பசி எனக்கு விட்டு மிருகம். மிக அபூர்வமாகச் சேலையும், மற்ற நேரங்களில் கை வைத்த டீ சட்டையும் அரைக்கால் சட்டையும் அணிந்து வீடு முழுவதும் அலையும் பிராணி. சுமதி அன்றைக்குப் புதிதாக ஒரு ஓவியம் வரைந்திருந்தாள். சன்னலுக்குள் காற்று புறப்பட்டு வர உப்பியிருக்கும் மெல்லிய துணியினாலான திரைச்சீலைகளைப் போலவும் வெயிலில் ஜ்வலித்துக் கிடக்கும் கடற்கரையை விழுங்க அகோரப் பசியுடன் ராட்சச உருவமாக எழுந்து பின்பு தனக்கிள் சுருண்டு தியானத்தில் லயித்திருக்கும் கடலலைகளைப் போன்ற வர்ணப் பட்டைகளோடு.

சட்டத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஓவியம் மெல்லிய சீறலோடு தூரிகையால் வரையப்பட்டிருக்கும் பல்வேறு வடிவங்களையும் சுருள்சுருளான அகன்ற கோடுகளையும் சுற்றிச் சிலிர்த்திருக்கும் கனமான வர்ணங்களோடு என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

“இதை விடவே மாட்டியா?” என்றேன். குவளைத் தண்ணீரில் தலை குப்புற நட்டு வைத்திருந்த தூரிகைகளையும் சாயக் குப்பிகளையும் மேசையிலிருந்து அகற்றிக் கொண்டிருந்தவளின் கன்ன மேடுகள் கடுமையாகிப் பளபளத்தன. கிழக்குத் திசையைப் பார்த்திருக்கும் சன்னல்களைத் தாண்டி அவன் முகத்தில் விழுந்த காலை வெயிலில் அவள் நெற்றி வெள்ளித் தகடாய்த் தகதகத்தது. தனக்கு முன்னால் வெகு தூரத்திலிருக்கும் ஏதோ பெயரில்லாத புள்ளியை வெறித்துப் பார்ப்பதைப்போல் அகலத் திறந்து வெளிச்சம் துப்பும் அழகான பூவிதழ்களைப் போன்ற கண்கள்.

சுமதியின் அம்மாவின் முகமும் அப்படித்தான் இருந்திருக்குறது. ஏற்றிவைத்தச் சுடர்போல் பிரகாசிக்கும் திடமான முகத்தோடு. மற்ற நூலக ஊழியர்களோடு சுமதியின் அம்மா எடுத்துக் கொண்ட மஞ்சலேறிய புகைப்படம் இன்னமும் இருக்கிறது. சிறிய செங்கல்களால் கட்டப்பட்டிருந்த பழைய தேசிய நூலகக் கட்டடத்தின் வாசலில் சுமதியும் அவளுடைய அம்மாவும் நின்றிருந்தார்கள். சுரங்கச்சாலை அமைப்பதற்காக அந்தக் கட்டடம் எப்போதோ இடிக்கப்பட்டு விட்டது. ஏதோ ஒரு பண்டிகைக் கொண்டாட்டத்தின் பிறகோ அல்லது தேசிய நாள் அனுசரிப்பின் பின்போ புகைப்படம் எடுத்திருப்பார்கள். கட்டியிருந்த பெரிய பூப்போட்ட மஞ்சளும் பழுப்பும் கலந்த வழவழப்பான ஜார்ஜெட் புடவை வீணையின் நரம்பு போல இருக்கும் ஒல்லியான உடம்பிலிருந்து வழிந்து கிடக்கிறது. புடவையின் முந்தானையை உடம்பின் அந்தப் பக்கமாகப் பதியும்படி இழுத்துப் பிடித்திருக்கும் ஒல்லியான கையிலும் மணிக்கட்டைத் தாண்டி மேலேறியிருக்கும் மிக.மெல்லிய மஞ்சள் கோடு போன்ற மெல்லீசான் ஒற்றை வளையலிலும் மட்டும் தயக்கம் தெரிந்தது.

கடுமையான விஷம்வாய்ந்த வசீகரமான கருநாகப்படம்போல் வளமான நீண்ட கூந்தல்.

