மருத்துவமனைகளின் இறுக்கமான மௌனங்களை என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. பார்வையாளர்களுக்கான தனியறையில் ஜூடி என்னை விட்டுச்சென்ற போது பணக்காரத் தோற்றம் கொண்ட இளைஞன் ஒருவன் போதையில் கண்கள் சிவந்து ஒரு மூலையில் ஏதும் செய்யாமல் அமர்ந்திருந்தான். அவ்வறையின் வாயிலை நெருங்கிய போதே ஜூடி கட்டைவிரலை தூக்கி மற்ற விரல்களை மடக்கி வாயருகே வைத்துக்காண்பித்துவிட்டு அவனிடம் பேச வேண்டாம் என்று சைகையில் சொல்லிவிட்டுப் போனாள். அவள் சொல்லவில்லை என்றாலும் அறை முழுவதும் வியாபித்திருந்த ஆல்கஹாலின் நெடி என்னை அவனிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லியிருக்கும். அவன் என்னிடம் எதுவும் பேசவில்லை.

ஜூடியும் எனக்கு அவனை அறிமுகப்படுத்தவில்லை. ஆனாலும் அவனை எனக்குத் தெரியும். அவன் மைக்கேலாகத்தான் இருக்க வேண்டும். ஷெர்லி என்னிடம் மைக்கேலைப் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறாள். சிலமுறை இருவரும் எடுத்துக்கொண்ட படங்களை ஷெர்லியின் கைப்பேசியில் எதார்த்தமாக பார்த்திருக்கிறேன். மற்றபடி இருவரும் முதல் முறையாக சந்தித்துக்கொள்கிறோம். இன்னும் சரியாக ஒரு மாதத்தில் ஷெர்லிக்கு திருமணம். மைக்கேலைத் தான் ஷெர்லி திருமணம் செய்யவிருந்தாள். மைக்கேலுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் எது பேசினாலும் அவனுக்கு இப்போது புரியாது.

அவனருகில் அமர்ந்தாலாவது கொஞ்சம் இறுக்கத்தை தளர்த்த முடியும் என்றெண்ணி மெல்ல அவனருகில் நடந்துச் சென்றேன். அச்சமயம் வேகமாக உள்ளே நுழைந்த இன்னொரு இளைஞன், நேராக மைக்கேலின் அருகில் வந்து அவன் தோளை பிடித்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்தான். அவன் தன்னை ஜிம்மி என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனது வார்த்தைகளைக் கேட்ட மைக் (மைக்கேல்) உடைந்து அழ ஆரம்பித்தான். நான் இன்னும் மைக் அருகில் வரவில்லை. அவன் அழுவதைப் பார்த்ததும் நான் அப்படியே நகராமல் நின்று கொண்டேன். ஜிம்மி மைக்கின் தோளில் ஆறுதலாகத் தட்டிக்கொடுத்துவிட்டு என்னிடம் நகர்ந்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் நான் என்னை ஜோ என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஜிம்மி வந்ததில் ஒரு பெரும் இறுக்கம் அவ்வறையை விட்டு நீங்கியிருந்தது. ஜிம்மி யார் என்று எனக்குத் தெரியாது.

கேட்க முனைந்த போது வாடிய முகத்துடன் ஜூடி உள்ளே நுழைந்தாள். ஷெர்லிக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஒதுக்கியிருப்பதாகச் சொன்னாள். மைக் இப்போது இன்னும் கதறி அழ ஆரம்பித்தான். எனக்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. ஜூடி எங்கள் மூவரையும் அழைத்து, ஷெர்லி எங்களை பார்க்க ஆசைப்படுவதாக சொன்னாள். ஜூடி இன்னும் தைரியமாக இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் மகளின் இறப்பை ஒரு தாயால் எப்படி எதிர்கொள்ள முடியும்? அதுவும் இன்னும் முப்பது நாள்களில் மகளின் திருமணம். ஜூடியை தழுவிக்கொண்ட போது அவள் உடல் கொதித்துக்கொண்டிருந்தது. அமைதியாக இருவரும் சில நொடிகள் நின்றிருந்தோம். பின் எதுவும் பேசாமல் மைக் மற்றும் ஜிம்மியை பின் தொடர்ந்து ஷெர்லியின் அறையில் நுழைந்தேன்.

