அமெரிக்க டிரான்ஸ்கிரெஸிவ், எதிர்-கற்பனாவாத எழுத்தாளர் புக்காவஸ்கி நான் கொண்டாடும் ஆளுமைகளில் ஒருவர். அவருடைய கவிதைகளே எப்போதும் என் முதல் தேர்வு – அன்றாடம் குறித்த ஒரு மிகையற்ற, கற்பனாவாதமற்ற சித்திரம், ஒரு அனுபவக் கதை, சமூக அதிகாரத்தால், ஒழுக்கவாத கண்காணிப்பால் ஒடுக்கப்படும் ஒரு ‘திமிரான’ ஆணின் தொன்மம், நீட்சேயிய தத்துவம் ஆகியவற்றின் அபூர்வ கலவை புக்காவஸ்கியின் கவிதைகள். சில கவிதைகளில் வெகுநுட்பமாக ஒரு உணர்வுமாற்றம் இருக்கும்; ஒரு நுட்பமான விசயத்தை சட்டென உருவகமாக்கி விடுவார். அதே நேரம் கவிதையை அரூபமாக்கி, சித்துவேலைகளில் ஈடுபட மாட்டார். அவருடைய மொழிநடை எளிதாகவும், ஒரு குடிகாரனின் முனகலைப் போன்ற தாளம் கொண்டதாக இருக்கும். புக்காவஸ்கியின் கவிதைகளை பெருந்தேவி உள்ளிட்டோர் மொழியாக்கி இருக்கிறார்கள். நானும் தான். எனக்கு புக்காவஸ்கியின் மொழியாக்க கவிதைத் தொகுதி ஒன்றை எதிர்காலத்தில் கொண்டு வர மிகுந்த விருப்பம் உண்டு.

ஒப்பிடுகையில் புக்காவஸ்கியின் புனைவை இரண்டாம் பட்சமாகத் தான் வைப்பேன். அவருடைய நாவல்களில் தொழில்நுட்பரீதியாக அர்த்த அடுக்குகளோ, ஆழமான சிந்தனைகளோ, விரிவான வாழ்க்கைச்சித்திரமோ இருக்காது. அவை கவனமின்றி எழுதப்பட்ட சுயசரிதைகளைப் போல இருக்கும். இருந்தாலும், காட்சிகளை அமைப்பதில், பாத்திரங்களை சிக்கனமாக செதுக்குவதில், ஒரு அத்தியாயத்தை சரியாக துவங்கி முத்தாய்ப்பாய் முடிப்பதில் ஒரு முனைப்பு இருக்கும்; அவர் அவற்றில் உழைத்திருப்பது தெரியும். இன்னொரு பக்கம் இப்படி கலைநுட்பத்துடன், அர்த்த அடுக்குகள், சிடுக்குகளுடன் இருக்க வேண்டாம் என்று, அது தன் இலக்கிய கொள்கைக்கே விரோதமானது எனும் நம்பிக்கையுடன் அவர் எழுதியிருப்பதாக, இப்படி எழுதாமல் இருப்பதே ஒரு எதிர்-அழகியல் என அவர் நம்புவதாகத் தோன்றும்.

