“இறையியல் கூற்றுபடி மனிதன் என்பவன் யார் தெரியுமா?” காலைச் சிற்றுண்டி இப்படித் தான் ஆரம்பமாகும். ஜெரோம் மிகப் பெரிய இறையியல் அறிஞர். அவருடன் வாழ்வதற்கு நான் போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று என் நண்பர்கள் கூறுவார்கள். ஆனால் எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. பத்து வருடங்களுக்கு மேல் இவற்றுடன் தானே வாழ்ந்தோம் என்ற நினைப்பு. இதெல்லாம் வெறும் தேற்றங்களோ சூத்திரங்களோ அல்ல வாழ்க்கை முறை என்பதால் பெரிதாக ஆர்வமேதும் இல்லை. அதுபோக எனது விருப்பமெல்லாம் இசையும் இலக்கியமும். இவைகளையே நான் ஓர் எதிரடையளமாக செய்து வருகிறேன். இசையில் அத்தனை பரிமாணங்களையும் விரும்புகிறேன் ஆனால் என் வாழ்க்கை முறை கிரகோரியன் இசையையே எனக்குப் பரிந்துரைக்கிறது. கிரகோரியனை நான் வெறுக்கவில்லை ஆனால் ராப் இசையை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. அதேபோலத் தான் இலக்கியமும். கடைந்தெடுத்த கத்தோலிக்க இலக்கியவாதிகளின் நூல்களை மட்டுமே என்னை வாசிக்கச் சொல்கிறார்கள் ஆனால் திருவாசகமும் தேவாரமும் என்னுடன் பிறந்ததல்லவா? இலக்கியத்துக்காக வாழ்வை தொலைத்த பலரை என்னால் பட்டியலிட முடியும். அவர்களை படிக்காமல் எனக்கு எப்படி உய்வு? அது மட்டுமல்லாமல் என்னுடைய வாழ்க்கை முறை என்னை திரும்பி திரும்பி ஒரு குற்றவுணர்வுக்குள் தள்ளுகிறது. இலக்கியம் தான் என்னை விடுவிக்கிறது. அதனால் எனக்கு இறையியல் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் காலைச் சிற்றுண்டிக்கு உகந்த பேச்சு இறையியலாய் இருக்க முடியாது எனச் சொல்கிறேன்.
எனக்கு எப்படி இசையும் இலக்கியமுமோ ஜெரோமுக்கு இறையியல். அவரது அறை முழுவதும் புத்தகங்கள் கிடக்கும். இரவு நேர பிராத்தனைக்குப் பிறகு தாமஸ் அக்வினாஸை வாசிக்காமல் அவர் தூங்கியதில்லை. வாயில் பெயர் நுழையாத எத்தனையோ அறிஞர்கள் விவிலியத்தின் பல்வேறு புத்தகங்களுக்கு எழுதிய விளக்கங்களை அவர் வாய் முணுமுணுத்துக்கொண்டேயிருக்கும். ‘அமேஸிங் க்ரேஸ்’ பாடலில் இருக்கும் இறையியல் பிழைப் பற்றி எந்நேரமும் வருத்தப் பட்டுக்கொண்டிருப்பார். இப்படி எத்தனையோ இறையியல் கவலைகளால் அவர் நெற்றியில் பல்வேறு சுருக்கங்கள் வந்துவிட்டன. எப்போதும் அவகளை வருடிக்கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை அவர் வாசித்துக்கொண்டிருப்பார். கூடுமான வரை அவர் சாப்பிட வருவதற்கு முன் நான் வேகமாக சாப்பிட்டுவிட்டு ஓடிவிடுவேன். இறையியலாளர்கள் மத்தியில் தாமஸ் அக்வினாஸ் பற்றி ஒரு கதை இருக்கிறது. தாமஸ் சிந்திப்பதற்காகவே வாழ்ந்த மனிதன் என்று கூறுவார்கள். துறவிகள் ஒன்றாக கூடி முக்கியமான விஷயங்களை விவாதித்துக்கொண்டிருக்கும் போது தாமஸின் நினைவுகள் வேறெங்கோ இருக்குமாம். விவாதத்தின் இடையில் சற்றும் பொருத்தமில்லாத ஏதோ ஒன்றை உளறுவாராம்.
