அன்று மாலையில் சரியான மழை பெய்து கொண்டிருந்தது. நான் வீட்டு முற்றத்தில் அமர்ந்து வாய் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த செம்பருத்திச் செடியின் உச்சியில் பூத்திருந்த பூவின்மேல் பட்டு மழைத்துளிகள் என் காதோரத்தில் தெறித்துக் கொண்டிருந்ததை நான் ரசிக்கவில்லை. கடுமையான பசியில் கன்னிப்பெண்ணைக் கூட ரசிக்க முடியாது எனும்போது இந்த எழவெடுத்த மழைத்துளியை ரசிக்க நான் ஒன்றும் முட்டாளில்லை. அம்மா மாமா வீட்டுக்குப் போயிருந்தாள். வீட்டில் யாருமே இல்லை. மார்சியாவுக்கு ஃபோன் செய்து கொஞ்சம் சாப்பாடு கொண்டு வந்து தர முடியுமா ? என்று கேட்க அவளும் சம்மதித்து விட்டிருந்தாள். அவளுக்காகத்தான் காத்திருந்தேன்.

எதிர்வீட்டு மாடியில் இரண்டு குழந்தைகள் மழையில் குளிக்க கூடவே அவர்களின் அம்மா ஜூலி ஆண்ட்டியும் நனைந்து கொண்டிருந்தாள். நானும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் மழையில் குளிக்க ஆசைதான். ஆனால் தீனம் வந்து விடக்கூடாதே என்ற அச்சத்தில் நகரவில்லை. அந்த ஆண்ட்டி என்னையே கவனித்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் நான் பார்த்தேன். ஈர உடையில் அவள் நின்றபோது எனக்கு ஒருமாதிரியாக இருந்தது. அப்போதுதான் எனக்கு அந்த விஷயம் தோன்றியது. ‘எப்படி இத்தனை பெரிய கூந்தல் கற்றையை வைத்துக் கொண்டு நனைகிறாள்? சளி பிடிக்காதா ?’

மேலிருந்து அவள் என்னை சைகையால் அழைத்தாள். அவளிடம் கேட்கலாமா என்று கூட யோசனை வந்தது. ஆனால் தப்பாக நினைத்துவிடுவாளோ என்று பேசாமல் இருந்துவிட்டேன். ஆனால் ஏன் அவள் என்னை அழைக்க வேண்டும் ? அதுவும் இந்த கொட்டும் மழையில் …. நான் அவளிடம் சைகையில் ‘என்ன’? என்பது போலக் கேட்டேன். அவள் கண்களால் மழையைக் காட்டி, ‘குளிக்க வறியா ?’ என்பது போல கேட்டாள். நான் ‘வரவில்லை’ என்பது போல சொல்லிவிட்டேன்.

‘ஓம்மாப்ளைய குளிக்க கூப்புட வேண்டியதானே? அந்த எருமமாட்டுப் பயலுக்கு என்ன கொள்ளையோ? நானே இப்பத்தான் சிக்குன் குனியா வந்து குறுக்கு நிமுத்த முடியாம செத்து சீரழிஞ்சி கெடக்கேன் ! மழைல நனையணுமாமே செவத்து மூதேவிக்கி !’ என்று மனதுக்குள் சலிப்பு வந்தது.

அன்றும் ஒருநாள் இப்படித்தான். அம்மா கொஞ்சம் பால் கொழுக்கட்டை தந்து எதிர்வீட்டில் தரச் சொல்லியிருந்தாள். நானும் அவளின் வீட்டுக்குப் போய் அவளது மாமியாரிடம் கொடுத்து விட்டு  வெளியே வர கையில் எதையோ கொண்டு வந்து வீட்டுக்குள் நுழைந்த அவள்மீது எதிர்பாராமல் மோதியதில் நான் கீழே விழ ஒரு பெரிய பூ ஜாடியும் என் கைபட்டு கீழே விழுந்து உடையப் பார்த்தது. நல்ல வேளை  உடையவில்லை. ஆண்ட்டி சிரித்துக் கொண்டே கீழே குனிந்து பிளாஸ்டிக் பூக்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அவைகளைப் பார்த்தேன். எனக்கு வியப்பு தாங்காமல் கேட்டே விட்டேன்.

எவ்ளோ பெருசு ஆண்ட்டி ? செம்மயா இருக்கு ! எங்க கெடந்து ?

வீட்டுக்குப் பொறத்த நிக்கில்லா மரம்…. அதுல இருந்து பறிச்சிட்டு வாரேன் ! நீ வேணா ஒண்ணு கொண்டு போறியா ?

