கடிகாரத்தின் நொடி முள் ஏற்படுத்தும் டிக் டிக் சப்தமும் இப்போதெல்லாம் கொஞ்சமும் பிடிப்பதில்லை. நிசப்தம் வேண்டும். நிசப்தத்தை என் வீடு முழுவதும் ஊற்றுபவன் பேறுபெற்றவன். அவனை நான் ஆசீர்வதிக்கிறேன். கடலளவு நிசப்தம் வேண்டும். மௌனத்தின் உரையாடலுக்கு மட்டும் செவிகொடுத்து அமர்ந்திருக்கிறாள் அவள். நகுலனின் சுசீலா. நகுலனுக்குத்தான் அவள் சுசீலா. எனக்கு, அவள் சுகன்யா. சக்தியின் பேருவகை என் சுகன்யா. இந்தப் பிரபஞ்சத்தைப் பிணைத்து வைத்திருக்கும் பெயரறியா ஏதோ ஒன்று. இப்படிச் சொன்னால் எப்படி? தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். ஆனந்தம். இல்லையில்லை. அது பெருங்கனவு. அதை நான் மட்டும் உணர்ந்திருக்க, பெயரிடுவது பெரும் பிழை. பெயரில்லா ஒன்று. அதைத்தான் முன்னமே சொன்னேன் அல்லவா? ஏதோ ஒன்று. அதுதான் அவள். இப்படிச் சொல்லலாமா? எதுயெது அவள் இல்லையோ அதை மீறிய ஒன்றுதான் அவள். சமயங்களில் அவள் நான் வளர்க்கும் பூனைக்குட்டி. நிசப்தம். நிசப்தம். நிசப்தம். இருளின் தனிமையில் அணைக்கும் நிசப்தம். சவக்குழியின் நிசப்தம். இப்போதெல்லாம் இறப்பின் வாசனையை மிக ஆழமாக சுவாசிக்கிறேன். உள்ளிழுக்கும் பிராணவாயு மரணத்தைச் சுமந்து செல்கிறது. வெளிவரும் காற்றை உள்ளடக்கிப் பார்க்கிறேன். நிசப்தம் வேண்டுமே! பெண் சிங்கமாய் கதறுகிறாள் சுகன்யா. அன்பே! சம்பிரதாயங்களை மீறி உனக்கொரு கதை சொல்ல போகிறேன். எனக்கு நீ உதவ வேண்டும். நீதான் இந்தக் கதையைப் புனையவிருக்கிறாய். நீ சொல் நான் எழுதுகிறேன். நீ சொல். நீதான் சொல். சொல் நீயே. நீ மட்டும்தான். என்னை எதுவும் செய்யச் சொல்லாதே. சொல்லாக நீ; வேறென்ன வேண்டும். சொல். ஆரம்பி. கனவு காண்பதாகக் குழம்பாதே. இது கனவல்ல. மன்னிக்கவும். இது விழிப்பு நிலைக் கனவு. தூங்கி எழும் போது களைந்து போகும் கனவைப் போலத்தான் நீயும் நானும் இங்கே இருக்கிறோம். அதில் உறக்கம் வருகிறது. அதில் கனவு காண்கிறோம். விழித்ததும் கனவை கனவென்று உணர்கிறோம். உண்மையில் நாம் இந்த இருத்தலில் விழிப்பதில்லை. விழிக்கவும் வேண்டாம். நீ கதைச் சொல். நான் கேட்கிறேன். கதையை நீயே சொல் என்கிறேன். ஆனால் கதையை நான் புனைந்து கொண்டிருக்கிறேன். எதுவானாலும் நீதான் கதையைச் சொல்கிறாய். கதையைச் சொல். நீயே சொல். சொல் நீதான். கதை சொற்களினால் புனையப்படுகிறது. சொல் மட்டும் கதையா? இல்லையே நீதான் கதை. கதை எப்படிப் பிறக்கிறது? எனக்கு உன்னைத் தெரியும். நீதான் கதை. கதையைச் சொல்லும் நீயே கதை. இல்லை இல்லை நீ சொல். நீயே சொல். இந்தக் கதையில் வரும் காட்சிகள் வெறும் கற்பனையே. கற்பனை எப்படி ‘வெறும்’ கற்பனைகள் ஆகும்? எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. நீ ஏதோ சொல்கிறாய். நானும் எழுதுகிறேன். இது ஓர் சரித்திரக் கதை. ஏற்கனவே முடிந்துப்போன ஒன்றைத்தான் நாம் சரித்திரம் என்கிறோம். முடிந்துபோன ஒன்றை நாம் ஏன் திரும்பவும் கதையாகப் பேச வேண்டும். நமக்கு வேறெதுவும் இல்லையா என்ன? சொல் இருக்கிறது. நீ இருக்கிறாய். நீயே சொல். நீ சொல். செத்து புதையுண்ட பிரேதத்தைத் தோண்டி அதற்கு எதற்கு அலங்காரம் செய்ய வேண்டும். நிசப்தம் வேண்டும். தூங்கும் கடல் நாகத்தைத் தட்டி எழுப்பாதீர்கள். நிசப்தம்.

