வெ.இறையன்புவின் நரிப்பல் :

இலக்கியத்துக்குக் குறிப்பிட்ட நோக்கமுண்டு எனப் பழந்தமிழர்கள் கருதினர். இலக்குடையது இலக்கியம் என்பதுதான், அவர்தம் புரிதலாகும். அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை வைத்துத் தொடக்கத்தில் படைப்பிலக்கியம் படைத்த தமிழர், பின்னர் காலப்போக்கில் வடமொழித் தாக்கம் பெற்று வீட்டையும் இணைத்துப் பேரிலக்கியம் செய்ய முனைந்தனர். வெறும் பொழுதுபோக்கைக் கருதியோ, இன்பமூட்டும் நுகர்வுவெறிக்குத் தூண்டிலிட்டோ இலக்கியம் செய்வதைப் பழந்தமிழர்கள் பின்பற்றவில்லை. இயற்கையைப் பின்னணியாக அமைப்பதல்லாமல், இயற்கையை இயற்கை லயிப்புக்காகவே பாடும் பழக்கம் சங்கக் கவிஞனிடம் இருந்ததில்லை. நாற்பொருள் பயக்கும் நடையொழுங்குடன், விளங்கிய அறிவின் முனைவன் கண்டதுதான் முதல்நூல் எனத் தமிழர் நம்பினர். எனவே, மக்களுக்குப் பயன்படக்கூடியதாகவே இலக்கியத்தைப் புனைந்தனர். இச்செய்யுள் நெறியின் தாக்கம், ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு உருவான நாவல், சிறுகதை, புதுக்கவிதை ஆகிய புத்திலக்கிய வகைமைகளிலும் எதிரொலித்தது. காப்பியத்திற்கு  மாற்றாக நாவலையும், நெடும்பாட்டுகளின் தற்கால வடிவமாகச் சிறுகதைகளையும், தமிழ்ப் பாடல்களின் நீட்சியாகப் புதுக்கவிதைகளையும் பலர் நோக்கினர். இதனால்தான் இந்த வகைமைகள் தமிழில் வேரூன்ற நெடுங்காலம் தேவைப்பட்டது. பழந்தமிழ் மரபில் தோய்ந்தவர்களுக்குத் தொடக்கத்தில் இப்புத்திலக்கிய வகைமைகள் பிடிபடாமல் போனதும், ஐரோப்பிய இலக்கியங்களை ஊன்றிப் பயின்றவர்களுக்கு இவை வசப்பட்டதும் இப்படித்தான் நிகழ்ந்தன. இன்று இவ்வகைமைகள், பல்வேறு ஊடாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு, சிறப்பாகத் தமிழில் நிலைபெற்றுள்ளன. ஆனால் இப்போதும், இலக்கியம் என்பது உருவ அமைதியின் சிறப்பில்தான் இருக்கிறது என்று வாதிப்போரும், இல்லை உள்ளடக்கச் செழுமையால்தான் இலக்கியமே சாத்தியமாகிறது என்று வலியுறுத்துவோரும் தமிழில் இரு பெருங்குழுவினராகத் தொழிற்பட்டு வருகின்றனர். இவர்களுக்குள் ஒருமையும் இணைவும் நேர்வதற்கான அறிகுறியே தமிழ்ச்சூழலில் தென்படவில்லை. இவ்விரு போக்கினருக்கும் மாற்றாகப் படைப்பிலக்கியத்திற்குச் சமவிகிதத்தில் உருவமும் உள்ளடக்கமும் வேண்டுமெனப் புரிந்துகொண்டு, அத்திசையை நோக்கிச் செயல்பட்டுவரும் மிகச்சில நடுவழிக் கோட்பாட்டாளரும் இங்குள்ளனர். இவர்களுள் ஒருவராகப் படைப்பாளி வெ.இறையன்புவைக் குறிப்பிடலாம். வெறும் ஒரு சுயமுன்னேற்ற எழுத்தாளராகத் தமிழ்ச்சூழலில் குறுக்கிப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள வெ.இறையன்பு, குறிப்பிடத்தக்க சில நாவல் முயற்சிகளையும், கவனம் ஈர்க்கும் சில சிறுகதைகளையும் எழுதியவர் என்ற வகையில், 21ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழலில், அவருக்குரிய நியாயமான ஓரிடத்தைத் தம் எழுத்துகளால் அடைநதுவிட்டவராவார். வெ.இறையன்புவின் எழுத்து, கருத்துரைக்கும் எழுத்து. இவ்வகை எழுத்துக்குத் தமிழில் முன்னோடியாகத் திருவள்ளுவரைக் குறிப்பிடலாம். இலக்கியத்திற்கு, ‘அறிவூட்டும் நோக்கம்’ இருக்கவேண்டியதன் இன்றியமையாமையை வற்புறுத்தியவர் திருவள்ளுவர் என்பதைப் புரிந்துகொள்வோருக்கு, வெ.இறையன்புவின் நாவல்களையும் சிறுகதைகளையும் உள்வாங்குவதும் எளிதாகும். லாகிரி வஸ்துவாகப் படைப்பிலக்கியத்தைப் பார்க்காதவர் வெ.இறையன்பு என்பதால், அவர் படைப்புகளில் கருத்துகளும் விழுமியங்களும் கட்டுக்கோப்புடன் பளிச்சிடுகின்றன. மேடைப்பிரசங்கியாக மாறாமல், ஒரு படைப்பாளிக்குரிய கவனத்துடனும் கண்ணியத்துடனும் கருத்துகளைக் கையாண்டுள்ளார் என்பதுதான், வெ.இறையன்புவின் தனித்தன்மையாகும்.

