அவனுக்கு விரல்களைக் கவனிக்கும் பழக்கம் எப்போது வந்தது என்றே தெரியாது. யோசித்துப்பார்த்தால் சிறுவயதிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறலாம் .அவன் நினைவில் அவனது அம்மா ,அப்பா உறவினர்கள் என அனைவரின் விரல்களும்  நினைவில் இருக்கின்றன.

அவனது அம்மா கறுப்புதான் விவசாயக்கூலி வேலைக்குச் சென்று உழைத்த காய்ப்பு அவள் விரல்களில் இருக்கும். அவை அழுத்தமாகக் காய்ந்த குச்சி போல் இருக்கும்.

அப்பா விவசாயிதான். கையை விரித்துத் தொட்டால் காய்த்துப் போயிருக்கும்.உள்ளங்கை ,விரல்கள், எல்லாம் புளியம்பழ ஓடு போல் அப்படி உலர்ந்து காய்ந்திருக்கும்.

விரல்களில் உள்பக்கம் ஈரமே இல்லாதது போல் தோன்றும். புறங்கையும் இறுகிச் சுருக்கங்களுடன் காய்ந்திருக்கும்.

சிறு வயதில் அப்பா முதுகு தேய்த்து குளிப்பாட்டும்போது உள்ளங்கை அவன் முதுகில் தேய்த்தாலே புண்ணாகி விடும் அளவிற்கு உலர்ந்து வறண்டு சொரசொரப்பாக இருக்கும். அது உழைப்பின் விளைவு என்று உணர்ந்த காலத்தில் அப்பா உயிருடன் இல்லை.

ஊரின் விவசாய மக்கள் பலரது விரல்களும் அப்படித்தான் காய்வு கொண்டிருக்கும்.

அவனது பாட்டியின் சுருங்கிய சொரசொரப்பு விரல்கள் கன்னம் தொட்டு வழித்து முத்தம் கொடுக்கும் போது உதறி ஓடுவான்.

அவன் பள்ளியில் படித்த ஆசிரியர்கள் பலரது விரல்கள் அவனுக்கு நன்றாக நினைவில் உள்ளன .குறிப்பாக அவனது ஆறாம் வகுப்பு ஆசிரியர் கே.ஆர்.என்ற ரத்தினசபாபதியின் விரல்களை மறக்க முடியாது. வெகு நீளமாக இருக்கும். அவ்வளவு  நீளமான விரல்களை அவன் பார்த்ததே கிடையாது.அவர் உயரமான ஒடிசலான தேகம் கொண்டவர்..அவரது விரல்கள் மட்டும்  இருமடங்கு நீளம் போல் தோன்றும். இது எப்படி சாத்தியம்? என்று நினைத்திருக்கிறான்.அது உண்மைதான் . அது ஒன்றும் மாயமில்லை. அவரது நீளவிரல்கள் இன்னும் அவனுக்கு ஞாபகம் இருக்கின்றன.

தினமும் மாலையில் பள்ளியில் ஒரு கூடுகை நடக்கும். இளைய ’பீட்டி’ மாஸ்டர் வரிசைப்படுத்தி நிறுத்தி வைப்பார். அவன்தான் குள்ளம் என்பதால் அந்த வரிசையின் முதல் ஆளாக நிற்பான். அவனது தோளைப் பிடித்துக் கொண்டு அவர் எதிரே உள்ள மாணவர்களின் வரிசையை ஒழுங்கு செய்வார். அப்போது அவரது விரல்கள் அவனைத் தொட்டுக் கொண்டிருக்கும். முகத்திற்கு நெருக்கமாக வரும் விரல்கள் மூலம் அவர்  புகைப்பழக்கம் உள்ளவர் என்பது தெரியும். மூக்கருகே நீளும் அவரது விரல்களிலிருந்து சிகரெட் புகை நாற்றம் உணர்வான்.

