கவிதைகள் 

(1)

அவன் நீண்ட காலத்துக்குப் பிறகு

அவர்களின் உலகத்துக்கு மீண்டிருந்தான்

கம்பிகளுக்கு வெளியே

வண்ணங்களும் சப்தங்களும் கைகுலுக்கும்

வாழ்தலின் நெரிசடி மிகுந்த

உலகத்துக்கு திரும்பியிருந்தான்

 

அவன் இம்முறையும் பரோலுக்கு

நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்தது

அன்னையும் உறவினர்களும் நண்பர்களும்

நம்பிக்கைகளை புதுப்பித்தபடி இருந்தனர்

அரசியல் வெளியில் தொடர்ந்து

கோரிக்கைகள் புதுப்பிக்கப்படி இருந்தன

ஆயிரமாவது தடவையாக அவனுடைய

விடுதலை உறுதி செய்யப்பட்டிருந்தது

பல்லாயிரம் தடவைகளாக அவன் கதவுகள் மூடப்பட்டன

பல லட்சம் முறைகளாக அவனுக்கான பிரார்த்தனைகள் ஒலிக்கப்பட்டன

அவன் ஏனோ ஒருநாள்

இதற்கெல்லாம் செவிடாகி விட்டிருந்தான்

அதிகாரத்தின் வாயில்கள் ஒவ்வொன்றாகத் திறந்து

உத்தரவுகள் ஒவ்வொன்றாக கையெழுத்தாகும்

தருணத்தை நோக்கி மட்டும்

பார்வையை பதிக்கக் கற்றிருந்தான்

 

அவன் இங்கு வந்த நாளில் இருந்து

இப்போது 

நிறைய மாறியிருந்தான்

அவன் கண்களில் துயரத்தின் நெடிய நிழலுடன்

தன்னையறியாமல்

ஒரு கனிவும் வந்து விட்டிருந்தது

துயரம் எப்போதும் வாழ்வின் கனலுக்கு

மனத்தை பழுக்க வைக்கும் என்றால்

அது ஏன்

விடுதலையை தருவதில்லை

அது ஏன் 

பிறர் கண்ணுக்கு மட்டும் புலப்படும்

ஒரு கனிவாக இருக்கிறது

அவன் பலமுறைகள் யோசித்திருந்தான்

 

அன்று அவன் தனது புதிய 

வண்ண ஆடையை அணிந்து 

வெளியுலத்துக்கு வந்த போது

அவனுக்கு எதுவும்

புதிதாகத் தோன்றவில்லை

தெருமுனையில் போலிசார் நிற்கிறார்கள்

அவனுடைய போன் ஒட்டுக் கேட்கப் படுகிறது

அவன் வீட்டுக்கு வருவோர்

விசாரிக்கப்படுகிறார்கள், அல்லது

தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்

போனில் மறுமுனையில் உள்ளவர்களுக்கும்

இது தெரியும்

அவர்கள் கவனமாக சொற்களை அடுக்குகிறார்கள்

அவர்கள் நகைமுரணுடன் பேசுகிறார்கள்

அவர்கள் மிகையான உணர்ச்சிகள் பொங்க பேசுகிறார்கள்

இவற்றுக்குப் பின்னால் 

தம் இதயத்துடிப்பை

 மறைத்து வைக்கலாம் என நம்புகிறார்கள்

 

அவனுக்கு எப்போதுமே

பல தடுப்பரண்களுக்கு கம்பிக் கதவுகளுக்கு 

அப்பாலிருந்து இச்சொற்கள்

 கேட்பதாகத் தோன்றுகின்றன

ஊடகங்களை அவன் தவிர்த்து விட வேண்டும்

அவன் சொற்களை கொண்டு சேர்க்கத்தக்க

எந்த தளத்தையும் தவிர்க்க வேண்டும்

அவ்வப்போது

சிலர் அவன் எண்ணைக்

 கண்டுபிடித்து அழைக்கிறார்கள்

சில சொற்களுக்குள் விக்கி அழுகிறார்கள்

லட்சிய உறுதியுடன் தெளிவாக

 நிறுத்தி நிறுத்தி பேசுகிறார்கள்

கம்பிக்கதவுகளின் அழுத்தமே அந்த உணர்ச்சிகளின் பின்னுள்ளன

என அவனுக்குத் தோன்றுகிறது

அவன் அவர்களிடம்

முடிந்தளவு மென்மையுடன்

முடிந்தளவு நம்பிக்கையுடன்

முடிந்தளவு உறுதியுடன் பேசுகிறான்

 

