இந்த விசாரணையிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமென்றால் நீ உறங்கவேக் கூடாதென்று எனக்குள் கேட்ட குரலைத் தொடர்ந்து நான் சரியாக நாற்பத்து மூன்று மணி நேரம் உறங்காமலிருந்தேன். ஆனால், அந்த நாற்பத்து மூன்று மணி நேரத்தின் ஒவ்வொரு நொடியும் நான் அதைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தேன். அது அந்த விசாரணையால் ஏற்படும் சித்திரவதையை விட மிகக் கொடுமையாக இருந்தது. முந்தைய விசாரணையின் போது நடந்தவை அனைத்தையும் இந்த பாழாய்ப்போன மனம் மறக்கமாட்டேன் என கங்கணம் கட்டுக்கொண்டிருக்கிறது. கேள்விகள் கேள்விகள் என அது என்னை வதைத்துக்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லையே என்று கூட முந்தைய விசாரணையின் போது கத்தினேன். அதற்கு அந்த நீதிபதி “நீங்கள் குற்றம் சாட்டப்பட்டவர். உங்களிடம் எந்தக் கேள்விகளையும் கேட்க எனக்கு உரிமையுள்ளது” என்றார். அதற்காக 2021இல் இருக்கும் எனக்கு 1991இல் நடந்த ஒரு குண்டு வெடிப்புக்கும் என்ன சம்பந்தம் என்றால் நான் என்ன செய்வேன். அப்போது எனக்கு ஆறு வயது தானே என்றால், “நீங்கள் ஒரு குற்றத்தை திட்டமிட்டிருக்கிறீர்கள். அதுவும் மிகக் கொடூரமாக. ஆகவே ஏற்கனவே வேறு ஏதாவது அதுபோல் நீங்கள் திட்டமிட்டிருக்க வாய்ப்புண்டு. அதை அறிந்துகொள்வது எங்கள் கடமை” என்கிறார். இனி என்னால் இந்த கொடுமைகளைத் தாங்க முடியுமென்று தோன்றவில்லை. இதெல்லாம் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு  முன் ஆரம்பமானது. இதுவரை சரியாக ஐந்து முறை அவ்வாறு நடந்ததிருக்கிறது. அதாவது ஐந்து சம்பவங்கள். ஐந்து திட்டங்கள். வெறும் திட்டங்கள் தான். செயல்படுத்தப்படாத, செயல்படாத திட்டங்கள். ஆனால், அதுவே என் குற்றங்கள்.

இந்த விசாரணையின் முதல் நிகழ்வு ஒரு நாள் மதியம் ஒரு மணிக்கு மேல் ஆரம்பித்தது. அதற்கு முதல் நாள் இரவு ஷிப்ட் பார்த்துவிட்டு காலை ஷிப்ட்டயும் தொடர்ந்து பார்த்துவிட்டு மதியம் பன்னிரண்டு மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்தேன். கோபம், எரிச்சல், தலைவலி அதற்கு கட்டுப்படுத்தமுடியாத தூக்கம். ஏதுவாக இருந்தாலும் தூங்கி எழுந்து பார்த்துக்கொள்ளலாம் என்று கண்களை மூடினேன். தூக்கம் வருவதுபோல் இருந்தாலும் அவ்வளவு எளிதாகத் தூங்க முடியவில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் என்னையறியாமல் தூங்கிவிட்டிருந்தேன். அதற்குப் பின் நடந்ததெல்லாம் வெறும் கனவு என்று நீங்கள் நினைக்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை. உண்மையில் நான் வேறு ஒரு உலகத்திற்குள் நுழைந்திருந்தேன். அது என் அகவுலகமாக இருக்கலாம் அல்லது வேறு ஒரு பரிணாமமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், அது அன்று தொடங்கியது. இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அங்கே நான் ஒரு குற்றவாளி. ஒரு குற்ற விசாரணையில் சிக்கியிருக்கிறேன். குற்றம் செய்துவிட்டல்ல. குற்றம் செய்ய திட்டமிட்டு.