பின்னர் அறைக்குச் சென்று குறிப்பெடுத்துக் கொள்வார். இப்படி அந்த மனிதன் எத்தனை பக்கங்கள் எழுதி குவித்திருக்கிறார். சிந்தனை பூர்வமாகவே வாழ்வை கழித்ததால் உடலை அவர் கவனித்துக்கொள்ளவில்லை. விளைவு ஒரேயிடத்தில் உண்டு உறங்கி எழுதி வாசித்து வந்ததால் வயிறு பயங்கரமாக பெருத்துவிட்டதாம். ஒரு கட்டத்தில் தன் மேஜையில் அமர்ந்து எழுத முடியாதவாறு வயிறு பெரிதாகிவிட்டதால் வயிற்றின் அளவுக்கு ஏற்றார் போல் மேஜையை வளைவாக வெட்டி அவருக்கு வசதி செய்து கொடுத்தார்களாம். இந்தக் கதையை ஏன் சொன்னேன் என்றால், ஜெரோமும் தாமஸை போலவே நன்றாக வீங்கிப் பெருத்திருந்தார். கழுத்தில் மட்டும் இரண்டு மடிப்பு இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் நடந்து வரும் போது அவரது மேற்கத்திய ரோஸ் நிறம் இன்னும் கொஞ்சம் அடர்த்தியாகிவிடும். பத்தடிக்கு ஒரு முறை அமர்ந்து நன்றாக மூச்சு வாங்கி பின்னர் பத்தடி நடப்பார். அவருக்கு உடலின் மீதான நம்பிக்கை என்பது பிளேட்டோவின் நம்பிக்கையுடன் ஒத்து போனது. உடல் அவரை பொறுத்த வரை ஒரு சிறை. ஆன்மா அதிலிருந்து விடுதலையாகத் துடிக்கிறது என்பார். ஆனால் வஞ்சகம் இல்லாமல் எல்லாவற்றுயும் சாப்பிடுவார். கடைசியாக இறையியல் கூற்றின் படி மனிதனைப் பற்றி பேசுகையில் இரண்டு பெரிய கிண்ணத்தில் சீரியலை பால் ஊற்றிச் சாப்பிட்டு முடித்து மேஜையிலிருந்த சாக்லெட் டோனட்டுகளுக்குக் குறிவைத்துக்கொண்டிருந்தார்.
நானும் இறையியல் பயின்றவன் தான் ஆனால் எனக்கு மக்கள் முக்கியம். ‘ட்ரான்ஸ்சப்ஸ்டன்ஷியேஷன்’ என்றால் என்னவென்று தெரியும். ஆனால் மக்களிடம் அதை ஒவ்வொரு நாளும் பேசிக் கொண்டிருக்க மாட்டேன். கோதுமை அப்பம் திருப்பலியில் இயேசுவின் திருவுடலாக மாற்றம் அடைகிறது. இதை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் என்னை அணுகி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் கடைசியில் உலக ஞானங்கள் அனைத்தும் எப்படியோ தோற்று போய்விடுகின்றன. ட்ரான்ஸ்சப்ஸ்டன்ஷியேஷன் தான் உலகின் ஆகப்பெரும் பிரச்சனையா என்ன? இப்படி இருவேறு துருவங்களில் வாழ்ந்து வந்த எங்களுக்குள் ரெனி ஒரு இலையுதிர்கால மாலைப் பொழுதில் வந்துதித்தான்.
