ஜெயமோகனை அருகில் இருந்து கவனித்தவன், தொடர்ந்து அவரை விலகி நின்று வாசித்து வருகிறவன் எனும் முறையில் சொல்கிறேன், உணர்ச்சிவப்பட்டு அவர் சொல்லுகிற கருத்துக்களில் எந்த தர்க்கமோ தொடர்ச்சியோ இராது; பிரச்சனை என்னவென்றால் அவர் எப்போதும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தான் இருக்கிறார்.

அண்மையில், தமிழக அரசு இலக்கிய மாமணி விருதுகள், தேசிய, மாநில விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகள் அளிப்பது குறித்த அறிக்கையை ஒட்டி பரவலான உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் சமூக வலைதளங்களில் எழுத்தாளர்களும் வாசகர்களும் தெரிவித்தார்கள். ஏற்கனவே கடந்த தேர்தலில் முற்போக்கு எண்ணம் கொண்ட, பாசிச எதிர்ப்பு மனநிலை கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் மொத்தமாக திமுக கூட்டணியை ஆதரித்து எழுதினர், சிலரோ தேர்தல் பிரச்சாரங்களிலும் கலந்து கொண்டனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் இலக்கிய தரப்பில் இருந்து எழுந்த வரவேற்பு வரலாறு காணாதது. அதற்கு ஏற்ப இந்த அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி, கொரோனா தடுப்பு நிர்வாகத்தையும் பாராட்டத்தக்க வகையில் செய்து வருகிறது. இன்னொரு பக்கம், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு எனும் பதத்தை பயன்படுத்தியது, நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் ஒன்றிய அரசை தொடர்ந்து தர்க்கரீதியாகவும் துணிச்சலாகவும் விமர்சித்து வருவது, ஜி.எஸ்.டி உள்ளிட்ட அராஜக சட்டங்களின் போக்கை கண்டித்து தேசிய அளவில் பாஜகவை சங்கடத்துக்கு உள்ளாக்கியது, ஜக்கி வாசுதேவின் ஊழல்களை அம்பலப்படுத்தி எச்சரித்து ஆட்டம் காட்டியது,  பாஜகவின் மதுவந்தி நடத்தி வரும் பத்ம சேஷாத்திரி பள்ளியின் முறைகேடுகள், பாலியல் குற்றங்களை திமுகவினர் விமர்சித்து வருவது, தமிழ் நாடு எனும் பெயர் தவறானது என மாலன் கூறியது கடும் கண்டனத்துக்கு உள்ளானது ஆகிய அரசியல் கதையாடல்கள் ஜெயமோகனை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கி உள்ளன. அவர் அன்றாட செய்திகள், அரசியல், சமூகவலைதளங்களில் ஒரு எழுத்தாளனின் ஈடுபாடு காட்டக் கூடாது என ஒரு பக்கம் எல்லாருக்கும் அறிவுரை சொன்னாலும் எல்லா செய்திகளையும் உன்னிப்பாக கவனிப்பவர். ஏதொ ஒரு பேக் ஐடியில் அவர் பேஸ்புக்கில் வீற்றிருந்து தொடர்ந்து அங்கு நடக்கும் விவாதங்கள், சச்சரவுகளை கண்கொட்டக் கொட்ட பார்த்துக் கொண்டிருக்கிறார் என ஒரு ஐயம் நீண்ட காலமாக உலவுகிறது. அது உண்மை தான் என இப்போது அம்பலமாகி உள்ளது – ஆனால் அரசியலைப் பற்றி நேரடியாக எழுத மாட்டேன் என பீஷ்மரைப் போல சபதம் மேற்கொண்டுள்ள ஜெயமோகன் இப்போது தன் உணர்ச்சிக் கொந்தளிப்பை இலக்கிய விருதுகள் குறித்த செய்தியை ஒட்டி காட்டி உள்ளார். அதில் தமிழகத்தில் முற்போக்கு சக்திகள் பெற்று வரும் எழுச்சி மீதான அவருடைய கடுப்பு, கோபம், வன்மம் எல்லாம் வெளிப்படுகிறது. அவ்வளவு உணர்ச்சி ஆவேசத்தில் எழுதியதால் வழக்கம் போல எந்த தர்க்க ஒழுங்கும், நியாயமும் இல்லாமல் மிகுந்த ஆபாசத்துடன் அரசையும், இலக்கியவாதிகளையும் ஒருசேர விமர்சித்து அவமதித்துள்ளார். அதில் தெரிவது ஜெ.மோ தனது கராறான இலக்கிய மொழியில் வெளிப்படுத்தும் வக்கிரமும், தன்னை தனியாக விட்டு விட்டு திமுகவுக்கும் முற்போக்கு அரசியலுக்கும் ஆதரவு செலுத்தும் சக எழுத்தாளர்கள் மீதான பொச்சரிப்பும் தாம்.

