தி.ஜானகிராமனுடன் ஒரு நெடும் பயணம் :
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், எருக்காட்டூர் (சங்கப் புலவர்களுள் ஒருவரான தாயங்கண்ணனாரின் ஊர்) என்ற ஒரு குக்கிராமத்தில், ஒரு வாழ்ந்து கெட்ட பிராமணக் குடும்பத்தின் ஐந்தாவது கடைசிப் பிள்ளையாகப் பிறந்தேன். நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய நிலக்கிழாராக இருந்த என் தந்தையார் திடீரென இறந்துபோனார். அம்மா வழிப்பட்டுச் சிறுவயது முதலே தமிழ்ப் பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் எங்கள் வீட்டில் இருந்தது. எனக்கு மூன்று அக்காக்கள். அவர்கள் குமுதம், கல்கி, ஆனந்த விகடன், சாவி, இதயம் பேசுகிறது ஆகிய பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளை விரும்பிப் படிப்பவர்களாக இருந்தார்கள். நான் பிறக்காததற்கு முன்பு வந்த பல தொடர்கதைகள்கூடப் பைண்டு வால்யூம்களாக எங்கள் வீட்டில் இருந்தன. பெரியவர் சிறியவர் தரமானவர் தரமற்றவர் என்றெல்லாம் எந்தப் பேதமும் தெரியாமல் வகைதொகையின்றிப் பல எழுத்தாளர்களின் கதைகளையும் புரிந்தும் புரியாமலும் என் வளரிளம்பருவத்தில் வாசித்திருக்கிறேன். மிகயதேச்சையாக ஆத்மாநாம் கவிதையுடன் ஒரு பரிச்சயம் ஏற்பட்டதும் அப்படித்தான். அப்பா சாவுக்குப் பிறகு, ஒரு தனிமை என் மனதில் எப்படியோ வந்து புகுந்துவிட்டது. என் அம்மாவழித் தாத்தாவின் ஊர் மேலக் கொட்டையூர். விடுமுறைக்கு அங்கே செல்லும்போது, அதிகமான பத்திரிகைகளையும் நூலகம்வழித் தனிநாவல்களையும் வாசிக்க நேர்ந்தது. அப்படி என் பதினைந்தாம் வயதில் நான் வாசித்த நாவல்தான் மரப்பசு. அதில் வரும் அம்மணியின் சிரிப்பு எனக்குப் பிடித்திருந்தது. அன்றைய எருக்காட்டூரில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த சில பெரும் படிப்பாளிகள் இருந்தார்கள். நண்பன் சுந்தரபுத்தனின் தந்தையார் ஒளிச்செங்கோ, பள்ளி இடைவேளையில் அவர் வீட்டு மண்பானைத் தண்ணீர் குடிக்க நாங்கள் செல்லும்போதெல்லாம், சிறுவர்களாயிற்றே என்றெல்லாம் யோசிக்காது உணர்வுபூர்வமாகப் பெரியார் பற்றிப் பேசுவார். இவர் போன்றவரால்தான், இவர்கள் கொளுத்திய பகுத்தறிவின் வெளிச்சத்தால்தான், அம்மணியின் சிரிப்பு எனக்கு உறைத்தது. கல்யாணப் பந்தலை, மணமகனை, மணமகளை, நாயனம் வாசிப்பவரை, புருவந்தூக்கும் கவலைகளை, முகங்களில் படர்ந்திருக்கும் பூசணி வெள்ளைகளை என எதைப் பார்த்துத்தான் அம்மணி சிரிக்கவில்லை? யாராவது செத்துப் போய்விட்டார்கள் என்று கேட்டால்கூட அவளுக்குச் சிரிப்புதான் பொங்கிக்கொண்டு வருகின்றது. கதை படித்தால், நாடகம் பார்த்தால், குதர்க்கம் பேசுகிறவர்களைக் கண்டால், கலர்ச்சட்டை போடுகிறவர்களையும் கரடி மயிர் வளர்க்கிறவர்களையும் எதிர்ப்பட்டால் சிரிப்புதான்! தானும் தன் குடும்பமும் உலகையே ஆளப் பிறந்தவர்கள், அதற்காகவே தங்களை மட்டும் ஆண்டவன் தனி புத்தி சாதுர்யங்களுடன் படைத்திருப்பதாக நம்பும் கோமளம், எட்டுவித மாத்திரைகளைத் தினமும் விழுங்கித் தன் உடலுள்ளேயே க்யூபிசத்தையும் சர்ரியலிசத்தையும் உடன்வைத்து வாழ்வதைப் பார்த்து அழலாமோ? சிரிப்பதுதானே நியாயம் என்று கேட்கிறாள் அம்மணி. நவீனத் தமிழிலக்கியத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காத ஒரு பெண்ணின் சிரிப்பு. பாஞ்சாலிக்கு நிகரான ஆனால் hypocracyக்கெதிரான அபத்தச் சிரிப்பு இது.
