கவிதை இலக்கணம் –  இந்த இரண்டாயிரம் நூற்றாண்டு கால இந்திய இலக்கியச் சூழலின் வளமான அங்கமாக விளங்குகிறது. உலகெங்கிலுமே கூட கவிதைக்கான இடம் பிரதானமானதுதான். அதே நேரத்தில், மொழியை மிளிரச் செய்யும் கவிதை என்னும் கலை வடிவம் மிகச் சிக்கலானது. மொழியால் ஈர்க்கப்படும் எல்லோருக்குமே அது இயல்பில் வாய்ப்பதில்லை. அதைமீறி மொழிப்புலமையும் கவித்துவமும் கைவரப் பெற்றோர் காலத்தால் சாகா வரம் பெறுகிறார்கள். அந்த வகையில் உலக இலக்கிய வரலாற்றில் கவிகளுக்கான இடம் மகத்தானது.

மகாகவிகளின் செவ்வியல் தன்மை பெற்ற ஆக்கங்களை மொழியாக்கம் செய்வதென்பது ஆகப் பெரிய சவால். மொழியில் லயிப்பும், தத்துவப் பரவசமும், இலக்கிய வேட்கையும், பண்பாட்டு ஓர்மையும், கலாச்சாரப் பின்னணி குறித்த தெளிவும் இன்றி அந்தச் சவாலை ஏற்பது சிறப்பாக அமையாது.

சூஃபி மார்க்கத்தின் சிறப்பிற்கும், இலக்கியத் தொன்மைக்கும் சான்றாகத் திகழ்பவை பாரசீக மகாகவிகளின் ஆக்கங்கள். ஏழாம்  நூற்றாண்டு தொடங்கி இன்று வரையிலும் அந்த வகைமை தனித்துவத்துடன் ஒளி வீசிப் படர்கிறது. சூஃபி கவிகள் எல்லோரும் காலத்தை ஒளிரச் செய்யும் சுடர்களாகவும் ஜொலிக்கிறார்கள்.

ராபியா பஸ்ரி, மன்சூர் அல் ஹல்லாஜ், ஃபிர்தவ்ஸி, உமர் கய்யாம், ஹக்கீம் ஸன்னாயி, நிஸாமி கன்ஜவி, ஃபரீதுத்தீன் அத்தார், ஜலாலுத்தீன் ரூமி, ஸ்அதி ஸீராஸி, காஜா ஹாஃபிஸ் ஆகியோர் பாரசீகக் கவிகளில் பெரும்புகழ் பெற்றவர்கள். இந்த வரிசையில் உத்தரப்பிரதேசத்தின் பாட்டியாலாவில் பிறந்த அமீர் குஸ்ரு, மொகலாயப் பேரரசர் அக்பரின் அரசவையில் தலைமைக் கவியாகத் திகழ்ந்த ஷேக் ஃபைஸி என இந்தியப் பின்னணியிலும் ஒரு சில சுடர்கள் உண்டு. இந்தியப் பரப்பில் கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் காரைக்கால் அம்மையார் தொடங்கி பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த  மீரா பாய் வரையிலும் பக்திகாலச் சுடர்களெனப் பல கவிகளும் – பல்சமய அறிஞர்களும் – தோன்றியிருக்கிறார்கள்.1 எல்லா மதத்திலும் இதுபோல உண்டு.  உலகின் பல மொழிகளில் இவர்களது கவிதைகளும் பாடல்களும் திரும்பத் திரும்ப மொழியாக்கம் செய்யப்பட்டு வாசகக் கவனமும் பெற்றுள்ளன. ஒரே கவியைக் கால இடைவெளிகளில் பலரும் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

இங்கு ஞானபீட விருதுபெற்ற ஒரிய மொழிக் கவிஞரான சீதாகாந்த் மகாபாத்ராவுடைய கவிதை ஒன்றின் மொழியாக்கம் குறித்த அசோகமித்திரனின் ‘ஒரு கவிதை இரு மொழிபெயர்ப்புகள்’ என்ற கட்டுரையின் சில பகுதிகளை நினைவு கூற விரும்புகிறேன். ஒரிய மொழியிலிருந்து நேரடியாக மொழிமாற்றம் செய்த ரங்கநாயகி மகாபாத்ரா “கோடை: ஒரு கிழவன்” என மொழிபெயர்த்திருக்கிறார். அதே கவிதையை ஆங்கில வழி தமிழாக்கம் செய்த அசோகமித்திரன் “முதுமையில் கோடை” என மொழியாக்கம் செய்திருக்கிறார். “கோடை – ஒரு கிழவன்” என்பதிலுள்ள ‘அன்’ விகுதி கவிதையை ஒரு பாலுக்கு உரியதாக்குகிறது. மூலத்தில் சீதாகாந்த் அவ்வாறே கூட வார்த்தைகளைக் கையாண்டிருக்கலாம். ஆனால், முதுமை என்பது எல்லோர்க்கும் பொதுவானது. எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் தனது மொழியாக்கக் கற்பனையால் கூட இதைச் சாத்தியப்படுத்தி இருக்கலாம். அதன்வழி அசோகமித்திரனும் நமக்குக் கையளித்திருக்கலாம்.

சீதாகாந்த் மகாபாத்ராவுடைய கவிதையின் ஆரம்ப வரிகளை ஒரிய மொழியிலிருந்து ரங்கநாயகி மகாபாத்ரா நேரடியாகத் தமிழில் பின்வருமாறு அமைத்திருக்கிறார்.

