ஞாயிற்றுக்கிழமையான அன்று மதியம் மூனு மூன்றரையிருக்கும், வீடே மணக்க மணக்க மனைவி செய்து வைத்திருந்த நெத்திலிக் கருவாட்டுக் குழம்பை மனைவி மகனுடன் சேர்ந்து மூக்குப் பிடிக்க வழித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சரியாக மீதம் இரண்டே இரண்டு கவளம் இருந்த போதுதான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் மனைவிக்கு அண்ணன், அவரது மாமனார் இறந்தசெய்தியை சொல்லவே அந்த அழைப்பு. திடீரென நெஞ்சுவலி எடுக்க வீட்டிலிருந்து ஹாஸ்பிட்டல் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே இறந்துவிட்டாரென சொன்னது ,என்னவோ போலிருந்தது. மணக்க உட்கொண்ட கருவாடு உள்ளேயிருந்து குடலைப் குமட்டுவதாகவும் தொண்டையையும் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது போலவுமிருந்தது. மீந்திருந்த அந்தக் கடைசி இரண்டு கவளம் சோறும்  கையில் ஒட்டியிருந்த சோற்றுப் பருக்கைகளும் உட்கொள்ள வயிற்றில் இடமில்லாதது போலானது. மனைவியிடம் சொல்லி உடனே கிளம்பச் சொன்னேன். அதற்குள் கருவாட்டுக் குழம்பின் மணம் நாசியிலிருந்தும் வீட்டிலிருந்தும் வெளியேறியிருந்தது.

எனது இருசக்கர வாகனத்தில் கிளம்பினோம் . வெயில் தகித்துக்கொண்டிருந்தது. எங்களின் இடதுபுறமாக ஒரு ”பியாக்கியா ஏப்” சரக்கு ஆட்டோ ஒன்று, பின்பக்கம் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு ஜோடி ரோஜா பூ மாலையுடன் குலுங்கியவாறு கடந்தது. அந்த கணம், அழகுடன் பின்னிக் கோர்க்கப்பட்ட அந்த ரோஜா மாலைகளின் வாசனை, அப்படியே என்னை இந்த வெட்பத்திலிருந்து வெடுக்கென பிடுங்கி ரோஜாப்பூக்களால் நிரப்பப்பட்ட குளத்தினுள் தள்ளிவிட்டது போல் அந்த வாசனை என் தோள் அணைந்தது. புதிதாய் பிறந்த குழந்தையின் பச்சை வாசம் கையில் ஏந்துவோரின் மூக்கையே சுற்றும். குளம் நதியாகி ஓட சற்று தூரம் சென்றபின், காற்றில் கரைந்து தீர்ந்து விட இருந்த அந்த கடைசி துளி வாசனையை முழுதும் உட்கொள்ளும் பொருட்டு என் நாசிகள் ஓராயிரம் கரம்கொண்டதென அதனை உள்ளிழுத்துக் கொண்டுவிட்டது. மிச்சமும் கிடைக்க வேண்டி மூச்சை இழுத்தவாறு லேசாக முகம் திருப்பினேன், அதற்குள் அந்த ஆட்டோ ஒரு திருமண மண்டபத்தின் வாயிலினுள் சென்று மறைந்தது.மண்டபத்தின் முகப்பு பலவண்ணப் பூக்காளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.அதுகாறும் வாட்டிய தார்ச்சாலை வெம்மை அனலுக்கும், இனி இன்றைய மீதப்பொழுதும் துணைகொள்ள இருக்கும் துயர் தணலுக்கும், குறைந்தது சில நூறு பேரின் சந்தோஷங்களைத் தாங்கிச்சென்ற அந்த ரோஜாப்பூமாலையின் வாசனை மனதிற்கு ஆற்றுதல் தந்தது. என் தோள் சூடிய அந்த ரோஜா மாலையின் வாசம் சற்று நேரம் வரைக்கும் மூக்கிற்கும் தொண்டைக்குமிடையே மேலும் கீழும் அமிழ்ந்து எழுந்து அமிழ்ந்து எழுந்து கொண்டேயிருந்தது.