ப்ளஸ் ஒன் படிக்கச் சென்னை வந்தபின் அம்மா வந்தாள், மோகமுள் என்று தொடர்ந்து வாசித்து இருபதுவயதிற்குள்ளேயே தி.ஜானகிராமனின் நாவல்களை முடித்துவிட்டேன். தாம்பரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் அருமையான ஒரு தனியார் நூலகம் இருந்தது. அதில் நானும் என் நண்பன் சைபர்சிம்மனும் போட்டி போட்டுக்கொண்டு கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், ஜானகிராமன் ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புகளை வாசித்த காலம் நினைவில் இப்போதும் இனிக்கிறது. அம்மா வந்தாளைப் படித்துவிட்டுப் ‘பார்த்தசாரதி பெருமாளோட கண்ணுக்கு முன்னால இருக்கிற குளத்திலேயே பாசி மண்டிக் கிடக்கு. வருஷக்கணக்கிலே அந்தப் பழந்தண்ணியைப் பார்த்துண்டிருக்கார் பகவான் – நாதி இல்லாம’ என்று சிவன் கோயில் வாசலையே மிதித்திராத பரம வைஷ்ணவியான என் தாயாரிடம் துடுக்குத்தனமாகப் பேசியிருக்கிறேன். இந்து சொல்லும் ‘அந்தராத்மாவுக்கு விரோதமாக ஒரு காரியம் செய்யறதும், பேசறதும்தானே பாவம்’ என்ற அவ்வரியை இன்றுவரை ஆயிரம்முறையாவது மனசில் அசைபோட்டிருப்பேன். பலராலும் இன்னும் சரியாகக் கண்டுகொள்ளப்படாத ‘மலர் மஞ்சம்’ படித்தபோது, அது என் அந்தரங்கமான உலகத்திற்குள் அத்துமீறி ஜானகிராமன் பிரவேசித்துவிட்டது போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘பரதேசி வந்தான்’ கதையின் இறுதியில் வரும் ‘ஓய் கால தேவரே, உட்கார்ந்து பேசுமேன். கால் வலிக்கவில்லையா?’ என்ற சொற்பிரயோகத்தை இக்கணம் உணர்ந்தாலும் மெய்சிலிர்க்கிறது. தீராவியப்பின் உயிர்த்திளைப்பாகத் தி.ஜானகிராமன் எனக்குள் தொடர்ந்து சிறகடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்ச் சமூகம் இன்றும் ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்ற பழைய ஆணாதிக்கச் சமூகம்தான். தொண்ணூறுகளுக்கு முந்தைய முன்னோடித் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் மனைவியைக்கூடச் சரியாகக் காதலிக்கத் தெரியாதவர்களாயிருந்து மறைந்த பெரியவர்கள்தாம். இவ்வளவு இறுக்கமான ஒரு சமூகத்தில், இந்தக் கட்டிறுக்கத்தை உடைக்கப் பார்க்கும் தி.ஜானகிராமனின் எழுத்துகளுக்குப் ‘பாலியல் எழுத்து’ என்ற ‘பழி’ பூசப்படுவதும் இயல்புதான். நமது முக்கியமான அதிர்வேட்டு விமர்சகர்களும் பழந்தலைமுறை எழுத்தாளர்களும் ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரர்கள். அந்தரங்கமாகத் தாங்கள் ரசிப்பதை வெளியில் மறைத்துப் பேசியே பழக்கப்பட்டவர்கள். அவர்கள்தாம் ஜானகிராமனைப் பற்றிப் பாலியல் முத்திரையிட்டுவிட்டார்கள். ஆண் பெண் உறவு என்பது எவ்வளவு அருமையானது! அதன் அடிநாதமாக இருப்பது என்ன என்ற ஒரு வினாவைத் தம் படைப்புகள்தோறும் மேற்கிளப்பித் துருவிய ஒரு பெருங்கலைஞனை, இவருடைய கதைகள் எல்லாமே இப்படிப்பட்ட உறவு மீறல்களைச் சித்திரிப்பவையே, எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுகிறார் இவர், யதார்த்தத்திற்குப் புறம்பான கனவுகளையே இவை பேசுகின்றன என்று அயராது சொல்லிச் சொல்லியே தமக்கு மட்டும் புனிதப் பீடமெழுப்பிக்கொண்டு தி.ஜானகிராமனைத் தீர்த்துகட்டப் பார்த்தார்கள்; பார்க்கிறார்கள். பார்ப்பனப் பெண்களைச் சலனசித்தம் கொண்டவர்களாகவும் சோரம் போகிறவர்களாகவும் மீண்டும் மீண்டும் காட்டுகிறார் என்ற சநாதனக் கோபத்துக்கும் இதில் குறிப்பான ஒரு பங்களிப்புண்டு. இன்னொரு புறத்தில், பார்ப்பன மொழியில் பார்ப்பனர்களைப் பற்றியே எழுதியவர் என்ற பகுத்தறிவு சார்ந்த அரசியல் விமர்சனமும் சேர்ந்துகொண்டது. இவ்வாறாகப் பழைமையின் பாசி இறுகி வெளித்தெரியாமலேயே உட்படிந்திருக்கும் எதிர்விமர்சனங்களை, இந்தப் புதிய நூற்றாண்டு மிக விரைவாகப் பின்தள்ளிக் கொண்டிருக்கிறது. வேறெப்போதைவிடவும் இப்போதுதான் வலுவாகத் தி.ஜானகிராமன் மறுஉயிர்ப்புப் பெற்றுள்ளார். இன்னொன்றையும் கூறிவிடவேண்டும். அன்றும் இன்றும் பெண்களால் விரும்பிப் படிக்கப்படும் தீவிரப் படைப்பாளி தி.ஜா.தான் என்பது சந்தேகமில்லாத உண்மை. இதனாலெழுந்த நிறையப் பொறாமைகளும்கூடத் தி.ஜானகிராமன் பற்றிய எதிர்விமர்சனங்களுக்குக் காரணமாயிருந்திருக்கலாம் என்று யூகிக்கிறேன். இதற்கிடையில் சில பெண்ணிய விமர்சனங்களும் தி.ஜானகிராமனைப் பதம் பார்த்திருக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னாலும், தாக்குப்பிடித்துத் தி.ஜானகிராமன் ஒரு முன்வரிசைக் கலைஞராகவே தொடர்ந்து நீடித்திருப்பது அவரின் தனித்துவமான பன்முகக் காட்சி எழுத்தின் திறனாலேயே என்பதையும், தி.ஜா.வைப் பற்றிப் பேசாமல் நவீனத் தமிழ் இலக்கிய வெளி அவரை ஒருபோதும் அமுக்கிக் கடந்துவிட முடியாது என்பதையும் மனங்கொள்ளவேண்டும்.
