“… பெண் சிம்பன்ஸியைக் கடிப்பதை, அடிப்பதை, கூப்பாடு போட்டு மிரட்டுவதைப் பற்றிப் பார்த்தோம்.  குரங்குகளிடம் மட்டுமல்ல, பறவைகள் மத்தியிலும் பாலியல் வன்முறை இருக்கிறது.  பறவைகளிடம் ஆண்குறியில்லையே என்று கேட்பீர்கள். ஏற்கெனவே நான் கூறியதைப் போல ரேப் ஆண்குறி நுழைவைப் பொறுத்தது மட்டுமே இல்லை. சில பறவைகளுக்கு ஆண்குறிக்கு ஒப்பான பகுதிகள்கூட இருக்கின்றன. Red-billed buffalo weaver என்றொரு பறவை. தமிழில் அதை…அதற்கொரு பெயர் உண்டு. தொண்டையில் இருக்கிறது, நாக்கில் வரவில்லை. அதில் ஆண் பறவை பெண் பறவையின் குறியில் இருபது, முப்பது நொடிகள் உரசி தன் விந்தைச் செலுத்தும். பெண் பறவையின் சம்மதத்தைக் கேட்டுவிட்டு இதைச் செய்கிறதா என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கக்கூடாது.”

டி.வி. சானலில் ஒரு ஆண் குரல் சிரிப்பது கேட்டது. அத்தோடு ஒரு பெண்குரலும் இணைந்துகொண்டது.  சுஜி கல்லூரியிலிருந்து வந்துவிட்டாள் போல. அவள்தான் இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்ப்பாள்.

ஆண்குரல் தொடர்ந்து ஒலித்தது.

”மல்லார்ட் எனப்படும் காட்டு வாத்துக்கு அசலான ஆண்குறியே உண்டு.அது கார்க் திருகு போன்ற அமைப்பு கொண்டது. வாத்தின் உடலில் பை போன்ற பகுதிக்குள் மறைந்திருக்கும் அது ஹார்மோன்கள் ஆட்டத்தால் விறைக்கும்போது வேகமாக வெளியே வரும். அதிரடியாகச் சுழன்று பெண் வாத்தின் யோனிக்குள் நுழையும். ஆனால் புணர்ச்சி அத்தனை எளிதெல்லாம் இல்லை. பெண் வாத்தின் யோனி வளைவுகளும் நெளிவுகளுமாக எளிதில் உள்ளே நுழையமுடியாதபடி அமைக்கப்பட்டிருக்கிறது. யோனிக்குள் பற்கள் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி. புணர்ச்சி எளிதாக இல்லாதபோதே ஆண் வாத்து பெண் வாத்தைத் துரத்தி ஆக்கிரமித்துப் புணர்கிறது. பறவைகளுக்குள் நடக்கும் ஆக்கிரமிப்புப் புணர்ச்சி ரேப் என்று கருதப்படுவதில்லை.  மேட்டிங் சீசனில் இதெல்லாம் நடக்கிறது, அதற்கான பரிணாமத் தேவையும் இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள். தவிர, வாத்துகள் பல கூடி கூட்டமாக ஒரு பெண் வாத்தை அத்துமீறிப் புணர்வதும் உண்டு. அதனால் பெண் வாத்து செத்துப்போவதும்…”

பெண் குரல் இடையிட்டது: ”மனிதர்களுக்கு இருக்கும் மாரல் சாய்ஸ் பறவைகளுக்கு இல்லாததால்தான் ரேப் என்று அழைக்காமல் கட்டாயப் புணர்ச்சி என மென்மையாகச்  சொல்கிறோமா?”

டிவியில் நேர்காணல் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதை யூகிக்க முடிந்தது.   சமையலறையிலிருந்து ஹாலுக்கு வந்தேன்.  சுஜியைக் காணோம்.  கோட் சூட், கண்ணாடி அணிந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் என்னைப் பார்த்தபடி பதில்சொல்லிக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் எல்லா சானலிலும் பாலியல் வன்முறை ட்ரெண்டிங் சப்ஜெக்ட் ஆகியிருக்கிறது. நேற்றுக்கூட ஒரு விவாதம் நடந்தது. நான்கு பேனலிஸ்ட்கள். அதில் இருவர் திரையிலேயே ஒருவரோடு ஒருவர் குலாவிக்கொண்டிருந்தார்கள். 

நிபுணரை நேர்காணல் செய்த பெண் காட்சித் திரைக்கே வேண்டிய நேர்த்தியோடு இருந்தாள். மயில்கழுத்து நீலத்தில் சேலை அணிந்திருந்தாள்.  மனதில் ஒவ்வாமை குமிழியிட்டு எழும்பியது. தொலைக்காட்சியை ஆஃப் செய்தேன். மயில்கழுத்து. மயில்கள்.  மயில் ரேப் செய்யுமா? ஒருவேளை அதைப் பற்றியும் அந்த நிபுணர் நிகழ்ச்சியில் பேசலாம். அதற்காகத் திரும்பவும் தொலைக்காட்சியை ஆன் செய்தால் அந்தச் சேலை, அதன் நிறத்தைப் பார்க்கவேண்டியிருக்கும். 