நான் ஒரு இருட்டறையில் கண் விழித்தேன். கடும் தலைவலி.  உண்மையில் அப்போது நான் தூங்கி விழித்துவிட்டேன். இரவாகிவிட்டது இன்னும் விளக்குகளைப் போடவில்லை. அதனால் தான் இருட்டாக இருக்கிறது. இன்னும் தலைவலி போகவில்லையே. விடுப்பு எடுத்துவிடலாம் என்று நினைத்தேன். தூக்கத்தின் போதை மெல்லக் களையத் தொடங்கியதும் தான் ஒன்றை உணர்ந்தேன். நான் தரையில் படுத்திருந்தேன். மேலும் அந்த அறையில் என்னைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதாவது இது என் அறையில்லை. குழப்பம் தலைவலியை மேலும் அதிகப்படுத்தியது. எழுந்திருக்க முடியவில்லை. மெல்ல அசைந்தேன். ஏதோ ஒரு சத்தம் கேட்டது. தாழ்ப்பாள் திறக்கும் சத்தம். எந்தப் பக்கத்திலிருந்து கதவு திறக்கப்படப்போகிறது என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. தலையைச் சுற்றி சுற்றி பார்த்தேன். திடீரென்று என் மேல் பெரும் வெளிச்சம் பாய்ந்தது. கண்களைக் கூசச்செய்யும் வெளிச்சம். அது என் தலைக்கு மேலிருந்து பாய்ந்துகொண்டிருந்து. கண்களைக் குறுக்கிக்கொண்டு மேலே பார்த்தேன். சதுர வடிவில் ஒரு திறப்பு. வீடுகளில் தண்ணீர் தொட்டிக்குப் போடப்பட்டிருக்கும் இரும்பு மூடியின் அளவு இருக்கும். இருவர் நிழலுறுவாக நின்றிருந்தனர். ஒரு இரும்பு ஏணியை இறக்கினர். “ம்… வா…” என்றனர். நான் மெல்ல எழுந்து ஏணியில் ஏற ஆரம்பித்தேன். ஏற ஏற உயரம் கூடிக்கொண்டே போவது போல் ஒரு உணர்வு. மேலும் உடல் முழுக்க, சிந்தனை முழுக்க குழப்பம். கடைசி படியின் அருகில் வரும்போது என் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டனர். நான் மேலே வந்ததும் ஏணியை வெளியே எடுத்துவிட்டு அந்த அறையை அல்லது சிறையை மூடினர். காட்சிகள் மெல்ல கண்களுக்கு புலப்படத் தொடங்கியது. நான் நின்றுகொண்டிருந்ததும் ஒரு அறை தான். நான் அந்த இருவரையும் பார்த்தேன். அவர்களை எங்கோ பார்த்தது போன்று இருந்தது. தலைவலிக்கு இடையில் சட்டென நினைவிற்கு வந்தது. அது நான் தான். அந்த இருவருமே நான் தான். நான் குழம்பினேன். எனக்குத் தெரியும் என்றாவது ஒருநாள் எனக்குப் பைத்தியம் பிடிக்குமென்று. ஆனால், அது இவ்வளவு சீக்கிரம் நடக்குமென்று நான் நினைக்கவில்லை. அப்படியென்றால் இது ஒரு மனநல மருத்துவமனை. ஆனால், ஏன் எனக்கு இவர்களும் என்னைப் போலவே தெரிகிறார்கள். அப்படியென்றால் எனக்கு இன்னும் வேறு ஏதோ பிரச்சனைகள் இருக்கிறது. இந்தக் கதவைத் திறந்ததும் நான் சந்திக்கப் போகும் மருத்துவர் எனக்கு நிச்சயம் புரியாத மாதிரி விளக்குவார். நான் புரிந்தது மாதிரி தலையாட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நாங்கள் நீண்ட நேரம் காத்திருந்தோம். ஒருவேளை மருத்துவர் வேறு யாராவது ஒருவரைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஒருவேளை அது எனக்கு முன் நீண்ட நாட்களாகப் பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் எனது சீனியராகவும் இருக்கலாம். அந்த அரையின் கதவுகளுக்கு மேல் இருக்கும் பச்சை விளக்கு எரிந்ததும் அந்த இருவரும் கதவைத் திறந்துகொண்டு என்னை இழுத்துச் சென்றனர். நான் எதிர்பார்த்தது போல் அங்கு மருத்துவமனையோ அல்லது மருத்துவரோ இல்லை. அது ஒரு நீதிமன்றம் அல்லது விசாரணை மன்றம். அங்கே சிலர் இருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் என்னைப் போலவே இருந்தனர்.

