பிணம் நன்றாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

India's mass Covid-19 cremations must be witnessed by the world - Voxகிழவர் அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தீ ஜுவாலைகள் அவர் கருவிழிகளில் நடனமாடிக்கொண்டிருந்தது. காற்றில் அலைபாயும் நெருப்பின் சப்தம் அந்த இடத்திற்கு மேலும் அமானுஷ்யத்தைக் கூட்டிக்கொண்டிருந்தது. கிழவர் இமைக்கவே இல்லை. திடீரென்று பிணம் முறுக்கிக்கொண்டு அசைய, கிழவர் பதறிப்போய் எழ முற்பட்டார்.

ஒன்னும் இல்ல. கம்முனு உக்காரு.

என்று பக்கத்திலிருந்த பெண் சொல்ல, தயங்கியபடியே உட்கார்ந்தார். வெட்டியான் தன் அருகிலிருந்த பெரிய கழியை எடுத்து பிணத்தின் மீது ஒரே போடாகப் போட்டார். அது அப்படியே அடங்கிப் படுத்துக்கொண்டது.

நல்லா வாசமா இருக்க. கல்யாணச் சாவோ?

குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தார் கிழவர். அவன் தலைப் பிளந்திருந்தது. அவர் அதை உற்றுப் பார்த்தார். பதின்வயது இளைஞன் ஒருவன் அழுக்கு வேட்டியுடன் மேலாடை ஏதுமில்லாமல் நின்றுகொண்டிருந்தான். அவன் தலையின் வடிவம் பார்க்க விசித்திரமாக இருந்தது. கிழவர் அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு தலையைத் திருப்பிக்கொண்டார். நீண்ட நேரம் அவனும் எதுவும் பேசவில்லை. இப்போது பிணம் எரிந்து அணைந்து அதிலிருந்து லேசாகப் புகைந்துகொண்டிருந்தது. அதை இளைஞனும் கவனித்தான்.

யாரு நீதானா

கிழவர் எதுவும் சொல்லவுமில்லை, திரும்பிப் பார்க்கவுமில்லை.

இப்ப இன்னாத்துக்கு நீ என்கிட்ட முறுக்கினு இருக்க. இனிமே என் கூடத்தான் இருக்கனும். உனக்கு நான். எனக்கு நீ.

செத்த நேரம் சும்மா கெடயேண்டா,என்றாள் அந்தப் பெண்.

ஏன் இப்ப மெளன விரதம் இருந்த இன்னா வரம் வாங்கப் போறாரா? அதான் எல்லாம் செத்தாச்சுல.

பாவம் கிழவரு. இப்பத்தான் செத்துகிறாரு. ஒன்னும் புரியாது. நீ வேற ஏன்டா அவரப்போயி நோண்டிகினு இருக்கற.

இதப்பாரு. நீங்க வேணா வயசாகிப் போயி செத்திருக்கலாம். ஆனா நெஜமா உங்களவிட நான் தான் பெரியவன், தெரியுமா? நான் கட்டபொம்மனையே பாத்துகிறேன்.

ஆமா. நீயும் உன் கதையும்.

க்கும்… ஏன் கத உனுக்கு இப்ப எளக்காறமாத்தான் இருக்கும். பெருசுதான் புதுசு. எதுனா கேப்போம்.

நீ அடங்கமாட்ட.

இளைஞன் மெல்ல எழுந்த கிழவரிடம் சென்றான். அவர் அழ நினைத்தார். உண்மையில் அழுதுகொண்டுதான் இருந்தார். ஆனால், அவரால் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்ட முடியவில்லை. கண்ணீர், சிரிப்பு, கோபம், வெறுப்பு எல்லாம் பூத உடலால்தான் வெளிக்காட்டிக்கொள்ள முடியும் போல என்று நினைத்துக்கொண்டார்.