டீப்பாயில் புத்தகங்கள் சிதறிக்கிடந்தன.  அவற்றை அடுக்கி வைத்தபின். சமையலறைக்குச் சென்றேன்.  டீ போட வைத்த தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது. டீத்தூளைப் போடும்போது ஜன்னல் வழியே சுஜி தெரிந்தாள். தோட்டத்தில் உலாத்தியபடி மொபிலில் பேசிக்கொண்டிருந்தாள். சதா சர்வ காலமும் யாருடனாவது அரட்டை. அவளைக் கூப்பிட்டு டீ தரலாம். ஆனால் அவள் உள்ளே வந்தவுடன் டிவியைப் போடுவாள். அம்மாவோடு பேசிக்கொண்டு டீ குடிக்கப் போகிறாளா என்ன? என்னிடம் நானேதான் பேசிக்கொள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சி இன்னும் முடிந்திருக்காது. அந்தச் சேலை. அதன் நிறம். அது தந்த ஒவ்வாமை.  சுஜியிடம் அதைப் பற்றிச் சொல்லவேண்டும். 

சுஜி தோட்டத்திலிருந்து என்னைப் பார்த்துக் கையாட்டினாள்.  டீ கப்பை உயர்த்திக்காட்டி அவளை உள்ளே வர அழைத்தேன். மொபில் அழைப்பு முடிந்திருக்க வேண்டும். ஹாலில் சத்தம் கேட்டது.  ”அம்மா, டீ.”

“தேனீக்களுடைய விஷயமே வேறு. ஆனால் அத்துமீறல் என்று பார்த்தால் தேனீக்களும் அதைச் செய்யாமல் இல்லை.”  

இன்னும் நிகழ்ச்சி முடியவில்லை. 

“சுஜி, உன்கிட்டே ஒண்ணு சொல்ல நெனச்சேன்.”

“என்னம்மா?” சுஜி டிவியிலிருந்து கண்ணை அகற்றாமல் கேட்டாள். “ஏம்மா, டீல இவ்ளோ  ஷுகர் போட்டிருக்க. பாயசம் மாதிரி இருக்கும்மா.”

இவளிடம் இப்போது பேச வந்ததைப் பேசலாமா, வேண்டாமா? “ஷுகர் ரொம்ப அதிகம். ஆமா, என்னவோ சொல்லணும்னு சொன்னியே.” 

“இல்ல.” 

அங்கிருந்து நகர்ந்து வராந்தாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தெரு நன்றாகத் தெரியும். பின்மதியத்தில் நடைப்பயிற்சி செய்பவர்களைப் பார்க்க முடிந்தது. பழுப்பு நிற நாயோடு நடந்து போகும் தலை நரைத்த முதியவர்.  குண்டு சிநேகிதிகள் மூவர்.  பக்கத்து வீட்டு கேட்டின் அருகில்  காரை நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கிய கரைவேட்டிக்காரர். எங்கள் வீட்டை க்ராஸ் செய்த ஒரு தம்பதி.  வழக்கமான முகங்கள்.

அந்த ஜோடி ஒட்டிக்கொண்டும் கொள்ளாமலும் நடந்து போனார்கள். இருவரும் எத்தனை அந்நியோன்யம் என்று காட்டிக்கொள்வதாகவும், அதே நேரத்தில் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீது இருக்கும் மரியாதையால் நாகரிகம் கருதி இந்த இடைவெளியை விட்டிருக்கிறோம் என்பதாகவும்  இருக்கும். தினமும் அப்படித்தான் நடந்துபோவார்கள். இருவரும் அத்தனை இளவயதினர்கூட இல்லை. நாற்பது வயதுக்கு மேல் இத்தனை இழைதல் சாத்தியமா என்ன? ஒருவேளை நடிப்போ என்னவோ.

என் கணவனும் நானும் தெருவில் நடந்துபோனால் அநேகமாக எதிரெதிர் சாரிகளில் நடப்போம். அதுவும் ஒருவரையொருவர் பார்க்கும்படிக்கு நடக்காமல் குறைந்தது ஐம்பதடியாவது விட்டு எனக்குப் பின்னால் அவன் வருவான், அல்லது அவனுக்குப் பின்னால் ஐம்பதடி தாண்டி நான் வருவேன். சில திருமணங்கள் காலப் போக்கில் இளித்துப் போய்விடுகின்றன. சில முதல் மாதங்களிலேயே. என்னுடையது இரண்டாவது வகை. அதற்காகப் புதிதாகத் துக்கப்பட எதுவுமில்லை.