கோடை அவள் கொடிய மாயை அவள்!
என்ன ஈர்ப்பு சக்தி அவளுக்கு2 

ஆங்கில வழி தமிழாக்கமாக அசோகமித்திரன் பின்வருமாறு இதே வரிகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்:

கோடைக்கிருப்பது
சூனியக்காரியின் வசியம்3

இரண்டு மொழிபெயர்ப்பிலும் உள்ள வார்த்தைத் தேர்வுகளையும் சொற் சிக்கனத்தையும் கவனித்தால், ஒரே கவிதையின் இரண்டு வெவ்வேறு வழியிலான மொழிபெயர்ப்பு முயற்சிகளும் நமக்கான ஒரே வாசக அனுபவத்தைக் கொடுப்பதில்லை என்பதை உணரலாம். “கொடிய மாயை அவள்” என்ற வார்த்தைகளின் கனத்தைச் “சூனியக்காரி” என்ற ஒற்றை வார்த்தையில் கடத்திவிடுகிறார் அசோகமித்திரன்.

பாட்டி கதைகள் கேட்டு வளர்ந்த நம் தலைமுறையினரைச் சேர்ந்தவர்களுக்குச் ‘சூனியக்காரி’ என்ற வார்த்தை இட்டுச் செல்லும் வாசக வெளி கற்பனைக்கு நெருக்கமானது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியானது. கோடை வெயிலும் அப்படித்தானே! எல்லோருக்கும் ஒன்று போலவே இருப்பதில்லையே!

நீல மலையின் பிளந்து நிற்கும்
இரு வாய்களுக்கிடையே
மோர்க் கரைசலைப் போல
தாரகைகளின் மென்மை ஈரத்தில்
தொங்குகிறது கனவு நகரம்.4

ரங்கநாயகி, மகாபாத்ரா மொழிமாற்றம் செய்திருக்கும் மேலுள்ள வரிகளை,  அசோகமித்திரன் பின்வருமாறு மொழியாக்கம் செய்திருக்கிறார்:

நட்சத்திரங்கள் மெல்லிய திரைவிரிக்க
நீலச் சிகரங்கள் நடுவில்
பால் போன்ற நகரம் மிதக்கிறது.5

தாரகை என்ற சொல்லானது ‘பெண், நட்சத்திரம், தேவதை’ ஆகிய அர்த்தங்களில் பயன்படுகிறது. ஈரம் என்ற சொல் ‘அன்பு, நேசம்’ எனப் பொருள்படும்படியும், நீர்மக் கசிவால் உண்டாகும் பரவல் என்ற அர்த்தத்திலும் பயன்படுகிறது. நட்சத்திரங்கள் ஒளியைக் கசியும் நேரடியான அர்த்தத்தில் அசோகமித்திரன் மொழிமாற்றம் செய்திருப்பதை, ‘தாரகை, ஈரம்’ ஆகிய சொற்களைக் கொண்டு ரங்கநாயகி மகாபாத்ரா உள்மடிப்பில் வேறொரு வாசக அனுமானத்தை உணரும்படி மொழியாக்கம் செய்திருக்கிறார். இன்னொரு இடத்தையும் இந்தக் கவிதை மொழிபெயர்ப்புகளில் சுட்டலாம்.

அடர்ந்த அமைதிக்கும்
அழகின் கொடிய ஆசைகளுக்கும்
இடையே நடக்கும் போரில்
அதன் அரிய பார்வை
கிருஷ்ணசூடாவின்* தீப்பரப்பாய்
என் இரவுகளைப் பேரமைதி
கொள்ள வைக்கிறது.6

ரங்கநாயகி மேற்கண்டவாறு மொழிமாற்றம் செய்திருப்பதை அசோகமித்திரன்,

தெறி கெட்ட இரவு போதை
ஆறுதலுக்கும் எழிலுக்குமிடையில்
திருஷ்டியால் அருமை
பூரணமாக்குகிறது.7

– என மொழியாக்கம் செய்திருக்கிறார். கிருஷ்ணசூடா என்பது வேனிற்காலத்தில் பூக்கும் சிவப்பு நிறப் பூக்கள். ஆங்கிலத்தில் ‘மேஃபிளவர்’ என்கிறார்கள். ஒரியாவில் பரவலாக அறியப்படும் ஒன்றாக கிருஷ்ணசூடா  இருக்கலாம். என்றாலும் தமிழ்ச் சூழலுக்கு அந்த வகைப் பூ அன்னியமானது. மொழிபெயர்ப்பாளருக்கு இந்த இடத்தைக் கடப்பதென்பது சற்றே சவால் நிரம்பிய ஒன்று. அசோகமித்திரன் ஆலங் கரைசலான திருஷ்டியைக் கொண்டு அந்தச் சிவப்பு நிற வர்ணனையை ஈடு செய்கிறாரா? அல்லது ‘அரிய பார்வை’ என்ற வார்த்தைக்கு இணையாக திருஷ்டியைக் கொள்கிறாரா? இரண்டு மொழிபெயர்ப்புகளில் எது சிறந்தது என்ற உரையாடலுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.8 அது இருமொழிப் புலமையும், மொழி ஆய்வில் ஈடுபாடு கொண்டவர்களும் செய்யவேண்டியது. எனினும், ஒரே படைப்புக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியாக்கங்கள் வரும்போதுதான் இதுபோன்ற  அவதானிப்புகள் சாத்தியமாகிறது என்பதைச் சுட்டிக்காட்டவே விரும்புகிறேன்.