ஜெயமோகனின் இந்த கண்மூடித்தனமான உணர்ச்சிக் கொப்புளிப்புகளுக்கு பதில் சொல்வதைப் போன்ற அலுப்பான காரியம் இன்னொன்றில்லை; ஏனென்றால் அதனால் எந்த பயனும் இல்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே, கடந்த 35 ஆண்டுகளாகவே அவர் அப்படித்தான். அவருக்கு கோபம் தலைக்கேறி உள்ளது தெரிந்தால் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் பொதுவாக பதில் சொல்லாமல் ஒதுங்கி விடுவார்கள். அல்லது தலையாட்டி அவருக்கு உடன்பட்டு சமாதானம் பண்ணுவார்கள். இணையதளத்தில் அவர் வன்மம் கட்டுரைகளாக எழுத ஆரம்பித்த பிறகு இந்த சூட்சுமம் தெரியாத சக எழுத்தாளர்கள் அவருக்கு பதில் எழுதி ஓய்ந்து போயினர்; ஜெயமோகனை இப்படியான அச்சுபிச்சென்ற சில அபத்த வசனங்கள் வழியாக மட்டும் அறிந்துள்ள மேம்போக்கான வாசகர்கள் மாவுப்பிரச்சனையின் போது அவரை கடுமையாக டுரோல் செய்தது அவருடைய வக்கிரத்துக்கு இணையான மற்றொரு வக்கிரமாக அமைந்தது; அதைக் கண்டு ஜெயமோகனின் விமர்சகர்களுக்கே பரிதாபமும் ஏற்பட்டது. நானே அவரை ஆதரித்து தீராநதியில் எழுத நேர்ந்தது. ஆனால் பல நேரங்களில் இந்த டுரோல் கும்பலுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என அவரே நிரூபித்து விடுகிறார். இந்த சச்சரவுகளுக்கு அப்பால் இன்னொரு பிரச்சனை உள்ளது – ஜெயமோகனின் இந்த இயல்பை புரிந்து கொள்ளாமல் அவரது கூற்றை உண்மையாக எடுத்து கொள்ளும் “நடுநிலை” வாசகர்களும் உள்ளனர். அவர்களுக்காகவே அவ்வப்போது என்னைப் போன்றவர்கள் விளக்கம் எழுத வேண்டி வருகிறது.

திமுக அரசு எந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் இலக்கிய மாமணி விருதுகள் வழங்க வேண்டும் என தனது “தமிழக அரசின் இலக்கிய விருதுகள்” கட்டுரையில் ஒரு பட்டியலை அளித்து விட்டு அவர் இப்படி சொல்கிறார்:

“குடிமகனுக்குரிய உரிமைகளுக்கு அப்பால் அரசுகள் அளிக்கும் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. எந்த மேடையிலும் எவர் முன்பும் கொஞ்சம் தணிந்து, சிலரில் ஒருவனாக நிற்க முடியாது. கொஞ்சம் மோசமான ஆணவம்தான். ஒன்றும் செய்வதற்கில்லை.”

அதாவது, இந்த விருதுகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என அவர் அதற்கு முன் குறிப்பிட்டவர்கள் மேடைகளில் அதிகாரத்தின் முன்பு “கொஞ்சம் தணிந்து, சிலரில் ஒருவராக” நிற்பவர்களாம். ஏனென்றால் அவர்களுக்கு தன்மானம் இல்லையாம். ஜெயமோகன் மட்டுமே இலக்கிய உலகில் சுரணை கொண்ட ஒரே எழுத்தாளராம். அதையே அவர் “கொஞ்சம் மோசமான ஆணவம்” என சுயபகடியும் சுயபாராட்டும் வேறு ஒரே சமயம் செய்து கொள்கிறார். இதை விட மோசமாக தன் சக எழுத்தாளர்களை ஒருவர் அவமதிக்க முடியுமா?

