அறத்தன்னிலைகளின் உருவாக்கம் :

என்னுடைய அம்மச்சியினுடைய ஊர் சடையபாளையம்.வார இறுதி மற்றும் கோடை விடுமுறைகள் அங்கு தான் கழியும்.இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் ஊர் அது.அங்கு வசிக்கும் அனைவருக்கும் அனைவரையும் தெரியும்.தங்களுக்குரிய சிறிய செலவுகளை பார்த்துக்கொள்ளுமளவு பண புழக்கம்.பெரிய செலவு என்று வந்தால் குடும்பமே காலி.

காடுகளுக்கு களை புடுங்க சென்றோ தக்காளி வெங்காயம் நாற்று நட்டியோ அல்லது நூறு நாள் வேலை திட்டத்தில் சேர்ந்தோ சமையல் செலவுகளை பெண்கள் பார்த்துக்கொள்வார்கள்.கணவன்மார்கள் பக்கத்து ஊர்களின் கோழிப் பண்ணைகளுக்குச் வாட்ச்மேனாகவோ, மெக்கானிக்குகளாகவோ, தேங்காய் களங்களில் தேங்காய் உரித்தோ இதர செலவுகளை கவனித்துக்கொள்வர்.அவர்களுடைய மகன்களும், மகள்களும் இப்போது க்ளாஸிக் போலோ  கம்பெனியில் பீஸ் வெட்டுபவர்களாகவோ டெய்லர்களாகவோ வேலையில் அமர்ந்திருப்பர்.

இதில் என்னுடைய நட்பு வட்டம் டிரைவர் பணி மற்றும் லோடு ஏற்றுபவர்கள். என்னுடைய சில மாமன்மார்களும் அவர்களின் நண்பர்களும் இப்பணியில் ஈடுபடுவதால் அவர்களோடு சுற்றுவதற்கு அம்மச்சி வீட்டில் பெரிய தடையிருக்கவில்லை.ஏழெட்டு வயது பெரியவன்கள்.திருப்பூர் கம்பெனிகளுக்கு மட்டை ஏற்றிச் செல்வார்கள்.எனக்கு சைடிஷ்.அவர்களுக்கு குவாட்டர்.(அப்போது ஏழாவது எட்டாவது படித்துகொண்டிருந்தேன்.)

பிரகாஷ் மாமாவின் வயது இருபத்தி மூணு இருபத்தி நாலு இருக்கும்.நல்ல கட்டான உடல் அவருக்கு.என்னுடைய இந்த நண்பர்களுக்கேயுரிய பொதுப்பண்பு கட்டான உடல்தான்.உபரிச்சதையைக் காண முடியாது.வேலை போக நீச்சல், கிரிக்கெட், பீடி, குண்டாட்டம்,குடி…

பிரகாஷ் மாமா ஊரை விட்டுச் சென்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.வேலை நிமித்தமாக குடிமங்கலத்தில் தங்கியிருந்தார்.இரவு ஒன்பது மணி வாக்கில் குடித்து விட்டு வண்டி எடுத்தவர் ஊருக்கு வரும் வழியில் கரண்ட் கம்பத்தில் மோதி விழுந்து விட்டார்.சரியான குடியாம் அன்று இரவு. பல்லடம் பொன்னி மருத்துவமனையில் வெளியே தெரியக்கூடிய காயங்களுக்கு மருந்து அப்பிவிட்டு  கோவை GH எடுத்துச்செல்ல அறிவுறுத்தினர்.GHஇல் தான் உண்மைநிலை தெரிந்தது.முதுகு தண்டில் பலத்த அடி.சில நரம்புகள் செயலற்று போயின.இனி வாழ்நாள் முழுக்க அவரால் எழுந்து நடமாட முடியாது. சில மாதங்கள் கழித்து GH இலிருந்து வந்தவுடன் அவரை பார்க்க சென்றேன். இடுப்பு மற்றும் கால்கள் பிணம் போல கிடந்தன.எனக்கு ஒரு மாதிரி தூக்கிப் போட்டது. இனியும் அவரை இப்படி பார்க்க கூடாது.இருந்தும் தொடர்ந்து போனேன்.DVD Player ஒன்று வாங்கி ஹாலிவுட் படங்களாக பார்த்தோம்.

“பீ நாத்தத்துல அங்க போயி என்ன படம் பாக்குற”

அம்மச்சி வீட்டில் கண்டிக்க தொடங்கினார்கள்.இரண்டு வருடங்கள் தொடர்ந்து போனேன். மெதுமெதுவாக அவருடைய இரு கால்களிலும் புழுக்கள் குடியேறத்தொடங்கின.உடல் மெலிய தொடங்கியது.சரியான மருத்துவ கவனிப்பு இல்லை.வீட்டில் தினக்கூலிக்கு செல்லும் அம்மா தவிர்த்து ஒரு அண்ணன் உண்டு.முடிந்தளவு அவர் சமாளித்தார்.எவ்வளவு காலம் அவரும் சமாளிப்பார்?

