மூன்றாம் அத்தியாயம்

 

ட்டம் என்றால் அப்படி ஒரு ஓட்டம். !  முனியாண்டிக்கும் ராமலிங்கத்துக்கும் கோம்பை நாய் மாதிரி வயிறே இல்லாத உருவி விட்ட உடம்பு. நீளமான கால்கள்…ரெண்டு பேரும் கம்மாயில் மணிக்கணக்காக நீந்தியும், மூன்றாந்தல் சுற்று வட்டாரத்தில் தோட்டம் ,துரவு, தோப்பு என்று நடையாக நடந்தும் அவர்கள் இருவரின் உடம்பும் இறுகிப் போயிருந்தது. அப்பேர்ப்பட்ட ரெண்டு ஆம்பளைக துரத்தியும் கூட அவளைப் பிடிக்க முடியவில்லை. ஒரே ஓட்டமாக ஓடினாள்.  ஓடியவள் கிழக்குப் பக்கமாகப் போகும் பெரிய ரோட்டில் ஓடி வலது பக்கம் இருந்த வயல் வெளியில் இறங்கினாள். வரப்புகளின் மீது வெகு லாவகமாக தாவிச் சென்று ஆற்றோரத்தில் வளர்ந்து பெருகிக் கிடந்த நாணல் மற்றும் தாழம் புதர்களுக்குள் ஓடி மறைந்து விட்டாள்.

மூச்சு வாங்க ரெண்டு பேரும் திரும்பி வந்தார்கள். டாக்டர் திண்ணையில் அமர்ந்து அடுத்த சிகரெட்டைப்  பற்ற வைத்து ஊதிக் கொண்டிருந்தார்.

“என்ன ராமலிங்கம்? அவளைத் தூக்கிட்டு வருவீங்கன்னு பாத்தா ரெண்டு பயலுகளும் தொங்கிப் போய் வர்றீங்க?”

“டாக்டரய்யா, அவ வகுத்துல ஒண்ணுமில்லை கெறக்கமா இருக்கான்னு சொன்னீங்க…ஆனா இம்புட்டு வெடுப்பா ஓடுறா?”

டாக்டர் புன்னகையுடன்,”ஆமா…அப்படித்தான் இருந்தா…அது சரி.ரெண்டு பேரும் வேட்டை நாய் மாதிரி ஓடுனீங்க..ஆனா புடிக்காம விட்டுட்டிங்க ? ”

“ நாங்க வேட்டை நாய் கணக்கா ஓடுனா அவ மொசக்குட்டி கணக்கால்ல ஓடி தாழம்புதருக்குச் செவை போய்ட்டா. அதுக்கு மேல எங்குட்டுப் புடிக்கிறது. ஆத்தைக் கடந்து அந்தப் பக்கம் போய்ருப்பா”

“ம். கடைசில ஆளை விட்டுட்டீங்க…அது சரி…அவளுக்கு ஊசி போட்டதுக்கு யாரு காசு தர்றது?”

முனியாண்டியும் ராமலிங்கமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

முனியாண்டி டாக்டரைப் பார்த்தான். “ அய்யா, அவளுக்கு நீங்க ஆரஞ்சிப் பழத்தில என்னமோ பொடியைக் கலந்து குடுத்தீங்கள்ல…அதுல என்னமோ சூச்சியம் இருக்கு. அதேன் அம்புட்டு வெரசா ஓடிட்டா. இல்லாட்டி எங்களை தாண்டி ஓடிர முடியுமா ஒரு பொம்பளையால?”

டாக்டர் சிரித்தார்,” ஏய்…அது குளுக்கோஸ் பொடி…தெம்புக்கு குடுக்கறது…ஒன்னால புடிக்க முடியலைங்கிறதை சொல்லு. அதை விட்டுட்டு…. சரி….யாரு கிட்ட காசு இருக்கு ஊசிக்கு?”

முனியாண்டியும் ராமலிங்கமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். முனியாண்டி ,” காசு இல்லை டாக்டரய்யா. நாளைக்கு வேணா ஒரு   சாக்கு மாம்பழம் கொண்டு வர்றேன்”

“மாம்பழமா? எங்கருந்து கொண்டு வருவ? தோப்பு இருக்கா உனக்கு?”