வெ. இறையன்புவின் ‘நரிப்பல்’, பதினைந்து சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். இத்தொகுப்பின் முதல் கதையாக ‘இரங்கல்’ அமைகிறது. இக்கதை, இம்மண்ணில் அரசு இயந்திரம் எப்படிச் செயல்படுகிறது என்பதற்கான விமர்சனமாகும். அர்ப்பணிப்பும் நேர்மையும் கண்டிப்பும் கலந்த கமிஷனர் சந்தானம், ‘தண்ணி போடாமல் – பன்றி வளர்க்காமல்’ மலமள்ளும் துப்புரவுப் பணியாளர் முனியாண்டி, பாகிஸ்தான் பட்டாளத்தினரால் சுடப்பட்டுச் செத்துப்போகும் எல்லைக்காவல் படைவீரர் ஆறுமுகம் என இக்கதையில் மூன்று நாயகர்கள்! ஒரே ஒரு வில்லனாக, நேர்மையான ஊழியர்களைப் பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி அவமதிக்கும் ‘ஊழலிலும் அதிகாரத் திமிரிலும் வீண் பகட்டிலும்’ புரளும் அரசு நிர்வாகம்! இந்தியாவில் நிர்வாகம் இப்படித்தான் நடக்கின்றது என்கிறார் வெ.இறையன்பு. ஆட்சி மாறும்போதெல்லாம் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படும் நேர்மையான அதிகாரிகள், பதவியைப் பணம் பெருக்கும் வாய்ப்பாகப் பார்க்கும் அமைச்சர்கள், தோரணையும் அதிகாரமும் அமைச்சரைக் காட்டிலும் அதிகமாக வாய்க்கப்பெற்ற நேர்முக உதவியாளர்கள், பரபரப்புச் செய்திகளுக்காகச் சாதாரணமான நிகழ்வுகளுக்குக்கூடச் சாயம்பூசத் துடிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் டி.வி.க்காரர்கள், இயல்பான கடமைகளைச் செயவதைவிடப் பதவியிலும் அதிகாரத்திலும் உயர்நதோருக்கு வால்பிடிப்பதிலேயே குறியாக இருக்கும் அரசு ஊழியர்கள், உயிரோடுள்ளபோது கிடைக்காத மரியாதையைச் செத்துப்பெறும் தியாகிகள், எல்லா மட்டங்களிலும் நாளும் பெருகும் நிர்வாகக்குறைகளைச் சகித்துக்கொண்டு வாழப்பழகிவிட்ட பொதுமக்கள்…… இதுதான் இந்திய வாழ்க்கை என்கிறார் வெ.இறையன்பு. இப்படிப்பட்ட அமைப்புக்குள்தான், குறிஞ்சிப்பூக்கள் போல் சந்தானமும் ஆறுமுகமும் முனியாண்டியும் அரிதாகப் பூக்கின்றார்கள். இப்படிப்பட்டோர் எண்ணிக்கையில் பெருகும்போது மட்டுமே, இந்தியச் சனநாயகத்துக்கு அர்த்தமுண்டு என்ற செய்தியைத்தான், ‘இரங்கல்’ கதை மூலமாகக் கூற விழைகிறார் வெ.இறையன்பு எனலாம்.

ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி ஐந்தாவது தெருவுக்குக் குண்டடிபட்டுப் போரில் இறந்துபோன ஆறுமுகத்தின் பிணத்தைப் பார்வையிடுவதற்காக அமைச்சர் மாலையில் வரப்போவதாகத் தகவல் வருகின்றது. சேனிடரி இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் பொறுப்பற்ற சுகாதார அதிகாரி டாக்கர் வரப்பிரசாத் ஆகியோர் உதவியுடன் சுற்றுப்புறத்தைத் தூய்மை செய்துவைக்கக் கமிஷனர் சந்தானம் பாடுபடுகின்றார். அமைச்சர் வருகையின்போது மட்டும் நகராட்சிப் பணியாளர்கள் வேலையில் காட்டும் தீவிரத்தைச் சாதாரண நாள்களிலும் காட்டினால் நகராட்சி எவ்வளவு சுத்தமாக இருக்கும் என நினைத்துக்கொள்கின்றார். சாலையை முதலில் போட்டுவிட்டுப் பிறகு பாதாளச் சாக்கடைக்காக அதைத் தோண்டும் வீண் வேலையைக் கண்டு மனம் நோகிறார். நகராட்சியின் கட்டணக் கழிப்பிடத்திலிருந்து பரவும் துர்நாற்றத்தைக் கண்டு முகஞ்சுளிக்கிறார். அதைச் சுத்தம் செய்வதற்காகப் பொறுப்பான துப்புரவாளர் முனியாண்டியைப் பணிக்கின்றார். ‘வேலை செய்பவர்களுக்குப் பணியைக் கொடு; வேலை செய்யாதவர்களுக்குச் சம்பளத்தைக் கொடு’ என்ற பிரபலமான நிர்வாகத் தந்திரத்துக்கு ஏற்பத்தான், குப்புசாமிக்குப் பதிலாகக் கமிஷனர் முனியாண்டியைப் பயன்படுத்துகின்றார். வேலையைச் சிறப்பாக முடித்தால், நகராட்சியின் சார்பில், மாலை போடுவதாகவும் வாக்களிக்கின்றார். ஆனால், கழிப்பிட அடைப்பை நீக்கியபோது புறப்பட்ட விஷவாயு தாக்கி மருத்துவமனையில் முனியாண்டி இறந்துபோகிறார். முனியாண்டியின் காலடியில் மலர்வளையம் வைத்துவிட்டுக் குற்றவுணர்வு தாளாமல் சடலத்துக்குமுன் விழுந்து கமிஷனர் வணங்குகின்றார். ஒழுங்காகப் பணி செய்பவர்களுக்கே இப்படிப்பட்ட துன்பங்கள் நேர்கின்றன எனப் புலம்புவது தவிரக் கமிஷனரால் வேறொன்றும் செய்ய முடிவதில்லை!  ஆறுமுகமும் முனியாண்டியும் செத்துப் போவதற்கு யார் பொறுப்பு? வெறும் இரங்கல் என்பதற்கப்பால், இனியேனும் இத்தகைய மரணங்கள் நிகழாமல் தவிர்ப்பதற்குரிய வழிகள் யாவை? இக்கேள்விகளைப் படிப்போரிடம் எழுப்புவதுதான் இக்கதையின் வெற்றியாகும்.

