அவனுக்கு உடனடியாக வீட்டிற்குப் போக வேண்டும் போல் இருந்தது. இந்தக் கூட்டமும் கொண்டாட்டமும் அவனுள் பதட்டத்தை உருவாக்கியிருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்நிகழ்வு முடிவானத் தருனத்திலிருந்தே அவன் பதட்டத்தில் தான் இருந்தான். கண்கள் ஒருவித பயத்திலேயே இருந்தன. பேச்சில் நடுக்கம் காணப்பட்டது.

கையிலிருந்த பியர் பாட்டிலை வெகு நேரமாக குடிக்காமல் அப்படியே வைத்திருந்தான். அங்கே, அவன் அணிந்திருந்த நீல நிற ஜீன்ஸும், கருப்பில் வெள்ளை கட்டம்போட்ட சட்டை மட்டுமே காலையிலிருந்து கலையாமல் இருந்தன. அவன் காலணிகளில் மட்டுமே கடல் மணல் ஒட்டாமல் இருந்ததன.

ஆறடியில் எண்பது கிலோவில் சிவந்த உடலில் கலையாத தலையுடன் முழுவதும் மழிக்கப்பட்ட முகத்துடன் அப்போதுதான் அங்கு வந்தது போல் இருந்தான்.

மகாபலிபரம் அருகில் இருந்த அந்தக் கடற்கரை உல்லாச விடுதியில் இயற்கை ஒளி மெல்ல குறைந்து கொண்டிருக்க, போதை கண்களுக்கு இதமளிக்கும் விதமாக செயற்கை விளக்குகள் ஓளியூட்டப்பட்டன.

பணியாளர்கள் சுற்றி ஆங்காங்க கூப்பிட்டால் உடனடியாக ஓடிவரும் தூரத்தில் வேண்டாவெறுப்பாக நின்றிருந்தனர். இங்கு இவர்கள் அடிக்கும் கூத்திற்கு ஆகும் செலவு என்பது அவர்கள் அத்தனை பேரின் மொத்த சம்பளத்தைவிட அதிகமானது என்று அவர்களுக்கு தெரிந்ததால் வந்த வெறுப்பு.

தன்னைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என அவன் கவனிக்க ஆரம்பித்தான்.

ஆண்களும் பெண்களும் என இருபது பேர் கொண்ட ஒரு கூட்டம் தன்னைச்சுற்றி குடித்துக் கொண்டும், புகைத்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உரசிக்கொண்டும் இருந்தன. வித விதமான மதுவின் வாசனைகளும், இறைச்சிகளின் கவிச்சியும், இரண்டும் கலந்த வாந்தியும் என அந்த இடமே காண சகிக்கமுடியாமல் இருந்தாலும் அனைவரும் புன்னகை மாறாமல் பேசிக்கொண்டிருந்தனர்.

வெவ்வேறு வகையாக மதுபாட்டில்கள். பியர், விஸ்கி, ரம், ஓட்கா, பக்கார்டி பிரீஸர், தண்ணீர் பாட்டில்கள், வருக்கப்பட்ட, பொறிக்கப்பட்ட, வதக்கப்பட்ட இறைச்சிகள், மீன் வகைகள், சிப்ஸ், கடலைகள் என அனைத்தும் வெவ்வேறு இடங்களில் ஃப்பே முறையில் வைக்கப்பட்டிருந்தன. இவை இல்லாமல் பிரியாணி முதற்கொண்டு பல வகையான உணவுகள் பாதிக்கு மேல் சாப்பிடப்படாமல் இருந்தன. பலரின் நோக்கமெல்லாம் மதுவிலேயே இருந்தன.

அவனும் நன்றாகக் குடித்திருந்தான், அங்கிருந்த அனைத்து பதார்த்தங்களையும் சுவைப்பார்த்திருந்தான். ஆனால், அவனுக்கு போதை ஏறவில்லை, பசியடங்கவில்லை.

