னக்குத் தெரியும்

என் மார்கூட்டை

ஆவலாய் தடவும்

உங்கள் விழிகள்

என் கண்களை

நோக்கும் நொடியில்

ஏளனம் அப்பியிருக்கும்

அந்த பனிக்கட்டி

பார்வையின் பின்பொதிந்த

அர்த்தம்

எனக்கு தெரியும்

 

செழிப்பறியாத

முலைகள் எனது

அளவெடுக்க ஆடைத்துளைக்கும்

அவ்விழிகளுக்கு

அரிந்தளிக்க சதையில்லை

என்அடர்சிவப்பு கச்சைக்குள்

ஆனாலும் ஏனோ

உன் ஏமாற்றங்கள்

என்னில் கர்வமெற்றுகின்றன

சிறுகுஞ்சொன்றை

தூக்க காத்திருக்கும் வல்லூறாய்

என் சிறிய தனங்களிடம்

நீ தோற்கும்

நொடிக்காய் காத்திருக்கிறேன்

அந்த நிமிடங்களில்

என் சிரசு

மகுடம் சுமக்கிறது

 

நிறை அளக்கும்

பார்வை பாலற்றது

எனநான் அறிவேன்

கனவிட்ட ஒப்பீட்டீல்

தன் சதைகோளம் பெரிதென

உணர்ந்தபின் சொரிந்த

பெருமூச்சொன்றால்

என் காம்புகளில்

தீ வைத்து

நகர்கிறாள் ஒருத்தி

சகியே கேள்…

உணர்ச்சிகள்

அளவிற்குள் சிறைப்படாதவை

 

இன்னும் எத்தனை

கேள்விகள் இருக்கின்றன?

வயசுக்கு வந்துட்டியா ?

டாக்டரை பார்க்கலாமா?

உனக்கெதுக்கு துப்பட்டா?

ஊடுறுவக் காத்திருக்கும்

அத்தனை அம்பிடமிருந்தும்

அகம் காக்கும் கேடயமாய்

அந்த துப்பட்டாவை

நேர்த்தியாய் போர்த்தியிருக்கிறேன்

அம்புகள் உடையும்

ஒலி கேட்கிறதா?

இனியேனும்

அம்பாறாதூணிகளை

சற்று இறக்கி வையுங்கள்…

 

என் மரபணு தாங்கும்

பெண்மையின் தடம்

தனங்களின் அளவுகளில்

மாறிவிடாது

உள்ளிருக்கும் சுரப்பிகள்

ஒருபோதும் கைவிடாது

மூளையின் அடுக்குகளில்

பதிந்த ஆதிகட்டளையது

சதையின் திரட்சியில்

சங்கதிகள் ஏதுமில்லை

பெண்மை உணர்ந்திட

கனம் தேவையில்லை

பாரமேறாத மென்முலைகள்

அகத்தாலும் புறத்தாலும்

என் கனத்தை கூட்டுவதில்லை

எப்போதும்!