“இல்லைங்கய்யா, நான் அல்லிநகரம் சின்னச்சாமி தோப்பை குத்தகைக்கு பாக்கறேன்யா” என்றான் முனியாண்டி.

“ ஓ. தோப்பு குத்தகைக்கு பாக்கறவனா? சரி, முடிஞ்சாக் கொண்டு வா” என்றபடியே சிகரெட்டை அணைத்தார். “ ஏய் கோயிந்தா”

“என்னாங்கய்யா?”

“ உள்ள இருக்க தூக்கை எடுத்துட்டுப் போயி சுருட்டையன் கடையில மூணு டீ வாங்கிட்டு வா. குடிக்கலாம்…அப்படியே வடை ஏதாச்சும் போட்டாலும் வாங்கிட்டு வா”

கோயிந்தன் தூக்கை எடுத்துக் கொண்டு போக டாக்டருடன் இருவரும் திண்ணையில் அமர்ந்தனர்…

அடுத்து ஒரு சிகரெட்டை எடுத்த டாக்டர் அதனைப் பற்ற வைக்காமலிருக்க

“ அய்யா தீப்பெட்டி வேணுமாய்யா?”

“அதெல்லாம் இருக்கு. டீ வரட்டும் குடிச்சுட்டு பத்த வைக்கலாமுன்னு இருக்கேன்”

ராமலிங்கம் டாக்டரை பார்த்தான்.” அய்யா உங்களுக்கு எம்புட்டு வயசு?”

“ நாப்பத்தி அஞ்சு, ஏன்?”

“ ஆளு ஜம்முன்னு இருக்கீங்க…வயசு தெரியலை…அதான்”

“உனக்கென்ன வயசு?”

“எனக்கு முப்பது….இவனுக்கும் அதே வயசுதான் “ என்றான் ராமலிங்கம் முனியாண்டியைக் காட்டி

“ கல்யாணம் ஆயிருச்சுல்ல ரெண்டு பேருக்கும்?”

“ ஆயிருச்சுங்கய்யா”

“ புள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க… எத்தனை புள்ளைக ?”

இதற்கு முனியாண்டி பதில் சொன்னான்,”ரெண்டு புள்ளைகய்யா. ரெண்டும் பொண்ணுக….”

“பள்ளிக்கூடம் அனுப்பறேல்ல?”

“ என்னத்தையோ போகுதுயா,,போற வரைக்கும் போகட்டும்..”

“ அப்படி சொல்லாத. நல்லாப் படிக்க வைக்கணும்… உனக்கு ராமலிங்கம்?”

ராமலிங்கம் தடுமாறினான்.

“என்ன?”

“ இன்னும் அந்த சாமி கண்ணைத் தொறக்கலைய்யா”

அவன் முகத்தின் வேதனையையும், உள்ளுக்குள் புரளும் லேசான அவமானத்தையும் மாயக்கிருஷ்ணனால் புரிந்து கொள்ள முடிந்தது. எழுந்து கொண்டவர் அவனை அழைத்தார்.

“உள்ள வா ராமலிங்கம்….”

ராமலிங்கத்துடன் முனியாண்டியும் கூடவே வர,

“ முனியாண்டி…நீ திண்ணையிலேயே இரு. நீ மட்டும் வா”

முனியாண்டி திண்ணையிலே அமர டாக்டர் ராமலிங்கத்தை தன் அறைக்கு கூட்டிப் போனார்.

“உக்காரு”

அவன் அமர்ந்து டாக்டரின் முகத்தைப் பார்த்தான்.

“ராமலிங்கம்….எத்தனை வருசமாச்சு கல்யாணமாயி…..?”

“பத்து வருசமாச்சுங்கய்யா?”

“ நிய்யும் உன் சம்சாரமும் சந்தோசமாத்தான இருக்கீங்க?”