சக எழுத்தாளர்களை நுட்பமாக அவமதிப்பதில் ஜெயமோகனுக்கு தனியான கிளுகிளுப்பு உண்டு. தன் அதிகாரத்தை அவர் பிறரை அவமானப்படுத்துவது, வசைபாடுவதன் வழி தான் உற்பத்தி பண்ணுகிறார். ஒருவரை நாம் அவமதித்தாலும் அவர் இளித்துக் கொண்டு நின்றால், அவர் நமது அடிமையாகி விட்டார், நமது அகந்தையை ஏற்று விட்டார் என ஜெயமோகனுக்குத் தெரியும். வெளியே மட்டும் எழுத்தாளனுக்கு ஆணவம் வேண்டும், முதுகெலும்பு வேண்டும் என கோரிக் கொள்வார். ஆனால் உண்மையில் தனது காறி உமிழ்தல்களை முகத்தில் ஏற்றுக்கொண்டு புன்னகைக்கிறவர்களையே அவர் நேசிக்கிறார்.

விருது விசயத்தில் சக எழுத்தாளர்களையும் அப்படித் தான் நடத்துகிறார்.

சரி அரசு விருதுகள் ஒருதலைபட்சமானவை, எழுத்தாளனுக்கு மரியாதை அளிக்காதவை எனும் கூற்றில் ஏதாவது உண்மை உள்ளதா? கடந்த ஒரு பத்தாண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களில் யாராவது அப்படி அரசு மேடையில் அவமதிக்கப்பட்டார்களா? ஒருதலைபட்சமாக ஒரு அரசியல் கொள்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்களா? இருந்தும் ஏன் அவர் அரசு விருது வாங்குவது ஒரு அவமானம் எனும் கணக்கில் எழுதி வருகிறார்?

சரி, தனியார் அமைப்பினரின் விருதுகளின் பின்னால் அரசியல் இல்லையா? நிச்சயமாக உண்டு. சொல்லப் போனால் அரசு விருதுகளை விட இவ்விருதுகள் பாரபட்சம் மிக்கவை. உயிர்மை, முற்போக்கு எழுத்தாளர் சங்க விருதுகளாவது ஒரு தேர்வாளர் குழுவின் பரிந்துரையால் தேர்ந்தெடுக்கப்படுபவை. உயிர்மையில் 14 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு யுவ புரஸ்கார், பாஷா பரிஷத் போன்ற தேசிய விருதுகள் கிடைத்த பின்னரும் கூட உயிர்மை சுஜாதா விருது இன்னும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவை மனுஷ்யபுத்திரனால் வழங்கப்படுபவை அல்ல. ஆனால் “விஷ்ணுபுரம் விருதுகளை” தேர்வு செய்வதில் ஜெயமோகன் அப்படி ஏதாவது ஒரு முறைமையை பின்பற்றுகிறாரா? இல்லை. இதுவரை தனக்கு உடன்பாடில்லாத, தனக்கு உவப்பில்லாத, அதே சமயம் இலக்கிய வாசகர்களால், விருதுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு எழுத்தாளருக்காவது ஜெயமோகன் தனது விஷ்ணுபுரம் விருதை அளித்ததுண்டா? இல்லை.

இடதுசாரி, கோட்பாட்டியக்க, பெண்ணிய மரபுகளில் இருந்து எழுதுகிறவர்களை, தன்னை விமர்சிப்பவர்களை, தனக்கு உவப்பில்லாத முற்போக்கு அரசியலை முன்னெடுப்பவர்கள் அனைவரையும் அவர் தொடர்ந்து விருது விஷயத்தில் நிராகரித்தே வருகிறார். அதனால் தான் இலக்கிய உலகில் விஷ்ணுபுரம் விருதுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது; அதை பெருவாரியானோர் ஜெயமோகனின் தனிப்பட்ட அங்கீகாரம் மற்றும் பணமுடிப்பு என்றே பார்க்கிறார்கள். இப்படி தான் அளிக்கும் சொந்த விருதையே இவ்வளவு காழ்ப்புகளின், ஜால்ராவின், அரசியலின்மையின் அடிப்படையில் பரிசீலிக்கும் ஜெயமோகன் அரசு அளிக்கும் விருதுகளை விமர்சிக்க என்ன தகுதி கொண்டவர்? (விஷ்ணுபுரம் விருது சில தகுதியான படைப்பாளிகளுக்கும் சென்றுள்ளது; அவர்களை அவமதிப்பது என் நோக்கம் அல்ல.)

