இலக்கியத்தில் மேலாண்மை (2015), இலக்கியத்தில் விருந்தோம்பல் (2020) ஆகிய வெ.இறையன்புவின் இரண்டு நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரை
-
இலக்கியத்தில் மேலாண்மை
மானுட வாழ்வின் மீதான எல்லையற்ற நேசத்தோடும், பட்டுப் போகாத புத்திளம் நம்பிக்கையோடும், ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே’ என்ற இந்திய மரபின் வேர்ப் பிடிப்போடும் ‘பயன்பாட்டுப் படைப்பாக்கம்’ செய்து கொண்டிருக்கிறார் வெ.இறையன்பு. அதன் வெளிப்பாடே ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற நூலாகவும் விரிந்துள்ளது. வெ.இறையன்புவின் ‘Magnum Opus’ எனக் கூறத்தக்க அளவில், அறுநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில், நூற்றைந்து உட்தலைப்புகளுடன், நூறுக்கும் மேலான வரலாறு மற்றும் உண்மை வாழ்க்கைச் சம்பவங்களோடும், முந்நூறுக்கும் அதிகமான சுவையான கதைகளோடும், ஐம்பதைத் தாண்டிய பழமொழிகளோடும், ஏறக்குறைய இருநூறு தமிழ் மற்றும் ஆங்கில நூற்துணையோடும், அறிவையும் ஆர்வத்தையும் ஒருங்கே கிளரும் ‘ஒரு நடைமுறை வாழ்வியல் பாட நூலாக’ இந்நூல் விரிந்துள்ளது. வியாசரும் வான்மீகியும் ஹோமரும் ஷேக்ஸ்பியரும் லாவோவும் கன்பூசியசும் வள்ளுவரும் கம்பரும் கௌடில்யரும் மாக்கியவல்லியும் புத்தரும் மகாவீரரும் சாக்ரடிசும் பாஷோவும் இயேசுவும் நபிகளும் ஐசக் நியூட்டனும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் காரல் மார்க்சும் சிக்மண்ட் ஃப்ராய்டும் தாகூரும் பாரதியும் டால்ஸ்டாயும் ஹெமிங்வேயும் ஷெல்லியும் இக்பாலும் மாப்பசானும் புதுமைப்பித்தனும் மில்டனும் கிப்ரானும் ஜென் ஞானிகளும் சங்கச் சான்றோரும் என எட்டுத் திக்கின் அறிவுச் செல்வம் அனைத்தையும் இந்நூல் மூலமாகத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் வெ.இறையன்பு. இருபதுக்கும் மேற்பட்ட உலகக் கதைகளின் பெருவெளியாக இந்நூல் விரிந்துள்ளது. தொன்மையான இந்திய, சீன, அராபிய மற்றும் கிரேக்கச் சிந்தனை மரபுகள், இன்றைய ஐரோப்பிய விஞ்ஞானத்திற்கும் நிர்வாகவியலுக்கும் அமைத்துத் தந்துள்ள அடிக்கட்டுமானங்களைப் பாடுபட்டுத் தேடிப் படித்துச் செறிவாக வெ.இறையன்பு தொகுத்தளித்துள்ளார். அவரின் ‘நுண்மாண் நுழைபுலம்’ இந்நூலில் துலங்குவதை இக்கட்டுரை வெளிச்சமிட்டுள்ளது. இலக்கியத்தைப் பயன்கொள்ளாத மேலாண்மைக்குச் சமகாலத்தில் எந்த ஒரு மதிப்புமில்லை என்பதையும், பல வகைகளில் பிரிந்தும் சிதறுண்டும் கிடக்கும் மக்களுக்குள் ஒற்றுமையையும் நம்பிக்கையையும் வலுப்படுத்த மேலாண்மைக்கு மிச்சமிருக்கும் ஒரே வழிகாட்டி இலக்கியம்தான் என்பதையும், இந்நூலில் பல சுட்டிக்காட்டல்கள் மூலம் நிறுவுகிறார் வெ.இறையன்பு, ‘ஓரிரு நூற்பழக்கமுள்ள வெகுஜன வாசகனும்’ படித்துப் புரிந்துகொண்டு ‘வெளித்தள்ளாமல் உள்ளிழுத்து மெல்ல அசைபோடும் பழகுமொழியில் (Not Exclusive but inclusive Language Style)’ வெ.இறையன்புவின் கருத்துகள், எல்லாருக்கும் பெய்யும் மழையாய், இந்நூலில் பெருக்கெடுத்துள்ளன என்றும், பாடநூலாகும் மேன்மை இந்நூலுக்குண்டு என்றும் இக்கட்டுரையில் முடிவுரைக்கப்பட்டுள்ளது.
மனிதமுகத்துடன் கூடியவையாகப் புனைந்துரைக்கப்படும் தாராளவாதக் கொள்கை(ளை)கள், அங்கு இங்கு என்றில்லாமல் உலகம் எங்கும் சூறாவளியாய்ச் சுற்றிச் சுழன்றுவரும் சுதந்திரச் சந்தைகளின் நுகர்வுக் காலம் (consumer age) இது. இந்தப் போட்டிச் சந்தைகளின் பெருக்கத்தால், ‘உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டும்’ மானுட உணர்வுகளும், ‘சிறியன சிறிதும் சிந்தியாது’ மனிதர் ‘யாவரும் இன்புற்றிருக்கக் கருதும்’ உயர்தனி விழுமியங்களும் விரைவாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன அல்லது முற்றிலுமாகக் காலாவதியாகிவிட்டன! குழப்பங்களும் சிதைவுகளும் கோலோச்சும் இந்தத் தருணத்தில், மானுட வாழ்வின் மீதான எல்லையற்ற நேசத்தோடும், பட்டுப் போகாத புத்திளம் நம்பிக்கையோடும், ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற் பயனே’ என்ற இந்திய மரபின் வேர்ப் பிடிப்போடும் ‘பயன்பாட்டுப் படைப்பாக்கம்’ செய்து கொண்டிருக்கிறார் வெ.இறையன்பு. வாழ்க்கை என்பது எவ்வாறு வெறும் ஒரு பொழுதுபோக்காக மட்டும் கடந்து சென்றுவிடக் கூடியதில்லையோ, அவ்வாறே தான் இலக்கியமும். ‘இருத்தல்’ சாரத்துக்கு முந்தையதாய் இருக்கலாம்; ஆனால் வெறும் மனித இருத்தலைக் காட்டிலும் ‘விழுமியங்கள் விழையும் சாரம்’ மேலும்கூடச் சிறப்புடையதாகும். இப்படிப்பட்ட ஒரு விரிந்தகன்ற பார்வையோடு எழுத வருகிறவர்கள், இன்று உலகம் முழுவதிலுமே மிகச் சிலர்தான். இருட்டையும் கசப்பையும் எவ்வளவுதான் பின்னிப் பின்னி நுண்மையாகப் பேசினாலும் எழுதினாலும், அவற்றால் விளையப்போவது வெறுமையும் வெறுப்பும்தான் எனில், நாம் ஏன் ஒளியையும் உற்சாகத்தையும் ஒவ்வொரு நொடியும் மூச்சிழுத்துப் பரப்பிக் கொண்டேயிருக்கக்கூடாது? மானுட வாழ்வின் அர்த்தம் என்பது, எவ்வளவு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் தனது வாழ்நாளை மனிதன் படைத்துக்கொண்டான் என்பதில்தானே உள்ளது! வெ.இறையன்புவுக்குள் ஆழமாக இப்புரிதல் ஊற்றெடுத்திருப்பதைக் காட்டும் மற்றுமொரு எழுத்தாக்கமே, ‘இலக்கியத்தில் மேலாண்மை’.
எதை எழுதினாலும், அதில் அழுத்தமான நம்பிக்கையையும், இலக்கு நோக்கிய ஆழமான வாழ்க்கை விருப்பையும், ‘தான் கலந்து பாடுவது’, வெ.இறையன்புவின் இயல்பு. இவ்வாறு எழுத்துக்கு ‘மானுட முன்னேற்றம்’ கருதிய ஒரு திட்டவட்ட நோக்குண்டு என்று கருதுவது அவரின் விரிந்த உலகப் பார்வைக்கும் வாழ்க்கை நோக்குக்கும் ஒரு செழிப்பான தத்துவப் பரிமாணமளிக்கிறது. அன்றாடப் பாடுகளுக்கும் அற்பக் களிப்புகளுக்கும் அப்பால் அடைய முடியாத ஓர் அமைதி அடர்ந்திருக்கிறது; அந்த மகா மோனத்தைக் கண்டுகொள்கிறவரே நடைமுறை வாழ்விலும் நிறைவுடன் ஒளிர முடியும் என்ற செய்தியைத் தம் எழுத்திலும் பேச்சிலும் தவறாமல் தொடர்ந்து வெ.இறையன்பு வலியுறுத்தி வருவதைக் காண்கிறோம். இது ஓர் அபூர்வம். எப்போதும் நம்பிக்கையுடன் இயங்கிவரும் ஒரு மனித மனம் – நாள்தோறும் நன்மைகளையும் இனிமைகளையும் தேடித் தேடிக் தொகுத்துக் கொள்ளும் ஒரு தெளிந்த உள்ளம் – ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்’ எனப் பகிர்ந்துகொள்வதில் பெருமிதப்படும் ஒரு சிருஷ்டி நிலை – இது அபூர்வம்தானே?
இலக்கியத்தில் மேலாண்மை’, இறையன்புவின் ‘Magnum Opus’ எனக் கூறத்தக்க அளவில், அறுநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில், நூற்றைந்து உட்தலைப்புகளுடன், நூறுக்கும் கூடுதலான வரலாறு மற்றும் உண்மை வாழ்க்கைச் சம்பவங்களோடும், முந்நூறுக்கும் அதிகமான சுவையான கதைகளோடும், ஐம்பதைத் தாண்டிய பழமொழிகளோடும், ஏறக்குறைய இருநூறு தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் துணையோடும், அறிவையும் ஆர்வத்தையும் ஒருங்கே கிளரும் ‘ஒரு நடைமுறை வாழ்வியல் பாடநூலாக’ விரிந்துள்ளது. இந்நூலைப் படிப்போரின் வாழ்வில் மாற்றங்கள் விளைவது உறுதி. எத்தனை எத்தனை அறிஞர்கள்! எத்தனை எத்தனை நூல்கள்! எவ்வளவு அற்புதமான மேற்கோள்கள்! எவ்வளவு நுட்பமான தர்க்கவாதங்கள்! வியாசரும் வான்மீகியும் ஹோமரும் ஷேக்ஸ்பியரும் லாவோவும் கன்பூசியசும் திருவள்ளுவரும் கம்பரும் கௌடில்யரும் மாக்கிய வல்லியும் புத்தரும் மகாவீரரும் சாக்ரடிசும் பாஷோவும் இயேசுவும் நபிகளும் ஐசக் நியூட்டனும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் காரல் மார்க்சும் சிக்மண்ட் ஃப்ராய்டும் தாகூரும் பாரதியும் டால்ஸ்டாயும் ஹெமிங்வேயும் ஷெல்லியும் இக்பாலும் மாப்பசானும் புதுமைப்பித்தனும் மில்டனும் கிப்ரானும் ஜென் ஞானிகளும் சங்கச் சான்றோரும் என எட்டுத் திக்கின் அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் இந்நூல் மூலமாகத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் வெ.இறையன்பு. இந்நூலைப் படிப்பது, தமிழ் மட்டும் அறிந்த வாசகர்களுக்கு, ஒரு மிகப்புதிய அனுபவமும் அறிதலுமாகும்.