இந்த மண்ணின் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தும் உருத்திரண்டிருக்கும் அதே வேளையில், சமகால மதிப்புமுள்ள அபூர்வமான எழுத்து தி.ஜா.வின் எழுத்து. அவரே சொல்லியிருப்பதுபோல், tradition என்கிற மரபைப் பேணிக்கொண்டு, conventions என்கிற கட்டுப்பாடுகளைப் புறந்தள்ளி முன்நகரும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத ஆழ்மன வெடிப்புகள் அவை. தி.ஜா.வின் தந்தை தியாகராஜ சாஸ்திரி, கதாகாலட்சேப மரபைச் சேர்ந்தவர். தந்தையின்வழிப் பத்துப் பன்னிரண்டு வயதிற்குள்ளேயே வால்மீகி இராமாயணத்தைத் தமக்குள் உட்செரித்துக் கொண்டவர் தி.ஜா. தமிழ்ப் பண்டிதரான தம் நண்பர் கரிச்சான்குஞ்சு மூலமாகத் தமிழிலக்கியத்தின் செழிப்பான பல பகுதிகளுடனும் போதுமான பரிச்சயம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஐரோப்பிய இலக்கியத்தின் சாதனைப் படைப்புகளையும், மாபெரும் ருஷ்யப் படைப்பாளிகளையும் ஆழமாகப் படித்தறிந்தவர் அவர். சாஸ்திரிய இசையிலும் நடனத்திலும் ஊர்த் திருவிழாக் கூத்துகளிலும் கோயில் கலைகளிலும் தேர்ந்த ரசனை அவருக்குப் பால்யம் முதலே வசப்பட்டிருந்தது. பிற பல கலைகளுடன் படைப்பிலக்கியத்தை இணைத்ததிலும் அவரின் பங்களிப்பு மிகப் பெரிது. தஞ்சை டெல்டா என்ற நிலவியல் பின்னணியையும், காவிரியோடு இயைந்த இயற்கை வாழ்வின் நுணுக்கங்களையும், வட்டார மொழியின் நெளிவுசுளிவுகளையும், உயர்ந்த இசையின் ஆழ்ந்த அமைதியையும், லெளகீகத்தை ஒதுக்கிவிடாத பண்பட்ட ஓர் அக விரிவையும் ஒருங்குகூட்டிச் செய்த ஆத்மார்த்தமே அவர் எழுத்து. அவர் எதைப் பற்றி எழுதினாலும், அதைப் படிப்பவர்களின் ஐம்புலன்களையும் உள்ளீர்த்துக்கொள்ளும் ஒரு விசேஷமான நம்பகத்தன்மையையே, அவர் புனைவின் ஆகப்பெரும் கலையம்சமாகக் காண்கிறேன். புனைவு அவருக்குப் புதிரெல்லாம் இல்லை; ஆகப்பெரும் அகத்தெளிவு. தி.ஜா.வை நாம் வாசிக்காவிட்டால், இழப்பதற்கு அவருக்கு ஒன்றுமில்லை. நமக்கோ பெறுவதற்குப் புத்தம் புதிய புனைவுலகம் ஒன்று இல்லாதொழிந்துவிடும்.