“ அதெல்லாம் சந்தோசமாத்தான் இருக்கோம்யா”

டாக்டர் அடுத்த கேள்வியை யோசிக்க

“அந்த கோமணான்டி முருகன் கண்ணைத் தொறக்கணும்யா..வேற என்ன?”

“ராமலிங்கம்… நான் டாக்டரு…புள்ளை  எப்படிப் பொறக்குதுன்னு எனக்குத் தெரியும். சில பேருக்கு  லேட்டா கூட பொறக்கும். சில பேருக்கு ஏதாச்சும் ஒரு காரணத்தால  அது தள்ளிப் போகலாம். “

“காரணம்னா என்ன காரணம்ங்க அய்யா?”

“ காரணம் என்னான்னு கண்டு பிடிச்சிரலாம்.அதுக்குன்னு சில சோதனை எல்லாம் இருக்கு. மதுரையில பண்ணுறாங்க. என் கூட படிச்ச ஒருத்தியே டாக்டரா இருக்கா. நான் வேணா அவ கிட்ட சொல்றேன். நீயும் உன் சம்சாரமும் போய் அவங்களை பாக்கறீங்களா?”

டாக்டர் மிகவும் மென்மையாக இதை அவனிடம் சொல்ல, அவர் முடிப்பதற்குள் பட்டென்று ராமலிங்கத்திடம் இருந்து பதில் வந்தது.

“அதெல்லாம் வேணாம் சார்”

“ஏன் ஒரேயடியா வேணாம்ங்கிறே?”

“டாக்டரய்யா, நீங்க நிறையப் படிச்சிருக்கீங்க. இல்லேங்கல. ஆனா புள்ளைங்கிறது கடவுள் குடுக்கறது….”

“ அப்படி இல்லை ராமலிங்கம்”

“ அய்யா, எங்கப்பன் ஆத்தா எல்லாம் எந்த டாக்டர்  கிட்டப் போய் நாலைஞ்சு புள்ளையப் பெத்தாங்க?”

“ யோவ், இப்பவும் டாக்டர் கிட்டப் போகாம பல பேரு நாலைஞ்சு புள்ளையை பெத்துக்கிட்டுத்தான் இருக்காங்க. ஆனா பத்து வருசமா ஒண்ணும் இல்லைன்னு சொல்றே. ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கறதாவும் சொல்ற, அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கான்னு தெரிஞ்சுக்கிறது நல்லதுதானே. அதுக்கு ஒரு வழி இருக்கும் போது ஏன் வேணாம்ங்கணும்?. செலவாகும் காசு இல்லையேன்னு நினைக்காதே. அதை நான் பாத்துக்கிறேன்.”

“கோவிச்சுக்கிறாதீங்க அய்யா, அதெல்லாம் வேணாம்… எங்கப்பன் முருகன்  பாத்துக் குடுத்தாக் குடுக்கட்டும், இல்லாட்டி விதி போல ஆகட்டும்”

மாயக்கிருஷ்ணன் அவனையே பார்த்தார்.  சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். அவனது எண்ண ஓட்டம் அவருக்குப் புரிந்தது. படிக்காதவனாக, வசதி இல்லாதவனாக இருந்தாலும் அவன் ஒரு ஆண். நான் ஆம்பள என்கிற ஈகோ அவனுக்குள் திரண்டு இருக்கிறது. அந்தக் குமிழை யார் தொடுவதையும் அவன் விரும்பவில்லை. அந்தக் குமிழ் ஒரு வேளை உடைந்து போனால் பிறகு அவனுக்கு எதுவும் மிச்சமிருக்காது . எனவே இதில் ரொம்ப சென்சிடிவ் ஆக அவன் இருக்கிறான். அந்தக் குமிழுக்கு பாதுகாப்பாக விதியையும், அப்பன் முருகனையும் வைத்திருக்கிறான். டாக்டரும், விஞ்ஞானமும் அந்தக் குழிழை உடைத்து விடக் கூடும். எனவே அஞ்சுகிறான்…அவன் பிரச்சினையை டாக்டர் தீர்ப்பார் என்பது ஒரு சாத்தியம். ஆனால் அந்த இடத்துக்கு அவன் போகவே தயாராக இல்லை. ஒரு வேளை டாக்டர் இந்தப் பிரச்சினையை மருத்துவத்தால் தீர்த்து அவனுக்கு குழந்தை பிறந்தாலும் கூட அவனது ஆம்பள ஈகோ அதை ஏற்க விரும்பாது. அதனை கடவுள் தீர்ப்பதுதான் அவன் மனசுக்கு இதமாக இருக்கும்.