இதுபோன்ற நிகழ்வுகளெல்லாம் தனக்கு சரிப்பட்டுவராது என்று அவனுக்குத் தெரியும். இயல்பாகவே அவனுக்கு இருக்கும் கூச்சுபாவமும் மேலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு இருக்கும் சில சிக்கல்களுமே காரணம். இருந்தாலும், அவனால் தட்ட முடியவில்லை. அலுவலக ஆண்டுக் கொண்டாட்டம். சுலபாக எதாவது சொல்லித் தப்பித்திருக்கலாம். ஆனால், அவனால் முடியவில்லை. அதற்கு அவளும் ஒரு காரணம்.

தூரத்தில் அவள் பெண்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களில் சிலர் மதுக்கோப்பைகளை ஏந்திக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் பார்த்தான். வெவ்வேறு மாதிரி உடைகள் அணிந்திருந்தாலும் அனைவரும் வெள்ளை நிறத்தில் அணிந்திருந்தனர் (ஆண்கள் அந்த செயல் திட்டதை கடைபிடிக்கவில்லை). அப்பெண்கள் அலுவலகத்திற்கு வருவதற்கும் இப்போது இருப்பதற்கும் பெரிய வித்தியாசங்களை அவனால் காண முடிந்தது. கண்களில், காதுகளில், உதடுகளில், கைகளில், பார்வையில், நடப்பதில், பேசுவதில், தொடுவதில், சிரிப்பதில் ஏன் சிலர் மார்பகங்களில் கூட வித்தியாசத்தை அவனால் காணமுடிந்தது. அலுவலகத்தில் ஆங்கிலத்தில் தடுவாறுபவர்கள்கூட இப்போது தங்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்பதுபோல நடந்துக்கொண்டனர்.

அவன் தொடர்ந்து அந்தப் பெண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவன் கவனிக்கவில்லை. அந்தப் பெண்களில் சிலர் அடிக்கடி அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது அவளும் பார்த்துக்கொண்டிருந்தாள். அக்கணமெல்லாம் அவனுள் மிதந்துக்கொண்டிருந்த திரவத்தின் செயல் திரனில் ஏதோ மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்தான். தீடிரென்று ஒரு கை அவன் தோல்களை உலுக்க சுயநினைவுக்கு வந்தான்.

“என்னாடா… ஏறிடுச்சா…” என்றான் தொட்டவன்.

அவன் லேசாக சிரித்துக்கொண்டே ‘இல்லை’ என்பது போல் தலையசைத்த சிறிது நேரத்திற்கெல்லாம் வயிற்றில் ஏதோ செய்ய, கையில் வைத்திருந்தக் கோப்பையை அப்படியே வைத்துவிட்டு வேகமாக எழுந்துக் கழிவறையை நோக்கி சென்றான். கதவை அடைத்துவிட்டு தன் வயிற்றில் இருந்த முழுவதையும் வெளியே எடுத்தான். அவை அனைத்தும் சிறிதும் செறிக்காமல் அப்படியே உண்ட நிலையிலேயே வெளியே வந்தது. முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தான். நன்றாக இழுத்து ஒருமுறை மூச்சுவிட்டான். நிம்மதியாக இருந்தது. இது இப்படிதான் நடக்கும் என்று அவனுக்கு நன்றாக தெரியும். மெல்ல நடந்து வந்து நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்த ஒரு குழுவுடன் அமர்ந்துக்கொண்டான். நீச்சல் குளம் முழுக்க உணவுப் பெருட்களால் அசுத்தபடுத்தபட்டிருந்தது. அதன் பிறகு அவன் மதுக்கோப்பையை கையில் எடுக்கவில்லை. எதையும் சாப்பிடவில்லை.

மணி ஏழைத் தாண்டியதும் பெண்கள் புறப்படத்தொடங்கினர். இரண்டு கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பெண்கள் பிரியாவிடைக் கொடுத்தனர். இனிமேல் சந்திக்கவே போவதில்லை என்பதுபோல கட்டிபிடித்துக்கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் இருந்தனர். சில பெண்கள் போதையில் தள்ளாடினர். சிலர் கண்டித்தனர். சிலர் பறக்கும் முத்தம் கொடுத்தனர்.

அவன், அவர்கள் போவதையேப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு சிலர் அவனுக்கு ‘ஃபாய்’ என்றனர். அவன் பதில் சொல்லிவிட்டு அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான். அது அவளுக்கும் தெரிந்திருந்தது. ஆனால், அங்கு அப்படி ஒருவன் இருப்பதே தனக்குத் தெரியாது என்பதுபோல அவள் நடந்துக்கொண்டாள். சிரித்துப் பேசிக்கொண்டே காரில் ஏறி சென்றுவிட்டாள்.