தி.ஜானகிராமனின் படைப்புகளில் இடம்பெறும் ஆண் மாந்தர்களைப் பற்றி (472 பேர்!), 2001இல் என் முனைவர் பட்ட ஆய்வை முடித்தேன். அதை இன்னும் நூலாக்கவில்லை. கு.ப.ராஜகோபாலனின் ஒரு செழுமையான விளைச்சலாகவே தி.ஜா. உருப்பெறுகிறார். இவ்விருவரையும் கறாராகவும் சரியாகவும் புரிந்துகொள்ளும் முயற்சியில் இருபது ஆண்டுக்கும் மேலாகக் கவனம் செலுத்தி வருகிறேன். இவர்களை ஒருங்கிணைக்கும் (அ) பிரித்துவிலக்கும் இடைவெளிகளையும் மெளனங்களையும் மொழிவழிப்படுத்திப் புரிந்துகொள்வதில் ஒரு திருப்திகரமான கருத்துநிலை இன்னும் எனக்குக் கூடிவந்து விடவில்லை. இதற்காகக் கடந்த ஒன்பதாண்டாக, எனக்கு நானே பேசிக்கொள்ளும் ஒரு பாவனையில், தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களில் பேசிவருகிறேன். சென்னை தி.நகர் கிருஷ்ணகான சபாவில், பெரியவர் ‘இலக்கிய வீதி’ இனியவன் அழைப்பிற்கிணங்கிப் பேசத்தொடங்கியது முதல் வாசகசாலையினரின் கூட்டங்கள் வரையில், பின் கரோனா காலக் கல்லூரி மற்றும் பிற இலக்கிய அமைப்பு நிகழ்வுகள் எனக் ‘கூகுள் மீட்களாக’ இருபது முப்பது கூட்டங்களிலாவது பேசியிருப்பேன். அன்பு நண்பர் பெருமாள்முருகன், கவிஞர் சுகுமாரன், ஸ்ரீநேசன், ராணி திலக், இயக்குநர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன், கனடா நண்பர் அகில், காசிமாரியப்பன், வழக்கறிஞர் அருள்மொழி, ஓவியா மேடம் ஆகிய பலரோடு (இன்னும் சிலரும்கூட உண்டு!) அவ்வப்போது பேசும் நீண்ட தொலைபேசி உரையாடல்களிலும் கணிசமான இடம் தி.ஜா.வுக்குத்தான். பேச்சு, பேச்சு, தி.ஜா.வைப் பற்றி ஓயாத பேச்சு! பேசிப் பேசியே பின் எழுத்துக்கு நகரும் ஒரு பழக்கம் எனக்கு.
முதலில் தி.ஜா.வின் நூற்றாண்டுக்காகத் தனிநூல் ஒன்று எழுதிவிடும் திட்டத்தில்தான் இருந்தேன். என் மீது பேரன்பும் பெரும் நம்பிக்கையும் வைத்துள்ள தி.ஜானகிராமனின் மகள் உமா சங்கரி மேடம் வேறு, இந்நூற்றாண்டுத் தருணத்தில் இல்லாவிட்டால் வேறு எப்போது நீ தி.ஜா. பற்றி எழுதுவாய் எனச் சதா என்னைத் தூண்டிக்கொண்டேயிருந்தார். ஒரு நூறு பக்கங்கள் வரையில் எழுதியும்விட்டேன். கூடவே தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு கருத்தரங்குகளை என் நண்பர் முனைவர் சீதாபதி ரகுவுடன் இணைந்து உமா மேடமின் வழிகாட்டலில் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டேன். கோவையில் கருத்தரங்கைச் சிறப்பாக நடத்துவதற்கு நண்பர் எழுத்தாளர் சு.வேணுகோபால் மனம் உவந்து பொறுப்பேற்றார். ஆனால், கரோனா குறுக்கே வந்தபின், நாங்கள் திட்டமிட்டபடி கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தி.ஜா.வின் நூற்றாண்டுக் கருத்தரங்குகளை நடத்த முடியாமல் போய்விட்டது. அத்தருணத்தில் மனதில் உதித்த புதிய திட்டம்தான் ‘ஜானகிராமம்’. இதற்காகக் குறைந்தது 200 பேர்களிடமாவது கட்டுரை கேட்டிருப்பேன். ஆனால், கிடைத்தது 102 கட்டுரைகளே. இதில் 56 ஆண்களும் 37 பெண்களும் எழுதி இருக்கிறார்கள். 9 பேர் தலா இரு கட்டுரைகள் எழுதியுள்ளனர். ஒரே ஒரு கட்டுரையை இருவர் சேர்ந்தெழுதியுள்ளனர். இவர்தம் பங்களிப்பின்றி இது சாத்தியமாகியிருக்காது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பும் நன்றியும் என்றும் உரியன. தி.ஜா.வின் இதுவரை வெளிவந்த அனைத்து எழுத்துகளைப் பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. தம்முள் முரண்படும் பல்வேறு கருத்தியல்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 102 கட்டுரைகளைக் கொண்ட பெருந்தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. இது என் இரண்டு வருடப் பணி. இதற்கு முதலில், ‘தி.ஜானகிராமம்’ என்றுதான் தலைப்பிருந்தது. ஆனால், ‘காலச்சுவடு’ கண்ணன், ‘ஜானகிராமம்’ என்ற தலைப்பே பொருந்துமென்றார். தமிழில் தொல்காப்பியம், வள்ளுவம், கல்லாடம், அவிநயம், வான்மீகம், வியாசம், இளம்பூரணம், சேனாவரையம், பேராசிரியம், நச்சினார்க்கினியம் அவ்வளவு ஏன் சாமிநாதம், தாமோதரம், பாவாணம், பாவேந்தம், வையாபுரியம், புதுமைப்பித்தம், நகுலம், ராகவம், ஜெயகாந்தம், மாதவம், ஆதவம் என்றெல்லாம் நூற்றுக்கணக்கில் அடுக்கிக்கொண்டே போகலாம். பழந்தமிழ் மரபு தரும் சுதந்திரம் இது. அப்படித்தான் ஜானகிராமமும் இந்நூலுக்குத் தலைப்பானது. கண்ணனின் உதவியின்றி, இவ்வளவு நேர்த்தியாக இந்நூல் உருப்பெற்றிருக்காது. தி.ஜா. வாசகர்களின் நன்றிக்குரியவர் அவர்.