சரி கதையை இப்படி ஆரம்பிக்கலாம்: ஒரு பெரிய திறப்பிலிருந்து ஒரு குரல் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்து வந்து அவனை எழுப்பியது.

எழுந்து எழுத ஆரம்பி. தூங்காதே. எழுந்திரி நாயே! எழுது. இப்போதே எழுது.

என்ன எழுத வேண்டும்? யார் நீ?

எதையாவது எழுதித் தொலை. ஆனால் தூங்காதே. எழுது.

யார் நீ? அர்த்த ஜாமத்தில் எழுப்பி எழுத சொல்கிறாயே? யார் நீ?

உனக்கு அது முக்கியமா என்ன?

ஆமாம். அவசியம் நீ யார் என்று தெரிந்தாக வேண்டும். இதை வாசிக்கும் அனைவருக்கும் நான் சொல்ல வேண்டும்.

ஓ! சரி, ஆனால் அதற்கு முன் நிறையப் பேச வேண்டியிருக்கிறது. நீ முதலில் எழுந்து அந்த நாற்காலியில் உட்கார். சீக்கிரம்.

சொல்!

இந்த உலகத்தில் மிகப்பெரிய தண்டனை என்ன தெரியுமா?

ஏய்! இங்கே பார். நான் தூங்கி நான்கு நாட்களுக்கு மேலாகிறது. அளவுக்கு மீறி Tylenol PM மாத்திரிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறேன். அப்படியும் நான்கு நாட்களுக்கு ஒருமுறைதான் தூக்கம் வருகிறது. உண்மையாக நீ சொல்வதைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை. என்னைக் கொஞ்சம் தூங்கவிடு.

உனக்கும் எனக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு நான் போய்விடுகிறேன். செத்த சவமே! நாயே! இங்கே பார்.

உனக்கு மரியாதை என்றால் என்னவென்று தெரியுமா?

ஹா! ஏய் திருட்டு நாயே! நான் பேசும் கெட்ட வார்த்தைகளைக்கூட நீ எழுதாமல் இந்தக் கதையை நீ அனுப்ப போகிறாய். உண்மையைச் சொல், இதை வாசித்துக்கொண்டிருக்கும் யாரும் புழங்காத வார்த்தைகளைக் கொண்டா இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறாய்?

என்ன இது கதையா? அப்படியே கதையாக இருந்தாலும் நீ சொல்லும் வார்த்தைகளை எழுதிதான் வெளியிடுவேன்.

நீ எழுதுவாய். ஆனால் உன் எடிட்டர் இதையெல்லாம் மாத்திவிடு என்று உனக்கு உத்தரவிடுவாள். நீயும் சகல துவாரத்தையும் மூடிக்கொண்டு அப்படியே செய்வாய்.