காலையில் இருந்தே

தொடர்ந்து சிறிய எண்ணிக்கையில்

நண்பர்களும் ஆதரவாளர்களும் 

பூங்கொத்துகளுடன் நம்பிக்கை வார்த்தைகளுடனும்

வந்தபடி இருக்கிறார்கள்

நண்பர்களின் கேலி கிண்டல்களே

அவனை நிம்மதியாக மூச்சுவிட அனுமதிக்கின்றன

அவ்வப்போது அவர்களுடைய கண்களில் மினுங்கும்

ஈரத்தை 

அவன் பார்க்காமல் குனிந்து கொள்கிறான்

மீண்டும் சிரிப்புகளில் மூழ்க

பிரயாசைப்படுகிறான்

இரவு அவன் களைத்துப் போய்

சாய்கிறான்

இரவு களைத்துப் போய்

அவன் மீது சாய்கிறது

சப்தங்கள் முழுக்க அடங்கிட

அங்கு போல இங்கு தோன்றுகிறது

அச்சமாகவும் இதமாகவும் இருக்கிறது

அவன் மனம் அம்மாவைத் தேடுகிறது

 

அவன் வந்ததில் இருந்தே

அவள் ஓய்வற்று

 வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள்

தன்னைப் பார்த்து பேசுவதைத் தவிர்க்கவோ

இது என யோசிக்கிறான்

அப்போதும் அவள் உணவு மேஜையைத் துடைத்து விட்டு

பூந்தொட்டிகளில் இலைகள்

 வாடி இருக்கின்றனவா எனப் பார்த்து விட்டு

சில நொடிகள் தனியே நின்று யோசிக்கிறாள்

சமையலறைக்குப் போய் 

பாத்திரங்களை எடுத்து

அதனதன் இடத்தில் வைக்கிறாள்

கண்ணாடிக் கோப்பைகளை

 துடைத்து வைக்கிறாள்

ஒரு கோப்பை தவறி விழுகிறது

அவன் திரும்பி நடக்கிறான்

சிலீர் ஒலி அவனைத் தொடர்ந்து

நடக்கிறது

 

படுக்கையறையில் மின்விசிறியில் இருந்து

ஒரு சுருக்குக் கயிறு தொங்குகிறது

அதன் நிழல் தரையில்

உயிர்கொண்ட ஒரு சொல்லை போல

என்னை எடுத்துக் கொள் என

தன் அன்னையை மேல்நோக்கி கெஞ்சுகிறது

அவனுக்கு ஒரு நொடி

அதை அள்ளிக் கொள்ளலாம் போலிருக்கிறது

அந்த கயிறு புதிதாக உறுதியாக மெழுகு போல் மென்மையுடன்

அவனுக்கு நன்கு பரிச்சயமுள்ளது போல இருக்கிறது

ஒரு காவலாளியின் கண்களுடன்

அவன் அதை ஒருமுறை நோக்குகிறான்

அவன் கால்கள் பின்னே போகின்றன

அம்மா என கத்துகிறான்

ஆனால் அச்சொல் அவனுக்குள்

சிக்கிக் கொள்கிறது

 