அது மட்டுமல்ல அவன் பள்ளியில் படித்த காலத்தில் ஆசிரியர்களில்  அவனது காதைப் பிடித்துக் திருகிய கைவிரல்கள், சாக்பீஸ் துகள்கள் படிந்த விரல்கள், தங்க மோதிரம் அணிந்த விரல்கள், ஓங்கி அறைந்த முரட்டு ஆசிரியரின் விரல்கள், தலைமையாசிரியரின் தடிமனான விரல்கள்,  மூத்த பீட்டி மாஸ்டரின் பிரம்பு சுமந்த விரல்கள், சமூகவியல் ஆசிரியரின் உலர்ந்த விரல்கள்,’மேத்ஸ்’ மாஸ்டரின் வெள்ளை விரல்கள் என்று பலவும் அவன் நினைவில் உள்ளன.

இடையிடையே கவனப்படுத்தப் படாத சில சாதாரண விரல்களும் கடந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றன. .

வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் சிலர் கை கொடுக்கும் போது அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கும் . அவர்களின் விரல்கள் அவ்வளவு  மென்மையாக இருக்கும். இது எப்படி என ஆச்சரியமாக இருக்கும். அவன் விரல்கள் அப்படியொன்றும்  மிருதுவானவை கிடையாது , இறுகியதாகவே  இருக்கும். ஆனால்  சிலருக்கு பூப்போல மென்மையாக இருக்கும். சிலருக்கு மட்டும் ஈரம் கசிந்து இருக்கும்.அது மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.அவர்கள் பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்லாதவர்கள் . வாழ்பவர்கள்.அவனுடன் படித்த சில மாணவிகளின் விரல்களும் நினைவில் உள்ளன. குறிப்பாக மலர்விழியின் விரல்கள் பல்லியின் உடல் போல வெண்மை ஒளிர் விரல்கள். செல்வமதியின் விரல்கள் இளம் வெள்ளரிப்பிஞ்சை போன்றவை.பள்ளியில் கட்டுப்பாடுண்டு. மாணவிகள் யாருடைய முகத்தையும் நேருக்கு நேர் பார்க்கக்கூடாது, பேசக் கூடாது. அப்போது விரல்களைப் பார்த்து ரகசியமாக முகங்களோடு பொருத்திக் கொள்வான்.

அவர்களின் முகங்களோடு விரல்களையும் விரல் நகங்களையும் தொடர்பு படுத்தித்தான் வைத்திருப்பான்.பல குழந்தைகளின் விரல்கள்  முகங்களோடு பதிந்தவை. அவற்றில்  எதிர்ப்பக்க ஒளியில் உள்ளே ஓடும் ரத்தம் தெரியும்.

அவன் பல துக்க வீடுகளுக்குச் சென்று இருக்கிறான்.

அங்கெல்லாம் இறந்த சடலத்தை முகவாய் தொங்காமல் ஒரு ’தலைக்கட்டு’ கட்டுவார்கள். அதுபோலவே இரண்டு கைகளையும் பெரு விரல்கள் சேர்த்துக் கட்டுவார்கள். அந்த விரல்கள் எல்லாம்  நினைவில் உள்ளன.

ஊரில் குடும்பத்திற்காக உழைத்து சிரமப்பட்டு இறந்து போனவர்கள் விரல்களைப் பார்க்கும்போது இப்போதுதான் அவை ஓய்வாக உள்ளன என்று தோன்றும்.அந்த மரத்துப்போன பெரிய விரல்கள் கடந்த கால உழைப்பின் வலிவரலாற்றைக் கூறுவதாகத் தோன்றும்.

சிங்கப்பூரிலிருந்து உடல்நலம் நலிவுற்று ஊருக்கு திரும்பி  வந்த அவன் பெரியப்பா இறந்தபோது அவரது கை வீங்கி விரல்கள் பருத்திருந்தன. ஏற்கெனவே அவருக்கு கனபாடிதான்.இறந்த பின் அவரது விரல்கள்  திமிர்த்து பயங்கரமான தோற்றத்தில் இருந்தன.

உறை பெட்டி எனப்படும் ஃப்ரீசரில் வைத்துள்ள பல சடலங்களைப் பார்த்திருக்கிறான்.அப்போது கைகள் குளிரில் உறைந்து இரும்புத் தண்டவாளம் போல் இறுகி எடை கூடி இருக்கும். விரல்கள் விரைப்பு கொண்டு தடிமனான கம்பிகள் போல் அடர்ந்து கனமாகத் தோன்றும்.