சற்று முன்னேறிய தூரத்தில் நாசிக்குள் வாசனை இடப்பெயர்வுக்கான சமிக்ஞை தோன்றி மறைந்தது. சாலையின் இடதோரத்தில் கடை விரிக்கப்பட்டு கிடத்திவைக்கப்பட்டிருந்த வகை வகையான மீன்கள், அதுகாறும் நாசியினுள் சுழன்று கொண்டிருந்த ரோஜாப்பூ வாசனையை என் தோளிலிருந்து பிடுங்கி எறிந்து விட்டு தங்களது வாசனைகளை நிரப்பியது. மீனை விரும்பி உணவில் அதிகம் எடுத்துக்கொள்பவன் என்பதால் மீனின் வாடையும் எனக்கு வாசனையே. இறந்த பின் உடலைப் பிரிவது ஆன்மாவா ஆவியா எனத் தெரியாது. அப்படி இருந்தால் அவை இறந்துவிட்ட இந்த மீன்களைச் சுற்றிக் கொண்டேயிருக்குமோ என்னவோ!அதில் சில ஆன்மாக்கள் என் மூக்கின் வழி சென்று, “உன்போல் ஒருவனுக்காகத்தானே என்னை இப்படி இங்கே கிடத்தியிருக்கிறார்கள்” என்று சொல்வதாகத் தோன்றியது .

தெரு முனையிலேயே, இறந்தவரின் வீட்டை நெருங்கி விட்டோம் என்பதை அவருக்காக ஏற்றி வைக்கப்பட்ட ஊதுபத்தியும் அவருக்கு தெளிக்கப்பட்ட பன்னீரும் கலந்த வாசனை அறிவித்தது. ஒரு கணம் நிதானித்து, சற்று முன்பு வரைக் கேட்ட அந்த மீன்களின் சப்தம் கேட்கிறதா என தலைசாய்த்து  மூச்சையிழுத்துப் பார்த்தேன், அது எப்போதோ காற்றில் கரைந்து மறைந்திருந்தது. எப்பொழுதென்ற ஆராய்ச்சி தேவையில்லாது போனது. இந்த ஊதுபத்தியும் பன்னீரும் தனித்தனியாக தனித்துவமான வாசனை கொண்டவைதான். ஆனால் இன்று இக்கணம் அவை ஒன்றிணைந்து வெளிப்பட்ட வாசனை ஒருவரது இறப்பை எங்கணம் அறிவிக்கின்றது? இது வெறும் ஊதுபத்தி, பன்னீர் சேர்க்கையினால் மட்டும் சாத்தியமாகவில்லை. அதனுடன், துக்கம் அனுசரித்தவர்கள் கொண்டுவந்த ரோஜாப்பூ மாலைகளின் வாசனையும் கலந்து வரும் வாசனையன்றோ அவர் இறப்பின் அறிவிப்பைத் தந்து கொண்டிருந்தது. எனது அனுபவம் காரணமாக ரோஜாப்பூ மாலை எதுவும் வாங்காமல் இங்கே வந்திருந்தேன். வீட்டை அடைந்ததும் வெளித் தாழ்வாரத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தவருக்கு எங்களது வருகைப்பதிவை, வணக்கத்துடன் பதிவு செய்தோம். அப்போது ஊதுபத்தி, பன்னீர் மற்றும் ரோஜா மாலைகள் மூன்றின் அருகாமை என் நாசிக்குள் ஒருவித சலனத்தை ஏற்படுத்தியது. இன்னது என அறியமுடியாத ஒருவித மாயநெடி மூக்கின் வழி தொண்டைக்குள் இறங்கும் முன் மண்டைக்குள் சர்ரென ஏறியது. யாரோ ஒருவர் மூக்குப்பொடி உறிஞ்சும்போது அதன் காரநெடி அருகிலிருக்கும் நம் மூக்குக்குள் சரேலென சென்று சட்டென தும்மலை வரவைக்குமே, அதுபோல இந்த ரோஜ மாலைகளின் வாசனை நெடி என் நாசி கவ்வியது . இதுவரை கடந்து வந்துவிட்ட அத்தனை வாசனைகளிலிருந்தும் தனித்திருந்தது. அதே ரோஜாக்கள்தான் இருந்தும் இது வேறாகயிருந்தது. அந்த நெடிமயக்கத்துடனேயே, நேரே இறப்பை எனக்கு அறிவித்த மச்சினரைக் கண்டு பேசி மேற்படி மரண சாசனம் எழுதப்பட்ட விதமறிந்தபின், வீட்டின் முன் போடப்பட்டிருந்த ஷாமியானாப் பந்தலின் கீழ் எனக்கான இருப்பிடம் தேர்ந்தமைந்தேன். இறந்தவரது உறவினர்கள் ஒவ்வொருவராய் கையில் ரோஜாப்பூ மாலையுடன் வருவதும் அவருக்கு அந்த மாலையை அணிவித்து வணங்குவதும் பின் சென்றமர்வதும் தொடர்ந்தது. கிடந்தவரைச்சுற்றி அவரது மனைவியும் இரு மகள்களும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தத்தம் ஞாபக அடுக்குகளிலிருந்து அவரவர் நினைவைக் கொண்டுவந்து திடீர் திடீரென பெருங்குரலெடுத்து அழுது வந்தனர். இவ்வாறு தொடர்ச்சியின்றி அழுவதுதான் அவர்களுக்கும் நல்லது. இறந்தவரது நினைவு தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அழுகை தொடர்ந்து கண்ணீர் வற்றி உடலும் சீக்கிரமே சோர்ந்துவிடும். பின்னர் வரும் சிலருடன் சேர்ந்து அழமுடியாவிட்டால்அவர்களின் புற ஏச்சுக்கு ஆளாக நேரிடலாம்!

