முதல்முறை ஆதாமை கடவுள் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்தியபோது, உலகின் முதல் கனவை அவன் காண ஆரம்பித்தான். தூங்குவதற்கு முன் கடவுள் கொடுத்த பெரும் பணியான உலகின் எல்லாவற்றிற்கும் பெயரிடுவதைச் சிரமேற் கொண்டு செய்துகொண்டிருந்தான். படைக்கப்பட்ட அனைத்திலும் ஆதாமை அதிகம் வசீகரித்தது பூனைகள்தான். ஆதாம் முதல்முறை பூனைகளைப் பார்த்தபோது அதன் கண்கள் எதிர்காலத்தை நோக்கியபடி இருந்தன. அவன் அதுவரை பெயரிட்டிருந்த அனைத்து விலங்குகளையும் பறவைகளையும் அறிந்தவனாய் இருந்தான். அவைகளும் ஆதாமிடம் அன்பாகப் பழகின. தனக்குப் பெயரிட்டிருந்தமையால் நெருப்புக்கோழிகளும் யானைகளும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தன. ஆனால் பூனைகளைத் தவிர வேறு எதுவும் அவனை வசீகரிக்கவில்லை.

பூனைகள் எதிர்காலத்தைப் பார்த்திருந்ததால் ஆதாமிடம் ஒருவிதமான அலட்சியத்தைக் காண்பித்தன. அந்த அலட்சியத்தில் ஒரு நளினமிருந்ததை ஆதாம் கவனித்தான். அவைகளின் மிருதுவான தேகம், நடையில் தெரிந்த மென்மை, பரிசுத்தம் யாவையும் அவனுக்குப் பூக்களை நினைவுபடுத்தியது. சிறிய பூக்களின் இதழ்கள் ஒவ்வொன்றும் அவனுக்குப் பூனைகளின் காதுகளாய் தோன்றியது. பூனைகள் பெயரிடப்பட ஆதாமிடம் வந்தபோது தன்னை மறந்து அவைகளை ‘பூனை’ என்று அழைத்தான். அந்தப் பெயர் ஏற்படுத்திய ஒலி அவனுக்கு ஒரு சிறிய போதையைத் தந்தது. தன் நான்கு கால்களையும் ஒன்றிணைத்து முதுகை குறுக்கி வாலை நிமிர்த்தி மென் உடலின் அத்தனை உரோமங்களையும் செங்குத்தாக நிறுத்தி தன் பெயரை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அவன் கால்களை உரசியபடி சுற்றிச் சுற்றி வந்தன. அந்த உச்சரிப்பு ஏற்படுத்திய உணர்வெழுச்சியைப் பூனைகளும் பிரதிபலித்ததாக நினைத்தான்.

மற்ற விலங்குகளைப் போல் அல்லாமல் பூனைகளைத் தொடுவதற்கு ஆதாமுக்குத் தயக்கமாக இருந்தது. பூனைகள் அனுமதிக்க வேண்டும் அவைகளைத் தொடுவதற்கு. பலசமயம் ஆதாம் வெறுமனே கைகளை நீட்டிக்கொண்டு நிற்க பூனைகள் அவனைக் கண்டுகொள்ளாமல் சென்றிருக்கின்றன. அவைகளின் அந்த மௌன அலட்சியம் ஆதாமுக்குள் ஒரு பித்த மனநிலையை வளர்த்திருந்தது. பூனைகளின் சுத்தம் அவனை நிலைகுலையச் செய்தது. ஒரு மதிய வேளையில் மாம்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவன் முழங்கை வரை மாம்பழ சாறு வழிந்துக்கொண்டிருந்தது. அச்சமயம் பூனைகளின் ஞாபகம் வர அவைகளைப் போலவே கரங்களை நக்கி சுத்தப்படுத்திக்கொண்டான்.

பூனைகள் ஆதாமின் நினைவுகளில் நிற்காமல் அலைந்துக்கொண்டிருந்தன. பூனைகளைப் படைத்ததற்காகக் கடவுளின் மேல் கோபம் கொண்டான். கடவுள் தன்னைப் பூனையைப் போல் படைக்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது அவனுக்கு. இரவில் அவன் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவைகள் ஆயிரமாயிரம் பூனைகளின் கண்களாகதான் தெரிந்தது. ஏளனத்துடன் அவை ஒவ்வொன்றும் கண் சிமிட்டுவதாகத் தோன்றியது. எல்லாவற்றையும் மறந்து அவன் நட்சத்திரங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அப்படிப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பின்னரவில் அவனுக்கு ஒரு துணையைப் படைக்கக் கடவுள் திட்டமிட்டார். அதன்படிதான் அவனுக்கு அன்று ஆழ்ந்த தூக்கம் வந்தது.

