“இந்தா… உப்போ எந்திரிக்கறயா இல்லயா… மணி அஞ்சரையாகப் போகுது… இந்நேரத்துக்கெல்லாம் அந்தண்ணன் வந்துருப்பாருல்ல…” மணி ஐந்தடித்து பத்து நிமிடம் ஆகியிருக்கும்போதே மாரம்மாள் கணவனின் தூக்கத்திற்குள் சென்று கூப்பாடு போடத் துவங்கினாள். மாரம்மாளின் ஞாயிற்றுக்கிழமை கடமைகள் இங்கிருந்தே ஆரம்பிக்கும்.

“ஏங்க, ஓரெடத்துக்கு வேலைக்கி போறதுன்னா, நாமதாங்க முன்னக்கூடி போவோனும்… இப்பிடி எருமக்கடாவாட்டம் கொரட்டை விட்டு தூங்கிட்டுருந்தாக்க எப்பிடீங்க…” தொந்தி வயிறு ஏறி இறங்க தூங்கிக் கொண்டிருந்த பழனியப்பனிடம் காலையிலேயே பிராது வாசித்தாள் மாரம்மாள். தூக்கத்தையும் மீறி வந்த கோபத்தை தனக்குள் அடக்கியவனாக எழுந்து அமர்ந்து கொட்டாவி விட்டபடி முகத்தை இரு கைகளாலும் துடைத்து விட்டான். முன்தினம் வாளி வைத்து பெய்து நிரம்பியிருந்த ஐப்பசி மாத மழை நீரை அள்ளி வாய் கொப்பளித்துவிட்டு இருப்பதிலேயே அழுக்கான ஒரு வேட்டி சட்டையை எடுத்து உடுத்திக் கொண்டு வெளியேறியவனுக்கு சூடாக தயாராகயிருந்த வறக்காப்பியைக் கொடுத்தாள் மாரம்மாள். எதையும் லட்சியம் கொள்ளாமல் தூங்கும் தன் இரு மகன்களைப் பார்த்தவாறே கையிலிருந்த டம்ளரை அவன் உதடுகள் உறிஞ்சுக் கொண்டிருந்தன.

சில மாதங்கள் முன்பு வரை இதைக்காட்டிலுமான அதிகாலையிலேயே எழுந்து பெரிய தூக்குவாலியைத் தூக்கிக் கொண்டு பஸ்டாண்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தவன்தான் பழனியப்பன். நொடித்துப் போன வியாபாரத்தால் வீட்டிலேயேயிருந்தவனுக்கு மாரம்மாள்தான் கவுண்டரண்ணனிடம் போய் அவரது ஞாயித்துக் கிழமை கடைக்கு பழனியப்பன் வேலைக்கு வர கேட்டு வைத்தாள். அதன்பிறகே பழனியப்பனும், இந்த நான்கைந்து வாரமாக அவரது கடைக்கு போய்வருகிறான். ”என்னைக்கு ஒரு தொழிலு முசுவில்லாம, தா ஒழைப்பையும் முதலையும் மீறி முடைஞ்சு போதோ அன்னையோட அவன் அந்த தொழில விட்ரோனும், அதையும் மீறி செஞ்சான்னா… அவனும் சேந்து முடைஞ்சு போவான்” வியாக்கியானமாய் சொன்னதுமில்லாமல் பழனியப்பன் தன் நொடிந்த வியாபாரத்தையும் விட்டுவிட்டு, சிலநாள் பஸ் ஸ்டாண்டு பழக்கடையில் இரவு நேர வேலை, சிலநாள் உழவர்சந்தையில் தனக்குப் பழக்கமான ஒருவருடன் நாட்டு எலுமிச்சைப் பழங்கள் விற்பது இன்னும் சில நாள் சில வேலைகள்னு செய்த வேலைகள் எதுவும் அவனுக்கு தோதானதாக இல்லை. ஈரோட்டு மணியம்பாளையம் மார்க்கெட்டில் வாங்கி வந்த பனியன் ஜட்டி இன்னபிற பெண்கள் உள்ளாடைகளை ஊர் ஊராகச் சென்று விற்றுக் கொண்டு வரும் மாரம்மாளின் சொற்ப வருமானத்தில் மழைக்கால நத்தையென குடும்பம் நகர்ந்து வந்தது. அன்று மாரம்மாள், கவுண்டரிடம் தயங்கித் தயங்கிக் கேட்டபோதுகூட “அட நீ வேற ஏய்ன் மாரம்மா… உனக்கு என்னத்துக்குச் சங்கடம்… இதய் போயி என்னட்ட கேக்கோனுமா என்ன…? என்ன மாரம்மா… அன்னைக்கி பழனியப்பன் சொன்னங்காட்டியுந்தான் நான் இந்த மீன் விக்குற தொழிலையே ஆரம்பிச்சு உக்கோந்தன்… நானெல்லா எங்கயோ ஏதோ ஒரு ரோட்டுல மேட்டுல வுழுந்தேன் கெடந்தேனிருந்துருப்பன்… இன்னைக்கி தகிரியமா நின்னுட்ருக்கனே… இத பழனியப்பனே எண்ட்ட கேட்டுருக்கலாமே…? எனக்குமே அவராட்டம் நேக்கு தெரிஞ்ச ஆளொருத்தரு கூடயிருந்தாக்க நல்லதுதான மாரம்மா…” என்றதுடன், இனி ஞாயிற்றுக்கிழமையானால் பழனியப்பனை வந்துவிடச்சொல்லியிருந்தார்.

தனது குலுங்கும் தொந்தி வயிற்றுடன் அந்த வடக்குத் தெருவிலிருந்து வெளிப்பட்டான் பழனியப்பன். குறுக்கிடும் கோட்டை ரோட்டைக் கடந்தால் பஸ் ஸ்டாண்டு செல்லும் பூங்கா ரோடு எதிர்படும். இதில் வரிசையாக அமையப்பெற்ற ஆடு, கோழி இறைச்சிக் கடைகளுக்கப்பால் முனிசிபாலிட்டி இறைச்சிக் கொட்டில் (மீந்த இறைச்சிகளை வைக்கும் ஃப்ரீசர்கள் உள்ள கட்டிடம்) அதற்கெதிர்த்தார் போல கட்டக் கடைசியாக கடை விரிப்பார் கவுண்டர். அந்த நெட்டில் இவரது மீன் கடைதான் எல்லை. இந்த ரோடு ஆரம்பிக்குமிடத்தில் பூங்கா அமைந்திருந்தது. அந்த விடியா இருட்டில் இளமஞ்சல் நிற நியான் விளக்கு வெளிச்சத்தில், கரிய பெரிய சதுக்கப் பூதமொன்று, தான் பொழுதெல்லாம் கையில் ஏந்தியிருந்த அனையா சுளுந்தீ கட்டையை அருகில் நிறுத்தி வைத்துவிட்டு  பெருமூச்சு வாங்க உறங்கிக் கொண்டிருப்பதான தோற்றம் கொண்டிருந்தது புதிதாகக் கட்டப்பட்டிருந்த பூங்கா. இந்த பூங்கா ரோட்டில் காலடியெடுத்து வைத்ததும் பூங்காவின் பேரமைதி இடுகாட்டு அமைதியாய் பழனியப்பன் காதுகளை கவ்விக் கொண்டது. இத்தனைக்கும் அங்கே ஒரு இருபது முப்பது பேர் பூங்காவின் காம்பவுண்ட் சுவற்றை ஒட்டி வெள்ளையும் சொள்ளையுமாக வலம் வந்து கொண்டிருந்தனர். ரோட்டுக்கு அந்தப்பக்கம் நடந்து வரும்போதிருந்த கொஞ்ச உயிர்ப்புத்தன்மையும் சட்டென காணாமல் போயிருந்தது. இந்த பேரமைதி பழனியப்பனின் செவிப்பறையின் புறத்தில் மட்டுமே, உள்ளேயிருந்து பற்பல குரல்கள் அவன் நடு மண்டைக்குள் கயமுயவென இரைந்து கேட்டுக் கொண்டேயிருந்தது…