சற்றே கண் மூடியவாறு யோசனையிலிருந்தபோது, என் நாசியினுள் இதுவரை வரிசைகட்டிய வாசனைகளை எப்படியோ இறுதியாகச் சேர்ந்த இந்த ரோஜா மாலைகளின் வாசனை மல்லுக்கட்டி வென்றிருந்தது . அப்போது மூக்கின் வாயிலில் நின்றுகொண்டு சாராய வீச்சம் கதவைத் தட்டிக் கொண்டிருந்தது. கண்விழித்துப் பார்க்க, இறந்தவரது வயதுக்காரர் ஒருவர் வாய் வழியாக புஸு புஸூ-வென மூச்சை விட்டு, அழ முடிந்தும் முடியாமலும் தவித்து முணுமுணுத்துக் கொண்டிருந்தார். இந்த நெடியால்கூட உள்ளிருக்கும் மயக்க நெடியை அணுக முடியவில்லை.  அவர்,

“இவன எனக்கு மொத மொதலா அவன் கல்யாணமாகி இந்த தெருவுக்கு குடி வந்தப்ப இருந்து நாப்பது வருஷமாத் தெரியும். அவனோட எகத்தாளப் பேச்சும் எதார்த்தமான பழக்கமும் பிடிச்சுப்போக பின்னாடி நாங்க ரெண்டு பேரும் சேக்காலிகளானோம். அவன் சம்சாரம் ரொம்பவும் அப்பிராணி .சின்னது முதற்கொண்டு பெருசுக வரைக்கும் அவனுக்கு எல்லாரும் ஒன்னுதான். யார்கிட்டயும் மரியாதை கெடையாது, பயமும் கெடையாது. இன்னாருன்னு பாக்க மாட்டான். ஏகத்துக்கும் வசவு வார்த்தைகள்ல ஏசுவான், யாருன்னும் பாக்காம எதுனா ஒன்னுனாக்க ஓடி வந்து நிப்பான்.அதுதான் அவன் குணமேனு தெரிஞ்சப்புறம் யார்ட்டையும் ஒரு பிரச்சனையுமில்ல… எல்லா சனமுட்டையும் நல்லாப்பேசிப்பழகுவான்.. நானும் அவனும் வேணுமிண்ட்டே சில தப்பும் தவறும் செஞ்சோம், குடியும் புகையும் கூட அப்படி பழகுனதுதான். அவனால் தொடாமயிருக்கவும் முடியும்  விடாம குடிக்கவும் முடியும். ஆனா நா அப்படியில்ல .இந்தா இன்னைய வரைக்கும் பழகுனத விடமுடியாம குடிச்சுட்டுதான் இருக்கேன். இந்த தெருவில் எங்களத் தெரியாத ஆளுகளே இல்ல . அத்தனை பேரையும் கேலி கிண்டல் செய்வதில் என்னைக் காட்டிலும் அவன்கெட்டிக்காரன். இத்தனைக்கும் ஒருத்தர் இதுவரை திரும்பி கோவிச்சதில்ல, அவங்கவங்க வரம்பு தெரிஞ்சவன். ஒரு தடவ ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சுவாரசியத்துக்காக ஏன்  திருட்ட செஞ்சுப்பார்க்கக் கூடாதுனு முடிவு செஞ்சு ஒருநா ராத்திரி வயிறு முட்டக் குடிச்சுட்டு, தோள்ல கிடந்த துண்டால்ல முகத்த மூடிகிட்டு இங்க தெருவுக்குள்ளாறையே இறங்கிபோனோம் . முன்னாடி