“நான் என்னைப் பற்றிச் சொல்கிறேன்.எனக்கு எப்படிப்பட்ட வாசகரின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கும்?எனில் நான் மாஸ்டர்கள் என்று சிலரை மனதில் வைத்திருக்கிறேன்.தாகூரை, ரூசோவை, எட்கார் அலன் போவை, எமிலி டிக்கின்சனை, அல்டஸ் ஹக்ஸ்லியை, ஆஸ்கார் வைல்டை, ,டால்ஸ்டாயை, தாஸ்தவஸ்கியை, புதுமைப் பித்தனை, சுராவை, ஆ மாதவனை, தி ஜாவை, அசோகமித்திரனை, சுகுமாரனை, ஜெயமோகனை வாசிக்கிற ஒரு வாசகர் என்னைப் பாராட்டினால் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். என்னை மட்டும் அல்லது எனது சமகால எழுத்தாளர்களை மட்டும் வாசிக்கிறவர்கள் பாராட்டும்போது பெரிய மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.”

– போகன் சங்கர்

வாசகத் தகுதி குறித்த ஜெயமோகனின் கட்டுரையை ஒட்டின போகனின் பேஸ்புக் பதிவு இது. இதில் எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டது அவர் வாசகர்களை தன்னையும் தன் சமகாலத்தவர்களையும் மட்டும் படிக்கிறவர்கள் (அரைகுறை வாசகர்கள்), முன்னோடிகளையும் படித்தவர்கள் (தேர்ந்த வாசகர்கள்) எனப் பிரிக்கிறார் என்பது. இதை அவர் செய்வதற்குப் பின்னால் ஒரு நம்பிக்கை (நான் அதை மூடநம்பிக்கை எனச் சொல்வேன்) உள்ளது. அது “இலக்கிய மொழி” பற்றியது. அதென்ன இலக்கிய மொழி?

 நீங்கள் முன்னோடிகளை வாசிக்கும் போது அவர்களின் பலவிதமான மொழிநடைகள், உருவகங்கள், கருத்து நிலைகள் உங்களுக்குப் பரிச்சயமாகின்றன. அடுத்து, நீங்கள் ஒரு சமகால எழுத்தாளரைப் படிக்கும் போது முன்னோடியின் மொழியுடன் இவரது மொழி கொண்டுள்ள தொடர்ச்சி அடையாளம் காணலாம். அங்கிருந்து இவர் எடுத்துக்கொண்டு நிகழ்த்தியுள்ள தாவலை கவனிக்கலாம். இது உண்மை தான் – ஆய்வுப்புலத்தில் இதை literature survey என்பார்கள்; அதாவது நிறைய மேற்கோள் காட்டுவது; ஒரு கருத்து எங்கிருந்து வருகிறது, எப்படி முரண்படுகிறது என ஆய்வுக்கட்டுரையின் துவக்கத்திலேயே நிறுவுவது. – ஆனால் இதை வாசிப்பு மனநிலையாகக் கருதுவதுதான் மூடநம்பிக்கை.

வாசிப்பின் போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட முன்னோடியின் மொழியை அதன் வேறொரு நிறத்தில் அடையாளம் கண்டுகொண்டால் உங்களால் அதன் பிறகு நிம்மதியாய் வாசிக்க முடியாது. கண்ணனைப் படிக்கும் போதும், சு.ராவின் மாணாக்கர் தம்மைக் கருதிய எண்பதுகளின் பல எழுத்தாளர்களைப் படிக்கும் போதும் சு.ரா தாடியும் மீசையுமாய் குளோசப்பில் நம் முகத்தருகே வந்து பயமுறுத்துவார். இன்று சாருவின், ஜெ.மோவின் மொழியைப் பிரதியெடுப்போருக்கும் இதுவே நிகழ்கிறது. இது எழுத்தாளனிடத்து ஒரு வெறுப்பை ஏற்படுத்தும். தன்னை மறந்து வாசிக்க முடியாமல் பண்ணும். ஆனால் இதுவே உங்களுக்கு சு.ரா, ஜெ.மோ, சாரு என்பதெல்லாம் யாரென்றே தெரியவில்லை என்றால் பிரச்சனையே இல்லை. அந்த ஒரிஜினல் ஸ்டைல் இல்லாத கதையை நீங்கள் வெகுவாக ரசிக்கலாம்.