செல்லப் பிராணிகளின் மீது எனக்கிருக்கும் ஈடுபாட்டையறிந்த டோலரஸ் எனக்கு ரெனியை அன்பளிப்பாக அளித்தாள். ரெனி என்னிடம் வரும் போது மூன்று மாதக் குட்டி. முப்பது பவுண்ட் எடையிருப்பான். வால் நறுக்கப்பட்டு டாபர்மேன் பின்ச்சர்களுக்குரிய கறுப்பு மற்று செம்பழுப்பு நிறத்துடன் அழகாக இருந்தான். டோலரஸ் என்னிடம் ஒப்படைத்ததும் தாவி ஓடி வந்து ஒட்டிக்கொண்டான். தோலில் செய்த என் காலணியை கவ்வி விளையாடிக்கொண்டிருந்தான். டோலரஸுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. டாபர்மேனை இப்படியான இடத்தில் வளர்ப்பது பெரிய சிரமம் என்றும் மனதுக்குள் தோன்றியது. காதுகள் இன்னும் நறுக்கப்படவில்லை என்பதை டோலரஸ் சொல்லிவிட்டு காதுகளை நறுக்கினால் இந்தக் குளிருக்கு நல்லது என்றும் இல்லையென்றால் காதுகளில் பாக்டீரியா தொற்று ஏற்படலாம் என்றும் சொன்னாள். வீட்டில் வளர்க்கப்படுவதால் டாபர்மேனுக்கு தனிப்பட்ட உரிமம் தேவையில்லை என்றும் சொன்னாள். ரெனிக்கு தேவையான உணவுகள் அவனின் வாரிசு அட்டவணை எல்லாவற்றுயும் தந்துவிட்டுச் சென்றாள். ரெனி எங்கள் வீட்டின் சூழலுக்கு பழக ஆரம்பித்தான். நான் எங்கு சென்றாலும் என் பின்னாடி ஓடி வருவான். நான் ரெஃப்ரிஜிரேட்டரை திறந்ததும் தன் முன்னங்கால்களை தூக்கி அதன் அடுக்குகளில் வைத்து உணவுகளை முகர்ந்துக் கொண்டிருந்தான். செல்லமாக அவனிடம் சில கட்டளைகளிட்டு நானும் விளையாடிக்கொண்டிருந்தேன். என் குரல் கேட்டதும் நறுக்கப்பட்ட வாலுடன் தன் மொத்த பின்புறத்தையும் வளைத்து நெளித்து ஆட்டி சின்ன குரைப்பு கொடுத்து விளையாடினான்.
தன் அறையிலிருந்து வெளிவந்த ஜெரோம் என்னையும் ரெனியையும் வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ரெனி தன் வயது மற்றும் தோற்றத்தை மீறிய குரைப்பை கொடுத்து எனக்குப் பின்னால் வந்து நின்றான். நான் ரெனியை ஜெரோமுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
“ஃபாதர் ஜெரோம், இது ரெனி. நம் வீட்டின் புதிய உறுப்பினர்.” ஜெரோமின் பதிலுக்கு காத்திராமல் ரெனியை துக்கி ஜெரோமிடம் நீட்டினேன்.
“எனக்கு செல்லப்பிராணிகள் பிடிக்காது .அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.”
“இவன் பெயர் ரெனி. ரெனி என்று அழையுங்கள்.”
பேருக்கு விரல்களை நீட்டி சின்ன விசில் கொடுத்தார். ரெனி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி அவர் விரலை எட்டிப்பிடிக்க தவ்விக்கொண்டிருந்தது. அவர் விசிலுக்கு ஏற்ப குரைக்கவும் செய்தது. கொஞ்ச நேரத்தில் ரெனியை மறந்து என்னிடம்,
“இன்று என்ன இரவுணவு? எனக்கு பாஸ்டா சாப்பிட வேண்டும்… அந்த ஏஞ்சல் ஹேர் பாஸ்டா இருக்கிறதா?”
“இன்று ரெனி புதிதாக வீட்டுக்கு வந்திருப்பதால் ஏன் வெளியில் சென்று கொண்டாடக் கூடாது? நல்ல இட்டாலியன் உணவகம் செல்லலாம்.”