புக்காவஸ்கியின் நாவல்களில் எனக்குப் பிடித்தவை “தபால் நிலையம்” – இது மொழியாக்கப்பட்டு தமிழில் வந்துள்ளது. அண்மையில் Ham on Rye நாவலைப் படித்தேன். இது புக்காவஸ்கியின் சுயசரிதை சாயல் கொண்ட புனைவு என்கிறார்கள். ஹென்ரி சினாஸ்கி ஜூனியரின் குழந்தைப் பருவம், பள்ளிக் காலம் துவங்கி கல்லூரியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள், அவன் எழுத்தாளனாக முயல்வது, அமெரிக்காவில் அக்காலத்தில் நிலவிய பெரும் பொருளாதார தொய்வின் போது (Great Depression) குறைந்த ஊதியத்துக்கு எளிய வேலைகளை செய்து அவன் வாழ நேர்வது வரை ஒரு சித்திரத்தை வழங்கும் எதிர்-நாயக கதை. இதுவும் ஒரு மகத்தான இலக்கிய பிரதி அல்ல. அதே நேரம் இலக்கியத்தில் நாம் உன்னதமானவை என கொண்டாடுகிறவற்றை முறியடிக்கவோ, அவற்றை தவிர்த்து முற்றிலும் எதிர்நிலையில் இருந்து எழுதவோ புக்காவஸ்கி இதைப் படைத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. புக்காவஸ்கியின் புனைவுகளை ஒருவித ‘இலக்கிய கலவரம்’ என்று சொல்வேன். வடக்கிந்தியர்கள் கொண்டாடுவார்களே ஹோலி அதைப் போல சாலையில் ஒதுங்கிப் போகும் பரிசுத்தமான ஒழுக்கமான எல்லாவற்றின் மீது வண்ணங்களை வாரி இறைக்கும் அதிரடி திருவிழா இது. நான் சற்று ரொமாண்டிக்காக, வண்ணமயமாக சொல்கிறேனே ஒழிய அவருடைய எழுத்தில் அதெல்லாம் இருக்காது.

புக்காவஸ்கியின் முரட்டுத் தாக்குதலுக்கு முதல் இலக்கு அழகியல். ஆண்-பெண் உறவு, குடும்பம், குழந்தை, தாய் தந்தையர், வேலை, முன்னேற்றம் என ஒவ்வொன்றையும் நாம் அழகியல் வழியாகவே காண்கிறோம். ஒரு காதலியை வெறும் பெண்ணாக நம்மால் பார்க்கவே முடியாது. ஆனால் அப்படி பார்க்க முடிவது ஒரு பெரும் விடுதலை. அம்மாவை, அப்பாவைக் கூட அப்படித் தான் செண்டிமெண்டுகளின், நினைவுகளின், விழுமியங்களின் ஒரு புகைமூட்டத்தின் வழி நோக்குகிறோம். நமது பெற்றோரின் தனிப்பட்ட அந்தரங்கத் தேவைகளை பிள்ளைகளால் புரிந்து கொள்ள இயலாது. அவர்களுடைய சுயநலத்தை நம்மால் பார்க்க முடியாது. பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்து விலகுவோம் (தாய்-தந்தையர் புணர்வதைக் காணும் ஒரு குழந்தையின் அதிர்ச்சியைப் பற்றி பிராயிட் பேசியிருக்கிறார்.) அல்லது அவர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவோம் அல்லது முதுமையில் எண்ணெய்க்குளியல் தந்து கொல்வோம். எல்லாம் முடிந்த பிறகு பாடையில் கிடத்தி “ஐயோ அம்மா, ஐயோ அப்பா” என ஒப்பாரி வைத்து மீண்டும் அன்னை, அப்பா உருவத்தை அழகியலாக மீளமைப்போம். “ஹேம் ஆன் ரையில்” புக்காவஸ்கி தன் தந்தை, தாய்க்கு வரையும் கேலிச்சித்திரங்கள் பிரமாதமானவை. அவருடைய அப்பா ஹென்ரி சினாஸ்கி சீனியர் ஒரு வளர்ந்த குழந்தை. அவர் கிட்டத்தட்ட தன் மகன் ஹென்ரி சினாஸ்கி ஜூனியரைப் போன்றே இருக்கிறார். அவரால் இந்த உலகின் பாவனைகளுடன், வன்முறையுடன் ஒத்துப் போக முடியவில்லை. அதே நேரம் தான் எதை எதிர்த்து இயங்க முயன்று தோற்கிறோமே அதே சமூக, குடும்ப வன்முறைக்குள் தன் மகனையும் ஈடுபடுத்துகிறார். தானே ஒரு பலியாடு எனப் புரியாமல் தன் மகனையும் இந்த செயற்கையான சூழலுக்குள் தள்ளுகிறார். அவர் தன் வேலையை இழந்து தடுமாற ஆரம்பிக்கும் காலங்களில் கடும் வன்முறையாளராக மாறுகிறார். வெளியே அதைக் காட்ட முயலும் போது அசிங்கப்படுகிறார். ஆகையால் செய்யாத தவறுக்கெல்லாம் தன் மகனை பெல்ட்டால் குண்டியில் விளாசி மகிழ்கிறார். அதைத் தடுக்க துணிச்சல் இல்லாத, “அப்பா செய்வதெல்லாம் சரி தான், அப்பாவுக்கு எல்லாம் தெரியும்” என திரும்பத் திரும்ப சொல்கிறவராக சினாஸ்கி ஜூனியரின் அம்மா இருக்கிறார். அம்மா அப்பாவை “டேடி” என அழைக்கும் இடங்கள் வெகு தமாஷானவை. சாப்பாட்டு மேஜையில் அப்பா எதாவது அபத்தமாக உளறுவார். உடனே அம்மா “யெஸ் டேடி” என அவருக்கு ஒத்து ஊதுவார். மகனுக்கு பைத்தியம் பிடிப்பது போலிருக்கும்.