சிறுகதைக்கான ‘வடிவப்பிரக்ஞை’ வெ.இறையன்புவிடம் இருப்பதை, அவரது ‘நரிப்பல்’ தொகுப்பிலுள்ள கதைகள் காட்டுகின்றன. சராசரியாக ஏழெட்டுப் பக்கங்களிலும், அதிகப்படியாகப் பத்துப் பன்னிரண்டுப் பக்கங்களிலும் இக்கதைகள் அமைந்துள்ளன. சில கதைகள் ஐந்தாறு பக்கங்களுக்குள்ளாகவே முடிவுற்றுவிடுகின்றன. எனவே, நவீனத்துவச் சிறுகதையின் வடிவ நேர்த்தியுடன், யதார்த்தவாதக் கதைகளை எழுதும் சிறுகதையாசிரியராக வெ.இறையன்புவைப் பற்றிக் கருத்துரைக்கலாம். இக்கதைகளின் மொழிநடை, அனைவரும் புரிந்துகொள்ளக் கூடியதாய்ப் பாரதியார் கூறுவதுபோல் பாமர ஜனங்களும் விரும்பும் ஆத்மார்த்தமான எளிமையுடன் ஈர்க்கிறது. பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகளும், அரசியல் மற்றும் நிர்வாகக் குழறுபடிகளும், உறவுச்சிக்கல்களும் எனச் சிந்தனையைக் கிளறிவிடும் புதிய கருத்துகளும், வாழ்வை விசாரணை செய்யும் அறிவுசார் வாதங்களும், உள்மனப் போராட்டங்களுமே வெ.இறையன்புவிடம் கதைகளாகியுள்ளன. உத்திகளைவிடவும், உண்மைகளை நம்பியே தம் சிறுகதைகளை வெ.இறையன்பு யாத்துள்ளார். இருண்மையும் புரியாமையும், இக்கதைகளில் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன. சமூகத்துக்குச் செய்தி சொல்லும் யத்தனிப்பு, ஒவ்வொரு சிறுகதையிலும் முனைப்பாகவே இருக்கின்றது. செயற்கையாகப் பின்னப்படும் சிடுக்குகளுடன் கதைகள் இறுக்கமாகப் புனையப்படவில்லை. இயல்பாகக் கதைப்போக்கில் முளைவிடும் சிக்கல்களுடன் நெகிழ்வாகவே கதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. ‘மரண தண்டனை’ என்ற சிறுகதையில், தவறாக அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்படும் www.death.com’ என்று ஓர் இணைய முகவரியைப் புனையும் வெ.இறையன்பு, அப்பாவியைக் கொன்றவர்கள், அவன் சாவை websiteஇல் பதிவுசெய்ய முனையும்போதுதான், அது தவறான கொலை என்பதைத் தெரிந்துகொள்வதாகவும், அதற்காக corrigendum எனும் பிழைதிருத்தத்தை வெளியிட்டுவிட்டுத் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதாகவும் ‘மரண தண்டனை’ சிறுகதையை முடிக்கின்றார். இதுதான் நமது நவீன உலகம். இங்குக் காரணமின்றியே பலரும் கொல்லப்படுகின்றார்கள். ‘நீதி என்பதும், விசாரணை என்பதும்’ வலிமையற்றவர்களைத் தீர்த்துக்கட்டுவதற்கே; பொதுஜனங்களில் பலருக்கும் வாழ்க்கை என்பது வெறுமையான இருப்பு மட்டுமே என்கிறார் வெ.இறையன்பு.