“எனக்கு என்னை ஒருவர் ரசிப்பதை விட கச்சிதமாக மதிப்பிடுவதே முக்கியம்” என நீங்கள் நினைப்பதானாலும் ஒரு பிரச்சனை உண்டு – நீங்கள் ஒரு இளம் எழுத்தாளனாக ஜெயமோகனின் ஒரு நாவலைப் பின்பற்றி அதைப் புதுவிதமாய் எழுதி அதை மற்றொரு நிலைக்கு உயர்த்தியிருந்தாலும் அது ஒரிஜினலாகாது. உ.தா., ஜெயமோகனின் புனைவுலகில் அவ்வப்போது சு.ராவின் “ஒரு புளிய மரத்தின் கதை” நாவலின் நிழலை கண்டடையும் போதெல்லாம் நான் விசனப்படுவேன். அது ஒரு எழுத்தாளனின் ரகசியம். அதை ஒரு வாசகன் கண்டடைவது ஒரு துன்பியல் சம்பவமாகும். அது ஜெயமோகன் மீதான என் ஈர்ப்பை குறைக்கிறது. சு.ராவின் புளியமரத்தை இவர் எவ்வளவு பெரிதாய் வளர்த்திருக்கிறார் எனத் தோன்றாது. ஆனால் அசோகமித்திரனிடம் இப்படியான ஒரு இலக்கிய மொழியை, தொடர்ச்சியை நீங்கள் தமிழில் அவரது முன்னோடிகளில் கண்டுபிடிக்க முடியாது; அவர் தன் ரகசியங்களை எங்கோ பாதுகாப்பாக புதைத்து வைத்திருக்கிறார்.

இந்த பிரச்சனை அதிகமாக கவிதையில் நிகழும் – ஒரு மரம் என்று வந்தாலே நமக்கு தேவதேவன், வானம்பாடிக் கவிஞர்கள், அங்கிருந்து தோரோ அல்லது பக்திக் கவிதை மரபு என மனம் செல்லும். குட்டி ரேவதியின் கவிதைகளை தேவதேவனைத் துண்டித்து விட்டு வாசிப்பது மிக மிக சிரமம். (ஆனால் அது சாத்தியமாகும்போதே நமக்கு வாசிப்பின்பம் கிடைக்கிறது.) ஆக, இப்படி வரிகளிடையே முன்னோடிகள் தலைகாட்டுவது வாசிப்புக்கு இடையூறாகும் – போகனைப் படிக்கும்போது கல்யாண்ஜியோ கலாப்ரியாவோ நினைவுக்கு வந்தால் “ஆஹா அந்த முன்னோடியை வரியை வைத்து எப்படி புதிதாக பின்னியிருக்கிறார்” என நினைப்பது மூளையை சொறிந்து விடுவது மட்டுமே. காதலியை உற்றுப் பார்த்து விட்டு “உன் அம்மாவின் சாயல் உனக்கு நிறையவே வந்திருக்கிறது, அதனால் தான் இந்த அழகு” என்றால் “நீ என்னை ரசிக்கிறாயா அல்லது என் அம்மாவை பற்றி நினைக்கிறாயா?” என அப்பெண்ணுக்கு எரிச்சல் வரும். “நீ யாரைப் போன்றும் இல்லை, நீ யாராகவும் இல்லை, அதனாலே நீ அனைத்தாகவும் இருக்கிறாய்” என சொல்வதே இதயபூர்வமான பொய்கலக்காத காதல் லயிப்பு. நல்ல வாசிப்பிலும் அதுவே நடக்க வேண்டும். மாறாக விக்கிபீடியா பதிவில் வரும் ஹைப்பர்லிங்கைப் போல ஒவ்வொரு முன்னோடியாக வந்து விழக் கூடாது.