அடுத்த இலக்கு பெண்கள். புக்காவஸ்கி ஒரு பெண் வெறுப்பாளர் என ஒரு குற்றச்சாட்டு உண்டு. எனக்கு அவர் பெண்களின் கற்பனாவாத பிம்பத்தை சுத்தியால் உடைக்க முயன்று, பெண்ணை பெண்ணாக மட்டுமே பார்க்க முயன்றவர் எனத் தோன்றும். அதில் மிகை உண்டு, ஆனால் நேர்மையான முயற்சி அது. புக்காவஸ்கி ஒரு பெண்ணின் கண்கள், இமைகள், ஒளிரும் கூந்தல், பட்டுப்போன சருமம் பற்றி ஒருவன் கனவு காண்பதாக எழுத மாட்டார். எடுத்தவுடனே ஒரு பதின்வயது ஆண் பெண்ணை எங்கே பார்ப்பான், எதற்காக ஏங்குவான் என அவருக்குத் தெரியும். அதை வெளிப்படையாக எழுதுவார். நீங்கள் தி.ஜாவின் நாவல்களை எடுத்துக் கொள்ளுங்கள் – காமம் ஆறாக ஓடும், ஆனால் ஓரிடத்தில் கூட பெண்ணுறுப்பை, முலைகளைப் பற்றி குறிப்பிட மாட்டார். “மோகமுள்ளில்” ஓரிடத்தில் கூட யமுனாவின் மார்புகளை பாபு பார்த்ததாகத் தெரியாது. தி.ஜாவின் நாவல் வடிவத்துக்கு இந்த “கடந்து செல்லும் காமம்” பொருத்தமாக இருந்தாலும், அதில் நிறைய பொய் உள்ளது. ஆனால் புக்காவஸ்கியின் நாவலில் பதின்வயது சினாஸ்கி தன் வகுப்பில் படிக்கிற பெண்ணின் பின்புறத்தை, மார்புகளைத் தான் முதலில் கவனிக்கிறான். ஒருநாள் அப்பெண்ணிடம் போய் அவன் பேசுகிறான். அவளிடம் உன் பாவாடையை தூக்கி ஜட்டியைக் காட்டு என்கிறான். அவள் காட்டுகிறாள். கதை இப்படிப் போகிறது. பெண் ஆசிரியை ஒருவர் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஆங்கில மொழி, இலக்கிய பண்பாடு பற்றி வகுப்பெடுக்கிறார். பையன்கள் அவரது பளபளவென்ற கால்களை, அதைத் தாண்டி எதாவது தெரியுமா என பார்த்தபடி இருக்கிறார்கள். வகுப்பில் மாணவிகள் அந்த ஆசிரியை மீது செம கடுப்பில் இருக்கிறார்கள். ஒரு பையன் பின் பெஞ்சில் இருந்து அந்த ஆசிரியையின் தொடைகளைப் பார்த்தபடி சுயமைதுனம் செய்கிறான். அப்போது எழும் ஒலியை, புக்காவஸ்கி ஆசிரியையின் உரையுடன் சமமாக வைத்து தருகிறார். அபாரமான பகடி இது. ஒரு பக்கம் இச்சையால் ஆன நடைமுறை உலகம், இன்னொரு பக்கம் உணர்வுகளை அழகியலாக்கி, வரலாறாக்கி, அரூபமாக்கி மொழியின் பண்பாட்டை விவாதிக்கும் அறிவுஜீவிகளின் உலகம்.