இளைஞன் அவரையே சிறிது நேரம் வெறித்துக்கொண்டிருந்தான். கிழவர் உணர்ச்சிகளில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார் என்று அவன் கண்டுகொண்டான். அவரை வேறு வழியில்தான் கையாள வேண்டும் என்று  அவன் முடிவெடுத்தான்.

தாத்தோய்…

கிழவர் இப்போது அவனைத் திரும்பிப் பார்த்தார்.

அதான் வாழ்ந்து முடிச்சிட்டீல்ல. அப்பறம் இன்னா சோகம். என்னப் பாரு. புதுசா கல்யாணமான கொஞ்ச நாள்லயே செத்துட்டன். அதுவும் பொண்டாட்டி தலையில கல்லத் தூக்கிப் போட்டு கொன்னுட்டா. கொஞ்சம் நாள் கஷ்டமாத்தான் இருந்துச்சி. அப்பறம் செரியாப்போச்சி.

இப்போது கிழவர் முதல் முறையாக பேசினார்.

உன்னையாவது யாரு கொன்னாங்கன்னு உனக்கு தெரிஞ்சிருக்கு. எனக்கு என்ன யாரு கொன்னாங்கனே தெரியலயே.

இன்னா பெருசு சொல்ற, என்று தன்னையும் அறியாமல் பழையபடியே பேசினான்.

கிழவர் மீண்டும் அமைதியானார்.

அது எப்புடி. உனுக்குத் தெரியாம. செரி உன்ன யாருல்லாம் கொல்ல வாய்ப்பிருக்குன்னு உனுக்கு தெரியும்ல.

நான் யாருக்கு இன்னா செஞ்சேன். எவன் கூடயும் பகையும் இல்ல சண்டையும் இல்ல. யாரப் போயி இன்னான்னு சந்தேகப்பட.

செரி நீ எப்புடி செத்த?

கெணத்தாண்ட நின்னுன்னு இருந்தேன். யாரோ பின்னாடிலிருந்து தள்ளிவுட்டாங்க.

தாத்தோய், தவறி ஊந்துருப்ப.

இல்லபா, எனக்கு நல்லாத் தெரியும். என்னத் தள்ளித்தான் உட்டாங்க.

இன்னா தாத்தோய், ஊருகாரன் நீ, நீச்சலடிச்சி வர வேண்டியதுதான?

கெனத்துல ஏதுடா தண்ணீ. வெறும் பாறைதான். நேரா போயி ஒரே இடி. எனக்கு அதான் தெரியும்.

சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. கிழவர் மீண்டும் புகைந்துகொண்டிருந்த பிணத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தார். நேரம் நகர்கிறதா இல்லையா என்றே தெரியாதவாறு சூழ்நிலை இருந்தது. நமக்கெல்லாம் ஏது இனி நேரம் என நினைத்துக்கொண்டிருந்தார். இப்போது அந்தப் பெண் பேசினாள்.

ஆனது ஆச்சு, வுடுப்பா.

இல்ல, என் மவளும், பேரனும் தனியா இருப்பாங்க. என்ன எவனோ ஒருத்தன் தள்ளிவுட்டு கொன்னுருக்கான். அவங்களுக்கு இன்னாவோ ஏதோன்னு அடிச்சிகிது. நான் போயி ஒரு எட்டு பாத்துட்டு வந்துடறேன் என்று கிழவர் எழுந்தார்.

இளைஞன் பதறிப்போய்,

தாத்தோய், அந்த மாதிரி எதுனா ஏடாகூடமா பண்ணிடப்போற. அப்பறம் அந்தாளு போட்டு வெளுத்துவுட்ருவான்.

கிழவர் அவன் சொல்ல வருவதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. அவர் மெல்ல ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இளைஞன் பின்னாலிருந்து கத்திக்கொண்டே இருந்தான். பின் மெல்ல அவனும் நடக்க ஆரம்பித்தான்.

ஏன்டா உனுக்கு இந்த வேள, என்று அந்த பெண் அவனை எச்சரித்தாள்.