“டான் க்விக்ஸாட்டில்” போல முன்னோடிகளை, சமகாலத்தவர்களை பகடி செய்யும் நோக்கி எழுதப்படும் படைப்புகளுக்கு மட்டுமே போகன் சொல்லியிருப்பது பொருந்தும் – யாரைக் கலாய்க்கிறார்கள் எனப் புரியாவிட்டால் ஜோக்கே இல்லையே. தமிழில் அப்படி வெகுகுறைவாகவே எழுதப்படுகின்றன என்பதால் அந்த பிரச்சனையும் இல்லை (கவிதையில் இசை முயல்கிறார் என்றாலும்).

இப்படி ஒவ்வொரு படைப்பும் ஒரு சரம் சரமான சங்கிலித்தொடருடன் பிணைக்கப்பட்டுள்ளது எனும் நம்பிக்கை பழமையானது – ஆங்கில விமர்சன மரபில் இதை liberal humanism என்பார்கள். இதன் பிதாமகரான ஹெரால்ட் ப்ளூம் குறித்து எனக்கும் போகனுக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து உள்ளது. ஆனால் இந்த யூதர் தான் இருபதாம் நூற்றாண்டில் இலக்கியப் பாற்கடலில் இந்த முன்னோடி வரிசை எனும் விடத்தைக் கடைந்து எடுத்தவர். நீங்கள் முன்னோடிகளை வாசித்து அவர்களின் மொழியின் அடிப்படையில் அவர்களின் சுவடை ஒட்டி எழுத வந்தவர்களை அடையாளம் கண்டு ஏற்க வேண்டும் என ப்ளூமின் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் நம்பினர். பின்னமைப்பியல் தோன்றி தன்னை நிறுவிக்கொண்ட காலத்தில் ஒரு பிரதியின் அர்தத்தத்தைக் கடந்து செல்வதே வாசிப்பு எனப் புரிய வர ப்ளூமின் மாபியா கும்பல் “என்கவுண்டர்” செய்யப்பட்டு ஒழிந்தது; ஆனாலும் ப்ளூமின் ஆவி நமக்குள் இப்போது உலவியபடியே தான் இருக்கிறது. இப்போது போகனின் வடிவில் வந்து நிற்கிறது – அவருக்கு பேய்க்கதைகளில் ஆர்வம் அதிகம் என்பதால் கூட இருக்கலாம்.

“என்னுடைய நிழல்…” என ஒரு புதுப் படைப்பாளியின் ஒரு வரி துவங்கும் போது நகுலன் சட்டென நினைவுக்கு வருவதும், மனம் அங்கிருந்து தத்துவத்தில் ஜெ.கெவுக்கோ இலக்கியத்தில் டி.எஸ் எலியட் ஜேம்ஸ் ஜாய்ஸுக்கோ செல்வது இயல்பே. ஆனால் அந்த “நிழலில்” இருந்து இந்த “நிழல்” வரவில்லை. மாறாக அந்த நிழலைப் போன்றே இந்த நிழல் இருந்தாலும் அது இது அல்ல என தன்னை வாசிப்பினூடே அது நிறுவி விடுகிறது. உளவியலாளர் லக்கான் இதைப் பற்றி சொல்லும் போது தகப்பன் என்பவர் ஒருவர் அல்ல என்கிறார். Father என பெரிய எழுத்தில் அவர் தகப்பன் உருவகத்தைக் குறிக்கிறார். வயதில் மூத்தோர், மாமா, சித்தப்பா, மூத்த நண்பர்கள், ஆசிரியர் போன்றோர் பின்னாட்களில் ஒரு குழந்தையான நமக்கு அறிமுகமாகும் போது அவர்களை அப்பாவின் பிரதிபிங்களாகவும், எதிர்-பிம்பங்களாகவும் ஒரே சமயம் புரிந்து கொள்கிறோம். “இவர் என் அப்பாவைப் போன்றவர், ஆனால் அவரில்லை” என்பதே ஒருவரை ஒப்பிட்டு மறுத்து ஏற்றுக்கொள்ள செய்கிறது. மொழியில் இதை வைத்துப் பார்ப்பதானால், நகுலனின் நிழல் “நகுலனில்” ஆரம்பிப்பதில்லை. “நிழலின்” தகப்பனார் நகுலனுக்கு முன்பே நம் “மொழியில்” இருக்கிறார். நகுலன் நடுவே வந்தவர். அதாவது நகுலனின் மொழி “மொழிக்குள்” ஏற்கனவே இருக்கிறது. நகுலன் ஏற்கனவே “நகுலனுக்குள்” இருக்கிறார். நகுலனை நீங்கள் அறிந்திராவிடினும் நிழலை உருவகமாகக் கையாளும் ஒரு பிரதியை நீங்கள் ரசித்துணர முடியும். (ப்ளூமின் மாபியா கும்பலுக்கு கடைசி வரை இந்த நுணுக்கம் விளங்கவில்லை என்பது துரதிஷ்டம்.)