எனக்கு இந்த பகுதியை படித்த போது சாருவின் “எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்” நினைவு வந்தது – அதில் சாரு கையில்லாத ரவிக்கை அணிந்த தில்லி பெண்கள் பேருந்தில் செல்லும் போது அவர்களுடைய அக்குளைத் தான் கவனிப்பார். அதை ரொமாண்டிசைஸ் பண்ணாமல், அது எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது என போகிற போக்கில் சொல்வார். பெண்ணுடல் வெறுப்பெல்லாம் இல்லை – அந்த கசகசப்பான தட்பவெட்பத்தில் பேருந்தில் செல்லும் ஒரு பெண்ணின் உடலில் எல்லாமும் தானே கலந்திருக்கிறது. முழுக்க முழுக்க அழகால் ஆனவர்கள் யாரும் இல்லையே. அருவருப்பை அப்படியே ஏற்க நமது மொழிக்கு பெரிய தயக்கம் உள்ளது. சாரு நம்மை அந்த பக்கம் தலையைப் பிடித்து திருப்பி பார்க்க வைக்கிறார். அதே நேரம் சித்தர்களைப் போல இந்த உடல் அழுகக்கூடியது என்றெல்லாம் ஒப்பாரி வைப்பதும் இல்லை.

கணேசகுமாரன் அண்மையில் தான் எழுதி வரும் “சொர்க்கபுரம்” நாவலில் இருந்து ஒரு பகுதியை பகிர்ந்திருந்தார். அதில் ஒருவன் தான் மனதில் மிகவும் கொண்டாடிய பெண்ணைத் தேடி வருகிறான். அவள் அவனுக்கு தன் உறுப்பைத் திறந்து காட்ட அதில் இருந்து புழுவாகக் கொட்டுகிறது. அவன் பயந்து ஓடி விடுகிறான். அதிர்ச்சியான சித்தரிப்பு இது. எனக்கு இது “ஹேம் ஆன் ரையில்” வரும் ஒரு காட்சியை நினைவுபடுத்தியது – சினாஸ்கி வளர்ந்து பதின்வயது மாணவனாக இருக்கிறான். இரவில் தன் நண்பன் வீட்டில் இருந்து பீர் குடிக்கிறான். நண்பனின் அம்மா சுதந்திரமான ஒரு பெண். அழகி என ஒரு எண்ண ஓட்டம் சினாஸ்கிக்கு உண்டு. நண்பனும் தன் அம்மாவின் உடலைப் பற்றி மனத்தடை இன்றி விவரிக்கிறான். (ஆனால் சினாஸ்கி தன் தாயைப் பற்றி இப்படி சிந்திப்பதாக புக்காவஸ்கி எழுதுவதில்லை. இதன் வழி அவனுக்குள் இருக்கிற சாமான்யமான, மத்தியவர்க்க ஆணையும் நிறுவி விடுகிறார். இல்லாவிட்டால் அவன் ஒரு மிருகம் என நான் நினைத்து விடுவோம் அல்லவா!) நண்பன் கடும் போதையில் அறைக்குப் போய் தூங்கி விடுகிறான். சினாஸ்கி நள்ளிரவு வரை அங்கேயே இருந்து குடித்தபடி நண்பனின் அம்மாவுக்காக காத்திருக்கிறார். அவர் வருகிறார். ஒரு பத்தி