பிரச்சனை இக்கயிறு அல்ல

பிரச்சனை இதை நான்

 ஏற்கனவே எண்ணற்ற முறைகள்

 பார்த்து விட்டேன் என்பது

எண்ணற்ற முறைகள் பார்த்தும்

அது என் புலனுலகுக்கு

இன்னும் வரவில்லை என்பது

பிரச்சனை ஒரு முடிவின் துவக்கத்தையும்

ஒரு துவக்கத்தின் முடிவையும்

அது சொல்ல வந்து

ஒவ்வொருமுறையும் தன் வாலை தானே முழுங்கி

இப்படி சுருக்கிட்டுக் கொள்ளுகிறது

என்பது

நடக்க நடக்க பின்னால் மறையும்

பாதை போல வாழ்க்கை இருக்க

அவனுக்கு அது நடக்க நடக்க

முன்னால் மறைகிறது

முடிந்து விட்டது என நினைக்கும் போது

அது மீண்டும் தோன்றுகிறது

 

அவனுடைய எடைக்கு ஏற்ப வலுவாக

அவனுடைய கழுத்துக்கு ஏற்ப மென்மையாக

அவன் கழுத்துத் தசைகள் ஜில்லிடுகின்றன

 

அவன் படிக்கட்டில் அமர்ந்து

பார்த்துக் கொண்டிருக்க

ஒரு பாம்பு தோட்டத்து சருகுகளின் இடையே

ஊர்ந்து மல்லிகைச் செடிக் கூட்டத்தில் போய்

போய் மறைகிறது

அவன் காலை நீட்டுகிறான்

ஒரு கணம் அது தன்னை தீண்டி விடாதோ

என அவனுக்கு ஆசையாக இருக்கிறது

 

அவன் வெளியே வந்து நிற்கிறான்

தெருவில் ஒரு காக்கி உடை தென்படுகிறது

அவன் கையசைக்கிறான்

புன்னகை

அவனுக்கு ஏனோ ஆசுவாசமாக இருக்கிறது

 

  *************************            

(2)

அவள் வீட்டுக்கு வந்த போதில் இருந்து

அம்மாவுக்கு உதவியாக இருந்தாள்

அவளை அவன் ஏற்கனவே

விடுப்பில் வந்த போது பார்த்ததில் இருந்து

சற்று கூடுதல் வயதாகி இருந்தாள்

சற்று கூடுதலாக அழகாகி இருந்தாள்

சற்று கூடுதல் முட்டாளாக இருந்தாள்

ஒவ்வொரு தருணத்திலும் சற்று கூடுதல்

முழுமையாக இருந்தாள்

 

அவள் எப்போதுமே தனக்குப் பொருந்தாத

வண்ணங்களில் வடிவங்களில் ஆடை அணிந்தாள்

அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளை

அவள் நன்றாக அறிந்து வைத்து

அதை மிக மோசமாக சமைத்தாள்

அதிக காரத்தில் அவன் கண்கள் பனிக்கின்றன

அதிக உப்பில் அவன் நா கசக்கிறது

அவள் அது உண்மையிலே

சுவையாக இருக்கிறது

என அவனை நம்ப வைக்கிறாள்

அவன் தேவைக்கதிகமாகவே

ஒவ்வொரு முறையும் உண்கிறான்

 

ஒருநாள் அவன் காதுக்குள்

அவள் கேட்டாள்

உன் கடைசி நாளில்

 உனக்குப் பிடித்த உணவை

நானே சமைத்து எடுத்து வர எப்படி

அனுமதி வாங்குவது?”

அவனுக்கு அது

ஒரு அருமையான கேள்வியாகப் பட்டது

ஒருவேளை மிகுந்த அன்புடன்

அதே நேரம் மிக மோசமாக

சமைக்கப்பட்ட உணவை

உண்ண முடிந்தால்

தன் இறுதி கணங்கள்

சகிக்கத் தக்கவையாக அமையும்

 என அவன் நினைத்தான்

அம்மாவின் துல்லியமான அன்பும்

பிசிறல்ல உறுதியும் ஒப்பற்ற தாய்மையும்

தன்னை மேலும் மேலும் துயரத்துக்குள் ஆழ்த்துகிறதோ

என யோசித்தான்

அவமான உணர்வும் மகிழ்ச்சியும்

 மேலிடுகிறது

போதும் போதும்

அவன்  உறுதி பூண்டான்

 