பின்னர் ஒரு நன்னாளில் அவருடைய வாயினுள் வலுக்கட்டாயமாக ஏதோ மருந்தை ஊற்றி ‘கருணைக்கொலை’ செய்தனர்.ஊரே அறிந்த சமாச்சாரம் இது.அவருடைய நண்பர்களும் இருந்தனர்.

அந்த ‘கருணைக்கொலைக்குப்பின்’ ஊரின் சூழலே சற்று மாறிப்போயிருந்தது.அனைவரிடமும் சிறு உற்சாகம் தென்பட்டது.ஒரு சிறிய விடுதலையுணர்வு. இப்போது யோசித்துப் பார்க்கையில் பிரகாஷ் மாமாவின் செயலற்ற உடல் அந்த ஊருக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்ததை உணர முடிகிறது.அந்த உடல் தொடர்ந்து அவர்களுக்கு ஏதோவொன்றை – ஒரே நேரத்தில் வாழ்வு மற்றும் சாவின் அடையாளமாக இருப்பது – நியாபகப்படுத்தியபடி இருந்திருக்கிறது.செயலாற்றக்கூடிய உடல் × செயலற்ற உடல், இந்த இரண்டுக்குமான எல்லைக்கோட்டை அத்துமீறுவதாக அவருடைய உடல் இருந்திருக்கிறது.முன்னர் செயல்பட்டுக்கொண்டிருந்த உடல் இப்போது செயல் இழந்து கிடக்கிறது.செயலுக்கும் செயலின்மைக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஓர்மையற்ற உடல்.ஒழுங்கமைதியை குலைக்கும் ஓர் உடல்.அவர்கள் அவ்வுடல் குறித்த ஒத்த கருத்தை, ஒத்த எண்ணத்தை, ஒத்த உணர்வைக் கொண்டிருந்தனர்.உயிருள்ள பிணம். Abject.

[ The Abject is a threat to our understanding of reality…The Abject refers to the human reaction (horror, vomit) to a threatened breakdown in meaning caused by the loss of the distinction between subject and object or between self and other. – Modules on Kristeva – Felluga, Dino ] 

உடலின் செயலின்மை பிரகாஷ் மாமாவின் இருப்பையும், அவரை ஊர் உட்கிரகித்துக்கொண்ட விதமும் பெரிய மாற்றத்தை கண்டது.

விபத்துக்குள்ளாகும்முன் அவருடைய உடல், வளத்தின் புறத்தேற்றமாகப் (projection) பார்க்கப்பட்டிருக்கும்.விபத்திற்குப் பின்னர் அவ்வுடல் மக்களுக்கு ஏதோவொன்றின் இழப்பை பிரதிநிதித்துவப்படுத்தியது.அவ்வுடலை பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு நினைவேக்கம் தொக்கி நிற்கிறது.அவ்வுடல் ஏதோவொன்றை இழந்த உடல் – அவ்வுடல் இழந்த ஒன்றை  நியாபகபடுத்திபடுத்தும் களன் – அவ்வளவே. குடும்பத்தாரின் மற்றும் ஊர்மக்களின் அறத் தன்னிலை இவ்வாறே உருவாக முடியும்.ஊரே பிரகாஷ் மாமாவின் இறப்பை இயல்பாக்கம் செய்துகொண்டது.

பிரகாஷ் மாமாவின் அறம் சிறிய அறம்.மக்களின் அறம் பெரிய அறம்.

இங்கு நிகழ்ந்த அறச் செயல் உலகப்  பொதுவானதா என்றால்? கிடையாது.அது புறச்சூழல்களை ஒட்டி மாறக்கூடியது.எனவே இது ஒரு குறிப்பிட்ட ஊரில் குறிப்பிட்ட காலத்தில் நிகழ்தேறிய செயலின் அற நெருக்கத்தை(proximity) குறிக்கும் ஒன்றே.பொருளாதாரம்,மருத்துவ வசதி உள்ளிட்ட புறக்காரணிகள் மேம்பட்ட ஊரில் இது ஒரு அறச்செயலாக பாவிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.இதன்மூலம் அவர்கள் அரக்கர்கள் என்று கூறவில்லை.ஊரின் பிண்ணனியை விளக்கியது முடிந்தளவு மனிததன்மையோடு இதனை கையாள வேண்டுமென்பதுதான். அறம்,அற உந்தம்,அறச்செயல் முதலியவற்றின் சிக்கலையும் அவை அகப்படாமல் நழுவிச்செல்லும் இடங்களையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

(கருணைக்கொலை – குடும்பமும் ஊரும் அவருடைய இறப்பை பார்த்த விதத்தை சுட்டும் விதமாக இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறேன்.) 

