நலம்தானே?
மிக நீண்ட வரிசையில் நின்று பெற்றதை
ஒரே டம்ளரில்
இருவரும் பங்கிட்டுக் குடித்திருக்கிறோம்
கண்டும் காணாத இரவொன்றில்
நமக்கிடையே திறந்து வைக்கப்பட்டிருந்த
பீஃப் வருவலை பங்கிட்டு உரையாடிருக்கிறோம்
மனங்கசந்து தளும்பி தளும்பி
ஒரே பாடலை திரும்பத் திரும்ப கேட்டுருக்கிறோம்
ஊர் பழகிய ஊரடங்கிற்கு
சாவு பழகிடும் இயல்பில்
‘நலம்தானே?’
என்றனுப்பும் உன் குறுஞ்செய்திக்கு
முடங்கிக் கிடக்கும் சொந்த உடலில் இருந்து
நலம்..தான்… என்று சொல்வது
எவ்வளவு களைப்பாக இருக்கிறது
*****
சானிடைஸ் கொரோனா தேவி
நமக்கிடையே பேச
மணிக்கணக்கில் சொற்கள் இருக்கிறது
நமக்கிடையே கண்கள் கூச
மிகவும் மங்கலாக இரவு இருக்கிறது
ஆனாலும்
‘மிஸ் யூ’ என்பதன் கொடுமைகள்
எந்தத் தளர்வுகளையும் கொண்டிருப்பதில்லை
பற்றி எரியும் இக்கொரோனா கோடைக்கு
சமாதான தனல் பற்றிக் கொண்டிருப்பதில்லை
கண்ணுக்கெட்டிய தூரங்களில்
அன்பின் விசும்பலோடு காத்திருக்கிறேன்
நினைவின் பறவைகளை
உன் தனிமையின் பிசாசுகளோடு பறக்கவிடுகிறேன்
கூடுமானவரை
வெறும் லெமன் ஜூஸ்சோடு முடியும் என் மாலைகள்
ஊரடங்கை சமாளிக்க
சலித்துவிடாத பியரோடு
உற்சாகத்தின் நிழலில்
மாஸ்க்கோடு காத்திருக்கிறேன்
உருமாறிய கொரோனாவிற்கும்
உன் மெசேஜ் பொங்கி வழியும் வாட்ஸ்அப்-பிற்கும்
கொரோனா தேவியின் அருளோடு
சானிடைஸ் செய்தபடி
****
நண்பா,
நம் பிசகிய இரவுகள்
இவ்வளவு ஊர்களுக்கிடையே
இவ்வளவு மனிதர்களுக்கிடையே
மிகச்சரியாக சிக்கிவிடுகிறது.
என் வீட்டு மொட்டைமாடி
குன்றின் மேல் தனித்து நிற்கிறேன்.
நண்பா,
துன்பங்கள் மனமழிந்த இரவுகளில்
நட்சத்திரங்களை நறுமணமூட்ட
ஒரு பீஃப் பெப்பர் ப்ரை போதும்
ஈச்சனாரியோ,
மலுமிச்சம்பட்டியோ,
ராமகிருஷ்ணாவோ,
கணபதியோ,
வழக்கமாக செல்லும் ஞானக்கூடம்
ஏதாவது ஒன்றிலிருந்து
ஒரு போத்தல் பிடித்து வா…
நண்பா,
உலகின் மிகச்சிறந்த ஞானக்கூடம்
நமக்கு இவைதானே?
இப்-போதைக்கு
என்னிடம் கொஞ்சம் இசைஞானி இருக்கிறார்
நண்பா, உன்னிடம் காலிக் கோப்பைகள்
ஏதேனும் உள்ளதா?
**********