உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் ஹருகி முரகாமி எழுதி 2002 ல் வெளிவந்து பலரையும் கவனம் ஈர்த்த நூல் காஃப்கா கடற்கரையில். பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு கொண்டாடப்படும் இந்நூல், இவ்வருடம் கார்த்திகைப்பாண்டியனால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு எதிர் வெளியீடாக வெளிவந்தது. சென்னை புத்தகக்கண்காட்சியில் பெரிதும் வாங்கப்பட்ட புத்தகங்களில் காஃப்கா கடற்கரையில் நூலும் ஒன்று.

800 பக்கங்கள், சற்றே நேரிடையாய் புரிய வைக்க முடியாத கதைக்களம்,தொடர்ச்சியற்ற கதை சொல்லும் பாணி,நம்ப முடியாத நிகழ்வுகள் இத்தனையும் ஒரு நாவலில் இருந்தும் அது சுவாரசியம் குறையாமல் இருக்குமா என்ற  கேள்விக்கான பதில் தான் இந்நூல்.

அடுத்தடுத்து வரும் கதை நிகழ்வுகள் துவக்கத்தில் குழப்பினாலும், கதையோட்டம் அதை போகப்போக சரிசெய்கிறது. காஃப்கா டமூரா எனும் பதினைந்து வயது சிறுவன்,நகாடா எனும் முதியவர். இந்த இருவேறு எல்லைகளை முக்கிய மாந்தர்களாய்க் கொண்டு முரகாமி நிகழ்த்தியிருக்கும் விளையாட்டு அற்புதமானது.

பதினைந்து வயதில் தன்னுடைய தந்தையின் சாபத்திலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு ஓடி வருகிறான் காஃப்கா. பூனைகளிடம் பேசும் திறனுள்ள நகாடா ஒரு பூனையை கண்டுபிடிக்க அலைகிறார்.

முதிர்ந்த மனநிலையில் உள்ள சிறுவன், சிறுபிள்ளைத்தனமான முதியவர் என்ற இரண்டு சாரங்களுமே வெகு சுவாரசியமாய் கையாளப்பட்டிருக்கிறது.

பாத்திரங்களின் வெளிப்படைத்தன்மையே கதையின் முக்கிய வலுவாக இருக்கிறது. ஒரு ஆணின் உணர்வை புரிந்துகொள்ளும் சகுரா இயல்பிலேயே வசீகரிக்கிறாள். தனது கனவுலகத்தின் மர்மங்களோடே பயணிக்கும்  செய்கியின் புதிர்களை நம்மையறிமாலேயே அவிழ்க்க முயல்கிறோம். நூலகத்திலிருந்து உலகைப் பார்க்கும் ஒஷிமா வாழ்க்கை, தத்துவம்,  பீத்தோவன், இலக்கியம் என பலவற்றை அறிமுகம் செய்கிறான். நூலகத்திலேயே இருப்பவனுக்கு இது சாத்தியமே.

மனம் சொல்வதை கேட்கும் ஓட்டுனர் ஹொஷினோ,  நகாடாவோடு பயணிக்கும்போது நாமும் அவனது வண்டியிலேயே தான் பயணிக்கிறோம். அசரீரியாய் வரும் காகம் என பெயரிட்ட சிறுவன் தர்க்கங்களையும், தத்துவங்களையும் உண்மையில் நமது மனதிடம் தான் பேசுகிறான்.

வன்முறைகளின் மீது நாட்டமற்ற வயதே ஆகாத இரு ராணுவ வீரர்கள் காட்டிலேயே மறைந்திருக்கிறார்கள். அவர்களிருக்கும் இடத்தை நமது மனதினைக் கொண்டு நிச்சயம் கண்டுபிடிக்கவே முடியாது.  சில பூனைகள் மனிதர்களை விடவும் நுட்பமாய் உரையாடுகின்றன.