ஆனால் போகனின் இந்த பதற்றம் நியாயமானது தான் – ஒரு எழுத்தாளனிடத்து ஒரு வாசகன் வந்து கருத்துரைக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வது எனும் தடுமாற்றம் வருகிறது. நம்பவா வேண்டாமா? ஒரு வாசகன் நிஜமாகவே இருக்க்கிறானா எனும் உள்ளார்ந்த கவலையே இந்த பதற்றமாகிறது. இதுவே பின்னர் இந்த வாசகன் பொருட்படுத்தக்கத்தவன், மற்றவன் உதாசீனக்கத்தக்கவன் என நினைக்க வைக்கிறது. (இன்னொரு பக்கம், இந்த படிநிலையாக்கம் நமக்குப் பிடிக்காத வாசக எதிர்வினையை மறுத்து தள்ளி வைக்கவும் உதவுகிறது.)

இந்த அச்சம் ஆரம்பத்தில் ஏன் வருகிறது?

வாசிக்கும் போது இருக்கிற வாசகன் எனும் “அவன்” (அல்லது “நான்”) வாசித்து முடிக்கையில் இருப்பதில்லை எனும் புரிந்துணர்வு நாம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. இதுதான் பயத்தின் ஆதாரக் காரணம். ஏனெனில் வாசிப்பு நிலையற்றது, அதனால் வாசகனும் நிலையற்றவன் எனும் போது நான் பிரசுரித்ததும் நிலையற்றதாகிறது. என்னை நான் என் பிரசுரங்களுடன் அடையாளப்படுத்தும் போது நானும் நிலையற்றவனாகிறேன். இதனாலே வாசகன் தன்னிடம் பேசும் போது தெளிவாக தர்க்கபூர்வமாக கவனமாகப் பேச வேண்டும் என ஜெ.மோ விரும்புகிறார். இந்த அச்சம் அவரிடம் மட்டுமல்ல போகன் உள்ளிட்ட பல நல்ல எழுத்தாளர்களிடமும் உள்ளது. (அது என்னிடமும் உள்ளது.) நீங்கள் புத்தகக் கண்காட்சியில் வாசகர்களை சந்தித்ததாய் சொல்வது, வாசக சந்திப்புகளில் கையெழுத்திடுவது எல்லாம் கற்பனை மட்டுமே. அவர்கள் எல்லாரும் சாதாரண மனிதர்கள் – வாசகர் எனும் ஒரு இனம், ஒரு வஸ்து தனியாக உள்ளதா என? ஒரு மனைவியைப் போல தாலி கட்டிக்கொண்டிருக்கிறார்களா? விரிவாக இலக்கியத்தைப் படித்து கரைத்துக் குடித்தவருக்கு தனியாக முக அடையாளங்கள் எதாவது உண்டுமா? அவர் முன்னோடிகளின் பெயர்களை உதிர்ப்பதை, அவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை வைத்துதானே சொல்கிறீர்கள். தி.ஜாவை சிறப்பாக வாசிக்கும் ஒருவர் முற்றிலும் தவறாக ஏன் வாசிக்கக் கூடாது? அவர் ஏன் ஒரு மட்டமான வாசிப்பை நிகழ்த்தக் கூடாது?