தமிழில் முன்னுதாரணமில்லாத எழுத்து என்று மௌனியைச் சொல்கிறார்கள் சிலர். சிறுகதையின் திருமூலர் என்று மௌனியைப் புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருக்கின்றார். இது பற்றியே பல வாதப் பிரதிவாதங்கள் தமிழில் நிகழ்ந்திருக்கின்றன. திருமூலரை மௌனிக்கு முன்னோடியாகக் கண்டுதான் புதுமைப்பித்தன் இப்படிக் கூறியிருக்கிறார் என எனக்குத் தோன்றுகிறது. ஆகவே, மௌனிக்கு முன்னுதாரணமுண்டு என்றாகிறது. ஆனால், உண்மையில் முன்னுதாரணமற்றவர்கள் என்றால், தி.ஜா.வையும் அவரின் ஆசானான கு.ப.ரா.வையும்தான் குறிப்பிடவேண்டும். இந்த இரண்டு பேரும் தமிழில் புதிதாக ஒரு காரியத்தைச் செய்திருக்கின்றார்கள். ‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’ என்கின்றது தொல்காப்பிய மரபு. இதற்கு எதிர்மாறாகப் பெருமையும் வலிமையும் பெண்களுக்குரியவை (‘பெருமையும் உரனும் மகடூஉ மேன’) என்கிறார்கள் கு.ப.ரா.வும் தி.ஜானகிராமனும். இக்கருத்தைத் தி.ஜா. ஆய்வாளர் கோ.வெ.கீதாவிடமிருந்து பெற்றுக் கோட்பாட்டு நோக்கில் மேலும் வளர்த்தெடுத்துப் புரிந்துகொள்ள நான் முயன்றுள்ளேன். ஆணாதிக்கம் கோலோச்சும் தமிழ்ச் சூழலில், இவ்வகையில்தான் தி.ஜா.வும் கு.ப.ரா.வும் முன்னுதாரணமற்றவர்கள் ஆகின்றார்கள். இவர்கள் மேற்கொண்டது ஒரு தனி நெடும் பயணம். காலங்காலமாக வேரூன்றி நிலைத்து நிற்கும் குடும்பம் என்னும் தந்தைமை அதிகாரமுடைய இறுகிய நிறுவன அமைப்பைச் சிறிதேனும் அசைத்துப் பார்த்தவர்கள் என்று இவர்களையே சொல்ல முடியும். ஓர் எளிய புரிதலுக்காகச் சொல்கிறேன். ‘இது என் இஷ்டம்’ என்ற ஒரு சாதாரண வார்த்தையைச் சொல்வதற்குக்கூடக் கு.ப.ரா.வின் பெண்களுக்கும் தி.ஜா.வின் பெண்களுக்கும்தான் தைரியம் இருந்தது. இந்தத் தைரியம் அவ்வளவு எளிதாக வந்துவிடுவதில்லை. ஒரு சுயமான இருப்பாகப் பெண் தன்னைக் கண்டுகொண்டதன் ஆரம்பப்புள்ளி அது.
கு.ப.ரா.வுடன் சுமார் பதினெட்டு மாதம்தான் எம்.வி.வெங்கட்ராமும் தி.ஜானகிராமனும் கரிச்சான்குஞ்சுவும் அன்றாடம் பழகியிருப்பார்கள். அதற்குள் அவர்கள் கற்றுவிட்டவை ஏராளம். ஆனால் கு.ப.ரா., துரோணரும் இல்லை. இவர்கள் ஏகலைவர்களும் இல்லை. பெரும் மேதை எவனும் சீடர்களை உருவாக்குவதில்லை. தனிமுறையில் தடம்பதிக்கக் கற்றுக்கொண்டவர்கள் இவர்கள். இவர்களில் மற்ற இருவரைவிடவும், கு.ப.ரா.வைத் தாண்டிப் பயணிக்க யத்தனித்தவராகத் தி.ஜா.வையே கருதுகிறேன். ஏன் யத்தனித்தவர்? “ராஜகோபாலனைப்போல ஒரு கதை, ஒரு வரியாவது எழுதவேண்டும் என்று எனக்கு வெகு கால ஆசை. அது நிறைவேற மறுத்துக்கொண்டேயிருக்கிறது” எனத் தி.ஜா. எழுதியதில்கூட ஆச்சரியமில்லை. அதை எப்போது எழுதினார் என்பதில்தான் எனக்குப் பெருவியப்பு. அறுபதுகளின் இறுதியில், ஜானகிராமனின் சிறந்த நாவல்களாகப் பல விமர்சகர்களும் கருதும் மோகமுள்ளையும் அம்மா வந்தாளையும் செம்பருத்தியையும் உயிர்த்தேனையும் எழுதி முடித்துப் புகழேணியின் உச்சிக்கு ஏறிவிட்ட பிறகு, இப்படித் தி.ஜா. குறிப்பிடுகிறார் என்றால், அவர் மனதில் கு.ப.ரா. எவ்வளவு பிரும்மாண்டமாய் வளர்ந்திருக்கிறார் என்று பாருங்கள்! இதைத் தன்னடக்கம் என்று கூறமாட்டேன். தி.ஜா. மிக நுண்ணியவர். கு.ப.ரா.வின் சொற்செட்டுதான் அவரை இப்படிக் கூற வைத்திருக்க வேண்டும். ஆனால், நடுநிலையில் நின்று நாம் பார்த்தோமானால், அம்மா வந்தாளைக் கு.