நமக்கு அறிமுகமான, ஓரளவிற்குத் தொடர்புடைய, நம் சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நவீன கவிஞர் ஒருவருடைய படைப்பின் மொழியாக்கத்திலேயே  இதுபோன்ற விஷயங்கள் கவனிக்க இருக்கும்போது, பல பத்து நூற்றாண்டுகள் கடந்த செவ்வியல் தன்மைபெற்ற மகாகவிகளின் ஆக்கங்களை மொழியாக்கம் செய்வதென்பது இமாலயச் சவால்கள் நிறைந்த பணி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஓர் எழுத்தாளராகத் தன்னுடைய எண்ணங்களை அந்தக் கட்டுரையில்  அசோகமித்திரன் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:

எழுத்துத் துறையைச் சார்ந்து வாழ்வதில் பல சோகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று மொழிபெயர்ப்பது. இன்னொன்று மொழிபெயர்க்கப்படுவது.” 9

மேலும், பாரசீக மகாகவியின் மொழியாக்கம் சார்ந்த  உதாரணத்தையும் அசோகமித்திரன் அதே கட்டுரையில் பின்வருமாறு சுட்டுகிறார்:

உமர்கயாமின்ரூபாயத்‘. அதன் உலகம் பரவிய இன்றைய செல்வாக்குக்குக் காரணம், சென்ற நூற்றாண்டில் எட்வர்டு ஃபிட்ஸ்ஜெரால்டு என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளரே திருப்தியுராமல் திரும்பத் திரும்பத் தன் மொழிபெயர்ப்பைத் திருத்தி எழுதினார். இன்றும் அவர் மொழிபெயர்ப்பு எல்லா வகையிலும் சரியானது என்று கூற முடியாது. ஆனால், மூன்று நான்கு தலைமுறைகளின் அறிஞர்களும் சிந்தனையாளர்களும் அந்தபிழைபட்டமொழிபெயர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள்தான்!”10

ஓசை நயங்களில் நான்கு வரிகளைக் கொண்ட புராதனக் கவிதை வடிவங்களில் ஒன்றான ருபாயத்தைப் பெரும்பாலான பாரசீகக் கவிஞர்கள் பாடியிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். அவர்களில் உமர் கய்யாம் காலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவற்றை ஆங்கிலத்தில் பலரும் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். ஆங்கில வழியில் உமரின் கவிதைகள் பல மொழிகளுக்கும் சென்றுள்ளன. அது சார்ந்த விமர்சனங்களும் விவாதங்களும் உரையாடல்களும் தொடர்ந்த வண்ணமே கூட இருக்கின்றன. ஃபிட்ஸ்ஜெரால்டுக்குப் பிறகு ஆங்கிலத்தில் பலரும் ருபாயத்தை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். அதன் வழி தமிழிலும் கூட கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை தொடங்கி கவிஞர் ஆசைத்தம்பி வரையிலும் பலர் முயன்றிருக்கிறார்கள்.

மொழியாக்கம் சார்ந்த பின்னணியை கவனத்தில் கொண்டு அனுகுவதன் மூலமே, அந்தப் படைப்புகளின் மறைபொருள், உள்மடிப்புகள் சார்ந்த நகர்தலைப் பெற முடியும். ஆகவேதான், அசோகமித்திரனின் குறிப்பிட்ட கட்டுரையை நினைவு கூர்ந்து, ‘தாகங்கொண்ட மீனொன்று’ தொகுப்பு நூல் குறித்த சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள எண்ணினேன்.

என். சத்தியமூர்த்தியின் முதல் மொழிபெயர்ப்பு நூல் ‘தாகங்கொண்ட மீனொன்று’ ([2016], 2018). வடிவமைப்பு, அச்சாக்கம், பதிப்பு, செய்நேர்த்தி, மொழி வளமை என வசக கவனத்தை ஈர்க்க ஒரு மொழியாக்க நூல்  என்னென்ன அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டுமோ அது அத்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற நூலாக இதன் முதற்பதிப்பைச் (2016) சொல்லலாம். குறுகிய காலத்திலேயே மூன்றாம் பதிப்பையும் கண்ட தொகுப்பு. ஒரு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு நூலுக்கு இவ்வாறான வாசகக் கவனம் கிடைப்பது அபூர்வம். பல ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு இதழில் சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் ஒன்றிரண்டு படைப்புகள் வெளிவந்துள்ளன என்பதை அறிய முடிகிறது.11  இடைப்பட்ட காலத்தில் வேறு ஏதேனும் புனைபெயர்களில் எழுதினாரா என்பது தெரியவில்லை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு, பல்லாண்டுக் கால தொடர் உழைப்பில், நேர்த்தியான வடிவமைப்பாலும்  செறிவுமிக்க உள்ளடக்கத்தாலும் கலைநேர்த்தி வெளிப்படும் தொகுப்பு ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார்.

1970களின் மத்தியிலிருந்து 1990களின் தொடக்கம் வரை ஈழத்திலிருந்து வெளிவந்த அலை சிற்றிதழின் ஆசிரியரும் கவிஞருமான அ. யேசுராசா, கவிஞரும் பேராசிரியருமான சேரன், ரேக்கிங் லீவ்ஸ் என்ற அச்சுக்கலை மற்றும் கலைச் செயற்பாட்டு நிறுவனத்தின் பொறுப்பாளரான ஷர்மினி பெரைரா, மற்றும் சங்கரி மனோ ஆகியோர் பதிப்புக் குழுவில் ஆலோசகர்களாகப் பங்காற்றி இருக்கிறார்கள். பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த ரசா புஹாரி இந்நூலின் காலிகிராஃபியையும், இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து தற்போது இந்தியாவில் குடியேறியுள்ள நியா  தண்டபாணி இந்நூலின் வடிவமைப்பையும் கையாண்டிருப்பது பாராட்டப்பட வேண்டியவை. எல்லா நிலைகளிலும் நூலாக்கத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தை அவர்களுக்காகத் தொழின்முறையாக ஒதுக்கியிருப்பது நவீன இலக்கியப் பதிப்புச் செயற்பாட்டில் முன்னுதாரணமான தன்மை. தொழின்முறை பதிப்பகங்களே கூடப் பெரும்பாலும் இவ்வாறு செய்வதில்லை.