“ஓ… நான் ஹன்ஸ் உர் வான் பல்தஸாரின் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறேன். Dare we Hope: “that all men be saved?” நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்…? (இதற்கு அர்த்தம் நான் வாசிக்க வேண்டும் என்பதாகும்.) நிறைய இடங்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் வாசித்தாக வேண்டும். எனவே என்னால் வர இயலாது. அதுபோக ஒரு நாய்க்காக உணவகம் செல்வதெல்லாம் வேண்டாத வேலை.”
நான் அவருக்கு பதிலளிக்கவில்லை. ரெனியை தடவிக்கொடித்துக்கொண்டிருந்தேன். ரெனி கீழே படுத்து கால்கள் நான்கையும் உயர்த்திக்கொண்டு நான் தடவிக்கொடுப்பதை ரசித்து பின்னங்கால் ஒன்றை விழுக்விழுக்கென உதைத்துக்கொண்டிருந்தது.
ஜெரோம் அவராகவே பாஸ்டா செய்து சாப்பிட்டார். ரெனிக்கு பால் வைத்துவிட்டு மேஜையிலிருந்த ஆப்பிளை வெட்டிச் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டேன். என் கட்டிலுக்கு அருகில் ரெனிக்கு ஒரு மெத்தை அமைத்து அவனையும் தூங்கச் செய்தேன்.
காலையில் ரெனி சரியாக ஐந்து முப்பது மணிக்கு என் மெத்தையில் முன்னங்கால்களை வைத்து என்னை ஈனக்குரலில் எழுப்பினான். எழுந்து கதவை திறந்ததும் முன்னும் பின்னும் ஓடி ஏதோ சொல்ல வருவது போல முனகினான். தூக்கிக்கொண்டு வெளியில் சென்று விட்டதும் தன் காலைக் கடன்களை புல் தரையில் முடித்துக்கொண்டு என்னிடம் வந்து கொஞ்ச ஆரம்பித்தான். என் காலை நேரம் இனிமேல் இப்படியாகத் தான் விடியப் போகிறது. ரெனியின் காலைக் கடனுக்கு பிறகு அவைகளை சுத்தம் செய்வதற்கான பைகளை வாங்கி வைத்துக்கொண்டேன். கோவிலுக்கு வரும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் இரண்டே நாள்களில் ரெனி கவர்ந்துவிட்டான். இவனை விரும்பாத ஒரே நபர் ஜெரோம் மட்டும் தான்.
சிறிது நாளில் ரெனிக்கு காதுகளை கூர்மையாக நறுக்க அருகிலிருந்த கால்நடை மருத்துவரிடம் சென்றேன். ஒரு சில மணி நேரத்தில் அழகாக நறுக்கி கட்டு போட்டு காதுகளை நேரக்கும் பிரத்யேக க்ளிப் போட்டு அனுப்பி வைத்தார். அன்று முழுவதும் வலியால் ரெனி துடித்துப் போனான். இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. நானும் அவனுடனே இருந்தேன். ஒரு வாரமாக சரியாக விளையாடவில்லை. காயம் ஆறியவுடன் மீண்டும் பழைய மாதிரி விளையாட ஆரம்பித்தான். ஆனால் காதிலிருந்த கிளிப்பை அவிழ்த்ததும் இடக்காது மடங்கியே இருந்தது வலக்காது எதிர்பார்த்தது போல நேராக இருந்தது. ‘பெடிக்ரி, ‘வாக்கிங்’ போன்ற வார்த்தைகளை சொன்னால் மடங்கிய காது சடக்கென நேராக எழுந்து நிற்கும். டாபர்மேன்களுக்கேயுரிய கம்பீரமாக இருப்பான். ஆனால் அடுத்த சில வினாடிகளில் இடக்காது தானாக மடிந்து விழும். வலக்காது மட்டும் எப்போதும் நேராக இருக்கும்.