ப.ரா. எழுதியிருப்பாரா என்ற கேள்விக்குக் கண்டிப்பாக எழுதியிருக்கமாட்டார் என்றே பதில் சொல்வேன். மன மீறல்களை எழுதுவதில் காட்டிய துணிச்சலைக் கு.ப.ரா. உடல் மீறல்களை எழுதுவதில் காட்டவில்லை என்பதும் ஓரளவிற்கு உண்மையே. (இது பற்றி எனக்குச் சந்தேகமுண்டு!). கல்யாண குணங்களுடன் இம்மரபில் சித்திரிக்கப்படும் ஒரு தாயைச் சதையும் ரத்தமும் கொண்ட வெறும்மனுஷியாகத் தி.ஜானகிராமன் காட்டியது லேசான ஒரு விஷயமே கிடையாது. உலக இலக்கியத்திலேயேகூட ஒரு தாய் பற்றி வேறெங்குமே இப்படி ஒரு சித்திரிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. டால்ஸ்டாயின் அன்னாகூட ரயில்முன் பாய்ந்து தற்கொலைதான் செய்துகொள்கிறாள். ஜானகிராமனின் அலங்காரம், காசிக்குப் போய்க் கங்கைக்கரையில் உயிரைவிடக் காத்திருக்கின்றாள். இதை இந்துத்துவ மரபின் மீட்புவாதமாகப் பலரும் கருதலாம். நான் அப்படிப் பார்க்கத் துணியவில்லை. அலங்காரத்துக்கு முன்பாகத் தென்னக வாழ்வில் கங்கைக்குப் போய் உயிர்விடக் காத்திருந்த இன்னொரு பெண்ணை உங்களால் காட்ட முடியுமா என்றே கேட்கிறேன். தண்டபாணி, சிவசுந்தரம், இரண்டு மகள்கள், நான்கு மகன்கள் இவர்களில் யார் ஒருவரும் அலங்காரத்தின் சுதந்திரத்திற்குக் குறுக்கே வர முடியாது; அவள் ஒரு தனிமனுஷி என்ற பிரக்ஞையுடன் அலங்காரத்தைப் படைத்திருக்கின்றார் தி.ஜா. என்பது சாதனையில்லை என்றால், அப்புறம் அந்த வார்த்தைக்கு வேறு பொருளே கிடையாது என்றுதான் கழித்துவிடவேண்டும்.
எந்த இடத்துக்குப் போனாலும் கால்தரிக்காது மனசுக்குள்ளேயே ஒரு நச்சரிப்பு தகித்துக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரிய மனிதர்களைப் பாத்திரங்களாகத் தி.ஜா. புனைந்தார். ஒருவரையொருவர் பார்த்தபடியே அவரவர்களின் சோகத்தில் மூழ்கியிருக்கும் இரண்டு பெண்களைப் பற்றி எழுதும்போது, ‘சாத்துக்குடியையும் கமலாப்பழத்தையும் எதிரெதிரே வைத்தாற்போல் இருவரும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்’ என்றெழுதத் தி.ஜா.வால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது. ‘எனக்கு வால்மீகியில் ஒரு இடம் நினைவுக்கு வருகிறது. ராவணனைப் பார்த்ததும், ‘என்ன கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான்!’ என்று ஹனுமான் அவன் உட்கார்ந்திருந்ததை மனதிற்குள் சிலாகித்துக்கொள்கிறான்…’ என்று மெத்தப் படித்த சமஸ்கிருதப் பண்டிதர் சொல்வதில்லை; குலத்தாசிக் குலத்தில் பிறந்த அபலை அமிர்தத்தையே இப்படிப் பேசவைக்கின்றார் ஜானகிராமன். மரபை நவீனமாக ஜானகிராமன் எப்படி மடைமாற்றுகிறார் என்பதற்கு இந்த இடம் ஒரு சிறந்த உதாரணம். ஒரு காய்கறியைப் பற்றி எழுதினால்கூடக் ‘காம்பு ஒடிக்காத வெங்காயம்’ என்று அதை அப்படியே கண்முன் கொண்டுவந்துவிடும் பழமையினால் சாகாத நித்தியமான இளமை அவர் எழுத்து. ‘நான் ஈஸ்வரன். சகஸ்ரநாமம் எனக்குத்தான் சொல்லிக் கொள்கிறேன். என் பெருமைதான் அது’ என்றெழுதிவிட வால்மீகியாலும் முடியாது; அவன் அண்ணன் அல்லது தம்பி வியாசனாலும் முடியாது. இதற்காக ‘ஞான சூன்யம்’ என்று என்னை யாரும் கோபித்துக்கொண்டுவிடப் போகிறார்கள். இது காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போன்றதில்லை; பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே என்பதுதான் இது! கடவுளை இல்லை; மனிதர்களையே வழிபட்டவர் ஜானகிராமன். அதுவும் எப்படி வழிபட்டார் தெரியுமா? வாய்ப்பாட்டுக்குப் பாபு, கோபாலி, பேரழகுக்கு யமுனா, நடனத்திற்குப் பாலி, அம்மணி, தீத்தொழில் நீங்கும் துணிச்சலுக்கு அமிர்தம், சோகத்திற்குச் செல்லம், தவிப்புக்குக் குஞ்சம்மாவும் இந்துவும்,சுதந்திரத்திற்கு அனுசூயா, பதிவிரதமைக்கு ருக்மிணி, படிதாண்டலுக்குத் தங்கம்மாளும் அலங்காரமும், வழுக்கிவிழுதலுக்கு டொக்கி, விழுந்தாலும் எழுந்து நிற்பதற்குப் பட்டு, சிற்பத்திற்கு ஆமருவி, ஓவியத்திற்கு நாலாவது சார், நட்புக்கு ராஜம், கடமைக்குச் சட்டநாதன், பொதுத்தொண்டுக்குப் பூவராகன், கயமைக்கு வையன்னா, சத்தியத்திற்கு ராமையா, தத்துவத்திற்குத் தண்டபாணி, ஆண்மைக்குப் பட்டாபி, சந்நியாசத்திற்கு அனந்தசாமி, பிரமச்சரியத்துக்குக் காமேச்வரன்… எல்லாம்தான்; எல்லோரும்தான்! “கோபமில்லாமே, குறையில்லாமே,வருத்தமில்லாமேயிருந்தா எவ்வளவு ஆனந்தமாயிருக்கு பார்த்தேளா” எனக் காமேச்வரன் வியப்பதையே நினைத்துக்கொள்கின்றேன். இவ்வுலகில் இன்று வாழும் எந்த மனிதனையும் எந்த மனுஷியையும் விடவும் இவர்களே எனக்கு மிகவும் அந்தரங்கமானவர்கள்.இராமாயணமாவது மகாபாரதமாவது! ஜானகிராமத்தை மிஞ்சியது என்று சொல்ல எனக்கு எந்தப் பிரதியும் இங்கில்லை. உன்மத்தம் என்பது எவ்வளவு உயர்ந்த ஒருநிலை என்று தெரியுமா? தி.ஜானகிராமனில் ஆழ்ந்து கரையாத அதிர்ஷ்டம் கெட்டவர்களுக்கு, ஐயோ பாவம்! அது என்ன என்றுகூடத் தெரியாது போய்விடக்கூடும்!
வசுமணன் அவர். முற்காலத்துக் கதாகாலட்சேபக்காரர்களையும், இக்காலத்துப் பக்திச் சொற்பொழிவாளர்களையும், அலட்டிக்கொள்ளும் அதிமேதாவி வேதாந்திகளையும்விட ஆழமாக வாசித்தவர் அவர். சங்கரர் ஸகஸ்ரநாமத்திற்கு எழுதிய உரையிலிருந்து, ‘வசுமணன்’ என்ற ஒரு பெயரை எடுத்துக்காட்டுகிறார். மிகச்சிறந்த உள்ளமுடையவன் வசுமணன் என்கிறார் சங்கரர். அது விஷ்ணுவுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நானறிந்தவரையில், அது தி.ஜானகிராமனுக்கே சிறப்பாகப் பொருந்துகின்றது. (இப்படிச் சொல்வதற்காக, நரகமே எனக்குப் பரிசளிக்கப்பட்டாலும், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுவிடுவேன்). கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே, அது வேகமாக ரசமழிந்து, பொட்டையாகி, வெறும் கண்ணாடிபோல் முகம் மாறினால் எப்படி இருக்கும் என்று ஓரிடத்தில் தி.ஜா. கேட்கின்றார். உண்மையை ஒப்புக்கொள்வோம். இப்படித்தானே பலரும் இங்கே வெற்றாக இருந்து வருகிறோம்? ‘இலையைச் சருகாகக் காயவைத்தால்தான் தீப்பிடிக்கும்’ என்கிறான் பாபு. ‘சபரி ராமனை வரவேற்றதுபோல் உன்னை வரவேற்றேன்’ என்கிறாள் யமுனா. இந்தப் பாபுக்களும் யமுனாக்களும்தான் ஆணும் பெண்ணுமாய்க் கிடந்து இங்கே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறார்கள்; விஷ அறையில் கொண்டுபோய்த் தம்மைத் தாமே இந்த மனிதர்கள் அடைத்துக்கொண்டு விட்டார்களே எனக் கலங்கிக் கதறுகின்றார். இவரைத்தான் நம் சநாதனிகள், ‘பிரஷ்டன்’ என்றார்கள். சொந்தக் கிராமத்துக்கு வராதே எனக் கதவடைத்தார்கள். உயிர் நண்பர் கரிச்சான்குஞ்சுவும், உடன்பிறந்த மூத்த சகோதரரும் முகந்திருப்பிக்கொண்டபோதும், என் எழுத்து