2007ஆம் ஆண்டு ஜலாலுதீன் ரூமியின்  800வது பிறந்த ஆண்டு என்பதால்,  அதைக் கொண்டாடும் வகையில் துருக்கி நாட்டின் காலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் பரிந்துரையின் படி அந்த ஆண்டை ‘உலக ரூமி ஆண்டா’க UNESCO பிரகடனம் செய்திருந்தது. அதை ஒட்டி கவிதை, இசை, நடனம் என ரூமி சார்ந்த பல நிகழ்வுகளும் உலக அளவில் முன்னெடுக்கப்பட்டன. அதன் தாக்கத்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூமியின் கவிதைகள் மொழியாக்கமும் செய்யப்பட்டுள்ளன. தமிழிலும் கூடச் சில முன்னெடுப்புகள் நடைபெற்று வருவதைக் குறித்து 2009 ஆண்டு ஜெய்ப்பூர் புத்தகச் சந்தையில் கோல்மன் பர்க்ஸூடன் உரையாடியதாகவும், கோல்மனின் ஞானகுருவும் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் சூஃபி மெய்ஞ்ஞானியுமான பாவா முஹாயத்தீனின் தாய்மொழியான தமிழில் ரூமியின் கவிதைகள் மொழியாக்கம் செய்யப்படுவது குறித்த தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியதாகவும் மொழிபெயர்ப்பாளர் குறிப்பில்  சத்தியமூர்த்தியே பதிவு செய்திருக்கிறார். பின்னாளில் தானும்கூட ரூமியின்  கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்வோம் என்று அவர் நினைத்திருப்பாரா என்று தெரியவில்லை.

‘இத்தொகுப்பிலுள்ள ஐம்பது கவிதைகளில் ‘விடைதரல்’ என்ற ஒன்று மட்டும் இப்ராஹீம் கமர்ட்டின் மொழியாக்கத்தையும், ஏனைய அனைத்தும் கோல்மன் பர்க்ஸின் ஆங்கில மொழியாக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டவை.’ எனத் தனது மொழிபெயர்ப்பாளர் குறிப்பில் சத்தியமூர்த்தி பதிவு செய்திருக்கிறார். ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளும் பாடல்களும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தொடர்ந்து ஆங்கிலத்திலும், உலக மொழி பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவர்களில் கோல்மன் பார்க்ஸை அடிப்படையாகக் கொண்டதற்கான காரணத்தை அடவி இதழுக்காக (அசதாவுக்கு) அளித்த நேர்முகத்தில் சத்தியமூர்த்தி பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்:

பாரசீகம் தெரியாத கோல்மன் பார்க்ஸ், நிக்கல்சன் மற்றும் ஆர்பெரியின் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு, ராபர்ட் ப்ளை மற்றும் ஜான் மொய்னின் துணையுடன், நவீன வசன கவிதை நடையில் வடிவம் கொடுக்கிறார். அக்கவிதைகளை ரூமியின் நேரடி மொழிபெயர்ப்புகளாக பார்க்ஸ் சொல்லிக் கொள்வதில்லை. அவற்றை ரூமியின் கவிதைகளைப் பற்றிய தமது தனிப்பட்ட விளக்கங்களாகவும் வடிவுருக்களாகவும் கூறுகிறார். ஆயினும், மற்ற எந்த மொழிபெயர்ப்பாளருக்கும் இல்லாத வரவேற்பும் பரந்துபட்ட வாசிப்பும் கோல்மன் பார்க்ஸ் மறுஆக்கம் செய்த ரூமியின் கவிதை வடிவுருக்கள் பெற்றுள்ளன. ஆங்கில இலக்கியச் சந்தையில் ரூமி இவ்வளவு பிரபலமாவதற்கு கோல்மன் பார்க்ஸ் முக்கியக் காரணம்தான்

கோல்மன் பார்க்ஸ் கையாளும் கவிதை மொழியானது, வால்ட் விட்மனில் தொடங்கி, .. கம்மிங்ஸ், ஆலன் கின்ஸ்பெர்க், பீட் மற்றும் ஹிப்பி தலைமுறை, எதிர்கலாச்சார இயக்கம் என இவற்றினூடாகப் பயணித்த சமகால அமெரிக்கக் கவிதை மொழியாகும். கோல்மன் பார்க்ஸின் ரூமி மொழியாக்கங்கள் சற்று அதிக சுதந்திரம் எடுத்துக்கொண்டாலும், கவித்துவம் மிளிரும் நவீன வசன கவிதை வடிவுருக்களை மறுஆக்கம் செய்வதில் அவர் எட்ட முடிந்த உயரத்தை வேறு எவரும் இதுவரை அடையவில்லை என்றே கூற வேண்டும். எனவே அவரது முக்கியத்துவத்தை எளிதாக மறுதலிப்பதற்கில்லை.”12

ஆழமான பொருள்கொண்ட வரிகளை மிகையாக எளிமைப்படுத்துதல், இஸ்லாமிய மரபின் அடையாளங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு – சமயச் சார்பற்ற – பொதுமைப்படுத்தப்பட்ட, உலகளாவிய ரூமியைக் கட்டமைக்கும் கோல்மன் பார்க்ஸ் மீதான விமர்சனங்களையும் தனது நேர்முகத்தில் அடிக்கோடிடுகிறார். போலவே, கோல்மன் பர்க்ஸை அடிப்படையாகக் கொண்டதின் காரணத்தையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். இந்தத் தன்மையே அவருடைய கவிதைத் தேர்வுகளின், கவிதைகள் மொழியாக்கத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. ஞான குருவும், சூஃபி கவிஞருமான ஜலாலுதீன் ரூமிக்கு அவருடைய பெயரேகூடப் பெரிய அடையாளம்தான். மாறாக, ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பைத் தெரிவு செய்திருப்பதில் இருந்தே அவருடைய உள்ளார்ந்த கவித்துவ ஈடுபாட்டை, மொழியின் மீதான லயிப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது.