ஒவ்வொருமுறையும் அம்மா அவளை

சமையலறையில் இருந்து

தடை பண்ணிடுவாள்

அவள் அப்போதெல்லாம் மற்றொரு வேலையில்

மிகவும் பிழையாக மிகவும் முழுமையாக

தன்னை ஈடுபடுத்துகிறாள்

 

 டீவியில் அவள் தொடர்ந்து பார்ப்பது

பெரிய வனப்பகுதிகள், அங்கு நிகழும் மானுட சாகசங்கள்,

வேட்டைகள், விபத்துகள், அடர்ந்த கானகத்தின் மௌனங்கள்

இந்த உலகில் மனிதர்கள் ஒன்று

இதை மட்டுமே பார்க்கிறார்கள்

அல்லது இந்த வாழ்வை மட்டுமே வாழ்கிறார்கள்

என்று கூறினாள்

ஓய்வு கிடைக்கும் போது அவள்

காட்டு யானைகளின், மலைப்பாம்புகளின்,

 விசித்திர வர்ணங்கள் கொண்ட பூச்சிகளின்

வேட்டைகளும் தப்பித்தல்களுமான உலகை 

பாறை முகடுகளில் வசிக்கும் பறவைகள்

 தம் குஞ்சுகளைக் காப்பாற்றும் கதைகளை

பல ஆச்சரியமான தகவல்களை

 கண்கள் விரிய விரிய வர்ணிப்பாள்

டிவியின் சலனப்படங்களை விட

அவை சிறப்பாக இருந்தன

கானக வாழ்வை

இன்னும் சாகசமற்ற

அர்த்தமற்ற விழைவுகளின் நிகழ்த்துக் களமாக

அவை அவனுக்குக் காட்டின

 

அவன் அர்த்தங்களும் சட்டதிட்டங்களும்,

எதிர்காலக் கனவுகளும், வெற்று விழுமியங்களும்

நிறைந்த உலகை விட

இதையே அதிகமாக விரும்பினான்

எந்த மிருகமும் இன்னொன்றிற்கு

 மற்றொரு வாய்ப்பு வழங்கி

முடிவுகளை தள்ளி வைப்பதில்லை

எந்த மிருகமும் ஒரு வேட்டையை

கால இடம் தீர்மானித்து நிகழ்த்துவதில்லை

ஒரு கொலைக்கு கண்ணீரும் ஒப்பாரியும்

மற்றொன்றுக்கு ஈரமற்ற கண்களையும்,

விதிமுறைகளின் எதிரொலிகளற்ற

 கண்ணாடிச் சுவர்களையும் தருவதில்லை

ஒரு மான் நீரருந்தும் போதே 

விரட்டி கழுத்து கிழிக்கப்பட்டு

கொல்லப்படுகிறது,

 அப்போதும் அது தான் சாவதாக நம்புவதில்லை

அது வாழ்வின் ஆயிரம் இதயத்துடிப்புகளுக்கு மத்தியிலே

 இறுதி கணம் வரை

தன் தவிப்பை பாதுகாப்பதாக அவனுக்குத் தோன்றியது

அது வண்ணங்களுக்கு நடுவே

ஒரு காட்சியை மட்டும் உறைய வைத்து

கறுப்பு வெள்ளையாக்கி

சட்டமிட்டு சுவரில் மாட்டுவதில்லை

என நினைத்தான்

பரோல் முடியும்

இறுதி நாள் வந்த போது

அவன் மற்றவர்களைப் போல பயணத்துக்கென

தயாராக

தனக்கு எதுவும் இல்லையே

என ஆச்சரியப்பட்டான்

அவனுக்குப் பிடித்தமான

என்னென்னமோ இன்னும்

செய்து கொடுக்க மீதமிருக்கிறது

எனும் கவலையுடன் அம்மா 

அவன் கற்பனையில் அவள்

அவன் முகத்தை தன் கைகளில்

ஏந்தி

தளும்பும் வயோதிக விழிகளுடன் பார்த்தாள்

 

