இறந்த பிறகு 

உன்னைச் சந்திக்காமல்

இருந்திருந்தால்

இந்தக் கண்ணீரை நான் சந்தித்திருக்க நேர்ந்திருக்காது

போதும் போதுமென சமாதானங்கள்

சொல்லிய பின்னும்

கேட்பதாக இல்லை ஞாபக உயிர்

வெட்டி எடுக்கப்பட்ட

உன்னொரு சதைத்துண்டம்

என் மேசையில் கிடக்கிறது

என் மேசைகளிலிருந்து

அழுகி வடிகின்றன மாம்ச மிச்சங்கள்

 

விரும்பி நிகழ்ந்த விலகல்கள்

பாதி சம்மதத்துடன் விலகிக்கொள்ளப்பட்ட‌ கைகள்

துளியும் மனமில்லாமல்

அரிந்தெடுத்த ஞாபக மாமிசங்கள்

போகிற வழியில்

தூக்கியெறிய

நிறுத்தங்களில்லை

ஒரு மழைநாளில்

என் மேசை

ஒழுங்குபடுத்தப்படது

ஒரு புதிய ரோஜா பதியனை

ஒரு பிளாஸ்டிக் தொட்டியில்

நட்டு  மேசையில் வைத்தேன்

ஜன்னல் திரைகளை விலக்க முடியாததால்

அவை பூப்பதையோ துளிர்ப்பதையை நிகழ்த்தவில்லை

அவை என் உடல்போல

உடல் சுமந்த மனம்போல

வாடிக் கொண்டிருந்தன

 

என் மேசையின்

இடபுற கால் மக்கி வீழ்ந்துவிட்டது

சிதிலங்கள் தொகுக்கப்பட்டிருந்த

மேசை சிதிலமாகிக்கொண்டிருந்தது

வேர் அழுகியதுபோல

இந்த அறையும் அழுகத் தொடங்கியிருந்தது

கதவைத் திறக்க வேண்டும்

வெறியேற வேண்டும்

முடியாது

திறந்து திறந்து அடைந்த சூன்யங்களை

இன்னும் கணக்கெடுத்து முடியவில்லை

 

புறத்தே என்ன இருக்கிறது

பொருள் இருக்கிறது

உள்ளே பொருளின் மதிப்புணர்வு

புறமில்லாத பொருளில்லாத

மதிப்பில்லாத

ஒரு நாளை எதிர்கொண்டேன்

நானிறந்து இத்தனை நாளா ஆயிற்று

 

இரண்டு லூசு ரோஜாக்கள் 

என்னை

‘அவனொரு லூசு’ என்றவளுக்கு

நேற்று இரண்டு ரோஜாக்கள்

வாங்கிச் சென்றிருந்தேன்

எனை நேசிப்பவர்கள் கூட

அத்தனை உற்சாகமாய் என்னை வரவேற்றதில்லை

அவள் என்னை மிகவும்

கண்ணியமாகவே நடத்தினாள்

ஒரு நல்ல டீ கூட வாங்கித் தந்தாள்

நானெப்போதும்போல

எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டேன்

மனிதப் பழக்கம்

எப்போதும் எனக்கு புகை மூட்டம்தான்

 

அங்கிருந்து கிளம்பும்போது

கவிதை எழுதுவதை விட்டுவிட்டு

வேறு நல்ல தொழில் செய் என்றாள்

நான் ஆமாமும் இல்லாத

மறுக்கவும் செய்யாத ஒரு சைகையை‌ செய்து வைத்தேன்

அவள் என்னிடம்

உளமார இல்லையெனினும்

சற்று நேரம்

நான் கண்ணியமாக நடத்தப்பட்டதற்கு

நன்றி சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்

 

அந்த இரண்டு ரோஜாக்களுக்கு

லூசு ரோஜாக்கள் என்று

இன்னேரம் பெயர் வைத்திருப்பாள்

 

நாங்களிந்த கண்ணீரை எழுத வந்த ஆட்களில்லை

இந்தக் கண்ணீரை எழுத வந்த ஆள் நானில்லை

ஆனாலும்

கண்ணீர் சிந்தவைக்கப்படது

இந்தக் குருதிக்கறைகள் படிந்த

ஆடையை‌ சுமக்க வந்த ஆளில்லை நான்

எனினும் ரத்தக்கவுல்

மேலும் கூட்ட வைக்கப்பட்டது

இந்த அவமானங்களை

மூன்று வேளையும் உண்ண

வந்த ஆள் நானில்லை

ஆனாலும்

எனது கைகள் கொள்ளா அளவுக்கு

அது சேர்ந்துகொண்டே இருக்கிறது

இந்தக் கொடூரங்கள்

எங்கள் ஒப்புதல் இல்லாமல் நிகழ்ந்தன

எங்கள் பிரிவின் நிமித்தங்கள்

யார்யாராலோ முடிவு செய்யப்பட்டது

எங்கள் கால்கள் ஓடி ஓடி சோர்ந்துவிட்டன

இருப்பினும்

கசையொன்று

கணுக்கால் நரம்பு தெறிக்க அடித்து

ஓடு என்கிறது

நாங்கள் தனியாக இருக்க வந்தவர்களல்ல

ஆனால்

ஒரு சாதாரண கைகுளுக்கலுக்கு

இடையில் ஆயிரம் பேதங்கள்

வழி மறித்தன

 

நாங்களொரு

மதுக்குப்பியுடனும்

சின்னஞ்சிறிய உணவுகளுடனும்

இன்னொரு சிறிய உடலுடனும்

வந்துபோகவே வந்தோம்

ஆனால் எங்களுக்கு

இத்தக் கண்ணீரை துடைக்கவே

நேரம் போதவில்லை