“என்ன மீன்காரரே, மீனெடுத்தார கெளம்பீட்டீங்களாட்ருக்கே… இன்னைக்கி எங்க, திருச்சிக்கா இல்ல ஈரோட்டுக்கா?” என்றொரு குரல்,

“ஏண்டா திருவாத்தான்… எங்கூட்டுலுள்ளவன் எளவெடுக்கறதுக்குனே ஒப்பனாத்தா பெத்து அனுப்பியுட்ருக்காங்களாடா… போடா அந்தட்டம்” என தன் கடை பையனை திட்டுமொரு குரல்,

“டேய் தாயோளிகளா, எல்லாத்தையும் ஒரு எடை விடாம எழுதுங்கடா… மூட்டை கேரட்டு… ஆயிரத்து எண்ணூறுன்னு எண்ணிக் கொடுத்து வாங்கியாந்ததுடா… கொஞ்சம் அப்பிடியிப்பிடின்னு தள்ளி எடை போட்டீங்கன்னா… அப்புறம் நீயும் நானும் நடு விரலத்தான் வாயில வச்சு சப்பிக்கிட்டு வூட்டுக்குப் போவனும் பாத்துக்க…” என தன் கடை சகாக்களிடம் ஆதங்கப்படும் ஒரு குரல்.

என முன்பு இதே ரோட்டில் பழனியப்பன் தூக்குவாலியுடன் நடந்து செல்லும் போது, இங்கிருந்த தினசரி மார்க்கெட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒவ்வொரு காய்கறி, பழக்கடையிலிருந்தும் வரும் இந்த பல குரல்கள் காற்றில் கலந்தபடியே அவனுக்கு அந்த இருட்டுக்கு வழித்துணையாக பஸ் ஸ்டாண்டுக்கு சற்று முன்பு வரை கூடவே வந்தது தலைக்குள் கேட்டுக்கொண்டேயிருந்தது.

பூங்கா இங்கே வந்திடாத அன்று இந்த ரோட்டில் எப்போதுமே சனங்களின் நடமாட்டம் இருந்துகொண்டேயிருக்கும். ஒன்று காய் வாங்கவோ அல்லது கறி வாங்கவோ வந்து போய்க்கொண்டு இருப்பார்கள். அதிகாலை நான்கு ஐந்து மணிக்கு தொடங்கும் இந்த மார்க்கெட் ஆரவாரம் காலை பத்து பதினோரு மணி வரைக்கும் சலசலவென அருவி நீராய் கேட்டவாறேயிருக்கும். அப்போது பழனியப்பன் மனைவி மாரம்மாள் வீட்டில் சுட்டுக் கொண்டுவரும் இட்லி தோசையை சாப்பிட்ட பின்னரே முக்கால்வாசி பேர் கடைகளை எடுத்து வைத்துவிட்டு வீடு திரும்புவர். இதே ரோட்டின் ஆரம்பத்தில் பழனியப்பனின் மாலை நேர மீன்கடை இதோ இந்த பூங்கா இருக்குமிடத்தில் அது வருவதற்கு முன் முனையிலிருந்தது. பழனியப்பன் கடையில் எப்போதுமே (வருவலுக்கு சிறப்பாயிருக்கும் என்பதால்) உளுவை மீன்தான்” (கிழங்கான்”-னென்றும் சொல்வதுண்டு). எப்பவாவது நகரை, சங்கரா வெகு அரிதாக நெத்திலி மீன் வருவல் கிடைக்கும். பழனியப்பன் புது புது மீன்களை அவை கிடைக்கும் சீசன் பொறுத்து வாங்கி வந்து தன் வாடிக்கையாளர்களிடம் அதன் அருமை பெருமைளை சொல்லி விப்பான், “இது கூந்தல்ங்க (கடம்பா அல்லது கனவா), பாக்க இந்த படத்துல பாப்பமல்ல… ஆக்டோபசு மாதிரிதாயிருக்கும்ங்க, உடம்புக்கு ரொம்ப நல்லதுங்க” என்பார். ”இதுங் அயிலை மீனு, இதுங்க மத்தி… முள்ளு சாஸ்தினாலும் வறுத்துபுட்டா நல்லா அப்பளம்போல ஆயிடும்ங்… நம்ம மலையாளத்தானுங்க இந்த மீனுக்கோசரம் தாம் பொண்டாட்டிய காட்லும் ரொம்ப பிடிக்கும்னாக்க பாருங்க..” என்றும் தம்பட்டம் பலமாகவே இருக்கும். எந்தவொரு மீனுக்கும் ஓரொரு தம்பட்டம் பழனியப்பனிடமுண்டு.