ஆனால் இப்போதெல்லாம் சுஜியுடனும் என்னால் எதையும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அதுதான் வேதனை. சுஜிக்கு பத்தொன்பது முடிந்து இருபது தொடங்கிவிட்டது. என்றாலும் பதின்ம வயதுப் பெண் குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் வருகிற அற்பச் சண்டைகள் எங்களிடையில் இன்னும் நீடிக்கின்றன.  குழந்தையில்  அவன் என் முந்தானையை ஒரு நொடி விடமாட்டாள். அது போல் இல்லாவிட்டாலும் அவள் என்னுடன் மீண்டும் நெருக்கமாக  சில வருடங்களாவது பிடிக்கும். ஒருவேளை அவளுக்கும் திருமணமானபின் அது நடக்கலாம். 

விரைவிலேயே மயில்கழுத்து நிறச் சேலையைப் பற்றி சுஜியிடம் சொல்ல வேண்டும். “அப்போ எனக்கு ஒன் வயசுதான். நான் வேலக்குச் சேர்ந்து ரெண்டு மாசமாயிருந்தது. கவர்ன்மெண்ட் வேலனா குதிரைக் கொம்பு அப்ப. எங்கப்பா சொல்வாரு கவர்ன்மெண்ட் வேலையா, ஹஸ்பண்டானு கேள்வி வந்தா வேலைதான் மொதல்லனு தேர்ந்தெடுக்கணும்னு. அப்பாதான் மொதல்நாள் ஆஃபிஸ்ல என்னைக் கொண்டுவந்து விட்டது. நிம்மதியான, பாதுகாப்பான இடம்னுதான் சேத்தாரு. ஆனா….”

ஏற்கெனவே இதே வார்த்தைகளில் என் கணவனிடம் சொல்ல ஆரம்பித்தது நினைவில் வந்தது. அப்போது எங்களுக்குத் திருமணமாகி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது.  அவனுக்கும் எனக்கும் சிலபல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டு என்று புரிந்துகொள்ள ஆரம்பித்திருந்த நேரம். ஆனால் உறவின் தங்க முலாம் மாறிவிட்டிருக்கவில்லை.  நான் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது இந்த இடத்தில்தான் குறுக்கிட்டான்.

“நானா கவர்மெண்ட் வேலையானா நீ ரெண்டாவதத்தான் தேர்ந்தெடுப்பே. அப்ப எனக்குச் சக்களத்தன் ஒருத்தன் இருக்கான். சக்களத்தன்னு தமிழ்ல வார்த்த இருக்கா?” இனிப்பும் ஆபாசமுமான அந்த வார்த்தை கூட்டிய நெருக்கத்தில் புதுக் கணவனின் ஆர்வத்தோடு என்னை இறுக்கினான். அன்று அதற்குப்பின் பேச முடியவில்லை.  

திருமணமாகிச் சில மாதங்கள் கழித்து நாங்கள் அவனுடைய நண்பன் வீட்டு விசேஷம் ஒன்றுக்காகத் திருச்செந்தூருக்குச் சென்றோம். உடல் தேடல்கள் பழகிப்போய் இருவருக்கும் நிதானம் கூடியிருந்த சமயம் அது. வார இறுதியென்பதால் விசேஷம் முடிந்தும் திருநெல்வேலியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். விசேஷத்தன்று மாலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றோம். அன்று வினோதமாகக் கடற்கரை வெறிச்சோடியிருந்தது. கோயிலில் தரிசனம் முடிந்தவுடன் வளாகத்தில் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.  “போலாமா?” என்று அவனை நச்சரித்துக்கொண்டிருந்தேன். 

“சென்னைல இல்லாத கடற்கரையா? இதுக்கா போலாம் போலாம்னு ஓடிவந்தே?” என்று கடலை நோக்கி அமர்ந்தவுடனேயே கேட்டுவிட்டான்.

“அப்டியில்ல. அங்க ஜாஸ்தி மயிலுங்க.”

“ஏன், ஒனக்கு நம்ம தேசியப் பறவைய பிடிக்காதா?” என் கையை இழுத்துத் தன் கைக்குள் வைத்துக்கொண்டான். 

“இல்ல, அப்டியில்ல. அதோட கழுத்து கலர்தான் அலர்ஜி.”

“சாப்பாடு, மருந்துனா அலர்ஜினு ஓடறவங்கள பாத்திருக்கேன். கலர்ல கூடவா? பிடிக்கலங்கறத அப்டி சொல்றியோ?”

“பிடிக்கலனு மாத்திரமில்ல.” அந்த நிறத்தைப் பற்றிப் பேசுவதே எனக்கு ஒத்துவரவில்லை. கஷ்டமாக இருந்தது.  உள்ளுக்குள்ளிருந்து உருட்டி திரட்டிக்கொண்டு வந்தது. 