ஆண்கள் அன்றிரவு அங்கேயே தங்குவதற்க்கு அறை ஏற்பாடு செய்திருந்தனர். போதைத் தெளிந்துக் காலையில் போகலாம் என்று முடிவு. அவன் அங்கிருந்து உடனேப் புறப்படலாம் என்று முடிவெடுத்தான். ஆனால், அதை செயல்படுத்த முடியவில்லை. அவன் அதிகமாகக் குடித்ததை அவர்கள் பார்த்திருந்தார்கள். ஆனால், தனக்குப் போதை இல்லை என்று சொன்னால் நம்பமாட்டார்கள். விளக்கம் கொடுக்கும் எண்ணமும் அவனுக்கு இல்லை. அவர்களுடன் கூத்தடிக்கும் மனநிலையும் இல்லை. சிறிதுநேரம் அவர்களுடனே அமர்ந்திருந்தான். அவர்கள் குடித்தார்கள், சிரித்தார்கள், பேசினார்கள். குறிப்பாக அவர்கள் இப்போது புறப்பட்டு போன பெண்களின் ஒழுக்கங்கள் பற்றியதாகவே அது இருந்தது. அவளைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். அவனால் அதை கேட்க முடியவில்லை. என்ன செய்வதென்றுத் தெரியாமல் தனக்கு தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு அறைக்குச் சென்று படுத்துக்கொண்டான்.

உறக்கம் மெல்ல அவன் விழிகளை ஆக்ரமித்துக்கொண்டிருந்தக் கடைசி நொடியில், விபரீதமான கனவுகள் எதுவும் வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். மெல்ல அவன் நனவிலி நிலைக்கு தள்ளப்பட்டான். அவனுக்கான அவன் மற்றொரு வாழ்க்கையின் கதவுகள் திறந்திருந்தன.

*

மழை பெய்துக்கொண்டிருந்தது. அதன் சத்தம் ஒரு மெல்லிய இசையைப் போல அந்த அறைக்குள் இழைந்துக்கொண்டிருந்தது. முழுக்க கண்ணாடிகளால் ஆன அறையின் நடுவில் சாயும் வசதிக் கொண்ட ஒரு மர நாற்காலியில் அமர்ந்திருந்தான். அறை இதமான வெப்ப நிலையில் மூழ்கியிருந்தது. கண்ணாடிக்கு வெளியில் முழுக்கப் பச்சை நிறம் குடிக்கொண்டிருந்தது. வெளிர் பச்சையிலிருந்து கரும்பச்சை வரை பல நிலையில் இலைகளின் வண்ணம் மிளிர்ந்துக்கொண்டிருந்தது. ஆனால் ஒரு பூக்கூட இல்லை.

அவன் மெல்ல தன் கையில் இருந்த மதுக்கோப்பையை எடுத்து உதடுகளுக்கு கொடுத்து மதுவின் சுவையை, அதன் மனத்தை ஒருசேர அனுபவித்தான். மதுக்கோப்பை தீரவேயில்லை. ரத்த சிவப்பு நிறத்தில் இருந்த திராட்சை ரசத்தை அவன் மெல்ல மெல்ல சுவைத்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த ஒளியில், ஒலியில் எந்த மாற்றமும் நிகழவேயில்லை.

அவன் மெல்ல தன் கண்களைத் திறந்தான். எதிரில் ஒரு வெள்ளை நிறப் பூவைப் போல அவள் அமர்ந்திருந்தாள். அவள் இதழ்கள் விரிந்திருந்தது. அவள் கண்கள் ஏதோ கேட்பது போல் இருந்தது. அதே சமயம் ஏதோ சொல்வது போலவும் இருந்தது. அவன் கைகளை நீட்டினான். அவள் மெல்ல அவன் அருகில் மிதந்து வந்தாள். இருவரும் சில நொடிகள் முத்தமிட்டுக்கொண்டனர். அவன் கண்களை திறந்தபோது அவன் கையில் மதுக்கோப்பை இல்லை. அவள் மீண்டும் தன் பழைய இடத்தில் புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தாள். அவள் அவனிடம் கேட்டாள்.