ஞானப் பரவசத்தால் திரண்டெழுந்த சிந்தனைகளை ‘மஸ்னவி’13களாக ரூமி கொடுத்திருக்கிறார். சூஃபி மார்க்கத்தின் மறைநூலாகவும், செவ்வியல் தன்மை கொண்ட இலக்கிய வடிவமாகவும் அது போற்றப்படுகிறது. என்றாலுமே கூட அவருடைய தனிப்பட்ட கவிதைகளில்தான் முழுமையான கவித்துவம் வெளிப்படுகிறது என்ற பார்வையை இலக்கியத் திறனாய்வாளர்கள் பலரும் முன் வைக்கிறார்கள். ரூமியின் தனிப்பட்ட கவிதைகளை மேலோட்டமாகப் பார்த்தால் இன்பத்தைச் சுரக்கும்  காதலுணர்வும், வசீகரிக்கும் அழகியலும், வாழ்வின் களிப்பும் நிறைந்த கவிதைகளாகத் தோன்றலாம். ஆனால் பாரசீக, துருக்கிய கலாச்சாரப் பின்னணியிலிருந்து நுட்பமான  வாசிப்பைச் செலுத்தும்போது அக்கவிதைகளின் நிறபேதங்கள் காதலுணர்வின் பரவசத்தையும் மீறி பிரபஞ்ச ஒளியைத் தேடும் துடிப்புகளைக் கடத்தும் என்பதை உணரலாம். உதாரணமாக, ‘மது அருந்துதல்’ தொடர்புடைய ரூமியின் இரண்டு கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

நாம் அருந்தும் மது
உண்மையில்
நமது குருதியே.
அக்கொப்பரைகளில் நொதிக்கின்றன
நம் உடல்கள்.