பத்தடிக்குள்ளாற இருக்குறது கூட தெரியாதபடி அமாவாசை கும்மிருட்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் முன்னாடி ஒவ்வொரு மரம், ஒவ்வொன்னுக்கும் ஓரொரு வாசனை வந்தபடியிருக்க, ஒரு வீட்டுக்கு முன்னாடி போனா, அங்கயிருந்த முல்லைச்செடி அன்னைக்குப் பூத்ததோ என்னவோ லேசான காத்தடிச்சதுக்கே பூவாசம் பலமா மூக்க துளைக்கவும் இங்க வேண்டாம்னான், அடுத்து போனாக்க இன்னொரு வீட்டுக்கு முன்னாலயிருந்த முருங்கை மரம் காத்துல அசைஞ்சது பாக்க வான்னு சொல்லியோ போன்னு சொல்லியோ  கைய்ய ஆட்டுனதபோல ஆட , மொத்த முருங்கைமரத்துப் பூவும் கொட்ட, வாசம் மேக்கொண்டு போதையேத்த அங்கயும் வேண்டாம்னு முடிவு செஞ்சு மெல்ல நடந்தோம், இருட்டுக்கும் பல வாசனைக இருக்குபோல நாங்க அடிச்சிருந்த சரக்குக்கும் மேல, அந்த தெருவே,ஏதோ பூவைக் கொண்டு சூனியம் வச்சதப்போல பல வாசனைங்க சுத்தி சுத்தி அடிக்க என்னால மேற்கொண்டு நகரமுடியல, அவன் மட்டும் கடைசியாத் தட்டுத்தடுமாறி ஒரே மாதிரி இருந்த அடுத்த தெருவுக்குள்ள போயி  ஒரு வீட்டுக்குப்  பின்புறமா கேட்டு மேல ஏறி இறங்கிட்டான். கண்ணைக் கசக்கிவிட்டுப் பாத்தா அது அவன் வீடு மாறித் தெரியுது…எனக்கோ மயக்கமாயிட்டு… அந்த இருட்டிலும் போதையிலும் அது தன்னோட வீடுதான்னு அடையாளமில்லாம மெல்ல பூனையப்போல பின்பக்க கதவினைத் திறக்க கைவச்ச அதே நேரத்துல, திடீர்னு உள்ளயிருந்து லைட்டைப் போட்டுகிட்டு அவ சம்சாரம் கதவைத் திறந்து வெளியே கொள்ளைக்கி கழிக்க வந்திருக்கா. ரெண்டும் ஒருத்தரை ஒருத்தர் தெகச்சுப்போயி பாக்க, அவளுக்கிருந்த அரை தூக்கக் கலக்கத்துல, நீ…நீ… யாரு… திருடனா… கேட்ட சாத்தியில்ல வச்சிருந்தேன்! எப்படி உள்ள வந்தனு ஆவேசமா கேட்டாளாம், கேட்டதுல கொஞ்சம் போதை தெளிஞ்ச இவன் முகத்துத் துண்ட இறக்கிவிட்டு, அடி லூசு நான் திருடன் இல்ல உன் புருஷன்னானாம்! எப்புடியிருக்கு கதை பாத்தீங்களா… அப்புறம் ஒரு சமயம் இதவச்சு  அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் சண்டவர, நடந்த எதையும் காட்டிக்காம நாம் போயிதான் ரெண்டுபேத்துக்கும் சமாதானம் செஞ்சு வச்சேன், வருஷந்தவறாம நானும் அவனும் இதைச் சொல்லி சிரிக்காம இருந்ததில்ல”.