முழுக்க அவருடைய ஈர்ப்பான் உடல் தோற்றம், அதில் மிளிரும் காமம், அது குறித்த அவனது பிரமிப்பு என புக்காவஸ்கி விவரிக்கிறார். நண்பனின் அம்மா அவனுடன் இருந்து குடிக்கிறார். அவன் அவரிடம் நேரடியாகவே கேட்டு விடுகிறான். அதற்கு அவர் “போடா பொடிப்பயலே” என உதாசீனிக்கிறார். திரும்பத் திரும்ப முயல்கிறான். தன்னை ஒரு திமிரான, திறமையான ஆணாக முன்வைக்கிறான். சரி போனால் போகட்டும் என அவர் தன் பாவாடையை உயர்த்தி உள்ளாடையை அவிழ்க்கிறார். அதற்கு மேல் என்னவென்கிறதை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் கணேசகுமாரனின் சித்தரிப்பில் வருவதைப் போன்ற விளிம்புநிலையில் இருக்கிற பெண்ணுடலாக அன்றி ‘அன்றாட பெண்ணுடலாக’ இது திரைமறைவின்றி வருகிறது, அதிர்ச்சி, பயம் ஏதும் இன்றி சினாஸ்கி நடந்து கொள்கிறான், ஒரு திருப்பத்துடன் காட்சி முடிகிறது என மட்டும் கூறிக் கொள்கிறேன். நாவலின் சிறந்த காட்சிகளில் ஒன்று இது.

குடி போதை, அடிதடி, கால்பந்தாட்டம், பேஸ்பால் விளையாட்டு காட்சிகளும் இந்நாவலில் முக்கியமானவை. எந்த ஆணவமும் இன்றி கிட்டத்தட்ட ஒரு கலவியைப் போன்றே வன்முறையை புக்காவஸ்கி காட்டுகிறார் – சில இடங்களில் சினாஸ்கி வெல்கிறான், சில இடங்களில் செம அடி வாங்கி மயங்குகிறான். ஆனால் அவன் அது குறித்த வெட்கம், அகந்தை இன்றியே இருக்கிறான். வன்முறையை ஒரு போதையாகக் காட்டுவது ஒழுக்கவாதிகளின் பாணி. புக்காவஸ்கி அதை செய்வதில்லை. தத்துவார்த்தமாகப் பார்த்தால் காலம், வெளி ஆகிய கட்டமைவுகளில் இந்த உடல் சிறைபட்டிருக்கிறது; அவற்றில் இருந்து உடைத்து வெளிவர நமக்கு வன்முறை அவசியமாக இருக்கிறது. ஆனால் இந்த வன்முறையை குரோதத்தின், அடக்கப்பட்ட எரிச்சலின் வெளிப்பாடாகக் காட்டும் போது எதிர்மறையாகவும், இதை ஒரு விளையாட்டாக, கொண்டாட்டமாக மாற்றும் போது அது ஒரு விடுதலை அனுபவமாகவும் அமைவதாக அவர் சித்தரிக்கிறார். (அண்மையில் வெளியான “கள” எனும் மலையாளப் படத்தை இந்த பின்னணியில் வைத்துப் பேசலாம்.) அப்பா சினாஸ்கி மகனை வதைப்பதற்காக தரும் பெல்ட் விளாசல்களும் மகன் சினாஸ்கி பின்னர் கலந்து கொள்ளும் அடிதடிகளும் இப்படி இருமையாகின்றன.