நான் தூரத்துலருந்து பாத்துட்டு வரேன், என்று சொல்லிக்கொண்டே நடந்தான்.

கிழவர் சுடுகாட்டை தாண்டி சிறிது தூரம் சென்றதும் அவர் உடலில் மின்னல் தாக்கியது போன்ற ஒரு சுருண்டு விழுந்து துடித்தார். இளைஞன் தூரத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்தான். கிழவர் துடிப்பது அவனுக்கு வேதனையாக இருந்தது. மெல்லத் தூரத்திலிருந்து மரத்தை நோக்கி நடந்தான். அங்கே வேட்டிக்கட்டிக்கொண்டு வெற்று உடம்புடன் சுருட்டுப் பிடித்துக்கொண்டு ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவர் அருகே ஒரு வேல் கம்பு, அருவாள் மற்றும் ஒரு சாட்டை இருந்தது. அவர் உடல் மெலிந்தும் அதே சமயம் உறுதியாகம் கருத்தும் இருந்தது. அவர் கண்கள் நன்கு விரிந்து பார்ப்பவர்களுக்கு அச்சமேற்படும்படி இருந்தன. இளைஞன் மெல்ல அவரை நெருங்கி,

சாமி, ஆளு புதுசு. வுட்ரு சாமி. நான் சொல்லி இட்டுன்னு போறேன்.

இருக்கட்டும், இப்ப இன்னா செத்தாப் போவப்போறான். ஒருவாட்டி பட்டாத்தான் நல்லா நெனப்புல இருக்கும்.

இளைஞன் பதிலேதும் பேசவில்லை. வேதனையுடன் கிழவரைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர் மெல்ல மெல்ல அடங்கி அமைதியானார். பின் மெதுவாக எழுந்து மீண்டும் ஊருக்குள் போக எத்தனித்தார். இப்போது இளைஞன் கோபமடைந்தான்.

யோவ் பெருசு. நீ அடங்க மாட்டியா.

என்று சொல்லிக்கொண்டே ஓடிவந்து கிழவர் கையைப் பிடித்து இழுத்துவந்து சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்த பெரியவரின் எதிரில் நிறுத்தினான். கிழவர் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். கிழவருக்கு என்னவோ போல இருந்தது. இத்தனை நேரம் இல்லாத உணர்வுகளெல்லாம் இப்போது இருப்பதுபோன்று தோன்றியது. தான் இன்னும் சாகாமல் உடலில்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்தார். சிறிது நேரத்தில் நிதானமடைந்து அனிச்சையாக அவரது கைகள் பெரியவரைக் கும்பிட்டது.

கண்டுபுடிச்சிட்டப் போல, என இளைஞன் நக்கலாகக் கேட்டான்.

இவுரு நம்பு ஊரு காவல் தெய்வம், சாமி, ஐய்யனாரு, சுடல மாடன் இன்னும் இன்னா வேணும்னாலும் சொல்லிக்கலாம். சாமிய மீறி ஒரு எட்டு நம்பலாள ஊருக்குள்ள போவ முடியாது. வாங்கனியே ஒரு அடி. அதுலாம் சும்மா. அங்க ஒரு பொம்பள உக்காந்துனு இருந்துச்சில அதுலாம் எந்த காலத்துக்கும் இந்தப் பக்கம் வரவே வராவது. அது வாங்கன அடியெல்லாம் இதுவரைக்கும் எவனும் வாங்கிருக்கமாட்டான்.

என்று அவன் சொல்லி முடித்ததும். கிழவர் சாமியின் கால்களில் விழுந்து அழ ஆரம்பித்தார். இப்போது அவரால் அழ முடிந்தது. அவர் கண்களில் கண்ணீர் வந்தது. சாமி சுருட்டை அணைத்துவிட்டு பாதியை இடுப்பு வேட்டியில் சொருகிக்கொண்டார்.

ஏன் சாமி, உங்களால கூட ஒரு முழு சுருட்ட இழுக்க முடியாதா?