கதை எழுதி முடிக்கப்பட்டபோது எடிட்டரம்மா சர்வ சிரத்தையுடன் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் தூக்கிவிட்டார்கள். படிக்கும்போதே முகம் சுளிக்க வைக்கிறது என்று விமர்சனத்தையும் வைத்தார்கள். அவ்வளவு வீட்டு வேலைகளுக்கு நடுவில் பாழாய்போன என் எழுத்தை படித்துத் திருத்தித் தருவதால் நானும் அப்படியே இருக்கட்டும் என்று பத்திரிகைக்கு அனுப்பி வைத்துவிட்டேன்.

ஆஹா! நீ என்னைக் கவர்ந்துவிட்டாய். யார் நீ? உன்னைப் பற்றி எழுதியே ஆகவேண்டும்

உனக்கும் எனக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. நீ நிகழ் காலத்தில் அமர்ந்துகொண்டு கடந்த காலத்தின் கதைகளைத் தோண்டி எடுக்கிறாய். நான் நிகழ் காலத்தில் இருந்துகொண்டு எதிர்காலத்தில் என்னை நிறுவிக்கொள்கிறேன். ஆனால் உனக்கு நான் கடந்த காலத்தவன். எனக்கு நீ எதிர்காலத்தவன்.

எனக்கு புரியவில்லை.

புரியாமலே இருக்கட்டும். நீ எழுது. அதுதான் உன் வேலை. நீ எழுதிக்கொண்டிருக்கிறாய். நீ நிகழ்காலத்தில் வாழ்கிறாய் என்பது இதன் மூலம் நிச்சயப்படுகிறது. நான் உன்னுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் நிகழ்காலத்தில் இல்லை. நான் உன் நினைவுகளின் படிமங்களில் தேங்கியிருக்கிறேன். நீ என் கனவுகளில் உருகொண்டு எழுதிக்கொண்டிருக்கிறாய். காலம் எவ்வளவு வினோதமானது என்று பார்த்தாயா!

நீ பேசுவது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை. உன் குரல் மங்கி மறைகிறது. சத்தமாகப் பேசு

ஏய் பைத்தியமே நீ எழுது!

ம். உன் குரல் பாதாளங்களிலிருந்து த்வனிக்கிறது

திரும்பிச் சொல். என்ன சொன்னாய்?

உன் கு…

சீ சனியனே! கடைசியாகச் சொன்ன வார்த்தை அதைச் சொல்

த்வனிக்கிறது

பிரமாதம். இன்னொருமுறை சொல்.

த்வனிக்கிறது

அற்புதம். த்வனி. த்வனிக்கிறேன். த்வனி நான். நான் த்வனி.

ஏன்? என்னவானது உனக்கு?

எங்கிருந்து பிடிக்கிறாய் இந்த அலங்கார வார்த்தைகளை? த்வனிப்பதால் எனக்கு வாந்தி வருகிறது. த்வனி. உவ்வே….

அந்தக் குரல் சில சமயம் தெளிவாகவும் சில சமயம் வெறும் எதிரொலியாகவும் மாறி மாறிக் கேட்கிறது.

சுகன்யா உனக்கு ஒன்று தெரியுமா? இந்தக் கதையை அவன் சேற்றைக் குழப்பி இருட்டில் அந்த மண்சுவற்றில் எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு குஷ்டரோகி அங்கே வந்தான்.

ஒருநிமிடம். யார் இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? இந்தக் கதையை நானே புனையவிருப்பதாகக் கூறினாயே? அதுபோக யார் புதிதாக வந்த குஷ்டரோகி? தொழுநோய் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது. அப்படித்தானே?

சுகன்யா இந்தக் கதையை நீதான் புனைந்து கொண்டிருக்கிறாய் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஏனெனில் நீயே சொல். நீ வெறும் வார்த்தைதானே சுகன்யா! வார்த்தைகளால் இந்தக் கதை தொடுக்கப்படுகிறது. அதுபோகக் காலம் மிகவும் விசித்திரமானது. நீ நான் கதையை இருட்டில் எழுதிக் கொண்டிருப்பவன் த்வனித்து மறையும் ஒலி Tylenol PM மாத்திரகளை விழுங்கிக் கொண்டிருப்பவன் புதிதாக வந்திருக்கும் குஷ்டரோகி எல்லாமே ஒருவர்தான்.