அரிதாக கிடைக்கும் ஒன்றிரண்டு செங்கண்ணி மீனை அவ்வளவு பரமரகசியமாக குண்டாவின் அடியில் ஒளித்துவைத்து மிகவும் வேண்டப்பட்ட நெருங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தருவான். இல்லையெனில் தன் பிள்ளைகளுக்குத்தான். ஒருநாள் திருக்கை மீனை வாங்கிவர அதன் வாடை சிறுநீர் கழிக்கும் நாத்தம் போலபட்டது, சுவையும்கூட பலபேருக்கு பிடிக்கவில்லை போலும் அதன் பின் அதனை வாங்கி வருவதில்லை, ஆனால் அதன் மருத்துவ குணம் ஆஸ்துமாவையே தீர்க்கக் கூடியது. வழக்கமாக வாங்கும் மீனுடன் சிற்சில பிறவகை மீன்களும் சிக்குவதுண்டு, அதில் பழனியப்பன் மிகவும் ருசிப்பது புளோமியா, செங்கண்ணி எனப்படும் செம்மீன், சீனிக் கிழங்கான், திலேபியா, பச்சைக்கிளி மீன் வகைகள். அறவே பிடிக்காதவையும் உண்டு, மண்டைக்கெழங்கான், நாய் மீன் (கடல் விரால் குட்டிகள்) வகையறாக்கள். இந்த மேட்டூர் டாமிலிருந்து கிடைக்கும் கட்லா, ரோகு வகை மீன்களை ஒருபோதும் வாங்க மாட்டான், அவை சுவை மிகுதியானதாகயிருந்தாலும் அதற்கேற்ப முள்ளும் அதிகமிருக்கும் என்பதாலேயே. பழனியப்பனுக்கு மீனைப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் அலாதிப் பிரியம்தான், இருப்பினும் ஆறு ஏரி மீன் வகைகளை விட இந்த கடல் வகைகள்தான் உசந்தது என்பதாலும் அதனை வாங்க மட்டான்!

நிதம் என்றில்லாவிட்டாலும் இந்த சுப்பிரமணியக் கவுண்டர் எனும் ”கவுண்டர்” வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் பழனியப்பன் கடைக்கு வந்துவிடுவார் வரும்போதே மேற்படி போதையில்தானிருப்பார். உடன் குடிக்கூட்டாளி சின்னச்சாமி என்பவனும் வருவார். வேண்டுமளவு மீனை வாங்கி உண்பார்கள். அன்றும் அதிகமாக குடித்த மிதப்பில் கவுண்டரை பழனியப்பன் கடையில் விட்டு விட்டு சின்னச்சாமி தள்ளாடியபடியே சென்றான்.

”ஏன் மீன்கார்ரே, அவளை நான் கொன்றுக்கனுமா இல்லை விட்டாந்துட்டனே இதுதான் சரியா… நீங்களே சொல்லுங்க… மீன்… கா..ர்ர..ரே” எப்போதும் போல முதல் கேள்வியைக் கேட்டார் சுப்பிரமணியக் கவுண்டர்.

சரக்கிலிருக்கும் போது மட்டுந்தான் அவர் மனைவியைப் பற்றியே வாயெடுப்பார். அதுவும் பழனியப்பன் கடையில் வைத்து மட்டும்தான். முன்பு “ATC” எனப்படும் “அண்ணா போக்குவரத்துக் கழக”-த்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர்தான் இந்த சுப்பிரமணியக் கவுண்டர். அவருக்கு மனைவியும் பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். ஆனால் இந்த சந்தைபேட்டை பகுதிக்கு வந்தது முதல் இப்போது வரை இந்த ஓராண்டில் மனைவியையோ மகனையோ பார்க்கச் சென்றதில்லை. பழனியப்பன் எத்தனையோ முறை மகனையாவது ஒருதடவை பார்க்க சொல்லியும் கவுண்டர் கேட்டதில்லை. பார்த்து வந்த டிரைவர் வேலையை விட்டதனால் கிடைத்த கொஞ்ச செட்டில்மெண்ட் காசை வைத்துக் கொண்டு தனியேதான் ஜீவனம் போய்க் கொண்டிருந்தது.

”ஏன் மீன்காரரே, நான் செஞ்சது ஏதும் தப்பாட்டம் தெரியுதா உங்களுக்கு…?” கவுண்டர் தன் வழக்கமான ஆரம்ப கேள்வியை மீண்டும் கேட்டு வைத்தார்.

கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு அவர் கேட்டதுக்கு ஏற்ப இரண்டு பெரிய கெழங்கான் மீன்களை தன் இரு விரல்களால் நடுவே வகுந்து நீண்ட ஒற்றை முள்ளை எடுத்துவிட்டு அதை மீண்டும் எண்ணையில் மொறுமொறுவெனப் பொரித்து கட்டிக் கொடுத்துக்கொண்டே,

“இல்லீங்ளே கவுண்டரே… யாரு சொன்னது…? இருந்தாலும் பையனுக்காகவாது ஒரு தடவப் போய் பாத்துப் பேசிப் பாத்துருக்கலாம்னுட்டு தோனுதுங்க…”

“அடப் போங்க மீன்கார்ரே… போனா மகன மட்டும் பாத்துட்டு வந்துட முடியுமா…? அந்த தட்டுவானி முண்டை மூஞ்சியிலையும்ல முழிக்கோனும்ங்க…? (சிறிது ஆவேசம் குறைந்தவராய் மௌனித்துவிட்டு) இன்னும் என் கண்ணுலயே நிக்குது மீன்கார்ரே… முண்டைகட்டையா அந்தப் பட்ரைக்காரனோட படுத்துக் கெடந்தது…..ச்சீய்… சொல்றதுக்கே வாய் கூசுது மீன்கார்ரே…”

கவுண்டருக்கு உடனடி கேள்வியோ பதிலோ கிடத்தால் அப்போதைக்க ஆவாது என்பதறிந்த பழனியப்பன் தனதடுத்த கேள்வியைத் தொடுக்கும் முன், தட்டிலும் எண்ணெய் வடிகட்டியிலும் கிடந்த மீனின் துகள்களை ஒன்று சேர்த்து நியூஸ் பேப்பரில் வாழை இலை வைத்து மடித்துக் கொண்டிருந்தார் பழனியப்பன். பொறுத்த கவுண்டர் “யாருக்கு?” என, தனக்கு துண்டு வாழை இலைகளை இலை கடைகளிலிருந்து மெனக்கெட்டு பொறுக்கி எடுத்து வந்துதரும் கந்தசாமிக் கவுண்டர் என்கிற ”பெருசு” -க்காக இது என்றார் பழனியப்பன். பாவம் யாருமற்றவர், இந்த மார்க்கெட்டே கதின்னு கிடக்குறவர். ஐந்தாறு கடைகளில் ஏவல் வேலைகளைச் செய்து அவர்கள் தரும் பழையதுகளை வாங்கி குடித்துவிட்டு இங்கேயே அந்தக் கடைசியாக இருக்கும் காலிக் கடையில் கொசுக்கடியில் படுத்துக் கிடப்பார். அதன் பலனாய் இடது காலில் யானைக்கால் வியாதி வாங்கியவர். எப்போதும் கையில் “தி ஹிந்து” நியூஸ் பேபர் தாளினை வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் சத்தம் போட்டு படித்துக் கொண்டிருப்பார். சிறிது புத்தி சுவாதீனம் குறைந்தவர் போலத் தோன்றும் பார்ப்பவர்க்கு. பழனியப்பன் தரும் இந்த தூள் மீனுக்காக ராத்திரி எத்தனை மணியானாலும் யாரிடமோ வாங்கிய பழைய சோற்றைக் குடிக்காமல் வைத்திருப்பார். ஒருசில நாட்களில் மீன் தூளில்லை முழு மீனையேப் பிடி என்றாலும் வாங்கிக் கொள்ள மாட்டார். அதனாலேயே பழனியப்பனும் வேறு யார் வந்து கேட்டாலும் இந்த தூளினை மட்டும் கொடுக்க மாட்டார். மீண்டும் இந்த கவுண்டருக்காக,

