இந்தக் கதையைக் கேளுங்கள். இதில் வருகிற முக்கியஸ்தரான பெண்மணிக்கு ஐம்பது வயது. தலைப்புக்குரிய பெயரைக் கொண்டவர் என்று நினைப்பீர்களானால் அங்கு நீங்கள் தவறு செய்துவிடுகிறீர்கள். இந்த முக்கியஸ்தரின் பெயர் அஷ்டலட்சுமி. தலைப்புக்காரர் இந்தக் கதையில் உப பாத்திரம்தான். அவரைப் பிறகு சந்திக்கலாம். அஷ்டலட்சுமிதான் நமக்கு முக்கியம். எவ்வளவு சர்வ மங்களகரமான பெயர்! உச்சரிக்கும்போதே சிலிர்த்துவிடுகிறது அல்லவா? இருக்கட்டும். அவரது கணவர் சிட்டிபாபு, உத்தியோக நிமித்தம் கஜகஸ்தானில் குடியிருந்தார். அங்கே அவருக்கு எண்ணெய் வயலில் வேலை. பொறுப்பான, சிரமங்கள் உள்ள, முழு நீள வேலைதான் என்றாலும் மறக்காமல் தினமும் தன் மனைவி அஷ்டலட்சுமிக்கு போன் செய்து கோகிலா என்ற தங்கள் மகளுக்கு வரன் ஏதாவது அமைந்ததா என்று அக்கறையுடன் விசாரிப்பார். அஷ்டலட்சுமி அம்மாளும் ஜாதகப் பரிவர்த்தனை நிலையங்களில் இருந்தும் வரன் வழங்கும் தளங்களில் இருந்தும் அன்றன்றைக்கு வரும் பரிந்துரைகளைக் குறித்து விரிவாக எடுத்துரைப்பார். இம்முயற்சியில் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை என்றபோதும் மகள் திருமணம் என்ற பெரும் இலக்கை நோக்கி அவர் படிப்படியாக முன்னேறிக்கொண்டுதான் இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னால்கூட எட்டு பவுனில் நான்கு வளையல்கள் வாங்கிச் சேர்த்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறு இருக்க, அஷ்டலட்சுமி அம்மாள் – சிட்டிபாபு தம்பதியினருக்கு கோகிலா என்ற மகள் இருப்பதற்கு முன்னால் இருந்தே சங்கர் என்றொரு மகனும் இருந்தான். சிட்டிபாபு தனது கஜகஸ்தான் கரன்சியில் டொனேஷன் கொடுத்து சீட் வாங்கி அவனை பி.ஈ படிக்க வைத்திருந்ததால், சங்கருக்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அம்மாதிரியான ஆடம்பரச் செலவுகள் எதுவும் கோகிலாவால் அவருக்கு ஏற்படவில்லை. கலைக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அரசாங்கத் தேர்வுகள் எழுதி மிக எளிதாக அவளுக்கு மத்திய அரசு உத்தியோகமே கிடைத்துவிட்டது. என்ன சிக்கல் என்றால், மத்திய அரசு உத்தியோகஸ்தரான கோகிலாவுக்கு எப்போது வேண்டுமானாலும் பணி இட மாற்றம் உண்டாகும். அதற்கு ஒப்புக்கொண்டு பெட்டி படுக்கையுடன் பின்னால் போகச் சித்தமாக இருக்கும் ஒரு மணமகன் தேவைப்பட்டான். அவனும் ஓர் உத்தியோகஸ்தனாகத்தான் இருக்க வேண்டும் என்றுகூட அவசியமில்லை. மத்திய அரசு வேலைக்குப் போகும் கோகிலாவைப் பராமரித்துக்கொண்டு ஒரு நல்ல இல்லத்தரசனாக இருந்தால்கூடப் போதுமானது என்று அஷ்டலட்சுமி அம்மாள் நினைத்தார். ஆனால் அப்படி யாரும் இதுவரை அவரது கைக்குச் சிக்கவில்லை என்பதுதான் முதல் சிக்கல்.

மேற்படி நல்ல குடும்பத்தின் இரண்டாவது சிக்கல், அஷ்டலட்சுமி அம்மாளுக்கும் கஜகஸ்தான் சிட்டிபாபுவுக்கும் மத்திய அரசு கோகிலாவுக்கு முன்னதாகப் பிறந்த மென்பொருள் சங்கரின் மூலமாக உருவானது. இப்படிச் சொல்வது ஒரு விதத்தில் தவறுதான். வேறு வழியில்லாமல்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில், இந்த இரண்டாவது சிக்கலின் மூலாதார நாயகி யாரென்று பார்த்தால் அது அஷ்டலட்சுமி அம்மாளாகத்தான் இருப்பார்.