சாமி அவனை முறைத்தார்.

எவனாது எப்பாவாவது தான் சுருட்டு வெச்சி படைக்கறான். தீந்துப்போச்சுனா, நான் எங்கப் போவேன். ம்… சாராயத்தப் பாத்தே வருஷ கணக்கா ஆச்சு. கேட்டா இப்பலாம் சாரயமெல்லாம் இல்லையாம். கல்லாவது குடுங்கடான்னா, கருங்கல்லா, செங்கல்லான்னு கேக்கறானுங்க.

அதான் கண்ணாடி புட்டில கலர் சாராயம் வெக்கறாங்கல்ல, என்றான் இளைஞன்.

ஏன் அத குடிச்சிட்டு நானும் சாகவா, என்று கேட்டார் சாமி.

செரி அத வுடுங்க. இங்க பெருசு பஞ்சாயத்த முடிச்சி வெய்யிங்க.

இன்னாபா, அதான் எல்லாம் ஆச்சில்ல. இனிமே ஊருக்குள்ள உனுக்கு இன்னா வேல. மக்க மனுசங்க நிம்மதியா இருக்க வேணாமா. ஏன் உன் குடும்பமும் தான் இருக்குது.

கிழவர் அழுதுகொண்டே சொன்னார்.

சாமி என்ன எவனோ கெனத்துல தள்ளிவுட்டான். என் மவளும் பேரனும் தனியா கெடக்குதுங்க. ரெண்டுத்துக்கு வெவரம் தெரியாது. அதுங்க நல்லா இருக்குதான்னு பாக்கனும் சாமி. என்ன கொன்னவன் அவங்களை எதுவும் செய்யாம இருக்கனும் சாமி.

இன்னா நடக்கனுமோ அதான் நடக்கும். செத்ததுக்கு அப்புறம் ஏன் உனுக்கு இந்த கவலையெல்லாம்.

செத்தா கவலையெல்லாம் போயிடுமா சாமி. நான் செத்தாலும் அது என் மவ தானே, என்று விசும்பினார் கிழவர்.

அங்கே சிறிது அமைதி நிலவியது.

பாத்து எதாவது பண்ணிவுடுங்க சாமி, என்று மெதுவாக சொன்னான் இளைஞன்.

அப்படியெல்லாம் செய்ய முடியாதுப்பா. நமக்குன்னு சில ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ்லாம் இருக்கு. அத ஸ்டிரிக்டா ஃபாலோ பண்ணனும். அதுவும் இல்லாம் நீங்க ஊருக்குள்ள போயி நேரத்துக்கு திரும்பி வராம டெட்லைன் கிராஸ் ஆயிடுச்சின்னா பிரச்சனையாயிடுமப்பா.

இன்னா சாமி, நீங்க பேசறது ஒன்னுமே புரியல. புதுசு புதுசா என்னென்னமோ சொல்றீங்க, என்று இளைஞன் சொன்னதும்,

 

சாமி அவர்கள் அருகில் இருந்த பெரிய மரத்தின் மீது கையைக் காட்டினார். அங்கே இன்னொரு இளைஞன் தடிமனான ஒரு கிளையில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்தபடி காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு தொடையில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை செய்துகொண்டிருந்தான்.

யாரு சாமி இவன் புதுசா இருக்கான், என்று சந்தேகத்துடன் கேட்டான் இளைஞன்.

இவனா, ஐடி கம்பெனியாமே அதுல வேல செஞ்சானாம். இப்பதான் செத்து பத்து நாள் இருக்கும். நானும் அவன் கிட்ட பல தடவ சொல்லிட்டேன், தம்பி நீ செத்துட்டன்னு. அவன் நம்பவே மாட்டேங்கிறான். இன்னும் உயிரோடத்தான் இருக்கறதா நம்பி வேலை செஞ்சின்னு இருக்கான். அவன்தான் அடிக்கடி இந்த வார்த்தயெல்லாம் சொல்லுவான். நானும் அர்த்தம் கேட்டு வெச்சுக்குவேன்.