‘நாடக வழக்கு, உலகியல் வழக்கு, பாடல் சான்ற புலனெறி வழக்கு’ என்ற மூன்றைப் பழந்தமிழர் சிறப்பாகக் குறிப்பிடுவர். இவற்றுள் இது நாடக வழக்கு, இது உலகியல் வழக்கு எனப் பிரித்தறிய முடியாத முறையில் இவ்விரண்டும் ஒன்றுகலந்து விடுகிறபோதுதான், அது ‘பாடல் சான்ற’ புலனெறி வழக்காகிறது. இவ்வாறு ‘பாடல் சான்ற புலனெறி வழக்கு’ என்பது, சிறப்பாகச் செயல்படும் எழுத்தாக்கமே, ஒவ்வொரு சமூகத்துக்கும் உயிர்ப்பான படைப்புத் தேவையாகிறது. இதனைக் கூர்மையாக உள்வாங்கிக்கொண்டு, இலக்கியமும் வாழ்க்கையும் முயங்கும் அந்த உச்சமான ஒருமைத் தளத்திலிருந்து, பன்மைக் கருத்துகளின் (Plural Thoughts) ஊடாட்டமாகப் பகிர்ந்துகொள்ளலின் பரிதிச் சிதறல்களாகக் குருவி மூளைக்குள்ளும் கலைச்சிகரங்களைக் கொந்தளிக்க வைக்கும் கண்ணாடிக் காட்சிகளாகப் பற்றி ஈர்க்கும் எளிமையுடன், இப்பனுவலைப் படைத்துள்ளார் வெ.இறையன்பு. ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகப் பெரும் படைப்பாளிகளின் சிறந்த படைப்புகளும், இந்த உலகை மாற்றியமைத்த பல்வேறு மேதைகளின் புரட்சிகரமான சிந்தனைகளும் இந்நூலில் முன்மொழியப்பட்டுள்ளன. பழஞ்சீனக் கதைகள், இராமாயண மற்றும் மகாபாரதக் கதைகள், பழந்தமிழ்க் கதைகள், கிரேக்கக் கதைகள், சூஃபி மற்றும் முல்லா கதைகள், ஆர்மேனியக் கதைகள், சிந்துபாத் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், பீர்பால் கதைகள், பைபிள் கதைகள், ஜாதகக் கதைகள், அப்பாஜி கதைகள், ஜென் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஹிதோபதேசக் கதைகள், புராணக் கதைகள், ஈசாப் கதைகள், உலகம் முழுவதிலும் உலவிவரும் பல தேசத்து நாட்டுப்புறக் கதைகள் என இருபதுக்கும் மேற்பட்ட உலகக் கதைகளின் பெருவெளியாக இந்நூல் விரிந்துள்ளது.
இந்நூலில், இந்துப் புராணங்கள் – வேதங்கள் – இதிகாசங்கள் – உபநிடதங்கள் – அர்த்த சாஸ்திரம் – விதுர நீதி – சுக்ர நீதி – பீஷ்மர் உபதேசம் – கீதை – எனப் பல்வேறு வகை எழுத்துகளும், நிர்வாகவியல் கோணத்திலிருந்து மிகப் பரந்த அளவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. குரானிலிருந்தும், விவிலியத்திலிருந்தும், சீன ஞானத்திலிருந்தும், யூத மற்றும் சீக்கியத் தத்துவங்களிலிருந்தும், சமண மற்றும் பௌத்த சமயங்களின் நடைமுறை வாழ்வுசார் உண்மைகளிலிருந்தும் உரிய பல கருத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சமகால மேலாண்மை நுட்பங்களுடன் ஒப்பிடப்பட்டுச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. மேலைநாட்டுச் செவ்விலக்கியப் பனுவல்களையும், சான்றோரின் சிந்தனைகளையும் மிகையழுத்தத்துடன் சுட்டிக் காட்டிவிட்டுக் கீழைநாட்டுப் பனுவல்களையும் தத்துவ நூல்களையும் வெறும் பெயரளவில் மட்டும் எடுத்தோதித் தொட்டும் தொடாதும் விலகிவிடும் பொதுவான விதேசி புத்திக்கு எதிர்மாறாகச் சங்க இலக்கியம் தொட்டுத் தற்காலப் படைப்புகள் வரை எதனையும் விட்டுவிடாமல் சேகரித்துக் கொண்டுவந்தும், ‘உலகியல் உத்திகளோடு’ இணைத்துக் காட்டியும், தமிழ் மண்ணுடன் தொடர்புள்ள ‘பண்பாட்டு மேலாண்மைக்கு’, இந்நூல்வழிப் பெருமை சேர்த்துள்ளார் வெ.இறையன்பு.
நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், திருவள்ளுவரும் ஷேக்ஸ்பியரும், திரும்பத் திரும்ப இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளனர். இவ்விரு பெரும் கவிஞர்களின் ஆளுமை, இந்நூல் முழுவதும் ஊடுருவியுள்ளது என்று கூறுவது, வெறும் உபச்சார வழக்கன்று. இந்த ஒப்புயர்வற்ற இலக்கிய மேதைகளின் கருத்துகளில் எவ்வளவு தூரம் வெ.இறையன்பு ஆழ்ந்து தோய்ந்துள்ளார் என்பதற்குச் சரியான ஓர் ஆவணமாக இந்நூல் மலர்ந்துள்ளது. தொன்மையான இந்திய, சீன, அராபிய மற்றும் கிரேக்கச் சிந்தனை மரபுகள், இன்றைய ஐரோப்பிய விஞ்ஞானத்திற்கும் நிர்வாகவியலுக்கும் அமைத்துத் தந்துள்ள அடிக்கட்டுமானங்களைப் பாடுபட்டுத் தேடிப் படித்துச் செறிவாக வெ.இறையன்பு தொகுத்தளித்துள்ள அந்த ‘நுண்மாண் நுழைபுலம்’ கண்டு வியக்கிறோம். இந்நூலைப் பொறுமையோடும் விழிப்போடும் படித்துணரும் பொது வாசகன், மூல நூல்களைத் தேடிப் போவதுடன், கருத்தும் கலைநயமும் சேர்ந்தொளிரும் புதிய சம வாய்ப்பு உலகத்திற்குள் உட்புகுந்து களிப்பதும் உறுதி. இதுவே இந்நூலின் வெற்றியாகும்.
கலை x அறிவியல், தற்காலம் x வரலாறு, நடைமுறை x தத்துவம், இல்லறம் x துறவறம், இலக்கியம் x வாழ்க்கை, அறம் x வணிகம், மரபு x நவீனம், கிராமம் x நகரம், முதலாளி x தொழிலாளி, பொய் x மெய், இருள் x ஒளி என எல்லாவற்றையும் முரண்களாகப் பகுத்துப் பார்த்தே நமக்குப் பழகிவிட்டது. ஆனால், இவை உண்மையில் ஒன்றிணையும் மையங்களும், விலகிச்செல்லும் விளிம்புகளுமாகும்! அனைத்தையும் இரட்டையாகப் பார்ப்பதில் நமக்குச் சில பல சாதகங்களும் இருக்கலாம்; எனினும், எதிர்நிலையாகக் காண்பதிலுள்ள பாதக அம்சங்களே பெரிதுபடுத்தப்பட்டுச் சமகாலத்தில் அவை அச்சுறுத்தும் சமூகப் பிளவுகளாகத் திட்டமிட்டு வளர்த்து விடப்படுகின்றன. உள்ளவாறு உண்மையை உற்றறிவதன் வாயிலாகப் பிளவுபடுத்தும் திரிபுவாதங்களிலிருந்து விடுபட்டுத் தற்காலிகமாகப் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்காமல் எதனையும் நேருக்கு நேரே எதிர்கொள்ளும் ‘ஜென் மனநிலை’வழி, இலக்கியத்தையும் மேலாண்மையையும் இணைத்துக் காண்பதற்கு வெ.இறையன்பு இந்நூலில் முனைகிறார். இது ஓர் ஆக்க பூர்வமான முயற்சியும், சமகாலத்தில் சிறிதும் தவிர்க்கக்கூடாத ஓர் இயல்புவாத அணுகுமுறையுமாகும்.
இலக்கியம், ‘அறத்தின் குரலாக’, இன்றும் நம் உலகில் ‘மௌனத்தின் நாதமாக’ ஒலித்துக்கொண்டிருக்கிறது; ‘மேலாண்மை’ வணிகத்தின் நெளிவுசுளிவான ஆனால் ஆரவாரப்பேச்சாகப் பட்டிதொட்டியெங்கும் பகட்டாகப் பரவிக்கொண்டிருக்கிறது. கடையேழு வள்ளல்களுள் ஒருவனான ‘ஆய்’ வேண்டுமானால், ‘அறவிலை வாணிகன்’ அல்லனாய் வாழ்ந்திருக்கலாம். மற்றபடி இன்று, வணிகத்தையும் அறத்தையும் தளுக்காக இணைத்துத்தான், ‘அறம் சார்ந்த வணிகம்’ என்ற ஒரு கலப்புப் பண்பாட்டைப் புகட்டித்தான், சமூக நலம் பேணியாக வேண்டியிருக்கிறது. இந்த யதார்த்தத்தைத் தின்று செரித்தே, திறந்துவிடப்பட்ட சந்தை வாய்ப்புகளின் ஊடாகப் புரட்டியெடுக்கப்படும் பழைய விழுமியங்களைச் சாகவிடாது உயிர் வாழ வைக்கும் பொறுப்புணர்வுடன், ‘இலக்கியத்தில் மேலாண்மை’ பற்றிச் சீர்திருத்த வாதியின் மென்மையான குரலில் ஆனால் அழுத்தந்திருத்தமாகப் பேசுகிறார் வெ.இறையன்பு.இலக்கியத்தைப் பயன்கொள்ளாத மேலாண்மைக்குச் சமகாலத்தில் எந்த ஒரு மதிப்புமில்லை என்பதையும், பல்வேறு வகைகளில் பிரிந்து சிதறுண்டு கிடக்கும் மக்களுக்குள் ஒற்றுமையையும் நம்பிக்கையையும் வலுப்படுத்த மேலாண்மைக்கு மிச்சமிருக்கும் ஒரே வழிகாட்டி இலக்கியம்தான் என்பதையும், இந்நூலில் பற்பல சுட்டிக்காட்டல் மூலம் வெளிச்சப்படுத்துகிறார் வெ.இறையன்பு, ‘மன்னிக்கவும் (Excuse me)’, ‘வருந்துகிறேன் (Sorry)’, ‘நன்றி (Thank you)’, ’தயவு செய்து (Please)’ என்ற நான்கே சொற்களின் மூலம், ‘சூரியன் அஸ்தமிக்காத ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை’ ஆங்கிலேயர்கள் கட்டியெழுப்பினர். தொழிற்புரட்சி யுகத்திற்குப் பின்னான இன்றைய தனியார்மயச் சூழலில் நின்றுகொண்டு, வெள்ளை மற்றும் கறுப்பினத் தொழிலதிபர்களை நோக்கி, ‘Literature based Business Model’ ஒன்றை விரைந்து உருவாக்குமாறு வெ.இறையன்பு அறிவுறுத்துகிறார். நவீனக் காலனித்துவக் காலம் நிர்ப்பந்திக்கும் இந்நயத்தக்க நனிநாகரீகத்தை நமது பெரு முதலாளிகள் இனியேனும் பின்பற்றாவிட்டால், அவர்கள் தொடர்ந்து பிழைப்பதும் சாத்தியமற்றுப் போகும் என்பதே வெ.இறையன்பு விடுக்கும் எச்சரிக்கையாகும்.