மத்திய அரசு கோகிலாவுக்கு வரன் தேட அவர் மேட்ரிமோனி இணையத்தளங்களில் பதிவு செய்தபோது ஒப்புக்குச் சப்பாணியாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று மென்பொருள் சங்கருக்கும் சேர்த்துப் பதிவு செய்து வைத்தார். கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மணையில் வை என்றாற்போலே மத்திய அரசு கோகிலாவுக்கு வரன் குதிர்வதற்கு முன்னால் மென்பொருள் சங்கருக்குக் கோயமுத்தூரில் ஒர பெண் கிடைத்துவிட்டாள்.

அஷ்டலட்சுமி அம்மாள் இதனை எதிர்பார்க்கவேயில்லை. நடந்த சம்பவத்துக்கு அதிர்ச்சியடைவதா மகிழ்ச்சியடைவதா என்றும் அவருக்குப் புரியவில்லை. போன் செய்து தனது கஜகஸ்தான் கணவர் சிட்டிபாபுவிடம் கலந்தாலோசித்த பின்பு, இதெல்லாம் தெய்வ சங்கல்பம் என்ற முடிவுக்கு வந்து, அமைந்த பெண்ணைத் தனது மென்பொருள் மகன் சங்கருக்குக் கையோடு கட்டி வைத்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்.

எல்லாம் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் நடந்து, சென்ற வாரம் திருமணமும் முடிந்துவிட்டது. கஜகஸ்தான் சிட்டிபாபு மூன்று நாள் விடுப்பில் வந்து திருமணத்தை நடத்திவிட்டு, அம்மாவையும் தங்கச்சியையும் பொறுப்போடு பார்த்துக்கொள் என்று மென்பொருள் சங்கருக்கு புத்திமதி சொல்லிவிட்டுத் திரும்பவும் கஜகஸ்தானத்துக்குப் போய்ச் சேர்ந்தார். இங்கே அஷ்டலட்சுமி அம்மாள் தனது புதிய மருமகளான காவ்யகுமாரியை எதிர்கொள்ள ஆயத்தமானார். அவரது கவலையெல்லாம் ஒன்றுதான். மென்பொருள் சங்கர் மணந்துகொண்டு, மருமகளாக்கியிருந்த பெண்ணுக்கும் மத்திய அரசு கோகிலாவுக்கும் ஒரே வயது. இது இன்னும் மாப்பிள்ளை அமையாத தனது இளைய குமாரத்தியை மனத்தளவில் பாதித்துவிட்டால் என்ன செய்வது?

எனவே அவர் ஒரே சொற்றொடரில் மகிழ்ச்சியடைந்து வருத்தப்படும் விதமாகப் பேச ஆரம்பித்தார். ‘பையன் செட்டில் ஆயிட்டான்; இனிமே அவன் பாத்துக்குவான்னு இருந்துட முடியுங்களா?’

மென்பொருள் சங்கரின் புதிய மனைவியான காவ்யகுமாரியும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தாள். எனவே, கணவன் மனைவி இருவருமே வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள். ஒன்றரை வருடங்களாகவே உலகச் சூழல் அப்படித்தான் உள்ளது என்பதால் அது தவிர்க்க முடியாததும் ஆகிப் போனது.