இதே அச்சம் வாசகனுக்கும் உண்டு – ஒரு பிரதி நிலையாக இருக்க வேண்டும், அதை தன்னால் சரிவர நுகர முடிய வேண்டுமே, ஒரு சிறந்த கதையை தான் வாசிக்கும்போதும் அது சிறந்ததாக இருக்க வேண்டுமே எனும் நெருக்கடி ஏற்படுகிறது. அதனாலே அவன் ஜெயமோகன், எஸ்.ரா அல்லது ஒரு பேராசான் அளித்த பட்டியலை வைத்து, உதிர்த்த கருத்துக்களின் அடிப்படையின் அந்த பிரதியை வாசிக்கத் தொடங்குகிறான். பிடிக்கவில்லை என்றாலும் அது நல்ல படைப்பாகத்தான் இருக்க வேண்டும் என நம்புகிறான். இது அவனுக்கு தான் ஒரு வாசகனாக “நிரந்தரமானவன்” எனும் எண்ணத்தைக் கொடுக்கிறது; ஆறுதலளிக்கிறது. என்னை எடுத்துக் கொள்ளுங்கள் – நேற்று பஷீரின் “அனுராகத்திண்டே தினங்கள்” எனும் நாவலை மலையாளத்தில் ஒலிநூலாகக் கேட்டேன். நாவல் ரொம்ப பலவீனமாக இருப்பதாக, பஷீரின் வழக்கமான ஆழம் இல்லையே எனத் தோன்றியது; ஆனால் பஷீரின் நாவல் அப்படி ஏமாற்றமளிக்கும் என என்னால் நம்பவும் முடியவில்லை. இதுவரை நான் படித்துள்ள எல்லா பஷீர் படைப்புகளும் பட்டாசு தான். ஒருவேளை என் வாசிப்பு தவறோ, என் உள்மனம் திறந்து கொள்ளவில்லையோ, நான் சரியாக கவனிக்கவில்லையோ என குழம்பினேன். அடுத்து நான் மலையாள இலக்கியத்தில் நன்கு பரிச்சயமுள்ள ஒரு நண்பரிடம் இந்நாவலைப் பற்றி விசாரித்தேன். பஷீரின் அதிகம் பேசப்பட்ட நாவல் அல்ல இது என அவர் சொன்ன போது தான் நிம்மதி கிடைத்தது. ஆக, இவ்வளவு பேசுகிற எனக்கும் ஒரு வாசகனாக என் முன்னுள்ள பிரதி ஏற்கனவே இருக்கிற அதே பிரதி தானா எனும் அச்சம் உள்ளது.

இந்த அச்சமே வாசகன் எனும் மாயாவிக்கு ஒரு முகத்தை, மீசை, தாடியை, சாதியை, மதத்தை, கொள்கைப் பின்புலத்தை அளித்து தூலமான ஒருவனாக உருவாக்க செய்கிறது. அடுத்து அவனுக்கு ஒரு மொழியையும் கற்றுக்கொடுத்து “இப்படித்தான் நீ பேச வேண்டும், அப்போதுதான் ஒரு வாசகனாக உன்னைப் பொருட்படுத்துவேன்” என மிரட்ட செய்கிறது.

இந்த அச்சம் நானும் நீங்களும் சாகும் வரைத் தொடரும். தீர்விருக்கிறதா? ம்ஹும், எனக்குத் தெரிந்து இல்லை.