ஒரு நூலைப் படித்தால், அதைப் படிக்கும் பாமர வாசகர்களுக்கும், அதிலிருந்து ஏதாவது கிடைக்கத்தான் வேண்டும்! செவ்விலக்கியப் பெருஞ்சிறப்பே இதுதான் – கற்றாருக்கும், சற்றே புரட்டினாருக்கும் அவரவரின் கொள்ளளவிற்கேற்பப் பயன் அளிக்கும் பழத்தோட்டம் அது! இலக்கியம் கருத்துகளின் காட்சிசாலையில்லை என்பதும், கற்கும்போது வாசகர்கள் பெறும் வாசிப்பனுபவம்தான் இலக்கியத்தில் பிரதானமானது என்பதும் அனைவரும் அறிந்ததே. என்றபோதிலும் எழுத்தென்பது, வெறும் ‘படிப்பு ருசி’ சார்ந்த ‘அழகொழுகும் அமைப்பமைதி’ மட்டுமன்று என்பதும், அதையும் தாண்டிய அர்த்தச் செழுமையும் அதற்குள் வசப்பட்டிருக்க வேண்டும் என்பதும் சிலருக்கே பளிச்சிடும் ‘படைப்பு ரகசியம்’. இந்த மறைபொருள் உண்மை, நுணுக்கமாக வெ.இறையன்புவுக்குப் புலப்பட்டிருப்பதால்தான், ‘ஓரிரு நூற் பழக்கம் உள்ள வெகுஜன வாசகனும்’ படித்துப் புரிந்துகொண்டு ‘வெளித்தள்ளாமல் உள்ளிழுத்து மெல்ல அசைபோடும் பழகுமொழியில் (Not Exclusive but inclusive Language Style)’ அவர் கருத்துகள், எல்லாருக்கும் பெய்யும் மழையாய், இந்நூலில் பெருக்கெடுத்துள்ளன.
புனைவெழுத்தில் மொழி, இறுகியும் திருகியும் பின்னியும் கண்கட்டு வித்தைகள் காட்டியபடியே நகர்ந்தும் பிடிநழுவியும் வழுக்கியும் செல்லலாம். புனைவல்லாத எழுத்தில் ஆகக்கூடிய எளிமையுடனும், ஆர்வமுடன் வாசகர்கள் பருகுவதற்கு ஏற்பத் தண்ணீரைப் போன்ற நெகிழ்வுடனும், தெளிவாகவும் நேரடியாகவும் மொழி இருப்பதுதான் இயல்பாகும். இத்தகைய இயல்புகளுடன், இந்நூலில் மொழியைக் கருத்துகளைத் தெளிவுபடுத்தும் புலப்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்தியுள்ளார் வெ.இறையன்பு. படித்து முடிக்காமல் இந்நூலை நீங்கள் கீழே வைக்க முடியாது என்பது மட்டுமன்றிப் படித்து முடித்தபின் உங்கள் இதயத்தில் ‘வாசிப்பின் சாரம்’ அலையலையாகப் புரண்டெழும்பிக் கொண்டேயிருக்கும் என்பதுமே இந்நூலின் வளமும் வலிமையுமாகும். ‘அப்பா வீட்டில் வெறும் டப்பா’ என்றும், ‘மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மையுடையதே’ என்றும், ‘புத்திசாலிகள் பூனைகளையும் புலிகளாக்குவார்கள்; அவசரக்காரர்கள் புலிகளையும் எலிகளாக்குவார்கள்’ என்றும், ‘புதிய சோப்பைப் பார்த்ததும் குளிக்க ஆசைப்படும் குழந்தையைப்போலப் புதிய அனுபவம் ஏற்படும்போதெல்லாம் பழந்தமிழர் மனம் துள்ளியது’ என்றும், ‘களைக்கொட்டை எடுத்துக்கொண்டு மலைவெட்டக் கிளம்பக்கூடாது’ என்றும், ‘பதுக்குவது எதுவும் பத்திரமாக இருப்பதில்லை’ என்றும் எளிய சொற்களில் கருத்தோவியங்களைத் திறனுடன் தீட்டிவிடுகிறார் வெ.இறையன்பு. இத்தகைய ஒரு பழகுமொழியின் குழைவும் ஈரப் பதமும் வாசகர் ஈர்ப்பைத் தக்கவைப்பதற்கும், மூளைக்குள் சுற்றிச் சுழன்றாடிக் கற்பனையின் எல்லைகளை விரிவுசெய்துகொள்வதற்கும் உதவுகின்றன.
ஒருமித்த ஞானம் (Collective Wisdom), அதிகாரப்பிரிவு (Separation of Power), இலக்கும் நோக்கும் (Vision and Mission), பிக்மாலியன் விளைவு (Pygmalion Effect), வற்புறுத்திக் கையிருப்பைத் திணிப்பது (Progresstion Bed), பரிசோதனைச் சந்தை (Experimental Market), ஒட்டாத ஒட்டுதல் (Detached Attachment), தகுதிக்கு மீறிய பதவி உயர்வுகள் (Peter’s Principle), நச்சரிக்கும் மேலாண்மை (Nagging Management), பெர்ட் அட்டவணை (Bert Table), பக்கவாட்டுச் சிந்தனை (Lateral Thinking), பார்க்கின்சன் விதி (Parkinson Rule), உடல் மொழி (Body Language), ஸ்வாட் (Swat – Strength, Weakness, Opportunity, Threat Analysis), பல்வகை முதலீடு (Diversification of Funds), பல்லுயிரியம் (Bio-Diversity), வன மேலாண்மை (Forest Management), நிச்சயமற்ற நிலைமை (Risky Situation), உணர்ச்சித் திறன் அறிவு (Emotional Intelligence), சரியான தகவல் தொடர்பு (Right Communication), ஒளிவட்ட விளைவு (Halo Effect), நிறுவனச் சமூகப் பொறுப்புணர்வு (Corporate Social Responsibility), சமூக ஆய்வு (Social Auditing) என இருபதுக்கும் மேற்பட்ட பொருளியல் மற்றும் மேலாண்மைக் கலைச்சொற்களையும், அவை பற்றிய இலக்கியச் சான்று கூடிய மேல்விளக்கங்களையும் இந்நூலில் தொகுத்தளித்துள்ளார் வெ.இறையன்பு. மிகப் பழங்காலம் தொட்டு இத்தகைய மேலாண்மைச் சொற்களும் உத்திகளும், அந்தந்தக் காலத்து முறைமைகளில் உலகியலில் செயல்பட்டுள்ளதாகவும் உரிய சான்றுகள் மூலம் விளக்கியுள்ளார்.
பல்லடுக்குப் பயிர்ப் பராமரிப்பு (Multi Storey Cropping) உத்திக்குக் ‘காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப் பூ மாண்ட’ எனத் தொடங்கும் சீவக சிந்தாமணியின் புகழ் பெற்ற பாடலை எடுத்துக்காட்டுகிறார். நீர் மேலாண்மைக்குக் குடபுலவியனாரின் ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்ற முதலடியுடைய புறநானூற்றுப் பாடலைச் சான்றுகாட்டுகிறார். ‘இம்மிகூடத் தரமாட்டான்’ என்பதில் வரும் ‘இம்மி’ என்பதற்குப் ‘பத்து இலட்சத்து எழுபத்து ஐயாயிரத்து இருநூற்றில் ஒரு பங்கு’ எனத் துல்லியப்படுத்துகிறார். ‘அக்கிலஸ் ஹீல்ஸ்’ என்பதற்கு, அந்தச் சொல் தோன்றிய கிரேக்க மூலக்கதையைச் சுட்டிப் பொருத்தமாக விவாதிக்கிறார். ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள்’ என்பதற்குச் சரியான அர்த்தம் அளிக்கிறார். யூலிஸஸின் மனைவி பெனிலோப்பைக் கிரேக்கக் கண்ணகி என்று ஒப்பிட்டுரைக்கிறார். ‘பெரட்டோ விதிக்கு’ அப்பாஜி கதைகளைப் பொருத்துகிறார். ஃப்ராங்க் அவுட்லா சூத்திரத்தைப் பிரஹதாரண்யக உபநிடதத்துடன் இணைத்துக் காட்டுகிறார். ‘Brand Ambassador’ என்பதற்கு ‘முத்திரைத் தூதுவர்’ என்ற அழகிய மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துகிறார். ஒருங்கிணைப்புக்கு ஷேக்ஸ்பியரையும் மேலாண்மைக்குத் திருவள்ளுவரையும் மேற்கோள் காட்டிப் புரியவைக்கிறார். தனித்தனிப் படகில் அகதிகளாக வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்களைத் திட்டமிடல் மற்றும் முடிவெடுத்தலுக்குச் சான்றுகூறிக் கவலைப்பட வைக்கிறார். இப்படிப் பக்கம்தோறும் வெளிப்படும் வெ.இறையன்புவின் ‘நூலொடுங் கூடிய மதிநுட்பம்’ கண்டு மகிழ்கிறோம்.
புத்தம் புதிதாகத் தனித்துவத்துடன் பிறக்கும் இலக்கியப் படைப்புகளே காலத்தைக் கடந்தும் வாழமுடியும்; அவரவர் உழைப்புக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற முறையில் வாய்ப்புகளையும் ஊதியத்தையும் வழங்கிக் கூட்டுத்திறன்களை வளர்க்கும் தொலைநோக்குடன் செயல்படும் நிறுவனம்தான் ஊழியர்களின் நம்பிக்கையையும் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் நிறைவுசெய்து நெடுங்காலம் நிலைக்கமுடியும். இலக்கியமானாலும் மேலாண்மையானாலும், இதுதான் முடிவான ஒரே உண்மை. இதை அறிந்துதான் வெ.இறையன்பு, “என்னுடைய கையெழுத்து எதையாவது பார்த்து எழுதும்போது கிறுக்கலாக இருக்கும். நானாக எழுதும்போது சற்றுத் தெளிவாக இருக்கும். என் கையெழுத்தில் இருந்துதான், ‘மற்றவர்களை நகலெடுப்பது கிறுக்குத்தனம்’ என்று கற்றுக்கொண்டேன்” (ப.91) எனத் தம் சொந்த அனுபவத்தை முன்வைத்துத் தனித்திறனைப் பேணி வளர்த்துக்கொள்வதன் வாயிலாகவே மனிதன் தன்னைக் கூட்டுப்பொறுப்புக் கோரும் சமூகத்தில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்கிறார். “சங்ககாலத்திலே கட்டப்பட்ட கோயில்கள், செங்கற் கட்டடங்களையும் மர விட்டங்களையும் கொண்டு அமைக்கப்பட்டுச் சுவர்மேல் சுண்ணம் பூசப்பட்டிருந்தன. இத்தகைய செங்கற் கட்டடக் கோயில்களை அவ்வப்போது செப்பனிடாமற் போனால், அவை சிதைந்து அழிந்துவிடும்“ என்பதைக் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் (அகநானூறு : 167) பாடலை எடுத்துக்காட்டி மயிலை. சீனி. வேங்கடசாமி விளக்கியுள்ளார் (2003, ப.31). இது சங்ககாலத்தில் நிலவிய ஒருவகை மேலாண்மை உத்தி. இதைப் போன்ற பலவற்றைத் தம் நூலில் வெ.இறையன்புவும் கண்டுரைத்துள்ளார்.