இல்ல பரவால்ல !

இந்தா பிடி! என்று சொல்லி நான் மோதும்போது அவள் கைகளில் வைத்திருந்து நான் தட்டிவிட்டதில் தரையில் உருண்ட மூன்று பப்பாளிப் பழங்களில் ஒன்றை என்னுடைய கைகளில் திணித்து விட்டாள். அந்த பப்பாளி மிகவும் சுவையாக இருந்தது. ஆனால் தந்த கையோடு பக்கத்து வீட்டு சீதாவிடம் எனக்குப் பப்பாளி தந்த காரியத்தை சொல்லியிருக்கிறாள்.

சீதாலெட்சுமி எனக்கு கல்லூரியில் வகுப்புத் தோழி. சீதா வீட்டிலிருந்து பார்த்தால் அந்த பப்பாளி மரங்கள் தெரியும். மரத்தில் கிடந்த பழங்கள் காணாதது குறித்து ஜூலி ஆண்ட்டியிடம் கேட்கவே அவளும் பப்பாளியை எனக்குத் தந்ததைச் சொல்ல பழப்பரிமாற்றம் குறித்த செய்தி வெளியில் கசிந்திருக்கிறது.

இந்த சீதாலெக்ஷ்மியும் என் வகுப்பில் உள்ள அனைவரிடமும் சங்கூதியதில் பாதிப்பேர் என்னை ‘அலவரையன்’ என்றும் பாதி பேர் என்னைக் ‘கள்ளகோழி’ என்றும், மிச்சம் பேர் என்னைத் தீனிப் பண்டாரம், வயித்துப் பக்காளி என்று சொல்லி பல்லை இளித்திருக்கிறார்கள். அந்தப் பப்பாளியைத் தின்றிருக்கக் கூடாது.

லேய் பப்பாளித் தா…ளி ! என்று ஒரு விளி எங்கிருந்தோ கேட்டதுமுதல் நான் பப்பாளியும் தின்பதில்லை, அந்த ஆண்டியிடமும் சகவாசம் வைப்பதில்லை. இன்று அந்த பெருச்சாளி என்னை மழையில் குளிக்க விளிக்கிறது. ‘எனக்க செருப்பு கூட அங்க வராதுட்டீ செவமே!’ என்று எண்ணிக் கொண்டேன்.

திடீரென மார்சியா என் பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்ததைக் கண்டு நான் திடுக்கிட்டுத் திரும்பினேன். அவளது கையில் ஒரு பை இருந்தது.

நீ எப்பம்ட்டீ வந்த ? எழவுல நாம்லா பயந்துட்டேன்…

எதப்பாத்து பயந்த ? அந்த எதுத்த வீட்டு குண்டம்ம குளிக்கத ஆன்னு வாயப் பொளந்து இளிச்சிக்கிட்டிருந்தல்லா ? அப்பத்தான் வந்தேன் ! இவ்ளோ பெரிய கேட்’ட தொறந்த சத்தம் கூடவா கேக்கலை ? உள்ள வா ! குறுக்குல சவுட்டுகேன்! போத்துக்குப் பொறந்தவனே !

வுடுட்டீ ! நா அந்த சின்னப் புள்ளையளு வெளையாண்டுல்லா… அதப்பாத்துக்கிட்டு இருந்தேன் !

நம்பிட்டேன் ! இந்தா புடி ! என்று அந்தப் பையைத் தந்தாள். அப்போதுதான் கவனித்தேன். அவள் நனைந்திருந்தாள்! அவளது காதின் பின்புறமுள்ள முடிகளில் இருந்து நீர் அழகாய்ச் சொட்டிக் கொண்டிருந்தது. நான் அவளை நெருங்கி நின்றேன். ஒரு சொட்டு நீர் அவளது புருவங்களில் நின்று கொண்டு தரையில் குதித்துதித் தற்கொலை செய்ய மனமில்லாமல் தொங்கிக் கொண்டிருந்தது. அவள் முகத்தில் ஒருவித அச்சம் கலந்த வெட்கம்.

“என்னிய என்னடா பண்ணப் போற ?”