தூக்கம் கண்களைக் கவ்விய அந்த நேரத்தில் கனவில் ஆதாம் ஒற்றைப் பூனையைக் கண்டான். இதுவரை அவன் அறியாத அந்த இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக அந்தப் பூனை நடந்துக்கொண்டிருந்தது. ஒருபக்கம் நடக்கும்போது பால் வெண்மையாகவும் மறுபுறம் நடக்கும்போது அது இரவின் கருமையுடனும் இருந்தது. அதன் கண்கள் சிவந்து குரூரமாக இருந்தது. அவன் கை நீட்டியவுடன் அருகில் வந்து அவனைத் தொட அனுமதித்தது. இதுவரை அவன் கண்ட பூனைகளின் சருமத்தைவிடவும் இது மிருதுவாகவும் குளிச்சியாகவும் இருந்தது. அதுவரை கடவுள் தனக்குத் தராமல் வைத்திருந்த அழகுணர்ச்சிகள் இந்தப் பூனையைத் தொட்டதும் தனக்குள் வந்துவிட்டதாக உணர்ந்தான். அதனருகில் அமர்ந்து அதனை ரசித்துக்கொண்டிருந்தபோது மின்னொளி வீசும் வாள் போன்ற அதன் நகங்களால் ஆதாமின் கழுத்தை ஆழமாகக் கீறியது அந்தப் பூனை. முதல்முறை சிவப்பான திரவம் அவன் கழுத்திலிருந்து வழிவதை உணர்ந்தான். அந்தத் திரவத்தின் பிசுபிசுப்பை உணர்ந்தானே தவிர வலி அவனுக்கு இல்லை. சிவப்பு வெள்ளமாகப் பெருக்கெடுத்த அந்தத் திரவத்தின் கதகதப்பு அவனுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. அவன் மயக்கமுற்று கீழே சரிந்தபோது அந்தப் பூனை தன் கோரப் பற்களைக் காட்டி சிரித்தது போன்று இருந்தது. அது ‘மி…யா…வ்…’ என்றெழுப்பிய சத்தம் ஆதாமின் உடலுக்குள் பயணித்து விலா எலும்பில் ஒன்றை படக்கென முறித்தது போன்று இருந்தது. தன்னிலிருந்து பெருக்கெடுத்த அந்தச் சிவந்த திரவத்தைப் பூனை சுவைக்கும் முன் கனவிலிருந்து விடுபட்டு எழுந்தான்.

கனவுப் பூனையின் நினைவுகள் அடங்கும் முன் புன்முறுவலுடன் கடவுள் அந்த அதிசயத்தை ஆதாமுக்கு கொடுத்தார். ஆதாமின் முன் கிட்டதட்ட அவனைப் போன்று ஒரு உயிரினம் நின்றுகொண்டிருந்தது. கடவுள் கொடுத்தவுடன் அது ஆதாமை தன் கரங்களை விரித்து அணைத்துக்கொண்டது. அந்தச் சக உயிரியின் அரவணைப்பு பூனைகளின் மென்மைக்கு இணையாக இருந்தது. அதன் நளினம் பூனைகளையே ஆதாமுக்கு நினைவூட்டியது. அதன் குரல்வளமும் பூனைகளைதான் நினைக்க வைத்தது. அதனால் அந்த உயிரியை அவன் ‘பெண்’ என்று அழைத்தான். பூனைகளுக்கும் பெண்ணுக்கும் பெரிய வித்தியாசத்தை அவன் அறியமுற்படவில்லை. எந்நாளும் பெண்ணின் அரவணைப்பு அவனுக்குத் தேவைப்பட்டது. எங்குச் சென்றாலும் தன்னருகில் பெண் இருக்க வேண்டும் என்று வகுத்துக்கொண்டான். இப்போதும் பூனைகள் அந்த இருவர்மீதும் அலட்சியத்தை உமிழ்ந்தாவறு இருந்தன. பெண் ஆதாமின் ஏக்கங்களைத் தீர்த்தாலும், பூனைகள் நோக்கி இருந்த எதிர்காலத்தை அறியமுற்பட்டவனாகவே அவன் இருந்தான்.

அவர்கள் இருவரும் கடவுளால் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டு உலகத்தின் முதல் பாவத்தைச் செய்ய வெகுதொலைவில் இல்லை. எதிர்காலத்தை நோக்கியபடி இருந்த பூனைகள் அதை அறிந்திருந்ததால்தான் மனிதர்களைவிட்டு விலகி வாழ்ந்திருந்தன. தனது வீழ்ச்சியை முன்பே அறிந்திருந்த பூனைகள்மேல் மனிதர்களுக்கு ஒருவித வெறுப்பும் பயமும் உருவானது. அவைகள் கடக்கும் பாதைகளை விலக்க ஆரம்பித்தனர். அவைகளைக் கெட்ட சகுனத்தின் உயிர்களாகக் கற்பித்தனர். பூனைகளும் மனிதர்களுக்கு மண்டியிடாமல் வாழ ஆரம்பித்தன. தொடர்ந்து தோற்றுப்போன மனிதர்கள், பூனைகளையும் அதன் குட்டிகளையும் பாறையில் மோதி கொல்வதிலோ அல்லது தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்வதிலோ சுகம் காணப் பழகினார்கள்.