நாற்பது வருடங்களுக்கு முந்திய வெயிலில் ஜ்வலித்துக் கிடந்த திடமான நெற்றி மேட்டிலும் வட்டமான சிறிய கண்களிலும் புடவைக்குள்ளிருந்து பிறை வடிவத்தில் எட்டிப் பார்த்த ஏதோ வெளிர் நிறத்தில் இருந்த குதிகால் செருப்பின் முனையில் மட்டும் அசாதாராணமான அலட்சியம். கண்களை இடுக்கி உதவாது என்று தெரிந்தும் புகைப்படத்தைத் தூக்கிப்.பார்த்தபோது சேலையின் முந்தானைகயைப் பிடித்துக் கொண்டிருந்த கையில் சுண்டுவிரலுக்கு அடுத்த விரலில் கலங்கலான வெளிச்சத் திட்டு. முதலில் பார்த்தபோது புகைப்படத்தில் ஒட்டியிருக்கும் மிகச் சிறிய தூசுத் துகள் என்று நினைத்து புகைப்படத்தை ஒரு முறை உதறினேன்.

பின்பு, “அம்மா கல்யாணமே செஞ்சுக்கலணு சொன்னியே?” என்று சுமதியிடம் தயங்கித் தயங்கிக் கேட்டேன்.

“ம்.”

“பின்ன, விரல்ல கல்யாண மோதிரம் மாதிரி எதையோ போட்டிருக்காங்களே.”

“அது அவங்கக்கூட இருந்த மூணாவது ஆளோ, நாலாவது ஆளோ எங்களோட வந்து தங்க ஆரம்பிச்சப்ப அவங்களுக்குக் கொடுத்தது.”

  “வாசுவா?” என்றேன். வாசுவை எனக்குத் தெரியும். வயது ஐம்பதுக்கும் மேலிருக்கும். திடகாத்திரமான கனத்த உடம்பு.  மினுமினுக்கும் கறுப்பு நிறம். விசாலமான முக லட்சணம், முன் வழுக்கையின் ஆரம்பம். ஆள் நல்ல ஷோக்காளி என்பதைச் சுருக்கங்கள் விழுந்த கனமான கண்ணிமைகளும், தடித்துக் கனிந்துபோய் சிகரெட்டைப் பொருத்தும் இடத்தில் கறுப்பாய் அரைவட்ட வடிவத்தில் காய்ந்திருந்த உதடுகளும், வாய்க்கு இரண்டு பக்கமும் நீண்டிருந்த தொங்கு மீசையும் காட்டிக் கொடுத்தன.

நான் நடத்திவந்த சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் கைவினைப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியையாக வேலை தேடி வந்த சுமதியுடன் பழக ஆரம்பித்த நேரத்தில் ஒரு முறை அவளை அவள் வசித்திருந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் விடப் போனபோது ஒருமுறை வாசுவைப் பார்த்திருக்கிறேன்.  மீன் குழம்பு வாசனையும் ஏதோ மரங்களின் பச்சை நாற்றமும் உடம்பிலிருந்து கலந்து வீச மின்தூக்கியிலிருந்து இறங்கி வந்தவர் எங்களை எதுவும் பேசாமல் சிறிது நேரம் பார்த்து முறைத்தார். அடர்நீல நிறத்தில் உடம்பைப் பிடித்ததுபோல காலர் வைத்தை டீ சட்டை அணிந்திருந்தார். அவர் நடையிலும் உடம்பின் அசைவுகளிலும் உடலால் உழைப்பவர்களுக்கே இயல்பான சிறு நாட்டியத்தனமும் நளினமும் இருந்தன. வாசு துவாஸில் இருக்கும் ஏதோ கப்பல் பட்டறை ஒன்றில் அவர் இன்னமும் அடிநிலை ஊழியராக வேலை செய்வதாகச் சுமதி பிறகு சொன்னாள். அம்மா சேர்த்துக் கொண்ட ஆண்கள் எல்லோரும் உடம்பின் அசைவுகளில் சிறு நாட்டியத்தனமும் நளினமும் கொண்டவர்கள். உடல் உழைப்பாளிகள்.

சுமதியின் அம்மா நூலகத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு இரண்டு ஆண்டுகளில் எச்சரிக்கையே இல்லாமல் தோன்றி அவருடைய உடலுக்குள்ளிருந்தபடியே அவர் அழகையும், உடல் உறுப்புகளையும் கடைசியில் உயிரையும் உறிஞ்சிய கருப்பை புற்றுநோயால் இறந்து போனாள். அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் வாசு காலை பசியாறையின் பிறகு ஏற்பட்ட சின்ன சண்டைக்குப் பிறகும் தெளிவான அர்த்தங்கள் ஏதுமற்ற சிற்சில வார்த்தைகளுக்குப் பிறகும் தலைமயிரில் மிகப் பெரும்பகுதியை இழந்து பிளாஸ்டிக் கரண்டியினால் உணவைத் தட்டித் தட்டிக் கூழாக்கிக் குழந்தைபோல் தின்று கொண்டிருந்த சுமதியின் அம்மாவின் விட்டுக் கிளம்பிப் போனார்.