“நாம ரூமுக்குப் போவலாமா? வாமிட் வரா மாதிரியிருக்கு.”

“கோயில்ல நல்லாதானே இருந்தே. மயிலோட என்ன சண்டை ஒனக்கு?”

“அந்தக் கலர்தான்…”

“சொல்ல வந்தத சொல்லு. இரு, கெளம்பறப்ப சிகரெட் கடையில ஆரஞ்ச் மிட்டாய் கொடுத்தான். அத மொதல்ல போடு.” அப்போதெல்லாம் அவன் நிறைய சிகரெட் பிடிப்பான்.  

“இப்ப சொல்லு” 

“ஆஃபிஸ்ல சேர்ந்த புதுசில ஒரு பாஸ் இருந்தான்.” 

”ரொமான்ஸ் கதை போலருக்கு.” புன்னகை விரிந்தது. “சொல்லு, சொல்லு,” விளையாட்டாக அவசர பாவனை காட்டினான்.

“அவன் ரொம்ப சரியில்லாத ஆளு,”

“ஜொள்ளு கேஸோ?” 

“அதுக்கும் மேல.”

”ஓஹோ.”

“திமிரு பிடிச்சவன். அவன் ஆஃபிஸ்ல நுழையற நேரத்தில ரிசப்ஷன்ல ரிசப்ஷனிஸ்ட் தவிர யாரும் இருக்கக்கூடாது. அவன் படியேறும்போது யாரும் படியேறக்கூடாது. எதிர்ல யாரும் படியிறங்கக் கூடாது.”

“அவன் வர்ரான்னு ஞான திருஷ்டிலியா தெரியும்? ஒருவேள அந்தக் காலம் மாறி பராக் பராக்னு அறிவிச்சிட்டுப் போவாங்களோ?”

“அப்டியில்ல. சார் வராரு, சார் வராருனு அவர் கார் டிரைவர் சொல்லிட்டுப் போவாரு.”

“சரியான காமெடியா இருக்கே.”

“ஆமாங்க. ஒரு தரம் நான் சேந்த ரெண்டாவது மாசம்  அவன் ஆஃபிஸ்க்கு வர்றப்ப ஏதோ ஒரு பொண்ணு மயில்கழுத்து கலர்ல சாரி கட்டிட்டு எதிர்ல வந்துட்டா. ஒடனே ஆஃபிஸ்ல அந்தக் கலர்ல சாரி கட்டியிருந்த எல்லா பொண்ணுங்களையும் அவன் சேம்பருக்கு வரணும்னு அவன் ஆர்டர் பண்ணான்.”

“ஆர்டரா? கவர்மெண்ட் ஆஃபிஸ்ல இதெல்லாமா நடக்கும்?”

“நெஜமாவே நடந்தது.”

“சரி, ஒடனே ஒங்க ஆஃபிஸ் பொண்ணுங்க கேட்வாக் செய்யப் போயிட்டாங்க?” அவன் குரலில் ஏளனமோ கேலியோ இரண்டில் ஒன்று தொனித்தது.

எனக்கு அவமானமாக இருந்தது. 

“போனோம், ஆனா கேட்வாக் இல்ல” என்றேன் அமுங்கிய குரலில்.  ”அவனோட சேம்பர்ல சீட்டுக்கு எதிர்ல ஒரு ஆங்கிள்ள பெரிய மிர்ரர் மாட்டியிருப்பான். யாருனாச்சிம் சின்ன வயசுப் பொண்ணுங்கள தேவையில்லாம கூப்பிடுவான். ஒக்காரச் சொல்வான். ஒக்காந்தா அங்கேந்து எந்திரிக்க விடாம கண்ணாடில அவங்களப் பார்ப்பான். அவங்க முன்னாடியே அவங்கள விதவிதமாப் படம் வரைவான்.”

அவன் என் மீதிருந்த தன் கையை எடுத்து தன் மடிவேல் வைத்துக்கொண்டான்.

 ”சாயங்காலம் கிளப்ல அவனோட சர்க்கிள்ள இருக்கற ஃப்ரண்ட்ஸ் கிட்ட எங்க ஆஃபிஸ் பொண்ணுங்களப் பத்தித்தான் அரட்டையடிப்பான்னு சொல்லுவாங்க.”

என்னிடமிருந்து கண்ணைத் திருப்பிக் கடலைப் பார்த்தான். 

அவன் கையை இழுத்துக்கொண்டபடி சொன்னேன், “அது மட்டுமில்ல. ஆஃபிஸ்ல சிலப்போ பொண்ணுங்ககிட்ட வரம்புமீறி நடந்துப்பான். அன்னிக்கும் அவன்…”  

அப்போது தூரத்தில் எழும்பிய ஒரு அலையை அவன் என்னிடம் காட்டினான். “அலை பெரிசா வர ஆரம்பிச்சிருச்சி. இன்னிக்கு அமாவாசை வேற. பீச் ஜிலோனு இருக்கு. கெளம்புவோம்.”