சமூக நன்மைக்குப் பயன்படுவதாக, ‘மேலாண்மைப் பயிற்சிகள்’ அமையவேண்டும் எனக் கருதும் வெ.இறையன்பு, அப்பயிற்சிகள்வழி அறிவையும் பண்பாட்டையும் முதலாளிகளும் தொழிலாளிகளும் வளர்த்துக்கொள்ள முடியும் என்கிறார். “எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறவர்கள் அலுவலகத்திற்குச் செல்லும்போது மகிழ்ச்சியாகவும், அலுவலக நேரம் முடியும்போது வருத்தமாகவும் இருக்கிறார்களோ, அந்த அலுவலகமே சிறந்த அலுவலகமாகக் கருதப்படும்” (ப.101) எனப் புதிய ‘மேலாண்மைத் தத்துவம்’ கண்டு ஆற்றுப்படுத்துகிறார். இதன் நீட்சியாக, இன்னும் ஒருபடி மேலே சென்று சிந்தித்துப் ‘பணிப் பண்பாடு (Work Culture)’ மற்றும் ‘சந்தை விழுமியங்கள் (Market Values)’ பற்றியும் கருத்துரைக்க அவர் தவறுவதில்லை. “பொறுப்புகளையும் தவறவிடாமல் மகிழ்ச்சியுடன் இருக்கும் விழிப்புணர்வே வாழ்வின் சாராம்சம்; உடல் நலத்தையும் நிறுவன நலத்தையும் ஒருசேர ஒழுங்காகப் பார்ப்பதே உத்தியோக லட்சணம்” (ப.278) என்ற வெ.இறையன்புவின் கருத்துடன் எவரும் உடன்படுவர். “எல்லாப் பிரச்சனைகளும் துன்பங்களும் நான் என்ற உணர்ச்சியிலிருந்து தோன்றுகின்றன” (1985, ப.63) என்பர் மெய்யியலாளர். “பிறரோடு கலவாமல் தான் மட்டும் தூய்மையாக இருப்பவன் தன்னலம் படைத்தவன். தன்னோடு தொடர்புடைய அனைவரையும் தூய்மையாக்கக்கூடிய இரக்க உணர்வே உண்மையான தூய்மையாகும்” (2013, ப.76) என்றும் விரிப்பர். இதற்கேற்பத் தூய்மையான இரக்கத்துடன் கூடிய ஓரு நவீனமான மேலாண்மையையே நமது இந்திய முதலாளிகளிடம் கோருகிறார் வெ.இறையன்பு.
ஓர் ஆலமரத்தின் வளர்ச்சியை ”1. விதைநிலை, 2. முளைநிலை, 3. செடிநிலை, 4. மரநிலை, 5. விழுதுகள் பரப்பிய முதுமரநிலை” என ஐந்தாக வரிசைப்படுத்துவர் (2005, ப.12). இப்படியே நிறுவனங்களையும்கூடச் சிறப்பான தொடக்கம், நேர்வழிப் பயணம், ஊழியர்களிடம் பரிவு காட்டுதல், விழுமியங்களை விட்டுத் தராதிருத்தல், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுதல் என மானுட மாண்புகள் கொண்டதாக வளர்த்தெடுப்பதையே வெ.இறையன்பு வலியுறுத்துகிறார். இந்நோக்கமே இந்நூல் முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளது. “தொடர்ச்சியான, மீண்டும் மீண்டும் – பயன்படுத்துவதன்வழி மட்டுமே கோட்பாட்டிற்குத் தன்னிறைவும் வாழ்வும் ஏற்படும். யந்திரத்தனமான அணுகுமுறைகள் பல கோட்பாடுகளையும் குழி தோண்டிப் புதைத்திருக்கின்றன” (2012, பக்.130-131) என்பார் கெ.அய்யப்பப்பணிக்கர். இவ்வாறு படைப்பிலக்கியக் கோட்பாட்டுக்குப் பணிக்கர் கூறுவதை மேலாண்மைக் கோட்பாட்டுக்கும் பொருத்தியே தம் நூலை வெ.இறையன்பு உருவாக்கியுள்ளார். இவ்வகையில், மானுட நேயத்தை வலியுறுத்தும் மேலாண்மைக் கோட்பாட்டையே வெ.இறையன்பு பரிந்துரைக்கிறார் எனலாம்.
மனித சுபாவங்களைப் பரவலாகக் கணக்கிலெடுத்துச் செவ்விலக்கியங்களும் அற நூல்களும் வகுத்தளித்துள்ள விழுமியங்களின் ஒளியில் வழிநடத்தப்பட்டே மேலாண்மைக்கான ஒழுங்குவிதிகளையும் நடைமுறை சார்ந்த நெகிழ்வுகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்கிறார் வெ.இறையன்பு. “அழகாக இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள்;சிவப்பாக இருப்பவர்கள் சுத்தமாக இருப்பார்கள்; நன்றாகப் பேசுகிறவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள்” (ப.500) போன்ற பல ஒளிவட்டங்களைப் படைப்பிலக்கியங்களும் நடைமுறை வாழ்வியலும் இணைந்து கேள்வி கேட்பதை விளக்கும் வெ.இறையன்பு, நிர்வாகிகளும் பணியாளர்களும் எப்போதும் விழிப்புடனிருக்க வேண்டியதன் இன்றியமையாமையையும் சிறந்த கவித்துவத்துடன் வலியுறுத்துகிறார். “தங்களைப் பிடிக்கத்தான் வருகிறார்களோ என்று எண்ணிக் காகங்கள் எப்போதும் பறக்கின்றன; பிடித்துக் கறி சமைப்பவர்கள் கால்களைச் சுற்றியே கோழிகள் வலம் வருகின்றன. நம்பிக் கெடுவதும் நம்பிக்கையின்மையால் வாழ்வதும் எப்போதும் தொடர்கின்றன” (ப.219) என்கிறார். எனவே, காகங்களா கோழிகளா? நாம் யார் என்பதை நாம்தான் முடிவு செய்துகொள்ளவேண்டும்! இது தொடர்பாக, “எப்போது பயனுள்ளவாறு இருக்க வேண்டும், எப்போது பயனில்லாதவாறு இருக்க வேண்டும் என்பது தெரிந்தால்தான் உலகத்தில் பிழைக்க முடியும்” (ப.367) எனச் ‘சங்-சூ’வை மேற்கோள் காட்டுகிறார். அப்படியானால், இப்பிழைப்புவாதமே மேலாண்மைவழிக் கற்கவேண்டிய அல்லது அது கற்பிக்கும் பாடமா?
‘வர்க்க முரண்கள்’, அண்மைக்கால இந்தியச் சமூகத்தில், முன்னைக் காட்டிலும் கூர்மைப்பட்டுள்ளன. அதிர்ச்சியூட்டுமளவிற்குப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதாரண அன்றாடங்காய்ச்சிகளின் கழுத்தை இறுக்கி நெறிக்கின்றன. “ஒரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்கள் என்று கருதப்படுபவையெல்லாம் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தங்களுடைய காலம், வசதி வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்று எடுக்கும் முடிவுகளின் விளைவுகளே” (2002, ப.xix) என்பார் ஃபிரெட்ரிக் பார்த் (Fredrik Barth). மேலாண்மையின் முக்கிய விதி இது என்பதை வெ.இறையன்புவும் அறிந்திருக்கிறார். அதனால்தான் அவர், போட்டிச் சந்தைகளின் யதார்த்தத்தில், இப்போதிருக்கும் இந்த அமைப்பைப் பாதுகாப்பதற்காகப் போதிக்கப்படும் மலிவான நடைமுறைத் தந்திரங்களாகப் பெருமுதலாளிகளின் லாப நலன்களைப் பேணும் ‘வெறும் தரகுநோக்குச் சமரசங்களாக’ப் பற்பல புத்திஜீவிகளால் வகுக்கப்பட்டுப் பிரபலப்படுத்தப்படும் ‘மேலாண்மை உத்திகள்’ உருமாறிவிட்ட அபாயத்தைப் பெருமளவுக்குப் புரிந்துகொண்டுள்ள சமகால ஓர்மையுடன், “இலக்கியத்தை வாசிப்பவர்கள் கனிவோடும் துணிவோடும் கடமையுணர்வோடும் யாரையும் அச்சுறுத்தாது நிர்வாகம் நடத்தவேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வார்கள். அது ‘மேலாண்மைப் பாடத்திட்டத்தில்’ வாசிக்கக் கிடைக்காது” (ப.411) எனப் ‘புத்தறிவு’ கொளுத்துகிறார். இவ்வாறாக, இலக்கியத்தையும் மேலாண்மையையும் துல்லியமாக நிறுத்துப் பார்த்துப் பிந்தையதைவிட முந்தையதை வெ.இறையன்பு தூக்கிப் பிடிப்பதற்குப் பிணக்கமற்ற இணக்கத்தைச் சமூக வாழ்வில் அவர் காண விரும்புவதே முதற்காரணமாகும். “மேலாண்மை நம்மைக் கடிவாளம் போட்ட குதிரையாக்க முயற்சி செய்கிறது; இலக்கியமோ பருந்துப் பார்வையைத் தருகிறது” (ப.394) எனப் ‘பொருள் பொதிந்த முறுவலுடன்’ வெ.இறையன்பு விளக்க முனைவதும் மறுக்கமுடியா உண்மைதான்! புரட்சிக்குச் சாத்தியப்பாடு குறைவாய் உள்ள ஒரு நாட்டில், வர்க்க இணக்கத்தைப் போதிப்பதுதானே நம் நடைமுறைக்கு உகந்ததாயிருக்க முடியும்?