அம்மா அழைத்துவந்த ஆண்கள் வழக்கமாகச் செய்வதுதான் என்று சுமதி பிறகு சொன்னாள்.

“வாசு வந்த பிறகும் உங்க அம்மா மோதிர த்தைக் கழட்டலையா?” என்று கேட்டேன்.

 இள மஞ்சள் நிறமுடைய முகம் சுமதிக்கு. முகத்தின் இரண்டு பக்கமும் லேசாகப் புடைத்திருக்கும் ஒளிமிகுந்த கன்ன மேடுகள் சிவக்கப் பதில் சொன்னாள்.

 ”பழக்கமாகிடுச்சு அம்மாவுக்கு. ஒரு விஷயம் பழக்கமாகிட்டாக் கழட்டிப் போடுறது கஷ்டம் அந்தக் காலப் பொம்பளைகளுக்கு.”

 அந்தக் காலப் பொம்பளைக்கு என்பதை அழுத்திச் சொன்னாள். அதன் பிறகு அவளிடம் எதையும் கேட்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. சுமதியின் அம்மாவின் சாவுக்குப் பிறகு அவள் என்னோடு வந்து தங்க ஆரம்பித்திருந்தாலும் நாங்கள் இருவரும் திருமணமோ எங்களுக்குள் வேறெந்த ஏற்பாடோ செய்து கொள்ளவில்லை.

 தூரிகைகளையும் சாயக் குப்பிகளையும் கையில் அள்ளிக் கொண்டு நடந்த சுமதி சமையலறைக்குப் போகும் வழியில் திறந்திருந்த ஸ்டோர் ரூம் கதவின்மீது பலமாக மோதி நின்று கொண்டாள். நல்ல வேளையாக கதவின்மீது மோதிய வேகத்தில் கையில் வைத்திருந்த சாயக் குப்பிகளையோ தூரிகைகளையோ அவள் தரையில் சிதற விடவில்லை. முன்னங்கைகளின் நரம்புகள் தோலுக்கடியிலிருந்து பச்சை நிறமாகப் புடைத்திருக்க அவற்றை மார்போடு அழுத்திக் கொண்டு நின்றிருந்தாள். நேர்க்கோடுகளாக மாறியிருந்த அவளுடைய புருவங்களிலும் சிவப்பேறியிருந்த மென்மையான காது மடல்களிலும் சிறுத்துப்போய்க் கிடந்த முகவாயிலும் கோபம், ஆச்சரியம், வியப்பு, இயலாமை, வெட்கம், அவமானம் எல்லாம் கலந்திருந்தது.

அலமாரியில் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தவன் ஒரே தாவலில் முன்னேறி அவளைத் தாங்கிக் கொள்ளும் விதமாக அவளுடைய முழங்கையைப் பிடித்துக் கொண்டேன். சுமதியின் பல அறிவுறுத்தல்களையும், கெஞ்சுதல்களையும் மீறி ஸ்டோர் ரூமுக்குள் இஸ்திரி பெட்டியையும் அதன் ஸ்டாண்டையும் வைத்துவிட்டு வரும்போது நான்தான் கதவை மூடாமல் வந்திருந்தேன். சுமதிக்குத் தெரிந்திருக்கும். நான் வந்து நின்றதை மொத்தமும் அலட்சியம் செய்யும் வகையில் முகத்தை என் பக்கமாகக் கொஞ்சம்கூடத் திருப்பாமல் முழங்கையில் சிறு உதறலோடு என் கையிலிருந்து அவள் கையை விடுவித்துக் கொண்டு வேறொரு வார்த்தையும் இல்லாமல் சமையலறைக் குழாய் மேடைக்கு மௌனமாக நடந்தாள்.

பின்னால் மருத்துவச் சிகிச்சைக்குப் போகும்போது உதவுமே என்று ஒரு நாள் மாலை இருவரும் சமையலறை மேசையில் அமர்ந்து கனமான கோப்பையில் பால் கலக்காத கறுப்புத் தேநீரை அருந்திக் கொண்டிருந்த போது அவள் குருடான கதையைச் சொல்லும்படி கேட்டேன். உதடுகளைக் குவித்துக் கோப்பையில் இருந்த சூடு பறக்கும் தேநீரை ஊதி ஊதி உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தவள் தோள்களை லேசாய்க் குலுக்கிவிட்டுப் பதில் சொன்னாள்.