“ஏன் எங்கிட்ட பேச தயங்கறீங்க…”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே…”

“எனக்குத் தெரியும்…”

“என்னத் தெரியும்…”

“உங்களுக்கு என்னைப் பிடிக்கும் என்று…”

“ஆமா… பிடிக்கும்…”

“பிறகு ஏன் தயங்கறீங்க…”

அவன் அமைதியாக இருந்தான்.

மெல்ல புன்னகை மறைந்து அவள் முகம் விகாரமாக மாறத்தொடங்கியது. உடனே அறையின் வெப்பம் அதிகரிக்க அவன் உடல் வியர்த்துக்கொட்டியது. வெளியே மழை சூறாவளியாக மாறிக்கொண்டிருக்க, மரங்களெல்லாம் வேறோடு பிய்த்துக்கொண்டு அந்தக் கண்ணாடி அறையின் மீது விழுந்தது. கண்ணாடி மெல்ல விரிசல் விடத் தொடங்க, அவள் ஆக்ரோஷமாக கத்தத் தொடங்கினாள்.

“பதில் சொல்லு… ஏன் தயங்கற… ஏன் தயங்கற… ஏன் தயங்கற… ஏன் தயங்கற… ஏன்… ஏன்… ஏன்… ஏன்… ஏன்… ஏன்… ஏன்… ஏன்… ஏன்… ஏன்… ஏன்… ஏன்… ஏன்…”

அவன் அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, மெல்ல சிரித்தான். அவன் சிரிப்பு அவளுக்கு மேலும் ஆத்திரமூட்டியது.

“நீ ஒரு கோழை… உன்னால் எதுவும் செய்ய முடியாது… நிஜ வாழ்க்கையை வாழ லாயகற்றவன்… உன்னால் ஒரு பெண்ணுடன் இணையவே முடியாது… நீ ஒரு பொட்டை…” என்று கத்திவிட்டு அவள் மறைந்துவிட்டாள்.

அவன் உடல் நடுங்கத் தொடங்கியது. யாரோ அடிப்பது போல இருந்தது. கண்ணாடி அறை உடைந்துக்கொண்டு அவன் மீது பெரும் மழைப் பெய்யத் தொடங்கியது.  மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருந்தான்.

*

அவன் எழுந்து உட்கார்ந்தான். உடல் முழுக்க நனைந்திருந்தது. நிலையாக உட்கார முடியவில்லை. அளவுக்கு அதிகமான போதை அவன் உடலை நிலைக்கொள்ளாமல் வைத்திருந்தது. அவனை சுற்றி இருந்தவர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர்.

“ஏண்டா… நைட்டு புல்லா குடிச்சின்னு இருந்த நாங்களே ஸ்டடியா இருக்கோம்… உனக்கென்ன… தனியா எங்கயாது போய் குடிச்சிட்டு வந்தியா…”

அவன் பதிலேதும் சொல்லவில்லை. அனைவரையும் சுற்றிப் பார்த்தான்.

“கிளம்பலாமா…” என்றான்.

“நாங்கலாம் ரெடி… நீ தான் கிளம்பனும்…”

அவன் மெல்ல எழுந்து சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தான். போதைத் தெளிவதாய் இல்லை. அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

அவனும் இன்னொருவனும் ஒரு காரில் இருந்தனர். டிரைவரிடம் முதலில் தன் வீட்டிற்குப் போக சொன்னான். போகும் வழியெல்லாம் மயங்கி, மயங்கி விழுந்தான். ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தார்கள். கூட இருந்தவனும் அவனுடனே வந்து தங்குவதாக சொன்னான். வலுக்கட்டாயாமாக மறுத்துவிட்டான். அவன் காரிலேயே போகும் வரை அவன் வீட்டிற்குள் போகாமல் நின்று கார் கண்ணிலிருந்து மறைந்த பிறகே உள்ளே சென்றான்.