உன் எடிட்டரை மறந்துவிட்டாயே?

ஆம்! அவளுக்குத்தான் மிகப் பெரிய தலைவலியாக இருக்கப்போகிறது. எது முதலில் வரவேண்டும் என்று குழம்பப்போகிறாள். நீ தொழுநோய் குறித்துக் கேட்டதற்குப் பதில் சொல்லிவிடுகிறேன். நினைவிருக்கிறதா? இது ஒரு சரித்திரக் கதை என்று சொன்னவள் நீதானே? இந்தக் கதை நடந்த சமயம் தொழுநோய் இருந்தது.

சரி எனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்து. இப்போது நாம் பேசுவதையும் சேற்றைக் குழைத்து இருட்டில் அந்த யாரோ ஒருவன் எழுதிக் கொண்டிருக்கிறானா?

ஏன் என்னைக் கேட்கிறாய் சுகன்யா? அப்படி எழுதுகிறான் என்று நீயே கதையைச் சொல்கிறாய். சொல்லினால் புனைகிறாய். நினைவிருக்கிறதா? நீயே சொல். நீ சொல். நான் எழுதுகிறேன்.

முதலில் ஒரு புள்ளியாக வந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பரவியது அந்த நோய். குதிரையிலிருந்து கீழே விழுந்துபோது அவன் இடது கை மோதிர விரலில் கசிந்த ரத்தத்தை அவன் கவனிக்கவில்லை. கொஞ்ச நாளில் வளர்ந்த புள்ளி அவன் மேலெங்கும் பனியை போன்ற படலத்தால் நிறைத்தது. வலி இல்லை. அதுதான் அவனது சாபம். அவன் விரல்கள் பழுத்த இலைகள் மரத்தைவிட்டு உதிர்வதைப் போல உதிர்ந்தன. வலியில்லை. வலி நிவாரணிகள் உண்டு. வலி வரவழைக்கும் நிவாரணிகள் நம்மிடம் உண்டா?

அந்த ரோகி, வலி வேண்டி இவ்விருளில் கதறிக் கொண்டிருக்கிறான். அழுகையை நிறுத்து என்று எங்கிருந்தோ ஒரு குரல் த்வனிக்கிறது.

ரோகியின் துர்நாற்றாம் அந்தச் சூழலை இன்னும் மோசமாக்கியது. கதையை எழுதுபவனின் நக இடுக்கிலிருந்து ரத்தம் கசிகிறது. சேறு அவன் நகக்கணுக்களுக்குள் சென்று கடுகடுப்பை ஏற்படுத்துகிறது. இருளில் அவன் உண்மையில் எழுதுகிறானா அல்லது மனம்போன போக்கில் சேற்றால் அர்த்தமில்லாமல் எதையும் தீட்டுகிறானா என்பது தெரியவில்லை.

இன்னும் எழுது. பாதாளங்களில் இருந்து அந்தக் குரல் மீண்டும் த்வனிக்கிறது. பேய் பிடித்ததவனைப் போல் வேகமாக எழுதுகிறான்.

நிறுத்து இன்னும் எத்தனை பேரை இந்தக் கதையில் சேர்க்கவிருக்கிறாய்?

பிரபஞ்ச பேராற்றலே! திரும்பவும் சொல்கிறேன். இது உன் கதை. நீதான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.

அதோ அங்கு ரோகியின் பின்னால் நின்று கொண்டிருக்கும் அந்த வெண்பிசாசு யார்?

எனக்குத் தெரியாது. எனக்கு நான் இருக்கிறேனா என்பதே சந்தேகமாக இருக்கிறது. நீ மட்டுமே எங்கும் வியாபித்திருக்கிறாய். எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாய் இருக்கிறாய். நீயே ஆதித்தாய். தொடக்கத்திலிருந்த சொல். வார்த்தை. நீயே அந்த வெண்பிசாசை இந்தக் கதைக்குள் உலவவிடுகிறாய். அம்மா நீயே சொல். சொல் இல்லையேல் இந்தக் கதை புனையப்படாது. அந்த வெண்பிசாசை சொல்லால் உலவவிடு.