“பதினாலு வயசுல என்னைச் சுத்தி இருக்குற எதையுமே பார்க்கப் பிடிக்காமப் போச்சு. ஒரு நாள் பள்ளிக்கூடத்துல உட்கார்ந்துகிட்டு இருந்த நேரம் இனி எதையுமே பார்க்கக் கூடாதுனு முடிவு பண்ணிக் கண்கள இறுக மூடிகிட்டேன். அம்மா, என் தோழிங்க, டீச்சருங்க, டாக்டர்ஸ்ஸுங்க, ஏன் போலீஸ்காரங்ககூட கெஞ்சியும், மிரட்டியும்கூடப் பார்த்தாங்க. ஆனா நான் பிடிவாதமா கண்களத் திறக்க மறுத்துட்டேன். அதுக்குள்ள கண்கள மூடியிருக்குறப்போ கண்ணுக்குள்ள தெரியுற இருட்டு எனக்கு குளிர்ச்சியாவும், இதமாவும், சங்கீதம் நிறைஞ்சதாவும் இருக்குறதா எனக்குத் தோணுச்சு. அந்த இருட்டை உத்துப் பார்த்தபடியே அதுலேயே லயிச்சு உட்கார்ந்திருப்பேன். மத்தவங்க யாரு என்ன சொன்னாலும் கண்களைத் திறக்காதேனு அந்த இருட்டுத்தான் என்கிட்ட சொல்லிச்சு. இருட்டு என்கிட்ட சொன்னதையெல்லாம் நான் செய்ய ஆரம்பிச்சேன். நானும் இருட்டும் நிறைய பேசிகிட்டோம். பல மாசத்துக்கப்புறம் எதேச்சையாக் கண்ணத் திறந்து பார்க்குறப்ப இருட்டு என்கூட நிரந்தரமா ஒட்டிக்கிட்ட்தத் தெரிஞ்சுகிட்டேன். வெளியே வெயில் கொளுத்துது. என் கண் அகலமா திறந்திருக்கு. ஆனா சுத்தியும் குளுமையான இருட்டு. குருடியாகிட்டேன்னு ஒரு தரம் கறுப்புக் கண்ணாடி மாட்டிக்கச் சொன்னாங்க. ஆனா இருட்டுக்கும் எனக்கும் எந்த இடைவெளியும் இருக்கக் கூடாதுனு நான் அதைக் கழட்டி வீசிட்டேன்.”

சொல்லிவிட்டு அகலமான இன்னமும் ஒளிவீசிக் கொண்டிருந்த உயிரற்ற கண்களால் என்னைச் சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தாள்.  அந்தப் பார்வை அளவிட முடியாத சோகமும் ஆத்திரமும் மிகப் பெரும் கருணையும் நிறைந்ததாக இருந்தது.

“அன்னையில இருந்து கண்கள அகலமா திறந்து வச்சுகிட்டே இருட்டை ஆலிங்கனம் பண்ண ஆரம்பிச்சேன். எத்தனை பெரிய வெளிச்சத்துலனாலயும் என்னைச் சுத்தி இருக்குற இருட்ட விரட்ட முடியல.”

சமைலறை தண்ணீர்க் குழாய்க்கடியில் தூரிகைகளையும் சாயக் குப்பிகளையும் வைத்துவிட்டு அறைக்குள் வந்த சுமதி எங்களைச் சுற்றி அதிகமாயிருந்த வெயிலைத் தலை தூக்கி வேட்டைக்கு ஆயத்தமாகும் நாயைப்போல் முகர்ந்தபடி நின்றாள். மெல்ல வேட்டைவெறி ஏறிக் கொண்டிருக்கும் நாய்க்கு ஏற்படுவது போலவே சுமதியின் நாசித் துவாரங்களும் விரைவாக விரிந்து சுருங்குவதை என்னால் பார்க்க முடிந்தது. முகத்தில் கலவர ரேகைகள் தோன்ற சுமதி என்னையும் தாண்டிப் போய் ஜன்னல் திரைச்சீலைகளை இரண்டு கைகளாலும் இறுகப் பற்றி இழுத்து மூடினாள். அவள் முகத்தில் மீண்டும் நிம்மதி நிறைந்தது.