அது ஒரு தனி வீடு. தாளாரமாக ஐந்து பேர் தங்கக்கூடிய அளவிற்கு இடமிருந்தும் அவன் அந்த வீட்டில் தனியாகவே இருந்தான். வீடு முழுக்க உடைகளும், எலக்ட்ரானிக் பொருட்களும் இரைந்துகிடந்தது. சமையலறையில் பைகளில் அடைக்கப்பட்ட சிற்றுண்டிகளும், தண்ணீர் கேன் மட்டுமே இருந்தன. சமையல் செய்வதற்கான ஒரு பாத்திரமும் இல்லை.

கதவை அடைத்துவிட்டு வந்து கட்டிலில் சரிந்தான். நேற்றையக் கனவை நினைத்துக் கொண்டான். கனவில் நன்றாகக் குடித்தது நினைவில் இருந்தது. ஆனால், எதையும் சாப்பிட்டாற்போல் நினைவில் இல்லை. அப்படியே கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். இறங்காத போதை மீண்டும் உறக்கத்திற்கு அழைத்து சென்றது. கனவில் எங்கெல்லாமோ அலைந்து திரிந்தான். மிகவும் கலைத்திருந்தான். பிறகு ஒரு இடத்தில் சாப்பிடுவது போல் கனவு வந்தது. நன்றாக சாப்பிட்டான். பிடித்த உணவாக சாப்பிட்டதில் முழு திருப்தியடைந்தான். பிறகு, கனவில் ஏதோ ஒரு கடைத் தெருவில் நடமாடிக்கொண்டிருந்தான். ஒரு துணிகடைக்கு சென்றான். வித விதமாக துணிமணிகளை வாங்கினான். பெண்கள் உடைகளை அதிகமாக வாங்கினான். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நடந்தான். மிகவும் சோர்ந்து போனான். வெகு நேரத்திற்குப் பிறகு கண்விழித்தான். வயிறு முழுக்க உணவால் நிரம்பியிருந்தது. வாங்கிய துணிமணிகள் அனைத்தும் அவன் கால் அடியில் கிடந்தது. அதிகமாக பெண்கள் உடைகள் தான் இருந்தது. மெல்ல சிரித்துக்கொண்டே தலையில் அடித்துக்கொண்டான். அனைத்தயும் அறையின் மூலையில் கிடாசிவிட்டு அப்படியே அமர்ந்திருந்தான். அவளை நினைத்துக்கொண்டான். அவளிடம் என்னவென்று பேசுவது. தான் கனவிலும் நிஜத்திலும் உசலாடிக்கொண்டிருக்கும் ஒரு பொம்மை என்று அவளிடம் எப்படி சொல்வது. கனவில் சாப்பிட்டு நிஜத்தில் திருப்தியடையலாம். கனவில் புணர்ந்து நிஜத்தில் திருப்தியடைய முடியுமா. அவன் மனம் பெருங்குழப்பத்தின் தொட்டியில் தத்தளித்துக்கொண்டிருந்தது.

மறுநாள் அலுவலகத்திற்கு சென்றான். வழக்கமான எந்த நடவடிக்கையிலும் அவள் ஈடுபடவில்லை. அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன்… இவளுக்கு என்னவாயிற்று என மனக்குழப்பத்தில் தவித்தான். மதிய உணவு நேரத்தில் அவள் தனியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். இவன் மெல்ல அவள் அருகில் சென்று அமர்ந்தான். இவனைப் பார்த்ததும் அவள் பதட்டமடைந்தாள். அவன் வலுக்கட்டாயமாக ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு அவளிடம் “ஹாய்” என்றான். அவள் எடுத்ததும் இவனிடம்,

“மரியாதையா போயிடுங்க…” என்றாள்.

இவன் அதிர்ச்சியடையவில்லை. அந்த முத்தத்தை அவளும் அனுபவித்திருக்க வேண்டும் என்று யூகித்தான். எதுவும் தெரியாதவனைப் போல் அமைதியாக கேட்டான்.

“என்னாச்சி… ஏன் இப்படி பேசறீங்க…”

“எதுவும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க… நேத்து எனக்கு எதையோ கலந்துக்கொடுத்து என்ன கிஸ் பண்ணியிருக்கீங்க… காலையில எழுந்ததும் தான் எனக்கே தெரிஞ்சிது…”

“என்ன உளறீங்க…” என்று பதறினான்.