சரி, அடுத்து ஜெயமோகனின் வேறு சில அபத்தக் கூற்றுகளுக்கு வருவோம்:

“திராவிட இயக்க எழுத்தாளரான இமையம் பெற்ற ஒரே விருது பாரதிய ஜனதா ஆளும் மத்திய அரசு அளித்தது. ”

இமையம் இதுவரை மாநில அளவிலான ஆறு விருதுகளைப் பெற்றிருக்கிறார் (முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, பெரியார் விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உள்ளிட்டு). இயல் விருது போன்ற தனியார் விருதையும் பெற்றிருக்கிறார். அண்மையில் தான் அவருக்கு சாகித்ய அகாதமியின் விருது அளிக்கப்பட்டது. ஆனால் இந்த தகவல்களை மறைத்து விட்டு இமையத்தை இதுவரை எல்லாரும் புறக்கணிக்க, “பாரதிய ஜனதா ஆளும் மத்திய அரசு” மட்டுமே அங்கீகரித்தது என கட்டமைப்பதன் வழி ஜெயமோகன் நிறுவ விரும்புவது என்ன? தலித்துகளை திராவிட அமைப்புகளும் இடதுசாரிகளும் இருட்டடிப்பு செய்கிறார்கள், இந்துத்துவர்கள் மட்டுமே ஏற்கிறார்கள் என சங்கிகள் பரப்பும் அதே பொய்ப்புரட்டை தான் ஜெயமோகனும் இங்கு தன் மொழியில் மடித்து தருகிறார். அடுத்து, ஒரு அரசு விருதானது கட்சி விருது அல்ல, அது மக்கள் பணத்தில் கொடுக்கப்படும் சன்மானம், ஆகையால் திமுக அரசு தன் கொள்கைக்கு உட்படுகிறவர்களுக்கு மட்டும் இலக்கிய மாமணியை கொடுக்கலாம் என திட்டமிடக்கூடாது என பாடமெடுக்கும் ஜெயமோகன் ஏன் சாகித்ய அகாதெமி விருதை மட்டும் “பாரதிய ஜனதா ஆளும் மத்திய அரசு” அளித்தது என்கிறார்? அது மக்கள் பணத்தில் அமைந்த பொதுவான விருது அல்லவா?

“விருதுகள் இணையத்தில் கூச்சலிடும் திராவிட இயக்கத்து மொண்ணைகளுக்குச் சென்றுசேரவே வாய்ப்பு மிகுதி”

“இப்போது திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் செயல்முறை எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. அறிவிப்புக்கு அப்பால் சென்று நடைமுறையாகும் என்றாலும்கூட சென்றகால மனநிலைகளே நீடிக்குமென்று நம்பவே சூழல் உள்ளது. ஏனென்றால் கட்சியோ அமைப்போ பெரிதாக மாறவில்லை. ”

“இந்த இலக்கியப்பரிசுகள் அறிவிக்கப்பட்டிருப்பதே இந்த அரசு பதவிக்கு வந்ததில் அதை ஆவேசமாக ஆதரித்த சில எழுத்தாளர்களுக்கு ஒரு பங்குண்டு என்பதனாலும், அவர்களுக்கு பதிலுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதனாலும்தான் என்றுதான் நினைக்கிறேன். ஏற்கனவே அவர்கள் கணக்குபேச ஆரம்பித்துவிட்டனர். ”

ஜெயமோகனின் இந்த அனுமானங்களுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா? விருது அறிவிப்பே இப்போது தான் வந்துள்ளது. அரசு ஆட்சிக்கு வந்து மிகக்குறைந்த காலமே ஆகிறது. முதல் வருட விருதுப் பட்டியலைக் கூடப் பாராமல் ஜெயமோகன் இப்படி சொல்வதில் ஏதாவது நியாயம் உள்ளதா? தபோல்கர், பன்சரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர் வலதுசாரிகளால் கொல்லப்பட்டதற்கு இந்த பாஜக அரசு தண்டனை வழங்கி உள்ளதா? இல்லை.  எழுத்தாளர்களை, அறிவுஜீவிகளை, சமுக செயல்பாட்டாளர்களை தம்மை விமர்சிக்கிறார்கள் எனும் ஒரே காரணத்துக்காக தொடர்ந்து வழக்குகள் தொடுக்கும், கொட்டடியில் அடைக்கும் அரசு இப்போதுள்ள பாஜக அரசு. ஆனால் அந்த அரசு தான் விருதுகளை பாரபட்சமில்லாமல் வழங்குகிறது என ஜெயமோகன் பாராட்டுரை வாசிக்கிறார்.