சாபத்தோடு வரம் ஒன்றும் வந்து சேரும் என்பது உண்மை என்பதால் குருடாகிப் போன சுமதிக்கு அபூர்வமான ஆற்றல் ஒன்றும் வந்து சேர்ந்தது. தன்னைச் சுற்றிக் கருமையை மட்டுமே பார்க்க முடிந்த அவளால் வண்ணங்களை மட்டும் வெவ்வேறு வாசனைகளால் அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. வழக்கமான சாய நாற்றங்களை மீறியும் வண்ணங்கள் தம்மைத்தாமே மிகுந்த பிரியத்துடன் சுமதிக்குத் தங்கள் இருப்பைக் காட்டிக் கொடுத்தன. மஞ்சம் நிறம் என்றால் எலுமிச்சைகளின் வாசனை. நீலம் என்றால் கடல் நீரின் உப்பு வாசம். பழுப்பு அடித்துப் பெய்த கனமான பருவக்கால மழை கிளறிவிட்டுப் போன மண்ணின் மணம். சிவப்பு, அடிவயிற்றைப் பிசைந்துகொண்டு பெண்ணுக்குள்ளிருந்து வெளியேறும் உதிர வாடை என்று சுமதி சொல்லிக் கொண்டாள். ஒரு நிறத்துக்கும் அதற்குரிய வாசனைக்கும் தர்க்க ரீதியாக எந்தத் தொடர்பும் தேவையில்லை என்றும் சொன்னாள்.

ஒரே நிறத்திலிருக்கும் மிக நுணுக்கமான வித்தியாசங்களையும் அவளுக்கு வெவ்வேறு வாசனைகள் தெளிவாய்க் காட்டிக் கொடுத்தன.  வெளிர் பச்சை இளம் மூங்கில் தோப்பின் வாசனை என்பதிலிருந்து பச்சை ஆப்பிள்கள், மூக்குச் சளி, புளிப்பு மிட்டாய், அடர் பச்சைக்கு மரங்கள் நெருங்கி வளர்ந்திருக்கும் கொடிகளும் தாவரங்களும் ஈரமான தரையுமுடைய மழைக்காட்டின் வாசனை என்பது வரை சுமதிக்கு நிறங்கள் தங்கள் குண இயல்புகளைப் பரப்பிக் காட்டிச் சேவகம் செய்தன. இதனால் சின்ன வயதிலிருந்து மிக ஆசையாய் வரைந்த ஓவியங்களைக் குருடான பின்னரும் சுமதியால் முன்பைவிடச் சிறப்பாகத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்க முடிந்தது.

ஆனால் வெயிலின் வெள்ளை நிறம் மட்டும் அவளுக்குப் பிடித்தமானதாக இல்லை. எல்லா நிறங்களையும் தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு வெள்ளை வெறும் அலித்தனமாக இருக்கிறது என்று சுமதி குறைபட்டுக் கொண்டாள். முடிந்தவரை வெள்ளை நிறத்தை விலக்கவும் வண்ணங்களால் நிரப்பவும் முயன்றால். வாசனை ஏதுமில்லாத வெள்ளை நிறத்தை வண்ணங்களால் விரட்டுவதே குருட்டுச் சுமதியின் வாழ்க்கைப் பணி என்பதுபோல தினமும் பல மணி நேரங்கள் பசியோடு ஓவியம் தீட்டுவாள்.

சட்டத்தில் சாய்த்து வைத்திருக்கும் ஓவியத்தை அவள் எடுத்துக் கொண்டு போகப் போன போது அவளைத் தடுத்தேன்.

“இது என்ன ஓவியம்னாவது சொல்லிட்டுப் போ.”

“நீயே சொல்லு,” என்றள் சுமதி,

மிகப் பெரிய ரௌத்திரத்தோடு சிலிர்த்து எழுந்து அந்த உக்கிரத்தை எல்லாம் தனக்குள் திருப்பித் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் வண்ணச் செவ்வகப் பட்டைகளை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். என் கண்களுக்கு நடுவிலிருந்து ஏதோ கனமான விஷயம் கழன்று விழுந்தது.

“நீயா?” என்று கேட்டேன்.

சுமதி பதில் எதுவும் சொல்லாமல் ஓவியத்தை இரண்டு கைகளாலும் அள்ளி அறையை விட்டு எடுத்துக் கொண்டு போனாள்.

