ஒரு பொருள் கவிதைகள் – 9 : கிளிகள்

தொகுப்பு : செல்வராஜ் ஜெகதீசன் 

 

‘குட்பை’ சொன்ன கிளி

# ஞானக்கூத்தன்

பேசுங்கிளிமேல் எனக்கு ஆசை பிறந்தது.

நானொரு பேசுங்கிளியை வாங்கி வந்தேன்

பேசுங்கிளியை என்னிடம் விற்றவன்

கிளியை எப்படி வளர்க்கணும் என்பதை

என்னிடம் விரிவாகச் சொன்னான்

கூண்டில் கிளியை வளர்ப்பது

பாவமென்று கூறினார்கள்

பக்கத்துப் போர்ஷன் பெரியவர்கள்.

நானதைப் பொருட்படுத்தாமல்

நல்ல இடமாகப் பார்த்து

பேசுங் கிளியின் கூண்டை அமர்த்தினேன்.

கூண்டில் இருந்த கிளி

பழங்களை விதைகளை நன்றாகத் தின்றது

ஆனால் ஒருநாள் கூடப் பேசவே இல்லை.

என்ன குறையோ என்ன கோபமோ

பேசப் பிடிக்காமல் போயிற்றென்று

சும்மா இருந்தேன் சிலநாட்கள்

என்னிடம் இல்லை என்றாலும்

வேறு யாரிடமாவது

பேச வேண்டும் அல்லவா அந்தக் கிளி

‘குட் மார்னிங்’ சொன்னேன்.

சுவையாய் இருந்தனவா பழங்கள் என்றேன்

எதற்கும் பேசவில்லை அந்தக் கிளி

வீட்டுக்கு வந்தவர்கள் கிளியிடம்

பேச்சுக் கொடுத்தார்கள். பதிலுக்குப்

பேசவே இல்லை அந்தக் கிளி

பேசாத கிளியை வளர்ப்பானேன்

என்றார்கள் வீட்டில். நானும்

கிளியை விற்கலாம் என்று தீர்மானித்தேன்.

விலைக்கு வாங்க வந்தவர் கேட்டார்

‘பேசுமா?’ என்று. ‘பேசுமே’ என்றேன்.

வீட்டுக்குக் கொண்டுபோய்ப்

பழங்கள் தந்து பழக்குங்கள். இரண்டே நாளில்

நன்றாய்ப் பேசும் என்றேன்.

பொய் சொன்ன நெஞ்சில்

பூதங்கள் ஐந்தும் புன்னகை செய்தன.

விலைக்குப் பெற்றவர் கிளியுடன்

கூண்டைப் பெற்றுக்கொண்டு

புறப்படும் போது திடுக்கிட்டுப் போனேன்

‘குட்பை’ என்றது அந்தக் கிளி.

o

தனிமை இரக்கம்’

# சுகுமாரன்

 

வந்து போகின்றன பருவங்கள் தடம் புரண்டு

வசந்தம் நாட்கணக்கில்

எனினும்

வருடம் முழுவதும் இலைகள் உதிர்கின்றன

வெற்றுக் கிளைகளாய் நிமிர்ந்து

கபாலத்தைப் பெயர்க்கிறது தனிமை.

 

திசைகளில் விழித்து நிராதரவாய் வெறிக்கின்றன

உனது நீர்த்திரைக் கண்கள்

அலைகளின் இடைவேளைகளில் உயிர்த்துத் ததும்புகிறது

உனது சோக முகம்

காலடி மணலின் துகள்கள் பிளந்து அலைகிறது

உனது பெயரின் தொனி.

 

வேட்டை நாய் விரட்டல்,

இளைப்பாறுதலின் சங்கீதம் என

அகல்கிறது நாட்களின் நடை.

 

வெளியில் போகிற எப்போதும்

காயம்படாமல் என் கிளி திரும்பியதில்லை

இதோ உன்னிடமிருந்தும்

ஆனால் அலகில் நீ பரிசளித்த நெற்கதிர்.

 

o

 

இலைகள் அடர்ந்த

மரத்தின் கீழே நிற்கிறேன்

கிளிகளின் சத்தம்

கிளிகளைப் பார்க்க இலைகளுக்குள்

கண்ணுற்றேன்

இலைகள் எல்லாம்

கிளிகள் ஆக

இலைகளின் சத்தம்.

 

# சங்கரராமசுப்ரமணியன்

 

O

கூண்டுக் கிளிகள்

காதலில் பிறந்த

குஞ்சுக் கிளிக்கு

எப்படி எதற்கு

வந்தன சிறகுகள்.

 

# கல்யாண்ஜி

 

O

குறிப்பு

# எம். யுவன்

 

கிளியென்று சொன்னால்

பறவையைக் குறிக்கலாம்.

பச்சையைக் குறிக்கலாம்.

மூக்கைக் குறிக்கலாம்.

பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச்

சிறையைக் குறிக்கலாம்.

சமயத்தில் அது

கிளியையும் குறிக்கலாம்.

 

o

கிளி புராணம்

சக்தி ஜோதி

 

கூடடையாத கிளி

பறந்து செல்கிறது

 

வீட்டின் அறைகளில்

சமையலறையில்

பூஜையறையில்

குளியறையில்

வாழ்நாளைக் கடத்திவிடும்

கிளி

 

மீனாட்சியின் தோளிலும்

காமாட்சியின் கையிலும்

பலநூறு வருடங்களாய்

 

சொல்வதைச் சொல்கிறது

தருவதை உண்ணுகிறது

ஆண்டாளின் தலையிலிருந்து பறந்து வந்து

இருசக்கர  வாகனம்  ஓட்டப்  பழகுகிறது

சீட்டுகளை இடம்மாற்றிப் போடுகிறது

 

அரச பரம்பரையின்

தங்கக்கூண்டுகளில்

தத்தித் தவழ்ந்த  அது

கூட்டினைத் திறந்ததும்

வெளியேறுகிறது

 

பேருந்துகளில்  கூண்டோடு பயணிக்கும்

பல கிளிகள்

தம் பயணத்தை அறியாதவை

 

பல ஆயிரம் ஆண்டுகளாய்

கூட்டினை அடையாத கிளிகள்

பறந்து செல்கின்றன அகன்ற வானில்.

o