செரி, இப்ப எதுவுக்கு மரத்துமேல இருக்கானாம்.

ஏதோ வைஃபையாம். அது அங்கதான் கெடைக்குதான். நானும் மேல ஏறிப் பாத்துட்டேன். என் கண்ணுல ஒன்னும் தென்படல.

செரி சாமி, நம்பாளுக்கு எதாவது பாத்து செய்யறது.

சாமி கிழவரை உற்று பார்த்தார்.

செரி வா. நானும் கூட வரேன். சீக்கரம் போயிட்டு வந்துடலாம்.

செரி செரி போயிட்டு சீக்கரம் வந்துடலாம், என்று முகமலரச் சொன்னான் இளைஞன்.

நீ எங்க வர என்று முறைத்தார் சாமி.

சாமி… நான் ஊரப்பாத்து பல வருசமாச்சி. உங்கக்கூடத்தான வரேன், என்று பாவமாகக் கேட்டான் இளைஞன்.

தான் இன்று அதிகமாக இரக்கப்படுவதாக சாமிக்குத் தோன்றியது. மெல்ல நடக்க ஆரம்பித்தார். கிழவரும் இளைஞனும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஊருக்குள் நுழைந்ததுமே இளைஞனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இப்படி ஒரு ஊரை அவன் கற்பனை செய்துகூடப் பார்த்தது இல்லை. அவன் கடைசியாக ஊரைப் பார்த்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இத்தனைக்கும் அது ஒரு சாதாரண கிராமம் தான். அங்கிருந்த கல்வீடுகள் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவன் கிழவரிடம் ரகசியமாக,

இன்னா தாத்தோய், இப்புடி இருக்குது ஊரு.

இதுக்கேவா, என்று கேட்டார் கிழவர்.

முன்னால் சென்றுகொண்டிருந்த சாமி சந்தேகப்பட்டுத் திரும்பிப் பார்த்தார். கிழவரும் இளைஞனும் தூரத்தில் நின்றுகொண்டிருந்தனர். சாமி மெல்ல அவர்களிடம் சென்றார். அங்கே ஒரு கோவிலிருந்தது. அதன் முன்னால் நின்று கிழவர் பயபக்தியுடன் கும்பிட்டுக்கொண்டிருந்தார். அருகில் இளைஞனும் அவ்வாறே நின்றுகொண்டிருந்தான். சாமி இருவரையும் முறைத்தவாறே,

இன்னா பண்றீங்க, என்றார்.

போற காரியம் நல்லபடியா முடியனும்ல, அதான் புள்ளையாரக் கும்புட்டுகிறேன்.

சாமி எதுவும் பேசவில்லை. அமைதியாகத் திரும்பி நடக்கத் தொடங்கினார். இருவரும் அவரைப் பின் தொடர்ந்தனர். மூவரும் மெல்ல வீட்டை அடைந்தனர். வீடு அமைதியாக இருந்தது. ஆட்கள் அதிகமாக இருப்பது தெரிந்தது. பிரச்சனைகள் நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

அந்த கெணறு எங்க? என்றார் சாமி.

கிழவர் வீட்டின் பின்பக்கம் அழைத்துச் சென்றார். தூரத்தில் கிணறு தெரிந்தது. சுற்றி தற்காலிகமாக ஒரு தடுப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். தெண்னையோலைகளைக் கொண்டு கிணற்றை மூடியிருந்தார்கள். அவர்கள் மூவரும் கிணற்றை நெருங்கினார்கள். சாமி மட்டும் அருகில் சென்று கிணற்றை உற்று பார்த்தார்.