நினைவிலிருந்த பொருள்களை வரையாமல் தனக்குள் இருந்த உணர்ச்சிகளையே வட்டங்களாகவும் செவ்வகங்களாகவும் சதுரங்களாகவும் முக்கோணங்களாகவும் சுமதி ஓவியமாக வரையத் தொடங்கிய நாளிலிருந்து அவள் வெகுவாக மாறிப் போனாள். வெயிலையும் வெள்ளையாக இருக்கும் எல்லா விதமான வெளிச்சங்களையும் வெறுக்கத் தொடங்கினாள்.

காலையில் ஓவியம் வரைவதை நிறுத்திக் கொண்டாள். அதிகாலையிலேயே எழுந்துவிடும் வழக்கமுடையவள் நான் வேலைக்குக் கிளம்பும் நேரத்தையும் தாண்டிப் போர்வையைத் தலைக்குமேல் இழுத்துத் தூங்கினாள். அவள் விழித்திருந்த வேளைகளில் அவள் நெற்றியின் விளிம்புகளை, கண்களின் கீழ் வளையங்களை, நாசியின் கூர்மையை, தோளின் சரிவுகளை, முகவாயை நிழல்கள் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன.

பள்ளி மாணவர்கள் கணினித் தொழிநுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களின் பயன்பாட்டையும் கற்றுக் கொள்ளப் பெற்றோர்களால் நெருக்கடிக்குள்ளாகியிருந்த காலம் என்பதால் என் ஓவிய, கைவினை வகுப்புக்கள் நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் இரவு வியாபார வரவுச் செலவுகளோடு போராடிவிட்டு வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த போது சுமதி திரைச்சீலைகள் அனைத்தும் இழுத்து மூடியிருந்த இருட்டான அறைக்குள் நின்று ஓவியம் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். தீரைச்சீலைகளை மீறியும் அறைக்குள் கசிந்த ஒளி அவளுடைய உடம்பின் மேல்புறத்தில் வெளிர்நீல நிறமாக ஜ்வலித்தது அவளுக்கு முன்னால் அந்தரத்தில் தொங்கும் ஈரமான வெள்ளைச் சட்டையின் சிறு பளபளப்போடு சட்டத்தின் மீது வெள்ளை தாள் விளக்கைப்போட திக்கிட்டு அறையின் கதவிருந்த திசையை நோக்கித் திரும்பினாள்.

தாளில் நூற்றுக்கணக்கான கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் சதுரங்களாகவும் செவ்வகங்களாகவும் நீண்ட பட்டைகளாகவும் சின்ன இடைவெளி இல்லாமல் சிதறிக் கிடந்தன.

“என்ன இது?” என்று கேட்டேன். படுக்கையறை விளக்குகளின் வெளிச்சத்திலும் என் கண்கள் மிக அகலமாக விரிந்திருந்தன.

சுமதி “வா” என்று சொல்லிவிட்டுத் தனது கையால் என் தலையை ஓவியத்திடம் கொண்டு போனாள். அவள் கையின் இழுப்புக்கு ஏற்றபடி ஓவியத்தின் முன்னால் நான் குனிந்து கொண்டேன். என் காது ஓவியத்தின்மீது ஒட்டியிருந்தது. கண்களை மூடிச் சிறிது நேரம் கவனித்தபோது காதுகளுக்குள் மெல்லிய உறுமலோடு வாகன நெரிசலில் அகப்பட்ட பல வகையான வாகனங்களின் ஓசைகள் கேட்க ஆரம்பித்தன. ஓவியத்தின் முன்புறமாகப் பேருந்து ஒன்று பலமாகப் பெருமூச்சு விட்டது. ஓவியத்தின் பின்னாலிருந்து இரண்டு சக்கர வாகனத்தின் ஹாரன் கீச்சுக் கீச்சு என்று சப்தமெழுப்பியது. ஓவியத்தின் ஓரமாகச் சாலை வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இயந்திரங்களின் கரகரத்த குமுறல். தட்டையாக இரு பரிமாணத்தோடு மட்டும் இருந்த ஓவியத்தாளில் சுமதி தனது வர்ணங்களால் எண்ணிலடங்கா தூரங்களையும் ஆழத்தையும் சேர்த்திருந்தாள்.

அவள் முகத்தில் புன்னகையின் நிழல் ஒட்டியிருந்தது. “என்ன?” என்று கேட்டாள்.

“என் பள்ளிக்கூடத்தின் வெளியே இருக்கும் டிராஃபிக்,” என்று தழுதழுத்த குரலில் சொல்லி அவள் மார்பில் கண்களை இறுக மூடியபடிச் சாய்ந்து கொண்டேன். வெகு நேரம் அசையாமல் சுமதி என் தலையை வருடித் தந்தாள்.