“சென்ற ஐந்தாண்டுகளில்தான், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைந்த பின்னர்தான், ஒரு முதல்வர் ஓர் இலக்கியமுன்னோடி மறைவுக்கு நான்குவரி அஞ்சலியை முன்வைக்கும் வழக்கமே ஆரம்பித்தது.”

அபிரகாம் லிங்கனின் பெயரைக் கூடத் தெரியாத, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் எனக் கூறிய முதல்வர் முன்வைக்கும் அஞ்சலிக் குறிப்பை விட பெரும் அவமதிப்பை ஒரு காலமான எழுத்தாளருக்கு உண்டா? அதில் என்ன மதிப்புண்டு? இதையெல்லாம் ஜெ.மோ பாராட்டுவது, எடப்பாடியை ஒரு இலக்கிய அங்கீகரிப்பாளராக முன்வைப்பது அவருக்கு ஆவேசத்தில் கண்மண் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

“மெய்யாகவே பண்பாட்டியக்கம் மேல் ஆர்வம் கொண்ட ஒரு நவீன அரசு உவந்து கௌரவிக்கவேண்டும் என்றால் அதன் முதல் தெரிவு தேவதேவன் ஆகவே இருக்கும். அவரோ அரசியலுக்கு அப்பாற்பட்டவர். மனிதமுகங்களை நினைவுக்கூர்வதுமில்லை. ஆகவே தொடர்புகளும் இல்லை. ஒரு பொதுச்சூழலில் கருத்துக்களை முன்வைப்பவராகவும் அவர் இல்லை. ஆனால் அவரைத் தேடிச்செல்லும்போதே எந்த விருதும் பெருமை கொள்கிறது. ”

தேவதேவன் ஒரு மகத்தான கவிஞர் என்பது மறுப்பில்லை. ஆனால் அதற்கான அளவுகோல் அவர் “அரசியலுக்கு அப்பாற்பட்டவர்”, தொடர்புகள் இல்லாதவர், பொதுச்சூழலில் கருத்துக்களை முன்வைக்காதவர் என்பதல்ல. ஜெயமோகன் எழுதுகிற அபத்தங்களிலேயே உச்சம் இது தான் – தொடர்புகளை பேணுவது எப்படி இலக்கிய விரோதமாகும்? அல்லது அதை செய்யாதது எப்படி ஒருவருக்கு பெருமையாகும்? பொதுச்சூழலில் கருத்து சொல்லாதது ஒரு தகுதியா? இந்த உலகிலேயே இவ்வளவு முட்டாள்தனமான ஒரு அளவுகோலை யாரும் இலக்கியத்துக்கு வைக்க முடியாது. இப்படி சொல்வதன் மூலம் ஜெயமோகன் மீண்டும் தேவதேவனைத் தவிர பிற எழுத்தாளர்கள் களங்காமனவர்கள், அரசியல் செய்கிறவர்கள், சூதுவாது கொண்டவர்கள், சுயநலவாதிகள் எனும் சித்திரத்தை ஏற்படுத்துகிறார்.

“திமுக எப்படியும் பிராமணர்களை பொருட்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே காழ்ப்புக் கூச்சல்கள் எழத் தொடங்கிவிட்டன. ஆகவே யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன்,இரா.முருகன், பா.ராகவன் ஆகியோரை முன்வைத்துப் பயனில்லை”

திமுக அரசு இதுவரை மேற்கொண்ட செயல்களில் எங்காவது பிராமண துவேசம் உண்டா? பாஜக அரசாவது இஸ்லாமியரை குற்றவாளிகளாக்கும், சிறுபான்மையினரை குடியுரிமை அற்றவர்களாக்கும் சட்டங்களை நிறைவேற்றுகிறது. அப்போது வெளிப்படாத சீற்றம் ஒன்றுமே நிகழாத போது ஏன் ஜெயமோகனிடம் இருந்து திமுக மீது பாய வேண்டும்? ஒரே காரணம் தான் – பாஜகவின் சிறுபான்மை துவேசத்தை அவர் மனதளவில் ஏற்கிறார், இங்கு மதுவந்தியின் பள்ளி மீது விசாரணை வரும் போது பாஜகவினர் கிளப்பி விடும் புரளிகளை ஜெயமோகன் மனதார நம்பி விடவும் செய்கிறார். இந்த அரசு பிராமண எழுத்தாளர்களுக்கு விருது வழங்கினால் ஜெயமோகன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்பாரா?