எல்லாவற்றையும் தருவோம்
இதன் ஒரு கோப்பைக்காக.
நமது மனங்களையும் வழங்குவோம்
இதன் ஒரு மிடறுக்காக. (பக்கம்: 34)

~~~

மறைந்து போயின
அகமும் புறமும்.
காணக்கிடைக்கவில்லை
நிலவு.
தென்படவில்லை
தரையும் வானும்.

இன்னொரு கோப்பை மதுவை
என்னிடம் கொடுக்காதே.
எனது வாயிலேயே ஊற்று.
தொலைத்துவிட்டேன் நான்
என் வாய்க்கான வழியை. (பக்கம்: 35)

இதர கவிதைகளிலும் மது பற்றிய குறிப்புகள் சில இடங்களில் வருகிறது. அவ்வரிகளை ரூமி மிக நுட்பமாகவே கையாண்டிருக்கிறார்.

போதும் எனக்கு இந்த மது” (பக்கம்:36)

எனக்குப் போதிய அளவு
மதுவை வழங்கு.” (பக்கம்: 45)

நானொரு வெற்று மதுக்கிண்ணம்” (பக்கம்:60)

வசந்தம் உனது பெயர்
திராட்சைமது உனது பெயர்
மதுவின்
கிறக்கமும் மயக்கமும்
உனது பெயரே” (பக்கம்:75)

வேறேதோ மதுபான விடுதியிலிருந்து
பிறந்திருக்கிறது இந்தப் போதை.” (பக்கம்: 113)

இஸ்லாமிய ஞான மார்க்கம் தொடர்பான ஹதீஸ்  மதுவானது ஆரிஃபீன்களுக்கானது என்பதைச் சுட்டுகிறது. மார்க்கக் கருத்திலிருந்து ஒட்டியும் வெட்டியும் ஊடாடி தனித்துவப் போக்கில் இறைஞானத்தை அகப் பயணத்தில் கவித்துவமாகக் கொண்டாடிக் களிப்பவர்கள் ஆரிஃபீன்கள். சூஃபிக்கள் அவ்வாறே அடையாளப்படுத்தப் பட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனிடமிருந்து அகஞானத்தைப் பெற்றபோது இறைவன் ஒளி பகரும் இரண்டு கோப்பைகளைக் கொடுத்தான். ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. அதிலிருந்து ஏதாவதொன்றை போதுமான அளவுக்கு அருந்தலாம் என்று சொன்னான் இறைவன். நபிகளார் அவர்கள் மார்க்க விதிமுறைகளின் வரம்பிற்குள் நின்று அதிலிருந்த பாலை அருந்தினார்கள். இரண்டாவது கோப்பையிலுள்ள பானகம் ஞானமார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஆரிஃபீன்களுக்கென பாதுகாத்து வைக்கப்பட்டது.” 14

புனித மார்க்கத்தின் மரபுகளினூடே, சடங்கான சம்பிரதாய மரபுகளுக்கு அப்பாற்பட்டு இயங்குபவர்களாக அறியப்பட்ட சூஃபிக்கள் மதுவை ஞானத்தின் குறியீடாகவும் அறிவு நீராகவும் பாவித்திருக்கிறார்கள். புல்வெளி ஓசைகள் (பக்கம்: 110-112) கவிதையில் வரும் ”இன்னமுது, நீர்க்குடுவை, அக்குடுவை” ஆகிய வார்த்தைகளை அறிவு நீரான ஞானத்துடனும், கோப்பையுடனும் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன். உருக்குறியீடு, ஒலி/ஒளிக் குறியீடு எனப் பலவற்றையும் காதலின் போர்வையில் தத்துவத்தைத் தேடும் அலைதளுக்கு உட்படுத்துகிறது இத்தொகுப்பிலுள்ள கவிதைகள்! இறைஞ்சுதலும் உருகுதலும் மெய்யான அர்ப்பணிப்பின் கூறுகளாக வெளிப்படுகின்றன.

ஸனாயி எனது கண்கள் என்கிறார் ஜலாலுதீன் ரூமி. அவ்வாறான ஸனாயியின் கவிதை மொழியில் மதுவானது ஞானத்தின் குறியீடு என்பதைப் பின்வருமாறு அவர்  கூறுகிறார்.

இறைவன் தனது அன்பர்களுக்கென மதுவைத்  தயார்செய்து வைத்துள்ளான். இதை அருந்துகிறவர்கள் உண்மையான அறிவுள்ளவர்களாக மாறுகிறார்கள். இந்த அறிவு சிந்தனையைத் தூண்டுகிறது. இச்சிந்தனா சக்தியின் பலனாக மனத்தின் ஒருமுக நிலை கூர்மை பெறுகிறது.”15

அசோகமித்திரன் சுட்டியிருக்கும் உமர் கய்யாமின் பிழைபட்ட சித்திரத்திற்கு அவருடைய மது சார்ந்த குறியீட்டு உவமைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதும், அவை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதும் ஒரு காரணம் என்பதை அடிக்கோடிட்டு மேலுள்ள ரூமியின் கவிதைகளை அனுகினால் நமக்கு வேறு பரிமாணங்கள் கிடைக்க வாய்ப்புண்டு என்பதைச் சுட்ட விரும்புகிறேன்.

மதுவைப் போலவே இசையும், கலையும் கூட உலக இன்பத்தைத் துய்க்கவோ அல்லது மானுட துக்கத்தின் வடிகாலாகவோ உபயோகப்படுவதை இஸ்லாமிய மத அடிப்படைவாதம் நிராகரிக்கிறது. கலைகள் யாவுமே இறையை நாடுவதற்கான ஊடகமாக எல்லா மதங்களைப் போலவே இஸ்லாமும் அணுகுகிறது. என்றாலும் மற்ற பிரிவினரைக் காட்டிலும் இஸ்லாமில் கட்டுப்பாடுகள் மிக அதிகம். சூஃபிகள் இது போன்ற சடங்கான மரபுகளைப் பின்னுக்குத் தள்ளி ஞான மார்கத்தின் எல்லையை விரிக்கிறார்கள். அது மத அடிப்படைவாதிகளிடைய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

ரூமியின் “எங்கு யாவும் இசையாக இருக்கின்றனவோ, தீராத உரையாடல்” ஆகிய இரண்டு கவிதைகளும் இசையின் சுழலில் மயக்கத்தை வெளிப்படுத்துபவை. பதின்மூன்றாம் நூற்றாண்டில் ரூமியால் தொடங்கப்பட்ட சுழன்று நடனமிட்டு ஆடி இசையின் மூலம் கடவுளை தியானிக்கும் முறையானது இன்று வரையிலும் புகழ்பெற்றுள்ளது. சுழன்றாடும் தெர்விஷ்கள் என்று இவர்களை அடையாளப் படுத்துகிறார்கள்.

தங்க நீலிழையால்
நீ நெய்தெடுக்கும்
ஓவியப்பரப்பில்
நானொரு பிம்பம்.
விளையாட்டாய் நீ கோர்க்கும்
சின்னஞ்சிறு உருவம்.” (பக்கம்: 70)

உருவசித்திரங்களையும் தத்ரூப ஓவியங்களையும் கூட இஸ்லாமிய மார்க்கத்தின் சடங்குகளும், மதக்கோட்பாடுகளும், கொள்கைகளும் இறுக்கத்துடனே அணுகுகின்றன. ‘ஓவியப் பரப்பில் நானொரு பிம்பம், சின்னஞ்சிறு உருவம்” என்பது போன்ற வர்ணனைகளையும் ரூமியின் கவிதைகளில் காணக் கிடைக்கிறது.

மதத்தைக் கடந்த தத்துவத்தின் சிறப்பைப் போலவே, சுயமும் சுயத்தின் இருத்தலும் கூடக்  கொண்டாடத்தக்கது. சுயத்தை இழத்தலுக்கும், சுயத்தை வெறுமனே கடப்பதற்கும் பாரதூரமான வித்தியாசம் உள்ளது. எதையும் இழக்காமல் வெறுமனே இருக்கும் பூரணத்தையே ஜென், சூஃபி போன்ற தத்துவங்கள் முன்மொழிகின்றன. ‘நானொரு வெற்று மதுக்கிண்ணம்’ என்பதும் இதைத்தான்.

இவ்வுலகில் இழக்கவென்று எதுவும் இல்லை. ‘வெறுமனே கடத்தல்’ என்பது அந்தக் கணத்தில் வாழ்வதன் மூலம் மட்டுமே கிட்டக்கூடிய ஒன்று. மதக் கட்டுப்பாடுகள் சமூகத்தின் மீதும், வாழ்வின் மீதும் செலுத்தும் அதிகார இறுக்கத்தைக் கடப்பதன் மூலமே அந்தப் பரவச நிலை சாத்தியம்.

இன்றும்
ஏனைய நாட்களைப்போலவே
வெறுமையோடும் பயத்தோடும்
கண்விழிக்கின்றோம்.

படிப்பறைக் கதவைத் திறந்து
வாசிக்கத் துவங்கவேண்டாம்.
இசைக்கருவி ஒன்றை
மீட்டத் துவங்கு.

நாம் விரும்பும் அழகு
நாம் செய்யப்போவதிலிருக்கட்டும்.
மண்டியிட்டுத் தரையை முத்தமிட
பலநூறு வழிகள் உண்டு.

இந்தக் கவிதையை ரூமி எந்தச் சூழலில் எழுதியிருக்கக் கூடும் என்று யோசிக்கிறேன். படிப்பறை என்பது என்ன? வாசிப்பு என்பது ஓதுதலாக இருக்கக் கூடுமா? மண்டியிட்டுத் தரையை முத்தமிடுதல் என்பது தொழுகையா? இவ்வாறெல்லாம்  கேள்வியை எழுப்பிகொண்டு இந்தக் கவிதை வாசிக்க இடமுண்டு என்றே நினைக்கிறேன். கொரானாவுக்கு மணியடித்தல், தீபம் ஏற்றுதல் போன்ற தற்காலச் சூழலிலும் இக்கவிதை பொருந்தி நவீனத்துடன் ஒலிக்கும் கலகக் குரல் போலவே இருக்கிறது.

காதல், ஏகாந்தம், தனிமை, பரிதவிப்பு என இக்கவிதை வரிகளில் அகத்தின் உணர்வுகள் வெளிப்படும் அதே நேரத்தில், பிரபஞ்ச ஒளியைத் தேடும் வாழ்வின் பாதையில் எதிர்படும் புதிர்களிலிருந்து விலகி நிற்கும் மனத்தையும் லாகவமாக இவ்வரிகள்  வெளிப்படுத்துகின்றன. தொன்மக் கதைகளிலும், புனித நூல்களிலும் வரும் பாத்திரங்கள் பலரும் நீருக்கடியில் நீந்திக்கொண்டிருக்கும் தவளை போல  இக்கவிதைகளில் மறை உருவமாக இருக்கிறார்கள். பாத்திரங்களின் அழுத்தத்தையும் அடர்த்தியையும் உள்வாங்கிக்கொண்டு வாசிக்கும்போது கிடைக்கும் லயிப்பு மென் அதிர்வுகளை உண்டாக்கக்கூடியது.

இரண்டு உயிர்கள்
இணையும்போது,
ஏசு தோன்றுவார்,
என எழுதப்பட்டதன்
சூட்சுமம் புரியும். (பக்கம்: 13)

கவிதை  வரிகளுக்கு இடையில் – பாரசீக ஒட்டகத்தின் மணியொலி போல – ஆதாமும் ஏவாளும் முயங்கி விளையாடும் தோட்டத்தில் தேவனின் கமறல் கேட்கக் கூடும். ராபியா, மன்சூர் அல் ஹல்லாஜ், சலாஹுதீன், ஷம்ஸ், சாலமன் போன்ற ஞானகுருவான சூஃபிகளும், ஆபிரஹாம், இயேசு, முஹம்மது, அஜார், ஹீத்திர் போன்ற புனிதர்களும் தீர்க்கதரிசிகளும், பழைய ஏற்பாட்டின்  ஜோசப் மற்றும் யாகோப் ஆகிய பாத்திரங்களைப் பெயர்களாக மட்டுமே வாசித்தால் தட்டையான அனுபவமே மிஞ்சும். சத்தியமூர்த்தி இந்தப் பாத்திரங்களுக்குக் கொடுத்திருக்கும் பின்குறிப்புகளுடன், மேலதிகத் தேடலுடன் தரவுகளைத் திரட்டி வாசித்தால் இக்கவிதைகள் கொடுக்கும் பரிணாமம் விசாலமானது. வரலாற்றுப் புரிதலுடன், மதத்தைக் கடந்த தத்துவ  ஆராதனையின் வழிகொண்டு அணுகினால்  இக்கவிதைகள் சூரியனில் ஜொலிக்கும் சிவப்புக்கல் போல ஒளிர்ந்து பளிச்சிடுவதைக் கண்ணுறலாம். சிவப்புக்கல்லானது வெறுமனே இருத்தலின் குறியீடு.