பயன்பாட்டு கோட்பாடு முன்வைக்கும் அறம் :

ஒரு செயலின் விளைவுகளை மதிப்பிடும் போது அதனால் ஏற்படும் இன்பம், அதனால் ஏற்படும்  துன்பத்தைவிட அதிகமாக இருக்குமானால் அச்செயலை தனிநபர்கள்  செய்யலாம்.

இன்பம் – துன்பம் இவையிரண்டும் தான் நம்முடைய சிந்தனைகள்,நடத்தைகள்  வினைகள் ஆகியவற்றை  இயக்குவது.எனவே, தனிமனிதர்களின் இன்பத்தை அதிகரிக்கும் சுயநல வேட்கை தான் சமூகம் முழுமைக்குமான இயங்கு சக்தி என்பதே பயன்பாட்டு கோட்பாடு(utilitarianism).இதனை வகுத்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெரமி பென்தம். இன்பம்-துன்பம் ஆகிய இரண்டே மனிதர்களை ஆட்டிப்படைப்பவையாக இவர் கருதியதால்,அறவியல் மற்றும் விழுமியங்களின் அடிப்படை,தனிமனித இன்பத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கம் கொண்டிருக்க வேண்டும் என்கிற கருத்துக்களை முன்வைத்தார். ஏனெனில்,தனிமனித இன்பத்தை அதிகரிக்கும் செயலே சரியானவை என்றும், துன்பத்தைத் தவிர்த்து இன்பத்தை நாடுவதே பெரும்பான்மையினருக்கு நன்மை பயக்கும் என்கிறது இக்கோட்பாடு. இதன்மூலம் சுயநல வேட்கையைப் பேணுதல் சரியே என்கிற இடத்திற்கு வந்தடைகிறார். தனிமனிதர் என்றளவில் நின்றுவிடாமல் சட்டம், அரசுகளின் பொருளாதாரத் திட்டம், மரபணுவியல், உளவியல் என குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய இப்பயன்பாட்டு கோட்பாடானது, இன்றளவிலும்  நவீன அறிவியல் உட்பட நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எவருடைய உயிரைக் காப்பாற்றுவது சமூகத்தின் நன்மையை அதிகரிக்கும் என்பதே நவீன மருத்துவத்தின் அறவியல் தர்க்கம்.அந்தவகையில் பால்தன்னிலைகளின் கட்டமைப்பிலும் இக்கோட்பாடு முக்கிய பங்காற்றியிருக்கிறது.உதாரணமாக, இருபாலுறவை(heterosexual)  முன்நிலைப்படுத்தி இயல்பாக்கம் செய்து பிற-பால் தேர்வுகளை விளிம்புக்குத் தள்ளி, இருபாலுறவே சமூகத்திற்குப் பயன்தரக்கூடியவை என்றும், அவ்வுறவே குழந்தைகளை விருத்தி செய்து ,குடும்ப அமைப்பைப் பேணி உழைப்புச் சக்தி மிகுந்த சமூகத்தை உருவாக்க கூடியது என்னும் கருதுகோளைத்  தூக்கிப் பிடித்தது.

பென்தம், ‘உடல் குறைபாடுடையவர்களை சமூகத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும்’ என்று வாதாடினார்.பயன்பாட்டு கோட்பாடு உடல்களை இருவகையாகப் பிரித்து அடையாளங்காணும் – பயனுள்ள உடல்/பயனற்ற உடல். மூலதன குவிப்பிற்கு உழைப்பை செலுத்தும் வகையில் இருக்கும் உடல்களே வாழத்தகுதியான உடல்கள்.இதனடிப்படையிலேயே “கருணைக்கொலை” எனும் சொல்லின் அர்த்தம் வலுப்பெற்றது.வாழத்தகுதியற்ற உடல்களைக் கொல்வதன் மூலம் பயனற்ற உடலில் இருந்து உயிரை விடுதலை செய்து ஒழுங்கை ஏற்படுத்தி சமநிலையை நிலைநாட்டும் செயல் கருணைச் செயலாக உயர்த்திச் சொல்லப்பட்டது.