ஆனால் மத்திய அரசு கோகிலாவின் நிலைமை அப்படிப்பட்டதல்ல. அவள் தினமும் காலை ஏழே முக்காலுக்கு அலுவலகம் கிளம்ப வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை அவளும் வீட்டில்தான் இருந்தாள். பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பிவிடலாம் என்று அறிவிக்கப்பட்டதால் ஊசி போட்டுக்கொண்டு அவள் தினமும் அலுவலகத்துக்குச் சென்று வரத் தொடங்கினாள். ‘பாவம் கோகிலா. இரண்டு பஸ் மாறி ஆபீஸ் போகவேண்டியிருக்கிறது. இரவு வீடு திரும்ப எட்டு மணி ஆகிவிடுகிறது’ என்று அஷ்டலட்சுமி அம்மாள் அக்கம்பக்கத்து சம வயதுப் பெண்மணிகளிடம் சொல்லி வருத்தப்பட்டாள். இதனைத் தற்செயலாகக் கேட்ட அஷ்டலட்சுமி அம்மாளின் புதிய மருமகளான மென்பொருள் காவ்யகுமாரி, ‘என்னவோ உன் தங்கை இன்னிக்குத்தான் வேலைக்குப் போற மாதிரி உங்கம்மா சீன் போடறாங்களே. நாலு வருஷமா இப்டித்தானே’ என்று தனது புத்தம் புதுக் கணவனிடம் சிரித்துக்கொண்டே சொன்னதை அஷ்டலட்சுமி அம்மாள் கேட்டு, விக்கித்து நின்றுவிட்டாள். இந்த விமரிசனம் தன் மகள் மத்திய அரசு கோகிலாவின் காதுக்குப் போய்விடாதிருக்க வேண்டும் என்பதே அவரது பிரார்த்தனையாக இருந்தது.

ஆனால் பிரார்த்தனைக்கு எந்தக் கடவுள் எப்போது செவி சாய்த்திருக்கிறது? எனவே மனம் பொறுக்காத ஒரு நேரத்தில், அஷ்டலட்சுமி அம்மாளே கோகிலாவிடம் தனது புதிய மருமகள் முன்வைத்த விமரிசனத்தைச் சொல்லி, ‘இந்தப் பொண்ணு இப்பவே இப்படி பேசுதே, இனி மிச்ச காலம் எப்படிப் போகப் போவுதோ’ என்று அங்கலாய்ப்புச் செய்தார். அன்று முதல் மத்திய அரசு கோகிலாவுக்கு மென்பொருள் அண்ணி காவ்யகுமாரி எதிரி ஆகிவிட்டார்.

அஷ்டலட்சுமி அம்மாளுக்கு இது மிகுந்த துயரத்தைத் தந்தது. அவருக்கு எப்படி மத்திய அரசு கோகிலா ஒரே பெண்ணோ, அப்படித்தான் மென்பொருள் சங்கரும் ஒரே பிள்ளை. அவனையும் எளிதாக விட்டுக் கொடுத்துவிட முடியாது. அதே சமயம் புத்தம் புது மருமகளுக்கும் ஒரே மத்திய அரசு மகளுக்கும் விரோதம் வளர்வதும் சரியல்ல. என்ன செய்தால் இந்தப் பிரச்னை தீரும் என்று அவர் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இருட்டி இரவாகிவிட்டது. வீட்டிலிருந்தே வேலை செய்யும் காவ்யகுமாரி, கடையைக் கட்டிவிட்டு இரவு சாப்பிட என்ன வேண்டும் என்று சக கடை கட்டியான சங்கரிடம் கேட்டாள். ‘தோசை இருந்தால் போதும்’ என்று அவன் சொன்னான். உடனே அவள், ‘எவ்ளோ?’ என்று எண்ணிக்கையில் சொல்ல வலியுறுத்தினாள். அவனும் ‘மூன்று போதும்’ என்று சொன்னான்.

முகம் கழுவிக்கொண்டு அடுக்களைக்குள் நுழையும்போது காவ்யகுமாரி, அஷ்டலட்சுமி அம்மாளைப் பார்த்து, ‘அத்த, எங்களுக்கு தோச சுடப் போறேன். உங்களுக்கு?’ என்று கேட்டாள். எதற்கு வம்பு என்று அஷ்டலட்சுமி அம்மாள் ‘சரிம்மா’ என்று பொதுவாகச் சொல்லி வைத்தாள். உடனே காவ்யகுமாரி, அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டுவிட்டு, பிடி வேர்க்கடலையை அள்ளி மிக்ஸியில் போட்டு சட்னி அரைக்கத் தொடங்கினாள்.

புதிய மருமகள் தோசை சுடும் அழகை நேரில் வியந்து இரண்டு வார்த்தை பாராட்டி வைக்கலாம்; பிற்பாடு உதவும் என்று எண்ணிய அஷ்டலட்சுமி அம்மாள் அடுக்களைக்குள் வந்தாள். பேச்சு வாக்கில், ‘எனக்கும் என் பொண்ணுக்கும் சட்னியெல்லாம் தேவைப்படுறதே இல்ல. இட்லிப் பொடி இருந்தா போதும்’ என்று சொன்னாள். ‘எனக்கு சட்னி இல்லன்னா தோசை இறங்காது’ என்று சொல்லிவிட்டு காவ்யகுமாரி வேலையில் மும்முரமாகிவிட்டாள்.