சில சலூன் கடைக்காரர்கள் புகைப்பழக்கம் உள்ளவர்கள், முகத்தருகே விரல்களைக் கொண்டு வரும்போது  புகை நாற்றத்தை உணர்ந்திருக்கிறான்.சிகரெட்டைப் பிடித்த விரல்களுக்கே இந்த நாற்றமா என நினைப்பான்.கடைக்காரர்களிடம் முகம் பார்ப்பதுபோல் விரல்களையும் பார்ப்பான்.

ஈரத்தில்  நனைந்து ஊறி மொதித்திருக்கும் டீ மாஸ்டரின் கை விரல்கள், கறியை வெட்டி  கைகள் ஊறி உப்பி இருக்கும் கசாப்புக் கடைக்காரர் விரல்கள்,    கவிச்சி ஈரத்தில் ஊறிய மீன்காரரின்  விரல்கள் எல்லாம் பார்த்து விலகி உலர்வான விரலுடையவர்கள் கடைக்கே செல்வான்.

பால்யத்தில் திருவாரூர் தைலம்மை தியேட்டரில் படம் பார்க்கச் சென்ற போது மூன்று சீட்டுக்கார சூதாட்டக் காரனிடம்    படம் பார்க்க,  கையில் வைத்திருந்த காசை விட்டான். அப்போதுதான் அந்தச் சூதாட்டக் காரன்  தந்திரமாக விரல்களினால் விரைவாக சீட்டைப் புரட்டி ஏமாற்றுவதைப் பார்த்தான். அந்தக் கறுப்பான  திருட்டு விரல்களை நசுக்க வேண்டும் போல் இருந்தது.

அவன் மாநகரப் பேருந்தில் நின்றுகொண்டு செல்லும்போது முகங்களைப் பார்ப்பதைவிட விரல்களைத்தான் முதலில் பார்ப்பான். கைப்பிடி பிடித்துக் கொண்டிருக்கும் கைகளில் ,முகங்கள் தெரியாமல் உயரத்தில் கை நீட்டி நிற்பவர்கள் விரல்கள் மாபெரும் அணிவகுப்பாகத் தோன்றும்.

பெரும்பாலும் மேலே பிடிப்பவர்கள் பெண்கள்தான். அவை என்னென்ன விதங்கள்.   இளைத்தவை, பருத்தவை, மினுக்கம் கொண்டவை. பூரிப்பில் வீங்கியவை, மருதாணி சிவப்பு கொண்டவை, மஞ்சள் நிறத்தவை, நகப் பாலிஷ் போட்டவை, வீட்டு வேலை செய்து அழுக்கேறியவை, மஞ்சளில் குளித்தவை ,நீள நகம் வளர்த்தவை, நகக்கண்களில் அழுக்கேறியவை, சிவந்த கைகளின் விரல்கள், தடித்த பெரியவை, அடுக்கடுக்காக வளையல் அணிந்தவை , கைக்குட்டை அடக்கிய கைவிரல்கள், வலதுகை கடிகார விரல்கள், பச்சை குத்திய அலங்கார விரல்கள் , மொபைலுடன் சில விரல்கள் என்று ஒரு பட்டியலாக விரியும்.

விரல்களில் மூலம் அதற்குரிய கைகளையும் ,கைகளின்   மூலம்  உடலமைப்பையும் அறியலாம்.

தோற்றச் செழுமையையும் மட்டுமல்ல வறுமையையும் அறிந்துகொள்ளமுடியும்.

டில்லி சென்றபோது அங்குள்ள மெட்ரோ ரயிலில் நூற்றுக்கணக்கில் அணிவகுத்து நின்ற வெள்ளை வெள்ளையான விரல்களைப் பார்த்து வியந்திருக்கிறான். நள்ளிரவு நேரத்தில் போன அந்த மெட்ரோ ரயிலில் பெரும்பாலும் இரவு வேலை முடிந்து திரும்புகிறவர்கள். அவர்கள்  மேல்தட்டு இளையவர்க்கம்.

நல்ல கூட்டம் ,கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு ஏராளமான விரல்கள்.அங்கே பெண்களின் விரல்கள் போல ஆண்களுக்கும் அழகான விரல்கள் என்று நினைத்துக்கொண்டான்.

விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் விரல்கள், நிறுவனங்களின் பெண் வரவேற்பாளர்களின் விரல்கள், டெலிபோன் ஆபரேட்டரின் சுறுசுறுப்பான விரல்கள்  இவற்றையெல்லாம் பார்த்து இவனும் ரசித்திருக்கிறான்.அவை கூடுதலாக நளினமாக இருப்பதாக உணர்வான். நேர்காணலில் விரல்களையும் பார்த்து ஆட்கள் தேர்வு செய்வார்களோ என்று அவனுக்குத் தோன்றும். வெறும் விரல்களை ஒருகணம் உற்றுப் பார்த்து ரசிப்பான். பிறகுதான் அதற்குரிய முகங்களைப் பார்க்கத் தோன்றும்.

கீழ்ப்பாக்கம் மனநிலை மருத்துவமனை வளாகத்துக்குள் ஒரு பப்ளிக் போன் பூத் இருந்தது. அதைக் கண் பார்வையிழந்தவர் நடத்திவந்தார். கேட்கிற எண்களை அவர்  டயல் செய்து தருவார். அவரிடம் பணத்தை கொடுக்கும் போது தடவிப் பார்த்து அளவறிந்து  ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று கண்டுபிடித்து விடுவார். அவரது விரல்கள்  ஸ்கேனர் கருவி போல் அவனுக்குத் தோன்றும்.

அவன் பூக்கடைகள் இருக்கும் தெருவுக்குச் சென்றால்  சற்று நேரம் நின்று நிதானித்துச் செல்வான். பூக்கள் கட்டிக்கொண்டிருக்கும் விரல்களைப் பார்க்கும்போது அது விரல்களின் நடனம் போலிருக்கும். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அதைச் சற்று உற்றுக் கவனித்து விட்டுத்தான் செல்வான்.

அதேபோல் திருமண வீடுகளுக்குச் சென்றால் மேளம் அடிப்பவர், நாதஸ்வரக்காரரின் விரல்கள் செல்லும் போக்கில் லயித்துக் கிடப்பான் .மேலும் இடது கை விரல்களில் ’தொப்பி’ போல உறை மாட்டிக்கொண்டு மேளம் அடிக்கும்போது விரல்கள் விசையுடன் அசையும் காட்சியைக் கண் கொள்ளாமல் பார்ப்பான்.

ஏதோ மந்திர விரல்கள் போல் தெரியும் . அதைத்  தொட்டுப் பார்க்க வேண்டும் போல் தோன்றும்.

சில கச்சேரிகளில் அந்த விரல்களின் தாள நடனம் சில நேரம் விஸ்வரூபமெடுத்து நிற்கும். விரல்கள் பேசுவது போல் தோன்றும்.

நடன நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் அபிநயித்து காற்றில் அலையும் விரல்களைப் பார்த்துக் கொண்டிருப்பான்.

பீடி சுற்றும்விரல்கள்,சுருட்டு சுற்றும்விரல்கள், தீப்பெட்டி லேபில் ஒட்டும் விரல்கள், பரபரப்பான கடைகளில் பார்சல் கட்டும் விரல்கள் எனச் சுறுசுறு விரல்களைப் பார்த்து அதிசயித்துள்ளான்.

யாராக இருந்தாலும் விரல் நோக்குவது , இது என்ன பைத்தியக்காரத்தனமா? அல்லது மனநோயா? அல்லது மனக் கோளாறின் ஒரு கூறா என்று அவனுக்குத் தெரியாது.ஆனால் இந்தப் பழக்கம் அவனுக்கு இருந்துகொண்டே இருக்கிறது.

அதனால் சிலரது விரல்கள் அவனது ஞாபகத்தில் இருந்து அழிவதில்லை.