பாசிசமாகும் ஓர்மை :  

ப்ளேட்டோவும் சாக்ரடீஸும் உடல்களின் அழகியல் ஓர்மையின் நற்பலன்கள் என சிலவற்றை முன்வைத்தனர். உடல்களின் ஓர்மை(order) ஒரு சமூகத்தின் செயல்திறனை பிரதிபலிக்கும் ; உடல் அளவிலும் மனதளவிலும் குறைபாடுடையவர்கள் சமூகத்தின் ஓர்மையைச் சீர்குலைப்பவர்கள் ;

உடல் நோய் கொண்டவர்கள்  தமக்குத் தாமே அழிவைத் தேடிக்கொள்வார்கள் என்று ப்ளேட்டோ ரிபப்ளிக் நூலில் கூறுகிறார்.அவருடைய இலட்சிய நகரில் உடல் குறைபாடுடையவர்களுக்கு இடமில்லை.அவர் உடல்நலத்தை  மனிதரின் அடிப்படை நற்பண்புகளுள்(piety) ஒன்றாக காண்கிறார்.எனவே, உடல்நிலை என்பது வெறுமனே தனியருடைய மருத்துவம் சார்ந்த ஒன்றாக மட்டுமல்லாது பண்புநலன் சார்ந்த ஒன்றாக உயர்த்திப் பிடிக்கிறார்.சாதியப் படிநிலை பிறப்பின் அடிப்படையில் உடல்களைப் பாகுபடுத்தி அவற்றிற்குரிய குணங்களாக சிலவற்றை வகுத்து பணிகளை வழங்குவதுபோல.

தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு என ப்ளேட்டோ மனிதர்களை தரம் பிரித்தார்.சாராம்சவாதம்(essentialism) எப்போதுமே ஒரு இலட்சிய நிலை மற்றும்  மாதிரி வடிவைக் கொண்டிருப்பதை வலியுறுத்தும்.அதன் மூலம்  தன்னுடைய அழகியலை மட்டுமே மெய்மையாகக் கொள்வதோடு முற்றுண்மையை தன்னுடைய தத்துவக் கண்டடைதலாக அறிவிக்கும்.ஒழுங்கு × கலைவு என இருமை சட்டகங்களை உருவாக்கி ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரித்துப் பொருள் கொள்ளச் செய்யும்.அது இலட்சியமாக வகுத்துக்கொண்ட இயக்கத்தை மட்டுமே ஒழுங்கு எனக்கொள்ளும்.

சாராம்சவாதம் காலத்தால் பிந்தையது என்றாலும் சமகால நுகர்வுச் சமூகம் உடல்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதுவரை இது தொடர்கிறது.இலட்சிய உடல்கள் என சிலவற்றை வரையறுத்து, அவ்வுடல்களின் பிரதியாக மாற நுகர்வோரை அழைக்கிறது.நுகர்வுச்சமூகத்தின் அழகியல் கோரும் ஒற்றைப்படை தன்மையானது, அனைத்து  உடல்களும் ஒன்றேபோலான வடிவிலும் நிறத்திலும் இருப்பதை  நிர்ப்பந்திக்கிறது.அனைவரின் உடல்களையும் சில மாடல்களை போல ஒருங்கிணைக்க ஊக்குவிக்கிறது.மாடல்(model)எனும் சொல்லே கூட  இலட்சிய உடல்களைக்  குறிப்பதுதான் நுகர்வுக் கலாச்சாரம் வித்தியாசங்களை ஊக்குவிக்கத்தானே செய்கிறது என்று கூறுவோமானால் நாம் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் .நுகர்வுச் சமூகம் வித்தியாசங்களை பண்டப்பொருளாக மட்டுமே கருதும்.அது உடல்களை திரைச்சீலையைப்போலவே பாவிக்கும். ஏனெனில், அத்திரைச்சீலையின் மீது எவ்வித அடையாளங்களையும் நிகழ்த்திக்காட்டுவதற்குரிய மூலதனங்களை அது கையகப்படுத்தியுள்ளது.