நான் எதுவும் சொல்லாமல் மெல்ல நெருங்கினேன். அவள் விலகினாள். நான் அவளை என்னிடம் இழுத்து மெதுவாக ஜாக்கெட் பட்டனைக் கழற்றத் துவங்கினேன். அவளது கால்கள் நடுங்கியது. கண்கள் படபடத்தன. இருள் கவியத் துவங்கும் மாலை நேரம். வெளியில் அழகான மழை. பக்கத்து வீட்டிலிருந்து ரேடியோவில் ‘எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’ பாடல் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அவளது உடலில் யார்ட்லியின் மணம். அப்போது ஒரு இடிச்சத்தம் கேட்டதும் நடுங்கி என்னைக் கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.

ஜாக்கெட் என் கையோடு வந்தது. இரண்டடி தள்ளி நின்றாள். எனக்குப் பசி தாங்கவில்லை. நான் கீழே குனிந்து அந்த ஜிப்பைக் கழற்றினேன். உருண்டையாக இரண்டு பாத்திரங்கள் அந்தப் பையில் இருந்தது. நான் அவளிடம் சன்னமாகக் கேட்டேன்.

இன்னைக்கும் மறந்துட்டல்ல ?

ஆமா அவசரத்துல ….. என்று இழுத்தாள்.

பப்படம் இல்லாம நாஞ் சாப்புட மாட்டம்னு ஒனக்குத் தெரியாதாட்டீ ? கொம்மைக்கிட்ட சொல்லி ரெண்டண்ணம் பொரிச்சி கொண்டார என்ன மாச்சலோ ? இதுல என்னவெல்லாம் வச்சிருக்க ?

சோறும், மீன் கொழம்பும், கத்திரிக்கா பொரியலும்…

மீனு பொரிக்கலியா ?

அவள் பேசாமல் நின்றாள். நான் அந்த ஜாக்கெட்டை அவள் கையில் கொடுத்து, “இந்தா இதக் கொண்டு போயி பின்னால ரூமுல காயப் போடு ! அங்க துண்டு கிடக்கும் ! அதையெடுத்து தலையத் தொவத்திட்டு வா ! மண்டையில போட்டுரப் போவுது! பெரிய வாலாண்டினோ ரோசின்னு நெனப்பு ! வச்சிருக்கது மூணே முக்கா ரூவா ஸ்கூட்டி! அதுக்கு ஒரு ரைடிங் ஜாக்கெட்டு !”

“எனக்க ரெயின் கோட்ட ! ஸ்டாலின் எடுத்துட்டு போய்ட்டான் ! அதான் இதப் போட்டுகிட்டு வந்தேன் ! ஒனக்கு எப்பவுமே என்னைய கொற சொல்லலன்னா தூக்கமே வராத ?”

ங்கொண்ணங்காரனுக்கு இன்னேரத்துக்கு எங்க போக்கடி ! செவம் இந்த மழைக்காத்த எங்க போயிருக்கு ? செத்த பயல்!

எனக்குத் தெரியாது !

ஸ்டாலின் மார்சியாவின் அண்ணன். படிப்பு இன்ஜினியரிங். நான்கு வருடங்கள் கல்லூரிக்குப் போனதில் உடம்பிலுள்ள சிலபல கலோரிகள் எரிந்ததுதான் மிச்சம். சிலபசில் இல்லாத பாடங்களில் கூட அரியர் வைத்திருந்த அற்புதமான ஆத்துமா ! மச்சினன் இருந்தா மலையேறிப் பிழைக்கலாம் என்று சொல்லுவார்கள். ஆனால் அவனை வைத்துக் கொண்டு மயிரைக் கூட பிடுங்க முடியாது என்பது போலத்தான் நடந்து கொள்ளுவான். எதிரில் சிணுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்த மார்சியாவிடம்,

“சரி செவம் போவட்டும் விடு ! ஈரத்தோட நிக்காத ! போயி தலையக் காய வையி ! என்றவாறே நான் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடத் துவங்கினேன். என்னெதிரில் வந்து அமர்ந்தாள். அன்று என்னவோ அவள் அத்தனை அழகாய் இருந்தாள். அந்தத் தனிமை என்னவோ செய்தது. நான் அவளிடம்,

ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டல்ல ?

என்ன ?

வீட்டுல யாரும் இல்ல …..

அதுனால ?

ஒருவாய் காப்பி கூட ஒனக்கு தர முடியலையேன்னு….

ம்க்கும்…. பெரிய கவலை !

இன்று இவளிடம் எப்படியாவது கேட்டுவிட வேண்டும். ‘ஆனா என்ன நினைப்பாளோ தெரியலையே’ என்று மனம் தவித்தது. இதுதான் சரியான சமயம். அவள் ஜன்னல் வழியே வெளியில் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளது புருவம் அசைவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்று உள்ளுணர்வு சொல்ல நான் அவளிடம்,

மார்சியா !