“அது சரித்தானுங்களே கவுண்டரே… அவிய மூஞ்சி பாக்க மாட்டோம்னுட்டு   அந்த ”தட்டுவானிங்கிறவியங்களுக்கு” –மண்ணிக்கோனுங்க- ”தட்டுவானிங்கிறவியங்களுக்கு” கரிசனமா காச மட்டும் அவுங்க அக்கவுண்டுக்கு கொடுத்தவிய யாரு? உங்க தாத்தனா இல்ல எங்க தாத்தனான்னே?” –ன்னார் பழனியப்பன்

”அட ஏங்… மீன்காரரே… அவ உடம்பு நோவுக்கு வேற ஒருத்தங்கிட்ட மருந்த தேடிக்கிட்டா, ஆனா அவ மனசுக்கு… அது நாம்பாக்க நல்லத்தனமானதுதான் மீன்கார்ரரே… மனச மீறுன உடம்பு அவளுக்கு! (மீண்டும் மௌனித்துவிட்டு தாட்டியமாகவே கேட்டார்) பொறவு நான் காசு தராம வேற யார் கொடுப்பா மீன்கார்ரரே…? நான் விட்டுட்டு வந்தப்றம் எனக்கும் வெசயம் தெரிஞ்சிருக்கும்னு அவளுக்கு தெரியும்… கொஞ்ச நாள்லயே அவ செஞ்ச தப்ப உணந்துருப்பா… ஹும்… யாரோ பெத்த எனக்கு வேண்ணா அவ துரோகம் பண்ணிருக்கலாம், ஆனா அவ பெத்த மகனுக்கு அப்படியிருக்க மாட்டான்னு தோனுச்சுங்க.. பெறவும் கையில கொஞ்சம் காசிருந்தா மகன நல்லபடியாட்டம் அவப் பாத்துப்பான்னு எனக்கு நம்பிக்கையிருந்துச்சு மீன்கார்ரே அதனாலதான் வந்த பணத்துல பாதிய அவளுக்குப் போட்டுவிட்டுட்டு நா இங்கயே கடக்கறன்”

”அதுவு சரிதானுங்… நரிய கூட்டியாந்து நடுவீட்டுல வச்சு வளத்தாலும் நாயாட்டம் கொலைக்கப் போறதில்லை, அது நரியாட்டந்தான் ஊளையவுடும்ங்கறது சரிதான் கவுண்டரே… உங்க வெசயமும் அப்படித்தானயிருக்குதுங்..!”

“நாயோ நரியோ நான் செஞ்சது தப்பில்லைன்னு மட்டும் தோனுது. ஒருவேளை அன்னைக்கி ஸ்ட்ரைக்கொண்ணுமில்லாம நான் டூட்டிக்கு போயிருந்தாக்க இன்னையி வரைக்கும் எனக்கென்ன தெரியவாப் போவுது. நான் அன்னைக்கு அப்படி பாத்தப்புறமும் அவள ஒன்னும் பண்ணாம அப்படியே விட்டுட்டு வந்ததுதானுங் சரி மீன்கார்ரரே… இல்லைனாக்க ஏதாச்சும் நாங் கேக்கப் போயி, ஊரே கூடி நின்னுப் வேடிக்கை பாக்க, எங்குடும்ப மான மறுவாதியெல்லாம் ஒன்னுத்துக்குமில்லாம ஆயிருக்கும். தேன்கூட்ட நாம கலைச்சுடலாமுங்ளா…? அதா விட்டுட்டு தனியா வந்துட்டன். ஆனாலும்… அவ எனக்குப் பண்ணது துரோகம்தான பழனியப்பா…!”

வாயையும் தொண்டையையும் அடைத்தபடி குரல் கம்ம, கவுண்டரின் கண்களில் ததும்பி நின்ற நீர்ப்படலமானது பழனியப்பன் கடையில் எரிந்துகொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில், திரண்டு மிதக்கும் பாதரசத் திரவக்குளம் நிரம்பி வடிந்து விழக் காத்திருந்தது போல் தெரிந்தது!

இங்கு வந்து சேர்ந்த பிறகு கவுண்டரின் பசிக்கு மாரம்மாளின் இட்லி தோசை தேறுதல் தந்தது, அவரது மனக் குழப்பத்துக்கு பழனியப்பனுடன் பேசிக்கொண்டிருப்பதே ஆறுதல் தந்தது. தான் தனியாளாக வாழ நேர்ந்ததை பழனியப்பனிடம் இந்த ஒன்றரை வருடத்தில் இது போல பலசமயங்களில் கூறியிருப்பார் கவுண்டர். அந்த நிகழ்வுக்குப்பின் தான் பார்த்து வந்த வேலையையே இதனால் வெறுத்தவர் அதனை விட்டுவிட்டு இன்று ஒற்றையாளாய் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். பழனியப்பன் கடைக்கு வரும்போதெல்லாம் அவர் மனைவியை வசைபாடியபடியும் மகனை நினைத்து ஏங்கி புலம்பியபடியுமிருக்கும் கவுண்டருக்கு பழனியப்பன்தான் எல்லாத்தையும் மறந்துவிடும்படி சொல்லிக் கொண்டேயிருப்பார், மனிதனுக்கு சில நேரங்களில் ஞாபக மறதியும் அவசியம் தேவைதான் என்றபடியே. அவ்வபோது அவருக்கென ஒரு தொழில் இருந்தால் கவனம் அதிலே மாறும் என்றும் சொல்லியே வந்தான் பழனியப்பன்.

ஒருநாள் மார்க்கெட்டில் எல்லாரும் பரபரப்பாக ஒரு விசயத்தையே திரும்ப திரும்ப பேசிக்கொண்டிருந்தனர். நகராட்சி மூலமாக அந்த மார்க்கெட்டை காலி பண்ணி பெரிய சந்தைக்கு மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக இங்கே ஒரு பூங்காவைக் கட்டப் போவதாகவும்.