‘சிறகுகள் வேண்டும்’ என்ற சிறுகதை, கிளிக்குஞ்சை வாங்கிவந்து வளர்த்துப் பின் அதற்குச் சிறகுகள் வளர்ந்தவுடன் அதனைச் சுதந்திரமாக வெளியே பறக்கவிட்டுவிடும் மென்மையுள்ளம் கொண்ட தகப்பனையும், அவனுடைய ஆசைகளையும் பற்றிய அழகிய ஓவியமாகும். ஐரோப்பியரைப் பார்த்து வியந்து அவர்களுக்குப் பிடித்தமான சிநேகிதர்களாகிவிடத் துடிக்கும் தமிழ்க் குடும்பத்தினர், ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் கண்டுகொள்ளாமல் நாசூக்காகத் தனிமைப்படுத்தும் நிறபேதத்தைச் சித்திரிப்பதாக, ‘நிறப்பிரிகை’ சிறுகதை அமைகிறது. இக்கதையில் வெளிப்படும் உலகு தழுவிய மனிதநேயப்பார்வை, வெ.இறையன்புவின் பரந்து விரிந்த அறவியல்சார் பொதுமை மனத்தை அடையாளம் காட்டுவதாகும். ‘விசுவாசிகள்’ என்ற சிறுகதை, சுயலாபங்களுக்காகக் கொள்கைகளைத் திடீரெனத் தலைகீழாய் மாற்றிக்கொள்ளும் ‘போலி அரசியல்வாதிகளை’ நம்பி ஏமாறும் பொதுமக்களுக்காகப் பரிவுடன் பேசும் கதையாகும். இக்கதையில் வரும் கலியபெருமாள் போன்ற போலி அரசியல்வாதிகள் இல்லாத இடமே இன்று இந்தியாவில் இல்லை என்று சொல்லுமளவிற்கு, இவர்கள் பெருத்துப் போயிருக்கின்றார்கள். இவர்களைச் சந்தேகித்துக் கண்காணித்துத் தங்கள் நலன்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய பொதுமக்கள், இவர்களுக்குப் பூரண விசுவாசிகளாகச் சான்றோரைப் பகைக்கும் சமூக அவலத்தை, இக்கதைவழி வெ.இறையன்பு வெளிச்சப்படுத்துகின்றார்.

‘எல்லாம் அவன் செயல்’ என்ற சிறுகதை, ஒரு குடும்பத்துக்குள் செயல்படும் குடும்பத்தலைவியின் அகங்கார மனம் மற்றும் அதிகார வெறியைப் பற்றிச் சுவையாக விவரிக்கும் கதையாகும். ‘கடுகடு காயத்ரி மாமி’, இறுதியில் தன் தவறை உணர்ந்து திருந்த முனைவதாகக் கதையின் முடிவை வெ.இறையன்பு புனைந்துள்ளார். இக்கதையில் வரும் காயத்ரி மாமி, ஏன் இப்படியானாள்? இதற்குக் குடும்ப அமைப்பைச் சார்ந்து பெண்களின் மீதேற்றப்படும் கூடுதல் பொறுப்பும், அதற்காக அவள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மனச்சுமைகளுமே காரணங்களாகலாம் அல்லவா? இக்கோணமும் இக்கதையில் விவாதிக்கப்பட்டிருந்தால், இது மேலும் பொருளடர்த்தி கொண்ட ஒரு கதையாகி இருக்கக்கூடும். ‘செருப்பு விற்பவர்’ என்ற சிறுகதை, செம்மையாகச் செய்தால் எந்த வேலையும் தாழ்ந்த வேலை இல்லை என்பதை விளக்கிக்காட்டும் அருமையான ஒரு கதையாகும். செருப்பு விற்கும் தொழிலை விரும்பிச் செம்மையாகச் செய்துவரும் சங்கருக்கு மனைவியாக வாய்க்கும் புவனாவால், தன் கணவனின் வேலையைப் பெருமையாக நினைக்க முடிவதில்லை. அதனால் சங்கரும் புவனாவும் பிரிய நேர்கின்றது. எனினும், கதையின் இறுதியில், “வேலைக்காரனாக வேலை பார்க்கறவனைக்கூட ராஜா மாதிரி நடத்தறவள்தான் பொண்டாட்டி” (ப.55) எனத் தன் அப்பா கூறும் அறிவுரையைப் புவனா ஏற்றுச் சங்கருடன் கருத்தொருமித்து மணவாழ்க்கை நடத்த முன்வருகின்றாள். புவனாவின் இம்முடிவு நூறு சதவிகிதம் சரியானதாயினும், கணவனை ராஜாவாய் மனைவி கருதுவது மாதிரியே, மனைவியையும் கணவன் ராணி மாதிரியே கருதவேண்டும் என்பதும்கூட இக்கதையில் இடம்பெற்றிருந்தால், ‘ஆண்நோக்கு’ நீங்கி இக்கதை மேலும் வலுவாயிருக்குமெனலாம்.

