்டார் “ ஏன்டா ஏழை சனங்களுக்கு நீ எதாவது நல்லது செய்வன்னு தான உன்னை தேர்ந்தெடுத்தாங்க? நீ இப்படி ஊர் சுற்றிக்கொண்டிருந்தால் எப்படி…ம் உன்னுடைய சின்ன தலைவர்களின் அட்டகாசங்களைப் பற்றி உனக்கு எதுவுமே தெரியமாட்டன்னுதுப்பாரு. நீயும் இந்த ஏழைத் தாயின் மகன் தானே! உனக்குப் புரியலையா? ஊரே உன்னை சபிக்குது. உனக்கு புரியலையா?  பஸ்ஸடேண்டுல நீ பானிப்பூரி விக்கும் போது கூட நான் சந்தோசமா இருந்தேனடா….அம்மாவின் கண்கள் லேசாக கலங்கியிருந்தது.

அம்மாவின் கண்களை துடைத்துவிட்டு அவர் சொன்னார்
பிக்கிஸ்லிக்கிஸ் பிலாக்கிஸ்..பிலாக்கிஸ் பிக்னோவ கினோஸ்யாயலிக்கி. அம்மா புரியாமல் மகனைப்பார்த்தார்.
இது மொழியல்ல வெறும் சத்தம்…. சும்மா என்பதுபோல பாவனை காட்டா நினைத்து சட்டென தன் எண்ணத்தை மார்க்கொண்டு மந்திரத்தை மொழிபெயர்த்து சொன்னார்.
“மக்கள் கர்மாவின் பலனை அனுபவிக்கிறார்கள்… நான் என் பலனை அனுபவிக்கிறேன்…அவர்கள் அவர்களது பலனை அனுபவிக்கிறார்கள். இதுல வருத்தப்பட என்ன இருக்கு” என்று மொழி பெயர்த்தவர் “பாரு அம்மா நான் பானிப்பூரி விற்றுக்கொண்டிருந்த போது வானத்தை பார்ப்பேன். தலைக்கு மேலே புஷ்பகவிமானங்கள் பறந்துக்கொண்டிருக்கும். அதில் பூந்தேவர்களான பணக்காரர்களே எப்போதும் பறந்துக்கொண்டிருப்பார்கள்.…இந்த ஏழை தாயின் மகனுக்கு எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று ஏங்கினேன் ..இப்போது கிடைத்திருக்கிறது. அதனால் தான் நான் அதை விட்டு கீழே இறங்குவதேயில்லை. சரிதானே”

“என்னமோடா நீ உன் பொஞ்சாதி நியாயத்தை சொன்னதையே கேட்காதவன் அவள தொரத்தி விட்டுட்ட ..நான் சொல்றதையா கேட்கப்போற…சனங்க வயித்தெறிச்சல கொட்டிக்காத ஆமா சொல்லிட்டன்” கண்ணீர்விட்டபடியே அம்மா வழியனுப்ப

சந்திப்பு முடிந்து வாசலுக்கு வந்தவர் அங்கு வேடிக்கை பார்ப்பவர்களுக்கு “நான் ஏழை தாயின் மகன்” என்று உரக்க கத்தினார். அவரது ஒலிபெருக்கிகளும் அதையே ஊர்முழுக்க கத்தி கூப்பாடு போட்டன.

ஆனால் வண்ணக்கிளிகள், “அது ஏமாற்று வார்த்தை” எதையும் நம்புகிறவர்களே இதையும் நம்பாதீர்கள் என்று உரக்க கத்திக்கொண்டு ஊர் முழுக்கப் பறந்தன,
“இந்த தலைவர் ஊரிலுள்ள 100% மக்களுக்கான தயாரிப்பில்லை. செக்கச்சிவந்த எடுப்பான 10% மக்களின் நலனுக்காக வந்தவர். ஒட்டு மொத்த ஊரையும் 3 பேருக்கு விற்றுவிடும் ரகசிய திட்டத்துடன் அனுப்பப்பட்டிருக்கிறார். நீங்களே பாருங்கள் இவரது திட்டங்களை ஆதரிப்பவர்கள் எப்படி பட்டவர்களென்று ? வண்ணக்கிளிகள் பல கேள்விகளை எழுப்பியபடி…மக்களுக்கிடையே ஓயாமல் கத்தித் திரிகின்றன.

மக்கள் வண்ணக்கிளிகளின் குரல்களை அவ்வளவாக பெரிதுபடுத்தவில்லை பகட்டான கார்களில் கறுப்புக்கண்ணாடியணிந்து வந்திறங்கும் பொய்யும் பகட்டும் மினுமினுப்பும் அவர்களை மயக்குகிறது. செக்கச்சிவந்த எடுப்பான ஆணும் பெண்ணும் சொல்வதை நம்புகிற நோயுடன், மறதி நோயும் மக்களை அரித்து தின்றுக்கொண்டிருக்கிறது.