“அதெப்படி முடியும்ங்க, ஒன்னுமேயில்லாம வெரும் சீமக்கருவேலக் பொதர்காடாயிருந்த, சாராயம் வித்துகிட்ருந்த இந்த இடத்த வெட்டிச் சீராக்கி, காய்கடைகளப் போட்டு நீங்க எல்லாரும் சேர்ந்துதான சனங்க நடமாடும்படி மாத்துனீங்க. நம்ப கடைகள்லயிருந்து முனிசிபாலிடி வரி வாங்கித்தான இந்த ரோட்டையேப் போட்டாங்க, இல்லாடிபோனா தோருக்குற பஸ்ஸ்டாண்டுக்கு இந்த மலைக்கோட்டையவேச் சுத்தியில்ல போய்ட்டுருந்தம்… உப்போ இத்தினி வண்டியென்ன, லாரிங்கயென்ன  எந்நேரமும் போய்ட்டு வந்துட்ருக்காங்க… அவ்வளவு ஏன், தோ இந்த உழவர் சந்தை இருக்கிற எடங்கூட நம்பட்டயிருந்து வாங்கித்தான கட்டுனாங்க… அது மட்டுமா, தெனைக்கிம் சந்தை கேட்டு காசு (ஒருவித நுழைவு வரி) வாங்கல கடை கடைக்கு…? அப்பறம் என்ன…? நீங்க எல்லாரும் சேர்ந்து தெகிரியமா முனிசிபாலிட்டில ஒரு பெட்டிஷன எழுதி கொடுங்க… உள்ளயிருக்கறவன் ஒருத்தனாச்சும் யோசிச்சுப் பாக்கமாட்டான்னாயென்ன?”-னு பழனியப்பன் சொன்னான்.

“அடப் பழனியப்பா நீ சொன்னதயேதான் நாங்களும் போய் நேத்தே முனிசிபாலிட்டி ஆபீசுல கேட்டமுடா, அவன் என்னங்குறான், நம்பூரு மாவட்டமாகி பத்து பதினைஞ்சு வருஷமாகப்போவுது, அரசாங்க கணக்குப்பிடி பாதாளச் சாக்கடையும், பார்க்கொண்ணும், வெளையாட்டு கிரவுண்டும்ன்னு கண்டிப்பா இருக்கோனுமா, அதுக்கு தோதா நம்ப மார்க்கெட்டுதாமிருக்காம் அதுவுமில்லாம நம்பளது அந்த காலத்துல பொறம்போக்காயிருந்த எடமில்ல அதனால இந்த தடவ நம்ப இடத்த கண்டிப்பா காலிபன்னச் சொல்லீருவாங்களாட்ருக்கு, நம்பளது வேற டவுனுக்கு சென்ட்டருலயிருக்கறது அவியளுக்கு இன்னும் தோதாப்போச்சு… ஹூம் பாப்போம்… இடம் மாறித்தான் பொழைக்கோனும்னா போய்த்தான் ஆகோனும்… எல்லாம் அவன் வுட்டவழி” என மேலே கையை தூக்கிக் காட்டினார் முத்துச்சாமியண்ணன். மனதுக்குள் சஞ்சலத்தோடு அவ்விடம் விட்டு வீடு வந்து சேர்ந்தான் பழனியப்பன்.!

ஒருநாள் பழனியப்பன் கடையில், “அட எப்பிடியும் ஒரு ஆறு மாசமாவது ஆகும் கவுண்டரே எல்லாரும் இடத்த காலி பண்ணி போவ… ஆனாலும் இந்தக் கறிக்கடைங்க போவாது போலருக்கு… ஏன்னா இங்கதான் கறி கொடவுனு இருக்குதாம். காய் வாங்க இல்லாட்டினாலும் கறி வாங்க சனங்க இங்கதான வந்தாகனும். அதனால நா மறுக்கா சொல்ரேனுட்டு நெனைக்காம ஒரு தொழிலாட்டம் மத்தவிய போலல்லாம, நாஞ்சொல்றபடி கொஞ்சம் பச்சை மீன வாங்கி விக்கலாம் கவுண்டரே… அதுலயும் இந்த முள்ளில்லாத மீனுக்கு நல்ல கிராக்கி இருக்குதுங்க கவுண்டரே. நம்ப கடைக்கு வரவங்கள்ல பாதி பேருக்கு ஞாயித்துக்கிழமையானா நாந்தான் நல்ல மீனாப்பாத்து  வாங்கியாந்து தாரன். அதுலயும் முள்ளு இல்லாத வஞ்சிரம், வாவல், வெளமீன், பாறை, ஊளின்னா எவ்வளவு காசுன்னாலும் பரவால்லைங்கிறாங்க… நம்ம கடையிலயே முள்ளில்லாத மீனா விக்கலாம்னா அது கட்டுபிடியாகாதுங். அதனால நீங்க இத ஆரம்பிங்க கவுண்டரே நல்லா வரும், மீனையும் கூட மொத்த ரேட்டுக்கே வாங்குற மாதிரி ஏற்பாடு பண்த்தாரன், தெகிரியமா பன்னுங்க கவுண்டரே…!” என மீன் விற்கச் சொல்லி மன்றாடினான் பழனியப்பன். கவுண்டரும் யோசித்து விட்டு, “நாதியெத்து நாத்தமெடுத்து சாவேன்னுதான் நெனச்சேன்… ஆனா ஒரு நாத்தத்தோடயே வாழப்போறேனாட்ருக்கு பழனியப்பா… உப்பென்னா அப்படித்தான். நடந்துட்டு போவுது சரி செய்வோமென்று” -விட்டார். சும்மா சரியென்றாலும் மீன் வாங்கி விற்பதன் நுணுக்கங்கள் கைவர வெண்டுமே. அனைத்தும் விலாவாரியாக பழனியப்பன் சொல்லிக்கொடுத்தான்.

வியாபாரத்தின் தெளிச்சி சரியான பொருளை வாங்கி சரியானவர்களிடம் சரியான வழியில் சேர்ப்பிப்பதுதான். அது பூவானாலும் சரி மீனானாலும் சரி. மீனை வாங்குவதிலிருந்து அதனை விற்பது வரையான தெளிவுகளை சூட்சுமங்களை பழனியப்பன் விளக்கிச் சொன்னான். மீனின் செவுளைத் திறந்து பார்த்து அதன் புதுத் (ஃப்ரஷ்) தன்மையை அறிவது முதல் எத்தனை நாள் வரை இந்தப் பழையதை ஐஸ் போட்டு வைக்கலாம் என்பது வரை என எல்லாமும்… செவுளானது இரத்தச் சிவப்பில் வழவழப்புடன் இருந்தால் அது அன்றைய நாள் புதுசு, அதே சிவப்பு நிறத்தின் குறைவிற்கு ஏற்ப ஒருநாள், ரெண்டு நாள், மூன்று நாள் பழையது எனக் கண்டறியலாம். வயிற்றில் இரையின் அளவு அதிகம் இருக்கக்கூடாது. மீனின் வயிறு கெட்டிப்பாக இருப்பதைப் பொறுத்து அதன் இரையின் அளவும் கழிவும் குறையும். ரொம்பவும் பெரிய சைஸ் மீன் கூடாது சுவை குறையும் அதே போல் மிகவும் சிறிய சைஸும் கூடாது சுவையிருந்தாலும் முள்ளிருக்கக்கூடும். ஆக மீனின் தேர்வு மிக முக்கியம்!