நான் நேராக இழுத்து செல்லப்பட்டு அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டேன். சுற்றிப் பார்த்தேன். அங்கிருந்த யாருமே என்னைக் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டோ அல்லது வாசித்துக்கொண்டோ இருந்தனர். என் எதிரே நீதிபதி போன்ற உடையிலிருந்தவர் என்னை நோக்கி, “உனக்காக வாதாட வேண்டியவர் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார். நீ கொஞ்சம் காத்திரு” என்று சொல்லிவிட்டு அவர் ஏதோ படிக்கத் தொடங்கினார். அவர் என்ன படிக்கிறார் என்று பார்த்தேன். நான் இரண்டுப் பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியாமல் தூக்கி வைத்த ஒரு எட்நூத்தி இருபத்தேழு பக்க நாவல் அது. அப்போது எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. கேட்கலாமா வேண்டாமா என்று நான் நினைக்கும் போதே “என்ன?” என்ற குரல் கேட்டு தலையை உயர்த்தினேன். அந்த நீதிபதி மீண்டும் “என்ன” என்றார். நானும் திருப்பி அவரிடம் “என்ன” என்றேன். “ஏதோ கேட்க நினைத்தாயே, அது என்ன” என்றார். “நான் கேட்க நினைத்தது உங்களுக்குத் தெரியுமென்றால், நான் என்ன கேட்க நினைத்தேனென்று உங்களுக்குத் தெரிந்திருக்குமே” என்றேன். “ஆம். எனக்குத் தெரியும். ஆனால், மற்றவர்களுக்குத் தெரியவேண்டும். அதனால் தான் கேட்கிறேன்”. “அதாவது எனக்காக ஒருவர் வாதாடப் போகிறார் என்றால்,எனக்கெதிராக ஒருவர் வாதாடுவாரா ?”. நீதிபதி மெல்லச் சிரித்துக்கொண்டார். இங்கே இருக்கும் அனைவரும் உனக்கு எதிராகத்தான் உள்ளனர். என்னையும் சேர்த்து. உனக்காக வாதாடுபவர் தான் எங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டும்” என்று சொல்லிவிட்டு மீண்டும் படிக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஒரு உருவம் மெல்லத் தள்ளாடியபடி இரும்பிக்கொண்டே உள்ளே வந்து என் அருகில் காலியாக இருந்த மற்றொரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டது. எப்படியும் அவருக்கு எழுவது வயதுக்கு மேல் இருக்கலாம். அவர் உருவமும் என்னைப் போலவே இருந்தது.

நீதிபதி பேச ஆரம்பித்தார். “தாங்கள் இங்கே எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?”. நான் தெரியாது என்பதுபோல் தலையசைத்தேன்.

“நல்லது. நீங்கள் உங்கள் மேலாளரை ஐந்து முறை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொலை செய்ய நினைத்துள்ளீர்கள். அதை உங்கள் மனதில் ஒத்திகைப் பார்த்திருக்கிறீர்கள். அவ்வொத்திகையில் அவரை  ஐந்து முறை கொன்றிருக்கிறீர்கள். அவர் ஐந்து முறை மரணமடைந்திருக்கிறார். இந்த ஐந்து கொலைக்காகத்தான் இந்த நீதி விசாரணை.”

நான் ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பிரமிப்பாகவும் அச்சமாகவும் இருந்தது. உண்மையில் எனக்குப் பைத்தியம் முத்தி விட்டதாகவே நினைத்தேன். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை நான் வாழக்கூடாது என்று தோன்றியது. அப்போது நீதிபதி குறுக்கிட்டார், “நீங்கள் இப்போது நினைத்தது கூட ஒரு குற்றம் தான்” என்றார்.

ஆம். ஐந்துமுறை நான் அவனைக் கொல்ல நினைத்தேன். ஆனால் அதற்காக திட்டமெல்லாம் எதுவும் போடவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு சம்பவம் நடக்கும்போது சட்டென எனக்கு அவ்வாறு தோன்றியது. ஒருமுறை அவனை எனது வண்டியில் அழைத்துச்சென்று அவனது வீட்டில் விடச் சொன்னான். போகும் வழியில் எதிரில் வந்த லாரியில் வண்டியை வேகமாகச் சென்று இடித்துவிடலாமா என்று தோன்றியது. ஒருமுறை அலுவலகத்தின் பதிமூன்றாவது மாடி நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கும் போது அப்படியே… இப்படி சிலமுறை தோன்றியதே தவிர நான் திட்டமெல்லாம் ஒன்றும் போடவில்லை. என்று நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கும் போதே நீதிபதி குறுக்கிட்டார், “உங்களுக்கு அவ்வாறு தோன்றியதே உங்கள் மனதில் வன்மம் இருந்ததற்கான சான்று”