“கட்சிச் சார்பு இல்லையென்றாலும் இவ்வரசு மேல் நல்லெண்ணம் கொண்ட சாரு நிவேதிதா போன்றவர்களையும் பரிசீலிக்கலாம்.”

சாரு நிவேதிதாவுக்கு அந்த மதிப்பு கூட இல்லையாம். அவர் “எஸ்.ராமகிருஷ்ணன், விக்ரமாதித்யன், இமையம், கலாப்ரியா, சுரேஷ்குமார இந்திரஜித், பாவண்ணன், தேவிபாரதி,சுப்ரபாரதி மணியன், சு.வேணுகோபால், எஸ்.செந்தில்குமார், தமிழ்மகன், அ.வெண்ணிலா போன்றவர்களுக்கு” கீழே தான் வருகிறாராம். அவரைப் போன்றோரை ‘பரிசீலிக்கலாமாம்’. மேலே அவர் தரும் படைப்பாளிகளில் இருந்து சாரு எந்த விதத்தில் தரம் குறைந்து விட்டார்? அதிலும் பாருங்கள் – எப்படி கட்சி சார்பு கொண்ட படைப்பாளிகள் என ஒரு பட்டியல் தந்து, அதனாலே அவர்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புண்டு என அவர்களை அவமதித்து, சாருவை அவர்களுக்கு கீழே வைத்து அவரையும் “பரிசீலிக்கலாம்” எனச் சொல்லி காறி உமிழ்கிறார் பாருங்கள்! இப்படி தன்னைத் தவிர வேறு எல்லாரை நோக்கி சேறு வாரி வீசும் ஒரு படைப்பாளியை வேறு எந்த மொழியிலாவது பார்க்க முடியுமா?

இறுதியாக, ஜெயமோகனின் இலக்கிய மதிப்பீட்டு அளவுகோல் என்னவென்றும் நாம் வினவ வேண்டும். இந்த கட்டுரையில் அவர் அளிக்கும் பரிசு பெறத் தகுதியானோர் பட்டியல் கூட அவருடைய விருப்புவெறுப்புகளின் அடிப்படையிலே அமைந்திருக்கிறது. உ.தா., கோட்பாட்டியக்கவாதிகளை மொத்தமாக சுவர் எழுப்பி மறைத்து விட்டார். தொண்ணூறுகளுக்குப் பிறகு எழுத வந்த கவிஞர்களில் அனேகமானோர் அரசியலற்ற அந்தரங்கக் கவிஞர்கள். உணர்ச்சிகளாலான தன்னிலையில் தரப்பில் இருந்து உலகம் நோக்கி பொதுவாக எழுதுபவர்கள். இவர்களில் தீவிர அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள் என்றால் அது குட்டி ரேவதி, லீனா, சுகிர்தராணி, சல்மா போன்ற பெண்ணிய கவிஞர்களே. இவர்கள் நேரடி அரசியல் பற்றி அதிகம் எழுதுவதில்லை என்றாலும் இவர்களுடைய உடலரசியல் கோட்பாடு சார்ந்த, கலகக்குரல் அரசியல் ஜெயமோகனுக்கு எரிச்சலூட்டுகிறது. ஏனென்றால் இலக்கியம் என்பது தனிமனிதன் தன் வாழ்வனுபவத்தை கற்பனையால் பெருக்கி எழுதும் ஒன்று, அதற்கு அரசியல், கருத்தியல், தத்துவம் இல்லை என நம்பும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் லிபரல் ஹியூமனிஸ தரப்பை சேர்ந்தவர் அவர். அதனாலே பின்நவீன புனைவெழுத்தாளர்கள், மெய்யியல் சார்ந்து எழுதிய நகுலன், சம்பத், மௌனி போன்றோரும் அவரை எரிச்சலூட்டுகிறார்கள். அதனாலே இந்த பட்டியலை சேர்ந்தோரை – பெண்ணியவாதிகள், கோட்பாட்டியக்கவாத சிந்தனையாளர்கள், கோணங்கி போன்ற பின்நவீனத்துவர்களை அவர் நைசாக விலக்கி விடுகிறார். இறுதியாக காலச்சுவடின் புனைவெழுத்தாளர்கள், கவிஞர்களை (முக்கிய நவீன கவிஞரான சுகுமாரனில் இருந்து உலகமே இன்று போற்றும் பெருமாள் முருகன் வரை) ‘அப்பாலே போல சாத்தானே’ என வெளியே தள்ளி கதவை மூடி விடுகிறார். கண்ணன் மீதான 30 வருட பகை தான் ஒரே காரணம். இதையெல்லாம் ஒரு இலக்கிய மதிப்பீட்டின் மீதான தேர்வு என்று கூட சொல்ல முடியாது – அவருடைய முன்முடிவுகள், மூடநம்பிக்கைகள், தனிமனிதர்கள் மீதான வன்மம், சமகால சிந்தனைகள் மீதான காழ்ப்புகளின் அடிப்படையில் அமையும் தேர்வென்றே கூறியாக வேண்டும்.