வெ.இறையன்புவின் சிறுகதைகளில் காணக்கிடைக்கும் மிகவும் குறிப்பிடத்தக்க ஓர்அம்சம், அவற்றினுள் ஒலிக்கும் ஒரு தத்துவக்குரலாகும். மானுட வாழ்க்கை மற்றும் அதன் சாரம் பற்றிய ஆழ்ந்தகன்ற விரிவானதொரு புரிதல், வெ.இறையன்புவிடம் குவிந்துள்ளது. இப்புரிதலின் விளைவாகவே, மிகச் சாதாரண சம்பவங்களைப் பற்றி அவர் விவரிக்கும்போதுகூடத் தவிர்க்கவியலாதவகையில் தத்துவச்சாயலுடன் கூடிய ஒரு புனைவு மனம் அதிலிருந்து வெளிக்கிளம்பிவிடுகிறது! “எல்லாமே கொஞ்ச நாளக்கித்தான். அழகா இருக்கறது எதுவுமே ரொம்ப நாளக்கி இருக்காது. ரொம்ப நாளக்கி இருக்க முடியாததனாலேதான் அது அழகா இருக்கு” (ப.19) எனக் குழந்தையிடம் கிளி பற்றிப் பேசும் தகப்பன் நினைப்பதாக வெ.இறையன்பு எழுதுவதிலுள்ள தத்துவ ஆழம் கருதத்தக்கதாகும். “வாழ்க்கையே குறைந்த லக்கேஜூடன் இருந்தால் பயணம் பாரமற்று இருக்கும்” (ப.22) எனச் சூட்கேஸூடன் ரயிலிலேறுபவன் நினைப்பதாகவும் காட்டுகின்றார். இங்குக் ‘குறைந்த லக்கேஜ்’ என்று எதைக் குறிப்பிடுகின்றார்? கல்யாணமற்ற தனிமை வாழ்க்கையையா, ஒரு குழந்தை மட்டும் பெற்று வாழும் அளவான குடும்ப வாழ்வையா? இத்தகைய தத்துவச்சாயல் தொனிக்கும் சிந்தனைக்கீற்றுகளைத் தம் சிறுகதைகள்தோறும் சொற்கோலங்களாகப் பூசியுள்ளார். “சில நேரங்களில் நம்முடைய மௌனம் பயமுறுத்துகிற அளவுக்குச் செயல்பாடுகள் இருக்காது” (ப.35) என, வட்டாட்சியருடன் உரையாடும்போது ஆட்சியர் குறிப்பிடுகிறார். ஆட்சியரின் இக்குரலில், ‘மௌனம்’ பற்றிய வெ.இறையன்புவின் தத்துவப்பார்வை வெளிப்படுவதைக் கூர்மையான வாசகன் கவனத்திலெடுக்காமலிருக்க முடியாது. “மனத்தின் வலியின் தாக்கம் உடலின் வலியைக் காட்டிலும் பயங்கரமானது” (ப.43) என்கிறார். இந்தத் தத்துவப் பண்பே, சாதாரணமான அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றி விவரிக்கும்போதும், வெ.இறையன்புவின் சொற்களுக்குக் கனமும் அழுத்தமும் அளிக்கின்றன. “பிரேதங்களைக் காணநேரும்போது விரோதிக்குக்கூட மனம் இளகிவிடும்; வன்மம் மறைந்துவிடும்” (ப.73) எனக் கூறி நிலையாமைத் தத்துவத்தை நினைவூட்டிவிடுகின்றார் வெ.இறையன்பு. இது நாவல்களில் மட்டுமல்லாமல், அவரின் சிறுகதைகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஒரு கருத்தாகும். இக்கருத்தை விரிவாக விவாதிக்கும் நோக்குடன்தான், இத்தொகுப்பிலுள்ள ‘மரண தண்டனை’ என்ற கதையே எழுதப்பட்டுள்ளது. ‘நரிப்பல்’ என்ற சிறுகதை, வங்கிக்கடனைத் திரும்பக் கட்டுவதற்காக நரிக்குறவர்கள் கொடுத்த பணத்தைத் திருடித் தின்ற குற்றத்துக்காகத் தற்கொலை செய்துகொள்ளும் நரிக்குறவர் சங்கத் தலைவர் பழனியின் அவல வாழ்வைச் சித்திரிக்கும் கதையாகும். இக்கதையில் வரும் பழனி, நேர்மையான ஆட்சியருக்கு அன்புப்பரிசாகத் தரும் ‘நரிப்பல்’தான், கதைக்கே தலைப்பாகியுள்ளது. பழனியின் அன்பளிப்பை அவன் தரும்போது ஏற்கமறுத்துவிடும் ஆட்சியர், பிறகு பழனியின் தற்கொலைக்குப் பிறகு, அவனது அண்ணன் மகனான பாபு வந்து, ‘பழனி தரச்சொன்னதாகக் கூறித் தரும்போது’, பழனியின் ஞாபகார்த்தமாக ஏற்றுக்கொள்ள நேர்கிறது. இங்குத் தொடர்ந்து ஆட்சியர் நெஞ்சில் நிழலாடுவது, பழனியின் அகோர மரணம்தான் என்பது வெளிப்படையாகும். இந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக அமைவது, ‘துப்டன் டெம்பா’ என்ற கதையாகும். ‘துப்டன் டெம்பா’ என்ற பெயருக்குப் ‘புத்தருடைய சீடர்’ எனப் பொருள் தருகிறார் வெ.இறையன்பு. ஒரு வருடம் நாக்பூருக்கு இன்கம்டாக்ஸ் பயிற்சிக்குச் செல்லும் கதைசொல்லிக்கும் துப்டன் டெம்பாவுக்குமிடையிலான நட்பும் பிரிவும்தான் கதை! இக்கதையின் முக்கியமான ஒரு சிறப்பு, பொதுவாகப் புறக்கணிக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மனிதர்களைப் பற்றிப் பெருமதிப்புடன் வெ.இறையன்பு எழுதியுள்ளதேயாகும். “எனக்கு எப்போதுமே வடகிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்களைப் பிடிக்கும். அவர்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகம். மனத்திலிருப்பதை வெளிப்படையாகப் பேசுவார்கள். ஒளிவுமறைவு கிடையாது. மலையிலிருந்து சமவெளிக்கு வருகிற ஆற்றைப்போல மனிதர்களின் குணநலன்களும் நீர்த்துப்போகின்றன. தந்திரங்களும் ஜாலங்களும் சமவெளியிலிருக்கிற மக்களுக்குச் சகஜமாகிவிடுகின்றன” (ப.57) என்கிறார் வெ.இறையன்பு. இக்கதையின் கருப்பொருளும் இதுதான். துப்டன் டெம்பாவுக்கும் கதைசொல்லிக்கும் பயிற்சி நாள்களின்போது உருவாகும் நெருக்கத்தைப் பயிற்சி முடிந்த பின்னும் தொடர்வதற்குப் பெரிதும் விரும்புகிறான் கதைசொல்லி. ஆனால், அதில் துப்டன் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நட்பு தொடர முடியாதது என்பதற்குத் துப்டன் காட்டும் காரணம், தமிழ்நாட்டினரின் சாதிய மனநிலையைத் தோலுரித்துக் காட்டுவதாயுள்ளது.

