எழுது நிலம்

கவிதையிலிருந்து மௌனத்திற்கு திரும்பின‌ சொற்கள்

ஆயிரம் அர்த்த பேதம் உடைய  வாக்கியங்கள்

எங்கே பொருந்துவதெனத் தள்ளாட

ஒரு சிறகசைப்பின் இலகுவான

ஒரு சொல்லுக்காக

எல்லையற்று காத்திருந்தன எழுது நிலங்கள்

மௌனத்தின் சொல்லசையா கணத்தில்

என்ன செய்ய

எதைப் பாட

எதை எதை முணுக்க

என் பிரிய உடலே

என்னை சொல்லிலிருந்தும்

மௌனத்திலிருந்தும் காத்தருள்..

 

ஜன்னலை திறந்து மூடுவதற்குள்.

சொல்லாமல் சட்டேன யாரோ குதித்தது போல

பெய்யத் துவங்கியிருந்தது மழை

இரண்டு நாட்களாக

அந்தக் குயில் வரவில்லை

ஞாபகச் சாயையில்

விடாது கத்துகிறது அது

ஜன்னலை திறந்து மூடுவதற்குள்

சொல்லாமல் வெளியேறியது மழை

 

சட்டென நிறுத்திக்கொண்ட குயில்

சட்டென தொடங்கி ஓய்ந்த மழை

நானோர் தூய வெறுமைக்காக‌

ரொம்ப ஏங்கிப்போனேன்

நினைக்க நினைக்க பெருகும்‌

ஞாபத்திலிருந்தும்

பிரிவிலிருந்தும் பிழைத்துக்கிடக்க

நானோர் தூய வெறுமைக்காக‌

ரொம்ப ஏங்கிப்போனேன்