இப்படித்தான், அது யாருக்கும் அஞ்சாது, எப்போதும் உண்மையே பேசும் என்று நெஞ்சு நிமிர்த்தி நின்றவர் அவர். ‘நம்மிடம் இல்லாதது பிறரிடம் இருப்பதைப் பார்த்துச் சிரிப்பதிலோ, எரிச்சல்படுவதிலோ என்ன லாபம்? சிறுமைதான் மிஞ்சுகிறது’ என்றவர். காஞ்சியைப் பற்றி எழுதுகிறபோது, இந்த மண்ணைத்தான் யுவான்சுவாங்கும் பரஞ்சோதியும் பாரவியும் தண்டியும் போதிதருமனும் மிதித்திருப்பார்கள் என்று அவர் வியப்பதெல்லாம்கூட இயல்புதான். ஆனால், மண்டையோட்டைப் பறிகொடுத்த அந்தக் கபாலிகனும் அவன் மனைவியும் கள் குடித்து இங்குதான் திரிந்திருப்பார்கள் என்று எழுதிவிட்ட அந்த நினைவிலிக் கணத்தின் புலிப் பாய்ச்சல் அவருக்குள் வந்து சேர்ந்தது எப்படியென்றுதான் முப்பது வருடங்களாய் நினைந்து நினைந்து அங்கேயே நின்று கொண்டிருக்கிறேன்! ‘வேங்கடத்தை வெறும் ஒரு மலைன்னு நினைச்சுப் பாடினதுக்கே இந்தாப் பிடிடான்னு மோட்சத்தையே தூக்கிக் கொடுத்துட்டானே பாவிப் பய! பெருமாள் உறையும் தலம்னு உணர்ந்து தெளிஞ்சு பாடியிருந்தா, இன்னும் என்னத்தயெல்லாம் கொடுத்திருப்பானோ!’ என்று மலைத்துப்போய் மெளனப்பட்டாரே திருமழிசையாழ்வார், அவர் செய்த அதே தவறை நானும் செய்யத் தயாராக இல்லை. இப்போதெல்லாம் தி.ஜானகிராமனின் எழுத்தை வெறும் கதைகளாகக் கருதி நான் படிப்பதேயில்லை; நிஜ வாழ்வின் கிடைத்தற்கரிய அரிய பல கணங்களாகவே எனக்குள் உண்டுசெரித்துக் கொண்டிருக்கிறேன். மகாபலிபுரம் பற்றி எத்தனையோ நூல்கள் வந்திருக்கின்றன. ஆனால், ‘கருங்கல்லாய் இருப்பதால் மரணாவஸ்தை நீடித்துக் கொண்டேயிருக்கிறது’ என்று தி.ஜானகிராமன் எழுதியதுதான், என் மனதில் அன்றலர்ந்த பசுமையாகத் தங்கி நிற்கிறது. ‘ஒரு குழந்தை வேறு எங்கோ கவனமாக ஏதோ செய்துகொண்டிருக்கிறது. நாம் வந்து அதன் தலைமயிரை அதற்குத் தெரியாமல் டக்கென்று ஒரு இழுப்பு இழுத்து விட்டு ஓடிமறைந்துகொள்கிறோம். யாரு என்று அது திரும்பிப்பார்க்கிறது. எழுந்துவந்து தேடுகிறது. ஆனால், தெரியவில்லை. பயப்படுகிறது. ஆச்சரியப்படுகிறது. குழம்புகிறது. அந்த மாதிரிதான் ஏதோ ஞாபகம் வந்து தேட ஆரம்பித்ததுதான் இப்படிக் குடைந்தது, கட்டினதெல்லாம்’ என்கிறார். இது மகாபலிபுரத்துக்கு மட்டும்தானா? ஜானகிராமனின் படைப்புகளும் இப்படி ஏதோ ஞாபகம் வந்து தேட ஆரம்பித்ததன் விளைவுகளே என்று துணிந்து கூறுவேன். இத்துணிச்சல் அவரைப் படித்ததால் வருவது. அவர் கால்தூசியின் அருகில் ஒதுங்கி நிற்கவும் தயங்கிக் கூசி நடுங்கி நெளிகிறது என் மனப்புழு. ஃப்ராய்டை விடவும் பெரிய மனப்பிணி மருத்துவர் எனக்குத் தி.ஜா.தான். வால்மீகியே ஒண்ணும் இல்ல; அப்புறம் ஜானகிராமன் என்ன பெரிய இதுன்னு அவர் கேட்கலாம். நம்மை ஏமாற்றும் ஒரு மகா கலைஞனின் பிள்ளைமைக் குரல் அது. ஒவ்வொரு மனுஷனும் உசிரோட இருக்கிறதே பெரிய சாதனைதான் என்றவர் அவர். இன்னும் நான் உசிரோடு இருப்பதற்கு அவரைப் படித்ததே காரணம். (என் மனைவிக்கு நான் தி.ஜா. பைத்தியம் என்று தெரியும்!). இப்போது எனக்கு நாற்பத்தொன்பதுதான் முடிந்திருக்கிறது. இன்னும் முப்பது வருடமேனும் உயிர் வாழ்வேன் என்றுதான் நினைக்கின்றேன். பார்ப்போம். என் மரணம் வரை (ஏன், அதற்குப் பின்னும்தான்!), தி.ஜா.தான் எனக்கெல்லாம். இலையும் பச்சையுமாய் இன்னும் ஆயிரம் வருஷம் தாண்டியும் வாழ்வார் அவர்.