ஜெரோமுக்கு நான் ரெனியுடன் நேரம் செலவளிப்பது பிடிக்கவில்லை என்பது தெரியும். ஒருநாள் என்னிடம் ரெனி வேகமாக வளர்ந்து வருவதால் மக்களை கடிக்கும் ஆபத்து இருக்கிறது என்று சொல்லி டாபர்மேன் வளர்பதற்கான உரிமம் வாங்கச் சொன்னார். நான் அது அவசியமில்லை என்று சொல்லியும் பிடிவாதமாக உரிமம் வாங்க வேண்டும் என்று சாதித்துக்கொண்டிருந்தார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. டாபர்மேன் போன்ற பெரிய நாய்கள் மக்களை கடித்துவிடும் என்ற அச்சம் இருப்பதாலும் பண்ணை போன்ற இடங்களை காவல் காப்பதாலும் அவைகளுக்கு உரிமம் வாங்க வேண்டும். நாயின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளை பார்த்து மதிப்பிட்டு உரிமம் வளங்குவார்கள். பொதுவாக இனப்பெருக்க விவரங்களுக்காக இதை பதிந்துகொள்வார்கள். ஒருவேளை தோற்றம் அல்லது செயல்பாட்டில் ஏதேனும் குறையிருந்தால் அதன் காரணமாக நாயை வீட்டிலிருப்பவர்கள் விரும்பவில்லை என்றால் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதுவும் டாபர்மேன்களுக்கு இம்மாதிரியான பயிற்சி என்பது பெரும் செலவை ஏற்படுத்தும். தேர்வில் உரிமையாளர் நாயை வேகமாக நடத்திக் கொண்டு வருவேண்டும். கூட்டமாக மக்கள் நாய்க்கு மிக அருகில் நடந்து வருவார்கள் அப்போது அவர்களை அது கடித்துவிடக்கூடாது. அதேபோல உரிமையாளரை ஒருவர் தாக்குவது போல பாவனைச் செய்வார் உடனே அவரை பாய்ந்து கடிக்க வேண்டும்.
இப்படி எத்தனையோ தேர்வுகள். ஜெரோம் அதில் ஏதோ ஒன்றில் ரெனி தோற்கும் பட்சத்தில் அதை வீட்டைவிட்டு விரட்டியாக வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். ஆனால் ரெனி எல்லா தேர்வுகளில் அட்டகாசமாக வென்றது. மேலும் ஆங்காங்கு நடக்கும் நாய் கண்காட்சிகளில் போட்டியிடுவதற்கான நிரந்தர அழைப்பையும் பெற்றது. ரெனிக்கு இருந்த ஒரே குறைபாடு அதன் இடது காது மடங்கியிருந்தது தான் ஆனால் அதுவும் அதற்கான தனித்த அடையாளமாக மாறியிருந்தது. நாய் கண்காட்சிகளுக்கு ரெனியை கொண்டு செல்வதை நான் விரும்பவில்லை. அவன் என்னுடனே இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
ரெனி ஒரு வருடத்தில் வாட்டசாட்டமாக வளர்ந்துவிட்டான். அவனைப் பார்ப்பவர்கள் சற்றே பின்நோக்கி நகர்ந்து எச்சரிக்கையாவார்கள். அவனது கோரைப் பற்களும் காலில் தடித்து வளர்ந்த நகங்களும் மிரட்டலாக இருந்தது. மாலையில் அவனுடன் நடந்து சென்றால் சாலையில் செல்பவர்கள் அனைவரும் எங்களிருவரையும் பார்க்காமல் இருக்க முடியாது.