கிழவர் திரும்பி வீட்டைப் பார்த்தார். இத்தனையாண்டுகள் அவர் வாழ்ந்த வீட்டின் மேல் அவருக்கிருந்த உரிமையும் நினைவுகளும் ஒருசேர அவருளிருந்து கிளர்ந்து எழ வேகமாக வீட்டை நோக்கிச் செல்ல முயன்றார். சட்டென மீண்டும் மின்னல் தாக்கியதுபோல சுருண்டு விழுந்தார். இளைஞனுக்கு இப்போது கோபம் வந்தது.

எவ்ளோ கஷ்டப்பட்டு சாமிக்கிட்ட பேசி உனுக்காக இங்க வந்துகிறோம். நீ திருந்தவே மாட்டியா? என்று கத்தினான்.

கீழே கிடந்தபடியே கிழவர் அழுதார். அவர் நினைவுகள் முழுக்க அவர் மகளும் பேரனும் நிரம்பியிருந்தனர். கணவனை இழந்த மகளுக்கு இன்னொரு வாழ்க்கை அமைத்துத் தர முடியாமல் இப்படிச் செத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வில் தத்தளித்தார் கிழவர். மேலும் அவள் விதவைதானே என்று யாராவது ஒரு கேடுகெட்டவனிடம் அவளை தள்ளிவிட்டுவிடுவார்களோ என்றும் வருந்தினார்.

கிழவர் மெல்ல எழுந்தார். தூரத்தில் வீட்டிருலிருந்து யாரோ தங்களைப் பார்த்துகொண்டிருப்பது போன்று தோன்றியது.

சாமி, என்றார் கிழவர்.

உன் பேரன் தான், என்றார் சாமி.

அவன் கண்ணுக்கு நாம எப்படி தெரியறோம்.

ரெண்டு பேரு கண்ணுக்கு நாம தெரிவோம்.

யாரு சாமி அந்த ரெண்டு பேரு, என்றான் இளைஞன்.

குழந்தைகளுக்கும், குத்தம் பண்ணவங்களுக்கும்.

அப்ப ஒரு குழந்தை நம்பல பாத்துடுச்சி. குத்தம் பண்ணவனும் நம்பல பாத்துனு இருப்பானோ, என்றான் இளைஞன்.

சாமி திரும்பி அவனைப் பார்த்தார். எந்த பதிலும் சொல்லவில்லை. அந்த சிறுவனை நோக்கி நடந்தார். மற்ற இருவரும் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் அருகில் வருவதைப் பார்த்த சிறுவன் அரண்டான். வீட்டுக்குள் ஓட நினைத்தான். ஆனால், அவனால் நின்ற இடத்திலிருந்து அசைய முடியவில்லை. மூவரும் அவன் அருகில் வந்து நின்றனர்.

தாத்தா, நீ சாவலயா? என்றான் சிறுவன்.

அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சற்று நேரம் அமைதியாக இருந்தார். பிறகு,

சாப்டியா கண்ணு, என்றார்.

ம்…

அம்மா சாப்டுச்சா?

தெரில

வூட்டுல யாருலாம் இருக்காங்க?

யார் யாரோ இருக்காங்க.

ம்…

அதற்கு மேல் அவருக்கு அவனிடம் என்ன கேட்க வேண்டுமென்று தெரியவில்லை. இளைஞன் சட்டென,

இப்ப யாராவது வூட்டுல முழிச்சிகினு இருக்காங்களா? என்றான்.

சிறுவன் பதிலேதும் சொல்லாமல் முழித்தான். கிழவர் திரும்பி சாமியைப் பார்த்து,

போலாமா? என்றார்.

சாமி பதிலேதும் சொல்லாமல் சிறுவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மெல்ல அவனை நோக்கி வந்தார். அவன் அருகில் வந்ததும், அவன் கண்களை உற்றுப் பார்த்து,

இன்னாத்துக்கு உன் தாத்தாவ கெணத்துல தள்ளிவுட்ட? என்றார்.

கிழவரும் இளைஞனும் ஒருசேர அதிர்ச்சியாக,

சாமி…. என்றனர்.