‘கோயில்ல பிரதோஷம். போய் சாமி கும்புட்டுட்டு வந்திடுறேன். அதுக்குள்ள கோகிலாவும் வந்துடுவா’ என்று சொல்லிவிட்டு அஷ்டலட்சுமி அம்மாள் கிளம்பிச் சென்று திரும்பி வருவதற்குள் மென்பொருள் தம்பதியினர் தங்கள் இரவு உணவை உண்டு முடித்துவிட்டார்கள். வேலைச் சுத்தத்தை மிகவும் விரும்பும் காவ்யகுமாரி, தாங்கள் சாப்பிட்டு முடித்த தட்டுப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்தாள்.

எட்டு மணிக்குக் கோயிலில் இருந்து அஷ்டலட்சுமி அம்மாளும் மத்திய அரசு வேலையில் இருந்து கோகிலாவும் வீடு திரும்பி சாப்பிட அமர்ந்தபோது காவ்யகுமாரி அவர்களுக்கு தோசை வார்த்துப் போட்டுவிட்டு, தட்டோரம் தலா ஒரு ஸ்பூன் இட்லிப் பொடியை வைத்து எண்ணெய் ஊற்றினாள்.

‘ஏம்மா, அந்த கடலச் சட்னி அரைச்சியே, மறந்துட்டியா?’ என்று அஷ்டலட்சுமி அம்மாள் ஞாபகம் வைத்துக்கொண்டு கேட்டாள்.

‘உங்க ரெண்டு பேருக்கும் இட்லிப் பொடி போதும்னு சொன்னிங்களே. அதனால எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் சட்னி அரைச்சேன்’ என்று காவ்யகுமாரி சொன்னாள்.

‘ரெண்டு பேருக்கு மட்டுமா?’

‘ஆமா அத்தை. சாப்ட்டு முடிச்சி எல்லாம் கழுவி வெச்சிட்டேன்’ என்று சொல்லிவிட்டு அவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

மணம் முடித்து வந்த முதல் வாரமே இப்படி ஒரு துர்ச்சம்பவம் நடந்துவிட்டதை அஷ்டலட்சுமி அம்மாளால் தாங்க முடியவில்லை. ‘இது என்னாங்க கூத்து? நாலு பேர் இருக்கற வீட்ல ரெண்டு பேருக்கு மட்டும் அவ தனியா சமைச்சிக்கறாங்க!’ என்று மீண்டும் அக்கம்பக்கத்து வீட்டாரிடம் போய்ப் புலம்பினாள். இரவு வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்டார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு தனது கஜகஸ்தான் கணவர் சிட்டிபாபுவுக்கு போன் செய்து தகவலைச் சொல்லி, தனது அதிர்ச்சியையும் பதிவு செய்தார்.

வந்தது வினை. புதிய மாமனாரும் கஜகஸ்தான் எண்ணெய் வயல் அதிகாரியுமான சிட்டிபாபு,  தனது அதி நவீன யுகத்து மென்பொருள் மருமகளான காவ்யகுமாரிக்கு ஸ்டைலிஷ் ஆங்கிலத்தில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:-

அன்பின் மருமகளே, எங்களுக்கு இட்லிப் பொடி இருந்தால் போதும் என்று உன் அத்தை சொன்னதன் பொருள், அவர் எவ்வளவு கட்டு செட்டாகக் குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார் என்பதை நீ அறிய வேண்டும் என்பதுதானே தவிர, அவர்களுக்குக் கடலைச் சட்னி பிடிக்காது என்பதல்ல. நான்கு பேர் வாழும் குடும்பத்தில் இரண்டு பேருக்கு மட்டும் தனியாக ஒன்றைச் சமைத்துக்கொள்வது சரியானதல்ல. பண்பாட்டுக்குப் பெயர் போன கொங்கு மண்ணைச் சேர்ந்த உனக்கு இது நன்றாகவே தெரியும். இருப்பினும் அவசரத்தில் அறியாமல் இந்தத் தவறு நடந்திருக்க வேண்டும் என்றே நம்ப விரும்புகிறேன். உன் அத்தையை நீதான் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். உனக்கு ஒன்று தெரியுமா? உனக்கும் சங்கருக்கும் திருமணம் நிச்சயமானதுமே அவள் நமது அபார்ட்மெண்ட்டை உங்கள் இருவருக்கும் பொதுவாக எழுதி வைக்கச் சொல்லிவிட்டாள். கோகிலாவுக்கு வேங்கைவாசலில் இருக்கிற நிலத்தை எழுதி வைத்துவிடலாம் என்றும் ஆலோசனை சொல்லியிருக்கிறாள். அஷ்டலட்சுமி அவ்வளவு தங்க குணம் கொண்டவள். அவளை அனுசரித்துச் செல்வாய் என்று அன்புடன் நம்புகிறேன்.