“இல்லீங்க, அன்னிக்கு மயில்கழுத்து கலர்ல…”

“சியாமளா, இருக்கட்டும். எதுவா இருந்தாலும் நடந்து ஏழெட்டு வருஷம் ஆயிருக்குமா?” அவன் குரலில் எந்த உணர்ச்சியும் இருந்ததாக எனக்கு நினைவில்லை. “எதுவா இருந்தாலும்  தேவையில்லாத விஷயங்கள ஒடனே மறந்துரணும். அதை எதுக்கு பெரிசுபண்ணி வீணா அதையே நினைச்சுக்கிட்டு..”

 ஏமாற்றமாக, குழப்பமாக இருந்தது. அன்று அதிசயமாக எனக்குக்  கோர்வையாக வார்த்தைகள் வந்தன. ஆனால் அவன் பேச்சைத் திசைதிருப்பிய மாதிரி இருந்தது.

“இருள் வேகமா கவ்விட்டு வருது. கெளம்புவோம்.” எழுந்து கையை நீட்டினான்.  எழுந்தேன். 

அந்த உள்ளங்கையின் இளமை. சொரசொரப்பு. இப்போது எப்படியிருக்கும் அவன் கை? ஒழுங்காக நகம் வெட்டுகிறானா என்றுகூட பார்ப்பதில்லை. 

அதன்பின் திருநெல்வேலியில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் நான் என் அலுவலகத்தில் நடந்ததைப் பற்றிப் பேசத் தொடங்கிய போதெல்லாம் அவன்  தடுத்தான். எங்கள் மத்தியில் விரிசல் உருவாக ஆரம்பித்தது. இனி அந்தப் பேச்சையே அவனிடம் எடுக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். நேற்று நடந்தது போலிருக்கிறது.

கிராதியின் மரச் சட்டங்களின் ஒன்றை எண்ணிக்கையில் தவறவிட்டதாக உணர்ந்தேன். அன்று கடற்கரையிலிருந்து அவன் என்னைக் கிளப்பியபின் என்னை மனச்சோர்வு சூழ்ந்துவிட்டது. திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில் ஓரு ரெஸ்டாரண்டில் காரை நிறுத்தி டின்னர் சாப்பிட்டோம். அதன் பின்னர் நெடுஞ்சாலைல் ஒரு விபத்தைப் பார்த்தோம், இல்லையா?  ஒரு வேன் மீது தனியார் பஸ் ஒன்று மோதி வேனின் முன்பகுதி நசுங்கிச் சிதறியிருந்தது. அவன் காரை நிறுத்தி அடிபட்டவர்கள் இருவரை காரில் ஏற்றிக்கொண்டான். திருநெல்வேலி சென்ற பின் அந்த விபத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அதில் ஒருவன் எட்டு வயதுச் சிறுவன். அவன் விரல்கள் அறுபட்டு கையே போய்விட்டது. “எத்தனை கோரமான விபத்து!” என்று அவன் அரற்றிக்கொண்டிருந்தான். 

ஆனால் அடுத்த நாள் நான் கடற்கரையில் தொடங்கிய பேச்சை அவனிடத்தில் தொடர முயன்றேன், இல்லையா?

அடுத்த நாள் அவன் அலுவலகத்தில் ஏதோ பெரிய பிரச்சினை. யாரோ அலுவலகப் பணத்தைக் கையாடல் செய்துவிட்டார்கள் என்று அவனுக்கு தொலைபேசியில் அழைப்புக்கு மேல் அழைப்பாக வந்துகொண்டிருந்தது. ஆனால் அதெல்லாம் பகலில்தானே? இரவில் டின்னர் சமயத்தில் நான் மீண்டும் அதைப் பற்றிப் பேசத் தொடங்கி, அவன் என்னை கட் செய்தான்.  என் கண்கள் கலங்கி, அதை அவன் கண்டுகொள்ளாமல், இருவருக்கும் சண்டை வேறு நடந்ததே! 

இல்லை, அன்றிரவு சண்டை நடக்கவில்லை. அது வேறொரு நாள். கையாடல் புகார் தரப்பட்ட அன்று நாங்கள் டின்னர் சாப்பிடுவதற்கு முன்பே திருநெல்வேலியிலிருந்து கிளம்பிவிட்டோம். அவன் கணவனின் நண்பன் வீட்டில் கலந்த சாதம் கட்டிக் கொடுத்தார்கள். அந்த நண்பனும் எங்களோடு கூடவே சென்னைக்கு வந்தானே. அவனது நண்பன் மூன்றாம் மனிதன் முன்னால்  அலுவலகத்தில் நடந்ததையெல்லாம் நான் எப்படி சொல்லியிருப்பேன்? நான் ஒரு போக்கில் நிகழ்வுகளை யோசித்துக்கொண்டிருந்தபோது, மாறுபட்ட வேறொரு குறுக்கிட்டபடியே தொல்லை செய்தது.