மைக் ஷெர்லியின் கையை இறுகப் பற்றிக்கொண்டு தான் இன்னும் தயாராகவில்லை என்று ஈனக்குரலில் சொல்லிக்கொண்டு அழுதுகொண்டிருந்தான். நான் பார்த்த ஷெர்லியா இது? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு ஷெர்லியின் உடல் வீங்கிப் போயிருந்தது. அவள் ஆலிவ் கண்கள் உள்வாங்கி, கண்ணீரால் பிசுபிசுத்துப் போயிருந்தது. ஜிம்மியை சைகையால் மெல்ல அழைத்து ஏதோ பேச முனைந்தாள். ஜிம்மி முதல் முறை கண்ணீர் சிந்துகிறான். அவள் முன் முழங்காலிட்டு மெல்ல கையில் முத்தமிட்டான். பின்னர் என்னை அழைத்தாள். அவள் முகத்தில் அவ்வளவு வேதனையிலும் ஒரு புன்னகை வந்து மறைந்தது. உடலெங்கும் பலவிதமான குழாய்கள் பொறுத்தப்பட்டு மருந்துகள் அவள் உடம்பினுள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. என் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு தான் விடைபெறுவதாக சொன்னாள்.

அவ்வார்த்தைகளுக்கு எனக்கு பொருள் புரிந்தவுடன் என் கண்களில் நீர் துளிர்த்து அவள் கைகளில் விழுந்தது. நான் அவள் கைகளில் முத்தமிட்டேன். மெல்ல சிரித்துக் கொண்டு முத்தங்களை சேமித்துக்கொண்டவள் போல கைகளை பின்னுக்கு இழுத்துக்கொண்டாள். அதற்கு மேலும் அங்கு நிற்க எனக்கு முடியவில்லை. தேவதையாக பிறந்து, தேவதையாக வளர்ந்தவளுக்கு மரணம் சம்பவிக்கும் – அதுவும் இவ்வளவு இளவயதில் – என்றால் யாரால் தான் நம்ப முடியும்? ஷெர்லியின் அப்பா பத்து வருடத்துக்கு முன் இறந்துவிட்டார். இப்போது அம்மா – ஜூடி – மட்டும் தான். திருமணத்துக்காக சேர்த்தவைகளை இப்போது ஷெர்லியின் இறுதி சடங்கிற்கு செலவளிக்க வேண்டும். மருத்தமனை செலவுகள் அதில் பாதியை ஆக்கிரமித்துக்கொண்டதால் இப்போது கொஞ்சம் சிரமம் தான். இனியும் பிழைக்கப்போவதில்லை என்று தெரிந்ததும் ஜூடி மருத்துவத்தை நிறுத்தச் சொல்லிவிட்டாள். ஷெர்லியின் நீல விழிகளையும் எடுப்பான தாடையையும் கண்டவர்களுக்கு இப்போதிருக்கும் ஷெர்லியைப் பார்த்தால் இரத்தக் கண்ணீர்தான் வரும்.

மருத்துவமனை அவளை மிகவும் களைப்படைய வைத்துவிட்டது. இனிமேலும் மருத்துவம் பார்த்து அவளை பிழைத்திருக்கச் செய்வது, அவளின் வேதனைகளை மட்டுமே பெருக்கும் என்பதால் தான் ஜூடி இந்த முடிவை எடுத்திருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் மருத்துவ பணியாளர்கள் ஷெர்லியின் உடலில் இணைக்கப்பட்டிருக்கும் எல்லா குழாய்களையும் துண்டித்துவிடுவார்கள். ஷெர்லி மெல்ல மூச்சடங்கி பிரேதமாகப் போகிறாள். ஒரு தேவதையின் மரணத்தை பார்க்கும் வலு என் மனதிற்கில்லை என்பதால் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டேன். சிறுநீரகம் செயலிழந்து கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து இன்னும் பல உபாதைகளால் வேதனையுற்று மரித்து போகவிருக்கும் ஷெர்லியினுடனான என் நினைவுகள் காட்சியாக மனதில் ஓடத்துவங்கியது.