புகையை  ஆழமாக இழுத்து விட்டார் மாயக்கிருஷ்ணன். பல நேரங்களில் இது போல அவருக்கு நேர்கிறது. தான் பார்க்கும் ஒவ்வொரு பேஷண்ட்டையும் அவர் அக்கறையோடுதான் கவனிக்கிறார். ஆனால் பல நேரங்களில் அவர்களது அறியாமை, அதோடு கூடிய பிடிவாதம் இவரை எரிச்சலடையை வைக்கிறது. ஆனால் அந்த எரிச்சலை தனக்குள் பிடிவாதமாக விழுங்கி விட்டு அவர்களிடம் பரிவோடு பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டார். இவர்கள் என் ஜனங்கள். என் கோபம் இவர்களை என்னிடமிருந்து விலக்கி விடும். நான் அதற்காக இங்கே வந்து உட்காரவில்லை.  இவர்களுக்கு வைத்தியம் செய்வது மட்டும் என் வேலையில்லை.. மெல்ல மெல்ல இவர்கள் அறியாமையைப் போக்குவதும் என் வேலைதான். அதற்கு இவர்கள் என்னை முழுமையாக நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையைப் பெறுவதற்கு  அசாத்தியப்  பொறுமை வேண்டும்.

சிகரெட்டை அணைத்தார்.

“சரி ராமலிங்கம். உன் இஷ்டம்”

பிறகு அலமாரியில் இருந்து ஒரு டின்னை எடுத்தார்.

“இந்தா ராமலிங்கம்”

“என்னங்க அய்யா இது?”

“இது ஒரு பவுடர். சத்து மாவு. டெய்லி பால்லயோ, வெந்நீர்லயோ போட்டுக் குடி. உடம்புக்கு நல்லது”

அவன் வாங்கிக் கொண்டான்.

“நான் சொல்றதை யோசிச்சுப் பாரு. உன் சம்சாரத்துக் கிட்டயும் சொல்லு.. ஒரு வேளை நான் சொல்ற மாதிரி செஞ்சு பாக்கலாம்னு மனசுல பட்டா உடனே வந்து என் கிட்ட சொல்லு. என்னா?”

“சரிங்கய்யா” என்றான் சுத்தமாக மனமில்லாமல்.

கோயிந்து வடையும் , டீயும் வாங்கி வந்தான். அதனை நால்வரும் சாப்பிட்டு டீ குடித்தார்கள்.

“சரிங்க அய்யா, போயிட்டு வரோம்”

“சரி”

அவர்கள் இருவரும் போனதும் மாயக்கிருஷ்ணன் ட்ராயரைத் திறந்தார். அதிலிருந்த பத்து ரூபாய் நோட்டுகள் ஐந்தை  எடுத்து கோயிந்துவிடம் கொடுத்தார். அவ்வளவுதான் இருந்தது.

“சுருட்டையன் கடைக்கு காசே தரலை இல்லை?”

“ஆமாங்க அய்யா”

“இந்தா அவன் கிட்ட  குடுத்துரு”

“சரிங்க அய்யா”

“ நான் வீட்டுக்கு கிளம்பறேன். யாராச்சும் வந்தாங்கன்னா வந்து கூப்பிடு..”