அடுத்து, தன்னை விமர்சிப்பவர்கள், மறுப்பவர்களை ஜெயமோகனால் என்றுமே இலக்கியவாதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த விதத்தில் பெண்ணியவாதிகள் அவரை வெளிப்படையாக எதிர்த்திருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் தன் உலகில் இல்லை என சாதித்து விடுகிறார். நான் மேலே குறிப்பிட்டதைப் போல அவரிடம் பகைத்துக் கொள்ளாத, எந்த இலக்கிய பிரதி, அரசியல் மீதும் கருத்து சொல்லாதவர்களாக, அவ்வப்போது அவரது கட்டுரைகள், கதைகளை பகிர்ந்தும் பாராட்டியும் எழுதுகிறவர்களை அவர் அரவணைத்துக் கொள்வார். மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் ஜென்ம பகைவர்கள். எப்படி மோடியை விமர்சிப்பவர்கள் எல்லாம் சங்கிகளைப் பொறுத்து தேசவிரோதிகளோ அவ்வாறே ஜெயமோகனின் “ஜென்ம விரோதிகள்” எல்லாரும் இலக்கிய தகுதியற்றவர்களாகி விடுவார்கள்.

முக்கியமாக, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்த காரணத்தாலே இம்முறை தன் பரிந்துரைப் பட்டியலில் இருந்து அவர் மனுஷ்யபுத்திரனை தவிர்த்து விட்டார். இத்தனைக்கும் அவர் மனுஷ்யபுத்திரனை விதந்தோதி நூறு பக்கங்களுக்கு மேல் எழுதி இருப்பார். இப்போது இந்த சமிக்ஞை மூலம் அவர் சொல்ல வருவது “எப்படியும் மனுஷ்யபுத்திரன் திமுக கவிஞர், அதனாலே விருதை அவருக்கு இலக்கிய தகுதி இல்லாமலே கொடுத்து விடுவார்கள்” – எப்படி அரசியல் கருத்து சொல்லாததால் மட்டுமே ஜெயமோகனுக்கு தேவதேவன் முதன்மையான விருதாளராகி விடுகிறாரோ அப்படியே அரசியலில் பங்கெடுப்பதால் மனுஷ்யபுத்திரன் அவர் பெயரைக் கூட உச்சரிக்கத் தகுதியற்றவராகி விடுகிறார். இப்படி எவ்வாறு அவர் நைசாக மனுஷ்யபுத்திரனைத் தவிர்த்து அவர் ‘கொல்லைப்புற வழியாக விருது பெறப் போகிறார்’ என சித்தரிக்கிறார் பாருங்கள். இதை விட மோசமாக சமகாலத்தின் ஒரு முதன்மையான கவிஞனை அவமதிக்க முடியுமா?

2017இல் நான் ஜெயமோகனின் அழைப்பின் பெயரில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். அங்கு ஒரு எழுத்தாளர் அறிமுக அரங்கில் என்னை அமர வைத்து கேள்வி கேட்டார்கள். வாசகர்களுடன் உரையாடினேன். அது முடிந்த பின் நான் ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு அயல்மொழி படைப்பாளி வந்தார். ஜெயமோகன் உடனே என்னை “இவர் பெயர் ஆர். அபிலாஷ். ஒரு பத்தி எழுத்தாளர்” என அறிமுகப்படுத்தினார். எனக்கு ஒரு நொடி அதிர்ச்சியாகவும் மறுநொடி வேடிக்கையாகவும் இருந்தது – நான் நாவல், சிறுகதை, கவிதை, மொழியாக்கம், கட்டுரை நூல்கள் பலவகை இலக்கிய வகைமைகளில் 38 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். நான் குமுதத்தில் மட்டுமே இதுவரை ‘பத்தி’ எழுதி இருக்கிறேன். நான் எழுதும் உரையை பத்தி என்று வரையறுக்க முடியாதென ஜெயமோகனின் அறிவார். இத்தனைக்கும் அவரே நான் எழுத வருமுன்பு என் முதல் சிறுகதையை தனது சொல்புதிது இதழில் பிரசுரித்தவர். மற்றொரு சிறுகதையை தன் பரிந்துரையுடன் ஒரு இணைய இதழில் பிரசுரிக்க அனுப்பியவர். இருந்தும் ஏன் அப்படி சொன்னார்?