சூரியன் ஒளிராத குளிர்கால நண்பகல் ஒன்றில் என் சகபணியாளர்களால் ஏமாற்றப்பட்டு மனம் நொந்து போயிருந்தேன். தொழில்முறையாக ஏமாறுவதைவிட, நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது என் முகத்தில் யாரோ காறி உமிழ்ந்தது போன்று வலித்துக்கொண்டிருந்தது. இது என் சொந்த நாடில்லை. இங்கே எனக்காக யாருமில்லை. அப்படிப்பட்ட சூழலில் ஒரு சின்ன ஏமாற்றமும் இந்த மாபெரும் தேசத்தை ஒரே நொடியில் சிறைக்கூடமாக மாற்றிவிடுகிறது. ஊரில் இருப்பவர்களிடம் நடந்ததை சொன்னால் யாருக்கும் புரியாது. அமெரிக்காவின் வசீகரங்கள், என் தோல்வியின் வேதனைகளை யாருக்கும் சொல்லிவிட முடியாதபடி ஆக்கிரமித்திருக்கிறது. கடவுள் மட்டும் தான் இப்போதைக்கு என் ஆறுதல் என்பதால் கண்ணில் தெரிந்த ஒரு சர்சினுள் சென்று அமைதியாக கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். அங்கிருந்த கடவுளர்களின் சொரூபங்கள் அமைதியாக என்னை பார்த்துக்கொண்டிருந்தன. அமைதியில் என் வேதனைகளை அவர்களுடன் பகிர்ந்துக்கொண்டிருந்தேன். அடர்ந்த மௌனத்தை ஒரு மெல்லிய இசை கலைக்க ஆரம்பித்தது.

நான் யாரென்று திரும்பிப்பார்க்கவில்லை ஆனால் கண்டிப்பாக எனக்கு பின்னால் சில மீட்டர் தூரத்திலிருந்த பியானோவை யாரோ மீட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. கண்களை மூடிக்கொண்டு என் வேதனைகளை மீண்டுமாக கடவுளிடம் முறையிடத் தொடங்கினேன். இப்போது இசை இன்னும் கொஞ்சம் பெருகி ஆலயம் முழுதும் வழிந்தோடியது. என் வேதனையின் குரலுக்கு செவிமடுத்து கடவுள் சில வானதூதர்களை அனுப்பியது போல உணரத் துவங்கினேன். அனுப்பப்பட்ட வானதூதர்கள் என்னை ஆரத் தழுவிக்கொண்டது போல இசை மேலும் மேலும் வளர்ந்துகொண்டே சென்றது. எவ்வளவு நேரம் கழிந்தது என்று தெரியவில்லை ஆனால் ஒரு புள்ளியில் இசை முடிந்து என்னை விழிப்படைய செய்தது. இப்போதும் கடவுளர்கள் என்னை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் கருணை கூடியிருந்தது. யார் அந்த மயக்கும் இசையை வாசித்ததென்றறிய பின்னால் திரும்பிப் பார்த்தேன். அங்கே வானத்திலிருந்து இறங்கி வந்தவளைப் போன்ற ஒரு யுவதி அமர்ந்திருந்தாள். இப்படித்தான் நான் முதலில் ஷெர்லியை சந்தித்தேன். மெல்ல அவளிடம் சென்று இசை மீட்டியதற்கு நன்றி தெரிவித்தேன். ஆலிவ் பழங்களை போன்ற தன் நீல விழிகளை உருட்டி அழகாக சிரித்தாள்.