“ சரிங்க அய்யா”

 

ரவு சாப்பிடுகையில் டாக்டர் யோசனையாகவே இருந்ததை அவரது தந்தை வரதராஜன் கவனித்தார். சாப்பிட்டு விட்டு வாசல் திண்ணையில்  இருந்த தேக்கு மர ஈஸி சேரில் அமர்ந்திருக்கையில் டாக்டர் கையைத் துடைத்தபடி வந்து அப்பாவின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.  பெரிய வீடு அது. வாசலில் திண்ணையே மிகவும் அகலமாக இருந்தது. காம்பவுண்டு சுவர். கார் நிற்பதற்கு ஷெட். வீட்டைச் சுற்றிலும் வேப்ப மரங்களும், தென்னையும்..பின் பக்கம் மாட்டுத் தொழுவம்…ஷெட்டில் இரண்டு டிராக்டர்களும், டாக்டரின் அம்பாஸடர் காரும் நின்றிருந்தன…காம்பவுண்ட்டின் இன்னொரு பகுதியில் வைக்கோல் போர். கோழிக் கூண்டு.

“என்ன கிட்ணா? ரொம்ப யோசனையாவே இருக்கற மாதிரி தெரியுது?”

“ஒண்ணுமில்லை அய்யா”

“ஒண்ணுமில்லைன்னு நீ சொன்னா? கேக்கற நான் என்ன கிறுக்கனா? எதா இருந்தாலும் சொல்லு”

“அது…..இன்னைக்கு என் மேஜை ட்ராயர்ல அம்பது ரூவாதான்யா  இருந்துச்சு…என் மூணு நாள் சம்பாத்தியம்… அப்படியே டீக்கடைக்கு குடுத்துட்டு கையை வீசிக்கிட்டு வந்துட்டேன்”

 

“ சரி..இப்ப அதுக்கென்ன?”

“ உங்க மருமக அப்பப்ப கேக்கறாய்யா….டாக்டர்னு தான் பேரு. ஆனா சொந்தமா நீங்க எப்ப சம்பாரிக்கப் போறீங்கன்னு கேக்கறா?”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே கோகிலா வந்து நிலைப் படி ஓரம் நின்றாள்.

வரதராஜன் அவளைப் பார்த்தார். “ ஏம்மா உனக்கு இவன் தனியா சம்பாரிக்கணுமாக்கும்?”

“அது இல்ல மாமா. நீங்க எவ்வளவு செலவழிச்சு படிக்க வைச்சிருக்கீங்க? எப்பக் கேட்டாலும் கையில காசே இல்லை பேஷன்ட் வரலை, வந்தாலும் காசு தரலைங்கிறாரு?”

“ அதிருக்கட்டும். நம்ம கிட்ட என்ன காசு இல்லையா? வயல்லயும், தோட்டத்திலயும், எஸ்டேட்லயும் இருந்து வர்ற காசு எல்லாம் என்ன கணக்கு? எல்லாமே இவன் காசுதானேம்மா. உள்ள ஒழுகறைப் பொட்டியில இப்பவும் பத்தாயிரம் ரொக்கம் இருக்கு. புத்தடியில ஏலக்கா ஏவாரிகிட்ட இருந்து  அடுத்த மாசம் இருபத்தி அஞ்சாயிரம் ரூபா நமக்கு வரணும்…அது வந்ததும் போடியில ஒரு  தோப்பு கிரையஞ் சொல்றாங்க. அதை  உன் புருசன் பேருலதான் வாங்கலாம்னு இருக்கேன். இதெல்லாம் காசாத் தெரியலையா உனக்கு?”

“அதெல்லாம் பரம்பரை வருமானம் மாமா, டாக்டரா இருந்துகிட்டு இவரு சம்பாரிக்க வேணாமா?”

“ இவனை சம்பாரிக்கிறதுக்காக நான் படிக்க வைக்கலைம்மா…காசை நான் சம்பாரிச்சு வைச்சிருக்கேன். இவன் பேரை சம்பாரிக்கணும். புண்ணியத்தை சம்பாரிக்கணும்…அதுக்குத்தான் படிக்க வைச்சேன். அதை என் மகன் சம்பாரிச்சுக்கிட்டுத்தான் இருக்கான்.”

மாயக்கிருஷ்ணன் கோகிலாவை கிண்டலாகப் பார்க்க ,கோகிலா புருஷனை லேசாக முறைத்தாள்.

“என்னம்மா ,?”