அந்த வெண்பிசாசு ரோகியின் பின்னால் மறைந்து நிற்கிறது. ரோகியின் முட்டியளவுகூட அது இல்லை. சிறிய வெண்பிசாசு. அது அன்னார்ந்து மேலே நோக்குகிறது. கீழே கிடக்கும் காசை எடுத்துக்கொண்டு மீண்டும் அன்னார்ந்து நோக்கி காசை அந்தத் திறப்பின் மேல் பொருந்தும்படி வைத்துப்பார்க்கிறது. இந்தக் காசின் அளவுதான் அந்தத் திறப்பிருக்கிறது என்று நினைத்துக் கொள்வதில் அந்தப் பிசாசுக்கு அவ்வளவு திருப்தி.

அந்த வெண்பிசாசுக்கு த்வனிக்கும் ஒலி ஒரு கதை சொல்லியது. துந்துபியின் மரணம் சுக்ரிவனின் வரமானது. அதுவே வாலியின் சாபமானது. மதங்க முனிவர் தவம் களைந்தது. சுகன்யா நீ இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

கதையைச் சொல்லாமல் நீ ஏன் இப்படித் தத்துவச் சரடுக்குள் சிக்கிக்கொள்கிறாய்?

இதுவும் கதையின் ஒருபகுதிதான் என் அன்பே. சீதையை ராவணன் கடத்திச் செல்கிறான். ராவணனும் அஞ்சும் பெரிய வல்லவன் வாலி. துந்துபி, வாலி, சுக்ரீவன், ராமன், மதங்க முனிவர், உருமை, தாரை, நீ, நான், வார்த்தைகள், இந்தக் கதையை எழுதிக் கொண்டிருப்பவன், வெண்பிசாசு, த்வனிக்கும் குரல், ரோகி அனைவரும் ஒரே சரடால் பின்னப்பட்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா? நானும் நீ என்கிறேன் நான் என்கிறேன் ஆனால் எதையும் யாரிடமிருந்தும் வித்தியாசப் படுத்தாமல் இருக்கிறேன்.

தொடர்ந்து சொல்.

ராமன் வாலியை வதம் செய்யும் முன் அவனது பலத்தை அறிந்துகொள்ள இங்கிருந்துதான் நோட்டமிட்டான்.

நாம் இப்போது எங்கு இருக்கிறோம்?

அதான் சொன்னேன் அல்லவா? ராமன் வாலியை கண்ட இடம். அதனால்தான் இந்த ஊருக்கு வாலிகண்டபுரம் என்று பெயர்.

இங்கு நாம் ஏன் நின்று கொண்டிருக்கிறோம்?

நன்றாகப் பார். நாம் இங்கு அடைபட்டிருக்கிறோம். நாம் உண்மையில் இல்லை.

என்ன அர்த்தம் இதற்கு?

ஏன் நீ அர்த்தங்களை நோக்கியிருக்கிறாய்? அர்த்தங்களின்றி எதுவும் இங்கு நடக்கக் கூடாதா என்ன?

நீ என்னைக் கேள்வி கேட்காதே. எனக்கு எதுவுமே புரியவில்லை.

எனக்கும்தான். இருத்தல் இங்குக் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நீ மீண்டும் மௌனத்திற்குச் செவிகொடுத்துப் பழக வேண்டும். நிசப்தத்தில் உனக்குப் பதில்கள் கிடைக்கலாம். நிசப்தம். அதை எப்படி இயற்ற முடியும்? எல்லாம் அடங்கும்போது அதுவாக எழும்பிப் பரவும்.

நீயே அன்னை. என்னை இறுக அணைத்துக்கொள். தூக்க மாத்திரைகளை விழுங்கினாலும் எனக்குத் தூக்கம் வர மறுக்கிறது. தூக்கமின்மையால் நான் சபிக்கப்பட்டிருக்கிறேன்.

இப்போது புரிகிறது. உன் சாபம் என்னுடைய வரம்.