“அவர் நினைக்கத்தானே செய்தார். குற்றம் நிகழவில்லையே. குற்றம் நிகழ்ந்தால் தானே தண்டனை. மற்றபடி அவர் திட்டமிட்டார் அல்லது முயற்சி செய்தார் என்று நிரூபிக்கப்படவில்லையே” என்று என் அருகிலிருந்த என் சார்பாக வாதாடுபவர் சொல்லி முடித்ததும் வேகமாக ஒரு மணியோசைக் கேட்டது. அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தார்கள். பின்பு , ஒருவர் பின் ஒருவராக மறையத் தொடங்கினர். நான் இழுத்து வரப்பட்டு மீண்டு அதே இருட்டறையில் தள்ளப்பட்டேன். மீண்டும் கண் விழிக்கும் போது அலாரம் அடித்துக்கொண்டிருந்தது. அதை அணைத்துவிட்டு மெல்ல எழுந்தேன். தலைவலி இன்னும் இருந்தது. இன்று வேலைக்குப் போகவே கூடாது என்று முடிவெடுத்தேன். போன் செய்து தெரிவித்தேன். அதிசயமாக மறுப்பேதும் தெரிவிக்கப்படவில்லை.

இது வெறும் கனவு தான் அச்சப்படத் தேவையில்லை என்று நீண்ட யோசனைக்குப் பிறகு நானே எனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டேன். அன்று இரவு முழுவதும் நான் உறங்கவில்லை. எந்த காட்சிகளும் எனக்கு மறக்கவில்லை. அந்த நீதிபதி ஆர்வமாகப் படித்துக்கொண்டிருந்த நாவலை எனது சேகரிப்பிலிருந்து தேடி எடுத்தேன். அதை வாசிக்கும் முன் இணையத்தில் அதைப் பற்றிய விமர்சனங்களைத் தேடி வாசித்தேன். எதுவுமே நடுநிலையாக இல்லை. ஒன்று அதை ஆகா ஓகோ என்று புகழ்ந்தது. அல்லது அது ஒரு குப்பை என்று இருந்தது. இரண்டையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு மீண்டும் அந்தப் புத்தகத்தை எடுத்தேன். இந்த இரவு முழுவதும் என்ன செய்வதென்று தெரியவில்லை. மீண்டும் அந்த நாவலை வாசிக்க தொடங்கினேன். சரியாக மூன்றாவது பக்கத்தில் கண்ணை இழுத்துக்கொண்டு சென்றது. அந்த சில நொடிகளில் அந்த இருட்டு அறையும் ஏணியும் விசாரணையும் வந்து போகச் சட்டெனக் கண் விழித்தேன். தூங்கவே கூடாது என்று முடிவெடுத்தேன். எவ்வளவு முடியும் அவ்வளவு நேரம். இந்த பிரச்சினை முடியும் வரை வேலைக்குப் போவதாகவும் இல்லை. நாளை வெள்ளிக்கிழமை. இன்னும் ஒருநாள் சேர்த்து விடுப்பு எடுத்துவிட்டு இந்த பிரச்சினையை முடித்துவிடுவது என்று தீர்மானித்தேன். சரியாக நாற்பத்து எட்டு மணி நேரம் தூங்காமலிருந்தேன். அதன் பிறகு எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. மீண்டும் அதே அறை, அதே ஏணி, அதே விசாரணை.

இந்த முறை எனக்காக வாதாடுபவர் சற்று உற்சாகமாக உள்ளே வந்தார். வரும்போதே என்னைப் பார்த்துச் சிரித்தார். என் காதில் மட்டும் கேட்கும் படி “ஒரு சூப்பரான பாய்ண்ட் கிடைச்சிருக்கு” என்றார். உடனே தூரத்தில் இருந்த நீதிபதி “அதைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்” என்றார். மீண்டும் விசாரணை தொடங்கியது. என் சார்பாக வாதாடுபவர் தன் வாதத்தை தொடர்ந்தார். “அதாவது, இவர் தன் மனதில் தனது மேளாலரை கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதுவும் ஐந்து முறை. ஆக அந்த ஐந்து முறையும் அந்த மேலாளர் இவரை ஏதோ ஒரு வகையில் அக்குற்றத்தைச் செய்யத் தூண்டியிருக்கிறார். ஆக அவரே முதல் குற்றவாளி.”