அவர் எதுவும் சொல்லவில்லை. சிறுவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அவனால் மெளனமாக இருக்க முடியவில்லை. அவனையும் மீறி பேச ஆரம்பித்தான்.

ஒருநாளு ஒரு அத்த வந்தாங்க. அவங்க அம்மாவுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ண சொன்னாங்க. அவங்களே யாரோ ஒரு புது அப்பாவயும் கூட்டியாந்தாங்க. ஆனா, தாத்தா எதுவும் சொல்லாம போயிட்டாரு. அப்பறம் அத்த இன்னாமோ சொல்ல அம்மா அழுதுகினே இருந்துச்சி. கடைசியா அத்த போவ சொல்ல, இந்த கிழவன் இருக்கற வரைக்கு உன்ன நல்லா வாழ வுடமாட்டான். நீ நிம்மதியாவே இருக்க முடியாதுன்னு திட்டிட்டு போச்சி. அம்மா ரொம்ப நேரமா அழுதுகினே இருந்துச்சி.

என்று சொல்லிவிட்டு சற்று மூச்சு வாங்கினான். அதற்கு மேல சாமி அவனை பேசவிடவில்லை. அவன் கண்களில் கண்ணீர் வழிந்தவாறு இருந்தது. கிழவர் அதிர்ச்சியில் இருந்தார். இளைஞனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இது தன் காலமோ, இங்கு தன் பழக்கவழக்கமோ இல்லை என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தார். சாமி கிழவரைப் பார்த்தார். ‘அடுத்து என்ன’ என்பதுபோல் இருந்தது அந்தப் பார்வை. கிழவர் மெல்ல அச்சிறுவனிடம் சென்றார்.

நீயும் உங்கம்மாவும் நல்லா இருக்கத்தானே நான் இந்தப்பாடுபட்டேன். ஏற்கனவே ஒருவாட்டி உங்கம்மா பட்டுட்டா, இப்ப வந்தவனும் நல்லவனா தெரியல. இனி என்னால இன்னாப்பண்ண முடியும் சொல்லி. நீதான் உங்கம்மாவ பாத்துகணும், என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தார்.

தாத்தா, என்று அழைத்தான் சிறுவன்.

அவர் திரும்பி அவனைப் பார்த்தார்.

இனிமே வரமாட்டியா?

அவர் இல்லையென்று தலையாட்டினார்.

கொஞ்ச நேரம் இருக்கியா, அம்மாவ இட்டுனு வரேன்.

வேணாம் தூங்கட்டும்.

என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார். மூவரும் மீண்டும் சுடுகாட்டை நோக்கி அமைதியாக நடந்தனர்.

இன்னுமா இந்த சொந்தக்காரங்கலாம் திருந்தாம இருக்காங்க தாத்தோய், என்றான்.

யாரும் எதுவும் சொல்லவில்லை. சுடுகாட்டை நெருங்கிக்கொண்டிருந்தபோது, தூரத்தில் மரத்தின் மீது வேலை செய்துகொண்டிருந்த இளைஞம் வேகமாக கீழே இறங்கினான். சாமி அவனிடம்,

இன்னாபா, என்றார்.

பிராஜெக்ட் முடிச்சிட்டேன். என்னால டெலிவரி பண்ணவே முடியல. மெயில் போகவே மாட்டேங்கிது. எல்லாமே சரியாத்தான் இருக்குது, என்று பதட்டமாக சொன்னான்.

கொஞ்சம் கடுப்பான இளைஞன், சாமியிடம், இதை நான் பார்த்துகொள்கிறேன் என்று சைகைக் காட்டிவிட்டு அவன் தோல்மீது கைப்போட்டு அவனை அழைத்துச்சென்றான். கிழவரும் அவர்களை தொடர்ந்துச் சென்றார். சாமி தன் வழக்கமான இடத்திற்குச் சென்று உட்கார்ந்து அணைத்துவைத்திருந்த சுருட்டை எடுத்து வாயில் வைத்தார்.