“அடிச்ச சரக்குல மட்டையாகி பசங்கதான் என்னையே வீட்டுல கொண்டு வந்து போட்டாங்க… எதாவது கனவு கினவு கண்டிருக்க போறீங்க…” என்றான்.

அவள் குழப்பமடைந்தாள். ஒருவேளை அது கனவு தானே என்று தோன்றியது. ஆனால், கனவில் எப்படி அவ்வளவு தத்ரூபமான ஒரு அனுபவம் அமையும் என்று யோசித்தாள்.

அவன் சிரித்துக்கொண்டே “நீங்க குழப்பமா இருக்கீங்க… அப்பறம் பேசலாம்… இருந்தாலும் நன்றி…” என்றான்.

“எதுக்கு…”

“உங்க கனவுல எனக்கு ஒரு வாய்ப்பு தந்ததற்கு…”

அவள் முறைத்தாள். இவன் புறப்பட்டான்.

மிகவும் இயல்பாக இருப்பது போல் நடந்துக்கொண்டான். ஆனால், உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டிருந்தான். இதுவரை தன் கனவை மற்றவர்கள் உணர்ந்ததாக யாருமே அவனிடம் சொன்னதில்லை. இதே அலுவலகத்தில் பலர் அவன் கனவுகளில் வந்துள்ளனர். ஆனால் இவள் மட்டும் அதை உணர்ந்திருக்கிறாள். ஒருவேளை தான் அவள் மேல் அதிக நாட்டம்கொண்டிருப்பதால் இருக்கலாம் என்று ஊகித்தான். இனி இவள் தன் கனவில் வரவே விடக்கூடாது என்று முடிவெடுத்தான். ஆனால், அதை எப்படி கட்டுப்படுத்துவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை.

*

தூங்கவேக் கூடாது என்று பெரும் முயற்சி எடுத்தான். இரண்டு நாட்களாக தூங்கவில்லை. தூங்காததால் கனவுமில்லை, உணவுமில்லை. பசி கொன்றது. அதைவிட தாகம். தண்ணீர் தண்ணீர் என்று வாய்விட்டு முனகும் அளவிற்கு தாகம். எழுந்து சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து முழுக்க தன் வாயில் கவிழ்த்தான். குடித்து முடித்த சில நொடிகளிலேயே அத்தனையும் வெளியே துப்பினான். காலி வயிறு உடலை நடுங்கச் செய்தது.

இன்னும் எத்தனை நாட்கள் இப்படி. கண்கள் வீங்கத் தொடங்கியது. அலுவலகத்தில் பார்ப்போரெல்லாம் கேள்விகளால் துளைத்தனர். நடக்க முடியவில்லை. கவனமில்லை. எரிச்சல். கோபம். பசி. தாகம். என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய… ஏன் இந்த வரம்… ஏன் இந்த சாபம்… வேறு என்ன தான்… அதற்கு மேல் முடியவில்லை. மூன்றாம் நாள் அவனை அறியாமல் உறங்கிவிட்டான்.

எது வேண்டாம் என்று மனம் நினைக்கிறதோ காலம் அதைத்தான் நிகழ்த்துகிறது.

*

சுற்றி முட்கள் மட்டுமே நிறைந்த ஒரு இடத்தில் அவன் படுத்திருந்தான். உடலில் ஆடையில்லை. கடும் வெய்யில், உயிரை உருக்கும் வெப்பம். பாம்புகளும், தேள்களும் அவனை சுற்றிச் சுற்றி வந்துக்கொண்டிருந்தன.  மேலே இருந்த ஒரு மரத்திலிருந்து அவள் இறங்கிவந்தாள். ஒரு கயிறைப் பிடித்திருந்தாள். உண்மையில் அது கயிறல்ல. அது ஒரு பாம்பு. மிக நீளமான கருநாகம். அவள் இறங்க, இறங்க அதன் நீலம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவள் முழுவதும் இறங்கியதும், அதன் நாக்கில் ஒரு முத்தமிட்டாள். அது வேகமாக மேல் நோக்கி நழுவிச் சென்றது. அவள் அப்படியே அவன் மீது படர்ந்தாள். அவன் கண்களை மூடிக்கொண்டான். அவன் உதடுகளில் முத்தமிட்டாள். நஞ்சு கலந்த அவள் உதட்டின் சுவை அவனை வெறிகொள்ள செய்தது. அவன் வேகமாக இயங்க ஆரம்பித்தான். அவன் ஒவ்வொரு அசைவிலும் முட்களால் கிழிக்கப்பட்டான்.  ஒவ்வொரு நிலையிலும் பாம்புகளாலும் தேள்களாலும் கொட்டப்பட்டான். விஷம் ஏற ஏற அவன் வேகம் அதிகரித்தது. இன்னும், இன்னும் என அவன் மனம் கொந்தாளித்துக்கொண்டிருக்கும் போதே அவன் தன் சக்தியை இழந்தான்.