முதலுக்கு ஈடாக வட்டி வந்தவுடன் வட்டி தருவது நிறுத்தப்பட வேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் அறிவுறுத்துவதைச் சுட்டிக் காட்டுவதல்லாமல், அதை இன்று நடைமுறைப்படுத்தி வட்டியை அறவே நீக்கிவிட வெ.இறையன்புவால் இயலாது. இது வேறு சமூகம்; இதன் ‘ரத்தத்தை உறிஞ்சும்’ பொருளாதார விதிகள் முற்றிலும் தனியாரின் நலன்களையே சார்ந்தவை. எனினும், வரலாற்று நோக்கிலிருந்து இந்த அசலும் வட்டியும் வளர்ந்துவந்த சுவையான அந்த மூலதனக் கதையைக் கூறும் வெ.இறையன்புவின் வளமான சொற்சித்திரம் கருதத்தக்கதாகும். “பணம் என்பது உழைப்பின் சேமிப்பு. ஒருவர் நிறைய உழைத்துக் குறுகிய காலத்தில் தன்னுடைய உழைப்பைப் பணமாக மாற்றிக் கொள்கிறார். அந்தச் சேமிப்பிற்கு வேறு ஒருவர் பங்குதாரராக வேண்டுமென்றால், அந்த முன்கூட்டிய உழைப்பிற்கான ஒரு விலையைத் தரவேண்டும். பணம் என்பது முதலீடுகளுக்குப் பயன்படுகிற ஒரு பொருள். எனவே, வேறொருவர் பணத்தை வாங்குகிறபோது கட்டாயம் அதற்கான ஒரு தொகையைத் தந்து ஈடு செய்ய வேண்டும் என்பது மரபு. அதுவே வட்டி” (ப.562) என்கிறார். இங்குப் பணமும் வட்டியும் எப்போது உபரிமதிப்பாகவும் சுரண்டலாகவும் மாறி மானுடமதிப்புகளைச் (Human Values) சிதையச் செய்கின்றன என்பது பற்றி வெ.இறையன்பு ஏதும் பேச முனைவதில்லை. ஆனால், உழைப்பிலிருந்தும் உற்பத்தியிலிருந்தும் மனிதர்கள் விலக்கி அந்நியப்படுத்தப்பட்டுத் தனித்தனியே உதிரிகளாக அலைக்கழிக்கப்படும் (பாட்டாளிகளின்) அவ்வாழ்க்கைச் சிதைவைத் தடுப்பதற்குக் குறிப்பிட்ட நன்னெறி நோக்கங்களுடன் கூடிய ‘மக்கள் நல மேலாண்மை’யைப் பரிந்துரைக்கிறார். “நோக்கமே இல்லாமல் எந்த நிறுவனம் செயல்பட்டாலும் அது குறுகிய காலத்தில் லாபத்தை அடையலாம்; ஆனால் நாளடைவில் நலிவடைந்து விடும்” (ப.388) என்பதுதான், வெ.இறையன்புவின் சமூகப்பார்வையாகும். அதாவது, “ஏற்றம் என்பது உண்மை என்னும் அஸ்திவாரத்தின் மேல் கட்டப் பெற்றாதல் வேண்டும். பொய் மீது கட்டப் பெற்றதாயின் அது நிலைநிற்க மாட்டாது. கட்டிய மறுகணத்திலேயே சரிந்து விழுந்துவிடும்” (2010, ப.20) என்ற இலக்கிய நன்னெறி விழுமியத்தைப் பேரறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை போலவே வெ.இறையன்புவும் வலியுறுத்தக் காண்கிறோம்.
இறுதியாக, வெ.இறையன்பு அளிக்கும் சில நுட்பமான தகவல்களைப் பார்க்கலாம். இந்தத் தகவல்கள், ‘மொழி – வரலாறு – பண்பாடு – அரசியல் – நிர்வாகம்’ எனப் பல நுண்தளங்களைப் பொருத்தமாக இணைத்துக் காணும் ‘ஒப்பீட்டு நோக்கில்’ வெ.இறையன்புவால் வாசகர்முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வதும், அதன் அடிப்படையில் செயலாற்ற விழைவதும் அவரவரின் சார்பையும் சால்பையும் காட்டக்கூடும்!
முதல் உலகப்போரில், பிரான்ஸில், பதுங்குகுழிக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹிட்லரைப் பரிவால் கொல்லாமல் தப்பவிட்ட குற்றத்திற்காக, இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாளும் நாளும் மனம் நொந்து புலம்பினான் ‘ஹென்றி டான்டே. (ப.113)
பெட்டிகள் செய்யப் பயன்படுத்திய மரத்திற்குப் பெயர்தான் ‘பாக்ஸ்’; நாளடைவில் அது பெட்டிகளுக்கே பெயராகிப் போனது. (ப.131)
அறிவியல் ரீதியாகத் தொலைபேசியைக் கண்டுபிடித்தவராக அலெக்சாண்டர் கிரஹாம் பெல் அறியப்பட்டிருக்கலாம். ஆனால், உண்மையில் இத்தாலியரான ஆன்டினியா மியூக்ஸிதான் அப்பெருமைக்குரியவர்! இதை 2002ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்களவையும் ஏற்றுக்கொண்டுள்ளது. (ப.139)
‘எனிமி (Enemy)’ என்ற ஆங்கிலச்சொல்லுக்கு மூலம் லத்தீன்தான். இச்சொல்லுக்குப் பொருள், ‘நண்பன் இல்லாதவர்’ என்பதாகும். (ப.141)
‘Listen’, ‘Silent’ என்கிற சொற்கள் ஒரே எழுத்துகளால் ஆனவை. (ப.224)
உலகெங்குமுள்ள ஆண்கள் சட்டை அணியும்போது வலதுகையின் பாகத்தையே முதலில் நுழைக்கிறார்கள்; பெண்கள் இடதுகையின் பாகத்தையே முதலில் நுழைக்கிறார்கள். (ப.236)
ஜெர்மானியர்கள் கால்மேல் கால் போடும் விதமும், அமெரிக்கர்கள் போடும் விதமும் மாறுபட்டிருந்ததால், ஜெர்மனிக்கு இரண்டாம் உலகப்போரின்போது வேவு பார்க்கச் சென்ற அமெரிக்கர்கள் மாட்டிக்கொண்டார்கள். (ப.261)
‘எகோ’ என்ற கிரேக்கத் தேவதையின் கதையிலிருந்து உருவான ஆங்கிலச் சொல்லே Echo. (ப.348)
வீழ்ச்சிக்கு முன் ஆணவம் வருகிறது – பைபிள்; விநாஸ காலே விபரீத புத்தி – சமஸ்கிருதம்; துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் – தமிழ். (ப.350)
முதலாளியிடம் அடிமையாகக் கடைநிலை ஊழியனாக இருப்பவனும் அடிமைப் படுத்துவதற்கு ஒரு ஜீவன் இருக்கிறது. அது அவன் மனைவி – ஏங்கல்ஸ். (ப.409)
வானத்தில் பறக்கின்ற பறவைகளின் வழித்தடத்தைக்கூடத் தெரிந்துகொள்ளலாம்; அரசு ஊழியர்கள் முறையின்றிச் சேர்த்த சொத்தை எப்படி மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது – கௌடில்யர். (ப.491)
இவை யாவும் நுட்பமான தகவல்கள். இவையெல்லாம் மூல நூல்களில் முன்பே காணப்படுபவையே. எனினும், இந்தியா போன்ற முன்னுக்கு வரும் முனைப்புள்ள நாடுகளில் வாழும் வளரிளம் பருவத்துப் புதியவர்களுக்குத் தகவல்கள் நிறைய வேண்டும். இத்தகைய தகவல்களின்றி, இக்கால இளைஞர்களின் ‘அறிவு வளர்ச்சி’ சாத்தியமில்லை. நாள்தோறும் புதிய புதிய தகவல்களைப் பசி தீர விழுங்கியே, இணையம் ஆட்சி செய்யும் 21ஆம் நூற்றாண்டு உலகிற்குள் நம்மவர் அடியெடுத்து வைத்துப் பிறகு சாதனைகளும் படைத்தாக வேண்டும்! இது பற்றிய நுண்மான் நுழைபுலத்துடன்தான், இப்பயன்பாட்டு நூலைக் கொட்டிக் கிடக்கும் ஆயிரமாயிரம் தகவல்களுடன் வெ.இறையன்பு படைத்தளித்துள்ளார்.
மருத்துவக்கல்லூரி மாணவர், பொறியியல் கற்போர், கலைப்பாடம் பயில்வோர், கணினித்துறைப் பணியாளர், வங்கிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், குடும்பத் தலைவியர், பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள், போட்டித் தேர்வுக்குப் பயிற்சி எடுப்போர், சமூக ஆர்வலர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், மேலாண்மை நிர்வாகிகள் எனப் பல தரப்பினருக்கும் ஒரு பாட நூலாகும் மேன்மை இந்த நூலுக்கு உண்டு. பள்ளிகள் – கல்லூரிகள் – பல்கலைக்கழகங்கள் – அரசு அலுவலகங்கள் – நிதி நிறுவனங்கள் – மேலாண்மைப் பயிற்சியகங்கள் – தகவல் தொடர்பு மையங்கள் – இணைய ஊடகங்கள் – நூலகங்கள் எனப் பொதுவெளிகளில் இந்நூல் இடம் பெறுவது, ‘இலக்கியம் மற்றும் மேலாண்மை குறித்த உலக அறிவு’ எங்கும் பரவுவதற்கும், அதன்வழி நுண்ணறிவுத்திறன் மிக்க ஒரு புதிய சமுதாயம் எழுச்சி பெறுவதற்குமான முதற்கட்டத் தேவையாகும். ‘இளைஞர்களின் நம்பிக்கை நாயகர்’ வெ.இறையன்பு அவர்களைத் தொடர்ந்து இதுபோல் பல ‘பயன்பாட்டுப் பனுவல்கள்’ செய்க என்று வேண்டுகிறேன். கலீல்கிப்ரானின் தீர்க்கதரிசியைப் போற்றியுரைக்கும் வெ.இறையன்புவின் அற்புதமான சொற்களையே கடன்வாங்கி, இந்நூலுக்குப் புகழ் மகுடம் சூட்டுகிறேன். இந்நூலைக் கூர்ந்தும் புரிந்தும் வாசித்தால், “சுருங்கிய மனமும் பாராசூட்டாய் விரியும்; வான்வீதியும் பால்வீதியாகிப் பரவசமூட்டும்!” (ப.345).