என்னடா ?

ஒண்ணு கேப்பேன் ! தப்பா எடுத்துக்கிட மாட்டல்லா ?

என்னே வேணும் சொல்லு !

அது வந்து …..

கேளு !

நாமதாங் கலியாணம் பண்ணிக்கப் போறோம்லா ?

ஆமா ! அதுக்குதான் இன்னும் நாளு கெடக்கே ?

அந்த உரிமைலாதாங் கேக்கம்டே !

என்னன்னு சொல்லு !

இல்ல….. இதுவரைக்கும் நா யாருக்கிட்டயுங் கேட்டதேயில்ல…

அதாங் கேளுன்னு சொல்லிட்டம்லா ! என்று டென்ஷன் ஆகிவிட்டாள். நான் படாரென,

ஒரு மூவாயர் ரூவா வேணும் ! காலேஜி ஃபீசு கெட்ட அப்பா இருவதாயிரந் தந்தாரு ! அதுல ஒரு மூவாயிரம் மட்டும் தொலைஞ்சி போச்சி !

ஒனக்கு லவ் பண்ணத்தாந் தெரியாதுன்னு நெனச்சேன் ! ஒரு பொய்ய கூடவா ஒழுங்கா சொல்லத் தெரியாது ? அதெப்புடி இருவதாயிரத்துல மூணாயிரம் மாத்திரம் தொலஞ்சி போச்சி ? பர்சுல இருந்து துள்ளி சாடிட்டா ?

ஹிஹிஹி ! அது வந்து ….

அந்த நாய்கள் கூட பாருல போயி பீரு குடிச்சிருப்ப அப்டித்தான ?

ஆமா மக்கா ! பைசா தருவியாட்டி ?

தந்து தொலையிறேன் ! வாய மூடிட்டு சாப்புடு ! நாசில அடிச்சிராம !

இந்தக் காதலும் பப்படமும் ஒன்றுதான். பொறித்து எடுத்தவுடன் முறுமுறு’வென இருக்கும். நேரமாக ஆக நமத்துப் போகும். காதலன்களும், காதலிகளும் பப்பாளியும் ஒன்றுதான். வெளியில் இருந்து பார்க்க பெருசாகத் தெரியும். வெட்டிவிட்டால் உடனே தின்றுவிட வேண்டும். இல்லையென்றால் ஈக்கள் மொய்த்து பாழாக்கி விடும். எனக்கு மனம் நிம்மதி அடைந்து அந்த உணவை சிலாகிக்கத் துவங்கினேன்.

“ஒங்கம்ம வைக்கிற மீன் கொளம்பே தனி ருசிதாங் கேட்டியாம்மாளு ! என்னா கைப்பக்குவம் என்னடே ? இந்தக் கத்திரிக்காயெல்லாம் வானத்துல வெளஞ்சிருக்குமோ என்னவோ ? கிண்ணம் மாதிரி தொண்டையில எறங்குகு ! என்ன…. ரெண்டு பப்படம் இருந்துருந்தா இன்னூ ருசியா இருந்துருக்கும் !

பைசா தாரேம்னு சொல்லியாச்சில்லா ! மரியாதையா சாப்புடு ! இருட்டுகதுக்குள்ள நா வீட்டுக்குப் போவணும் ! அம்மா தேடுவா ! உன்கூட உக்காந்துருக்கதுக்கு நா பேசாம வீட்லயே இருந்துருக்கலாம் !

எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது, “லேய் பப்படத் தாயோளி !”

இந்த மனசாட்சிதான் எத்தனை பெரிய மானங்கெட்ட பன்னாடை ? அதன் பின்னர் நான் பப்படம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். மார்சியா கிளம்பினாள். அவளை வழியனுப்ப வாசலுக்கு வந்தேன். மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. அவளுக்குக் கொடுத்து விடாத முத்தமொன்று அந்தத் தெரு வீதியின் மழை நீரில் மிதந்து போய்க் கொண்டிருந்தது. தூரத்தில் நனைந்து கொண்டே மார்சியா என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு மறைந்து போனாள். ஜூலி ஆண்ட்டி என் எதிரில் நின்று கொண்டிருந்தாள். சோகக் கதைகளும், காதல் கதைகளும் என்றுமே நிறைவடைவதில்லை என்பதுதான் ஆகப்பெரிய சோகக்கதை.

000