அருணாச்சலப்பிரதேசம், ‘டவாங்’ மாவட்டத்தில், துப்டன் வீட்டிற்கருகே இருந்த பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய தமிழ்நாட்டு ஆசிரியர் ஒருவர், ஐந்து வருடங்கள் துப்டன் வீட்டில் சாப்பிட்டு வந்தார். பிறகு சென்னையிலேயே வேலை கிடைத்ததால், விடைபெற்றுச் சென்றார். துப்டனின் சகோதரர் ஒருவர் ஒருமுறை சென்னை செல்ல நேர்த போது, அந்த ஆசிரியரின் வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டார். மகிழ்ச்சியாக விடைபெற்றுத் திரும்பியவர், அந்த ஆசிரியரின் குழந்தைக்கு வாங்கிய பரிசைக் கொடுக்காமல் வந்துவிட்டதால், மீண்டும் ஆசிரியரின் வீட்டிற்குப் போக நேர்கிறது. அங்கே அவர்  சாப்பிட்ட தட்டைக் காலால் எத்திக் குளியலறைக்குத் தள்ளிக்கொண்டிருந்த ஆசிரியரைக் கண்டு, அதிர்ச்சியும் அவமானமும் அடைந்து, அருவருப்புணர்வுடன் தாய் மாநிலத்திற்குத் திரும்பித் தம்பியிடம் கூறி மிகவும் வேதனைப்பட்டாராம் துப்டனின் சகோதரர். இந்நிகழ்ச்சியைக் கதைசொல்லியுடன் பகிர்ந்துகொள்ளும் துப்டன், இந்நிலைமை தனக்கும் வரவேண்டாமெனக் கூறித் தோழமையுடன் பிரிவதே தனக்கு நல்லது என்கிறார். வடகிழக்கு மாநிலத்தவர்கள், இந்தியாவில் படும் துன்பங்களைக் கூர்மையான ஒரு மொழியில் இக்கதை பதிவுசெய்துள்ளதெனலாம். வடநாட்டாரின்  அதிகாரத்தில் நசுங்கும் தமிழர்கள்கூடப் பரந்த மனத்துடன் வடகிழக்கு மாநிலத்தவரை வரவேற்பதில்லை என்ற உண்மையை, இக்கதைவழி வெ.இறையன்பு நுட்பமாகப் பேசியுள்ள அறத்துணிவு பாராட்டத்தக்கதாகும். ‘பறக்க மனம் தேவை’ என்ற சிறுகதை, அந்தத் தலைப்பு கூறும் நற்கருத்தை விளக்கும் கதையாகும். பிறந்து ஏழெட்டு நாளேயான ஒரு கோழிக்குஞ்சு, அதைக் கவ்வ வரும் ஒரு கழுகிடமிருந்து தப்பிப்பதற்காகப் பறந்துபோய் மரப்பொந்தொன்றில் அடைக்கலமாகிறது. இத்தகைய பறக்கும் ஆற்றல், பிஞ்சுப் பருவத்திலேயே அந்தக் கோழிக்குஞ்சுக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதிலாகத்தான், பறப்பதற்குச் சிறகுகளைவிடவும் மனம்தான் தேவை என்கிறார் வெ.இறையன்பு. இது மிகச்சாதாரணமான ஒரு சிறுகதைதான். ஆனால், இக்கதைக்குள்ளும், ‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்ற நம்பிக்கைக்குரலை எழுப்பிப் பொது வாசகரிடம் ‘கருத்துப்பரவல்’ செய்ய வெ.இறையன்பு முனைவதுதான் குறிப்பிடத்தக்கதாகும்.