மேற்படி மின்னஞ்சல் விவகாரம் அஷ்டலட்சுமி அம்மாளுக்குத் தெரியாது. காவ்யகுமாரியும் அப்படி ஒரு அஞ்சல் வந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மறுநாள் இரவு தோசை சுட்டபோது அஷ்டலட்சுமிக்குக் கடலைச் சட்னியுடன்கூட உருளைக் கிழங்கு மசாலாவும் சேர்த்துச் சமைத்து அசத்தியிருந்தாள். எதிர் வரும் தினங்கள் ஏதோ ஒன்றில் அம்மாவுக்குப் பிறந்த நாள் வரும் என்று மென்பொருள் சங்கர் பேச்சு வாக்கில் சொல்லப் போக, காவ்யகுமாரி தானே கடைக்குச் சென்று அஷ்டலட்சுமி அம்மாளுக்கு  ஐயாயிரம் ரூபாய் மதிப்பில் ஒரு பட்டுப்புடைவை வாங்கி வந்திருந்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று மத்திய அரசு கோகிலாவுக்கு ஒரு நெய்ல் பாலிஷ் பாட்டிலும் சேர்த்து வாங்கி வந்திருந்தாள்.

எப்படியோ நமக்கே தெரியாமல் புத்தம் புது மருமகள் காவ்யகுமாரியை வழிக்குக் கொண்டுவந்துவிட்டோம் என்று அஷ்டலட்சுமி அம்மாள் அவளது பிறந்த நாளன்று மகிழ்ச்சியடைந்து, மருமகள் வாங்கித் தந்த பட்டுப் புடைவையைக் கட்டிக்கொண்டு நின்றபோது, காவ்யகுமாரியும் சங்கரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி காலில் விழுந்து ஆசி பெற்றார்கள். மத்திய அரசு கோகிலாவுக்கே இதெல்லாம் மிகுந்த வியப்பளித்தது.

திடீரென்று அஷ்டலட்சுமி அம்மாளின் அன்புக்குப் பாத்திரமாகிவிட்ட புத்தம்புது மருமகள் காவ்யகுமாரி, அன்று ஸ்பெஷலாக ஆர்டர் செய்து கேக்கெல்லாம் வரவழைத்து  அசத்திவிட்டாள். அது மட்டுமல்லாமல், கம்மல், தோடு போன்ற ஆபரணங்களை வைத்துத் தரும் சிறு பெட்டியொன்றை எடுத்து மென்பொருள் சங்கரிடம் தந்து, ‘குடுங்க’ என்று மரியாதையுடன் சொன்னாள்.

அஷ்டலட்சுமி அம்மாளுக்குப் பூரித்துப் போய்விட்டது. ‘என்னதுடா?’ என்று அவர் ஆர்வமுடன் கேட்டார்.

‘பக்கத்துத் தெருவுலயே வாடகைக்கு ஒரு வீடு பாத்திருக்கேம்மா. கோகிலாவோட நீ அங்க போயிடு. அதான் உங்க ரெண்டு பேருக்கும் வசதியா இருக்கும். நாங்க அப்பப்ப வந்து பாத்துக்கறோம்’ என்று சொன்னான். எத்தனைக் காலமானாலும் அந்த வீட்டின் வாடகைப் பணத்தை மாதம் தோறும் செலுத்துவது தன் பொறுப்பு என்று காவ்யகுமாரி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள்.

‘இந்த ஃப்ளாட்டயே எங்களுக்கு எழுதி வெக்க சொன்ன உங்களுக்கு என்னால வேற என்ன அத்தை செய்ய முடியும்?’ என்று அவள் கண்ணீர் மல்கக் கேட்டபோது அஷ்டலட்சுமி அம்மாளுக்கும் கண்ணீர் வந்தது.

வேறென்ன? எல்லாம் ஆனந்தக் கண்ணீர்தான். பிறகு அவர்கள் பிறந்த நாள் கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.