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இடையில் சில நொடிகள் அவருக்கே தெரியாமல் அவர் சொன்ன வாசனைகளை அந்த தெருவுக்குள் சென்று முகர்ந்து வந்தேன், அந்த இருட்டில் அவர்களுக்கு தெரியாமல் மறைந்து நின்று கொண்டு . மூக்குக்கு கொஞ்சம் தேவலையாய் இருந்தது. இதைப்போல் நிறைய சொல்ல உண்டென்றாலும் அவருக்கு நா தழுதழுக்க சொல்வதை நிறுத்திவிட்டு அழுக ஆரம்பிக்க என்னால் மட்டும் எப்படி சிரித்துவிட முடியும் .அதுவும் இந்த  மாயவாசணை பிடியிலிருந்துகொண்டு!

இறந்தவரின் வீட்டிற்கு எதிர்த்தார் போலிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியிலிருந்தும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு ஆட்கள் வந்து துக்கம் அனுசரித்தது, காண மெச்சும்படியாகயிருந்தது.. அக்கம் பக்கத்தாரின் அன்பும் கரிசனமுமற்ற இந்த தரித்திரம் பிடித்த மாநகர வாழ்வியல் பழக்கத்துக்கு நடுவே அம்மக்கள் வந்திருந்தது அவர்கள் இன்னும் இந்த கேட்டிற்கு ஆட்படாதவர்களாக காட்டியது. அதில் ஒரு ஒல்லியான தேகம் கொண்ட பெண்மணி  மூன்று வயதுக்குள்ளிருக்கும் தனது குழந்தையிடம் படுத்துக் கிடந்தவரைப் பார்த்து வணங்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையும், நேற்றே தளிர்ந்த புதிய இளம் மல்லிகைப்பூ மொட்டுகள் போன்ற தன் பிஞ்சு கைகளினால் கரம் குவிக்க தவித்துக் கொண்டிருந்தது, மனதில் தோன்றிய ஆச்சரியத்தை கண்களில் மறைத்தேன். பின்னர்தான் கேட்டுத் தெரிந்து கொண்டேன், இவர்தான் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு முழுநேரக் காவலாளியாக இருந்து வந்திருக்கிறார். அந்த அடுக்குமாடி குடிமைகளிடம் வெகு சகஜமாகப்பேசிப் பழகி அனைவரது அன்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார். தன் சொந்த வீட்டில் இருப்பது போலவே இருப்பார். தான் காவலாளி மட்டுந்தான் அடிமையில்லை என்பதால் எவர் வந்து போயினும் கைதூக்கி வணக்கம் செலுத்தியதில்லை. ஆனால் அனைவரிடமும் அவர்கள் நலம் பற்றியும், என்றோ ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு வந்து போன உறவினர்களையும் நண்பர்களையும்கூட ஞாபகம் வைத்து விசாரிப்பார். ஒவ்வொரு வீட்டின் பிரச்சினைகள் பற்றி அறிந்து வைத்திருப்பார். அதற்கு சமயம் பார்த்து அவர்களுக்கு ஆலோசனைகளும் சொல்வதுண்டு. இரண்டரை வயதாகியும் காலூன்றி நடக்க வராத அந்த குழந்தையை அந்த பெண்மணியிடம் உரிமையுடனே வாங்கி இனி குழந்தையை தினமும் அவரிடம் விடும்படி சொல்லியிருக்கிறார். அவர் அந்த குழந்தையுடன்அவ்வளவு விளையாடுவார். சாப்பிடவைப்பார், கைகால்களை அமுக்கி நீவிக் கொடுப்பார், நடக்கப்பழக்குவார். ஒருநாள் அந்த குழந்தை அவன் வீட்டில் தானாக எழுந்து நின்று நடந்திருக்கிறான். பார்த்த பெத்தவர்கள் சந்தோஷத்தில் குழந்தை தானாய் நடந்த விசயத்தை இவரிடம் எடுத்து சொல்லி அவருக்கு நன்றி சொல்ல முற்பட்டபோது. அவர்தடுத்து,

“நன்றியா… எதுனா வாயில வந்துட போகுதும்மா… நடக்கவேண்டிய பையன் நடந்துருக்கான், அடுத்து எப்ப ஓடுவான் வெளையாடுவான்னு போயி பாரும்மா போம்மா” என உரிமையுடனேயே கடிந்து கொண்டிருக்கிறார். அது முதல் அந்த குழந்தை தினமும் இன்று மதியம் அவருக்கு நெஞ்சு லேசாக வலிக்கும் வரை அவருடனே விளையாடி வந்திருக்கிறான்.