நீதிபதி சிரித்துக்கொண்டே இதற்குப் பதிலளித்தார், “நீங்கள் இதை வெளி உலகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நீதிமன்றத்தில் சொல்லியிருந்தால் இது எடுபட்டிருக்கும். ஆனால், இது அகவுலகம். இங்கே நாம் செய்யும் குற்றங்களுக்கு நாமே தான் நீதிபதி. ஒருவேளை இதோ நின்றுகொண்டிருக்கும் இந்த குற்றவாளிக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் நாமெல்லாம் இங்கே இருந்திருக்கப் போவதேயில்லை. உண்மையில் அவர் பிரச்சனைகளுக்கு அவரும் அவர் மனசாட்சியுமே தான் காரணம்.”

“நீங்கள் சொல்வதுபோலவே அவர் தன் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு இந்த குற்றத்தை நிகழ்த்தவில்லை. ஆகவே நடக்காத ஒரு குற்றத்திற்கு எதற்கு இந்த விசாரணை.”

“இதுவரை இந்த குற்றம் நிகழவில்லை. ஆனால், இனியும் அது நிகழாது என்று உங்களால் தொடர்ந்து உறுதியளிக்க முடியுமா? அவர் தொடர்ந்து தனது மேலாளரின் மேல் வன்மத்தில் தான் இருக்கிறார். இப்போது உயிர்ப்போடு இருக்கும் அவர் மனசாட்சி இனியும் அப்படியே இருக்கும் என்று யாரால் உறுதியாகக் கூறமுடியும்.” என்று நீதிபதி சொல்லி முடித்ததும் அனைவரும் சிறிது நேரம் அப்படியே அமைதியாக இருந்தனர். எனக்காக வாதாடுபவர் என்னை உற்றுப் பார்த்தார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவேளை நிஜத்தில் நான் ஏதாவது செய்துவிடுவேனோ என்று கூடத் தோன்றியது. நான் தற்கொலை செய்து கொண்டால்? எல்லாம் முடிந்துவிடுமே என்று தோன்றியது. “அது மாபெரும் தவறு” என்று நீதிபதியின் குரல் கேட்டது. நான் அவரைப் பார்க்கவில்லை. எங்கோ பார்த்துக் கொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன். என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. மெல்ல நடுங்கியபடி என் குரல் வெளிப்பட்டது. “இதற்கு வேறு வழி எதுவுமே இல்லையா? நீங்கள் இப்போது என்னதான் செய்ய நினைத்திருக்கிறீர்கள். அது குற்றமே என்றாலும் என்ன தண்டனை தருவதாக உத்தேசித்திருக்கிறீர்கள்” என்று நான் கண்ணீர் வழியக் கேட்டேன்.

“நீங்கள் ஒன்றை நன்றாக உணர வேண்டும். இங்கே யாரும் உங்களை தண்டிக்க வரவில்லை. அது எங்கள் வேலையும் அல்ல. எங்கள் நோக்கமே உங்கள் தவற்றை நீங்கள் உணர்ந்து அதிலிருந்து விலக வேண்டும் என்பது தான்” என்றார் நீதிபதி.

எனக்கு அவர் சொல்ல வருவது எதுவுமே புரியவில்லை. அப்போது ஒரு சத்தம் கேட்டது. அனைவரும் அந்த சத்தம் வந்த திசையை உற்றுப் பார்த்தார்கள். பின் மெல்ல மறையத்தொடங்கினார்கள். நீதிபதி மறைந்துகொண்டிருக்கும் போதே “நான் சொன்னதைப் பற்றி நன்றாக யோசி” என்றார்.

நான் கண்விழித்தேன். எனது கைப்பேசி அடித்து ஓய்ந்திருந்தது. எடுத்துப் பார்த்தேன். அப்பா அழைத்திருந்தார். ஜன்னலைப் பார்த்தேன். நன்றாக விடிருந்திருந்தது. மீண்டும் அப்பாவை அழைத்தேன்.