அவளது சிரிப்பு சங்கிலி தொடர் விழைவை போல இருந்தது. முதலில் கண்கள் உருட்டியதை சொன்னேன் அல்லவா? அதை தொடர்ந்து இதழ்கள் மெல்ல விரிந்து பற்களை கொஞ்சம் வெளியே காண்பித்தது. அதைத் தொடர்ந்து எடுப்பான தாடை தன் இருப்பை காட்டிய அதே வேளையில் இடப்புற கன்னத்தில் சின்ன குழி தோன்றி மறைந்தது. இவ்வளவுக்கு பிறகு புன்னகை என்ற பெயரில் அவளிடமிருந்து புறப்பட்ட அது, என்னையடைந்ததும் இதயத்தின் ஆழத்திற்குள் சென்று குதியாட்டம் போட்டது. ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். பியானோ வாங்க வீட்டில் வசதியில்லாததால் இப்படி சர்சில் அனுமதி வாங்கிக்கொண்டு பயிற்சி செய்வதாக சொன்னாள். தனக்கு விருப்பமான இசைக்கலைஞர் இத்தாலியை சேர்ந்த லுடுவிக்கோ எனௌடி (Ludovico Einaudi) என்றும் அவரின் நுவோலே பியாங்கேவைத் (Nuvole Bianche) தான் இன்று வாசித்ததாக சொன்னாள். என்னுடைய குறைந்த அனுபவத்தில் சொல்வதென்றால், ஷெர்லி மட்டும் தான் என்னிடம் எந்தப் பாகுபாடும் இன்றி பேசிய ஒரே ஆள் என்பேன். பேசிய கொஞ்ச நேரத்தில் மிகவும் நேசத்துடன் பழகினாள். கைப்பேசி எண் கொடுத்தாள். அந்நிய நிலத்தில் கண்ணீரைக் காய்ச்சிக்கொண்டிருந்த எனக்கு அவளின் ஸ்பரிசம் பெரும் விடுதலையை நல்கியது.

அதன்பிறகு அடிக்கடி அவளை நான் சர்ச்சில் சந்தித்தேன். கடவுளர்களின் துணையோடு எனக்கு மட்டும் அவள் பியோனோ வாசித்து அரங்கேற்றம் செய்துகொண்டிருந்தாள். இசை எங்களிருவரையும் பிணைத்தது. என்னை சில முறை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறாள். அப்போது தான் எனக்கு ஜூடி பழக்கம். ஜூடியை பெயர் சொல்லி அழைப்பது கலாச்சார ரீதியாக எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதைத்தான் அவர்கள் விரும்பினார்கள் என்பதால் நானும் பழகிக்கொண்டேன். ஒருநாள் ஷெர்லிக்கு சாக்லெட் வாங்கிச் சென்றிருந்தேன். நாகரீகமாக அதை வாங்க மறுத்தவள் பின்னர் தயக்கத்துடன் தனக்கு நீரிழிவு இருப்பதாக சொன்னாள். எனக்கு அது பெரும் ஆச்சரியமல்ல. நான் சந்தித்த ஏழு வயது சிறுவனுக்கு நீரிழிவு இருந்தது. அதன் பிறகு மிகவும் தேடிக் கண்டுபிடித்து டார்க் சாக்லெட் வாங்கிக்கொடுத்தேன். அதில் 85% கோகோ கொண்டது என்பதால் கசப்பு இனிப்பை கட்டுப்படித்தியிருக்கும். அதை அவள் சாப்பிடும் போது சின்ன சிரிப்புடன் முகம் சுளிப்பாள், அதற்காகவே அதை வாங்கிகொடுப்பேன். அப்படி சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டிருந்த அன்றுதான் முதல்முறை மைக்கேலைப் பற்றி அவள் சொன்னாள்.