மரச் சட்டத்திலிருந்து ஒரு சிராய்ப்பு விரலில் பாய்ந்துவிட்டது. வருடக் கணக்காகிவிட்டது. மாற்றித் தொலைய வேண்டும். 

என் ஞாபக அடுக்குகளில் எங்கோ பிழை நுழைந்திருக்கிறது. திருநெல்வேலியில் தங்கியிருந்த அந்தச் சில நாட்களில்தான் அவனிடமிருந்து விலகத் தொடங்கினேன். எளிமையான காரணம்தான்.  நான் முக்கியமான அந்தரங்கமான விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள நினைத்தபோது, அவன் கேட்க விரும்பாமல் நடந்துகொண்டான். மனைவி, அதுவும் அப்போது நான் புது மனைவி வேறு, சொல்ல வருவதில் கணவன் கொஞ்சமாவது அக்கறை காட்டியிருக்க வேண்டாமா? என் எதிர்பார்ப்பில் என்ன தவறிருக்கிறது? அதன் பின்   நடந்ததைப் பற்றிப் பேச நான்கைந்து முறைகளாவது முயன்றிருப்பேன். முயன்றிருப்பேன் என்ன, முயன்றேன். ஆம், அதுதான் உண்மையாக இருக்க முடியும். 

இல்லாவிட்டால், பிறகு எப்படி எங்களுக்கிடையே இருந்த நெருக்கம் அந்தப் பயணத்திலிருந்து சிதைய ஆரம்பித்தது? அப்படித்தான் என் மனதில் பதிந்திருக்கிறது.  அன்று முதல் இன்று வரை பேருக்குக் கணவன் – மனைவியாக மாத்திரம் நாங்கள் நடமாடுவதற்கு சுழி போட்டது திருச்செந்தூர் கடற்கரையில் நடந்ததுதானே? கடற்கரைக்குப் போன முந்தைய நாள் சுஜி உருவாகியிருக்க வேண்டும். அதற்குப் பின் அவனுடன் நான் சேர்ந்து படுப்பது அர்த்தமில்லாது போன இரவுகள். அவசர கதியில் அவனாகத் தொடங்கி அவனாக முடித்து வைத்த அர்த்தமில்லாத புணர்ச்சிகள். முதலில் திரும்பிப் படுத்து முதுகைக் காட்டுவது நான்தான் என்பதில் எனக்குக் கிடைத்த அர்த்தமில்லாத சின்னப் பெருமிதம். அர்த்தமில்லாத, அர்த்தமில்லாத…அர்த்தமில்லாத குழந்தை எதுவும் நல்ல வேளையாகத் திரளவில்லை. Red-billed buffalo weaver ஆண் பறவை தன் இணையான பெண் பறவையை உரசி விந்தணுவைச் சேர்ப்பதற்காகப் பெண் பறவை ஆத்திரப்படாதா? தன் முகத்தைக் கூடவா அது திருப்பிக்கொள்ளாது?

கிராதியின் மரச் சட்டங்கள் “எங்களை இன்னொரு முறைதான் எண்ணேன்” என்று கேலி செய்து சிரித்தன. மறையப்போகும் மாலைச் சூரியனைப் பெரிய கருமேகம் ஒன்று மறைக்க, நிழல் சட்டங்களுக்குள் புகுந்து ஆட்டம்காட்டியது.  கிட்டத்தட்ட இருபது வருடமாகிவிட்டது. அன்று  கடற்கரையில் அவர்கள் பேசிய ஒவ்வொரு வசனமும் வார்த்தையும் தொனியும் முகபாவனையும் ஏன் அவனுடைய உள்ளங்கை சொரசொரப்பும்கூட என் நினைவிலிருக்கும்போது, அதற்குப் பிறகு நடந்தது  மட்டும் மறந்து போக வாய்ப்பில்லை. ஆனால் அதன் பின் நான்கைந்து முறை நான் அதைப் பேச வந்தபோது சொல்ல முடியாதபடிக்கு அவன்தான் தடுத்தான் என்பதில்தான்  ஏதோ இடறுகிறது. 

 மீண்டும் மரச் சட்டங்களை எண்ணினேன். சிராய்த்த மரச் சட்டத்தைக் கவனமாகத் தவிர்த்தேன். ஒரு முறையாவது அவன் அப்படி நடந்துகொண்ட விவரங்கள் எனக்கு ஸ்தூலமாக  ஞாபகம் வரவேண்டாமா? என் நினைவே தனக்குத் துரோகம் செய்யுமா என்ன?  வருடம் போகப் போக பட்டதெல்லாம் மறந்துவிடும் போல.