மீனை வெட்டுவதிலும் மீனுக்கேற்ற கத்திகள் வேண்டும். வஞ்சிரத்துக்கு நடு முதுகெலும்பு மட்டும்தான் அதற்கு மெலிதான கூர்மையான நீண்ட கத்தி நல்லது, மீனும் அடிவாங்காது வெட்டப்படும் துண்டங்களும் ஒரே அளவினதாக கிடைக்கும். பாறை மீன் சற்றே கடினமானதானதால் அதற்கு கறி வெட்டும் கத்திதான் அதிலும் கைப்பிடி அதிக எடையுடையதாக இருக்க வேண்டும், அப்போதுதான் ஒரே வெட்டில் அழகான துண்டங்கள் கிடைக்கும். ஊளி மீனுக்கு ஒருவாறு மூன்றாம் பிறை போல வளைந்த எளிய எடை கொண்ட கத்தியிருந்தால்தான் மெலிதான சதைப்பிடிப்பு கொண்ட ஊளியின் சதை உடையாமல் துண்டங்கல் கிடைக்கும். மற்ற மீன்களுக்கும் அவற்றின் உடல் வாகுக்கு ஏற்றாற் போல மாறுபட்ட கத்திகளை கொண்டு வெட்ட வேண்டும். ஒரு நாலுவிதக் கத்திகள் போதுமானது நாப்பது வகை மீன்களை வெட்டிவிடலாம். அதே போல மீன்களை விற்பதிலும் நேக்கு வேண்டும். வாடிக்கையாளரிடம் விற்கும் போது பாறை மீன் குழம்புக்கும், வாவல் மீன் வறுவலுக்கும், விள மீனும் வஞ்சிரம் மீனும் இரண்டுக்கும் நல்லாயிருக்கும் என்றும், மாறாக ஊளி மீன் சதைப் பிடிப்பானதால் இரண்டுக்கும் ஒரொரு சுவையைத் தரவல்லது. கெளுத்தியை மட்டும் பொடிப் பொடியாய் வெட்டி மட்டன் செய்வதைப் போல எண்ணெய் பிரட்டல் செய்தால் நல்லது எனச் சொல்லி விற்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணமிருப்பதை அறிந்திருந்தால் நல்லது. நெத்திலி ஆஸ்துமா நோய்க்கும், சுதும்பு, காரப்பொடி வகைகள் நெஞ்சு சலிக்கும், அயிலை மத்தி வகைகள் எலும்பு பலத்துக்கும் நல்லது மற்றபடி எல்லா மீன்களும் கண்பார்வைக்கு தேவையான சத்துடையது. இதையும் வாடிக்கையாளர்களிடம் எடுத்து சொல்லி வாங்க வைக்க வேண்டும். அதில்தான் விற்பவரின் நேர்த்தி தெரியும். இது போல இன்னும் பல சுளிவுகளை கவுண்டர் பழனியப்பனிடமிருந்து கைவரப்பெற்றார். குறைந்த காலத்திலேயே வியாபாரமும் அவருக்கு அத்துப்படியானது. நகரின் பல முக்கியஸ்தர்கள் அவரின் நிரந்தர வாடிக்கையாளர்களாயினர். விலையும் கவுண்டரின் இஷ்டம்தான்!

எல்லாரும் நினைத்தது போலல்லாமல் அந்த தினசரி மார்க்கெட் இன்னும் சிறிது நாட்களில் காலியாகயிருந்தது. அடுத்த உத்தரவு வரும் போது இந்த இடத்திலிருக்கும் கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது அரசு உத்தரவு போல. வேலைகள் வேகமாக நடந்தது. கடைபோட்டிருந்த அத்தனை பேரும் பெரிய சந்தையில் கொடுக்கப்பட்ட புதிய இடத்திற்கு வியாபாரத்தை மாற்றிக் கொண்டிருந்தனர். பூங்கா கட்டுமான வேலைப்பாடு ஆரம்பித்த அச்சமயம் பழனியப்பன் கடையில் முன்ன மாதிரி வியாபாரம் இல்லாமலிருந்தது. போதாதிற்கு விலைவாசியும் ஏறிக் கொண்டேயிருந்தது. எண்ணெய் முதல் நூல்கண்டு வரை எல்லாம் முயலுக்கு திடீரென கொம்பு முளைத்து காளையானதை போல அடங்காமல் திரிந்தன. அவ்வளவு விலை கொடுத்து வாங்கி செய்யும் எந்த தொழிலும் பாதிப்புக்குள்ளானது. பழனியப்பனின் மீன்கடையும் தப்பாது மெதுவாக தொய்வடைந்தது. அரசாங்கக் கூற்றுப்படி மக்களின் வாங்கும் திறன் அதிகமாகிவிட்டது என்றாலும் பழனியப்பனால் விற்கும் திறனைக் கூட்டமுடியவில்லை. வீட்டிற்கும் கொடுத்து மீனுக்கும் முதல் போடுமளவுக்கு வியாபாரமானது கைகொடுக்கவில்லை அதனால் வீட்டிற்கான தினசரி வரும்படி மெல்ல நின்று போயிருந்தது. கொஞ்ச நாளில் கடை போடுவதும் கூட நின்றது. வெளி விவகாரம் எப்படியிருந்தாலும் வீட்டில் மனைவி பிள்ளைகளிருக்கிறார்களே அவர்களுக்கு உண்டானதை நிறுத்தினால் நாம் திடீர் எதிரிதான். மனைவியுடன் தினம் வாய்ச்சண்டையில் ஆரம்பித்து, வீட்டில் மனைவியுடன் இருந்தாலே சண்டை என வந்து நின்றது. காலையில் வெளியே போனால் இரவுக்குத்தான் வீடு திரும்புவது வழக்கமானது பழனியப்பனுக்கு. போக்கிடமின்றி தவித்தான் பழனியப்பன். அவனுக்கு தெரிந்தவர்கள் மூலம் எதையெதையோ செய்து பார்த்தான். யார் யாரிடமோ வேலைப் பார்த்தான் எதுவும் அவனுக்கு பிடிபடவேயில்லை.