இப்போது சாக்லெட்டின் கசப்பு என் மனதிற்கு பரவியது. மூன்று வருடங்களாக காதலிக்கிறார்களாம். அடுத்த நாள் அவள் என்னை சந்திக்க வந்த போது பீத்தோவனின் மூன்லைட் சொனாட்டா வாசிக்க கேட்டுக்கொண்டேன். அவளும் துயரம் வழிந்தோடும் மூன்லைட் சொனாட்டாவின் முதல் நிலையை அனுபவித்து வாசித்துக்கொண்டிருந்தாள். அவள் வாசித்துக்கொண்டிருந்தபோது உண்மையில் தேவதையாகவே தெரிந்தாள். துயரத்தின் கீதம் பொங்கி வழிகையில் இவளுக்கு என் மனதில் இருக்கும் எதுவும் தெரியாதா? யாராவது இவளுக்கு என் மனதின் ஆசைகளை சொல்லிவிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. இதுவரை சந்தித்திராத மைக்கேலின் மீது ஒரு பொறாமை உருவானது. மூன்லைட் சொனாட்டாவின் முதல் நிலையை கடந்து இரண்டாம் நிலையை தவிர்த்து மூன்றாம் நிலையை ஷெர்லி வாசிக்க ஆரம்பித்தாள். பேய்பிடித்தவளை போல அவள் கரங்கள் பியானோ எங்கும் விளையாடியது. நான் எதுவும் சொல்லாமல் அவளை ரசித்துக்கொண்டிருந்தேன். இசையின் முடிவில் வேகமாக பியானோவை விட்டு ஓடிவந்து என்னைக் கட்டியணைத்துக்கொண்டாள். என் காதுகளில் தான் மைக்கின் நெருக்கத்தை தவறவிடுவதாக சொல்லி என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அன்றிரவு என்னுடன் சேர்ந்து அவளும் குடித்தாள். நான் ஓரளவுக்குத்தான் அவள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் எதுவும் சொல்லவில்லை. போதையில் நெடுநேரம் மைக்கேலை பற்றி மட்டும் பேசி என்னை வயிறெரியச் செய்தாள். எனக்கு இன்னும் நிதானம் தவறவில்லை. திடீரென இத்தாலிய மொழியில் ஏதோ பாடிக்கொண்டு என்னை ஆட அழைத்தாள் ஷெர்லி. என் கையை எடுத்து அவள் இடுப்பில் வைத்துக்கொண்டு என்னை ஆடச் சொன்னாள். ஆடலின் இடையில் தான் என்ன பாடுகிறேன் என்று புரிகிறதா என்று வினவினாள். இல்லை என்று தலையாட்டினேன். நாங்கள் முதல்முறை சந்தித்த போது அவள் இசைத்த நுவோலே பியாங்கேவின் வரிகள் என்று சொன்னாள். எனக்கு அர்த்தம் புரியவில்லை. அவள் விருப்பத்துக்காக சில நிமிடங்கள் அவளுடன் ஆடிக்கொண்டிருந்தேன். பின் அவளை வீட்டுக்கு அழைத்துச்சென்ற போது டெக்ஸாஸில் இருக்கும் தன் நண்பன் ஒருவனைப் பற்றி சொல்லிக்கொண்டு வந்தாள். அவன் நன்றாக பியானோ வாசிப்பான் என்பதையும் இவர்கள் இருவருக்கும் ஏதோ காரணத்தால் பிரிந்துவிட்டார்கள் என்று மட்டும் புரிந்தது. அவளை வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு அவளை சந்திப்பதை குறைத்துக்கொண்டேன்.

ஆனால் சந்திக்கும் போதெல்லாம் மைக் பற்றி பேச அவள் தவறியதில்லை. What are words என்ற பாடலை பாடிய படி கடைசியாக எனக்கு பியானோ வாசித்து காண்பித்த அன்று தன் திருமண நாளை எனக்கு தெரிவித்தாள். அன்று வீட்டில் நான் அவளை விடச்சென்ற போது என்னை இழுத்து உதட்டில் ஆழமான முத்தம் பதித்தாள். இதற்கு என்ன அர்த்தமாக இருக்க முடியும்? அவளுக்கு என் விருப்பம் தெரியும்தானே? ஏன் அதைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் இப்படியான ஒரு முத்தமிட வேண்டும்? எனக்கு எதுவும் புரியவில்லை. அடுத்த கொஞ்ச நாள் அவளை பார்க்கவில்லை. அப்போதுதான் அவளை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை எனக்கு ஜூடி தெரியபடுத்தினாள். அப்போதும் அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் அடுத்தமுறை என்ன பார்க்க விரும்பியதாக ஷெர்லி சொன்னதாக ஜூடி சொன்ன போது உடனே சென்றுவிட்டேன். அதுதான் ஜூடியின் கடைசி நாள் என்பது எவ்வளவு துரதிஷ்டமானது! இன்னும் இரண்டு நாளில் ஜூடியின் இறுதி சடங்கு.