அதுதான் அவரது இயல்பு. யாரென்றும் பார்க்க மாட்டார். அவர் எவ்வளவு பழக்கமானவரென்றும் பார்ப்பதில்லை. தனக்கு தோன்றியதைச் சொல்லிக்கொண்டேயிருப்பார். இன்றேனோ படுத்துறங்கிக் கொண்டேயிருக்கிறார். அவர்கூட பேசும் அத்தணை பேரும் இங்கிருக்கின்றனர். ஆனால் அவர் வாய்மூடி மௌனச்சாமியார்போல் கண்மூடி சயனம் கொண்டுள்ளார். ஒரே நேரத்தில் அனைவரிடமும் ஏகக் கோபம் போல. சட்டென என் முன்னால் ஒரு பழைய டி.வி.எஸ் சாம்ப் வண்டி வந்து நின்றது. வண்டியிலிருந்தவர் என்னிடம் யார் இறந்ததென்றுகேட்டார், இதோ இந்த அபார்ட்மென்ட்ல வாட்ச்மேனா இருந்தவரென்றேன். நம்ம நடராஜன் அண்ணனா… ஏங்க.. நடராஜன் அண்ணனா…? அவரது பதட்டத்திற்கு இருமுறையும் ஆமாமென்றேன். பின்னர் அவ்விடமிருந்து விரைந்தவர் சற்று நேரம் கழித்து கையில் ரோஜாப்பூ மாலையுடன் வந்து அவரது அண்ணனுக்கு மாலையணிவித்து விட்டுச் சிறிது நேரம் மௌனமாய் மிகவும் இருகி நின்றார்.. அவர் நடராஜனுக்கு எவ்வகையிலும் சொந்தமில்லை என்று அறியமுடிந்தது. ஆனாலும் அவருக்கு இவரும் இவருக்கு அவரும் மிகவும் தேவைப்படுபவர்கள் என்பது அவரது இறுக்கமடைந்த முகம் உணர்த்தியது.

நேரமாக ஆக ரோஜாப்பூ மாலைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போனது. அதனோடு அதன் நெடியும். ஏற்றி வைத்ததுபோக மீண்டும் பத்திகள் ஏற்றப்பட்டதாகத் தெரியவில்லை, ஏற்றுவாருமிலர். பன்னீரும் தெளித்துவிடப்பட்டதாக நினைவில்லை, தெளிப்பாருமிலரே. ஆனால் இந்த ரோஜாப்பூவின் நெடி மட்டும் ஏறிக்கொண்டே செல்கிறது. அப்போது தெருக்கோடியிலிருந்து ஐம்பது வயதில் ஒரு பெண் ஒப்பாரி வைத்தபடியே இவரை நோக்கி வந்து கொண்டிருந்தார்,

“நான் ரேஷங்கடைக்கு போகையிலவாரையில… மடியில என்ன கனமுனு கேட்டீங்களே,!”

“நான் தண்ணிகொடம் தூக்கிப் போகையில… ஒருகை பிடிக்கவான்னு கேட்டீகளே!”

“நான் தனியாத்தான் போயிவர பயமிருந்தா… துணையா வரவான்னு கேட்டீகளே!”

“அத்தனைக்கும்… நான் மாட்டேன்னா சொன்னேன்னு கோபம் கொண்டு… என்னைக் கேக்காம கொல்லாம எங்கதான் போனீகளோ!”, ராகம் தொடர்ந்தபொழுது… இவர் குணமறிந்திருந்தும் இவரின் மனைவி மற்றும் மற்றவர்களின் முகத்தில் அழுகை  சற்றே மாற்றம் கொண்டது. அந்த பெண் கொண்டுவந்து மாலையிட்டது மட்டுமே மற்ற ரோஜா மாலைகளிலிருந்து மாறுபட்ட சம்பங்கி மாலை.