ஆம். உன் வரம். ஆனால் நீ நான் எல்லாம் ஒன்றுதானே? நீ இல்லாத நான் ஒன்றுமேயில்லை. நீ இல்லாத நான் மழையில்லாத மேகம். இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். பூ மலர்ந்து தேன் சிந்துவதை நீ பார்த்திருக்கிறாயா? நான் பார்த்திருக்கிறேன். இந்த இருளில் அதுமட்டுமே என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தேன். சொல்லும் கணமே இனிக்கிறது.

வாய்பேயில்லை. இந்தத் தேன் கரிக்கும். உன்னிலிருந்து நான் பிரிந்த போது சொல்ல முடியாத சோகங்களுடன் துளிர்த்த உன் கண்ணீர் எப்படி இனிக்கும். இந்த நிசப்தத்தில். இல்லையில்லை. ரோகியின் கதறல்களுடன் வெண்பிசாசின் பிரசன்னத்துடன் உன் கண்ணீரை குழைத்து உண்டாக்கிய சேற்றில்தான் இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஏன் என்னை வதைக்கிறாய்? நான் நீ எல்லாமே ஒன்றுதானே? நீ சொன்னதுதான். அப்படியிருக்க நீ ஏன் உன்னிலிருந்து என்னைப் பிரிக்கிறாய்?

நீ இல்லாமல் நான் இல்லை. உண்மையே. ஆனால் நாற்றுக்கும் நெல்லுக்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே? நெல்லும் அரிசியும் ஒன்றா என்ன? அரிசியும் சோறும் இருவேறு பொருள்கள்தானே? நீ இல்லாமல் நான் இல்லை. அதுவே நிதர்சனம். நீ என் நினைவுகளின் படிமங்களில் தங்கியிருக்கிறாய் என் பேரன்பே! நான் உன் எதிர்காலத்தில் இருக்கிறேன். நீ என் கடந்த காலங்களில் நிற்காமல் உலவுகிறாய். வார்த்தைகளில் நீயும் நானும் கலந்திருக்கிறோம். காலம் எவ்வளவு விசித்திரமானது என்று பார்த்தாயா? நான் ஒருபோதும் அடைந்துவிட முடியாத உயரத்தில் நீ இருக்கிறாய். நான் பாதாளங்களின் வாசலில் நின்று உனக்காக த்வனித்து அடங்குகிறேன்.

என்னிடம் உன் தத்துவ விளையாட்டை விளையாடாதே. நானும் சொல்வேன். நீ இருத்தலின் சௌந்தர்யம். ஏதோ ஒன்று இருப்பதால் சௌந்தர்யமாக இருக்கிறது. நான் சௌந்தர்யத்தை ஆராதிப்பவள். நீ எனது சௌந்தர்யம். நான் மலை நீ பாதாளம். இரண்டையும் யாரும் பிரிக்க முடியாது. Tylenol PM மாத்திரைகளை நீ இனிமேல் எடுத்துக் கொள்ளாதே. நீ தூங்காவிட்டாலும் பரவாயில்லை. எழுது. உன்னைப் பிரிய எனக்கு மனமில்லை. நிறுத்தாமல் எழுது. விரல் நுனியில் ரத்தம் கசிந்தாலும் நிறுத்தாதே எழுது. காலங்களைக் கடந்த இந்த நிசப்த இருளில் யார் பார்க்காவிட்டாலும் எழுது.

நான் சொன்னேன் அல்லவா? என் சாபம் உன் வரம். வார்த்தைகள் வழியாகவே உன்னுடன் வாழ ஆசைப் படுகிறேன். நான் ஒரு குற்றவாளி. இது என் தண்டனை. மீண்டும் கதைக்கு வருவோம்.

எனக்கு உணவில்லை நீரில்லை ஒளியில்லை. என் இருப்பு மறுக்கப்படுகிறது. வார்த்தைகள் கொண்டு மட்டும் உன் எதிர்காலங்களில் என்னை நிறுவிக்கொள்ளப் போராடுகிறேன். என் கடந்த காலங்களை மறக்கவே நினைக்கிறேன். நினைக்கும் பொழுதே மேலெழுந்து அவை விஸ்வரூபம் கொள்கின்றன. அதனால் உன்னை இம்சிக்கக் காலங்கள் கடந்து இந்தக் குஷ்டரோகியுடனும் வெண்பிசாசுடனும் வந்திருக்கிறேன். எழுது. என்னை எழுது.