2. இலக்கியத்தில் விருந்தோம்பல்
உழைப்புப் பகிர்வும் உற்பத்திப் பகிர்வும் உடைமைப் பகிர்வும் உரிமைப் பகிர்வுமாக மானுடர் அனைவரும் எல்லாரும் ஒருநிறையாக, எல்லாரும் ஒருவிலையாகச் சரிநிகராகக் கூட்டுக்களியில் திளைத்திருந்த தொல்குடிப் பண்பாட்டிலிருந்து தோன்றியதே ‘விருந்தோம்பல்’ எனச் சங்க இலக்கியச் சான்றுகள் கொண்டு, ‘இலக்கியத்தில் விருந்தோம்பல்’ என்ற இந்நூலில் திறமையாக வெ.இறையன்பு நிறுவியுள்ளார். முன்பு தமிழ்நாடு திகழ்ந்த பெருமையும், மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும், பாரம்பரிய விருந்தோம்பல் பண்பாட்டைப் பேணுவதுவழிப் பின்பு தமிழ்நாடு பெற வாய்ப்புள்ள பெற்றியும் சிறப்பாக இங்கு விளக்கப்பட்டுள்ளன. பண்பாட்டின் சிறந்த அம்சங்களை நினைவுகூர்வதன் மூலம் திரும்பவும் நாம் அவற்றைப் புதுப்பித்துக் கொண்டுவிட முடியும் என்கிறார் வெ.இறையன்பு. அந்தப் பெருமித நம்பிக்கையின் மனிதநேய வெளிப்பாடே ’இலக்கியத்தில் விருந்தோம்பல்’ என்ற நூலாகியுள்ளது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், நாலடியார், பிற கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப ராமாயணம், பெரிய புராணம், குமரகுருபரர், பிற காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இடைக்கால ஒளவையாரின் நீதி நூல்கள், தனிப்பாடல்கள், பாரதிதாசனின் குடும்ப விளக்கு எனத் தமிழிலக்கியங்களில் ‘விருந்தோம்பல்’ பற்றிக் கூறப்பட்டுள்ள பல கருத்துகளின் பிழிவாயிருப்பதோடு, மேலைநாட்டுப் பண்பாட்டில் ‘விருந்தோம்பல்’ பெற்றிருக்கும் முக்கியத்துவம் பற்றிய நுண்குறிப்புகளும் இந்நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன. விருந்தோம்பலைப் பழந்தமிழரின் வாழ்க்கை நெறியாகக் கண்டு காட்டுபவர், “குழந்தைப் பிறப்பு, பெயர் வைத்தல், காது குத்தல், தேர்வில் வெற்றி, உயர்கல்வி பெற்றல், திருமண நிகழ்வு, வளைகாப்பு” என்று யாவற்றிலும் தவிர்க்க முடியாததாக நம் வாழ்வைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வதாக ‘விருந்தை’க் கவனப்படுத்துகிறார். இது பற்றிய விரிவான ஒரு விமர்சனப் பதிவாக, இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மானுட அறம் மீண்டும் தழைத்துச் செழிக்க வேண்டும். அதற்கு நுண்மாண் நுழைபுலம் மிக்க வெ.இறையன்புவின் எழுத்துகள் உதவும் என்பதை இக்கட்டுரை நிறுவியுள்ளது.
மானுடர் அனைவரும் சமம் என்பது ஏட்டளவிலேயே இன்னும் உள்ளது. உலக வழக்கில் அது முழு நிலையில் உறுதியாகவில்லை. பெரும்பாலும் இவ்வுலகில் நடப்பது மக்களாட்சியே என்றாலும், பழைய பெருவேந்தர்களின் ஆட்சிக்குரிய எச்ச சொச்சங்களும் இன்றும் மறைமுகமாகத் தொடரத்தான் செய்கின்றன. போலீஸ், ராணுவம், அரசாங்கம், நீதிமன்றங்கள் இவையின்றித் தங்களைத் தாங்களே மக்கள் ஆண்டுகொள்ளும் அந்தக் காலம் எப்போது வருமோ? இந்தத் தனியுடைமைக் கொடுமைகள் என்று தீருமோ? ஆனால், இப்போதும்கூட நாம் கனவு காணும் அப்படியான ஒரு சமநிலைக் காலம், வரலாற்றில் முன்னெப்போதோ ஒரு கால கட்டத்தில் மக்களின் பழக்கவழக்கங்களில் நிலவியிருந்ததாகப் பொதுவுடமைச் சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள். அத்தகைய சமத்துவமான ஒரு காலத்தில், எல்லாரும் எல்லாமும் பெற்றுக் கூடியிருந்து விருந்தோம்பி வாழ்ந்தார்கள். உழைப்புப் பகிர்வும் உற்பத்திப் பகிர்வும் உடைமைப் பகிர்வும் உரிமைப் பகிர்வுமாக மானுடர் அனைவரும் எல்லாரும் ஒருநிறையாக, எல்லாரும் ஒருவிலையாகச் சரிநிகராகக் கூட்டுக்களியில் திளைத்திருந்த அந்தத் தொல்குடிப் பண்பாட்டிலிருந்து தோன்றியதுதான் ‘விருந்தோம்பல்’ என்கிறார் வெ.இறையன்பு. “சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற தொன்மங்கள், பழமரபுக் கதைகள் எனும் இரண்டும் அச்சமூக இயல்பையும் மாற்றத்தையும் வளர்ச்சிப் போக்குகளையும் பிற பண்பாட்டுக் கலப்பையும் காட்டுவனவாய் உள்ளன“ (2001, ப.290). என்கிறார் பெ.மாதையன். இத்தகைய பிற பண்பாட்டுக் கலப்பால், ‘பழந்தமிழரின் விருந்தோம்பல் மரபு’, வரலாற்றுரீதியாக எவ்வாறு மாறிவந்துள்ளது என்பதைச் சிறப்பாக வெ.இறையன்புவின் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. இதைப் படித்துச் சுவைக்கும் போது, கால்நூற்றாண்டுக்கு முன், நான் எழுதிய ஒரு கவிதை, இதன் இணைப்பிரதியாக, என் நினைவில் ரீங்காரமிடும் ஒரு பொன்வண்டாய் வட்டமிட்டுச் சுற்றிச் சுழன்றுகொண்டேயிருக்கிறது.
“ஒரு சீமாட்டியின் கண்ணிசைவிற்காகச்
சக மனிதனின் இருப்பைக்
கேவலப்படுத்துகிறவர்களோடு
ஜன்னலோர இருக்கையை
ஒரு குழந்தைக்கென
விட்டுக்கொடுக்க மறுப்பவர்களோடு
புடவைகட்டிக் கல்லூரி வந்தவளை
இழுத்துவைத்துக் கேலிபேசிச் சிரிக்கிற
(குட்டைப்பாவாடைச்) சிறுக்கிகளோடு
ஒன்றரை மணி வெயிலில்
வேர்க்க விறுவிறுக்க வந்த மனிதரை
வரவேற்று அனுமதித்து
ஒரு குவளை நீர் கொடுத்து
உபசரிக்கத் தெரியாத
மூடஜென்மங்களோடு
கருமாதிக் கடுதாசியில்
சந்திப்பிழை பார்த்துக்கொண்டிருக்கும் சனியன்களோடு….
இவர்களோடுதான் வாழவேண்டியிருக்கிறது”
இந்த ஒரு குவளை நீர் தந்து உபசரித்தலையே, ‘விருந்தோம்பல்’ என்கிறார் வெ.இறையன்பு. என் கவிதையில் நான், என் எதிர்மறையான நோக்கிலிருந்து, நீர் கொடுத்து உபசரிக்கத் தெரியாதவர்களைக் கடிந்துரைக்கிறேன். ஆனால், உரத்த சிந்தனையாளரான வெ.இறையன்பு அவர்களோ, எப்போதுமே அவர் ஓர் உச்சபட்ச நம்பிக்கைவாதி என்ற அந்த உயர்பண்பிற்கேற்ப, எளிதாக நீர் தந்து விருந்தோம்பத் தெரிந்தவர்களைக் கொண்டாடித் தம் சமூகநல நோக்கைத் தக்கவைத்துக் கொண்டு விட்டார். நம்மிடம் முன்பிருந்து இப்போது இல்லாது போனவை பற்றித் தொடர்ந்து புலம்பிக்கொண்டிருப்பதால் ஒரு பயனுமில்லை; பண்பாட்டின் சிறந்த அம்சங்களை நினைவுகூர்வதன் மூலம் திரும்பவும் நாம் அவற்றைப் புதுப்பித்துக் கொண்டுவிட முடியும் என்கிறார் வெ.இறையன்பு. அவருடைய அப்பெருமித நம்பிக்கையின் ஒரு மனிதநேய வெளிப்பாடே விருந்தோம்பல்.
‘விருந்தாட்டு, விருந்தாடி, விருந்தாளி, விருந்தாற்றுதல், விருந்திடுதல், விருந்தினன், விருந்து, விருந்துக்கூடம், விருந்து சொல்லுதல், விருந்து வைத்தல், விருந்தோம்பல், விருந்தோர்’ எனப் பத்துக்கும் மேற்பட்ட சொற்களைத் தமிழ் அகராதிகளில் காண்கிறோம். இவ்வளவு சொற்கள் காணப்படுவதிலிருந்தே, தமிழ்ப் பண்பாட்டில் ‘விருந்தோம்பல்’ நீண்ட நெடிய ஒரு வரலாறு கொண்டது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ‘இலக்கியத்தில் விருந்தோம்பல்’ என்ற இந்நூலில், நாம் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு அரிய கருத்துகள் நுண்தகவல்களாகவும் பெட்டிச் செய்திகளாகவும் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. யுலிசசின் மனைவியான பெனிலோப், வயதான தம்பதியர் பாசிஸ் – ஃபிலேமன் எனக் கிரேக்கத் தொன்மங்களில் ‘விருந்தோம்பல்’ பெறுமிடமும் கூறப்பட்டுள்ளது. ‘அதிதி’ என்ற வடமொழிச் சொல்லிற்குத் ‘தேதி சொல்லாமல் வரும் உரிமை பெற்றவர்’ எனப் பொருள் காட்டுகிறார். உயிர்க்குச் செந்தண்மை பூண்டொழுகும் அந்தண்மையாகிய விருந்தோம்பலை, ‘அன்பு வண்ணம்’ என்றே தமது நூலில் வெ.இறையன்பு அடையாளப்படுத்துகிறார்.
விருந்தோம்பலைப் பழந்தமிழரின் வாழ்நெறியாகக் கண்டுகாட்டும் வெ.இறையன்பு, “குழந்தைப் பிறப்பு, பெயர் வைத்தல், காது குத்தல், தேர்வில் வெற்றி, உயர் கல்வி பெற்றல், திருமண நிகழ்வு, வளைகாப்பு“ என்று யாவற்றிலும் தவிர்க்க முடியாததாக, மனித வாழ்வைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வதாக ‘விருந்தை’க் கவனப்படுத்துகிறார். மேலும், “உறவினர்களிலேயே ஏழையாக இருப்பவர்கள் வந்தால் சாதாரண உணவைப் பரிமாறுகிற நாம், பணக்காரர்கள் வந்தால் தடபுடலாக எல்லாவகை உணவையும் தயாரித்து இலையை நிரப்புகிறோம்“ என, நம் மேட்டிமை மனப்பான்மையையும் நுட்பமாகச் சுட்டிக் காட்டிவிடுகிறார். துறவறத்தோடு இல்லறத்தையும் தொடர்புபடுத்தி,“துறவறத்தில் ஒன்றை மட்டுமே துறக்கிறார்கள். இல்லறத்தில் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் படிப்படியாய்ப் பலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது“ என்றும் சிறப்பாகப் புலப்படுத்தியுள்ளார்.