அன்று முழுக்க அவள்

பேச்சற்று இருந்தாள்

அன்று முழுக்க அவன்

யார் பேச்சையாவது கேட்கும்

ஆவலுடன் இருந்தான்

அவனுக்கு மூச்சு முட்டுவதைப் போல இருந்தது

அவன் சுவர் கடிகாரத்தை

அடிக்கடிப் பார்த்தான்

வினாடி முள் தன் முடிவற்ற

வட்டப்பாதையில் ஓடிக்கொண்டிருந்தது

தான் தப்பிக்க முடியாதென அதற்குத் தெரியும்

ஆனாலும் பெரிய முள்ளை

தூண்டி சில அங்குலங்கள் நகர வைக்கும் போது

அதற்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது

அது ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு

மீண்டும் மூச்சைப்பிடித்துக் கொண்டு ஓடுகிறது

 

அவன் சிரமப்பட்டு பார்வையைத் திருப்பி

வீட்டுக்குள் சுற்றி நடந்தான்

ஏன் ஒவ்வொரு முறையும்

பள்ளிவிடுமுறை முடியும் குழந்தையைப் போல

பிடிவாதம் பிடிக்கிறோம் என நினைத்தான்

அவனுக்கு சிரிப்பு வந்தது

கசப்பான கோபமானதொரு சிரிப்பு வந்தது

 

அவள் இப்போதும் டிவியில்

மூழ்கி இருந்தாள்

அவனை கையைப் பிடித்து இழுத்து

தன்னுடன் அமரச் சொன்னாள்

இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன

புறப்பட வேண்டும்

இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன

அழைத்து செல்லும் கார்

ஜில்லிட்ட உலோகத்துடன்

காத்து நிற்கிறது

இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன

இது முடிந்து விடும்

ரொம்ப திகிலான கட்டத்தை எட்டி விட்டோம்

அவன் உட்கார்ந்தான்

 