“நீங்களே இப்பிடிச் சொல்லும் போது நான் என்ன மாமா சொல்லப் போறேன்?” என்று சொல்லி விட்டு அவள் உள்ளே செல்ல வரதராஜன் மகனைப் பார்த்தார்.

“ஏன்யா கிட்ணா, நீ எதும் உன் மனசுக்குள்ள  நமக்கு வருமானம் வரலையேன்னு வருத்தப் படுறியா?”

“இல்லைப்பா, எனக்கு அந்த மாதிரி வருத்தமெல்லாம் இல்லை”

“ வேற என்ன?”

“இங்க டிஸ்பென்சரியை ஆரம்பிக்கும் போது என் மனசுல இருந்த நினைப்புக்கும், நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு அய்யா, நம்ம ஜனங்களுக்கு இன்னும் முழுசா என் மேல நம்பிக்கை வரலை.”

“சரிதான் போ…எப்பவுமே உள்ளதுதான்யா அது. நினைப்புங்கறது என்ன ? நம்மளோட ஆசை. நம்ம மனசுல ஆயிரம் ஆசை இருக்கும், ஆனா எதார்த்தம் எப்பவுமே ஆசையை விட்டுத் தள்ளித்தான்யா இருக்குது.   சுதந்திரம் வாங்கும் போது நம்ம  நாட்ல  எல்லார் மனசுலயும் இருந்த நினைப்பு  என்ன தெரியுமா உனக்கு? நாப்பத்தி அஞ்சுல நான் ரெண்டு வருஷம்  மதுர ஜெயில்ல இருந்தேன். அப்ப என் கூட  இருந்த கதர் சட்டைக்காரங்க எல்லாருக்கும் விடுதலை கிடைச்சதுமே நாடு அப்படி வளரணும். இப்படி வளரணும்னு ஆசை இருந்துச்சு.  ஆனா நடைமுறை அப்படி இல்லை.”

“என்ன சொல்றீங்க அய்யா? நாம வளரலையா?”

“வளர்ந்திருக்கோம்யா. டேம் கட்டிருக்கோம் , தொழில் வளந்திருக்கு. பள்ளிக்கூடங்க வந்திருக்கு.. இல்லைங்கலை. ஆனா ஜனங்க மனசுல அன்னைக்கு இருந்த நியாயமும், நேர்மையும் குறைஞ்சு போச்சே. அது எவ்வளவு பெரிய ஏமாத்தம்? வசதி வாய்ப்பு பெருகறது மட்டுமா வளர்ச்சி?. பொருள் மட்டும் வளந்தாப் போதுமா? மனுசன் வளரணுமில்லை. அவன் மனசுல தர்ம சிந்தனை வளரணுமில்லை?  அதவும் வளந்தாத்தானே நாடு நல்லா இருக்கும்? ஆனா சிந்தனை மலிவாப் போச்சே சனங்க கிட்ட?”

மாயக்கிருஷ்ணன் அப்பாவையே பார்த்தார்.  அப்பா காந்தியின் பக்தர். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.  காமராஜரின்  தொண்டர்.. மனித மாண்புகள் பற்றிய சிந்தனை  எப்போதுமே அவரிடம் உண்டு. இப்போது மனிதர்களிடத்தில் அவை குறைந்து வருவதாக அடிக்கடி வருத்தப் படுவார்..

“அப்படியா சொல்றீங்க அய்யா?”

கொஞ்சம் யோசித்து விட்டு வரதராஜன் சொன்னார்,” ஆமா, வேற எங்கயும் போக வேணாம்.. உன் சம்சாரத்தையே பாரு. அதுக்கு என்ன குறை? காசு, பணத்துக்கு இந்தக் குடும்பத்துல கொறையே இல்லை. ஆனா நீ வைத்தியத்துல சம்பாரிக்கலையேன்னு மனசுல ஒரு நினைப்பு இருக்கில்லையா? இதுதான் மலிவான சிந்தனை.. இந்த மாதிரிதான் பல பேரு இருக்காங்க”

“ இருக்காங்க அய்யா, ஆனா உங்களை மாதிரி மனுசங்களும் இருக்கீங்கள்ல?”