வேறொரு முறை சுமதி தாளில் பல வகையான நீல நிறங்களில் முட்டை வடிவங்களையும், அகண்ட நீள்வட்டங்களையும், வட்டங்களையும் ஒரு பெண்ணின் வடிவத்தில் வரைந்து வைத்திருந்தாள். சுடர் தெறிக்கத் தாளின் மேல் பாகத்தில் வரையப்பட்டிருந்த வடிவத்தையும், அதன் கீழிருந்த இரண்டு வட்டங்களையும் அதற்கும் கீழே பெரிய வட்டத்தையும் பார்த்தபோது அவள் தனது இறந்துபோன அம்மாவை ஓவியமாகத் தீட்டியிருக்கிறாள் என்று தெரிய வந்தது. ஓவியத்தின்மீது காது வைத்துக் கேட்ட போது சின்னச் சின்ன விசும்பல்களும், பெரும் வெள்ளப் பெருக்காகச் சுழன்றுச் சுழன்று திரும்பிய உஷ்ணமான சீறல்களும், இடையிடையே அனாதையாய்க் கைவிடப்பட்டதின் ஆழமான மௌனமும் கேட்டன. அன்றைக்குச் சுமதியின் மார்பின் என் முகத்தைப் புதைத்தபடி நான் வெகு நேரம் அழுதேன்.

தனக்கு ஏற்படும் மாற்றங்களைச் சுமதி அறிந்தே இருந்தாள். ஒரு நாள் இரவு வெகு நேரத்திற்குப் பிறகு இருண்ட அறைக்குள் நாமிருவரும் தரையில் அமர்ந்திருந்தபோது என்னிடம் பேசினாள்.

“குருட்டுப் பொண்ணு, உன்னைவிட பதினைஞ்சு வயசு குறைச்சலானவ – சுலபமா படிவானுதான என்னைக் கூட்டிகிட்டு வந்த. இப்ப நானே உனக்குப் பெரிய தலைவலியா இருக்கேன் இல்லையா?”

எந்தப் பதிலும் சொல்லாமல் எனது உள்ளங்கையில் நிறைந்து வழிந்து கொண்டிருந்த குளுமையான நிழல்களைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். பேச ஆரம்பித்தபோது குரல் மோசமாகத் தடுக்கியது.

“உன்னைப் படிய வைக்கணும்ங்கிற எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனா அதைவிட உன்கிட்ட இருந்த கட்டற்ற குணமும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அடங்காத சுதந்திரமும்தான் எனக்கு வேண்டியதா இருந்துச்சு. அரசாங்க வேலையில இருக்குற அப்பா, பள்ளிக்கூட ஆசிரியையான அம்மா, அரசாங்க அடுக்குமாடி வீடு, பதினாறு வயசு வரைக்கும் பையன்ங்க மட்டுமே படிக்குற கிறிஸ்துவப் பள்ளிக்கூடம், தேசிய சேவை, அங்கிட்டும் இல்லாம இங்கிட்டும் இல்லாத ரெட்டை மொழியறிவும் ரெட்டை கலாச்சாரமும் உள்ள ஒருத்தனுக்கு அந்த மாதிரி சுதந்திரம் பெரிய போதை. காமத்துக்கு நிகரானது.”

சொல்லிவிட்டு இருட்டில் மூச்சிரைக்கக் காத்திருந்தேன். அறைக்குள் சூழ்ந்திருந்த இருட்டு என்னிடமிருந்து வார்த்தைகளை உறிஞ்சுவதுபோல் இருந்தது. சன்னல் வழியாக வெளியே தெரிந்த அடுக்குமாடிக் குடுமி வைத்த அடுக்குமாடிக் கட்டடங்கள் என்னைப் பார்த்து முறைத்தன.

சுமதி மெல்லிய குரலில் சிரித்தாள்.

”அதுக்கு என் அம்மாதான் காரணமா இருப்பாங்க, கிரிஷ். பணக்கார நாட்டுல வாழ்க்கையோட பெரும்பகுதி தொள்ளாயிரம் வெள்ளிக்கும் குறைவா சம்பளம் வாங்குற அதிகம் படிக்காத பொம்பளையா இருந்து பாரு. சமுதாயம் உங்கிட்ட இருந்து அதிகமா ஒழுக்கத்தை எதிர்ப்பார்க்காதது மட்டுமில்ல உன் நடத்தையைப் பத்தி அது கவலையே படாததும் உனக்குத் தெரிய வரும்.”