‘டூலெட்’ என்ற சிறுகதை, வாடகைக்கு வந்தவர், தாம் குடிபோகும் வீட்டைச் சொந்தக்காரரிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் கொடுமையைப் பேசும் கதையாகும். ஆசை  ஆசையாய்த் தாம் கட்டிய சொந்த வீட்டைத் துரைப்பாண்டி என்ற வாடகைக்கு வந்த கொடியவனிடம் பறிகொடுத்த கண்ணுச்சாமி, “உலகத்துல தருமம் நியாயம் ஒன்னுமே இல்லேன்னு புரிஞ்சிக்கிட்டேன்” (ப.88) எனப் புலம்புவதுடன் கதை முடிகிறது. “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்” எனத் திருவள்ளுவர்  கூறுவதுதான், இங்குச் சிறுகதையாகியுள்ளதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. ‘சாய்ந்த கோபுரம்’ சிறுகதை, இறைமையை மட்டுமே வரையும் ஓவியர் கோபுரனின் மாட்சிமையையும், அவரது மகன் சீனிவாசனின் வீழ்ச்சியையும் சித்திரிக்கும் கதையாகும். கடைசிக் காலத்தில், கைவிரல்களைச் சிறிதும் அசைக்கமுடியாத முடக்குவாதத்தால் தாக்கப்பட்டு, ஓவியங்களே வரைய முடியாமல் போய்ப் பரிதாபமாக இறந்துபோகின்றார் கோபுரன். ஆனால், அதற்குமுன் அவர்  வரைந்த தெய்வத் திருமேனிகள் அனைத்தும், கலைச் சாதனைகளாகக் கலை ஆய்வாளர்களால் கொண்டாடப்பட்டவை. நோயுற்ற கோபுரனுக்கு மூன்று வேளை உணவைக்கூடச் சரியாகக் கொடுக்காத அவர்  மகன் சீனிவாசன், கோபுரனின் மறைவிற்குப் பிறகு, கலைக் கண்காட்சியொன்றை அரசு செலவில் அமைத்துக் கோபுரனின் ஓவியங்களை விற்றுக் ‘காசு’ பார்க்கிறான். இறுதியில் அவன் கைவிரல்களில் குஷ்டம்பிடித்துச் சீழ்வடிவதாக இக்கதையை முடிக்கின்றார் வெ.இறையன்பு. “கலையை விற்கிறவர்களின் கைகள் இப்படித்தான் ஆகுமோ?”(ப.96) என்ற ஒரு கேள்வியுடன் கதை முடிகின்றது. இக்கேள்வி சரியென்றால், கலைக்காகவே வாழ்ந்த கோபுரனின் கைவிரல்களில் முடக்குவாதம் ஏறியதெப்படி? என்றும் கேட்கலாம்தானே! பழங்காவியங்களைப்போல் நீதியுரைத்தலுக்கு வெ.இறையன்பும் முதன்மையளிக்க நினைப்பதால்தான், இவ்வாறு அவர்  சித்திரிக்கிறார்  எனப் புரிந்துகொள்வதே, இங்குப்பொருத்தமுடையதாகும்.

‘இழப்பீடு’ என்ற சிறுகதை, கழுகுகளின் ராஜாவான ராஜாளிப் பறவையைக் ‘கம்பீரம் – அதிசயம் – ஆளுமை’ ஆகியவற்றின் சிறப்பான குறியீடாகக் கொண்டு, உயர்ந்தவற்றை எட்டிப் பறிக்கும் மன வைராக்கியத்தைத் தனக்குள் வளர்த்துக்கொள்ளும் விலங்கியல் பேராசிரியரின் மகனுடைய அக உலகைப் பற்றிப் பேசும் கதையாகும். அண்டங்காக்கையிடம் வீரங்காட்டாமல் நழுவும் ராஜாளியைக் கண்டு ஏமாற்றமடையும் சிறுவன் ரமேஷின் மனத் துன்பத்துக்குக் கனவில் வரும் ஒரு வெறுங்காக்கையைக் குத்திக்கிழிக்கும் ராஜாளியின் வேட்டைப்பாய்ச்சல் இழப்பீடாகித் திருப்தியைத் தருகிறதென்கின்றார் வெ.இறையன்பு. ஒரு சிறுவனின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இக்கதை, தன்னைப் பேராளுமையாக உருவாக்கிக்கொள்ள நினைக்கும் அச்சிறுவனின் ஆகப் பெரும் வலிமைக்கு ஏங்கும் பிஞ்சுள்ளத்தைத் துல்லியமாகப் படம்பிடித்துள்ளதெனலாம். வெ.இறையன்புவின் மொழிநடையில், வித்தியாசமான சில உவமைகள் மின்னிக் கண்சிமிட்டுகின்றன. இந்த உவமைகளில், ஒரு தற்காலத் தன்மையிருப்பது என்பது கவனத்துக்குரியதாகும். “அவனுக்கு வந்த கோபத்தை ஜமுக்காளத்துக்கடியில் குப்பையைத் தள்ளிமூடுவதைப்போல உள்ளுக்குள்ளேயே அமுக்கிக்கொண்டான்” (ப.13); “தன் சொந்த வீட்டில் அந்நியமான உணர்வு. ஏதோ தர்மசத்திரத்தில் படுத்திருப்பதுபோல எண்ணம்” (ப.42); “மொட்டைத் தலையில் முளைக்கும் முடிகளைப்போல அரும்புகள் அங்கங்கே தளிர்களாகத் தலையை நீட்டி”(ப.58); “அகற்றுவதற்கு முன்பே இடிந்துபோன ஆக்கிரமிப்புக் கட்டடம்போல ஆகிவிட்டது அந்தக் கட்டளை” (ப.72); “அந்தக் கழுகு சர்ருன்னு முதலமைச்சர்  வர்ற ஹெலிகாப்டர்  பூமியில இறங்கற மாதிரி இறங்கித் தன்னோட கால்ல அந்தக் குஞ்சை அள்ளிக்கிட்டு மேல பறக்க ஆரம்பிச்சிருச்சி” (ப.77);  “நெருப்புக்கோழி தலையைத்          தூக்குவது மாதிரித் தலையைக் கோதிவிட்டுக்கொண்டே” (ப.102)  எனப் புதுமையான சில உவமைகளை வெ.இறையன்பு கையாண்டுள்ளார். இந்த உவமைகளின் வாயிலாகப் படைப்பாசிரியரின் நவீனமான மனம் வெளிப்பட்டுள்ளது என்பதுடன், அவரது நளினமான எழுத்து நடையும், வாசிப்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும்வகையில் காட்சியாகியுள்ளது எனலாம்.