பொதுவாக ஜெயமோகன் எழுத்தாளர்களுக்கு என ஒரு தனி படிநிலை வைத்திருக்கிறார். நான் பத்தாண்டு காலமாக விமர்சித்து வந்தவன். என்னை அவர் தற்போது மன்னித்து தன் அரங்கிற்கு அழைத்திருக்கிறார். ஆனாலும் நான் முழுக்க ‘ஏற்கவில்லையாம்’. நான் முதல் தேர்வில் தேறியதால், அடுத்த கட்ட தேர்வுகளை கடக்கும் வரையில், நான் ‘பத்தி எழுத்தாளன்’ மட்டும் தானாம். அவையென்ன தேர்வுகள்?

  1) நான் தொடர்ந்து அவருடைய ‘இலக்கிய விரோதிகளுக்கு பாராமுகம் காட்டிட வேண்டும். அவருக்குப் பிடிக்காத இதழ்களில் எழுதக் கூடாது.

   2) முகநூலில் இயங்கக் கூடாது. அப்படி செய்தாலும் அவரைப் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டும்

  3) சரி பாராட்டாவிட்டாலும் அவரை விமர்சித்தோ கண்டித்தோ ஒரு சொல்லைக் கூட எழுதிடலாகாது.

   4) ஜெயமோகனின் கருத்துக்களை அப்படியே பகடி எடுக்க வேண்டும். முடிந்தால், அவருடைய பாணியையும் அப்பட்டமாக போலச் செய்ய வேண்டும்.

இதையெல்லாம் பண்ணி வந்தால் நான் பத்தியாளன் எனும் கீழ்த்தட்டில் இருந்து வேகமாக முன்னேறி கட்டுரையாளன், சிறுகதையாளன், நாவலாசிரியன் என படிப்படியாக மேலே வந்து விடுவேனாம். அப்போது அவர் என்னை ஒரு எழுத்தாளனாக முழுமையாக அங்கீகாரிப்பாராம். ஆனால் நான் வழக்கம் போல, விழா முடிந்து வந்ததும் விஷ்ணுபுரம் இயக்கத்தின் போதாமைகள், ஆபத்துகள் குறித்து கட்டுரைகளை வெளியிட்டது, ஜெயமோகனின் பல கருத்துக்களுடன் முரண்பட்டு எழுதியது வேறு கதை. என்ன சொல்ல வருகிறேன் என்றால் நான் தொடர்ந்து தீவிர இலக்கியத்தில் இயங்கி வந்தாலும் ஜெயமோகனின் தனிப்பட்ட தேர்வுகளில் எப்போதோ தோற்று விட்டேன். அவருடைய மதிப்பீட்டில் நான் பத்தியாளன் என்பதில் இருந்தும் இறங்கி இப்போது வெறும் ‘திமுக ஆதரவாளன்’ ஆகி இருப்பேன். இந்த கட்டுரையிலும் ஜெயமோகன் அந்த “அந்தரங்க மதிப்பீட்டின்” படி தான் விருதுப் பரிந்துரை பட்டியலை வைக்கிறார் – ஒன்று அவருக்கு உடன்படுகிறவர்கள், அல்லது அவருடன் முரண்படாதவர்கள், அல்லது வாயே திறக்காதவர்கள். ஒரு அரசியல்வாதி கூட இவ்வளவு மோசமான அரசியலை செய்ய மாட்டார்.

சொல்லப் போனால் வைரமுத்து தன்னை நாடி வந்த சில பிரபலங்களிடம் நடத்தியதாக சொல்லப்படுவதற்கும் ஜெயமோகன் தன் சக எழுத்தாளர்களை நடத்துவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நியாயமாக எழுத்தாளர்கள் ஜெயமோகன் மீது ஒரு ‘இலக்கிய மீ டூ’ போட வேண்டும்.