~~~

பாரசீகம், துருக்கி மட்டுமல்லாமல் ஜலாலுதீன் ரூமியின் கவிதைகள் உலக இலக்கியப் போக்கில் செலுத்திய, செலுத்திக்கொண்டிருக்கும் தாக்கம் பரவலானது. மேற்கத்திய நாடுகளில் ரூமி கொண்டாடப்படுகிறார். கிழக்கிலும் அவ்வாறு கொண்டாடப்படுகிறார் என்பதற்குக் கடந்த பத்தாண்டுகளில் வெளியான அவருடைய மொழியாக்க முயற்சிகளைக் கொண்டு அறியலாம். அவற்றில் என். சத்தியமூர்த்தியின் செறிவார்ந்த மொழிபெயர்ப்பு அலாதியான வாசிப்பனுபத்தைக் கடத்தக் கூடியது. செவ்வியல் கவிதை மொழியாக்க நூல் வரிசையில் இத்தொகுப்பு என்றுமே நினைவுகூரப்படும். தொகுப்பு வெளியான குறுகிய காலத்திலேயே கிடைத்த விருதுகளும், அங்கீகாரங்களும் அதைச் சுட்டும் தருணத்தில், ஓர் இலக்கிய முயற்சியாக தற்காலக் கலை இலக்கியச் சூழலில்  அது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, இன்னும் ஏற்படுத்தப்போகிறது என்பதைச் சொல்வது அவசியமாகிறது.16 ஏனெனில், ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது குளத்தில் எறிந்த கல்லைப் போலத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது.

தாகங்கொண்ட மீனொன்று நூல் வந்த சில வருடங்களிலேயே அதன் நேர்மறையான, ஆழ்ந்த தாக்கத்தை தமிழ் இலக்கியச் சூழலில் பார்க்க முடிகிறது.15

என். சத்தியமூர்த்தி, மொழிவளம் மிக்க மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல. நுட்பமான வாசகராகவும் இருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன். இவ்வளவு நேர்த்தியான நூலுக்கு முன்னுரை என்று சத்தியமூர்த்தி எதையும் எழுதவில்லை. ஆனால், தொகுப்பின் முதல் கவிதையிலேயே ரூமியின் வரிகளில் ஒரு சமிக்ஞையைக் கொடுக்கிறார்.