இப்போது ஊருக்குள் வந்த செக்கச்சிவந்தவர்களால் அனுப்பப்பட்ட ஒருத்தி சொன்னாள். “நம் தலைவர் நமது நாட்டை வல்லரசாக்க கனவு காண்கிறார். நிலாவிலும், வியாழன், செவ்வாயிலும் முப்பது முக்கோடி கோள்களிலும் தம் ஆதிக்கத்தை நாட்டி நமக்கு தலைக்கு 100 ஏக்கர் நிலம் பெற்று தர போராடுகிறார். அதற்காக உளவு பார்க்க ரவியான் என்ற கருவியை அனுப்பியிருக்கிறார்…”என்று அவள் முடிப்பதற்குள் அவள் தலைக்கு மேலே பறந்த மூன்று கிளிகள் மலச்சாக்கடையில் மூழ்கி மூன்று பேர் இறந்துவிட்டார்கள் என்று கத்திக்கொண்டு பறக்கிறது. அதை கேட்டதாலோ என்னவோ மக்கள் “ஏம்மா புளுகுனதெல்லாம் போதாதா ? அந்த மிசினு எங்க இருக்குதுன்னே தெரிலன்றாங்க இவளின்னா கதையளக்கறா….என்று தங்களுக்குள் பேசிக்கொள்ள “நான் வெள்ளையாகவும் ,உயரமாகவும், எடுப்பாகவும் ஓவியம் போலருக்கிறேன். நான் பொய் சொல்லமாட்டேன் என்று உங்களுக்கு தெரியாதா?” இன்னமும் நம்புகிற மக்கள் வாயைப்பிளந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவளை கண்ணெதிரே பார்பதையே பெரும் பேறாக கருதி ஒருவன் கன்னத்திலே போட்டுக்கொண்டான். ஒருத்தி எடுப்பானவளின் கால் மண்ணை எடுத்து முந்தாணையில் முடிந்துக்கொண்டாள். உண்மை புரிந்த ஒரு சிலரே அவளை சபித்துக்கொண்டிருந்தார்கள்.

மக்களின் முணுமுணுப்பு அதிகமான போது…அதை சமாளிப்பதற்காகவே செக்கச் சிவந்த மூஞ்சிகளால் அழைத்துவரப்பட்ட குட்டையான கறுப்பு பெண் காற்றில் அலையும் தன் சுருட்டை மயிரை பின் தள்ளியபடி “ஆமாம் உங்களுக்கு தெரியாதா வெள்ளையாய் இருப்பவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று” தன்னையாவது இந்த மக்கள் நம்புகிறார்களா இல்லையாவென மக்களை கூர்ந்துப் பார்த்தபடி கேட்க……

“உண்மை உண்மையென்று சொல்கிறார்களே! அந்த உண்மையை இதுவரைக்கும் இவர்கள் சொல்லவேயில்லையே என்று கிளிகள் வானிலிருந்து உரக்க கத்துவது கறுப்பு பெண்ணுக்கு கேட்கிறது. அதே நேரம் நம்மில் ஒருத்தி சொல்கிறாள் என்றால் உண்மையிருக்குமென மக்கள் முன்பு போல இப்போது தலையாட்டி கைதட்டி கொண்டிருக்காமல் அவர்களுக்குள் ஏன் கமுக்கமாக குசுகுசுத்துக்கொள்கிறார்கள்…? கறுப்பு நிறத்தவளுக்கு குழப்பமாக இருக்க ……ஆமாம் நம் தலைக்கு மேலே கத்திக்கொண்டிருக்கும் இந்த வண்ணக்கிளிகள் சனங்களை குழப்பிவிடுகின்றன. அவள் கண்டுபிடித்ததை செக்கச்சிவந்தவளிடம் சொல்லும் நேரத்தில் ஏராளமான வண்ணக்கிளிகள் அங்கே பறக்கத்தொடங்கின…. செக்கச்சிவந்தவள் குறிபார்த்து சுடும் கொலைகாரர்களிடம் சொல்கிறாள்…. அதற்காகவே காத்திருந்த கொலைகாரர்கள் ஆயுத்ததை கிளிகளுக்கு குறிவைத்தபடி காத்திருந்தார்கள்.

வானத்திலிருந்து கிளிகள் ஒரே குரலில் “பாத்திங்களா வெள்ளையா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்கன்னு கறுப்பாயிருக்கிற ஒருத்திய சொல்ல வச்சிட்டாங்க.. எச்சரிக்கை! எச்சரிக்கை! என்று மீண்டும் மீண்டும் கத்தின. அப்போது கூட்டத்தைப்பார்த்து கறுப்பு பெண் சொன்னாள் “ பாருங்கள் அந்த கிளிகள் சாதாரண கிளிகளல்ல. நம் அப்பாவி கிளிகளுடன் சந்தேகத்துக்குறிய பயங்கர அன்னிய கிளிகளும் கலந்துவிட்டன. ஆபத்து..ஆபத்து என்று கத்த.. சிவப்பு தலையும், கறுப்பு நெஞ்சும் நீலச்சிறகுகளும் கொண்ட கிளிகள் ஒரே குரலில்
“உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்லுவோம்.உங்கள் கைகளை வைத்தே உங்கள் கண்களை குத்தி குருடாக்குகிற இந்த செக்கச்சிவந்த எடுப்பான ஆட்களை பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இல்லாமல் போனால் உங்கள் கதி அய்யோ பாவம்” என்று ஓங்கி குரலெழுப்பிய கணத்தில் செக்கச்சிவந்தவளின் கையாட்கள் அந்த கிளிகளை நோக்கி சுட்டார்கள். பதிமூன்று கிளிகள் குண்டு துளைத்து மண்ணிலே விழுந்து துடித்து மாண்டன. வேறு சில கிளிகள் குண்டு துளைத்து மண்ணில் துடித்துக்கொண்டிருந்தன.
மக்களுக்கு இப்போது தான் கொஞ்சம் புரிகிறது.
நமக்கு அலையில் அடித்துவரும் தலைவர்கள் தேவையில்லை..அரசியல் அறிவுள்ள அரசியல்வாதிகள் தான் தேவை.அவர்கள் வானத்திலிருந்து வரப்போவதில்லை. உங்களில் தான் இருக்கிறார்களென்று உரக்க கத்திக்கொண்டு மக்களுக்கு மேலேயே சுற்றி சுற்றி சிறகடித்தபடி மூவண்ணக்கிளிகள் பறந்துக்கொண்டிருந்தன.
கரன் கார்க்கி