வழித்து சீவப்பட்டிருந்த முகம் சற்று வடிவு குறைவானதைப் போல தோன்றியது. மெல்ல வாரப்பட்டிருக்கும் தலை கலையாமல் சில முடிகளை பிரித்து முன்னால் இழுத்துவிட்டுக் கொண்டாள். முகத்தில் பட்டு முனுமுனுக்கும் முடிகளில்தான் வடிவின் பூரணம் இருப்பதாக நினைத்துக் கொண்டாள்.

சுவர் முழுவதும் நிறைந்திருந்த சாளரங்களின் திரைச்சீலைகளை மூடி அறையை இருட்டாக்கி, தரையில் படுத்து கால்களை 140 டிகிரியில் சுவற்றின் மேல் தூக்கி வைத்துக் கொண்டாள். கீழ் முதுகுப் பகுதி தரையில் பதிந்து இதமாக இருந்தது. வறண்டிருந்த இதழ்களை இணைக்காமல், இமைகளை இணைத்துக் காத்திருக்கத் தொடங்கினாள்.

அலைபேசி சிணுங்கியது.

“கிளம்பிட்டேன் சிமி…20 நிமிஷத்துல அங்க இருப்பேன்.”

“இப்போத்தானா?”

“ஆமா… வந்துட்றேன்டா பைக் ஸ்டார்ட் பண்ணிட்டேன்.”

சினமிகாவிற்கு மூச்சு வாங்கத் தொடங்கியது. ஒரு நொடிக்கும் மற்றொரு நொடிக்கும் இடைப்பட்ட ஒவ்வொரு நானோ நொடிகளிலும் அவளுக்குள் ஒரு ரசாயன மாற்றம் நிகழ்ந்தது. ஒரே நொடியில் பாலை சுடுமணற்புதர்களில் சரிந்து விழுவதைப் போன்ற படபடப்பும், அது தீர்வதற்குள்ளாகவே விரல்களிற்கிடையில் எல்லாம் சிறகு முளைத்து கடல் மேல் பறப்பது போன்ற குறுகுறுப்பும் தோன்றின.

மீண்டும் ஒருமுறை எழுந்து தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். இயல்பாக இருப்பது போலவும் அதே சமயத்தில் கவர்ச்சியாகத் தோன்றுவது போலவும் உடுத்துவது சற்று சிரமமான விஷயம் என்றும் இன்னும் கூட சிறிது சிரத்தை எடுத்திருக்கலாமோ என்றும் தோன்றியது. கழுத்து முடியும் இடத்தில் இருந்த பக்கவாட்டு எலும்புக் குழிவில் தடவிப் பார்த்துக் கொண்டாள். கன்னக்கதுப்புகளில் பூ பூத்தது போலப் புல்லரித்தது.

அவன் கிளம்பி பத்து நிமிடங்கள்தான் கழிந்திருந்தன. மீண்டும் அதே இடத்தில் வந்து படுத்துக்கொண்டாள். திரைச்சீலைகளின் அடர்சிவப்பு வண்ணத்தில் சூரிய ஒளி பிரதிபலித்து அந்த அறையை ஒரு அரை மயக்க வண்ணத்தில் ஆழ்த்தியிருந்தது. சினமிகா எதிலும் அரை மயக்க நிலையை விரும்புபவள். திடீரென நினைவு வந்தவள் போல அறையை நான்காவது முறையாக மீண்டும் ஒழுங்குபடுத்தத் தொடங்கினாள். இப்பொழுது செய்வதற்கு ஒன்றுதான் மீதம் இருந்தது. படுக்கையறையில் இருந்த மீன் தொட்டிகளையும், குருவிக் கூண்டையும் வரவேற்பறைக்கு மாற்றிவிட்டு, அங்கிருந்த சில தாவரத்தொட்டிகளை படுக்கையறைக்கு மாற்றினாள். மீண்டும் கண்ணாடி முன் நின்று வனப்பை உறுதிபடுத்திக்கொண்டாள். திடீரென்று நீலம் படர்ந்த அறையினுள் புகுந்த குருவிகள் கலவரத்தில் கூச்சலிடத் தொடங்கின.

இருபது நிமிடங்கள் கடந்திருந்தன. மீண்டும் அலைபேசி சிணுங்கியது. உடனே முகம் சிவக்கத் தொடங்கி விட்டது.

“ஹெலோ…”

“சாரி மா… நான் கிளம்பினதுமே செம்ம மழை. நான் வர கொஞ்சம் நேரமாகும் சிமி.”

“ஓ…” என்றவாறு சாளரத்திரையை விலக்கிப் பார்த்தாள். பளீரென வெளிச்சம் அவள் முகத்தில் பட்டுத் தெறித்தது.

“Can’t wait to see you..வீடியோ கால்ல வரட்டுமா?”

“என்ன அவசரம்? அதான் மழை விட்ட உடனே வரத்தானே போற?”

“ஏய்..”

அந்தக் குரலும் அதன் குழைவும் சினாமிகாவின் அடிவயிற்றை இழுத்துப் பிடித்தன.