ரெனி எனக்கு பெரிய அடையாளமாக இருந்தான். நன்றாக வளர்ந்துவிட்டாலும் இன்னமும் அவன் எனக்கு மூன்று மாதக் குட்டியாகவே தெரிந்தான். காலையில் ஐந்து முப்பது மணிக்கு காலை நீட்டி சில முறை என்னை எழுப்பி விடுவான். எழவில்லை என்றால் மெத்தையில் ஏறி மிகச் சரியாக போர்வையில் முகத்தை நுழைத்து என்னை எழுப்பி விடுவான். அவனுக்காக வாங்கிய கயிற்றால் செய்த கடிப்பானை என்னிடம் நீட்டி விளையாடக் கூப்பிடுவான். அதைக் கடித்துக் கொண்டிருக்கும் போது பிடிங்கினால் முன்னங்கால்களால் சரியாக நெஞ்சில் ஒரு உதைக் கொடுப்பான். சாப்பிடும் போது மேஜையின் அடியில் படித்திருப்பான். வேறெங்காவது செல்லச் சொன்னால் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு விழிகளை உருட்டியுருட்டிப் பார்ப்பான். ஆனால் இன்னமும் ஜெரோம் ரெனியுடன் இணக்கமாகவில்லை. ஜெரோமுக்கு ரெனியை பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் ரெனி ஜெரோமை பெரிதும் நேசித்தான். அவர் எவ்வளவுதான் திட்டினாலும் அவரை விளையாடக் கூப்பிட்டுக் கொண்டேயிருப்பான். அவர் அறை திறந்திருந்தால் உள்ளே நுழைந்து தடிமனான ஒரு புத்தகத்தை என்னிடம் கொண்டு வந்து கொடுப்பான். நான் இதை மட்டும் செய்யாதே என்று சொன்னால் கீழே படுத்து கால்களுக்கு இடையில் தலையை வைத்து விழியால் பேச ஆரம்பித்துவிடுவான்.
அன்று ஜெரோம் கத்திக்கொண்டே மாடியிலிருந்து கீழிறங்கினார். ரெனி வேகமாக ஓடி வந்து என் பின்னால் ஒளிந்து கொண்டது. ஏதோ பெரிய விவகாரம் என்பதை யூகித்துவிட்டேன். சற்று நேரத்தில் மூச்சிறைக்க வந்த ஜெரோம் என்னிடன் தன் கைப்பேசியை நீட்டினார். ரெனி தன் நகங்களாலும் பற்களாலும் கைப்பேசியில் விளையாடியிருக்கிறான். அவரிடமிருந்தது ஒரு பழையக் கைப்பேசி. அநேகமாக அதன் மாடல்களை அந்தக் கம்பெனி பல வருடங்களுக்கு முன் நிறுத்திவிட்டிருக்கும். ஆனால் அதை அவர் வைத்திருந்ததற்கு காரணம் புதிய கைப்பேசி வாங்கினால் அதற்கு பழக நாளாகும் என்பதுதான். அப்படி பழகும் நாட்களில் இரண்டு இறையியல் புத்தகங்களை வாசித்திருக்கலாம் என்பது அவரது நிலைப்பாடு. ஒரு நாற்காலியை இழுத்து உட்கார்ந்த ஜெரோம் என்னையும் அமரச் சொன்னார்.
“உங்களுக்கு நாய் வளர்க்க பிடிக்கும் என்பதால் தான் நான் இவ்வளவு நாள் பொறுத்துக்கொண்டேன். உங்கள் நாய் எனக்கு எவ்வளவு இம்சை கொடுத்தது தெரியுமா? வீட்டினுள் வர முடியவில்லை. அவ்வளவு நாற்றம். நாய் என்றால் அதைக் வெளியில் கட்டிப் போட்டு வளர்க்க வேண்டும். நீங்கள் இந்த நாட்டுக்கு வந்து இங்கிருப்பவர்கள் போல மாறிவிட்டீர்கள். அதனுடன் நீங்கள் நேரம் செலவளிப்பதை நான் விரும்பவில்லை. அது ஒரு மிருகம். மிருகத்தை நீங்கள் குழந்தையை போல நடத்துகிறீர்கள்.”