ப்ளாஸ்டிக் மற்றும் காஸ்மெடிக் சர்ஜரி மூலமோ மேக்கப்பைக்கொண்டோ ஒருவரால் எத்தகைய இன,நிற அடையாளங்களையும் உடலின் மீது ஏற்றிக் கொள்ளும் சாத்தியங்களை கொண்டுள்ளது நவீன நுகர்வுச்  சமூகம்.அவ்வடையாளங்களைக் கொண்டு பொருட்களையும் தங்களையும் சந்தைப்படுத்தும் போக்குகளுள் Black Fishing செயல்பாடுகள் சமீபத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டன. கிம் கர்தாஷியன்,பாடகர் ரீட்டா ஓரா மேலும் பல இன்ஸ்டாகிராம் மாடல்கள் இச்செயல்பாடுகள் பரவலாக்கப்படுவதில் பெரும்பங்காற்றினர். கறுப்பின மக்களின் அடையாளம் பேசுபொருளாக மாறி, முன்நிலைப்படுத்தப்படவேண்டிய தேவை அறியப்பட்டதன் பின்னணியில், வெள்ளையின பிரபலங்கள்,கருப்பின மக்களின் நிற மற்றும் பண்பாட்டு அடையாளங்களை தங்கள் மீது ஏற்றிக்கொண்டு தங்களை சந்தைப்படுத்தும் செயல்பாடுகள் அதிகரித்தன.இச்செயல்பாடுகளை Black Fishing என்று அடையாளப்படுத்துகிறோம்.கறுப்பின மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளையும் நிறவெறி தாக்குதல்களையும் அனுபவிக்கும் இடத்தில் இவர்கள் இல்லாவிட்டாலும், அவர்களுடைய நிற மற்றும் பண்பாட்டு அடையாளங்களை சுவீகரித்து, அதனைப் பண்டமாக மாற்றி சந்தைப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர்.இப்போக்கு, வகைமாதிரிகளை(stereotype) உருவாக்கத்தான் வழிசெய்யுமே தவிர அடையாளங்களிடையேயான வித்தியாசங்களை அவை அங்கீகரிப்பதில்லை.நுகர்வுச் சமூகத்தின் செயல்பாடுகளும் அவை முன்வைக்கும் இலட்சிய வடிவங்களும் பிரிக்கவேமுடியாதபடிக்கு ஒன்றையொன்று சார்ந்துள்ளது.கலாச்சார மட்டத்தில் ஏற்படும் ஒற்றைப்படைத் தன்மை பாசிசத்திற்கு வழிவகுக்கக் கூடியது.

சாதியும் வித்தியாசங்களைத்தானே வலியுறுத்துகிறது என்கிற கேள்வியும் எழலாம்.ஆனால், சாதியம் செய்வது என்ன ? அது உடல்களை தீர்க்கமான வரையறுக்கப்பட்ட பிரிவுகளாக குவிக்கிறது.உடல்களை ஒடுக்குகிறது, விலக்கம் செய்கிறது, தீண்டத்தக்க உடல்கள்×தீண்டத்தகாத உடல்கள் என பாகுபடுத்தி மேலாதிக்கத்தைச் செலுத்துகிறது.

மனித உடல்களை பாகுபடுத்தியும் தரவரிசைப்படுத்தியும் “அனைத்து உடல்களும் ஒன்றில்லை” என்று நிறுவி உடல்களின் செயலாற்றும் வெளிகளை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்துகிறது. உடல்களின் சமூக இயங்குவெளியை நிர்ணயித்து அவற்றிக்கிடையேயான இடைவெளியை ஒருங்கிணைத்து உற்பத்தி உறவுகளை செயல்படுத்துகிறது.சாதியமைப்பு மனிதர்களிடையே பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் வன்முறைகளையும் வலியுறுத்துகிறதே தவிர வித்தியாசங்களை அல்ல. தனிமைப்படுத்துவது,ஒதுக்கிவைப்பது,புறக்கணிப்பது – இவை தான் (utopia) உடோபியாவை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள்.வரலாறு நெடுக ஓர்மையை அடைய விரும்பும் சக்திகள் உடல்களை ஒழுங்குபடுத்துவதையே தங்களுடைய தலையாய கடமையாகக் கொண்டிருந்தன,கொண்டிருக்கின்றன.

இந்த ஒழுங்குபடுத்துதல்,உடல்களின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. கருணைக்கொலையை (euthanasia)நோக்கமாகக் கொண்ட ஹிட்லரின் திட்டமான ‘Operation T4’ குறைபாடுள்ள உடல்கள் எனக் கருதியவற்றை ‘பயன்பாடு அற்றவை’ என கொன்றொழித்தது.உடல் நலம் தேற முடியாதவர்கள்,மனநலம் குன்றியவர்கள், பிறக்கும்போது உடல் குறைபாடுடையவர்கள் பயன்பாட்டு கோட்பாட்டின்படி ‘பயனற்றவர்கள்’. எனவே, நீக்கப்பட வேண்டியவர்கள் என்கிற அடைப்படையில் இச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஜெர்மனியில், 1934 வாக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு(மனச்சிதைவு நோயாளிகள், வலிப்பு நோயாளிகள்) கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.முப்பத்து நான்கு மரபணு சுகாதார நீதிமன்றங்கள் ஜெர்மனி முழுதும் தொடங்கப்பட்டன. ஆரிய இனத்தை தூய்மைப் படுத்தும் நோக்கத்திலும், பொருளாதார மந்த நிலையை மேம்படுத்தும் நோக்கிலும் மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், மனச்சிதைவு நோயாளிகள் மீதான கொலைச்செயல்கள் நிகழ்ந்தேறின.கார்ல் பைண்டிங் எனும் சட்டநிபுணரும் உளவியலாளர் ஆல்ப்ரெட் ஹோக்கும் இணைந்து எழுதிய ‘Allowing the Destruction of Life Unworthy of Life’ எனும் புத்தகத்தை ‘கருணைக்கொலையின் பைபிள்’ என்றழைப்பர்.’வாழ்வதற்கு லாயக்கற்றோர் பட்டியலில் இருக்கும் மனநோயாளிகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், ஊனமுற்றவர், வயது முதிர்ச்சியினால் முடங்கிக் கிடப்பவர்கள் ஆகியோருக்கு பொருளாதார ரீதியில் செலவு செய்வது தேவையற்றது; எனவே அவர்களுக்கு ‘விடுதலை’ அளிக்க கருணைக்கொலை என்ற வழிமுறையே சிறந்ததாகும்’ என்று இப்புத்தகத்தில் எழுதியுள்ளனர்.அக்கொலைச் செயல்களில்  ஈடுபட்ட மருத்துவர்கள் ‘கருணைக் கொலை’ என அவர்களுடைய செயலை  நியாயப்படுத்தினர்.மனிதத் தன்மையற்ற நிலைமையிலிருந்து அவர்களை மீட்பதாகவும் கூறிக்கொண்டனர்.இக்காலகட்டத்தில் தான் ஹிட்லரின் பல கொடுமைகளுக்கான நியாயப்பாடுகளை வழங்கிய துறையான இனமேம்பாட்டு இயல்(eugenics) வளர்ந்து வந்ததையும் கவனித்திற்கொள்ள வேண்டியுள்ளது.