இன்று இங்கே கவுண்டரின் மீன் கடையில் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் வேலையைத் தொடங்கியிருந்தான் பழனியப்பன். கேட்போருக்கு ஏற்ப, கேட்ட மீனை எடை போட்டு, சிலாம்படித்து (செதில் நீக்கி) கவுண்டரின் வெட்டுக் கட்டைக்கு மீனை அனுப்புவதுதான் பழனியப்பனுக்கு வேலை. காசு வாங்கி போட கவுண்டருக்கு அவருடன் குடிக்கும்போது பழக்கமான சின்னச்சாமி என்பவர் இருந்தார். இந்த ஆறு மாதத்தில் கவுண்டர் மீன் விற்கும் நுணுக்கத்தில் கைதேறியிருப்பதை கடையிலிருந்த புதிய வரவுகளான மடவா மீன், பன்னை மீன், பால்சுறா மீன், இறால் மற்றும் நண்டு வகை மீன்கள் விவரித்துக் கொண்டிருந்தன. காலை ஐந்து ஐந்தரை மணிக்கு டான்னு பனை ஓலைப்பாயை விரித்து கடையை ஆரம்பிக்கும் கவுண்டர் எப்படியும் பகல் பன்னிரெண்டு மணிக்கு மேல்தான் பாயை சுருட்டுவார், இடையில் நகரின் முக்கியமான இரண்டு பெரிய ஹோட்டல்களுக்கு பெரியதான முழு வஞ்சிரம் வகை மீனைக் கொண்டுபோய் கொடுத்து வருவார். அதற்கு தனி ரேட்டுதான். பலவித வாடிக்கையாளர்களுக்கு பலவித மீன்கள் காத்துக்கொண்டிருந்தன. அரை டிரவுசரில் வந்தவருக்கு விளமீன் இரண்டு கிலோ, ஸ்கூட்டரை விட்டு இறங்காதவருக்கு தலை வால் நீங்கலாக வஞ்சிரம் ஒன்றரை கிலோ, முதுகில் டென்னிஸ் பேட்டை மாட்டியிருந்தவருக்கு ஊளி மீன் மூன்று கிலோ, பேரனுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தவருக்கு வாவல் ரெண்டு கிலோ என எடை போட்டதில் தராசை பிடித்த இடது தோள்பட்டையின் வலி கையை நடுங்க வைத்துக் கொண்டிருந்தது பழனியப்பனுக்கும் கவுண்டருக்கும். எடை போட்ட மீனை சிலாம்பு நீக்கியும் தர வேண்டும். சிலாம்பு அடிப்பதிலும் மீனுக்கேற்றவாறு கத்தி அவசியம். பாறை வகை மீனுக்கு நீண்ட கத்தி வேண்டும் இல்லாவிடில் அதன் பக்கவாட்டு இறக்கை முள் குத்தி விடும், அதன் காயம் கையில் சீல் கூட வைத்துவிடும். ஊளிக்கு சாதாரன கத்தி போதும். வஞ்சிரம், கெளுத்தி, வாவல், இறால் நண்டு என மற்ற எதற்கும் சிலாம்பு இருப்பதில்லை. அவற்றை அப்படியே வெட்டி கொடுத்துவிடலாம். எல்லாம் விற்று முடிந்தபின் இறுதியாக மீன் கழிவுகளை பின்னால் ஓடும் கெராக்குட்டையில் வீசி எறிந்துவிடுவர். அதில் வாடிக்கையாளர் வேண்டாமென்று ஒதுக்கிவிட்ட ஒருசில வஞ்சிரம் ஊளி மீனின் தலையும் வாலும் இருப்பதை பழனியப்பன் இரண்டொருமுறை பார்த்ததுண்டு. மிச்ச மீன்களை தெர்மாகோல் பெட்டியில் வைத்து ஐஸ் போடுவார். அடுத்தநாள் யாரேனும் கேட்டால் மட்டும் எடுத்து வந்து கொடுப்பார். அதுவரை அது அவரது வீட்டிலிருக்கும் ஃப்ரீஸரிலிருக்கும். கடைசியில் வீட்டுக்கு கிளம்பும்போது கையில் இருநூறோ முந்நூறோ அன்றைய விற்பனையைப் பொறுத்துக் கொடுத்து விடுவார் கவுண்டர். சின்னச்சாமிக்கு சாயந்தரம் பாரில் கவனிப்புடன் சம்பளம் கிடைக்கும். கையில் கூலிப்பணம் வந்து சேரும்போது பழனியப்பனுக்கு இருந்த கைவலி சற்று மறைந்திருக்கும்.

இன்று, பழனியப்பன் கடைக்கு வரவும் கவுண்டர் ஓலைப்பாயை விரிக்கவும் சரியாகயிருந்தது. என்றும் போல் இன்றும் நல்ல ஓட்டம்தான். வாடிக்கையாளர்கள் பலாப்பழத்துக்கு ஆளாய் பறக்கும் ஈயாய் மொய்த்துவிட்டனர். கவுண்டர் சிறுநீர் கழிக்கச் செல்லும்போதும், ஹோட்டலுக்கு செல்லும்போதும் சின்னச்சாமி தான் வாங்கி வைக்கும் பணத்திலிருந்து ஒன்றிரண்டு நூறு ரூபாய் தாள்களை தனது உள்பாக்கெட்டில் வைப்பதை பழனியப்பன் கவனித்து வந்திருக்கிறான், இருந்தும் அதை எப்படி கவுண்டரிடம் சொல்வதெனத் தெரியவில்லை. அவர்களின் நட்பு எப்படிப்பட்டதெனவும் விளங்கவுமில்லை. பெரும் தயக்கத்தில் சொல்லாமலேயேயிருந்துவிட்டான் பழனியப்பன். இன்றும் கூட சின்னச்சாமி மூன்று நூறு ரூபாய்  நோட்டுகளை பதுக்கினார். பழனியப்பன் எப்போதும் போல் மனதிற்குள் போட்டுக் கொண்டபடியே சிலாம்படித்துக் கொண்டிருந்தான். வாடிக்கயாளர்கள் வேண்டாமெனச் சொல்லியதில் இன்று கூட நான்கைந்து வஞ்சிரம் மீன் தலைகளும் இரண்டொரு ஊளிமீன் தலைகளும் கழிவுடன் கிடந்து வந்தது. பழனியப்பனுக்கு இன்று எப்படியாவது இந்த வஞ்சிரம் தலைகளை வீட்டிற்கு கொண்டு போய் மாரம்மாளிடம் கொடுத்து நல்ல மணமாக நல்லெண்ணை ஊத்தி குழம்பு வைக்கக் சொல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தான். பாவம் பிள்ளைகளுக்கு கறிபுறி எடுத்துக் கொடுத்தே நாளாகிப் போனது ஞாபகப்படுத்திக்கொண்டான். அப்போது மீனின் இறக்கையிலிருந்த ஒரு முள் கையைக் குத்தியதில் லேசாக இரத்தம் வந்தது. ஒரு ஐஸ்கட்டியை எடுத்து அதில் சிறிது நேரம் தோய்த்துவிட்டதில் இரத்தமும் வலியும் நின்றது. கவுண்டர் வழக்கம் போல வஞ்சிரம் மீனுடன் பெரிய ஹோட்டலுக்குச் சென்றிருந்தார். எப்படியும் கெராக்குட்டையில்தானே போடப்பொகிறோம் என்றெண்ணி கழிவுகளைக் கலைந்து வஞ்சிரம் தலைகளைப் பிரித்து எடுத்து நீரில் அலசிவிட்டு ஒரு பாலித்தீன் பையில் போட்டு வைத்தான் பழனியப்பன். நேரமுங்கூட எடுத்துவைக்கும் நேரந்தான். கவுண்டர் வந்த உடனேயே அவரிடம் சொல்லி இந்த வஞ்சிரம் தலைகளை வீட்டுக்கு கொண்டு போய்விடவேண்டுமென நினைத்திருந்தான். கவுண்டர் வந்தவுடன் , அவர் மீன் கொடுத்துவிட்டு வந்த ஹோட்டல் ஓனர் மகனுக்கு மறுநாள் திருமண வரவேற்பாம் அதற்கு நம்மளையும் வரச்சொல்லியிருக்கிறார் என்பதை பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பழனியப்பனும் சின்னசாமியும் அவருடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்ததில் ஞாபகம் வந்தவனாய் அந்த மீன் கழிவுகளை ஓடும் சாக்கடைத்தண்ணீரில் கொட்டப்போனான் பழனியப்பன். வேகமாய் வந்து தடுத்த கவுண்டர். “நல்ல வேலை செஞ்ச போ… இதிலயிருந்த வஞ்சிரம் தலைகளை எங்க பழனியப்பா?” என்க,