“உங்களுக்கு சிரமமாக இருந்திருந்தால் என்னிடம் முன்னமே தெரிவித்திருக்கலாம். இன்று உங்கள் கைப்பேசியை ரெனி சேதப்படுத்தியதற்கு நான் வருந்துகிறேன். ஆனால் ரெனியிடம் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு கற்றுத் தர தேவையில்லை.”
“மீண்டும் சொல்கிறேன். அது மிருகம். உங்களுக்கும் எனக்கும் இருப்பது போல அதற்கு ஆன்மா இல்லை. இன்னும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால் நீங்களும் நானும் இறந்து சொர்கத்துக்கு செல்வது போல அதனால் போக முடியாது. நாய் எப்போதும் நாய் தான்.”
எங்களின் இந்த சூடான விவாதத்தை ரெனி பாவமாக பார்த்துக்கொண்டு படுத்திருந்தது. அது ஒவ்வொரு முறை விழிகளை உருட்டிப் பார்க்கையில் என் சோகங்களும் வருத்தங்களும் கரைந்து போவதாக தோன்றியது. ரெனி வந்த பிறகு நான் தனிமையை உணர்ந்ததேயில்லை. என்னை பொறுத்த வரை அது ஒரு குழந்தை மாதிரிதான். ஜெரோம் சொல்வது அத்தனையும் உண்மை. ஆனால் அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன? கைப்பேசியை உடைத்த குற்றவுணர்வை அதன் பாவப்பட்ட பார்வையிலும் முணுகளிலும் பார்த்தேன். இன்னொரு பக்கம் ஜெரோம் இன்னும் கொதித்துக் கொண்டிருந்தார். தன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி ரெனியை வீட்டை விட்டு விரட்ட துடித்துக் கொண்டிருந்தார். அவர் அதை சொல்லாவிட்டாலும் சிவந்த கண்களும் பரபரத்த விரல்களை அதைக் காட்டிக்கொண்டிருந்தது. கொஞ்சம் செருமியவாறு ஜெரோமிடம் பேச ஆரம்பித்தேன்.
“இங்கே பாருங்கள் ஜெரோம். நீங்கள் சொல்வது உண்மை. இறைவன் நாய்களுக்காக ஒரு சொர்கத்தை படைக்கவில்லை. அவைகளுக்கு ஆன்மா இல்லை. ஆனால் எனக்கு இந்த பூமியில் சொர்கத்தை ரெனி கொண்டு வருகிறான். அவனுடன் நான் செலவளிக்கும் நேரத்தில் என் ஆன்மா தூய்மையாகிறது. உங்களுக்கு விருப்பமில்லை என்றால் மேலிடத்தில் பேசி வேறெங்காவது மாற்றல் வாங்கிக்கொள்ளுங்கள். ரெனி இங்கு தான் இருக்கப் போகிறான்” என்றுச் சொன்னேன்.
வாய்க்குள்ளாக ஏதோ பேசியபடி மீண்டுமாக தன் அறைக்குச் சென்றார். என்னை திட்டியிருப்பார் என்று நினைக்கிறேன். நான் ரெனியை கொஞ்சிக்கொண்டிருந்தேன். அடுத்த சில தினங்கள் ஜெரோம் என்னிடம் பேசவில்லை. சரியாக இரண்டு வாரம் கழித்து என்னிடம் வந்த ஜெரோம் தன்னை ஆயராக தேர்ந்தெடுத்திருப்பதை சொன்னார். அவர் முகத்தில் அவ்வளவு பெருமிதம். நான் வாழ்த்துகள் சொன்னேன். ரெனி வழக்கமான உற்சாகத்துடன் ஜெரோமை விளையாடக் கூப்பிட்டது. அதை பொருட்படுத்தாத ஜெரோம் தன் அறைக்குச் சென்று தன் பொருட்களை மூட்டைக் கட்ட தொடங்கினார்.
மடங்கிய இடக்காதுடன் தன் கடிப்பானை என்னிடம் கொடுத்து குரைத்து என்னை விளையாட அழைத்தது ரெனி.