அவர் ஒரு வினாடி யோசித்தார். “ ம்….இருக்கோம். எத்தனை பேர் இருக்கோம்? இன்னும் எத்தனை நாள் இருப்போம்? அதுக்கப்புறம்?”

மாயக்கிருஷ்ணனுக்கு இதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

“சரி கிட்ணா… நான் போய் படுக்கறேன்.”

அவர் எழ முயல மாயக்கிருஷ்ணன் அப்பாவின் கை பற்றி அவர் எழுந்திருக்க உதவினார்…எழுந்த வரதராஜன் மெதுவாக தன் அறையை நோக்கி நடந்தார்.

 

ராமலிங்கம் அமைதியாக சாப்பிட்டான். தெய்வானை சூடாகக் களி கிண்டி கருவாட்டுக் குழம்பு வைத்திருந்தாள்.

“ஏது கருவாடு?”

“ தங்கச்சி வீட்டுக்குப் போனேன்ல…அவ குடுத்து விட்டா”

“அப்படியா…கருவாடு நல்லா பதமா இருக்கு”

“ஏங்க இன்னைக்கு ஒரு சங்கதி நடந்துச்சு தெரியுமா?’

தெய்வானையில் குரலில் ஒரு ஆர்வமும் , லேசான பரபரப்பும் இருந்தது. ராமலிங்கம் சாப்பிடுவதை நிறுத்தினான்.

“என்னா சங்கதி?”

“காலையில நீங்க போன பிறகு ஒரு புள்ளை வந்துச்சு. பசிக்குதுன்னு சொல்லுச்சு….”

“பிச்சைக்காரியா?”

“ம்ஹும்…அவ பிச்சைக்காரி இல்லைங்க. பசிக்குதுன்னு சொன்னதும் ரெண்டு உருண்டை களியை வைச்சேன் . தின்னுட்டு எலைய எடுக்காம பெரிய இவ மாதிரி போனாளா? கோவமா வைஞ்சேன்…உடனே அவ கையில இருந்து என்னத்தையோ எறிஞ்சா….”

“ம்?”

“ அவ எறிஞ்சது என்னா தெரியுமா?”

“என்னா?”

தெய்வானை எழுந்து போய் மாடாக் குழியில் வைத்திருந்த அரசிலையை எடுத்து வந்து நீட்டினாள்.

“இங்க பாருங்க…”

ராமலிங்கம் அந்த அரசிலையை வாங்கிப் பார்த்தான்.

“இது பொம்பளைப் புள்ளை பொறந்தா அதுக்கு போட்டு விடுறது. அரைமுடினு சொல்லுவாங்க”

“தெரியும்டி, அரைமுடி தெரியாதா எனக்கு?”

“இதைப் பாத்ததில இருந்து எனக்கு ஒரு நினைப்பாவே இருக்குங்க”

 

“ என்ன நினைப்பு?”

“சாமி குறி காமிச்சு இருக்குங்க…நமக்கு ஒரு புள்ளை வரப் போகுதுன்னு நினைக்கிறேன்”

ராமலிங்கம் குழப்பமாப் பார்த்தான்.

“ஆமாங்க…”

“நீ வேற என்னத்தையாவது சொல்லிக்கிட்டு….வந்தவ யாரோ என்னமோ?’

“ அந்தப் புள்ளை உடம்புல  ஒரு மாதிரி அங்கங்க வெள்ளை வெள்ளையா இருந்துச்சு. மூஞ்சில கூட கண்ணு கிட்ட…..”

ராமலிங்கம்  முகம் மாறியது,” அந்தப் புள்ளைக்கு என்ன வயசு இருக்கும்?”

“இருபது வயசுக்கு மேல இருக்கும்.. வயசுப் புள்ளைதாங்க”

“ஏய் அந்தப் புள்ளையை இன்னைக்கு நானும் பாத்தேன்”

“என்னது ?”