ஒருவேளை கடற்கரையில் நடந்த அந்த உரையாடலுக்குப் பின்பு நான்தான் மீண்டும் அந்த விஷயத்தை அவனிடம் பகிர்ந்துகொள்ள முயலவில்லையோ? சேச்சே, அப்படியிருக்காது. ஆனால் அந்தச் சாத்தியம் என்னைப் பதற வைத்தது. 

இருக்காது.  அந்த மொகரைதான் நான் சொல்லவந்ததைக் கேட்காமல் நகரப் பார்த்தது.  கடற்கரையிலேயே “பெரிசு பண்ணாதே,” “தேவையில்லாத விஷயம்” என்றுதானே சொன்னான்? ஒருவேளை கடற்கரையில் என் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டிருப்பானோ? எதற்குத் திரும்பவும் என் வாயால் கேட்கவேண்டும் என்று தவிர்த்திருப்பானோ? எது எப்படியோ, என் துயரத்தைக் குறைக்கவோ அதில் பங்குகொள்ளவோ சிறிய அளவு பொறுப்பும் ஏற்க அவன் முன்வரவில்லை.

அவன்மீது கொண்ட ஆத்திரத்தை அதிகரிக்க அதன்பின் இன்னொரு சம்பவம் நடந்தது. அப்போது குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள். பிரைமரி ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தாள். வேலை மாறுதலால் நான் அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்படிச் செல்லும்போதெல்லாம் சுஜியைத் என் அம்மா வீட்டில் விட்டுவிடுவேன். பொதுவாக மனைவிகள் வீட்டில் இல்லாதபோது கணவன்களுக்கு அவர்கள் நண்பர்களோடு கூடிக் களிக்கப் பிடிக்கும் என்பதால் எங்கள் வீட்டிலும் இந்த ஏற்பாடு இருந்தது.  ஒரு தீபாவளிக்கு முந்தைய வாரமென்று நினைக்கிறேன். என்னுடைய வேலை ஒரு நாள் முன்னரே முடிந்துவிட்டதால் அவனுக்குத் தெரிவிக்காமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.  மொபில் வசதியெல்லாம் அப்போதில்லை.  அவனும் அவனுடைய ஏழெட்டு நண்பர்களும் வீட்டில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் திடீரெனத் திரும்பி வந்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவன் முகத்திலும் அவனுடைய நண்பர்கள் முகங்களிலும் உற்சாகம் வடிந்துவிட்டது. லுங்கியிலிருந்த அவன் பேண்ட், சட்டையை மாட்டிக்கொண்டு நண்பர்களை விட்டுவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனான். முகம் கழுவி, டீ குடித்தபின் ஹாலில் கண்டமேனிக்குக் கிடந்த சோஃபா குஷன்களை ஒழுங்கு செய்துகொண்டிருந்தேன்.  ஒரு ஆவலில் அப்படி என்ன படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று டிவி டெக்கை ஆன் செய்தேன்.

வீட்டில் நான் இல்லாதபோது ரேப் போர்ன் வீடியோவைப் போட்டுப் பார்ப்பவன் என் கணவன். அதுவும் நண்பர்களோடு கூட்டமாக.  வீடியோவில் வந்த காட்சியைப் பார்த்த நிமிடத்தில் எனக்கு அவனைப் பற்றி முழுக்கத் தெரிந்துகொண்டு விட்டதாகத் தோன்றியது. கூட்டத்தோடு கூட்டமாக அரட்டையடித்தபடி ரேப் போர்ன் வீடியோவை ரசிப்பவனிடம் ஒருத்தி தன் அந்தரங்கத் துயரைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? அவனிடமிருந்து கரிசனம் கிடைக்குமா? வாய்ப்பில்லை என்றே பட்டது.   

என் கணவன் ரேப் செய்யவில்லைதான். ஆனால் ரேப் வீடியோவை அவனும் பார்த்திருக்கிறான். ஒரு பெண்ணைத் துன்புறுத்தும்போது சகோதரப் பிணைப்பு மாதிரி ஒன்று எப்படியோ ஆண்கள் மத்தியில் ஏற்பட்டுவிடுகிறது. பெண் பறவைகூட ஆண் கூட்டத்தில் என்ன படாத பாடுபடுகிறது!  மல்லார்ட் ஆண் வாத்து பெண் வாத்தைத் துரத்தித் துரத்தி ரேப் செய்கிறது. சமயத்தில் கூட்டமாகக்கூடச் செய்யுமாம்.  ரேப் என்று அதைக் கூறக் கூடாது, கட்டாயப் புணர்ச்சி என்று கூற வேண்டும் என்று திருத்தினார் அவர். வார்த்தை இருக்கட்டும். அந்தக் காட்சி மற்ற ஆண் வாத்துகளின் பார்வையில் படும்போது அவை என்ன செய்யும்? அவையும் துரத்துமா? வாத்துகளைப் பற்றி மேற்கொண்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