“என்னப்பா தூங்கிட்டியா”

“இல்லப்பா இப்பதான் எழுந்தேன். நேத்து வேலைக்கு போகல”

“ஏன்? இன்னாச்சி”

“ஒன்னும் இல்லப்பா, தலைவலி மாத்திரப் போட்டுட்டு படுத்துட்டன்.”

“செரி செரி. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு”

“இன்னா விஷயம்”

“ஒன்னும் இல்ல, பக்கத்து தெருவுல மேஸ்திரி பையன் படிப்ப முடிச்சிட்டான். அவனுக்கு உன் கம்பெனில எதாவது வேலை பாத்துக்குடேன்.”

‘நானே இங்க செத்துன்னு இருக்கேன், இதுல இன்னொருத்தனயுமா’ என்று சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை.

“செரிப்பா, அவங்கிட்ட என் நம்பரக் குடுத்து பேச சொல்லு”

“செரிப்பா. நீங்க தூங்கி ரெஸ்டு எடு”

“ம்” என்று போனை வைத்தேன். இந்த தலைவலி விட்டு ஓயிறமாதிரி தெரியவில்லை. மெல்ல எழுந்து முகம் கழுவி விட்டு டீக் குடிக்கலாம் என்று வெளியே வந்தேன். மண்டைக்குள் அந்த வார்த்தைகள் ஓடிக்கொண்டே இருந்தது.

“நீங்கள் தான் உணர வேண்டும்… நீங்கள் தான் உணர வேண்டும்… நீங்கள் தான் உணர வேண்டும்… நீங்கள் தான் உணர வேண்டும்…”

“அண்ணே ஒரு டீ”

“உணர வேண்டும்… உணர வேண்டும்… உணர வேண்டும்… உணர வேண்டும்… உணர வேண்டும்… உணர வேண்டும்…”

எதை உணர வேண்டும். தொடர்ந்து அவமானப்பட்டுக்கொண்டிருப்பதையா? எது அவமானம் என்பதையா?

எது அவமானம் என்று எனக்கு நன்றாகத் தெரிந்திருந்திருந்தது. எவனைப் பார்க்கவே கூடாது என்று நாம் நினைக்கிறோமோ, எவன் முன்னால் வாழ வேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறதோ, எவனை நாம் இனி சீண்டவேக் கூடாது என்று நாம் முடிவெடுத்துள்ளோமோ, எவன் நிழலை இனி மிதிக்கக்கூடாது என்றும் எவன் குரலையும் இனிக் கேட்கக்கூடாது என்று நாம் மனதிற்குள் முடிவெடுத்து வைத்துள்ளோமோ , அவன் எதிரில் வரும் போது இவை எதையுமே செய்யாமல் அவன் முன்னால் சிரித்து அவனுக்கு வணக்கம் வைத்து அவன் முன்னால் குறுகி நிற்பது தான் அவமானம். அதைத் தான் நான் தினமும் செய்துகொண்டிருக்கிறேன். அந்த அவமானம் தான் எனக்குத் தினமும் நடந்துகொண்டிருக்கிறது என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, டீ வந்தது. அந்த சூடும் சுவையும் மெல்ல மெல்ல உள்ளே இறங்கும் போதே அந்த நீதிபதியின் கடைசி வார்த்தை நினைவிற்கு வந்தது.

“விலக வேண்டும்… விலக வேண்டும்… விலக வேண்டும்… விலக வேண்டும்… விலக வேண்டும்…”

டீயைக் குடித்து முடித்ததும் தலைவலி குறைந்தது போல் தோன்றியது. அவர் சொல்ல வந்தது என்ன என்று புரிவது போலவும் இருந்தது. மொபைலை எடுத்து அலுவலக செயலியை எடுத்து வேலை விட்டு விலகுவதற்கான பிரிவுக்குள் சென்று காரணத்தையும் நன்றியும் சொல்லிவிட்டு அவர்களுக்கு அனுப்பிவிட்டு மெல்ல அறையை நோக்கி நடந்தேன். அந்த நாவல் இன்னும் என் படுக்கைக்குப் பக்கத்திலேயே இருந்தது. மீண்டும் முதலிலிருந்து வாசிக்கத் தொடங்கினேன். சரியாக மூன்றாவது பக்கம் கண்களை இழுத்துக்கொண்டு சென்றது. அப்படி சரிந்து நன்றாக தூங்கினேன்.