ராமலிங்கம் அவள் கண்மாயில் குதித்ததில் இருந்து, ஆஸ்பத்திரியில் இருந்து ஓடி மறைந்தது வரை சொல்லி முடிக்க தெய்வானை வியப்புடன் கேட்டாள்.

“எதுக்குங்க  தண்ணியில குதிச்சு சாகப் பாத்தா?”

“தெரியலை. அதான் எதும் சொல்லாம ஓடிப் போயிட்டாளே?”

“ ம். நான் கூட சாமிதான் ஏதோ குறி காமிக்குதுன்னு நினைச்சேன்.”

ராமலிங்கம் கொஞ்ச நேரத்துக்குப் பின் சொன்னான்.” நீ சொல்றதைப் பாத்தா  எதோ கிறுக்கச்சி மாதிரித் தெரியுது.”

“துணிமணி எல்லாம் நல்லாத்தேன் உடுத்தி இருந்தா. பேரைக் கேட்டப்ப ராணின்னு சொன்னாளே. கிறுக்கெல்லாம் இல்லை அவளுக்கு”

“ஆமா. அவ பேரு ராணிதான்”

“உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

“ கையில பச்சை குத்தி இருந்தா”

ராமலிங்கம் அந்த அரசிலையைப் பார்த்தான். “ வெள்ளி டி இது. பத்திரமா வை. எப்பயாச்சும் செலவுக்கு இல்லைன்னா வித்துக்கிரலாம்.”

“ விக்கல்லாம் கூடாது . இப்பவும் சொல்றேன். இது என்னமோ சாமி காமிச்ச அறிகுறிதான். என் மனசுல பட்டுக்கிட்டே இருக்கு”

கச் கச் கச் என்று அப்போது பல்லி கத்த…..

“பாத்திங்களா சயனஞ் சொல்லிருச்சு”

“ ஏய் . அது ஒரு நாளைக்கு பத்து தடவை கத்திக்கிட்டுத்தான்டி கெடக்கு”

படுக்கையை விரித்து படுத்து கண்ணை மூடி இருந்த ராமலிங்கத்தின் உடலை தெய்வானையின் கை பாம்பு போல் சுற்றியது. லேசாக கண் அசந்திருந்த அவன் விழிக்கும் முன்னமே அவள் அவன் முகத்தில் இட்ட முத்தங்களால் மூச்சு முட்டினான்.சுதாரித்து அவளை அவன் அணைக்கு முற்படும் முன் அவள் அவனை இறுக அணைத்துப் புரட்டினாள்.

இத்தனை வருட தாம்பத்தியத்தில் முதல் முறையாக அவன் தன் மனைவி ஏதோ ஒரு உந்தப் பட்ட வேட்கை கொண்டு தன்னுடன் கூடுவதை உணர்ந்தான். நாகத்தின் சீற்றம் போல் அவளது மூச்சு அவனை சூடேற்றியது.

பல்லி கச் கச் கச் என்று கத்தியது, கலவியினூடே இருவர் காதிலும் ஒலித்தது.

விலகிப் படுத்த ராமலிங்கம் கண்களை மூடினான். இன்னைக்கி எல்லாமே வேறயா இருக்கு. இவளே வேற மாதிரி இருக்கா..

தெய்வானை நிறைவுடன் கண்களை மூடினாள். அப்படி ஒரு சுகமான தூக்கம்.  அதில் ஒரு கனவு வந்தது. கனவில் அவள் மார்பில் ஒரு குழந்தை தன் பிஞ்சு உதடுகளால் பாலருந்தியபடி அவள் விலாவில் தன் பஞ்சுக் கரங்களால் உதைத்தது.

தெய்வானை தூக்கத்தில் சிரிப்பதை ராமலிங்கம் கவனித்தான்.

 

                                                                                                                                                                                                                      (தொடரும்)

 ( ஓவியங்கள்: கிரிஜா ஹரிஹரன்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கந்தல் ராணி 4 -பாஸ்கர்சக்தி
  2. பாஸ்கர் சக்தியின் ‘ கந்தல் ராணி’ - அத்தியாயம் 2
  3. தொடர்கதை: கந்தல் ராணி 1- பாஸ்கர்சக்தி