வேலை நம்முடைய மத்திய வர்க்க கலாச்சாரத்தில் கடமையாக, வாழ்வை முன்னேற்றும் ஓட்டமாக காட்டப்படுகிறது; பாலகுமாரன், சரவணன் சந்திரன் போன்றோர் வியாபாரத்தில் உழைப்பை ஒரு சாகசமாக, தனிமனித வெற்றிப் பயணமாக சித்தரிக்கிறார்கள். உழைப்பில் உள்ள சுரண்டல் பற்றி மார்க்ஸிய இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். சு.ராவின் சிறுகதைகளில் ஒரு அமைப்புக்கு வெளியே தனிமனிதனின் உழைப்பு, திறன் ஆகியவற்றை பெரும் சாகசமாக மாற்றும் போக்கு உண்டு (“கோயில் காளையும் உழவு மாடும்”, “விகாசத்தில்” வரும் ராவுத்தர்). புக்காவஸ்கி உழைப்பை நம் மீது கட்டாயமாக திணிக்கப்படும் ஒன்று என்று காட்டுகிறார். அதன் மீது எந்த மகத்துவத்தையும் அவர் ஏற்றுவதில்லை. பணம் என ஒன்றை எடுத்து விட்டால் யார் உழைக்கப் போகிறார்கள்? உழைக்கும் இடத்தில் நாம அனுபவிக்கும் அவமானங்கள், ஒடுக்குமுறைகள் நம் கண்ணுக்கே தெரியாமல் இருப்பது ஏன்? பணத்தினால் தானே? புக்காவஸ்கியின் “தபால் நிலையம்” நாவல் இந்த பிரச்சனை – தனிமனிதர்கள் உழைப்பின் பெயரால் காயடிக்கப்படுவது, அதன் அபத்தங்கள் , அதிலிருந்து விடுதலை காண சிறு வாய்ப்பைக் கூட அந்த வாழ்க்கை வழங்காமல் இருப்பது – பற்றியே முழுக்க முழுக்க பேசுகிறது. “ஹேம் ஆன் ரய்யில்” இதை லேசாக தொட்டுக்காட்டி விட்டு செல்கிறார். இந்த வகையான அடிமை உழைப்புக்கு எதிரிடையாக படைப்பாக்க செயலை (எழுத்து) புக்காவஸ்கி முன்வைக்கிறார். ஒரு காட்சியில் வேலையிடத்தில் வன்முறையில் ஈடுபட்டதற்காக சினாஸ்கி வெளியேற்றப்படுகிறான். வேலை இழந்து விட்டு வந்ததற்காக அவன் அப்பா கோபத்தில் அவனுடைய பொருட்களை எல்லாம் வெளியே வீசி விடுகிறார். இதில் அவனை முக்கியமாக பாதிப்பது தான் எழுதிய கதைகள் காகிதங்களாக பறந்து சாக்கடையில் கிடக்க நேர்வதைப் பார்ப்பதே. அவன் அவற்றை பொறுக்கி எடுத்துக் கொண்டு தன் கையடக்க தட்டச்சு எந்திரத்துடன் வெளியே போகிறான்.

இப்படி எல்லா விசயங்களிலும் எதிர்-பண்பாடு, எதிர்-ஒழுக்க நிலைப்பாடு எடுக்கும் சினாஸ்கி இயல்பாகவே அரசியலிலும் அப்படியே இருக்கிறான். அவன் கல்லூரியில் படிக்கும் போது உலகமே ஹிட்லரின் இன அழித்தொழிப்பைக் கண்டு நடுங்குகிறது; உலகம் முழுக்க ஜெர்மானிய தேசத்தின் மீது கண்டன மனநிலையே நிலவுகிறது. சினாஸ்கிக்கு ஹிட்லரின் இனவாத கோட்பாடுகள் மீதெல்லாம் அவனுக்கு ஈர்ப்பில்ல்லை. ஆனால் ஜெர்மானிய பூர்வகுடி தான் என்பதால் ஹிட்லர் உலகப்போரில் வெல்ல வேண்டும் என அவன் விரும்புகிறான் (நாவல் லாஸ் ஏஞ்சல்ஸில் 1920-40 காலகட்டத்தில் நடக்கிறது). கல்லூரியில் அவனுடன் ஒரு சிறிய ஆரிய இனவாத ஆதரவு குழு ஒன்றை சேர்கிறது. அவர்கள் ஒன்று சேர்ந்து அரசியல் பேசுகிறார்கள், குடிக்கிறார்கள், ஆனால் அதுவும் வேடிக்கையாகவே போய் முடிகிறது. இடதுசாரிகளின் மனிதநேய, அரசியல் சரிநிலைகளை ஒரு எத்து எத்துவதே புக்காவஸ்கியின் நோக்கமாக இருக்கிறது. இந்த அரசியல் சரிநிலை லட்சியவாதம் போலியானது, மனிதனின் அடியாழத்தில் அதற்கு இடமில்லை, அன்றாடத்தில் அவன் சின்னச்சின்ன விசயங்களுடன் போராடிக்கொண்டு இருக்கிறான், அவனுடைய சார்புநிலைகள் சித்தாந்த அரசியலுக்கு அப்பால் எளிய அடையாளங்களுடன் சிக்குண்டிருக்கிறது எனச் சொல்லுகிறார் புக்காவஸ்கி. இது மிக ஆபத்தான ஒரு நிலைப்பாடு தான் – ஆனால் சினாஸ்கியின் பாத்திரத்தின் வழி இதைக் காட்டி பெரிய பாதகம் இன்றி சமாளித்து விடுகிறார். இதைப் படிக்கும் போது இந்தளவுக்கு அரசியல் சரிநிலைகளை மீறிய ஒரு படைப்பைக் கூட இந்திய மொழிகளில் நான் படித்ததில்லை எனத் தோன்றியது.