எது வேண்டும் என்று மனம் நினைக்கிறதோ காலம் அதை தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறது.

*

அவன் சருகைப் போல காய்ந்துக்கொண்டிருந்தான். இனி அதில் உயிர் வரும் என்று அவனுக்குத் தோன்றவேயில்லை. நீண்ட விடுப்பெடுத்து வீட்டிலேயே இருந்தான். அவள் முகத்தைப் பார்க்க அவனுக்கு அச்சமாக இருந்தது. மேலும் முட்களின் கீறல்களும், உடலில் ஏறிய விஷமும் அவனைக் செயல்படவிடாமல் சோர்ந்துபோக செய்தது. அவளுக்கு தெரிந்திருக்குமா, எதாவது நடந்திருக்குமா என்ற கேள்விகள் காதின் அருகே சுற்றி சுற்றி வரும் வண்டின் ரீங்காரம் போல இம்சித்துக்கொண்டிருந்தது. அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நம்பினான். ஆனால் இதையும் கனவு என்று அவள் நம்புவாளா என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

அவன் மீண்டும் தூங்கிப்போனான். கனவில் நன்றாக உண்டான். அவளே ஒரு செவிலியைப்போல வந்து அவனுக்கு மருந்திட்டாள். அவன் தலையை கோதிவிட்டாள். அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் அருகிலேயே படுத்துக்கொண்டாள். அவனை அங்கேயே தூங்க வைத்தாள். அவன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றான்.

கண் விழித்தபோது கைப்பேசி அடித்துக்கொண்டிருந்தது. எடுத்துப்பார்த்தான். அவள் தான்.  எடுக்கவில்லை. மீண்டும் அடித்தது. மீண்டும் மீண்டும் அடித்தது. மீண்டும் மீண்டும் மீண்டும் அடித்தது. மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் அடித்தது.

அவனை அறியாமலேயே அவன் கைப்பேசியை இயக்கினான். அவள் வெடித்து அழ ஆரம்பித்தாள். அவன் அமைதியாக இருந்தான்.

“ஏன் இப்படி பண்ற என்றாள்…”

“என்னாச்சி…” என்றான் பதட்டமாக.

“எனக்கு பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு…”

“விஷயத்த சொல்லு…”

“என் கனவுல வந்து என்ன தொல்ல பண்ற… ஆனா, அது கனவு மாதிரியே இல்ல… எல்லாமே நிஜம்… நீ என்ன ஏதோ பண்ணிட்ட… ஏதோ பயங்கறமான டரக்ஸ் எனக்கு கொடுத்திருக்க… ஒழுங்கா என்னன்னு சொல்லிடு… பிளிஸ்…” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“எதாவது பேசு பிளிஸ்… என்ன டரக்ஸ்ன்னு மட்டும் சொல்லு… நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்… நான் டிரிட்மெண்ட் எடுத்துக்கிறேன்…” என்று மீண்டும் அழுதாள்.

அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவளிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்தான். ஆனால், அவள் நம்புவாளா என்று தெரியவில்லை.

“நான் உண்மைய சொல்றன்… ஆனா நீ நம்புவியான்னு தெரியல…”

“மொதல்ல சொல்லித் தொல…”

அவன் அனைத்தையும் சொன்னான். தனக்கு இருக்கும் பிரச்சனை என்னென்ன என்று முழுவதுமாக சொன்னான். மறுமுனையில் ஒரு நீண்ட அமைதி.