உடோபியன் சிந்தனைகள் பன்மையை அழித்து ஒற்றை மெய்மையை நிறுவ எத்தனிப்பவை.அவை வித்தியாசங்களை அழித்து உலகத்து உடல்களின் மீது முற்றாளுமையைச் செலுத்தி ஒற்றை உண்மையை கொண்டு உலகத்திற்கு மீட்பை வழங்க முயற்சிப்பவை. ப்ளாட்டோ,ஹிட்லர்,ஸ்டாலின் என ஏராளமானோரை இப்புவியின் உடல்கள் கண்டுள்ளன.

உரையாடல் மொழியைத் தேர்வு செய்தல்

‘தன்னை ஒருவர் எவ்வாறு உணர்கிறார்’ என்பதிலிருந்தும் அரசியல் உரையாடலைத் தொடங்கலாம்.ஆனால், உணர்வுகள் உண்மையைக் குலைப்பவை ; அவை நிகழ்வுகளின் உண்மைத்தன்மையை மறைக்கக்கூடியவை ; உணர்வுகளை விலக்கம் செய்துவிட்டு புறவயமாக விஷயங்களை பார்ப்பதுதான் சரியான அரசியல் உரையாடல் ; அகவயமானவை அரசியலற்றவை என்பது சமகால அறிவுத்தள புரிதல்.கல்விப்புலங்களில் மற்றும் சமூக வலைத்தளங்களில் அரசியலை புறவயமாக அணுகுவதுதான் அங்கீகரிக்கப்பட்ட பார்வை.இந்த குறுகலான பார்வை அரசியல் உரையாடல்களில் பல முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடியவை.உதாரணமாக, அமெரிக்காவின் பிரபல பட்டறிவுவாதிகளான(empiricists) சாம் ஹாரிஸ், பென் ஷபிரோ உள்ளிட்டோரின் உரையாடல் மொழியை கவனிக்கும் போது அவர்கள் குறிப்பிட்ட வகையான உண்மைகளை மட்டுமே அங்கீகரிப்பதைக் காண முடியும்.பால்புதுமையினரை பார்த்து பென் ஷபிரோ சொல்வதாவது : “பென் ஷபிரோவாகிய நான் உங்களுடைய(LGBTQ+) ‘உணர்வுகளைப்’ பற்றி அக்கறை கொள்ளப் போவதில்லை.எனக்கு நிரூபிக்கபட்ட/படக்கூடிய உண்மைகளே முக்கியம்.”