உயிரற்றப் பொருள்களுக்கும் நினைவில் மறைந்துபோன விஷயங்களுக்கும் ஓவிய வண்ணங்களால் உயிரூட்டப் பழகிக் கொண்டவள் அதற்கு அடுத்த நிலைக்கு முன்னேற நிச்சயம் முயல்வாள் என்று எனக்குத் தெரிந்தே இருந்தது. சுமதி ஒரு நாள் காலை உணவுக்குப் பிறகு நான் வேலைக்குக் கிளம்பும் நேரத்தில் என் உடலின் மீது ஓவியம் வரைய வேண்டும் என்று சொன்ன போது எனக்கு எந்தவிதமான வியப்பும் ஏற்படவில்லை. அவள் சொன்னதைப் பற்றி மூன்று நாள்கள் இரவு பகலாய் யோசித்தேன். இந்த நகரத்தில் என் வாழ்க்கை மொத்தமும் வீடு, பள்ளிக்கூடம், அலுவலகம் என்று சிறியதும் பெரியதுமான சதுரங்கள், செவ்வகங்கள், வட்டங்கள், முக்கோணங்கள் ஆகியவற்றில்தான் அடைந்து கிடக்கிறது என்பதை உணர்ந்தபோது என் ஓவிய, கைவினைப் பள்ளியை இழுத்து மூடினேன். வங்கியில் சேமிப்பில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து என் கணக்குகளை நேர் செய்தேன். என் அம்மா, அப்பாவின் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களுக்கு முன்னால் பல ஆண்டுகளில் முதல் முறையாகக் கைகூப்பி வணங்கினேன்.

சனிக்கிழமை. அன்று முழுவதும் சுமதி கட்டுக்கடங்காத மகிழ்ச்சியுடன் வீட்டைச் சுற்றி சுற்றி வந்தாள். என்னைக் கடந்து போகும்போதெல்லாம் குனிந்து எனக்கு முத்தங்கள் தந்தாள். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவள் முத்தங்கள் ஈரமானவையாகவும் நீண்ட நேரம் நீடிப்பவையாகவும் இருந்தன. நீண்ட நாளைக்குப் பின்னால் இருவரும் களைத்துப் போகும்வரை உடலுறவு வைத்துக் கொண்டோம்.

இரவு கவியத் துவங்கிய நேரத்தில் என்னை ஓவியம் வரையும் அறைக்குள் அழைத்துச் சென்று என்னை நிர்வாணமாக்கினாள். கடைசி முறையாக உதடுகள் பதிய என்னை முத்தமிட்டாள். பட்டினாலான விலையுயர்ந்த கழுத்துப்பட்டையை என் தலையைச் சுற்றிக் கட்டி என்னைக் குருடாக்கினாள். என்னை மிகக் குளிர்ந்த இருட்டு முற்றிலும் சூழ்ந்து கொண்டது. அந்த இருட்டின் வருடலைப்போல் தூரிகைகள் என் உடல்மீது நகரத் தொடங்கின.

சுமதி என்மீது வண்ணங்களைத் தீட்டத் தீட்ட நான் மெல்லக் கரைவதை உணர்ந்தேன். என் உடல் பாகங்கள் மெல்ல பல்வேறு வகையான வடிவங்களாக மாறி என்னிலிருந்து கழன்று தூரிகைக்கும், சுமதியிடமும், அறையின் எல்லா பகுதிகளிலும், இந்த நகரம் முழுவதும் பயணப்பட்டன. சதுரங்களாகவும், செவ்வகங்களாகவும், வட்டங்களாகவும், முக்கோணங்களாகவும், நீள்வட்டங்களாகவும் இன்னும் பெயரில்லாத வடிவங்களாகவும் இந்த நகரமெல்லாம் வியாபித்து நின்றேன்.

பல வண்ணங்களாகவும், பல வடிவங்களாகவும் நான் எடுத்துக் கொண்ட விஸ்வரூபத்தில் இந்த நகரம் முழுவதும் சேர்ந்து உருவாக்கியவனாகவும், இந்த நகரத்தை உருவாக்குபவனாகவும் நானே மாறியிருந்தேன்.

பலப்பல வண்ணங்களின் கலவையாகத் தகத்தகாயமாய் ஜ்வலித்துக் கொண்டிருந்த என் கனமான பளபளப்பில் சுமதியின் மூச்சுக் காற்றிலும் முகத்திலும் அடித்த உஷ்ணம் இதமாய்க் கலந்திருந்தது.