மரச் சட்டங்களை இதுவரை நூறு முறை எண்ணியாகி விட்டது. கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.  என் கணவன்தான்.  கையசைத்தபடி உள்ளே வந்தான். அவனுக்குத் தொந்தி வந்துவிட்டது. நடையில் ஒரு இம்மி கம்பீரம் குறைந்துவிட்டது.  தலை முழுக்க நரை. நரைக்கு டை அடித்துக்கொள்ள முனையாத அளவுக்கு அவனுக்கு வயதாகிவிட்டது. எனக்கும்தான். ஷூவைக் கழற்றிவிட்டு உட்கார்ந்தவன் “இன்னிக்கு நாம வெளில போய் சாப்பிடலாமா? ஒரு நாளாச்சும் அம்மா ரெஸ்ட் எடுத்துக்கட்டும்” என்றான் சுஜியிடம். மகள் புருவத்தை உயர்த்தி உதட்டைச் சுழித்தாள்.  “அம்மா மேல லவ்வு.” சுஜிக்கு ரொம்பத்தான். அவன் மந்தகாசமாகச் சிரித்தான். 

ரேப் போர்ன் வீடியோவை டெக்கில் கண்டுபிடித்தபின் பல நாட்களுக்கு அவன் முகத்தில் விழிக்கவே நான் விரும்பவில்லை. அவன் செய்த காரியம் எனக்குத் தெரிந்துவிட்டதென்று அன்றே அவனுக்கும் தெரிந்துவிட்டது. அவன் சங்கடப்பட்டதையும் உணர்ந்தேன். படட்டும். படுக்கையறையிலிருந்த தன் தலையணையை எடுத்துக்கொண்டு வெளியே படுக்கவந்தபோது “நான் செஞ்சிருக்கக்கூடாது. சாரி. இனிமே நடக்காது” என்றான். எனக்கிருந்த வெறுப்பில் ஜடப்பொருளாக அவனைக் கருதி பார்த்தும் பார்க்காமலும் நகர்ந்தேன். பிறகு அவன் சில முறை செக்‌ஷுவல் ஃபேண்டஸிக்கும் நடப்பு வாழ்க்கைக்கும் நேரடித் தொடர்பு கிடையாது என்று என்னிடம்  வாதிட்டிருக்கிறான். நான் அவன் முகத்தையே பார்க்காமல் வேறெங்கோ பார்ப்பேன்.  ”அன்னிக்கு பியர் ப்ரஷர்தான். இல்லாட்டி பாத்திருக்க மாட்டேன்” என்றான் ஒரு முறை.  ”நானோ என் ஃப்ரண்ட்ஸோ நெஜ வாழ்க்கையில் அப்படிப்பட்டவங்க இல்லை.” எத்தனை சமாதானங்கள்!  நறுக்கென்று பேச்சைக் கத்தரித்துவிட்டு எழுந்து போய்விடுவேன்.  என்னுடைய துன்ப அனுபவத்தை அன்று சிரமப்பட்டு நான் பேச முயற்சி செய்தபோது நீ காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. உன் லோலாயி விவகாரத்தை நான் கேட்டு உன்னைப் புரிந்துகொள்ள வேறு வேண்டுமா? 

”ரெடியாவலியா?” அவன்தான். உள்ளே சென்று சேலை மாற்றிக்கொண்டு தயாராகி வந்தபோது அவனும் மகளும் காரில் இருந்தார்கள். எப்போதாவதுதான் நாங்கள் குடும்பமாக வெளியே டின்னருக்குப் போவது, அவன் முன்சீட்டுக் கதவைத் திறந்துவிட்டபடி என்னை மென்மையாகப் பார்த்தான். பொறுப்பும் வேலைப் பளுவும் கூடிவிட்டதால் குழி விழுந்த கண்கள். கன்னம் வரை இறங்கிய கருவளையங்கள்.  அவன் முகத்தை நான் குளோஸ்-அப்பில் பார்க்கும் அபூர்வத் தருணங்களில் இதுவும் ஒன்று. 

காரில் ஏறுகையில் அவனை மிக நெருக்கத்தில் பார்த்தபோது அவனது அன்பு கூடியிருந்த முகபாவத்தில் ரேப் போர்னை எல்லாம் தானாக விரும்பித் தேர்ந்தெடுத்துப் பார்ப்பவனாக அவன் தெரியவில்லை.  ஒருவேளை அன்று கடற்கரையில் நான் சொல்ல வந்ததைக் கேட்காமல் அவன் புறப்பட்டபோது அவன் கன்னத்தில் ஒரு தட்டு தட்டியிருந்தால் முதலில் கொஞ்சம் ஆத்திரப்பட்டாலும் நான் சொல்ல வந்ததை உட்கார்ந்து கேட்டிருப்பான் என்றும்  தோன்றியது. 

**