ஆனால்,பால் தன்னிலையை உயிரியலைக்கொண்டோ DNA-வை கொண்டோ பிறப்புறுப்புகளைக்கொண்டோ விளக்கிவிட இயலாது.அது உணர்விலிருந்து வருவிக்கப்படும் ‘இருத்தல்’ சார்ந்த உண்மை.ஒருவர் தன்னை எவ்வாறு உணர்கிறார்,வெளிப்படுத்த நினைக்கிறார் என்பதெல்லாம் அத்தனிநபரின் இருப்பை முழுமையாக்கும் விஷயம்.அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப்பட இயலாதென்பதாலேயே அத்தனிநபரின் இருப்பையும் உணர்வுகளையும் மதிக்காமல், சமூகம் அங்கீகரிக்கும் சட்டகத்திற்குட்பட்டு மட்டுமே ஒருவர் தன்னுடைய தன்னிலையை உணர வேண்டும் என்று வலியுறுத்துவது எவ்விதத்திலும் சரியானதல்ல. புறவயவாதம், பட்டறிவு,  பகுத்தறிவு மட்டுமே உண்மையை சொந்தம் கொண்டாடிவிட முடியாது. சமீபத்தில் ஆன்ட்ரூ சாலமன் எழுதிய Far From the Tree எனும் புத்தகம் வாசிக்க கிடைத்தது. அடையாள அரசியல் கடந்த காலங்களில் உருவாக்கி அளித்திருக்கும் உரையாடல் வெளி மற்றும் சமகால மருத்துவத் துறை கண்டிருக்கும் வளர்ச்சி என இவ்விரண்டின் இடைவெட்டுக்கள்,சமூக ஒழுங்கமைவால் விலக்கம் செய்யப்பட்ட உடல்களை தற்போது எங்கு நிறுத்தியிருக்கின்றன என்பதன்  ஆவணமாக இப்புத்தகத்தைக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளும் அவர்களின் பெற்றோர்களும் சமூகத்தில் சந்திக்கும் நடைமுறை சிக்கல்கள் மிக விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதெனினும் அவர்களின் நேர்காணல்களை வாசகர்களுக்கு தொகுத்தளிக்கும் ஆசிரியரின் மொழி பிரச்சனைக்குரியதாக இருக்கிறது.நேர்காணல்களை நமக்கு வழங்கும் போது அவற்றை தன்னுடைய கோட்பாட்டு அடித்தளத்தின் கண்களோடு பார்க்க வைக்கிறார்.அக்கோட்பாடானது, “பயன்பாட்டு கோட்பாடாக” இருப்பதனை அவருடைய மொழி பயன்பாட்டின் வழியே கண்டுணர முடியும். உதாரணமாக அவர் இவ்வாறு எழுதுகிறார் —

*Disability is not predictive of the happiness of either the parent  the child, which reflects the larger puzzle that people who have won the lottery are, in the long run and on average, only marginally happier than amputees. 

இவ்வளவு காலம் உடல்களின் மீது கருத்தியல் மேலாதிக்கம் செலுத்திய அறிவுப் புலங்களைக்கொண்டே  உடல்களின் இருப்பை உறுதிப்படுத்த முனைவது அம்மேலாதிக்கத்திற்கு வலு சேர்ப்பதாயும் அதனையே மறுஉறுதி(reaffirm) செய்யும்படியாகவும் முடிந்துவிடும்.

பயன்பாட்டுவாதம், பெரும்பான்மையோரின் விருப்புகளையே மையமிட்டிருப்பதால், அது இயல்பிலேயே விளிம்புக்குத்தள்ளப்பட்ட தனிமனிதர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புறந்தள்ளிவிடும் பண்பைக் கொண்டது.

உடல் குறைபாடுடையவர்களாகக் கருதப்படுபவர்களை சுற்றியிருப்பவர்கள் குற்றவுணர்வின்றி நிராகரிக்கவும்,வெளித்தள்ளவும் இது எவ்வாறு உதவி புரிகிறது என்பதையொட்டி முன்னரே உரையாடினோம்.இதன் மற்றொரு பரிமாணத்தை நவீன அரசின் செயல்பாடுகளில் காணலாம்.

அரசு, பொருளாதாரத் திட்டக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் போது மேற்கொள்ளும் செலவு-விலைபயன் பகுப்பாய்வு (cost benefit analysis) பயன்பாட்டு கோட்பாட்டின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படுகிறது.  குடும்பம்,சமூகம், அரசு என பல வடிவங்களில் நம்மை அறியாமலேயே இந்நோக்கும் அதனடிப்படையிலான மொழிப்பிரயோகங்களும் பின்னிப்பிணைந்துள்ளன.மறுபுறம் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒற்றைப்படையான அழகியலை முன்வைக்கும் சிந்தனைப்போக்குகள், வித்தியாசங்களை அதன் அழகியல் ஓர்மைக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கும்.