‘ரத்த சம்பந்தம்’ என்ற சிறுகதை, ரத்த தானத்தின் பெருமையை விளக்கும் கதையாகும். ரத்த தான முகாம்களுக்கு அப்பாற்பட்டுத் தியாக மனப்பான்மையுடன் செயல்பட்டு, உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் ரத்தமளித்துக் காப்பாற்ற முனையும் ‘வேல்முருகன் – ரமேஷ் – சாத்தையா – குருலிங்கம்’ ஆகிய நான்கு நண்பர்களின் சேவா தர்மத்தைப் பெருமைப்படுத்தும் கதையாகப் புனையப்பட்டுள்ளது. இக்கதையைப் படிக்கும் எவருக்கும், இந்த நான்கு நண்பர்களைப்போல் நாமும் இனிமேல் விரைந்து ரத்தம் கொடுத்துப் பிறருக்குதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பதுதான் வெ.இறையன்புவின் நோக்கம் என்றால், அந்நோக்கம், இக்கதையில் சிறப்பாகச் சாதிக்கப்பட்டுள்ளதெனலாம். ‘சமர்ப்பணம்’ என்பது, இத்தொகுப்பின் இறுதிக் கதையாகும். தனக்குத் தன் மகன் கொள்ளி போடக்கூடாதென்றும், ஒரு தலித் மாணவன்தான் தனக்குக் கொள்ளியிட வேண்டுமென்றும், மருத்துவக் கல்லூரிக்குக் கொடுத்ததுபோக மிச்சமிருக்கும் தன்னுடலுறுப்புகளைப் பிராமணர்களுக்குரிய பிரத்தியேகமான சுடுகாட்டில்தான் எரிக்க வேண்டுமென்றும் மகனிடம் வாக்கு வாங்கிக்கொண்டு சாகும் வித்தியாசமான ஆசிரியர்  ஒருவரையும், அவரது சீடனான மகனையும் பற்றிய கதை இது. செத்துப்போன ஆசிரியரின் ஆசைப்படி, அவரது உடலுறுப்புகளை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக அளித்துவிட்டுச் சொச்சமிச்சங்களைத் தலித் மாணவன் மூலம் எரியூட்டச் செய்கிறான் மகன். ஆனால், அப்பா கேட்டுக்கொண்டபடி, பிராமணர்களுக்குரிய சுடுகாட்டில் அதைச் செய்யாமல், இன்னும் புரட்சிகரமாய்த் தலித்களுக்குரிய சுடுகாட்டில் எரியூட்டுகிறான் மகன்! இக்கதையின் மூலம், இலக்கியமென்பது வெறும் ஓர் ஏட்டுச்சுரைக்காய் அன்று, அது சமூக மாற்றத்திற்கான ‘கருத்துத் தீ’ என்பதைத் தம் கதைவழிப் புலப்படுத்திவிடுகின்றார் வெ.இறையன்பு.

மலமள்ளுகிறவர்கள், கண்டுகொள்ளப்படா ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், மூட்டைத்தூக்கிகள், செருப்பு விற்பவர்கள், வடகிழக்கு மாநிலங்களின் மலைவாசிகள், நரிக்குறவர்கள், வாடகைக்கு விட்டுச் சொந்த வீட்டை இழப்பவர்கள், ரத்த தானமும் உறுப்புத் தானமும் கிடைக்காமல் கிடந்து அவதிப்பட்டுத் தம் இன்னுயிரை இழப்பவர்கள் எனப் புறக்கணிக்கப்படுவோரின் அவலக்குரல்களாய்ச் சிறுகதைகளைப் புனைந்துள்ளார் வெ.இறையன்பு. ஒடுக்கப்படும் வர்க்கத்தினரைச் சார்ந்து நின்று, தம் புனைவெழுத்துகளைச் சமூக மாற்றத்திற்கான நற்கருத்து விதைகளாய்த் தூவுகிறார் வெ.இறையன்பு என்பதைச் சாதகமாக மதிப்பிடுவதுதான், இலக்கிய விமர்சனத்திற்கு நியாயம் செய்யும் விமர்சன மதிப்பீடாக இருக்க முடியும். “அவன் சிம்னி விளக்கிலும் மோசமான விளக்கொளியில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். என்ன எழுதுகிறோம், எதற்காக எழுதுகிறோம், யாருக்காக எழுதுகிறோம் என்பது மட்டும் அவனுக்குத் தெரியாது. ஆனால், இதையே பல வருடங்களாகத் தொடர்ந்து  செய்துகொண்டிருக்கிறான்” (ப.10) என எழுதுகிறார். இப்படித்தான் மகத்தான எழுத்து பிறக்கிறது. இதை நோக்கிய ஆயிரம் மைல் பயணத்தில், ‘நரிப்பல்’ மூலம் முதலடியை வெ.இறையன்பு எடுத்துவைத்துள்ளார். ஆனால், இந்த முதலடி, தொல்காப்பியர் கூறுவதுபோல, இழுமென் மொழியால் விழுமியது நுவலல் என்ற பெருநோக்கிலான மாபெரும் முதலடியாகும். இன்னும் மீதமுள்ள தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது மைல்களையும் என்றேனும் ஒருநாள் வெற்றிகரமாக வெ.இறையன்பு கடந்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் பொது வாசகர்களிடம் ஆழமாக இம்முதலடி விதைக்கிறது என்பதுதான், ‘நரிப்பல்’ பற்றிய என் மதிப்பீடாகும்.