புக்காவஸ்கியின் எழுத்து பாணியானது எதையும் புறவயமாக சித்தரிப்பது, சுருங்க சொல்வது, அழுகை, தளும்பல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்சிகளை நேரடியாக சொல்லி செல்வது என ரேமண்ட் கார்வர், ஹெமிங்வே ஆகியோரை நினைவுபடுத்தக் கூடியது. சித்தரிப்பில் அவர் மினிமலிசத்தை பின்பற்றுகிறார். மனமுடைந்து போகும் ஒரு தருணத்தை அது நிகழும் வரையிலான புறவய சித்திரங்கள் மூலம் வந்ததடைந்து விட்டு, அதன் பின் மனத்தில் எழும் உணர்ச்சிகளை சொல்லாமல் காட்சியை முடித்து விடுவார். இது சாட்டையால் அடித்த உணர்ச்சியை தரும்.

இன்னொரு பக்கம் ஹெமிங்வே, கார்வரின் தத்துவார்த்த (இருத்தலியம்), உளவியல் அலங்காரங்களையும் புக்காவஸ்கி தவிர்த்து விட்டு ஒருவித நிர்வாணமான மொழிநடையை உருவாக்கி இருக்கிறார். எதையும் அறிவுத்துறைகள் சார்ந்து அவதானிப்பது அவரிடம் இருப்பதில்லை. அவருடைய இலக்கிய கொள்கையே அது தான். (அவருடைய கவிதைகளில் மட்டுமே தத்துவார்த்தமான ஒரு பரிமாணம் இருக்கும்.) இதனாலே புக்காவஸ்கியின் புனைவுமொழி புலப்படாத ஆடையை அணிந்து நிர்வாணமாக ஊர்வலம் வருவாரே அந்த மன்னர் அவரைப் போன்றது.

இறுதியாக, அதென்ன Ham on Rye? இந்த தலைப்பின் அர்த்தங்கள் குறித்த பல விளக்கங்கள் உள்ளன. எளிமையாக சொல்வதானால் இது அந்த காலத்து பெரும்பாலான மத்தியவர்க்க அமெரிக்க வீடுகளில் அன்றாட உணவாக இருந்த சாண்ட்விட்ச். இதைத்தான் குழந்தைகள் சாப்பாடாக கட்டிக்கொண்டு பள்ளிக்கு எடுத்து செல்வார்களாம். ரொம்ப சாதாரணமாக, அதிச்சிறப்பான சுவைகள் ஏதுமில்லாத இந்த ரொட்டி பலகாரம் போன்றதே தான் சொல்ல வரும் வாழ்க்கை எனக் காட்டுவதற்காக இத்தலைப்பை வைத்தாரா? தெரியவில்லை. எனக்குத் தெரிந்த யாரும் நம்மூரில் “சப்பாத்தி”, “கேழவரகு களி” என நாவலுக்கு தலைப்பு வைத்ததில்லை.