தமிழிலக்கியங்களில் காணப்படும் ‘விருந்தோம்பல்’ தொடர்புடைய முக்கியத் தகவல்கள் எதையும் விட்டுவிடாமல் பதிவுசெய்யக் கடுமையாக உழைத்துள்ளார். “விருந்தினரை வரவேற்கப் புன்னகையே பூங்கொத்து; முகப்பொலிவே பொன்னாடை; கண்மலர்ச்சியே கற்கண்டு; வரவேற்கும் விதம் வழிப்பந்தல்; கைகூப்புதல் வாசித்தளிக்கும் வாழ்த்துப்பா” என்றெல்லாம் எழுதும்போது, வெ.இறையன்புவின் மொழிக்குள் ஆகத் தேர்ந்த ஒரு மரபுக் கவிஞர் கம்பீரமாக எட்டிப் பார்க்கிறார். “உணவு வேளையில் சேவகனுக்கு உணவு முதலில் பரிமாற வேண்டும்“ என நபிகள் கூறியுள்ளதாகப் பலருக்கும் தெரியாத கருத்தைப் பதிவு செய்கிறார். அகால நேரத்தில் பரிமாறப்படும் அவசரப் பச்சடி, அதிரடிக் கூட்டு, திடீர் அப்பளம் பற்றியெல்லாம் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் அவரிடம் விழிப்பாகச் செயல்படும் ஊக்கமளிக்கும் உன்னத மனம் காரணமாக, “பலருக்கும் உதவியவர்களைக் கைதூக்கிவிடப் பலரும் முன்வருகிறார்கள்; பகிர்ந்து கொடுத்து உண்டவர்களைச் சமூகம் கைவிடுவதில்லை“ என நற்சொல் உரைக்கிறார். தம் தொலைநோக்குப் பார்வையையும் தவிர்க்காமல் பின்வருமாறு வெளிப்படுத்திவிடுகிறார். “இயற்கையால் உண்டான பஞ்சங்களைவிட மனிதர்களால் உண்டான பஞ்சங்கள் அதிகம்” என்பவர், “வரிசையாக இருக்கிற வீடுகளில் யாருடைய கதவு திறந்திருக்கிறதோ அங்குதான் சென்று உணவைக் கேட்பார்கள்; ஒரு சில வீடுகளுக்குத்தான் சென்று தண்ணீர் கேட்பார்கள்; எல்லாரும் கைக்கடிகாரம் கட்டியிருந்தாலும் ஒரு சிலரிடம்தான் மக்கள் மணி கேட்பார்கள்; யாரை அணுகலாம் என்கிற நுணுக்கம் உலகத்திற்குத் தெரிந்திருக்கவே செய்கிறது“ என்கிறார்.
விருந்தோம்புவதற்குப் “பேரரசு தேவையில்லை; பெருந்தன்மையே தேவை“ என்பதைப் பண்ணனின் வாழ்வு மூலம் விளக்குகிறார். “போர் என்பதே அழிவின் சுருக்கொப்பம்தான்“ என்பவர், “அன்பில்லாத இடத்தில் அறம் வளர்க்கும் வீரமும் சாத்தியமில்லை என்பதைத் தமிழ் மரபு நிலைநாட்டி வருகிறது“ என்றும் கூறித் தமிழ் உணர்வூட்டுகிறார். “மகிழ்ச்சியை நல்ல உள்ளங்களோடு பகிர்ந்து கொள்கிறபோது, அது பன்மடங்காகும்“ என்று இலட்சிய நிலையில் திளைத்தாலும், “இன்றுகூட நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில் விருந்தினர் வந்துவிட்டால் அவர்கள் அமர வசதியாகப் பக்கத்து வீட்டிலிருந்து இருக்கைகளை வாங்கிவந்து அமரச்செய்வது வழக்கம்“ என யதார்த்தத்தையும் தொட்டுக்காட்டிவிடுகிறார். வீர வாளையும் யாழையும் அடகு வைத்து ‘விருந்து’ பேணிய நிகழ்வைப் புறநானூறு மூலம் காட்டிப் ‘பணையம்’ என்ற சொல்லின் பழைமையைச் சுட்டுவதுடன், கடனுடன் பட்டேனும் கல்யாணப் பந்தியைச் சிறப்பிக்கும் மரபின் தொடர்ச்சியையும் புரியவைத்துவிடுகிறார். “விருந்தோம்புகிற சமூகம் பாதுகாப்பானதாக இருக்கும்; அங்குப் பசியும் பட்டினியும் தலை தூக்கவே முடியாது“ எனப் பத்துப்பாட்டைத் துணைக்கழைத்து விளக்கும்போது, இன்றைய சமூகம் ஏன் பாதுகாப்பற்றதாக இருக்கின்றது என்ற வினாவுக்கும் குறிப்பாக வெ.இறையன்பு விடையளித்துவிடுகிறார்.
பிரம்ம வேள்வி (வேதம் ஓதுதல்), தேவ வேள்வி (ஹோமம் வளர்த்தல்), மனித வேள்வி (விருந்தோம்பல்), தென்புலத்தார் வேள்வி (எள்ளும் நீரும் இடுதல்), பூத வேள்வி (பலி தருதல்) ஆகிய ஐம்பெரும் வேள்விகளில் தலைசிறந்த ‘மனித வேள்வியாக’க் கருதப்படுவது விருந்தை ஓம்புவதாகும். இது ஒத்த அன்புடைய கணவனும் மனைவியும் சேர்ந்து செய்வதற்குரிய சிறந்த அறமாகப் பழந்தமிழ்ப் பண்பாட்டில் கற்பிக்கப்பட்டுள்ளது. “அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல்” ‘விருந்தோம்பல்’ என்கிறார் தொல்காப்பியர். இந்த விருந்தில் மன்னர்களும் மக்களும் விரும்பிப் பங்கேற்றுள்ளனர். இது குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம் என்ற ஐந்திணை நிலங்களிலும் செயல்பட்டுள்ளதைச் சங்கப் பனுவலால் அறிகிறோம். இதைச் சிறப்பாக நிறைவேற்றப் பொருள் தேடித் தலைவன் பிரிவதுமுண்டு. கோவலனோடு கூடிவாழ்ந்து விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே எனக் கண்ணகி வருந்துவதைச் சிலம்பு காட்டுகிறது. இல்லற வாழ்வின் ஓர் இணைப்புப் பாலமாகவே ‘விருந்து’ அமைகிறது. ‘தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றத்தார், தான் எனும் இல்லறத்தான்’ ஆகிய ஐவரும் விருந்தாகப் பழந்தமிழரால் ஏற்கப்பட்டனர். இவர்களில் தென்புலத்தார் என்போர், இறந்துபோன நம் முன்னோராவர். இந்த உலகம் பயன்பட வாழ்ந்துவிட்டு மறைந்த சான்றோர், நமது நடுகல் வழிபாட்டு மரபில் தெய்வங்களாகக் கருதப்பட்டுப் படையலிட்டு வணங்கப்பட்டனர். நமது உறவினரும் நண்பருமல்லாத புதியோராக நம்மிடம் வரும் அனைவரையும் நாம் ‘விருந்தினர்கள்’ என்றோம். உறவினரே சுற்றத்தார் என்பது கண்கூடு. தன்னைப் பெற்றோர், தன்னுடன் பிறந்தோர், தன் மனைவி, தன் மக்கள் ஆகியோரைப் பேணுவதே இல்வாழ்வானின் இயல்பாகும். இந்த ஐந்துமே தவறக்கூடாததாயினும், முதலிருவரான தென்புலத்தாருக்கும் தெய்வத்துக்கும் நாம் செய்யும் கடன், நமது கண்ணுக்குத் தெரியாதோருக்கு நாம் செய்வதாகும். சுற்றத்தாரும் இல்லறத்தானும், ‘(பிறர்க்கு) ஈதல்’ என்ற அறத்துக்குள் அடங்காதவராவர். எனவே, ‘விருந்தோம்பலே’, அறங்களுள் தலைசிறந்ததாகிறது. (இது தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயிலாகவும் கருதப்பட்டுள்ளது). இந்தப் பண்பாட்டு விழுமியம் அருகி வரும் இன்றைய நிலையில், அதற்குப் புத்துருவம் தரும் சமகாலத் தேவையைக் கருதியே, ‘இலக்கியத்தில் விருந்தோம்பல்’ என்ற இந்நூலைச் சமூகப் பொறுப்புணர்வுடன் வெ.இறையன்பு இயற்றியுள்ளார்.
தொன்மையான மரபிலிருந்து நாம் உடனடியாக இக்காலத்தில் உள்வாங்கியாக வேண்டிய அறமாக விருந்தோம்பலை வெ.இறையன்பு முதன்மைப்படுத்துகிறார். “சங்க இலக்கியப் பாடல்களைப் பாடியவர்களின் பல்வேறு அந்தஸ்து நிலைகளுடன் (பாணர், புலவர், அரசப் புலவர், பெண்பாற் புலவர்) பாடல்களை இணைத்து அவற்றில் காணப்படும் தொடர்புகளை இனங்காண வேண்டும்” (2006, ப.383) என்பார் அம்மன்கிளி முருகதாஸ். இது பற்றி வெ.இறையன்பு தனிக் கவனம் ஏதும் கொண்டுள்ளதாகக் கூற முடியவில்லை. சங்க இலக்கியம் என்ற ஒரு பெருந்தொகுதிப் பனுவலைப் பொதுவில் மனங்கொண்டே தம் கருத்துகளை அவர் பகிர்ந்துள்ளார். இவ்வகையில், பழங்குடிச் சமூகப் பாடல்களாகத் தனித்துவ அடையாளமற்ற ஒரு பொதுச்சமூகத்தின் கூட்டுநினைவுப் பாடல்களாகச் சங்கப் பாடல்களை வெ.இறையன்பு கருதுவதன் சிறப்பும் அறியத்தக்கதாகும். இன்று நாம், மரபும் புதுமையும் சந்திக்கும் ஒரு காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறோம்.
கணியன் பூங்குன்றனின் தத்துவநோக்கைப் பலரும் ஒரு வணிகனின் குரலாகவே கண்டு விமர்சிக்கும் நம் சமகாலச் சூழலில், பெருஞ்சித்திரனாரின் புறநானூற்றுப் பாடலைச் (பாடல்:163) சான்று காட்டி, “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற மனம், தனித்துப் பிட்டு வைக்கப்பட்ட ஒன்று என்று கருத வேண்டியதில்லை. ஏனென்றால், சங்க இலக்கியங்கள் முழுவதுமே அந்த ஒழுங்கமைதியைப் பார்க்க முடியும்” எனப் பழந்தமிழ்ப் பண்பாட்டைப் புகழ்கிறார் வெ.இறையன்பு. “விருந்தோம்பும் பண்பே சான்றாண்மையின் அளவுகோல்” என்றும், “அடுத்தவர்களுக்கு உதவுவது என்பதன் நீட்சியே விருந்தோம்பல்” என்றும் மிக மிகச் சுருக்கமாகத் தொகுத்துரைக்கிறார். தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, திருக்குறள், நாலடியார், பிற கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரிய புராணம், குமரகுருபரர், பிற காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இடைக்கால ஒளவையாரின் நீதி நூல்கள், தனிப்பாடல்கள், பாரதிதாசனின் குடும்ப விளக்கு எனத் தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துகளின் பிழிவாயிருப்பதோடு, மேலைப் பண்பாட்டில் ‘விருந்தோம்பல்’ பெற்றிருக்கும் முக்கியத்துவம் பற்றிய நுண்குறிப்புகளும் இந்த நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன. அறிஞர் ‘ரே பேர்ட் விசில் (Ray Bird Whistle)’, “நம் முகம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றது” எனக் கூறியிருப்பதையும் வழிமொழிகிறார். இவ்விதமான பல புதிய புதிய கருத்துகள், இந்நூல் நெடுகிலும் ஒளிவீசுகின்றன.