நானும் அவளும் இசையால் இணைந்திருந்த அதே சர்ச்சில் ஷெர்லியின் இறுதி சடங்கு. பீடத்தின் முன்னிருந்த நீல நிற குடுவையில் ஷெர்லியின் சாம்பல் நிரப்பப்பட்டிருக்கிறது. இனிமேல் அவளை காண முடியாது என்பது எனக்கு தீராத துக்கத்தை கொடுத்தது. மக்கள் நிரம்பியிருந்த அந்த சர்ச்சில் ஜூடி அனைவரையும் சந்தித்து ஆறுதல் பெற்றுக்கொண்டிருந்தாள். மைக் மீண்டும் குடித்திருக்க வேண்டும். முதல் வரிசையில் கண்கள் சிவக்க குடுவையை ஏக்கமாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஜிம்மி ஒரு காகிதத்தில் எதையோ வாசித்துக்கொண்டிருந்தான். பிராத்தனை ஆரம்பமானது. தொழுகையின் இறுதியில் ஜிம்மி தன் இரங்கலுரையை வாசிக்க மேடைக்குச் சென்றான். ஷெர்லியினுடனான நினைவுகளை பகிர்ந்துக்கொண்டிருந்தான். ஷெர்லிக்கும் தனக்குமான காதலையும் அதன்பிறகு நேர்ந்த பிரிவையும் தேம்பலுடன் அவன் சொன்ன போது அங்கிருந்த யாவரும் கண்கலங்கினார்கள். சில தினங்களுக்கு முன் தனக்கு ஷெர்லி தான் மரணப்படுக்கையில் இருப்பதாக செய்தி அனுப்பியதாகவும், அதனால் தான் குறித்த நேரத்தில் வர முடிந்தது என்று சொல்லி ஷெர்லிக்கு விருப்பமான கவிதையை வாசிக்க ஆரம்பித்தான்.

*இருக்கட்டும் பரவாயில்லை

அவளால் இனி புரிந்துகொள்ள முடியாது

இனி அவளுடன் உங்களால் பேச முடியாது

ஏனெனில் இனி ஒருபோதும்

இந்த இதயத்தை அவளால் புரிந்துகொள்ளமுடியாது

என்று தொடங்கிய கவிதையை அவன் கேவல்களுடன் வாசிக்க ஆரம்பித்தான்.

நான் உணரும் வேதனையை

நீ புரிந்துகொள்ள வேண்டுமானால்

என்னிடம் நீ திரும்பி வர வேண்டும்.

நீ என்னிடம் திரும்பி வர வேண்டுமானால்

உன் கண்களை மூடிக்கொள்

அப்போது நீ என்னை காண்பாய்

அப்போது நீ என்னை கண்டுபிடிப்பாய்

நானோ உன்னை நினைத்து பாடல் ஒன்று பாடி

பெருமூச்சுடனும் கண்ணீருடனும்

உன்னோடு கலந்திருப்பேன்

உனையன்றி வேறொரு காதல் எனக்கில்லை

பெருமூச்சுடனும் கண்ணீருடனும்

உன்னோடு கலந்திருப்பேன்

உனையன்றி வேறொரு காதல் எனக்கில்லவேயில்லை*

கடைசி வரியை முடிக்கும் முன்பாக அழுகையை அடக்கமுடியாமல் வெடித்தழுதான். மேடையிலிருந்திறங்கி நேராக பியனோவுக்கு சென்றவன் அமர்ந்து ‘நுவோலே பியாங்கேவை’ வாசிக்க ஆரம்பித்தான். ஷெர்லியிடமிருந்த அதே நேர்த்தி ஜிம்மியிடமும் இருந்ததை காண முடிந்தது. முன்பொருமுறை ஷெர்லி என்னிடம் சொன்ன டெக்ஸாஸ் நண்பன் இவனாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பியானோவின் இசையை தொடர்ந்து மைக்கேல் தடுமாற்றமில்லாமல் கனத்த இதயத்துடன் ஷெர்லியின் சாம்பல் நிரம்பிய குடுவையுடன் வெளியேறிச் சென்றான்.

*Nuvole Bianche ஆங்கில மொழிபெயர்ப்பை தழுவிய தமிழ் வரிகள்.