அவன் சிறுவயதிலிருந்து சிரமப்பட்டவன். அவ்வப்போது தன் கை விரல்களைப் பார்த்துக்கொள்வான். வயதுக்கேற்ற வளர்ச்சியில்லாமல் மிருதுத் தன்மையும் இல்லாமல் தான் இந்தக் கைகள் கருத்துப் போயிருக்கும்.விரல்கள் சிறுத்துப் போய் இருக்கும். நிரந்தர வேலை கிடைப்பதற்கு முன் ஒரு சைக்கிள் கம்பெனியில் வேலை பார்த்தான். தினமும் 50  சைக்கிள்களுக்குக் காற்றடிக்க வேண்டும். காற்றுப் பம்ப்பைப் பிடித்து காற்று அடிப்பதால் கைகள் காய்த்து போயிருக்கும். உள்ளங்கை மட்டுமல்ல விரலும் கெட்டித்துப் போயிருக்கும்.

ஒரு வழியாகப் போராடி அவனுக்கு அரசு வேலை கிடைத்தது . அரசு மேல்நிலைப் பள்ளியில் எழுத்தராக இருக்கிறான்.  நேரம் கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும் .தன் விரல்களையே பார்த்துக் கொண்டே இருக்கும் வேலை.

முதன் முதலில் அவனுக்குக் கிடைத்த தேர்தல் பணியை அவனால் மறக்க முடியாது.

அப்போது அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலை வாக்காளர்களுக்கு விரலில் அழியா மை வைப்பது.

அந்த வேலையை நினைத்த போது அவனுக்கு பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அங்கே  கிடைத்த அந்த வாய்ப்பு விரல்களின் திருவிழாவாக இருந்தது.

அந்த ஒரு நாளை அவன் வாழ்நாளில் மறக்க முடியாது. வருகிறவர்கள் இடதுகையை நீட்டி ஒரு விரல் காட்டுவார்கள்.ஏதாவது எண்ணெய் பொருள்கள் இருக்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொருவர் விரலையும் துணியால் துடைக்க வேண்டும் .அதன் பிறகு அதில் அழியாத மை  இடவேண்டும்.

பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளில் தான் அவனுக்குப் பணி கிடைக்கும். நகரமும் கிராமமும் அல்லாத சூழலில் இருக்கும் ஒரு கலவையான  பகுதியாக அது இருக்கும்.இந்தியா ஒரு வேற்றுமை நிறைந்த கண்டம் என்பது போல் அங்கு வரும்  விரல்களுக்குத்தான் எவ்வளவு வேறுபாடுகள்.

அப்பப்பா எத்தனை விதமான விரல்கள். முதலில் ஒரு பெண்கள் வாக்குப்பதிவு மையத்தில் விரலுக்கு மை வைத்தான்.வருகிறவர்கள் விரலை நீட்டும் போது மனிதர்களைப் போலவே  விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை எனத்தோன்றும்.

வீட்டு வேலை செய்யும் பெண்களின் விரல்களைக் கண்டு பிடித்துவிடலாம். நகத்தின் ஓரங்களில்  அழுக்கு இருக்கும். அது மட்டுமா? நகங்களில் மஞ்சள் படிந்த விரல்கள், மருதாணி போட்ட விரல்கள், நீளமான விரல்கள், மிருதுவான விரல்கள், கம்பி போல் இறுகிய விரல்கள், வீங்கிய விரல்கள், பளபளக்கும் விரல்கள், ஒவ்வாமை நோய் கொண்ட விரல்கள்,வளைவான நகங்கள் கொண்ட விரல்கள், தட்டையான நகங்கள் கொண்ட விரல்கள்,சுருக்கம் விழுந்த நகங்கள் கொண்ட விரல்கள், கறுப்பு நகங்கள் கொண்ட விரல்கள், உடைபட்ட நகங்கள் கொண்ட விரல்கள், சிராய்ப்பு கொண்ட நகங்களுடன் விரல்கள் , சொத்தையான நகங்கள் கொண்ட விரல்கள், நகங்கள் வெட்டுப்பட்ட விரல்கள்,வீட்டு வேலையில் நீரில் ஊறிய விரல்கள், ஈரச்சுருக்கம் விழுந்த விரல்கள்  என்று எத்தனை எத்தனை விரல்கள் .காலை முதல் மாலை வரை அந்த ஒரு நாளில் மட்டும் எத்தனை என்று எண்ணிப் பார்த்தான். 968 விரல்களுக்கு மை வைத்திருக்கிறான்.