சொற்களின் கண்ணீரை கொண்டு குழைத்த சேற்றில், இருளடர்ந்த சுவற்றில் கிறுக்கப்படும் கதைகள் ஒருவராலும் வாசிக்கப்படாமல் போகலாம். இப்போது வெட்டிய பைன் மரங்களின் வாசனையுடன் சீழ் ஒழுகும் ரோகியின் துர்நாற்றமும், சின்ன வெண்பிசாசின் இருப்பும் காலங்களைக் கடந்து எழுதுபவனின் தூக்கத்தைக் கெடுக்கப் போகின்றன. பற்களின் இடையில் ரத்தம் கசிய இந்தத் தண்டனைக் கிணற்றில் வாழும் நான் கிடைக்கும் காய்ந்த எலும்புகளைக் கடித்துக் கொண்டேயிருக்கப் போகிறேன்.

சுகன்யா என்னைத் தூங்கவிடு. என் எல்லாமும் நீயே. கதைகளும் கடல் நாகங்களும் நீயும் ஒன்றுதான். தூங்கும் கடல் நாகங்களை எழுப்பினால் எவ்வளவு பெரிய இன்னல்களைச் சந்திக்க நேரிடுமோ, அவைகளினும் பெரிய வேதனையை நீ புனைந்த இந்தக் கதை நிகழ்த்திவிட்டது. அந்தப் பெயரறியா ஒருவன் மட்டுமல்ல நீ நான் யாவரும் இப்பிறப்பின் வழி தண்டனைக் கிணற்றில்தான் உழல்கிறோம். நம் இருப்பே ஒரு பெருங்கனவு. கனவுகளின் சுனையிலிருந்து நீ நான் எல்லாமும் ஒரு முடிவிலியை நோக்கி அடித்துச் செல்லப்படுவது உனக்குத் தெரியவில்லையா? இந்தக் கனவை கலைக்க வேண்டாம். கனவு கலையும் போது வேதனையின் பற்கடிப்புகளுக்கு நாம் ஆளாக நேரலாம். இன்னொரு Tylenol PM விழுங்குகிறேன். கனவுக்குள் கனவு. என்னைத் தூங்கவிடு. நான் சோர்ந்து போகிறேன்.

கனவுகளுக்கு முடிவில்லை என்றாலும் நீ தொடங்கிய இக்கதையை நீயே முடித்துவை.

இது ஒரு சரித்திரக் கதை என்று சொன்னாய். இந்தக் கதையில் வருடங்கள் எதுவுமே வரவில்லையே?

நான் எல்லாவற்றையும் உன்னிடம் முன்னதாகவே சொல்லிவிட்டேன். நான் உன் நினைவுகளின் படிமங்களில் இருந்து த்வனிக்கிறேன். நீ என் எதிர்காலத்தில் இருக்கிறாய். காலம் விசித்திரமானது. எல்லாவற்றையும் அர்த்தப்படுத்த முயலாதே.

உன் விருப்பத்தின்படி இந்தக் கதையை இப்படி வேண்டுமானால் முடித்துக்கொள்: அடுத்தக் குற்றவாளியை அவர்கள் தீர்ப்பிட்டுத் தண்டனைக் கிணற்றில் இறக்கிய போது அங்கு அவன் வற்றிப்போன ஒரு பிணம், வாயில் காய்ந்த எலும்புத் துண்டுடன் இருந்ததைப் பார்த்தான். கிணற்றில் அவன் கால் வைத்தபோது சேற்றில் அவன் பாதங்கள் நனைந்தன. மேலே ஒற்றை நாணயத்தின் அளவிருந்த கிணற்றின் திறப்பை அவன் ஏக்கத்துடன் நோக்கியிருந்தான்.