அவன் தொடர்ந்தான், “நல்ல யோசிச்சி பாரு,  நான் சப்பிடறத என்னிக்காவது பாத்திருக்கியா… பார்ட்டிய விடு… அப்போ நான் நடிச்சேன்…”

அவள் அமைதியாகவே இருந்தாள். பிறகு இணைப்பு துண்டிக்கப்பட்டது.

*

அவன் ஒரு ஆற்றங்கரையில் படுத்திருந்தான். காற்றின் வேகத்திற்கேற்ப இலைகள் ஆடிக்கொண்டிருந்தது. ஆற்றில் நீருக்கு பதிலாக மது பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், ஏதோ ஒன்றின் முடிவு போல் இந்த காட்சி அவனுக்குப்பட்டது. எங்கும் துர்வாடை வீசுயது. அவன் தன் கைகளைத் தூக்கி முகர்ந்துக்கொண்டான். அவன் மேலும் துர்வாடை  வீசியது. ஆற்றின் மறுகரையில் சூரியன் வெகு நேரமாக மறைந்துக்கொண்டிருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அப்படியே அசைவின்றி நின்றுவிட்டது.

அவன் எழுந்து சென்று ஒருகை மதுவை அள்ளி பருகிவிட்டு மீண்டும் ஒரு கையள்ளி தன் முகத்தை கழுவிக்கொண்டான். மெல்ல நடந்து கரைக்கு வந்தான். அவள் நின்றிருந்தாள். கரிய நிறத்தில் ஆடையணிந்திருந்தாள். போர் வீராகனையைப் போல் காட்சியளித்தாள். ஏற்கனவே யாரையோ கொன்றுவிட்டு வந்த ரத்தக்கறை அவர் கைகளில் இருந்தது. கோவமாக இருந்தாள். கையில் ஒரு நீண்ட வாள் வைத்திருந்தாள். அதில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. ‘பலிகொத்துவிட்டு வந்திருக்கிறாளா’ என்று யோசித்தான்.

இருவரும் மெல்ல நெருங்கினர்.

காற்று வேகமாக வீசத்தொடங்கியது. காட்டின் விலங்குள் எல்லாம் அந்த மதுவாற்றங்கரையில் கூடின. அனைத்து விளங்குகளும் கையில் ஒரு கோப்பை மதுவை ஏந்திக்கொண்டு நடக்கப்போகும் காட்சியைக் காணக் காத்திருந்தன.

அவள் கத்தியை அவன் மீது வீசினாள். அவன் லாவகமாக நகர்ந்தான். அவள் தடுமாறி விழுந்தாள். வேகமாக மீண்டும் எழுந்தாள். அவன் முகம் சிரித்த மாதிரியே இருந்தது. அவள் மீண்டும் தாக்க முயற்சித்த போது அவன் அவள் வயிற்றில் எத்தினான். அவள் கத்தியை கீழே போட்டுவிட்டு தன் வயிற்றை பிடித்துக்கொண்டாள். அவள் உறுப்பிலிருந்து  உயிர் உதிரமாக வெளியேறிக்கொண்டிருந்தது. அவன், அவள் தலை மயிரைக் கொத்தாக பிடித்துக்கொண்டு ஆற்றில் இறங்கினான். அவள் தலையை முக்கி மூழ்கடிக்க முயற்சித்தான். சுதாரித்துக்கொண்ட அவள் தன் கால்களால் அவன் கால்களை தடுக்கிவிட்டாள். அதை எதிர்பார்க்காத அவன் அந்த மது ஆற்றில் விழுந்தான். அவள் வேகமாக அவன் கழுத்தில் தன் கால்களை வைத்து அழுத்தினாள். அவன் கால்கள் துடித்தன. மேல் எழுந்து வர நீண்ட நேரம் முயற்சித்தான்.  அவள் அவனுக்கு எந்த சந்தர்ப்பமும் கொடுக்க தயாராக இல்லை. துடித்து அடங்கினான். பிறகு அவன் எழுந்திருக்கவேயில்லை.

*

கதவு உடைக்கப்பட்டு சிலர் உள்ளே நுழைந்தனர். துர்நாற்றம் வீசியது. அவன் இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. அவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அதிகமாக குடித்தே இறந்தாக பேசிக்கொண்டார்கள்.