‘விவேக சிந்தாமணி’ உள்ளிட்ட அற நூல்களில் கூறப்பட்டுள்ள உயர்கருத்துகளை, இன்றைய வாசகர்களுக்குச் சுவையான ‘நல்விருந்தாக’ப் படைத்தளித்துள்ளார் வெ.இறையன்பு. எனினும், “எதிரில் பேசும் மனையாளின் பேய் நன்று“ என்பது போன்ற பெண் விரோதக் கருத்துகளை அவர் கண்டித்திருக்கலாம் எனக் கூறத் துணிகிறேன். இத்தகைய கருத்துகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கும், இந்நூலில் சில சான்றுகள் உள்ளன. “சமைப்பதும், வீட்டு வேலை சலிப்பின்றிச் செயலும், பெண்கள் தமக்கே ஆம் என்று கூறல் சரியில்லை, ஆடவர்கள், ‘நமக்கும் அப்பணிகள் ஏற்கும்‘ என்றெண்ணும் நன்னாள் காண்போம்!“ எனப் பாவேந்தரை மேற்கோளிடுவதோடு, ‘ஆண்கள் சமைப்பது குற்றமில்லை’ என்னும் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வனின் கருத்தையும் பரிந்துரைக்கிறார். இவற்றால் வெ.இறையன்பு சுவீகரித்துள்ள நவீனப்பார்வையை அறிகிறோம். ஓரிரு சான்றுகள் மட்டும் காட்டுகிறேன். “இன்று உலகில் மிகப் பெரிய உணவு விடுதிகளின் உரிமையாளர்களாக இருப்பவர்கள், ஒருகாலத்தில் உணவகங்களில் பரிமாறுகிறவர்களாக இருந்தார்கள்” எனப் பரிமாறுவோர் உழைப்பைப் போற்றிப் பெருமைப்படுத்துகிறார். “மனிதனாகப் பிறந்தவர்கள் பசியோடு இருப்பவர்களை உபசரிப்பது பண்பாடாக இருந்ததே தவிர, வழிபாடாக இருந்ததில்லை“ எனப் பகுத்தறிவையும் எடுத்துரைக்கிறார். “மனிதன் கிழக்கானாலும் மேற்கானாலும் ஒரேமாதிரியாகத்தான் குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறான் என்பதையும், அவனுடைய பொதுப்படையான அறத்தில் நுண்ணிய வேறுபாடுகள் இருந்தாலும் அது மானுடத்தைச் செழிக்க வைக்கும் விரல்களாகவே ஒரே உள்ளங்கையை நோக்கி நீள்கின்றன என்பதையும் உலக இலக்கியங்களை வாசிக்கும்போது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது“ என்கிறார். இப்படியான ஓர் உலக நோக்குடன் கூடிய பெருந்தன்மையான புரிந்துகொள்ளலே, வெ.இறையன்பு இயங்கும் கருத்தியல் தளமாகும்.
மேல்நடக்கும் வழிதெரியாமல் தடுமாறுபவர்களுக்காக மட்டுமில்லை; அல்லலுற்று ஆற்றாது அழுவோர் பற்றிய பரிவேயின்றித் தாம் முன்செல்வதிலேயே குறியாய் இருப்போரையும் திருத்திப் பணிகொள்ளும் நல்நோக்கிலேயே வெ.இறையன்பு எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார். நம் வள்ளுவரும் ஒளவையாரும் நடந்த தடம் இது. இது பற்றிய ஓர்மையுடன்தான், மக்களுக்குப் பயன்படும் அறப் பனுவல்களைச் சமகால மொழியில் நவீன நோக்கில் வெ.இறையன்பு புனைகிறார். இது ஒரு பெரும் பணி. கைம்மாறு கருதாத கடப்பாடு. தமிழ்ச் சமூகத்திடமிருந்து தாம் பெற்றதைப் பேச்சாய் எழுத்தாய் மீண்டும் தமிழ்ச் சமூகத்துக்கே திருப்பி விடும் பெருமழையாய்ப் பொழிந்துகொண்டிருக்கிறார். இந்தப் பெருமழையில் நாம் மகிழ்ச்சியாய் நனைகிறோம். இங்கே நம் அறிவு விரிவுறுகிறது; அகண்டமாகிறது நம் இதயம்.
வெ.இறையன்புவின் எழுத்துகளின் முதன்மை நோக்கம் யாது? நாம் தவறவிட்ட மானுட வாழ்வின் இனிமையான தருணங்களை நம் கண்முன் திரும்பவும் கொண்டுவந்து நிகழ்த்திக் காட்டி, நம்மை வாழ்வாங்கு வாழவைக்க நினைக்கும் அவரின் பண்பட்ட அன்பின் ‘பால் மன வண்ணமே’ நம்மைப் பெரிதும் ஈர்க்கிறது. உற்சாகம், நம்பிக்கை, இயக்கம், வாழ்க்கைப் பிடிப்பு என்ற ஆரோக்கியமான பல சிந்தனைகளின் பெருந்தொகுதியாகவே அவரது எழுத்துகள் ஒருங்கிணைந்து நம் முன் திரள்கின்றன. ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்றும், ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’ என்றும் உயிர் மீட்டும் நம் தமிழ்ச் சான்றோரின் சொற்களையே தம் சுய மொழியில் அவர் அள்ளியள்ளித் தருகிறார். இத்தகைய ‘மானுட வாழ்க்கை விருப்பு’ப் பார்வைதான், ‘விருந்தோம்பல்’ பற்றிய அவரின் சிந்தனையிலும் கோலோச்சுகிறது. தமிழக இளைஞர்கள் அலுக்காதும் சலிக்காதும் முன்னேற எண்ணித் துடுப்புப் போடும் வாழ்க்கைக் கடலில், வெ.இறையன்பு, ஒரு துடிப்பான கலங்கரை விளக்காய் வழியும் ஒளியும் காட்டிக் கொண்டிருக்கிறார். இது ஒரு புத்தொளி. இது நம்மைக் கரைக்கு வழிநடத்துவதோடு அமைவதில்லை; பெருந்திரள் மக்கள் கூட்டமாகப் பெருமிதத்தோடு நாம் அனைவரும் மனிதர்கள் என்று நம்முள்ளே நாம் பண்படுவதற்குரிய சரிநிகர் சமானப் பொதுநிலையையும் இது அறிவுறுத்துகிறது. “யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்“ என்ற அப் பொதுமைக் குரலே, ஊக்கப்படுத்தி உரமூட்டும் சொற்களூடே, வெ.இறையன்புவின் நூல்களெங்கும் விளக்கமுறுகிறது.
விருந்தோம்பலின் மாண்பறியும் வருவிருந்தாகவும் (Guest), தருவிருந்தாகவும் (Host) நாம் உருமாறுகிறோம். வேர்க்க விறுவிறுக்க வெயிலில் வருவோரை முன்சென்று வரவேற்று ஒரு குவளை நீர் கொடுத்துக் களைப்பாற்றி இளைப்பாற்றும் அரிய கலையே இன்றைய தேவை என்கிறது இந்நூல். தனிமையிலிருந்து மனிதர்கள் வெளியேற வேண்டுமானால், விருந்தோம்பலே நல்வழி என்கிறார் வெ.இறையன்பு. “செல்வத்துப் பயனே ஈதல்” (புறம்:189) என்றார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். “ஈதல் இசைபட வாழ்தல்“ என்றார் வள்ளுவர். இதுவே பழந்தமிழரின் நெறி. ஆனால், இன்று நாம் எப்படியுள்ளோம்? சுயநலக் கூடாரங்களாகிவிட்ட நம் நகரங்களை விட்டுவிடுங்கள்; பண்பாட்டுப் பெட்டகங்களான நமது முன்னோடிக் கிராமங்கள்கூட இன்று எப்படியுள்ளன? “கிராமத்துத் தெருக்களில்கூடத் திண்ணைகள் இல்லை; அப்படியிருந்தால் அவை காலியாகக் கிடக்கின்றன“ என்கிறார் வெ.இறையன்பு. எப்படியிருந்த நாம் ஏன் இப்படியாகிவிட்டோம்! இந்த நம் மாற்றம் விரும்பத்தக்கதா? என்ன சொல்கிறார் வெ.இறையன்பு? “தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அறம், கிழக்கிலும் மேற்கிலும் பொதுவாக இருந்திருக்கிறது“ என்கிறார். இத்தகைய மானுட அறம் மீண்டும் தழைத்துச் செழிக்கவேண்டும். அதற்கு நுண்மாண் நுழைபுலம் மிக்க வெ.இறையன்புவின் எழுத்து உதவும் என்பது திண்ணம்.
துணைநூல்கள்
- அ.தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், 2017, ஐந்திணை பதிப்பகம், சென்னை. அம்மன்கிளி முருகதாஸ், சங்கக் கவிதையாக்கம்: மரபும் மாற்றமும், 2006, குமரன் புத்தக நிலையம், கொழும்பு – சென்னை.
- கி.பத்மாவதி, ஆழ்வார்கள் அருளிச்செயலில் வாழ்வியல் சிந்தனைகள், முதற்பதிப்பு : 2013, இலக்கியவீதி வெளியீடு, சென்னை.
- கெ.அய்யப்பப் பணிக்கர், இந்திய இலக்கியக் கோட்பாடுகள் (சூழல் – பொருத்தம்), ந.மனோகரன் (மொழிபெயர்ப்பாசிரியர்), முதற்பதிப்பு : 2012, மாற்று வெளியீட்டகம், சென்னை.
- சிலம்பு நா. செல்வராசு, சங்க இலக்கிய மறுவாசிப்பு, முதற்பதிப்பு : 2005, காவ்யா பதிப்பகம், சென்னை.
- பக்தவச்சல பாரதி, தமிழர் மானிடவியல், முதற்பதிப்பு : 2002, மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.
- பெ.மாதையன், வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும், முதற்பதிப்பு:2001, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சாவூர்.
- பொ.சங்கரப்பிள்ளை, சைவ சித்தாந்தம், முதற்பதிப்பு : 1985, குமரன் பதிப்பகம், சென்னை.
- மயிலை. சீனி. வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மூன்றாம் பதிப்பு : 2003, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
- வெ.இறையன்பு,இலக்கியத்தில் மேலாண்மை, திருத்தப்பட்ட மறுபதிப்பு : ஆகஸ்ட் 2017, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
- வெ.இறையன்பு, இலக்கியத்தில் விருந்தோம்பல், முதற்பதிப்பு : 2020, கற்பகம் புத்தகாலயம், சென்னை.
- எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம், முதற்பதிப்பு: 2010, அலைகள் வெளியீட்டகம், சென்னை.
- Sathish B.Mathur, A to Z of Management Mantras, 2018, Jaico Publishing House, Mumbai.