ஒரு வயோதிக ஆண் சிங்கம்

அதன் கால்கள் மட்டுமே மூழ்கும் 

பாதி வற்றிய நதி

சுற்றிலும் வறண்ட பழுப்பு மண்

வானில் வட்டமடிக்கும் ஒரு கழுகு

டுரோன் படக்கருவி அந்த பகுதியில்

இது போல வறண்டு வரும்

நீரோட்டங்கள்

குறுக்குமறுக்காக ஓடுவதையும்

நடுநடுவே பறவைகளும் மான்களும்

உணவைத் தேடி திரிவதையும் காட்டுகிறது

வயோதிக சிங்கம் தளர்நடையில் ஓடி

அவ்வப்போது நின்று மூச்சு வாங்குகிறது

சில அடிகள் பின்னால் 

கழுதைப் புலிகளின் சிறிய கூட்டமொன்று

திறந்த வாயும் பசித்த கண்களுமாக

சில வினாடிகளுக்கு ஒருமுறை

அவை சுற்றி வந்து

சிங்கத்தை பின்னிருந்து பாய்கின்றன

சிறுக சிறுக கடித்து புண்படுத்துகின்றன

அது தன் தளர்ந்த கையால்

காற்றில் அறைகிறது

வாலைச் சுழற்றி விரட்டுகிறது

அவை பின்வாங்கி சிதறி விட்டு

மீண்டு ஒன்றிணைந்து

மூர்க்கமாய் நெருங்கி வந்து

ஒன்று முன்னே வர இரண்டு பக்கவாட்டில் தாக்க

மிச்சம் பின்னிருந்து வந்து

குதறத் தொடங்குகின்றன

வயோதிக சிங்கம் தன் பொறுமையை இழந்ததுபோல

திரும்பி ஒற்றைக் கழுதைப்புலியைப் பிடித்து

அறைகிறது

அதன் கேவலுடன் பணிவுடன் மன்றாடலுடன் குழைதலுடன்

தப்பிக்கிறது

அது சில அடிகள் முன்னே

எந்த கவலையுமற்று நடக்கிறது

கழுதைப்புலிகள் இப்போது

எண்ணிக்கையில் பெருக்கின்றன

சுற்றி நின்று அதை மொய்க்கின்றன

அது வாயைத் திறந்து 

கர்ஜித்தபடி தாக்குகிறது

தன் கைகளால் அறைகிறது

ஆனால் அவை

தயாரான உணவு மேஜையைப் போல

அதை தயக்கமற்று பயமற்று

மினுங்கும் கண்களுடன் பயமற்று பார்க்கின்றன

ஒரு கணம் அது

தளர்ந்து தன்னிரக்கத்துடன் பின்வாங்குகிறது

அவை ஒரு மிகப்பெரிய கூட்டமாய்

அதை மூடி விடுவது போல

பாய்கின்றன

ஆணவம் சீண்டப்பட

தன் உடைந்த ஆயுதத்தை தூக்கும்

ஒரு போர் வீரனைப் போல

அது புரண்டு பாதி எழுந்த நிலையில்

அடிக்கிறது

காற்றில் கர்ஜனை பரவுகிறது

 

இன்னும் சில நொடிகளே

இன்னும் சில மூச்சுகளே

இன்னும் சில குருதித்துளிகளின் வாசமே 

இன்னும் மீதமுள்ள இறுதி நம்பிக்கையே

மின்னும் நூறு கண்கள்

பசித்த நூறு கண்கள் 

பரஸ்பரம் நம்பிக்கை அளிக்கின்றன

 

படக்கருவி இப்போது

பக்கத்தில் சென்று

அந்த பசிகொண்ட பிடிவாதமான முகங்களைக் காட்டுகிறது

அந்த முகங்களில் வென்றெழும் வாழ்வின்

திகைப்பும் கோபமும் இருக்கின்றன

அந்த கண்களில்

வாழ்வின் ஜீவ ஓட்டத்தை

உடலில் ஏந்தியதன் 

துளி கருணையற்ற நம்பிக்கை 

கரிய சுடரென எழுகிறது

அந்த பழுப்புடல்களின்

இறுகிய தசை நார்களின் புடைப்பாக

கானகப் பிரக்ஞையில்

அது அலையலையாய் எழுகிறது

 

கதவு தட்டப்படுகிறது

அம்மாவின் உருவம்

எழுந்து போகிறது

 

படக்கருவி ஒரு கடவுளின் சாமர்த்தியத்துடன்

சற்று தொலைவில்

மற்றொரு வயோதிக சிங்கம்

தன் சகாவை நோக்கி

அலட்சியத்துடன் வருவதைக் காட்டுகிறது

அதன் நடை இங்கு கழுதைப் புலிகளின்

புடைத்து திமிறும் தசைகளில்

ஒரு பதற்றத்தை உடனடியாக ஏற்படுத்துகின்றன

ஒற்றை உயிரென்பது போல

 அவற்றில் இருந்து

சில கழுதைப்புலிகள் பிரிந்து

வட்டமாக சுற்றி வந்து

ஒரு அரணை அமைக்கின்றன

ஈக்கள் மொய்க்கின்றன

மேலே கழுகு இன்னும் தாழ்வாகப் பறந்து

தன் கழத்தை இறக்கி நீட்டுகிறது

 

அது வேகமாய்

நடையிட்டு வருகிறது

காவல் காக்கும் கழுதைப்புலிகள்

பற்களைக் காட்டி நான்கு திசைகளை நோக்கி சிரிக்க

சூழப்பட்ட சிங்கம் இப்போது

மீண்டும் கர்ஜிக்கிறது

 

அம்மா வருகிறாள்

நேரமாயிருச்சு

அவள் டிவியை அணைக்கிறாள்

அவன் கதவைத் திறந்து

வெளியுலகில் காலெடுத்து வைக்கிறான்