வெளியே வராத குரலில், “ம்ம்ம்..” என்றாள்.

“அழகா ரெடி ஆகிருக்கயா? என்ன ட்ரெஸ் போட்ருக்க?”

“அதெல்லாம் வந்து பாத்துக்கடா…” என்று விம்மிய உதடுகள் வெயில் பட்டு மினுங்கின.

“சரி…மழைனாலும் பரவால்ல நான் கிளம்பிட்டேன்.”

அழைப்பிற்கு முந்தைய நொடி வரை கற்பனையில் வரித்திருந்த பிம்பத்தை மாற்றி சட்டையிலும், முன் நெற்றி முடிக்கற்றைகளிலும், மீசை நுனிகளிலும் ஈரம் சொட்ட வந்து நிற்பானென நிறுத்திக் கொண்டாள். உடல் எரிந்தது. மீண்டும் சாளரத் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

அவன் முதல்முறையாக வீட்டிற்குள் நுழைகையில், நம் அறையில் வைத்து நம்மைப் பார்க்கையில் என்ன பாடல் ஒலித்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமென அவள் மனம் தேடத்தொடங்கி, உலகின் அத்தனை விதமான இசைக்கருவிகளையும், கலைஞர்களையும் நோக்கி உடனடியாக மனம் பயணப்பட்டது. யுகத்திற்கான அத்தனை இசையும் அந்த நேரத்தில் அவள் செவிகளில் ஒலித்தன.

அவையனைத்தையும் மீறி நடுக்கடலில் எழும் ஒற்றை அலை போல மேலெழுந்து கிளர்த்தியது ஒரு பாடல். அது ஒவ்வொரு துணுக்கிலும் காதலின் களியை நிரப்பித் தைக்கப்பட்டதாகத்தான் சினமிகாவிற்கு எப்போதும் தோன்றும்.

‘Everynight in my dreams I see you I feel you….’ பாடலின் வயலின் வடிவத்தை இசைக்க விட்டு, தாபம் ததும்பும் மெல்லிய குரலில் தானும் பாடத் தொடங்கினாள்.

சரியாக, ‘And never let go ‘till we’re gone..’ என அவள் பாடிக் கொண்டிருந்தபோது அழைப்புமணி ஒலிக்க, சினமிகாவின் ரத்த ஓட்டமும், இருதயத் துடிப்பும் பன்மடங்கு அதிகரித்தன.

வயலின் இசை உச்சத்தைத் தொட, அதே பிரத்யேகப் புன்சிரிப்புடன் உள்ளே நுழைந்தான். அவள் நினைத்த அளவிற்கு இல்லாமல் ஓரளவிற்கு நனைந்திருந்தான். கை குலுக்குகையில் சில்லென்றது.

“நல்லா நெனைஞ்சுட்டேன் சிமி…ஃப்ரெஷ் ஆகிக்கட்டா?” என்றான்.

துண்டை எடுத்துக் கொடுத்து கழிவறையைக் கை காட்டினாள். கன்னத்தைக் கிள்ளி துண்டை வாங்கிக் கொண்டான்.

சினமிகாவிற்கு இன்னும் இதயத் துடிப்பின் வேகம் குறைந்தபாடில்லை. சமையலறை சென்று க்ரீன் டீ தயாரித்தாள். விரல்கள் தானாக அவன் கிள்ளிய இடத்தைத் தொட்டுப் பார்த்தன. திருஷ்டி வைத்தாற்போல அந்த இடம் மட்டும் அதீதமாக சிவந்திருப்பது போல அவளுக்குத் தோன்றியது.

கையில் தேநீர் கோப்பையுடன் குருவிகளை வேடிக்கைபார்த்துவிட்டு கட்டிலில் வந்தமர்ந்து அவள் தோள்களில் கை போட்டுக் கொண்டு,

“நான் கூட நீ வீட்ல இருந்து வெளில வந்து தனியா வீடு எடுத்து தங்கப் போறேன்னு சொன்னப்போ, அதுக்காக வீட்ல அவ்ளோ சண்டை போட்டப்போ எனக்குப் புரியல. எதுக்கு தேவையில்லாம, ஒரே ஊர்ல இருந்துட்டு தனியா போகனும்னுதான் நெனைச்சேன் சிமி. ஆனா தனியா இருக்குறதுதான் இது மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் வசதியா இருக்கும்ல?” எனக் கேட்டுக் கண்ணடித்தான்.

உடனடியாக சினமிகாவின் அத்தனை பரவசங்களும் சமனிலையடைந்தன.

“அதுக்கு மட்டுமில்ல…”

என்றவாரு மெதுவாக அவன் கையிலிருந்து விடுபட்டு வரவேற்பறை சென்று குருவிக்கூண்டுகளை எடுத்து வந்து அதன் இடத்திலேயே வைத்தாள்.

“இடம் மாத்தினதால கத்திட்டே இருக்குதுங்க பாவம்.”

அன்று இரவும் நெடு நேரம் கண்ணாடி முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். மீன்கள் அவளை நோக்கிக் குழுமியிருந்தன.