கவிதைகளின்
உள்ளிருக்கும்
துடிப்புகளைக் கேள்.

அவை விரும்பும் இடத்திற்கு
உன்னை அழைத்துச்
செல்லட்டும்.

உனக்கென விடுக்கும்
சமிக்ஞைகளை
தொடர்ந்துகொண்டே இரு.

அதன் அருகாமையை
நழுவவிடாதே
ஒருபோதும்.

கவிதைத் தொகுப்புக்குப் பொருளடக்கமோ, கவிதையை வரிசைப்படுத்திப் பட்டியலிடும் வேலையையோ மொழிபெயர்ப்பாளர் மேற்கொள்ளவில்லை. வேண்டுமென்றே அவ்வாறு செய்திருப்பாரோ? இருக்கலாம்தான்!

‘இப்படித்தான் என’ உள்நுழைய ஆயிரம் வழிகள் – நிலவிற்கு வழி / வாசல் அல்ல / சாளரமே. – என்கிறாரோ!

எல்லாப் புலங்களிலும் வாசல் திறந்தே இருக்கிறது. அருகாமையை நழுவ விடாமல் கவிதைகளின் விரல்களைப் பற்றினால் விரும்பும் இடத்திற்கு வாசகர்கள் செல்லக்கூடும்.

(என். சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் லாஸ்ட் ரெசார்ட் பதிப்பித்த  ‘தாகங்கொண்ட மீனொன்று’ தேர்ந்தெடுக்கப்பட்ட ஜலாலுதீன் ரூமி கவிதைகள் தொகுப்பை முன்வைத்து எழுதப்பட்ட மிச்சிகன் வாசகர் வட்டட்டத்துக்கான உரை. ஜுன் – 2020)

குறிப்புகள்

 1. சிற்றிலக்கிய காலமும் பக்தி இலக்கிய காலமும், பாரசீக மகாகவிகள் வளர்ச்சி கண்ட காலமும் ஏறக்குறைய ஒன்று போலவே இருக்கிறது. ஒப்பியல் நோக்கில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகள் வளமான இரு கலாச்சார இலக்கியங்களையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடும்.
 2. அசோகமித்திரன் 1994, 334
 3. அசோகமித்திரன் 1994, 336
 4. அசோகமித்திரன் 1994, 335
 5. அசோகமித்திரன் 1994, 336
 6. அசோகமித்திரன் 1994, 335
 7. அசோகமித்திரன் 1994, 337
 8.  அவருக்குப் (அசோகமித்திரனுக்குப்)  பொதுவாகக் கவிதைகள் பிடிப்பதில்லை என்று  அடிக்கடி ஊடகங்களில் சொல்லி வந்திருக்கிறார். ஆனாலும் என்னுடைய (வைதீஸ்வரன்) கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து  நான்  பிரசுரம் செய்ய உதவி இருக்கிறார். Writers Workshop Calcutta பிரசுரித்த என் கவிதைத் தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரை ஒரு ஆதர்சமான மதிப்பீடாக அமைந்தது. சீதாகாந்த் மகாபாத்ரா என்கிற ஓடிஷாவின் முக்கியக் கவிஞரின் கவிதைகள் பற்றிய, அவருடைய ரஸனைகள் அடங்கிய சின்ன ஆங்கில பிரசுரத்தை  நான் பார்த்திருக்கிறேன்..!!
 9. அசோகமித்திரன் 1994, 333
 10. அசோகமித்திரன் 1994, 334
 11. JNUவில் படித்த காலத்தில் உதிரியாகச் சிற்சில மொழிபெயர்ப்புகளை முயன்று பார்த்திருக்கிறார். ஏ.கே. ராமானுஜனின் Speaking of Shiva –விலிருந்து ஒரு சில வசன கவிதைகள் மற்றும் ஹெலேன் சிக்ஸூவின் (Helene Cixous) சில உரைநடைக் கவிதைகள் ஆகியவற்றை ஒரு கட்டுரைக்காகவும், பிறகு காஃப்காவின் சில குட்டிக் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். இவையாவும் அப்போது காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளன.
 12. அடவி சிறப்பிதழ் 2017, 14
 13. பாரசீக இரண்டு அடிகளைக் கொண்ட இலக்கிய வடிவம்.
 14. குளச்சல் யூசுஃப், 2018, 83
 15. குளச்சல் யூசுஃப், 2018, 82
 16. பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை, பொல்லாத மைனாக்கள் ஆகியவை தாக்கத்துக்கான சான்று. ரூமியின் கவிதைகளில் இருக்கும் சுற்றி வளைத்தலோ, வார்த்தை ஜாலங்களோ ஆடம்பரங்களோ இல்லாமல், நேரடியாக மனதைத் தொடும் லிரிகல் தன்மையை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் காணலாம்.

பயன்பட்ட நூல்கள், இதழ்

அசோகமித்திரன். “ஒரு கவிதை இரு மொழிபெயர்ப்புகள்”. அசோகமித்திரன் கட்டுரைகள் 2 முழுத்தொகுப்பு, 2004. கிழக்கு பதிப்பகம், சென்னை. பக்கம்: 332-337

குளச்சல் யூசுஃப். “பாரசீக மகாகவிகள்”, 2018. காலச்சுவடு பதிப்பகம்: நாகர்கோவில்.

அடவி சிறப்பிதழ் 2017

தொகுப்பாளர்: மணவை முஸ்தபா. “தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்”, நவம்பர்- 1981. மீரா ஃபௌண்டேஷன்: அண்ணாநகர், சென்னை – 40

கவிஞர் வைதீஸ்வரன்:
http://vydheesw.blogspot.com/2017/04/blog-post_26.html?m=1