இத்தகைய அழகியல்நோக்கு கோருவதைப்போலவே நகரின் அனைத்து கட்டிடங்களும் வீடுகளும் ஒன்றுபோல வித்தியாசங்களே இல்லாமல் இருக்கிறதென வைத்துக்கொள்வோம். அப்படியிருந்தால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாது.எங்கு சென்றாலும் ஒரே மாதிரிதான் இருக்குமென்றால் நீங்கள் எங்குமே செல்லவில்லை என்கிற உணர்வுதான் கிடைக்கும்.நீங்கள் இருக்கும் இடத்திற்கும்,செல்ல ஆசைப்படும் இடத்திற்கும் வித்தியாசமில்லையென்றால் இரண்டும் ஒரே இடம் தான்.குழந்தையொன்று மொழியைப் பேச தொடங்கும் தருணத்தை பற்றிய யோசனை இங்கு வருகிறது.ஒரு குழந்தை, மொழி பேசுவதற்கான முன்நிபந்தனை என்ன? தன்னுடைய உடலிருந்து ஒரு பொருளை வித்தியாசப்படுத்திப் பார்க்க தெரிந்திருக்கும்பட்சத்தில்தான் அக்குழந்தை மொழியை கற்றுக்கொள்ள இயலும்.அப்போதுதான் அக்குழந்தையால் ஒரு பொருளை ‘அது’ என சுட்ட முடியும்.மொழிகளையும் கதைகளையும் சாத்தியப்படுத்துவது இந்த வித்தியாசங்கள் தான்.வித்தியாசங்களற்ற உலகம் கதைகளற்ற உலகம். வித்தியாசங்களற்ற உலகம் கற்பனைகளற்ற உலகம்.

மேற்கூறியவற்றின் எதிர்நிலையிலிருப்பவையாக கலைப் பிரதிகளைப் பார்க்கலாம்.அவை அகவயமானவற்றிலிருந்து உரையாடலை மேற்கொள்கின்றன. அகவயமானவற்றில் நாம் தினந்தோறும் எதிர்கொள்ளும் மேலோட்டமான அரசியல் கூச்சல்களும் வம்புகளும் இருப்பதில்லை.எனவே, அவற்றை அரசியலாக்கி உரையாட ஒருவருக்கு கூருணர்வு தேவை.அவை குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த தனிநபர்களின் வாழ்நிலையை உணர்வுகளின் வழியே நம்மிடம் கடத்த எத்தனிப்பவை.வரலாற்று நிகழ்வுகளில் தன்னிலையின் இடம் என்னவென்பதை கலைப் பிரதிகளான சினிமா,இலக்கியம், ஓவியம் போன்றவைதான் நமக்கு உணர்த்த முடியும்.அதன்மூலம்தான்  தன்னிலையின் இடத்திலிருந்து யோசிக்கவும் பொருத்திப்பார்க்கவும் துவங்குகிறோம்.எனவே, மானுட நிலமையை(human condition) முன்வைத்து உரையாடுவதற்குரிய முதன்மையான மொழியாக சினிமா மற்றும் இலக்கியத்தைச் சொல்லலாம்.

பெரும்பாலான தத்துவச்சிந்தனைகள், உணர்வுகளை அறிவு மற்றும் உண்மையின் எதிர்நிலையில் தான் நிறுத்திப் பார்க்கின்றன.உணர்வுகள் உண்மையை பார்க்க தகுதியானவையல்ல என்றே கருதியிருக்கிறார்கள்.இதன் அடிப்படையில்தான் ப்ளாட்டோ தன்னுடைய இலட்சிய நகரில் கவிஞர்களே இருக்கக் கூடாது என்று சொல்கிறார்.ஆனால்,உணர்வுகளை மையப்படுத்தும் கலைப்பிரதிகளும் உண்மைக்கு நெருக்கமானவைதாம்.இதனை எளிமையான எடுத்துக்காட்டின் வழியே உணரலாம். பய உணர்வு – பெரும்பாலும் பயத்தை பற்றிப் பேசும்போது அது உண்மை நிலையை மறைக்கும் உணர்வாகவே பேசப்பட்டு வந்துள்ளது. புறவுலக உண்மையை சிதைக்கும்படியான அகவய உணர்வாகக் கருதாமல், புறவுலக உண்மையை தன்னிலையிடம் உணர்த்தும்படியானதாக பய உணர்வை அணுகும்போது, உணர்வுகளின் வழியே நாம் அடையக்கூடிய உண்மைகளும் உள்ளன என்பது புலப்படும்.புறவுலக நிலையின் ‘உண்மை’ அகவயமான ‘உணர்வின் வழியாக’ ஒரு தன்னிலையிடம் வந்தடைகிறது.

ஆதிக்கமில்லாத, அர்த்த திணிப்புகளற்ற சுதந்திரமான மொழியைக் கொண்டு உரையாடுவதையே காலத்தைத் தாண்டி நிற்கும் கலைப் பிரதிகள் நமக்கு உணர்த்துகின்றன.தன்னிலையின் உணர்வுகளே அப்பிரதிகளின் உரையாடல் மொழியென்பதால் அவை மானுட நிலமையின் உண்மைக்கு அருகில் என்றும் நிலைத்திருக்கும் தன்மை உடையவை.மானுட நிலமையின் விசாரணையில் உணர்வுகளும் தவிர்க்கவியலா இடத்தை பெறுகின்றன எனும் பிரக்ஞையோடு நம்முடைய மொழித்தேர்வு அமைய வேண்டும்.