இதேபோல் ஆண்கள் பூத்திலும் ஆண்கள் பெண்கள் கலந்த மாதிரி இருந்த பூத்திலும் இப்படிப் பல வகையான ஆயிரக்கணக்கான விரல்களுக்கு மை வைத்திருக்கிறான்.

அப்போதெல்லாம் கீழே குனிந்தவாறுதான் இருப்பான் அவனுடைய கவனம் எல்லாம் விரல்களில் தான் பதிந்து இருக்கும். சில நேரம் இந்த விரலுக்குரிய முகம் எப்படி இருக்கும் என்று மனதில் கற்பனை செய்து கொள்வான். பிறகுதான் முகத்தையே பார்ப்பான்.  பலவற்றைக்கணித்ததில்  சில அதிர்ச்சியூட்டும், சில சிரிப்பை வரவழைக்கும். அப்படி அந்த வேலையை ஒரு விளையாட்டாகக் கருதினான். அது ஒரு தேடலாக அவனுக்குத் தோன்றியது.

நீட்டப்படும் விரலை வைத்து,விரலுக்கு உரிய கைகளை வைத்து கைகளுக்கு உரிய முகத்தை கற்பனை செய்வதும் பார்ப்பதும் ஒரு விளையாட்டாக இருந்தது. உழைப்பாளிகளை, சோக்காளிகளை, ஓடி ஓடி உழைப்பவர்களை என எல்லாவற்றையும் விரல்களுடன்  ஒப்பிட்டுப் பார்த்தால் முகங்களையும் சொல்லிவிடும்.  வேலைக்காரரா எஜமானா என்று  அனைத்தையும் அந்த விரல்கள் சொல்லிவிடும்.

இதுபோல்  ஆண்கள் வாக்குச்சாவடி மையத்தில் பார்த்தபோது ஆண்களை நேரில் பார்த்திருக்கிறான். வகைவகையாக விரல்கள் ,தடிமனான விரல்கள் . திமிர்த்த விரல்கள் , கருத்த விரல்கள் ,முரட்டுத் தனமான விரல்கள் அதிலும் உழைக்கும்  விரல்கள் எது, அதிகாரம் செலுத்தும் விரல்கள்  எது என அனைத்தும் அவனுக்கு அத்துபடி.பொதுவாகப் பெண்களின் விரல்களின் வித்தியாசம் போல் ஆண்களின் விரல்களில் காணப்படுவதில்லை என்பது அவன் கணிப்பு.

சென்னையில் குடியேறிய போது வீட்டுக்காரரின் பேரன் பேத்திகள் விரல்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பேரன் விரலைத் தொட்டால் பூ மாதிரி இருக்கும். எப்போதும் வேர்த்து ஈரம் கசிந்து கொண்டிருக்கும்.பின்பக்கம் வளைத்தாலும் அப்படியே ரப்பர் மாதிரி வளையும். எலும்பே இல்லாதது போல் வளைந்ததைப் பார்த்த அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது… அதுபோல்தான் அவரது பேத்தி விரல்களும் . சிறு அளவில் நகங்கள் இருக்கும் ,நகத்தைச் சுற்றுப்புற சதைகள் மூடி அவ்வளவு மிருதுவாகப் பூ போல இருக்கும்.

அவனுக்கும் ஒரு காதல் இருந்தது. காதலியிடம் சிறு பரிசுப்பொருட்களை, காதல் கடிதங்களைப் பரிமாறிக் கொண்ட போதுதான் விரல்களுக்குப் பேசும் சக்தி இருக்கிறது என்று தெரிந்தது. நகக்கண்கள் என்று சும்மாவா சொன்னார்கள்? விரல்களில்  இருக்கும் கண்கள் தான் அவை .அப்போது அவளைப் பார்க்காமல் மொழி பேசும் அவளது விரல்களைத்தான் பார்ப்பான். அவை ஒலி இல்லாத மொழி பேசுபவை.

ஐம்புலன்களில் ஒன்றான தொடு உணர்ச்சியின்  ஆதார கருவி விரல்கள்தானே?

திருமணத்தின் போது மனைவியின் விரல்களைப் பிடித்து நடந்த போது மனைவியின் விரல்கள் வினோதமாக இருந்தன .மஞ்சள் மினுமினுப்புடன் இருந்தது . ஆனால் அவ்வளவு மிருதுவாக இல்லை.அழுத்திப் பார்த்தால் ஒதியன் மரத்தண்டு போல ஈரத்துடன் அழுத்தமாக இருந்தது.