முரண்களின் மெல்லிய அடுக்கினை விலக்க நீங்கள் சிக்கலின் துவக்கத்தை அடைய வேண்டும். எங்கெங்கோ செல்வது போலுள்ள கதை ஒரு கட்டத்தில் மொத்தமாய் ஒன்றிணைகிறது.

இரண்டாம் உலகப்போரின் காலம் நிகழ்காலத்தோடு இணைகிறது.

சமவயது பெண்ணுடனான காதல்,ஐம்பது வயதுப் பெண்ணுடன் உறவு கொள்கிறது.

தொலைந்துபோகும் பாதையில் தெளிவான வழிகள் பிறக்கின்றன.

இப்படி இந்நூலின் பல்வேறு அடுக்குகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த கதை என்ன தான் சொல்ல வருகிறதென்றால் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஏதோ ஒன்று சொல்கிறது.

மீமெய்யியல் பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலின் மொழி நடையே வாசிப்பவரை வசீகரிக்கிறது. மொழியாக்கத்திலும் (நல்ல மொழிபெயர்ப்பை அப்படி சொல்லுதலே நலம்) சுவை மாறாமல் அமைந்திருக்கிற மொழி நமக்கு அயர்ச்சியூட்டாமல் இருக்கிறது. குறிப்பாக நகாடா உரையாடும் பகுதிகள் நம்மையும் அந்த பாணியில் உரையாட வைக்க தூண்டுகிறது.

காஃப்கா டமூரா பதினைந்து வயதில் அடைந்த அனுபவங்களில் பாதியை கூட நாம் அடைந்ததில்லையே எனும் ஏக்கம் வாசிக்கும் எந்த வயதினருக்கும் தோன்றும். நகாடா போன்ற அமைதி இல்லையே என எழுதி முடித்த பின் ஆசிரியருக்கே கூட தோன்றியிருக்கும்.

இந்நூல் ஒரு புதிர் விளையாட்டு. இந்நூலைப் பற்றி இதன் ஆசிரியரே குறிப்பிடும் போது இதை பல முறை வாசித்து புரிந்துகொள்ளும் வகையில் தான் மொழியை கட்டமைத்தேன்  என்கிறார். அவர் சொல்லும் புரிதல் கதையின் மொழியைக் குறித்து அல்ல. மாறாக கதையினூடே பயணிக்கும் மீமொழி குறித்து என்பது இந்நூலை வாசிக்கும்போது தெரியும்.

இந்த நூல் எதையம் சரி என்றோ, எதையும் தவறென்றோ அல்லது எந்த ஒரு முன்முடிவுகளையோ கொண்டிருக்கவில்லை. மாறாக இது வாசகனை தனக்குள்ளேயே உரையாடவிட்டு முடிவுகளை அவனுக்கேற்ப அளிக்கிறது.

இந்நூல் ஒரு கலைடாஸ்கோப் போல. நீங்கள் வாசித்த அதே பக்கத்தை மற்றொருவர் அதே போல் புரிந்துகொள்ள மாட்டார். இந்த புதிர்த்தன்மையே இந்நூலை இன்னும் சுவாரசியமாக்குகிறது.

இந்நூலை வாசித்துவிட்டு நீங்கள் ஒரு தீர்மானத்திற்கு வரலாம். ஆனால் இந்நூலிலேயே வருவது போல “உங்களுடைய முடிவுகளை நீங்களாக எடுப்பதென்பது அத்தனை சுலபமானதல்ல”.

உங்களுக்கான நுழைவாயில் கல் எப்போதும் உங்களிடம் தான் உள்ளது. அதை திறந்து வைப்பதும், மூடி வைப்பதும் உங்கள் விருப்பம்.

காஃப்கா கடற்கரையில்

-ஹருகி முரகாமி

நாவல்

தமிழில்: கார்த்திகைப்பாண்டியன்

பக்கம்: 880

விலை : 900

 எதிர் வெளியீடு

96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002

தொலைபேசி :04259-226012,9942511302