“இல்ல கவுண்டரே சொல்ல மறந்துட்டேன்… நா அப்பவே தலயெல்லாம் எடுத்து வச்சிட்டேன் வீட்டுக்கு கொண்ட்டோலாமுனுட்டு”- னு வெள்ளந்தியாக ”பிள்ளைங்க ஆசையா சாப்புடுவாங்கனுட்டு நாந்தான் ஒரு கவர்ல எடுத்து வச்சிருக்கேனுங்” கழிவுகளை கெராக்குட்டையில் கொட்டியவாறே சொன்னான் பழனியப்பன்.

பட்டென்று முகம்மாறியது கவுண்டருக்கு. இந்த ஆறு மாத காலத்தில் வெயிலில் அலைந்து திரிந்ததில் அவரது சிவந்த முகத்தை காண முடியவில்லை கவுண்டரிடம்.

“அது ஒண்ணுமில்லை பழனியப்பா… அந்த வஞ்சிரம் தலைங்க நம்பூட்டு பிள்ளைங்களுக்கு வேண்டாம்… அத அந்த ”கேயாரஸ் (KRS)” குரூப்பு லாரி ஓனர் வீட்டுக்கு கொடுக்கோனுமிட்டு நேத்தைக்கே காசு வாங்கிட்டன் பழனியப்பா… அதுக்கோசரந்தான் நம்பூட்டுக்கு வேண்டாம்னுட்டன்…” சொல்லத் தயக்கமாத்தானிருந்தது கவுண்டருக்கு.

“இதிலென்னயிருக்குங்க கவுண்டரே விக்காட்டிதானங் நம்பூட்டுக்கு கொண்டோனும்… இல்லாட்டி ஆரு கேட்டாங்களோ அவங்களோடதுங் பொருளு… சொல்லப்போனா மீனைக்காட்டியும் தலைதான் நல்ல ருசியாயிருக்கும்ங்க, அது KRS ஓனருக்கும் தெரிஞ்சுருக்குமாட்ருக்கு… பரவால்லீங்ளே” சமாளித்தான் பழனியப்பன். இதே KRS ஓனர் அவர் வீட்டு நாய்கள் மீன் தின்று பழகியபடியால் இரண்டு வாரஙளுக்கு முன்னாடி ஒரு முறை இந்த வஞ்சிரம் மீன் தலைகளை பணம் கொடுத்து கேட்டு வாங்கிச்சென்றது பழனியப்பனுக்கு ஞாபகத்தில் வந்து நின்றது. மறுநாள் அமாவசையென்பதும் அன்று KRS போன்ற பெரிய இடத்தார்கள் அசைவம் சாப்பிடமாட்டார்கள் என்பதும் பழனியப்பனுக்கு தெரியும்.

தயக்கம் கலைந்து, “அதில்லை பழனியப்பா… அவிய நம்ப ரெகுலர் கஸ்டமர்ல அதான் அவியளுக்கே கேட்டோடனயே இல்லீனு சொல்லமுடீல பழனியப்பா” என்ற கவுண்டர் வஞ்சிரம் மீன் தலைகளிருந்த பையை பழனியப்பனிடமிருந்து வாங்கிக் கொண்டார். போயும் போயும் நாய்க்கு என ஒதுக்கப்பட்ட மீன் தலைகளை பழனியப்பனின் பிள்ளைகளுக்கு கொடுக்க மனம் ஒப்பாதவர் சிறிது யோசித்துவிட்டு, -கவுண்டரின் மனதில் அவர் மகனின் நினைவு வந்து போயிருக்க வேண்டும்- தெளிந்தவராய் தான் அந்த பெரிய ஓட்டலில் கொடுத்த வஞ்சிரம் மீனுக்காக வாங்கி வந்திருந்த பணத்தை எடுத்து பழனியப்பன் சட்டைப் பையில் திணித்தார் கவுண்டர்.

நாளை விடிந்தால் தீபாவளி என்பதை இந்த “அமாவாசை” என்ற வார்த்தையிலிருந்து உணர்ந்தவனாய் தலைக் கவிழ்ந்தபடி யோசனையிலிருந்தான் பழனியப்பன், கவுண்டர் தன் சட்டைப் பையில் பணத்தை வைத்ததைக் கூட தடுக்காமல் நிலைக்குத்தியிருந்தான். பின்னர் வீட்டுக்குப் போவென கவுண்டர் முதுகினைத் தட்டி அனுப்பிவிட அதே யோசனையுடன் மெல்ல அவ்விடம் விட்டு நகர்ந்தான் பழனியப்பன்.

இந்த புதிய பூங்கா ரோட்டில் தலைக் கவிழ்ந்தபடி ஏகசிந்தனையில் வீட்டை நோக்கி நடந்தான் பழனியப்பன். அப்போது சிலாம்பு அடிக்கும் போது கையில் குத்திய மீனின் இறக்கை முள் போல ஏதோ ஒன்று நெஞ்சில் தைத்ததாக வலியை உணர்ந்தான் பழனியப்பன். அந்தப் பூங்காவினை கடக்கும் போது அதனை ஏறிட்டுப் பார்த்த அவன் கண்களில் அடைமழையில் பெருகி நிற்கும் குளம்போல் நீர் நிரம்பியிருந்தது. இந்த இருபது வருடங்களில் முதல் முறையாக அழுத அவன், கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே கோட்டைச் சாலையைத் தாண்டி வடக்குத் தெருவுக்குள் சென்று மறைந்தான்.