நண்பர்கள் பேசிக் கொள்வதுண்டு. எதிர் பாலினத்தை பார்க்கும்போது எதை விரும்பிப் பார்ப்பீர்கள் என்று கேட்டபோது. ஒவ்வொருவனும் ஒன்றைச் சொல்வான். ஒருத்தன் முகத்தைப் பார்ப்பேன் என்றான். இன்னொருவன் கன்னத்தைப் பார்ப்பேன் என்றான். வாயைப் பார்ப்பேன்,  சிரிப்பைப் பார்ப்பேன்,மூக்கைப் பார்ப்பேன் என்று போய்  பல் வரிசையை, உதடுகளை, கன்னக் கதுப்புகளை, கழுத்தை, மார்பகங்களை , தோள்களை, கைகளை, கால்களை, இடுப்பை,தொப்புளை, பிடரியை,பாதங்களை என்று ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள் . ஆனால் யாரும் விரல்கள் என்று சொல்லவில்லை அதனால் இது வினோதமான மனநோயா என்று ஒரு சந்தேகம் அவனுக்கு உண்டு.

அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். இதுபற்றி ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அவர்கள் சொல்கிற பாகங்களை எல்லாம் பார்த்தால் சில நேரம் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும்.ஆனால் விரல்களில் பிரச்சினையில்லை என்று நினைப்பான்.

அவனைப் பொறுத்தவரை அவன் கண்ணோட்டமே தனி. பிரபலங்களைப் பார்க்கும்போதும் அவர்களோடு சேர்ந்து அவர்களின் விரல்களும் அதன் அசைவுகளும் அவன் மனதில் இருக்கத்தான் செய்கின்றன.

அது தனக்குள் ஒரு நோயாக மாறி இருக்கிறதோ என நினைப்பான்.ஒரு நாள் அவன் மனைவி கூட ஒருவரை நினைவு படுத்திய போது

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “பவித்ரா அம்மா கையை  பார்த்தீங்களா ? கைவிரல்கள் குண்டு குண்டா இருக்கு”  என்றாள்.

இன்னொருமுறை

“ராமா தங்கச்சி கைவிரலைப் பார்த்தீங்களா? அவள் விரல்கள் எவ்வளவு நீளமா இருக்கு?” என்றாள்.

தன் இளைய மகனை பற்றி பேசும்போது,

“நம்ம சின்னவன் விரல் எல்லாம் பயத்தங்காய் மாதிரி இருக்கு .எப்போதான் சதை பிடிக்குமோ?” என்றாள்.

இதைக் கேட்ட போது அவனுக்கு அப்பாடா என்று இருந்தது .

ஒருமுறை திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டு போக வேண்டியிருந்தது. திருக்கழுக்குன்றத்தில் இருந்து புறப்பட்ட பஸ் சற்று தூரத்தில் பிரதான சாலையிலிருந்து பிரிந்து ஒரு கிராமத்திற்குள் நுழைந்தது . சிறிது நேரத்தில் வேறொரு ஊரில் போய் நின்றது. அங்கே திமுதிமுவென்று ஆண்கள் பெண்கள் சேர்ந்த ஒரு கூட்டம் ஏறியது . ஏறியவர்கள் ஆர்வமாக இடம்பிடித்து அமர்ந்தனர்.எல்லாருக்கும் கைகளில்  தூக்குச்சட்டிகள் இருந்தன.கைகளைக் கவனித்தான்.யாருக்குமே  முழு விரல்கள் கிடையாது.அரை விரல்கள், கால் விரல்கள், முக்கால் விரல்கள், உள்ளிழுக்கப்பட்ட விரல்கள், உருக்குலைந்த விரல்கள், சுருங்கிப்போன விரல்கள், சிதைந்து உருக்குலைந்த விரல்கள், விரல்களே இல்லாத கைகள் என்று  இருந்தன.

யாராக இருந்தாலும் விரல்களைப்பார்த்து ரசிக்கும் அவன் அப்போது அதிர்ச்சியுடன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.